Tuesday, December 22, 2009

கீதா சொல்லிய அந்த குண்டு நோட்டு பொள்ளாச்சி மாமாவால் கொடுக்கப்பட்டது. நாங்கள் (நானும் கீதாவும்) அப்பாவும் அம்மாவும் traning சென்ற பொழுது மாமா (பொள்ளாச்சி PAP காலனியில் சுமார் மூன்று மாதங்கள் இருக்க வாய்ப்பு கிடைத்தது. பொள்ளாச்சியில் நாங்கள் எழுதி படிப்பதற்காக மாமாவால் அவர்கள் அலுவலகத்திலிருந்து எடுத்து வந்து கொடுக்கப்பட்ட நோட்டு. சுமார் 500 பக்கங்களுக்கு மேல் இருக்கும். பெரிய அக்கா ரமா shorthand எழுதி பழகிய நோட்டு. பிறகு கீதாவாலும் என்னாலும் ஹிந்தி முதலான பாடங்கள் எழுத இடம் கொடுத்த நோட்டு. கோலங்களால் நிரம்பிய நோட்டுக்கு ஒவ்வொரு மார்கழி மாதமும் பயங்கர demand தான். கோலங்களுக்கு விடை கொடுத்த பிறகு அந்த நோட்டை இப்போது தேடிப்பிடிக்க வேண்டும்.

என் தாத்தாவுடன் நாங்கள் பழகியது பொள்ளாச்சியில் நாங்கள் இருந்த அந்த மூன்று மாதங்களில் தான். தன் டிரங்கு பெட்டியில் வைத்து பூட்டியிருக்கும் நெஸ்காப்பியை தினம் பகல் மூன்று அல்லது நான்கு மணிக்கு எடுத்து பாலில் கலந்து குடிக்குக்போது எனக்கும் அதில் பங்கு கொஞ்சம் கிடைக்கும். தினமும் பாட்டில் வைத்து மரத்தூளில் வெந்நீர் அடுப்பு தயார் செய்யும் லாகவமான வேலையை பார்ப்பது ஆச்சர்யமான விஷயம். தாத்தாவுக்கு தினமும் இட்லி வேண்டும். மாமா வீட்டில் தினசரி மாவாட்டும் வேலை தவறாமல் நடக்கும். அத்தை செய்யும் சாம்பார் மிக ருசியாக இருக்கும்.

தொடர்வேன்....

Saturday, December 19, 2009

மார்கழி மாதமும் FIRE எஞ்சினும் :

மார்கழி மாதம் என்றால் நான் முன்பு எழுதிய இரண்டு விஷயங்களோடு ஒரு முக்கியமான அழகான நிகழ்வும் உண்டு. அதுதான் கோலம். அக்ரஹாரத்தின் இரு வீதிகளிலும் மார்கழியின் காலைக்குளிரில் எத்தனை கோலங்கள். அதுவும் பஜனை வீட்டை கடக்குமுன் கோலம் போட்டிருக்க வேண்டும். நாளொரு கோலம்: பொழுதொரு வண்ணம்: அக்ரஹாரத்துபெண்களின் கற்பனா சக்தி அபாரமாய் இருக்கும். பெரிய கோலம் போட்டு, நடுவில் சாணியில் பூசணிப்பூவை வைத்தால் தான் கோலம் முற்றுப்பெறும். இந்தக்கோலத்தையும் பூசணிப்பூவையும் நினைத்தால் அந்த பால்காரன் ஞாபகம் வருகின்றது. நாங்கள் அப்பொழுது சாமிநாத டாக்டர் வீட்டில் குடி இருந்தோம்.
புகளுரிளிருந்து வரும் சொசைட்டி பால்காரன். சைக்கிளில் வெண்கல மணி கட்டியிருப்பான். தவிட்டுப்பாளையம் தாண்டி வேலூர் காவிரி பாலத்தில் வரும் பொழுதே அடித்துக்கொண்டிருக்கும் மணி வேகமாக வரும் ஒரு fire என்ஜினைத்தான் நினைவுபடுத்தும். எங்கள் வீடு அக்ரஹாரத்தின் கடைசி வீடானதால், பாலத்தில் அவன் எழுப்பும் ஒலி வீட்டில் அனல் பற்ற வைக்கும். பாத்திரத்தை வைத்துக்கொண்டு வாசலில் காத்திருக்க வேண்டும். அவன் வரும்பொழுது வாசலில் இல்லை என்றால் அன்றைக்கு பால் அவ்வளவுதான். முத்து பால் பண்ணைக்குத்தான் செல்ல வேண்டும். எனவே நான் தயாராக இருப்பேன். அவனுக்கு என்னவோ என் அக்க கீதா போடும் கோலத்தின் மேல் அவ்வளவு காட்டம். (மார்கழி கோலத்தைப்பற்றி என் அக்காவின் வலைப்பூவில்
(
http://geethasrv.blogspot.com/) அறிந்து கொள்ளலாம். முக்கால்வாசி நாட்களில் மப்பிலேயே இருக்கும் குடிமகன். நேரே அந்த சைக்கிள் கீதா போட்டு முடித்த அந்தக்கோலத்தின் நடுவில் வைக்கப்பட்டிருக்கும் பூசணிப்பூவை நசுக்கி அதன் மேலேயே நின்றிருக்கும். சைக்கிளின் டயர் தடங்கள் கோலத்தை சின்னா பின்னம் ஆக்கியிருக்கும். எவ்வளவோ முறை அவனிடம் சொல்லியும் அவன் மாறவே இல்லை. ஒவ்வொருவருடமும் இது தொடர்ந்து கொண்டுதான் இருந்தது..





ரமா எழுதிய ஒரு விஷயம் உண்மைதான். பேசுவதை விட எழுதுவது மிகவும் இன்பமான ஒரு நிகழ்வு. பேசும்பொழுது யோசிக்க நேரம் இருப்பதில்லை. மற்றும் பேசும் பொழுது நம்மைச் சுற்றிய உலகம் நம்மை கவனித்துக்கொண்டிருக்கும் . பேசுவது ஒரு fast food மாதிரி. அந்த நேரத்தில் தோன்றுவதைப் பேசி விடலாம். கேட்பவர் மனதை நோகடிக்காமல் பேச வேண்டும். பல நேரங்களில் தெரிந்தே பொய்யும் பேச வேண்டி இருக்கும். ஆனால் எழுதும்போது நாம் மட்டும் தான். யாருடைய குறுக்கீடும் இருக்காது. மனதில் ஓடும் எண்ணஅலைகளை காகிதத்தில் பதித்தபிறகு வரும் களைப்பு மிகவும் சுகமானது. கடிதங்கள் சாகா வரம் பெற்றவைதான்...

Wednesday, December 16, 2009

மார்கழி மாதம்.... திரும்பிப்பார்க்கின்றேன்....
இன்று இன்னுமொரு மார்கழி மாதம் பிறந்துள்ளது. வேலூர் அக்ரஹாரவாசிகளுக்கு மார்கழி மாதம் தனி தான்.. (கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன் கதை! (அப்படித்தான் சொல்லத்தோன்றுகிறது.. சரித்திரம் ஆகி விட்டதல்லவா? மார்கழி மாதம் என்றால் இரண்டு விசேஷங்கள்.. ஒன்று பஜனை.. மற்றொண்டு அரையாண்டுத்தேர்வு...
மார்கழி மாத பஜனை..
வேலூர் லக்ஷ்மி நாராயணப்பெருமாள் கோயில்...
அர்ச்சகர் வீரராகவ ஐயங்கார்...
வெண் பொங்கல்... ஆஹா... முழங்கை நெய்சோர நீங்கள் பொங்கல் சாப்பிட்டு இருக்கிறீர்களா?
அப்பா தான் பஜனைக்கு அணித்தலைவர். விடியல் காலை ஐந்து மணிக்கு எழுந்து குளித்து அந்த சாம்பல் நிற ஹரே ராமா சால்வையை போர்த்துக்கொண்டு அப்பா கோயிலுக்கு சென்று விடுவார். நான் எப்பவுமே லேட்தான். அப்பா விட்டுவிட்டு சென்று விட்டார் என்ற கோபத்தில் சீக்கிரம் குளித்துவிட்டு கோயிலுக்கு சென்றால் அங்கே அடுத்த அதிர்ச்சி காத்திருக்கும்! என் தோழன் முரளி கிருஷ்ணன் என் பிரிய சுருதி பெட்டியை கைப்பற்றி இருப்பான். சீக்கிரம் வந்ததால் அவனுக்குத் தான் முதல் வாய்ப்பு என்று அப்பா சொல்லிவிடுவார். கோயிலை வலம் வந்து பஜனை கிளம்பும். நான்கைந்து பேர்களுடன் ஆரம்பிக்கும் பஜனை பின் தெருவில் ஒவ்வொருவராக சேர்ந்து கொள்ள பெரிய goshtiyaaga (கொஞ்சம் அதிகம் தான்..) மாறி விடும். ஐயர் வீட்டு திருப்பத்தில் இன்னொரு
அக்ரஹாரத்தில் நுழையும் போது சுருதிப்பெட்டி எனக்கு கை மாறிய பிறகுதான் பஜனையில் என் கவனம் செல்லும். சின்னு செட்டியார் வீட்டோடு மீண்டும் திரும்பி கோயிலுக்கு செல்லும் பஜனை கோஷ்டி. மீண்டும் கோயிலை அடையும் பொழுது கோஷ்டி இன்னும் பெரியதாக மாறி இருக்கும். அப்பா "சுத்தப்ரம்ம பராத்பர ராம்' பாடத் தொடங்கும் போது , கிழக்குத்தெரு பையன்கள் பக்கத்து காம்பவுண்ட் சுவர் ஏறி, பெரிய பூவரச இலைகளைப்பறித்து அனைவருக்கும் விநியோகம் செய்துவிடுவார்கள். ஹரியோ ஹரி பாடி முடித்ததும், வீர ராகவ ஐயங்கார் மடப்பள்ளியிலிருந்து பெரிய பாத்திரத்தில் சுவாமிக்கு நெய்வேதனம் செய்ய பொங்கல் பிரசாதம் எடுத்து வந்து பூஜை நடக்கும். சுடச்சுட அந்தப் பொங்கலை ஐயங்கார் மாமா கையைஊதி ஊதி ஒவ்வொருவருக்கும் விநியோகம் செய்வதே தனி கலையாக இருக்கும்.
இப்பொழுது அப்பாவும் இல்லை, வேலூர் agrahaaramum இல்லை, ஐயங்கார் மாமாவும் இல்லை, பஜனையும் இல்லை. எல்லோரும் வேறு veru thisaiyil பயணித்து விட்டோம். ஆனால் மார்கழி மாதத்து நினைவுகள் என்றுமே என்னை விட்டு அகலப்போவதில்லை...

Saturday, December 12, 2009

வேலூர் அக்ரஹாரத்தின் இப்போதைய படங்கள் இவை. இந்த முதல் படம் நாங்கள் எண்ணற்ற முறை பயணம் செய்த பாதை.. வாய்க்களுக்குக் செல்லும் வழி. எல்லைத்தகராரால் அடைபட்டுக் கிடிக்கின்றது.


இந்தப்பதையின் இருபுறமும் வளர்ந்து இருக்கும் நெருஞ்சி முட்களிளிருந்து தப்பி (அப்படியும் காலில் குத்தி விடும்) எவ்வளவு முறை சென்று வந்திருப்பேன்? ம்ம் ...


இதோ அக்கிரஹாரம். மார்கழி மாத பஜனை சென்ற வழியில் tempo வேன்கள் ! செல் போன் டவரும் வானத்தை மறைக்கும் மின் கம்பிகளும்.. சுவாமிநாத டாக்டர் வீட்டின் முன்புற தோற்றம். நாங்கள் குடி இருந்தபோது சிமென்ட் பூசப்படாத செங்கல் சுவர் சுற்றியும்.. ஜன்னலுக்கு பதில் மூங்கில் தட்டிகள். வாசல் கதவே மூங்கில் தட்டி தான்,,,

thodarven...
வேலூர் காவிரிக்கரை பட்டவர்த்தி பிள்ளையார் கோயிலைஇருபது வருடங்களுக்கு பிறகு பார்த்த போது நினைவுகளில் ஊடுருவிப் பாய்ந்த இளமைப்பருவம் - சிவராமன் (அக்காவின் மகன்) தனக்கு இளமைப்பருவ நினைவுகள் ஒன்றும் இவ்வளவு அழகாக இல்லையே என்று குறைப்பட்டுக்கொண்டதற்கு இவர்களுக்கு கிடைக்காத கிராம வாழ்க்கையே கூட காரணமாக இருக்கலாம்.
காவிரிக்கரையைப் பற்றி சொல்லும் போது பாலத்துக்கு அடியில் இருந்த அப்போதே சிதிலமான சிறிய பிள்ளையார் கோயிலைப்பற்றி சொல்லவேண்டும். திராவிட கழகத்தாரால் மூளியாக்கப்பட்ட பிள்ளையார்! சிறிய மேடை! இடிந்த படிக்கட்டுக்கள்! ஆடி மாதத்தில் இந்த மேடையில் அமர்ந்து புது நீரின் வாசத்தை அனுபவிக்க எவ்வளவு கோடி வேண்டுமானாலும் கொடுக்கலாம். வண்டி இழுத்து வாயில் நுரை தள்ளும் மாடுகள் போல், கருங்கல் படிக்கட்டுக்களில் மோதி மோதி நுரை தள்ளும் வெள்ளநீர்! சுழன்று அடிக்கும் காற்று நீர்த்திவலைகளை முகத்தில் அள்ளித்தெளிக்கும். எழுந்து செல்ல மனமே வராது. இருட்டி விட்டது, வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற தந்தையின் வற்புறுத்தலால் தான் கிளம்ப வேண்டி வரும். கருங்கல் படி ஏறி மேலே வரும்போது அங்கே சைக்கிளில் வைத்து விற்கப்படும் அன்னாசிப்பழத்துண்டுகள் ! அவசரத்தில் வாழ்க்கையையும் நிம்மதியையும் தொலைத்து விட்டு மனிதத்தை தேடிக்கொண்டிருக்கின்றோம்!
தொடர்வேன்....

Wednesday, December 9, 2009







சென்ற ஞாயிறு அன்று மீண்டும் வேலூர் செல்ல நேர்ந்தது. மீண்டும் காவிரி... இந்த முறை பிள்ளையாரை மறக்கவில்லை. முதலிலேயே அவரைப்பார்த்து விடுவது என்ற முடிவுடன் காரை பாலம் தாண்டியவுடன் நிறுத்திவிட்டேன். ஸ்ரீனிவாசனும் (பெரிய) எங்களுடன் (நான், பூமா மற்றும் ஹரி) வந்திருந்தான். பிள்ளயரைப்பார்க்க வசதியாக படிக்கட்டு கட்டப்பட்டிருந்தது. ஆனால் கோயில் தான் எல்லாம் மாறி விட்டது. அரச மரத்திலிருந்து தொங்கிக்கொண்டிருந்த மணிகளைக் காணவில்லை. பிள்ளையாருக்குத் துணையாக குடிமகனொருவன் பின்புறமாக உறங்கிக்கொண்டிருந்தான். கோயிலுக்கு பின்புறமிருந்த ஓடையில் (குடத்தில் நாங்கள் நீர் மொண்ட) சிலர் குளித்துக்கொண்டிருந்தனர்.

அந்தோ... கோயிலிலிருந்து வாய்க்கால் வரை சென்ற அந்த ஒற்றையடிப்பாதையைக் காணவில்லை. புதர்கள் மண்டி பாதை இருந்த சுவடே தெரியவில்லை. கோயிலின் அருகில் இருந்த அந்த செங்கல்லினால் கட்டப்பட்ட வாய்க்கால் பாலம் மட்டும் அப்படியே இரு(டி)ந்துகொண்டு .....ம்ம் ..பாலம் வழியே காவிரிக்கு செல்லும் வழியைக் காணவில்லை. மீண்டும் புதர்கள்.. நிறைய விஷயங்களைக் காணவில்லை. ஆனால் ... அந்த பசுமை.... வாழையும், தென்னையும், வெற்றிலையும் மட்டும்தான் வேலுரை இன்னும் வேலூராக வைத்துள்ளது.

Saturday, December 5, 2009

இதோ இது வேலுரின் வாழைத்தோப்புக்களை விழுங்கிய நான்கு வழிச் சாலை.
புதிய பாலத்திலிருந்து வேலுருள் நுழையாமல் நேரே பரமத்தி செல்லும் சாலை. ஆனால் இந்த சாலை காலி செய்த சோலையின் மாதிரிதான் நீங்கள் கீழே இன்னொரு படத்தில் பார்ப்பது.
காவிரிக்கரையில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயில். என் நினைவில் தெரிந்த நாள் முதல் தன் நிலை மாறாது இருக்கும் கோயில். எவ்வளவோ புதிய கோயில்கள் வேலுருக்குள் வந்திருந்தாலும் காசி விஸ்வநாதர் அப்படியே இருக்கிறார்.

வாழைத்தோப்பின் அழகைப்பாருங்கள். தென்னையும் வாழையும் செழித்த வேலூர். தாவி ஓடிய (இறந்த காலம் தான்) காவிரியின் கரையில் செழித்து வளர்ந்த இந்த பசுமை இன்னும் எத்தனை நாட்களுக்கு தாங்கும் என்பது கேள்விக்குறிதான்.

தொடர்வேன்...

Friday, November 27, 2009

Velur Cauvery river – some thoughts



இன்று நான் மீண்டும் வேலுர் செல்ல வேண்டி இருந்தது. காவிரி ஆற்றைக் கடக்கும்போது பழைய நினைவுகள் தென்றலாய் வருடிச்சென்றன. காவிரிக்குக் கொண்டாட்டம். ஒன்றுக்கு இரண்டு பாலங்கள். ஆனால் காவிரியின் பழைய நிறம் மாறிவிட்டது. வாகனங்கள் செல்லும் வேகத்தில் பாலத்தில் நின்று ஒடுங்கிச்செல்லும் காவிரியைப்பார்க்க பயமாய் இருக்கின்றது. பெரியப்பாவின் கையைப்பிடித்துக்கொண்டு அக்ரஹாரத்திலிருந்து பாலம் வழியாக நடந்து அக்கரை வரை சென்று நீரேற்று நிலையம் அருகில் மணலில் அமர்ந்திருந்து பின் நடந்தே வீடு வந்த நினைவுகள் மங்காமல் உள்ளன. முசாபுரி பங்ளா (ட்ராவல்ர்ஸ் பங்ளா)o அருகில் பெட்டிக்கடையில் குடல் என்று சொல்லப்படும் வடகம் போன்ற பதார்த்தம் சாப்பிட்டதும் சில சமயங்களில் நால்ரோடு ஈஸ்வரி ஹோட்டலில் தோசை சாப்பிட்டதும் நினைவுக்கு வருகின்றது. பாலத்திலிருந்து முசாபுரி பங்ளா வரும் வரை இரு புறமும் செவ்விள நீர் காய்த்துத்தொங்கும் தென்னை மரங்கள். வற்றாத வாய்க்கால். வாய்க்காலிலிருந்து மேற்குப்பக்கத்தில் பிரிந்து செல்லும் ஒற்றையடிப்பாதை வழியாக சென்றால் வரும் பட்டவர்த்தி பிள்ளையார் கோயில். அரச மரத்தடியில் அமர்ந்திருக்கும் பிள்ளையார். மரத்தில் கட்டித்தொங்க விடப்பட்டிருக்கும் வெண்கல மணிகள்.


ஒற்றையடிப்பாதையின் ஒரு புறம் நீள மண்டிக்கிடக்கும் தாழம்பூ புதர். மறுபுறம் சல சலவென ஓடிக்கொண்டிருக்கும் நீரோடை. குடத்தில் இதில் நீர் பிடித்துத்தான் பிள்ளையாருக்கு குளியல். கோயிலைச்சுற்றி தென்னந்தோப்பு. கோயிலுக்கு எதிரே படிஏறினால் பாலத்திற்கு வந்து விடலாம். வழுக்கும் சாலையில் வேகமாக சென்றதில் பிள்ளையாரைப்பார்க்கமறந்துவிட்டேன்.


இப்போது பாலத்தின் தோற்றம் தரப்பட்டுள்ளது. வயல்கள் தார்முலாம் பூசிக்கொண்டுள்ளன.

நினைவுகள் தொடரும்...............







Tuesday, November 24, 2009

என்னுடைய வலைப்பூவின்
வாசம் பிடித்து -
நேசம் உணர்த்தும்
உறவு வண்டுகளுக்கு -
நன்றி !
வாசத்தின் வீரியம் - இன்னும்
விரிவடைய வாழ்த்துங்கள்!

Thursday, November 19, 2009

கூரை வீடு

இது நாங்கள் குடி இருந்த கூரை வீடு. சுமார் 40 வருடங்களுக்கு முந்தைய என் நினைவுகளை வருடி , இன்று காலை இருபது நிமிடங்களில் நான் வரைந்த படம். சரியாக இருக்கின்றதா என்று என் அக்காக்கள் தான் சொல்ல வேண்டும்.

Wednesday, November 18, 2009

TNR வீட்டுத் திண்ணை :

எங்கள் தெருவில் முதல் வீடு TNR வீடு என்று சொன்னேன் அல்லவா. அது கௌரி மாமி வீடு . அந்த வீட்டுத திண்ணையைப்பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. வீட்டை ஒட்டி சுமார் ஆறு அல்லது ஏழு அடி நீளத்தில் சாலை வரை அமைந்த திண்ணை. தரையிலிருந்து மூன்று அல்லது மூன்றரை அடி உயரத்தில் இருக்கும். நீளவாக்கிலும் சாலையை ஒட்டி மடிந்த இடத்திலும் சாய்ந்து அமரும் வகையில் சிமெண்டினால் பூசப்பட்டிருக்கும். பெரும்பாலும் இங்காச்சியால்ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் இந்தத்த்திண்ணை நாங்கள் அருகில் சென்றதுமே எங்களுக்கு கிடைத்து விடும். இங்காச்சி... மன நலம் குன்றியவர். நான் சிறுவனாக இருந்த போதே இங்காச்சிக்கு முப்பது வயதுக்கு மேல் இருக்கும். வேஷ்டியை மார்பு வரை கட்டிக்கொண்டு வீட்டு உள்ளுக்கும் வாசலுக்கும் நடந்து கொண்டிருக்கும் இங்காச்சியல் யாருக்கும் தொந்திரவு இருக்காது. பிற மனிதர்களைக் கண்டாலே வீட்டுக்குள் ஓடி விடுவார். வீட்டுக்கு யார் வந்தாலும் கோகிலா காப்பி கலந்து தா என்று திருப்பி திருப்பி சொல்லிக்கொண்டே உள்ளுக்கும் வெளிக்கும் ஓடிக்கொண்டிருக்கும் இங்காச்சி காலி செய்த திண்ணை பிறகு எங்களுக்கு சொந்தம். திண்ணையில் ஏறி சாய்ந்து அமர்ந்து கொண்டு எவ்வளவு கதை பேசி இருப்போம்? தெருவில் நடக்கும் கிரிக்கெட் மாட்சுக்கும் அதுதான் stadium. தைப்பூசக்காவடி வேடிக்கை பார்க்க இநத திண்ணைதான் வசதி. காவிரிக்கரைக்கு செல்லும் இறுதி யாத்திரைகளை பயத்துடன் ஒளிந்து கொண்டு பார்த்ததும் இநத திண்ணையில் தான். மாலை நேரத்து சூடு அடங்க தண்ணீர் தெளிக்கப்பட்டு ஜில்லென்று ஆக்கப்பட்டிருக்கும் திண்ணை. (பிற்காலத்தில் இநத வீட்டிலும் நாங்கள் சில காலம் குடி இருக்க நேர்ந்தது). இரவு சாப்பாட்டிற்கு அழைப்பு வரும் வரை நண்பர்களுடன் இநத திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தது தொடர்கதை.

எனது தாயாரின் அஸ்தியை கரைக்க நாங்கள் வேலூர் காவிரிக்கு இரண்டு மாதங்களுக்கு முன் சென்ற போது, இந்தத் திண்ணையைக் காணவில்லை. எதோ ஒரு பெட்டிக்கடை இநத இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது. மனிதர்களே காணாமல் போய்விட்ட பிறகு , திண்ணை இருந்தென்ன ? போயென்ன? நினைவுகள் தான் மிச்சம்.................

ரமா குறிப்பிட்டது போல் இவ்வவளவு நினைவுகளும் என்னுள்ளே புதைந்து கிடப்பது ஆச்சர்யமாகத்தான் உள்ளது. இவற்றிற்கெல்லாம் எழுத்தில் வடிவம் தர தூண்டுகோலாய் இருந்ததற்கு ரமாவிற்கு நான் நன்றி சொல்ல வேண்டும். என் அக்காவிற்கு எனது படிப்பிற்கும் நான் செய்யும் வேலைக்கும் சம்பந்தம் இல்லாததில் மிகவும் வருத்தம் உண்டு. இப்பொழுது நான் எழுத ஆரம்பித்ததில் ரமாவிற்கு மிகவும் மகிழ்ச்சி. வங்கிப்பணியில் மனம் களைத்து இருக்க , எழுதும் இந்த சில நிமிடங்கள் சுகமாகத்தான் இருக்கின்றது.

Tuesday, November 17, 2009

அக்ரஹாரம்: (ஒரு மேம்போக்கான அறிமுகம்)
காவேரி ரோட்டிலிருந்து மேற்கு நோக்கி பிரியும் இன்னொரு அக்ரஹாரம் . நாங்கள் குடியிருந்த கூரை வீடு இருந்த தெரு. தெருவின் ஆரம்பத்தில் வலதுபுறம் முதல் வீடு TNR வீடு. இடது புறம் அய்யர் வீட்டு பட்டி. பொதுவாக வாழைக்கு வேண்டி மூங்கில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். வாத நாராயண மரங்கள் இந்த பட்டியை சுற்றி இருக்கும். இந்த மரத்தின் பூக்களின் மொட்டுக்களை நீங்கள் சாப்பிட்டு இருக்கிறீர்களா? மிகவும் சுவையாக இருக்கும். நாங்கள் அதிகம் விளையாடிய இடம். பட்டியை ஒட்டி கபடி விளையாடும் மைதானம். பிறகு தொடர்ந்து வீடுகள். வலது புறம் முதல் வீடு TNR வீடு. குடுமி வைத்த ரிடயர்ட் டீச்சர் வீடு. பிறகு சிறு காலி நிலம். பிறகு அர்த்தநாரி வாத்தியார் வீடு. அடுத்து ஒரு பாழடைந்த வீடு. அச்சுப்பாட்டி குடி இருந்த வீடு. தொடர்ந்து செட்டியார் வீடு, சாமிநாத அய்யர் வீடு, அடுத்து காலி நிலம். இதை ஒட்டித்தான் நாங்கள் குடி இருந்த கூரை வீடு. இதில் இரு போர்ஷன்கள். முதல் போர்ஷன் சற்று பெரியது. இதில்தான் நாங்கள் இருந்தோம். மற்றதில் EB ல் வேலை செய்து வந்த ராமநாதன் மாமா. இதை அடுத்து காலி நிலம். இந்த இடமும் அய்யர் வீட்டு பட்டியாக செயல்படும். பட்டியை ஒட்டி சுவாமிநாத டாக்டர் வீடு. (என்னை மீண்டும் உயிர்பித்தவர்,, இதைப்பற்றி தனியாக எழுதுகிறேன். கடைசி வீடு சின்னு செட்டியார் வீடு. இந்த வீட்டு மாடியில் கல்லூரியில் வேலை செய்து வந்த botony லெக்சரர் ரவீந்திரன் சார் குடி இருந்தார். இடது புறம் பட்டியைத் தொடர்ந்து செட்டியார் வீடு, ராமண்ணா வீடு, ஜெகதீச ஐயர் வீடு. அடுத்து பர்வதம் மாமி வீடு. பிறகு அனந்தா lodge வீடு. இது பின்னாளில் பாக்கு செட்டியாரால் வாங்கப்பட்டு அவர்கள் குடி வந்தார்கள். தொடர்ந்து சிதம்பர ஐய்யர் வீடு, கம்பவுண்டர் மாமா (எனக்கு விவரம் தெரிந்த பிறகு) குடியிருந்த வீடு. கடைசி வீடு கணபதி அய்யர் வீடு. அடுத்து வாய்க்காலுக்கு செல்லும் வழி. ஒட்டி தென்னந்தோப்பு . சின்னு செட்டியாருக்கு சொந்தமானது. இதில் ஒரு பாழடைந்த கிணறு ஒன்று இருக்கும். முயல் சிங்கத்தை தள்ளிவிட்ட கிணறு போல் நீர் அதிகம் இல்லாமல் சேற்றுடன் இருக்கும். கிணற்றின் உள்ளே ஒரு கல் நீட்டிக்கொண்டிருக்கும். கண்ணாமூச்சி ஆடும் பொது அதிகம் ஒண்டிகொண்ட இடம். இதில் இறங்கி உட்கார்ந்து கொண்டால் சீக்கிரம் அவுட் ஆக தேவையில்லை. தோப்பைத்தாண்டி ராஜா வாய்க்கால். ஏப்ரல் , மே மாதம் தவிர தண்ணீர் வற்றாத வாய்க்கால்.

தொடர்வேன்....

Sunday, November 15, 2009

நிமிண்டாம்பழம் .............

இது ஒரு non-seasonal பழம். சுப்பு வாத்தியாரிடம் மட்டுமே கிடைக்கும். வேலூர் காவேரி ரோட்டில் உள்ள சத்திரத்தில் குடி இருந்த சுப்பு வாத்தியார்...எனது பள்ளி/வகுப்புத்தோழன் முரளிகிருஷ்ணனின் தாத்தா......
ஒல்லியான தேகம். நல்ல உயரம். அக்கிரகாரத்துக்கு அவர்தான் கணக்கு வாத்தியார். கல் சிலேட்டை எடுத்துக்கொண்டு கணக்கு கற்றுக்கொள்ள அவரிடம் செல்வதைத்தவிர வேறு வழியில்லை. வாய்ப்பாடு ( இன்று பள்ளிக்குழந்தைகளுக்கு இது பற்றி தெரிய வாய்ப்பில்லை) அவரிடம் கற்றுக்கொண்டது பெரும்பாடு. பதினாறாம் வாய்ப்பாடுவரை ஒப்பிக்க வேண்டும். தடங்கல் வரக்கூடாது. யோசிக்கக்கூடாது. இல்லையென்றால் நிமிண்டாம்பழம் தான் பரிசு... தொடையில் கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் சேர்த்துப்பிடித்து நிமிண்ட , இரத்தம் கன்னிப்போய் ,தோல் சிவந்து , அந்த வலியில் வாய்ப்பாடு தானாக வாய் வழிந்தோடும்..
நிமிண்டாம்பழங்கள் இன்று இல்லை. ஆசிரியர்கள் மாணவர்களை கடிந்து கொண்டாலே , அவர்களின் வேலைக்கு உத்திரவாதம் இல்லை. நீதி மன்றங்கள் மாணவர்களை கண்டிக்கும் ஆசிரியர்களைத் தண்டிக்க தயாராக உள்ளன. காசுக்கு கல்வி என்று மாசுபட்ட பிறகு இந்த நிலை மாறுமா?

Saturday, November 14, 2009

கூரை வீட்டு நினைவுகள் கடல் அலையாய்மீண்டும் மீண்டும் என் தலையில் மோதிக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு விநாயகர் சதுர்த்திக்கும் வேலூர் அக்ரகார வாய்க்காலின் மறுமுனைக்கு நீந்திச்சென்று காலடி படாத இடத்தில் இருந்து களிமண் எடுத்து வந்து (இது நான் சிறிது வளர்ந்த பிறகு என் வேலை ஆனது) மரப்பலகையில் அப்பா செய்யும் பிள்ளையார். இது முதல் நாளே நடக்கும் ஒரு மரபு. எனக்கு ஓவியத்தில் ஆசை வந்தபோது எனது படங்களில் பிள்ளையாருக்கு முன்னுரிமை வந்ததற்கு இதுவே காரணமாக இருக்க்கலாம். சதுர்த்தி அன்று காலை சைக்கிள் ஹண்ட்ல் பாரின் இருபுறமும் ஒயர் கூடையை மாட்டிக்கொண்டு இலைதலை கொண்டுவர செல்வேன். காவேரிக்கு செல்லும் வழியில் பாதையின் இருபுறமும் ஓடிக்கொண்டிருக்கும் வடிகால் வாய்க்கால்களின் ஓரத்தில் எவ்வளவு பூக்கள். சாம இலைகளில் நீர் ஊற்றி அவை மின்னும் பாதரசமாய் இங்கும் அங்கும் ஓடி வழிவதில் எவ்வளவு நேரங்கள் கழிந்திருக்கின்றன. இது ஒவ்வொரும் வருடமும் ஒரு சடங்காகவே நடக்கும்.

ஆனால் இன்று,,,, வீட்டு தோட்டத்தில் உதிர்ந்து கிடக்கும் பவள மல்லிகைப்பூக்களை பொறுக்க மனமோ நேரமோ இல்லாமல் போய்விட்டது வேதனை. அம்மா விரிந்து இறைந்து கிடக்கும் பூக்களை முடியும் வரை சேகரித்துவிட்டு முடியாமல் என்னிடம் அந்த வேலையே செய்ய சொல்லும்போது (அதுவும் ஒரு வேண்டுகோளாகத்தான் இருக்கும் - இவ்வளவு பூக்கள் ஆண்டவனுக்கு அர்பணிக்க முடியாமல் வீணாகின்றதே என்ற அங்கலாய்ப்பும் கூட) எனக்கு வந்த சலிப்புக்கும் கோபத்திற்கும் பொருள் விளங்கவில்லை. வசதிகள் வர வர வாழ்க்கை அவசரமாய் தொலைந்து போனது.

அம்மா மூச்சடங்கி அசையாமல் வீட்டு ஹாலில் எனக்கென்ன ? என்று குளிர் பதன பெட்டியில் படுத்திருக்கும் பொது .. தோட்டத்தில் உதிர்ந்து கிடந்த பவள மல்லிகைப்பூக்களை பறித்துத்தரட்டுமா என்று நான் கதறியபோது என் அம்மா பதிலேதும் சொல்லவில்லை. போடா.. உன்னைப்பற்றி தெரியாதா என்ற அந்த புன்னகை...

வாழ்க்கையில் நாம் பெறுவதை விட தொலப்பதுதான் அதிகம். இதை உணரும் முன் காலம் கடந்து விடுகின்றதே!

காவிரிக் கரையில் அள்ளி வந்த களிமண் இன்று காசு கொடுத்தாலும் கிடப்பதில்லை..மார்கெட்டில் வாங்கி வரப்படும் பிள்ளயாருக்கு மூஞ்சூறு செய்ய க்கூட கெஞ்சி கொஞ்சம் களிமண் வாங்கி வர வேண்டியுள்ளது. பிள்ளையார் அரசியலுக்கு வந்த பிறகு பிள்ளையார் சதுர்திகள் பிள்ளையாரை அடித்து துவம்சம் செய்து அவரை வழி அனுப்புவது வாடிக்கையாகிவிட்டது..

தொடர்வேன்.....

Friday, November 13, 2009

ரமாவுக்கு நான் எழுதிய கடிதம் எனது மகன் ஹரியை மிகவும் பாதித்துவிட்டது.
குழந்தைப்பருவ அனுபவ இழப்புக்கள் அவனை கண்ணீர் சிந்த வைத்துள்ளது. வேலூர் கந்தசாமி கண்டர் துவக்கப்பள்ளியில் நான் பெற்ற கல்வி எனது குழந்தைகள் அவர்களது LKG முதலான படிப்புக்களில் பெற்றார்களா என்பது சந்தேகமே. கல்வியின் நோக்கம் காலப்போக்கில் மாறி விட்டதுதான் காரணமாக இருக்க முடியும். பெற்றோர்கள் தமது குழந்தைகள் கல்லுரியிலிருந்து வெளி வரும்போது நல்ல வேலையுடன் வருவதையே விரும்புகிறார்கள். இன்னும் நகரங்களில் குழந்தைகள் படிப்புடன் வேறு கலைகள் பயில்வது கூட அவர்களில் மகிழ்ச்சிக்காக என்பதும் சந்தேகமே... நான் ஆகாயத்தைப்பார்த்து ரசித்த அளவு எனது குழந்தைகள் ரசித்திருப்பர்களா? வீடு, படி இறங்கும்போதே ஆட்டோ அல்லது பள்ளி வாகனம் , பள்ளியில் மீண்டும் அந்த நான்கு சுவர்கள், .. மாலையில் மீண்டும் அதே கதை.. வானத்தப்பார்க்க ஏது நேரம்?

Wednesday, November 11, 2009

ஸ்ரீதரன் குழந்தையாக..

இது இன்னுமொரு பழைய போட்டோ. எனக்குத் தெரிந்து என்னுடைய சிறு வயது படங்கள் இவை இரண்டும் தான்
Posted by Picasa
இது தான் நான் நேற்று சிலாகித்து எழுதிய போட்டோ.

இதன் பழமையை வெளிப்படுத்தவே இந்த படத்தை அப்படியே upload செய்கிறேன் .
Posted by Picasa
தொடர்கிறேன்..........

இது தான் நான் நேற்று சிலாகித்து எழுதிய போட்டோ ;

AMMA

AMMA ,

WHY YOU LEFT US SUDDENLY?
Posted by Picasa

Tuesday, November 10, 2009

மீண்டும் தொடர்கிறேன்...வேலுரின் கூரை வீட்டு வாழ்க்கை என்றுமே என் நினைவை விட்டு அகல வாய்ப்பில்லை. அப்பா பாகல்பூர் சென்று M.A ஹிந்தி படித்த நாட்களில் அம்மா தனியே எங்கள் மூவரையம் (ரமா , கீதா, நான் ) கவனித்துக்கொண்டது , சற்றும் மிகைப்படுத்த முடியாத துணிச்சலான செயல்.

அப்பா காசியிலிருந்து வங்கிவந்த மரத்தாலான BAND வாத்தியக்குழு இன்றும் என்னிடம் உள்ளது. எங்கள் வீட்டிற்கு வந்தது முதல் ஒவ்வொரு நவராத்திரியிலும் கொலுவை அலங்கரித்து அவை பேண்ட்(band) வாசிக்க தவறியதில்லை.

வேலூர் சக்தி ஸ்டுடியோவில் அப்பா அம்மாவுடன் நாங்கள் group போட்டோ எடுத்துக்கொள்ளும் பொழுது அப்பா, அம்மா , பெரிய அக்கா ரமா நாற்காலியில் அமர, என்னையும், கீதாவையும் நிற்க வைத்ததற்காக நாங்கள் முகத்தைத்தூக்கி வைத்துக்கொண்டிருப்பதை இன்றும் அந்த புகைப்படத்தில் காணலாம்.
பணத்திற்கு மிகவும் கஷ்டப்பட்ட காலம் அது என்று என் பெற்றோர் வாயிலாக பிற்காலத்தில் நான் கேள்விப்பட்டாலும் , நாங்கள் அதை சற்றும் உணராமல் எங்களை வளர்த்ததை இன்று நினைத்தாலும் என் பெற்றோர்களின் மனோதிடம் அவர்களின் உயரத்தை அளவிட்டு காட்டுகிறது.
தவணை முறையில் சிங்கரமுதளியார் ஜவுளிக்கடையில் துணி எடுத்துதான் ஒவ்வொரு தீபாவளியும் கொண்டாடப்பட்டது. . சாமியப்பா முதலியார் மளிகை கடை தான் எங்களுக்கு சோறு போட்டது. மளிகைக் கடையில் சாமான் வாங்கி வருவதே ஒரு தனி அனுபவம். இனாமாக கிடைக்கும் பொட்டுக்கடலை அவ்வளவு ருசி.
தொடர்வேன்...

Saturday, November 7, 2009

எனது நினைவுகளை தொடர முயல்கிறேன் ....

விடுமுறை நாட்களின் மதியங்களில் வாய்க்காலில் குளித்துவிட்டு கண்கள் சிவக்க வீட்டிற்கு வந்து அப்பாவிடம் வாங்கிய அடிகள்........நீரில் மிதந்து வரும் நுங்குகளை மறைத்து வீட்டிற்கு எடுத்து வந்து சாப்பிட்டது .....


சாமிநாத டாக்டர் வீட்டு கண்ணன் ஒரு பைசா தாமிர காசை எதோ இரசாயனத்தில் அமிழ்த்தி அதை வெள்ளிக்காசாக மாற்றி வித்தை காட்டியது ...

அய்யர் வீட்டு பட்டி சுவர்களின் ஓட்டைகளில் வெடி வைத்து மகிழ்ந்தது..

தேங்காய் சுட்ட குச்சிகளை வைத்து தெருவில் விளையாடியது ...

பம்பரம் விட்டது, கோலி விளையாடியது... ( என் குழந்தைகள் இவற்றில் ஒன்றைக்கூட அனுபவித்ததில்லை என்பது மிகவும் வேதனையான உண்மை..)

கூரை வீட்டு வாசலில் கயிற்றுக்கட்டிலில் படுத்து வானத்தில் நட்சத்திரங்களை எண்ணியது...

தீபாவளிக்கு மணி ஐயர் வீட்டிற்கு வந்து பலகாரங்கள் தயார் செய்தது... (மணி ஐயர் செய்து கொடுத்த மரத்தாலான ஸ்டாண்ட் இன்றும் பூஜை அறையில் சீதா ராம லக்ஷ்மணர்களை தாங்கி நின்று கொண்டிருக்கின்றது..

என்னுடைய எண்ணங்களை தொடராக எழுதுவதை விட இது மாதிரி சிறு சிறு துளிகளாக எழுதுவது (like falshes!) நன்றாக இருக்கும் என்றே இப்படி எழுதுகிறேன்...

தொடர்வேன்...

Friday, November 6, 2009

அன்புள்ள ரமாவிற்கு
தீபாவளி நாளை நினைவு கூர்ந்து எழுதியவை என் மனதை விட்டும் என்றும் நீங்காதவை ஆகும். கூரை வீட்டு வாழ்க்கையை எப்படி மறக்க முடியும்?
ஐம்பத்தொன்று வருடங்களுக்கு பிறகு அம்மவைப்பிரிந்த இந்த தீபாவளி! என்னுள்ளும் பழைய நினைவுகள் ....................வெள்ளிக்கூஜாவில் சேமியாப்பாயசம் அதிகாலை ஐந்து மணிக்கு சாப்பிட்டது நிஜம் . ஆனந்தா லொட்ஜ் வீட்டு சந்தானமும் கோபுவும் வைக்கும் ராக்கெட் வெடிக்கு பயந்து அப்பா ஒவ்வொரு முறையும் டென்ஷன் ஆனது நிஜம். ஒருமுறை கூரையில் தீப்பிடித்ததும் நிஜம். வாசல் திண்ணையில் தட்டி கட்டி உறங்கியதும் நிஜம். அதே திண்ணையில் ஸ்ரீராமநவமி அப்பா கொண்டாடியதும் நிஜம். கூரை வீட்டின் அந்த சின்ன அறையில் இருந்த ரேடியோவில் ஒவ்வொரு சண்டேயும் மூன்று மணிக்கு தெருவே கூடி திருச்சி வானொலியில் ஒலிச்சித்திரம் கேட்டதுவும் நிஜம். மழைக்காலத்தில் தேளும் பூரானும் கூரையில் இருந்து கீழே விழுந்து ஓடியதும் நிஜம். அந்த கருப்பு போர்வைக்கு நான் மட்டும் சொந்தம் கொண்டாடியதும் நிஜம்.
அந்த கூரை வீடு.....
ஒவ்வொரு ந்ஜாயிற்று கிழமையும் சந்தைக்கு சென்று வரும் அப்பா சிமெண்ட் தரையில் சாக்பிசினால் செலவுக்கணக்கு பார்த்தது ...........
கட்டித்தயிர் (எனக்காக) கொண்டு வரும் மொர்க்கார நல்லம்மா ....
சுவர்களையும் தரையையும் ரிப்பேர் செய்ய வரும் அந்த மொபைல் மேஸ்தரி!(சைக்கிளில் வருவார்-அதனால் தான்) .......
தலையில் கூடையில் எவர்சில்வர் பத்திரங்களை சுமந்து வந்து மாத தவணையில் விற்பனை செய்த அந்த பாத்திர வியாபாரி!
பள்ளிக்கு கொண்டு செல்ல அப்பா வாங்கிக்கொடுத்த அந்த மஞ்சள் கலர் அலுமினிய டிபன் பாக்ஸ்!
துணியில் மூட்டை கட்டிக்கொண்டு வந்து விற்பனை செய்து வாசல் திண்ணையில் படுத்து உறங்கி சென்ற புடவை வியாபாரி!
வீட்டின் பின்புறம் இருந்த கறிவேப்பிலை மரம்!
பக்கத்து வீட்டில் இருந்த மின் வாரியத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ராமநாதன் மாமா !
எதிர்த்த வீட்டில் இருந்த கணேசன் (பாவி! நாங்கள் ஒரு சமயம் திருப்பதி சென்றிருந்த சமயத்தில் ஆறு நாட்டான் மலையில் இருந்து கீழே விழுந்து
இறந்து விட்டிருந்தான்! ) அவனுடன் சாமி பொம்மைகளை வைத்து விளையாடியதை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை...
கூரை வீட்டிற்கும் அவ்வப்பொழுது கூரை மாற்றும் கிழக்கு தெரு கணபதி!
அக்ரகாரத்து தெரு வழியே வேட்டியை கையில் பிடித்தபடி தன் தோட்டத்திற்கு நடந்து சென்று வரும் அப்பையர் !
தெருவின் கடைசியில் ஓடிக்கொண்டிருந்த வாய்க்கால் ! வாளியில் மொண்டு வந்து வீட்டில் நிரப்பிய தண்ணீர்!
............தொடர்வேன்!

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...