Thursday, July 13, 2023

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம். இருபத்தியேழாவது ஸர்கம்.

 

           ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம்.

                                         இருபத்தியேழாவது ஸர்கம்.

 

      சீதை இவ்விதமாகப் பேசுவதைக் கேட்ட அரக்கியரின் கோபம் அவர்கள் தலைக்கேறியதால், நிலை தடுமாறினர்.  இந்தச் செய்தியை, கல்நெஞ்சம் படைத்த இராவணனிடம் தெரிவிக்க சில அரக்கியர் விரைந்து சென்றனர்.

     உடனே அச்சுறுத்தும் தோற்றம் கொண்ட சில அரக்கியர் சீதையை நெருங்கினர்.  சீதையை மீண்டும் துன்புறுத்தும் வண்ணம், மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் கடுமையான வார்த்தைகளைக் கூறத் தொடங்கினர்.

     “அறமற்ற எண்ணங்களைக் கொண்டுள்ள இழிவான சீதையே! இங்கிருக்கும் அரக்கியர் இன்று உனது மாமிசத்தை மனம் நிறையும் வண்ணம் உண்டு களிக்கப் போகின்றார்கள்.”

     அப்பொழுதுதான் உறக்கத்திலிருந்து கண் விழித்த ‘திரிஜடை’ என்னும் வயதான அரக்கி, அந்த தரமிழந்த அரக்கியரால் சீதை மிரட்டப்படுவதைப் பார்த்ததும், அவர்களைப் பார்த்து இவ்விதம் சொல்லலானாள்.

     “ஏ மோசமான அரக்கியரே! முடிந்தால் நீங்கள் உங்களையே சாப்பிட்டுக் கொள்ளுங்கள். அரசனான ஜனகனின் அன்பு மகளும், பேரரசனான தசரதனின் அன்பு மருமகளுமான சீதையை உங்களால் உண்ண இயலாது.”

     “இன்று நான் அதி பயங்கரமானதும், மயிர்க் கூச்சமெடுக்க வைப்பதுமான ஒரு கனவினைக் கண்டேன்.  அதில் அரக்கர்களின் அழிவையும், சீதையின் கணவனான இராமனின் வெற்றியையும் கண்டேன்.”

     கோபத்தினால் வசமிழந்து காணப்பட்ட அரக்கியர், திரிஜடையின் வார்த்தைகளைக் கேட்டதும் அச்சமுற்று, அவளிடம் இவ்வாறு பேசத் தொடங்கினர்.

     “ஏ திரிஜடையே! இரவில் என்னதான் கனவு கண்டாய் என்பதை எங்களுக்கு நீ சொல்!” என்று அந்த அரக்கியர் கேட்டதும், திரிஜடை தான் கண்ட கனவினைப் பற்றி சொல்லத் தொடங்கினாள்.

     “நான் கண்ட கனவில், ஆகாயத்தில் பறக்கக்கூடிய, யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட ஒரு பல்லக்கைக் கண்டேன்.  வெண்ணிற மலர்களால் செய்யப்பட்ட மாலையையும், வெண்ணிற ஆடைகளையும் அணிந்திருந்த இராகவன், தன் தம்பி இலக்குமணனுடன், ஆயிரம் குதிரைகள் பூட்டிய அந்தப் பல்லக்கில் ஏறி இங்கு வந்திறங்கினார்.”

     “கடலால் சூழப்பட்டிருந்த ஒரு வெண்மையான மலையின் மீது, வெண்ணிற உடையணிந்து அமர்ந்திருந்த சீதையையும் என் கனவினில் கண்டேன்.  ஒளியானது எவ்விதம் சூரியனுடன் இணைந்திருக்குமோ, அவ்விதமே இராமனுடன் சீதை ஒன்றியிருந்தாள்!”

     “மேலும் அந்தக் கனவில், நான்கு  தந்தங்களுடன் கூடிய, பெரிய மலையைப் போல இருந்த யானையொன்றின் மீது இராமன், இலக்குமணனுடன் இருந்ததை நான் கண்டேன்.”

      “அப்பொழுது, சூரியனைப் போல் ஒளி வீசிக்கொண்டிருந்த அந்த இரண்டு சகோதரர்களும் வெண்ணிற மாலையும், வெண்ணிற ஆடையும் அணிந்து கொண்டு சீதையை நோக்கி வந்தனர்.”

     “பிறகு, மலையின் மீதிருந்த ஜானகி, ஆகாயத்திலிருந்தபடியே, இராமனால் தனதாக்கிக்கொள்ளப்பட்டிருந்த அந்த யானையின் மீது வந்து அமர்ந்தாள்.”

     “பிறகு தாமரை மலர்களையொத்த கண்களைக் கொண்ட சீதை, கணவனின் மடியிலிருந்து எழுந்து,  சூரிய சந்திரர்களை எட்டிப் பிடித்துத் தன் கைகளினால் தடவிக் கொடுத்தாள்.”

     “அதன் பிறகு, அவ்விரண்டு இளவரசர்களும், அகன்ற விழிகளைக் கொண்ட சீதையும் அமர்ந்திருந்த அந்தப் பெரிய  யானை, இலங்கை நகரத்தின் மேலே வந்து நின்றது.”

     “சீதை மற்றும் இலக்குமணனோடு கூடிய காகுத்தன் (இராமன்) , வெண்ணிற மாலைகளையும், வெண்ணிற ஆடைகளையும் அணிந்து கொண்டு, எட்டு வெண்ணிற எருதுகள் பூட்டிய தேரில் இங்கு வந்ததைக் கண்டேன்.”

     “அந்தக் கனவில் மேலும் நான், பெரும் வீரம் மிக்க இராமன், வேறொரு இடத்தில், மனைவி சீதையுடனும், தம்பி இலக்குமணனுடனும், சூரியனைப் போல ஒளி வீசிக்கொண்டிருந்த  புஷ்பக விமானத்தில் ஏறி, வடக்கு திசை நோக்கிச் செல்லக் கண்டேன்.”

     “இவ்வாறாக நான், விஷ்ணுவிற்கு நிகரான வீரமும் ஆற்றலுமிக்க இராமனைத் தன்னுடைய மனைவியான சீதையுடனும், தம்பியான இலக்குமணனுடனும் கண்டேன்.”

     “எவ்விதம் தீவினை செய்தவர்களால் சுவர்க்கலோகத்தை வெற்றி கொள்ள இய்லாதோ, அவ்விதமே, தேவர்களாலோ, அசுரர்களாலோ, அரக்கர்களாலோ, பெரும் ஒளி வீசக் கூடிய இராமனை வெற்றி கொள்ள இயலாது.”

     “மேலும் இன்னொரு கனவில் நான், இராவணன் எண்ணெய் தேய்க்கப்பட்ட உடலுடன், சிவப்பு நிற ஆடைகள் அணிந்தவனாய், அலரி மாலைகள் அணிந்து, மது அருந்திய மயக்கத்துடன் கீழே கிடப்பதைக் கண்டேன்.”

     “இன்று இன்னுமொரு கனவில், தலை மொட்டையடிக்கப்பட்டு, கருப்பு நிற உடைகளுடன் புஷ்பக விமானத்திலிருந்து கீழே விழுந்திருந்த இராவணன், , ஒரு பெண்ணினால் இழுக்கப்படுவதாய்க் கண்டேன்.”

     “பிறகு கழுதைகளால் இழுத்துச் செல்லப்படும் ஒரு தேரில், சிவப்பு நிற மாலைகள் அணிந்து, செந்நிற சந்தனம் பூசியவனாய் இராவணனைக்  கண்டேன்.  எண்ணெய் போன்ற திரவத்தைக் குடித்துக் கொண்டும், சிரித்துக் கொண்டும், நடனமாடிக்கொண்டும் இருந்தான்.  மனம் பிறழ்ந்தவர்களைப் போல அவனது அறிவும், புலன்களும் தடுமாறிக்கொண்டிருந்தன.  கழுதை மீது ஏறிக்கொண்ட அவன், விரைவாகத் தெற்குத் திசை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.”

     “பிறகு இராவணன் கழுதை மீதிருந்து பூமியில் தலை குப்புற வீழ்ந்து கிடப்பதைக் கண்டேன்.  அவன் பயத்தினால் நடுங்கிக்கொண்டிருந்தான்.”

     “பிறகு பயத்துடன் நடுங்கியபடியே அவன் எழுந்தான்.  மதுவின் மயக்கத்தில் தடுமாறியபடி, ஆடைகள் அற்ற நிலையில், தகாத வார்த்தைகள் பேசியபடி முன்னே சென்றான்.  அவனுக்கு முன்புறம், துர்நாற்றம் வீசிக்கொண்டு இருண்டிருந்த கழிவுகளிடையே நுழைந்து மறைந்து போனான்.”

     “அந்தக் கனவில், மேலும் பிறகு ஒரு கரிய நிறமுடைய பெண், சிவப்பு நிற ஆடையணிந்து, உடலெல்லாம் சேறாக இருக்க, பத்துத் தலை இராவணனின் கழுத்தைப் பிடித்து, தெற்கு திசை நோக்கி இழுத்துச் சென்றாள்.  பெரும் வீரனான கும்பகர்ணனையும் இதே நிலையில் கண்டேன்.”

     “இராவணனின் அனைத்துப் புதல்வர்களும் தலைகள் மொட்டையடிக்கப்பட்டு, உடலெங்கும் எண்ணெய் தடவப்பட்டிருந்ததைக் கண்டேன்.  மேலும் அந்தக் கனவில், இராவணன் ஒரு பன்றியின் மீது அமர்ந்தும், இந்திரஜித், ஒரு முதலையின் மீது அமர்ந்தும், கும்பகர்ணன் ஒரு ஒட்டகத்தின் மீது அமர்ந்தும் தெற்குத் திசை நோக்கிச் சென்றதைக் கண்டேன்.”

     “இந்தக் கனவில், விபீஷணன் மட்டுமே வெண்ணிறக் குடையுடனும், வெண்ணிற ஆடையுடனும், வெண்ணிற பூ மாலையுடனும், வெண்ணிறமான சந்தனம் உடலெங்கும் பூசியபடியும் இருந்ததைக் கண்டேன்.”

     “இந்த விபீஷணனுக்கு அருகில் சங்குகளின் முழக்கங்களும், பேரிகைகளின் ஓசைகளும் கேட்டன.  ஆடலும் பாடலும் நடந்து கொண்டிருந்தன.  பெரும் மலையைப் போன்ற பெரிய உடலுடனும், இடிமுழக்கத்தைப் போன்ற கர்ஜனையுடனும், நான்கு தந்தங்களுடன் இருந்த யானை மீது அமர்ந்திருந்த விபீஷணன், தன்னுடைய நான்கு அமைச்சர்களுடன் ஆகாயத்தில் நின்றிருந்தான்.”

     “அந்த இடத்தில், மது அருந்திக் கொண்டும், சிவப்பு வண்ண மாலைகளும், ஆடைகளும் அணிந்திருந்த அரக்கர்கள் கூட்டத்தைக் கண்டேன்.  அங்கு இசையொலியும், பலவித வாத்யங்களின் ஓசையும் கேட்டது.”

     “அழகிய இலங்கை நகரம், குதிரைகள், தேர்கள் மற்றும் யானைகளுடன் கடலில் மூழ்கிக் கிடந்ததைக் கண்டேன். அதன் தோரண வாயில்கள் இடிபட்டுக் கிடந்தன.”

     “என்னுடைய கனவில், இராவணனால் பாதுகாக்கப்படும் இந்த இலங்கை மாநகரம், இராமனின் தூதுவனாக வந்திருக்கும் மிகவும் வேகம் கொண்ட வானரம் ஒன்றால் எரிக்கப்பட்டு, சாம்பலாக்கப் படுவதைக் கண்டேன்.”

     “எரிந்து சாம்பலான இலங்கையில் அனைத்து அரக்கியரும் மதுபானம் அருந்திய மயக்கத்தில் உரக்கச் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.”

     “கும்பகர்ணன் முதலான அரக்கர் குல வீரர்கள், சிவப்பு நிற ஆடைகள் அணிந்து கொண்டு, சாணத்தினால் நிரம்பியிருந்த குளமொன்றினுள் நுழைந்தார்கள்.”

     “ஆகவே, அரக்கியரே! நீங்கள் அனைவரும் இங்கிருந்து சென்று விடுங்கள்.  இராகவனான இராமன் எவ்விதம் சீதையைத் திரும்பப் பெறப் போகின்றார் என்பதை நீங்கள் பாருங்கள். சினம் மிகுந்த இராமன் மற்ற எல்லா அரக்கரோடும் உங்கள் அனைவரையும் கொன்று விடுவார்.”

     “தன்னுடன் இணைபிரியாது கானகம் வந்தவளும், கணவனான தனது சொல் மீறாதவளும், மிகவும் மரியாதைக்குரியவளும், அன்பானவளுமான தன் மனைவியான சீதையை, நீங்கள் இவ்விதம் மிரட்டுவதையும், அச்சுறுத்துவதையும், இராமன் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டார்.”

     “ஆகவே, சீதையிடம் கடுமையான வார்த்தைகளைப் பேசுவதை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்.  மனதிற்கினிய வார்த்தைகளை அவரிடம் பேசுங்கள்.  நாம் அனைவரும், விதேக குமாரியான சீதையின் கருணைக்காகவும், அவரது மன்னிப்பிற்காகவும் வேண்டி நிற்போம் என்பதே என் விருப்பம்.”

     “எந்தவொரு துன்பத்திலிருக்கும் பெண்ணைப் பற்றியும் இவ்விதமாகக் கனவு கண்டால், அந்தப் பெண், அவளது பலவிதமான இன்னல்களிலிருந்து விடுபட்டு, தனக்கு மிகவும் விருப்பமான பொருளை அடைவாள்.”

     “அரக்கியரே! நீங்கள் இதுவரை சீதையை அச்சுறுத்தித் துன்புறுத்தியிருந்தாலும், ஏன் தயங்குகிறீர்கள்?  அவளது பாதம் பணிந்து மன்னிப்புக் கேளுங்கள்.  ஏனென்றால், இராமன் மூலம் அரக்கர்களுக்கு பயங்கரமான பெரிய ஆபத்துக் காத்திருக்கின்றது.” 

     “அரக்கியரே! ஜனகனின் மகளும், மிதிலை குமாரியுமான சீதை, உங்களது வணக்கங்களாலேயே மகிழ்ச்சியடைந்து விடுவாள்.  சீதையால் மட்டுமே உங்களை, அந்த பயங்கரமான பேராபத்திலிருந்து காப்பாற்ற முடியும்.”

     “அகன்ற விழிகளைக் கொண்டவளான சீதையின் உடலில், சீதை துன்பப்பட்டதற்கான எந்தவொரு பாதிப்பையும் நான் பார்க்கவில்லை.”

     “துயரங்களுக்கு அப்பாற்பட்டவளும், தேவர்களைப் போன்று விமானங்களில் பறக்கும் வசதிகளை அனுபவிக்கப் பிறந்தவளுமான சீதையின் ஒளி மட்டுமே, அவளது துயரத்தின் காரணமாக சற்றே குறைந்துள்ளது என்று சந்தேகிக்கின்றேன்.”

     “வைதேகியின் உள்ளக் கிடக்கைகள் நிறைவேறும் நேரம் வந்துவிட்டது என்று எனக்குத் தோன்றுகிறது.  அரக்கர்களின் அரசனான இராவணனின் அழிவிற்கும், இராமனின் வெற்றிக்கும் அதிக நேரம் ஆகப் போவதில்லை.”

     “இவளது அகன்ற, தாமரையிதழையொத்த இடது கண் துடிப்பதைப் பார்த்தால், இவள் விரைவில் மிக நல்ல செய்தியைக் கேட்க இருக்கிறாள் என்று தெரிகின்றது.”

     “சிறந்த பண்புடைய வைதேகியின் இடது கையும் மயிர்க்கூச்சமுற்று துடிப்பதும் தெரிகின்றது.”

     “பெண் யானையின் துதிக்கை போன்று அழகுடன் விளங்கும் இவளது இடது துடை துடிப்பதும் இராமன் வெகு விரைவில் இங்கு வரப்போவதை உணர்த்துகிறது.”

     “எதிரே உள்ள அடர்ந்த பசுமையான மரக் கிளைகளில் இருக்கும் தங்கள் கூடுகளிலிருந்து சுற்றிச் சுற்றிப் பறந்து, மிகவும் இன்பம் தரும் ஓசைகளைப் பரப்பும் பறவைகளைப் பார்க்கும் போது, அவை முகமன் கூறுவது போலவும், நல்ல விஷயங்கள் நடக்கப் போவதை மீண்டும், மீண்டும் உரைப்பது போலவும் தோன்றுகிறது.  தனக்குப் பிரியமானவரின் வரவை எடுத்துரைப்பது போலவும் உள்ளது.”

     “இவ்விதம் தன் கணவனின் வெற்றிச் செய்தியைக் கேட்டு மகிழ்ச்சியுற்ற சீதை, “நீங்கள் சொல்வது உண்மையானால், நான் உங்கள் அனைவரையும் காப்பாற்றுவேன்” என்று அவர்களிடம் சொன்னாள்.

                   

                                             இருபத்தேழாவது ஸர்கம் நிறைவு.

Monday, July 3, 2023

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம். இருபத்தாறாவது ஸர்கம்.

 

         ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம்.

                                         இருபத்தாறாவது ஸர்கம்.

                          (உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்தல்)

     ஜனகனின் மகளான சீதையின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகிய வண்ணம் இருந்தது. தலை கவிழ்ந்திருந்தது.  அவளது மனம் பிறழ்ந்து விட்டதோ அல்லது அவளது உடலில் வேறு எவரது ஆவியேனும் புகுந்து விட்டதோ என்பது போல சித்தம் கலங்கிய நிலையில், ஒரு குதிரைக் குட்டியைப் போல, தரையில் புரண்டவாறு இவ்விதம் பேசலானாள்.

     “நினைத்த வடிவம் கொள்ளும் ஆற்றல் பெற்ற மாரீசன் என்னும் அரக்கனால், ஸ்ரீராமனின் கவனம் திரும்பி விட, அவரது பார்வையில் இருந்து மறைந்திருந்த என்னை, நான் அழுது புலம்பிய நிலையிலும், இராவணன் தன் வலிமையினால் என்னைக் கட்டுப்படுத்தி, அபகரித்துக்கொண்டு இங்கு வந்து விட்டான்.”

     “நான் இப்பொழுது இந்த அரக்கியரின் கருணையற்ற பாதுகாப்பில் சிக்குண்டு, அவர்களால் கடுமையாக அச்சுறுத்தப் படுகின்றேன்.  அதனால், பெருங் கவலையும், துயரமும் மோலோங்கியுள்ள என்னால் இனியும் உயிர் வாழ இயலாது.”

     “சிறந்த தேரோட்டியான ஸ்ரீராமனைப் பிரிந்து இந்த அரக்கியரிடம் சிக்குண்டு வாழ்வதில் என்ன நன்மை? எனக்கு இப்பொழுது எந்தச் செல்வமும் தேவையில்லை.  எந்த விதமான அணிகலனும் தேவையில்லை.”

     “எனது இதயம் கல்லாகிவிட்டதோ, இல்லை, மூப்பும் மரணமுமற்ற நிலையை அடைந்து விட்டதோ தெரியவில்லை.  ஏனெனில், இந்த அளவிற்கான எனது துயரங்களைப் பார்த்த பின்னும், இரண்டாகப் பிளக்காமல் உள்ளதே?”

     “ஸ்ரீராமனை விட்டுப் பிரிந்திருக்கும் நான், ஒரு முகூர்த்த நேரம் கூட உயிர் வாழ்ந்திருக்கக் கூடாது. அப்படி இருக்கும் போது, இன்னும் என் உயிரை வைத்துக்கொண்டிருக்கின்றேன் என்றால், நான் எப்படிப்பட்ட கற்பிழந்த இழிபிறவியாக இருக்க வேண்டும்! என் வாழ்க்கை  மிகவும் இகழத்தக்க ஒன்றாகும்.”

     “கடல் வரை விரிந்து கிடக்கும் இந்தப் பூமியின் தலைவனான, இன்சொல் பேசும் என் கணவன் இல்லாமல், உயிர் வாழ்வது என்பதோ, இன்பத்தை அனுபவிப்பது என்பதோ இயலாத செயலாகும்.”

     “கணவனை விட்டுப் பிரிந்து என்னால் நெடுங்காலம் உயிர் வாழ முடியாது. ஆகவே உயிரை விட்டு விடப் போகும் என்னைத் துண்டங்களாக்கினாலும் சரி, உணவாக்கிக் கொண்டாலும் சரி.” (மேலிரண்டு ஸ்லோகங்களும் கீதா பிரஸ் பதிப்பில் இல்லை)

     “இரவு நேரத்தில் உலவித் திரியும் அரக்கனான இராவணனை, எனது இடது காலினால் கூட நான் தொடமாட்டேன்.  அவ்வாறிருக்க, நான் எவ்வாறு அவன் மேல் காதல் கொள்ள முடியும்?”

     “அந்த அரக்கன், தன் மோசமான இயல்பினால் தன்னுடைய பெருமையையும் அறிந்திருக்கவில்லை.  தன்னுடைய குலத்தின் உயர்வைப் பற்றியும் கருத்தில் கொள்ள வில்லை. நான் அவனை வெறுப்பதையும் அவன் பொருட்படுத்தியவனாய் இல்லை.  ஒரு மூடனைப் போல, என்னை அடைய வேண்டியே, திரும்பத் திரும்ப முயற்சி செய்கின்றான்.”

     “ஏ அரக்கியரே! வீணாக நெடு நேரம் நீங்கள் இவ்விதம் உளறிக் கொண்டிருப்பதால் என்ன பயன்? என் உடலை வெட்டிப் போட்டாலும், கீறிப் போட்டாலும், துண்டங்களாக்கினாலும், இல்லை நெருப்பினால் சுட்டாலும், இராவணனது அருகில் கூட நான் நெருங்க மாட்டேன்.”

     “உலகத்தோரால் போற்றப்படும் ஸ்ரீராமன் சிறந்த அறிவாளி.  நன்றியுடையவர்.  நல்லொழுக்கம் உள்ளவர்.  மிகவும் கருணை கொண்டவர்.  அப்படிப்பட்ட ஸ்ரீராமன், என்னிடம் கருணை காட்டாது இருப்பதற்கு, என்னுடைய கெட்ட நேரமே காரணம் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை.”

     “இல்லையென்றால், தண்டகாரண்யத்தில் தனி ஒருவனாக, இருபத்து நான்காயிரம் அரக்கர்களைக் கொன்றழித்தவர், ஏன் என்னைக் காப்பாற்ற வரவில்லை?”

     “இந்த அரக்கன் இராவணன், மிகவும் வலிவற்றவன்.  என்னை அபகரித்து வந்து சிறை வைத்திருக்கும் இவனை, என் கணவரான ஸ்ரீராமன், போர்க்களத்தில் நிச்சயம் அழித்துவிடும் திறமை கொண்டவர்.”

     “ஒரு எருதைப் போல வலிமை கொண்ட விராதன் என்ற அரக்கனை, தண்டகாரண்யத்தில் நடந்த போரில் கொன்ற ஸ்ரீராமன், என்னைக் காப்பாற்ற ஏன் வரவில்லை?”

     “கடலின் நடுவே இருக்கும் இந்த இலங்கையின் மீது படையெடுப்பது என்பது இயலாத செயலாக வேறு எவருக்கேனும் இருக்கலாம்.  ஆனால் ஸ்ரீராமனின் வில்லிலிருந்து கிளம்பும் அம்பினைத் தடுக்க யாரால் இயலும்?”

     “வலிமையும் ஆற்றலும் கொண்ட ஸ்ரீராமன், அரக்கனால் கடத்திச் செல்லப்பட்ட தன் அன்பினுக்கினிய மனைவியை மீட்டுச் செல்ல வராமல் இருக்க என்ன தகுந்த காரணம் இருக்க முடியும்?”

     “இலக்குமணனுக்கு மூத்தவரான ஸ்ரீராமன், நான் இங்கே சிறை வைக்கப்பட்டிருக்கும் செய்தியை அறியாதவராக இருப்பார். ஒருவேளை, அறிந்திருந்தால், ஒளிபொருந்திய அவர் இந்த தகாத செயலைச் சகித்திருப்பது எப்படி சாத்தியம்?”

     “கழுகுகளின் அரசனான ஜடாயு மூலமாக நான் அபகரிக்கப்பட்ட செய்தியை ஸ்ரீராமன் அறிந்திருக்க முடியும். ஆனால், ஜடாயு தான் இராவணால் கொல்லப்பட்டு வீழ்த்தப்பட்டு விட்டாரே!”

      “வயது முதிர்ந்திருப்பினும், ஜடாயு, என் மீது கருணை கொண்டு, என்னை மீட்பதற்காக இராவணனுடன் போரிட்டு தனது வீரத்தை நிரூபித்தார்.”

     “ஒருவேளை ஸ்ரீராமன் நான் இங்கிருப்பது பற்றி அறிந்திருந்தால், இக்கணமே, சினம் கொண்டு தன் அம்புகளால் இவ்வுலகத்தில் அரக்கர்கள் இனமே இல்லாது அழித்திருப்பார்.”

     “மேலும் ஸ்ரீராமன் இந்த இலங்கையை எரித்துச் சாம்பலாக்கி, கடலை வற்றச் செய்திருப்பார்.  நிலை கெட்ட இராவணனின் பெயர், புகழ் யாவற்றையும் அழித்திருப்பார்.”

     “நான் இவ்விடம் எவ்விதம் அழுதுகொண்டுள்ளேனோ, அது போலவே, ஒவ்வொரு அரக்கியரின் வீட்டிலும், அவர்தம் கணவரை இழந்ததால் எழும் அழுகையொலி விடாது கேட்கும் என்பதில் ஐயமில்லை.”

     “ஸ்ரீராமனும், இலக்குமணனும் இலங்கையைக் கண்டு பிடித்து, இங்கே வந்து விட்டால், பின்பு அவர்கள் முன்பு பகைவர்கள் ஒரு நொடி கூட உயிர் தரிக்க முடியாது.”

     “இலங்கையின் வீதிகளில் பிணங்கள் எரியும் புகையினால், இந்த நகரமே விரைவில் மறைக்கப்பட்டு விடும்.  கழுகுகள் கூட்டமாக, இந்த நகரத்தின் மீது வட்டமிட்டபடி இருக்கும்.  மொத்தத்தில், இலங்கை ஒரு மயான பூமியாக மாறிவிட்டிருக்கும்.”

     “வெகுவிரைவில், என் எண்ணக் கிடக்கைகள் நிறைவேறும் காலம் வரப் போகின்றது.  உங்கள் அனைவரின் மோசமான நடவடிக்கைகளின் காரணமாக விபரீதமான விளைவுகளை நீங்கள் சந்திக்கப் போகின்றீர்கள் என்று தோன்றுகிறது.”

     “இலங்கையில் தோன்றும் கெட்ட நிமித்தங்களைப் பார்க்கும் போது, வெகு விரைவில், அது தன் பெயரையும், புகழையும் இழந்து நிற்கும் என்று தோன்றுகிறது.”

     “பாவச் செயல்கள் புரியும் இராவணன் கொல்லப்பட்ட பிறகு, இந்த நகரம் ஒரு விதவைப் பெண்ணைப் போன்ற மோசமான நிலையை அடையும்.”

     “பல புனிதமான நிகழ்வுகள் நிகழ்ந்த இடமான இந்த இலங்கை, தன் அரக்கர்களுடன் அதன் தலைவனையும் இழந்து, ஒரு கைம்பெண்ணைப் போல காட்சியளிக்கப் போகின்றது.”

     “வெகு விரைவில், இந்த இலங்கையின் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் இளம் அரக்கியரின் அழுகுரலை நான் கேட்பேன்.”

     “ஸ்ரீராமனின் வில்லிலிருந்து கிளம்பும் அம்புகளால் இந்த இலங்கை எரிந்து, தன் ஒளியை இழந்து விடும்.  கடும் இருள் இந்த நகரத்தைச் சூழ்ந்து விடும்.  இலங்கையின் முக்கியமான அரக்கர்கள் அனைவரும் கொல்லப்படுவர்.”

     “சினத்தினால் சிவந்த கண்களைக் கொண்ட மாவீரனான ஸ்ரீராமனுக்கு, நான் இங்கே இலங்கையில் இந்த அரக்கனின் அந்தப்புரத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கும்  செய்தி தெரிந்தால் அல்லவா மேற்சொன்ன நிகழ்வுகள் எல்லாம் நடக்கும்?”

     “இந்தத் தரமிழந்த, கொடூரமான இராவணன் எனக்கு நேரம் குறித்திருக்கின்றான்.  ஆனால், அதற்குள், மிகக் குறைந்த நேரத்தில் அவனுடைய காலமே முடிந்துவிடப் போகின்றது.”

     “என்னுடைய மரணத்திற்குக் கொடியவனான இராவணன் நாள் குறித்துள்ளான்.  தீய செயல்களை விரும்பிச் செய்யும் அரக்கர்களுக்கு எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்ற அறிவே கிடையாது.”

     “இந்த அறமற்ற செயலால், வெகு விரைவில் பேரழிவு நிகழப் போகின்றது.  ஆனால், மாமிசத்தைப் புசிக்கும் இந்த அரக்கர்களுக்கு நல்லறம் பற்றி என்ன தெரியும்?”

      “இந்த அரக்கன், அவனது காலை உணவிற்காக நிச்சயம் எனது உடலைத் துண்டு துண்டாக வெட்டப் போகின்றான்.  என் அன்புக் கணவன் ஸ்ரீராமன் என்னுடன் இல்லாத அந்த  நேரத்தில், உதவியற்ற நான் என்ன செய்ய முடியும்?”

     “செவ்வரி ஓடிய கண்களைக் கொண்ட ஸ்ரீராமனைக் காண இயலாத துயரத்தில் இருக்கும் நான், உதவியற்றவளாய், கணவனின் பாதம் தொழாமலேயே எமதேவனை விரைவில் காண இருக்கின்றேன்.”

     “பரதனின் மூத்த சகோதரனான ஸ்ரீராமன், நான் உயிரோடு இருப்பதை அறிந்திருக்கவில்லை.  அறிந்திருந்தால், அவர் இந்தப் பூமியில் என்னைத் தேடாமல் இருப்பதற்கு வாய்ப்பில்லை.”

     “இலக்குமணனின் மூத்த சகோதரனான ஸ்ரீராமன், என்னைக் காண இயலாத துயரத்தில், இந்தப் பூமியில் தன் உடலை விட்டு விட்டு மேலுலகம் சென்று விட்டார் என்பதில் ஐயமில்லை.”

     “தாமரையின் இதழொத்த கண்களை உடைய ஸ்ரீராமனை மேலுலகத்தில் கண்டு களித்திருக்கும் தேவர்கள், கந்தர்வர்கள், சித்த புருஷர்கள், பெருந்துறவிகள் யாவரும் நற்பேறு பெற்றவர்கள்.”

     “இல்லையென்றால், அறத்தின் வழி ஒழுகும், பேராற்றல் வடிவான, துறவிகளுக்கெல்லாம் அரசன் போன்ற ஸ்ரீராமனுக்கு, தன் மனைவியினால் ஏதும் பயன் இல்லை என்ற எண்ணம் உண்டாகி விட்டதா?”

     “தம்முடைய உற்றார் தமது கண்கள் முன்னே இருக்கும் வரை தான் அன்பு நிலைத்திருக்கும்.  கண்ணிலிருந்து மறைந்து தொலைவாகச் சென்று விட்டால், சென்று விட்டவர் மீது அன்பு இருப்பதில்லை.  நன்றியில்லாதவர்கள், உறவினர் கண்களிலிருந்து மறைந்ததும், அவர்களை நிராகரித்து விடுகின்றார்கள்.  ஆனால், ஸ்ரீராமன் அவ்விதம் செய்ய மாட்டார்.”

     “இல்லையென்றால், எனக்குள்ளே ஏதோ சில தீய குணங்கள் இருக்க வேண்டும்.  அல்லது எனது நற்பேறு நிறைவடைந்திருக்க வேண்டும்.  அதனால் தான், சிறந்த பண்புகள் கொண்ட நான், வணக்கத்திற்குரிய கணவனிடமிருந்து பிரிந்திருக்கின்றேன்.”

     “களங்கமற்ற நற்குணங்கள் உடையவரும், பெரும் வீரரும், பகைவர்களை அழித்தொழிக்கும் வல்லமை பெற்றவரும், சிறந்த மனிதருமான ஸ்ரீராமனைப் பிரிந்து வாழ்வதை விட, இறந்து விடுவதே மிகவும் சிறந்தது.”

     “இல்லையெனில், சகோதரர்களான ஸ்ரீராமனும், இலக்குமணனும், காடுகளில் காய், கனிகளை உண்டு, வன வாசிகளாய் மாறி, ஆயுதங்களை விட்டொழித்து விட்டார்களா?”

     “இல்லையென்றால், தீயவுள்ளம் கொண்ட அரக்கர் குல அரசனான இராவணன், தகாத வழியில் சூழ்ச்சி செய்து, வீரம் மிக்க சகோதரர்களான ஸ்ரீராமனையும் இலக்குமணனையும் கொன்று விட்டானா?”

     “ஆகவே, இந்தச் சூழ்நிலையில், நான் எவ்விதமாவது, என் உயிரை மாய்த்துக்கொள்ள விரும்புகின்றேன்.  ஆனால், இவ்வளவு துயரம் அனுபவிக்கும் எனக்கு மரணம் நேர்ந்திட இன்னும் நேரம் வரவில்லையே?”

     “உண்மையான பேராற்றலைத் தங்களுக்கு உள்ளே உணர்ந்தவர்களும், தங்கள் புலன்களை அடக்கிக் கொள்ளும் பயிற்சி பெற்றவர்களுமான பெரிய பெரிய துறவிகள், பெரும் பேறு பெற்றவர்கள்.  ஏனென்றால், அவர்களுக்குத்தான் விருப்பமானவை, விருப்பமற்றவை என்ற வேறுபாடு இல்லை.”

     “விருப்பு வெறுப்பு ஆகிய இரண்டையும் துறந்து விட்ட மிகச் சிறந்த மனிதர்களுக்கு என் வணக்கங்கள்.  ஏனெனில் விருப்பம் நிறைவேறாததால் ஏற்படும் துன்பமும், வெறுப்பு மிகுதியினால் ஏற்படும் அச்சமும் அவர்களுக்கு இல்லை !”

     “ஆகவே, என் அன்பிற்கினியவரும், தன்னை உணர்ந்தவருமான ஸ்ரீராமனிடமிருந்து பிரிந்து, இங்கே கொடுஞ்செயல் புரியும் இராவணனிடம் சிறையிருக்கும் நான், என் உயிரை விட்டு விடுகின்றேன்.”

 

                                இருபத்தியாறாவது ஸர்கம் நிறைவு.

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம். இருபத்தைந்தாவது ஸர்கம்.

 

              ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம்.

                                         இருபத்தைந்தாவது ஸர்கம்.

 

     அந்த அரக்கியரின் கடுமையான, கருணையற்ற வார்த்தைகளால், தைரியம் இழந்த ஜனகனின் மகளான சீதை, அழுது கொண்டிருந்தாள்.

     விதேஹ நாட்டு அரச குமாரியான, மனதினிற்கினிய சீதை, அரக்கியரின் பேச்சுக்களால் முற்றிலும் அச்சம் கொண்டு, கண்களில் நீர் வழிய, தழுதழுத்த குரலில் பேசத் தொடங்கினாள்.

     “ஹே அரக்கியரே! மானுடப் பெண், எந்த சூழலிலும், ஒரு அரக்கனுக்கு மனைவியாக முடியாது.  நீங்கள் அனைவரும் சேர்ந்து என்னைச் சாப்பிட விரும்பினாலும், உங்களது பேச்சை நான் கேட்க மாட்டேன்.” என்றாள்.

     அரக்கியரின் நடுவே அமர்ந்திருந்த தேவ மங்கையொத்த சீதை, இராவணனால் தூண்டப்பட்ட அரக்கியரால் அச்சுறுத்தப்பட்டதால், துயரம் மேலோங்க, அமைதியிழந்து, வருத்தத்துடன், ஆதரவற்ற நிலையில் இருந்தாள்.

     காட்டில் தன் கூட்டத்தை விட்டுப் பிரிந்த பெண் மான் ஒன்று, ஓநாய்கள் கூட்டத்தில் சிக்கித் தவிப்பது போல், சீதை மிகவும் துடித்துக் கொண்டிருந்தாள்.  தன் உடல் பகுதிகள் அனைத்தையும் குறுக்கிக் கொண்டு, உடலை ஒடுக்கிக் கொண்டாள்.  அவளது உடல் பாகங்கள் அனைத்தும் உடலுடன் ஒட்டிக்கொண்டது போல ஆகிவிட்டன. 

     சீதை மனம் உடைந்த நிலையில், சோகமே வடிவாக, தன் கணவனை நினைத்துக் கொண்டே, பூத்துக் குலுங்கிய ஒரு பெரிய அசோக மரத்தின் கிளையைப் பற்றியவாறு நின்றிருந்தாள்.

     சீதையின் கண்களில் பெருகிய கண்ணீர் அவளது மார்பகங்களை நனைத்திருந்தது.  அவளது எண்ணமெல்லாம் கவலையில் தோய்ந்திருக்க, அவளது துயரம் எல்லையற்றதாய் இருந்தது. 

     அரக்கியரின் அச்சுறுத்தலுக்குப் பயந்த சீதை, வீசும் சூறைக்காற்றில் வேருடன் சாய்ந்து வீழும் வாழை மரம் போல, களையிழந்து நின்றிருந்தாள்.

     சீதையின் அடர்ந்து, நீண்டு, வளர்ந்திருந்த தலைமுடியும் அவளது துயரத்தைப் பிரதிபலிப்பது போல வளைந்து நெளிந்து ஆடிக் கொண்டிருந்தது. அதைப் பார்க்கும் போது, வளைந்து, சீறிக்கொண்டு நெளிந்து செல்லும் ஒரு பெண் பாம்பைப் போல இருந்தது.

     துயரத்தில் நிலை குலைந்திருந்த சீதை, கவலை நிறைந்த மனத்துடன், கோபமும் சேர்ந்து கொள்ள, நினைவிழக்கும் நிலைக்குச் சென்றாள். பிறகு அவள் புலம்பத் தொடங்கினாள்.

     அந்த அழகுப் பதுமையான சீதை, துயரம் மிக்கவளாய், ஹே ராமா! என்றும், ஹே லக்ஷ்மணா! என்றும், தன் மாமியாரை நினைத்தவளாய், ஹே கெளசல்யா! என்றும், ஹே சுமித்ரா! என்றும் அழைத்தவாறு புலம்பினாள்.

     “ராமனைப் பிரிந்திருக்கும் நான், இந்தக் கொடூரமான அரக்கியரின் துன்புறுத்தல்களைச் சகித்துக்கொண்டு, ஒரு முகூர்த்த நேரம் கூட உயிர் தரித்திருக்க இயலாது. என்றாலும், கற்றறிந்த ஆன்றோர்கள் அனைவருக்கும் உரைத்துள்ள படி, ஆணுக்கோ, பெண்ணுக்கோ மரணம் என்பது அவரவர்களுக்கான காலம் வரும் போதுதான் நிகழும். “

     “நல் வினைகள் ஏதும் புரிந்திராது, இழி நிலையில் இருக்கும் நான், பாரம் சுமந்து செல்லும் கப்பல், கடலில், சுழற்காற்றில் சிக்கி, சின்னாபின்னமாவது போல அழிந்து விடுவேன்.”

     “அரக்கியரின் கட்டுப்பாட்டில் இருக்கும் நான், என்னுடைய கணவனைக் காண முடியாமல், பெரு வெள்ளத்தில் கரைந்து விடும் ஆற்றின் கரைகள் போல துயரத்தில் உள்ளேன்.”

     “தாமரையின் மலர்ந்த இதழொத்த அழகிய கண்களைக் கொண்டவரும், சிங்கத்தின் கம்பீரமான நடையைக் கொண்டவரும், கருணை மிக்கவரும், இன்சொல் உரைப்பவருமான என் அன்பிற்குரிய கணவனை, இன்று கண்களால் காண முடிந்தவர்கள் பெரும் பேறு பெற்றவர்களாவார்கள்.”

     “கொடிய நஞ்சுண்டவன் உயிர் வாழ்வது இயலாதது போல, தன்னை யறிந்த ஆத்ம ஞானியான என் கணவரைப் பிரிந்து நான் உயிர் வாழ்தல் என்பது அரிய செயலாகும்.”

     “முற்பிறவியில் என்னால் செய்யப்பட்ட தீவினைகளின் பயனாகவே, இப்பொழுது, இவ்வளவு கடினமான துன்பங்களை நான் அனுபவிக்க வேண்டியுள்ளது.”

     “இந்தக் கொடிய அரக்கியரின் பிடியில் இருக்கும் நான், என்னுடைய உயிர் நாயகனான ஸ்ரீராமனை ஒரு பொழுதும் இனி பார்க்க முடியாது.  ஆகவே, பெருந்துயரத்தில் வீழ்ந்துள்ள நான், என்னுடைய உயிரை மாய்த்துக் கொள்ள விரும்புகிறேன்.”

     “நினைத்த மாத்திரத்தில் உயிரை விட்டு விட முடியாது, பிறரது கட்டுப்பாட்டில் இருக்கும் எனது மானுடப் பிறப்பின் இழி நிலையை நான் என்னவென்று இகழ்வேன்?”

     இவ்வாறாக சீதை தன் துயரத்தை வெளிப்படுத்தினாள்.

                               

                                          இருபத்தைந்தாவது ஸர்கம் நிறைவு.

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம். இருபத்துநான்காவது ஸர்கம்.

 

               ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம்.

                                       

                                       இருபத்துநான்காவது ஸர்கம்.

 

     அதன் பின்னர், முழுவதும் கொடூரமான முக அமைப்பைக் கொண்டிருந்த அரக்கியர், சீதையை நெருங்கி, அவளைப் பார்த்து சற்றும் மகிழ்ச்சியளிக்காத வார்த்தைகளைக் கூறத் தொடங்கினர்.

     “ஏ சீதையே! அனைத்து உயிர்களுக்கும் இன்பம் தரவல்ல, மிகச் சிறப்பான படுக்கைவிரிப்புகள் கொண்ட படுக்கைகள் நிறைந்த அந்தப்புரத்தில் வசிப்பதற்கு நீ ஏன் விருப்பம் கொள்ளாதிருக்கின்றாய்?”

     “நீ மானுடப்பெண்ணாக இருப்பதால், ஒரு மனிதனான இராமனின் மனைவியாக இருப்பதை உயர்வாக நினைத்துக் கொண்டிருக்கின்றாய். ஆனால் அது நடக்கப் போவதில்லையாதலால்,, நீ உன் மனதை இராமனிடமிருந்து விலக்கிக் கொள்!”

     “மூன்று உலகங்களிலுமுள்ள செல்வங்களையெல்லாம் ஆண்டு அனுபவிக்கும் அரக்கர் வேந்தனை உன் நாயகனாக வரித்து, மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்வாயாக!”

     “மாசு மருவற்ற பேரழகு கொண்ட பெண்ணே! தனது நாட்டிலிருந்து விரட்டப்பட்டவனும், தோல்விகளால் துவண்டிருப்பவனுமான மனிதப் பிறவியான இராமனை ஏன் நினைத்துக் கொண்டிருக்கின்றாய்?”

     தாமரையிதழ்களையொத்த விழிகளைக் கொண்டவளான சீதை, அந்த அரக்கியரின் வார்த்தைகளைக் கேட்டு, கண்களில் நீர் வழிய அவர்களைப் பார்த்து இவ்விதம் பேசலானாள்.

     “நீங்கள் அனைவரும் ஒன்று கூடி கூறிய, உலக நியதிக்கு ஒவ்வாத, பாவத்தை விளைவிக்கக் கூடிய இந்த வார்த்தைகளை என் மனம் சிறிதும் ஏற்கப் போவதில்லை!”

     “ஒரு மானிடப் பெண் ஒரு அரக்கனை மணக்க இயலாது. நீங்கள் உங்கள் விருப்பப்படி என்னைக் கொன்று உணவாக்கிக்கொண்டாலும், நீங்கள் சொன்ன வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள மாட்டேன்!”

     “ஸ்ரீராமன் நாடு கடத்தப்பட்டு கவலையில் இருந்தாலும், அவரே எனது கணவரும் வழிகாட்டியுமாவார். எவ்விதம் சுவர்ச்சலா (சூரியனின் மனைவி) சூரியனை விடாது பற்றியிருக்கின்றாரோ, அது போல, நானும் ஸ்ரீராமனை விடாது பற்றியிருப்பேன்!”

     “எவ்விதம் பெரும் பேறு பெற்றவளான சசிதேவி இந்திரனுக்குப் பணிவிடை செய்கிறாளோ, தேவி அருந்ததி, மாமுனிவர் வசிட்டருக்குச் சேவை செய்கிறாளோ, ரோகிணி சந்திரனுக்கும், லோபமுத்ரா அகஸ்த்தியருக்கும், சுகன்யா ச்யவனருக்கும், சாவித்திரி சத்யவானுக்கும், ஸ்ரீமதி, கபிலருக்கும், மதயந்தி செளதாசருக்கும், கேசினி, ராஜா சகரனுக்கும், பீமனின் மகள் தமயந்தி, நிஷாத நாட்டரசன் நளனுக்கும் சேவைகள் செய்து வருகின்றார்களோ, அது போலவே நானும் இஷ்வாகு குலத்திற் சிறந்தவரான ஸ்ரீராமருக்குச் சேவை செய்வேன்.

     சீதையின் வார்த்தைகளைக் கேட்ட அரக்கியர் சினத்தின் எல்லைக்கே சென்றனர்.  இராவணனின் ஆணைப்படி, கடுஞ்சொற்களால் அவளை மிரட்டத் தொடங்கினர்.

     அசோக மரத்தில் ஓசையெழுப்பாது மறைந்திருந்த ஸ்ரீஅனுமன், சீதையை அரக்கியர் கடுஞ்சொற்களால் மிரட்டியதைக்  கவனித்தார்.

     அந்தக் கொடிய அரக்கப்பெண்கள், அச்சத்தில் மிரண்டிருக்கும் சீதையைச் சுற்றிலும் சூழ்ந்து கொண்டு, தொங்கிக்கொண்டிருந்த தங்களது நாக்குகளால் தங்கள் உதடுகளைக் கடித்த வண்ணம் இருந்தனர்.

     அவர்கள் மேலும் பெரும் கோபம் கொண்டவர்களாய், கோடாரிகளைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு, “இவள் அரக்கர்குல அரசனுக்கு மனைவியாக ஏற்றவள் இல்லை” என்று சொல்லியபடி எழுந்து வந்தார்கள்.

     அந்தக் கொடூரமான அரக்கியர் தொடர்ந்து மிரட்டியபடி இருந்ததால், மிகச் சிறந்த உடல் வனப்பைக் கொண்டிருந்த சீதை, தன் கண்களில் வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே, அந்த அசோக மரத்தை நெருங்கினாள்.

     துயரமே வடிவாக, அகன்ற விழிகளைக் கொண்ட சீதை, அந்த அசோக மரத்தின் அடியைச் சென்றடைந்து நின்று கொண்டதும், எல்லா அரக்கியரும் அவளைச் சூழ்ந்து கொண்டனர்.

     அழுக்கான ஆடைகளை அணிந்திருந்த சீதை, மிகவும் வலுவிழந்து, துயரமே வடிவாக, களையிழந்த முகத்துடன் இருந்தாள்.  அவளை நாலாபுறங்களிலும் சூழ்ந்திருந்த அரக்கியர், மீண்டும் அவளை அச்சுறுத்தத் தொடங்கினர்.

     அப்பொழுது, பார்ப்பதற்கே அதிபயங்கரமான உருவம் கொண்ட வினதா என்னும் பெயருடைய அரக்கி, உடலெங்கும் சினம் வழிய, சீதையை நெருங்கினாள்.  ஒழுங்கற்ற உடலமைப்பைக் கொண்டிருந்த அவளின் வயிற்றுப்பகுதி, வற்றிப் போய் உடலோடு ஒட்டியிருந்தது.  அவள் சீதையைப் பார்த்துச் சொல்ல ஆரம்பித்தாள்.

     “ஹே சீதே! நீ உன்னுடைய கணவனான இராமனிடத்தில் வேண்டிய மட்டும் அன்பு செலுத்தி விட்டாய்.  அது போதும்.  அளவிற் கதிகமாய்  செய்யும் எந்தச் செயலும் துன்பத்தைத் தான் தரும்!”

     “மிதிலையின் குமாரியே! நீ உனது மானிடப் பிறப்பிற் கேற்ற அறவழியில் மிகவும் சீரிய முறையில் சென்றிருப்பது எனக்கு மிகவும் திருப்தி அளிக்கும் வண்ணம் உள்ளது.  இப்பொழுது உனது நன்மைக்காக நான் சொல்வதைக் கேட்டு, விரைந்து அதன் படியே நடப்பாயாக!”

     “அனைத்து அரக்கர்கள் குலத்திற்கும் அரணாய் இருக்கும் பேரரசர் இராவணனை நீ கணவனாக ஏற்றுக்கொள்.  அவர் இந்திரனைப் போல பெரும் வீரர். மற்றும் அழகு மிக்கவர்!”

     “யாருடைய உதவியும் கிட்டாது அலையும் மானிடனான இராமனை விட்டுவிட்டு, நல்ல வார்த்தைகள் பேசக்கூடிய, கருணை உள்ளம் கொண்ட, மற்றவருக்காக எதையும் விட்டுக் கொடுக்கும் குணம் கொண்ட இராவணன் வசம் அடைக்கலம் கொள்வாய்!”

     “விதேக குமாரி! இன்று முதல் நீ, மிகச் சிறந்த  வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொண்டு, மிகச் சிறந்த அணிகலன்களை அணிந்து கொண்டு, அனைத்து உலகங்களும் அரசியாக ஆவாயாக!”

     “அழகிய பெண்ணே! அக்னி தேவனின் அன்பிற்குரிய மனைவியான ஸ்வாஹா போலவும், இந்திரனின் உயிருக்கு உயிரான மனைவியான சசியைப் போலவும், நீ இராவணனின் அன்புக் காதலியாகிவிடு.  விதேஹ குமாரி! மிகவும் வலுவிழந்தவனும், தன் வாழ்நாளின் இறுதிக் கட்டத்தில் இருப்பவனுமான இராமனிடம் உனக்கு என்ன இன்பம் கிடைக்கும்?”

     “நீ இதுவரை நான் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு அதன் படி நடக்காவிட்டால், நாங்கள் அனைவரும் சேர்ந்து, இப்பொழுதே உன்னை உணவாக்கிக் கொள்வோம்!” என்று சொன்னாள்.

     அப்பொழுது, விகடா என்னும் மற்றொரு அரக்கி சீதையிடம் வந்தாள்.  அவளது பெருத்த மார்பகங்கள் தொங்கியபடி ஆடிக்கொண்டிருந்தன.  கோபத்தில் தன் முட்டியை மடக்கியவாறு,  சீதையைப் பார்த்து உறுமினாள். 

     “பொல்லாத பெண்ணே! எங்களுடைய நல்ல குணத்தாலும், இரக்க சுபாவத்தாலும், நீ இதுவரை சொன்ன ஏற்றுக்கொள்ள முடியாத வார்த்தைகளைப் பொறுத்துக்கொண்டோம்.”

     “உன்னுடைய நன்மைக்காக நாங்கள், காலத்தை அனுசரித்து, உனக்கு யோசனைகள் சொன்னதை நீ கேட்கவில்லை. கடலின் மறுகரைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளாய்! இங்கு வேறு யாரும் வருவது மிகவும் கடினம்.  மேலும் இராவணனது பயங்கரமான அந்தப்புரத்தில் கொண்டு வைக்கப்பட்டுள்ளாய்.  மிதிலை குமாரியே! இராவணனது வீட்டில் கைதியாக உள்ள நீ, எங்களால் காவல் காக்கப் படுகிறாய் என்பதை நினைவில் கொள்!”

     “ஹே மைதிலி! அந்த இந்திரனிடம் கூட உன்னைக் காப்பாற்றும் திறமை கிடையாது.  ஆகவே, உனது நன்மைக்காக நான் சொல்லும் வார்த்தைகளை ஏற்றுக்கொள்வாயாக!”

     “நீ உன் கண்களில் கண்ணீர் வடித்தது போதும்.  அர்த்தமற்ற உன் துயரத்தை விட்டு விட்டு, உன் மேல் எப்பொழுதும் நிழலாகப் படிந்திருக்கும் உன் மனச்சோர்வை விட்டு விட்டு, உன் மனத்தினுள் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் உண்டாக்கிக் கொள்!”

     “சீதையே! அரக்கர் குல அரசனான இராவணனோடு இன்பத்துடன் களித்து விளையாடு!  அச்சம் கொள்ளும் பெண்ணே! பெண்களின் இளமையானது நிலையானது அல்ல என்பதைப் பெண்களாகிய நாம் அனைவரும் அறிவோம் அல்லவா?”

     “உன்னுடைய இளமை உன்னிடம் உள்ளவரை, இன்பத்தை அனுபவித்துக் கொள்.  மனதைக் கொள்ளை கொள்ளும் மயக்கும் விழிகளைக் கொண்ட அழகியே! அரக்கர்களின் அரசனான இராவணனுடன், நீ இலங்கையின் அழகிய தோட்டங்களிலும், மலைச்சரிவுகளிலும் சுற்றி விளையாடு! அவ்விதம் செய்தாயானால், ஆயிரக்கணக்கான பெண்கள், உனக்கு அடிமையாகி, உன்னுடைய ஆணைக்காக் காத்திருப்பார்கள்!”

     “பேரரசன் இராவணன் அரக்கர் குலத்தையெல்லாம் காப்பவன்.  நீ அவனை உன் கணவனாக ஏற்றுக் கொள்.  மைதிலி! நான் சொன்ன வார்த்தைகளை நீ சரியாக ஏற்றுக் கொள்ளாவிட்டால், உன் இதயத்தைப் பிளந்து நான் உண்டு விடுவேன் என்பதை நினைவில் கொள்வாயாக!” என்று சொன்னாள்.

     பிறகு சண்டோதரி என்னும் அரக்கி, கண்களில் சினம் கொப்பளிக்க, தன்னுடைய பெரிய சூலாயுதத்தைச் சுழற்றியபடி, சீதையைப் பார்த்துப் பேசினாள்.

     “மகாராஜா இராவணன் எப்பொழுது இவளைக் கவர்ந்து கொண்டு வந்தாரோ, அப்பொழுதிலிருந்தே இவள் பயத்துடன் நடுங்கிக் கொண்டிருக்கிறாள்.  இவளுடைய இரு மார்புகளும் பயத்தில் குலுங்கிக் கொண்டுள்ளன.  மானின் கண்களைப் போன்ற அழகிய கண்களைக் கொண்ட இந்த மானுடப் பெண்ணைப் பார்த்த நாள் முதல், எனக்கு இவள் மேல் பெரும் ஆசை வந்து விட்டது.  இவளுடைய ஈரல், அகன்ற மார்புகள், இதயம், மற்றும் எலும்புகள், தலை எல்லாவற்றையும் சாப்பிடவேண்டும் என்பதே என் எண்ணமாக உள்ளது!” என்று சொன்னாள்.

     அப்பொழுது, ப்ரகசா என்னும் அரக்கி, “நாம் இந்த இதயமற்ற சீதையின் கழுத்தை நெறித்து விடுவோம்.  ஏன் அமைதியாகக் காத்திருக்க வேண்டும்?”  பிறகு மஹாராஜாவிற்கு இந்த மனிதப் பெண் இறந்து விட்டதாகத் தகவல் அளித்து விடுவோம்.  இந்த செய்தியைக் கேட்ட அரசன், இந்தப் பெண்ணைச் சாப்பிட்டு விடுமாறு நம்மிடம் சொல்லி விடுவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை!” என்று சொன்னாள்.

     அப்பொழுது அஜாமுகி என்னும் அரக்கி, “வீணாகப் பேசிக் கொண்டிருப்பதில் எனக்கு விருப்பம் இல்லை.  வாருங்கள், இவளைக் கொன்று, இவள் உடலைச் சம பங்குகளாகப் பிரித்து விடுவோம்.  பிறகு, நாம் அவற்றை நமக்குள் பங்கிட்டுக் கொள்வோம்.  கூட அருந்தி மகிழ, வித விதமான மது பானங்களையும், அணிந்து மகிழ பூக்கள், மாலைகள் ஆகியவற்றையும் வரவழையுங்கள்!” என்று சொன்னாள்.

     உடனே சூர்ப்பணகை என்ற அரக்கி, “அஜாமுகி சொன்ன கருத்து எனக்கும் மிகவும் பிடிக்கிறது.  எல்லாத் துயரங்களையும் போக்க வல்ல, சுரா பானத்தைக் கொண்டு வரச் சொல்லுங்கள்.  அதனுடன் சேர்த்து, இந்த மனித மாமிசத்தை உண்டு கொண்டே, நிகும்பலா தேவியின் முன் நடனம் ஆடுவோம்!” என்று சொன்னாள்.

     இவ்விதமாக அந்தக் கோரமான அரக்கியரால் பலவிதமாக அச்சுறுத்தப்பட்ட தேவ மங்கை போன்ற அழகிய சீதை, தன் தைரியத்தை இழந்து, விசித்து விசித்து அழத் தொடங்கினாள்.

                                     இருபத்து நான்காவது ஸர்கம் நிறைவு.

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம். இருபத்து மூன்றாவது ஸர்கம்.

 

              ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம்.

                            இருபத்து மூன்றாவது ஸர்கம்.

     பகைவர்களை அச்சுறுத்தும் அரசனான இராவணன், இவ்விதம் மைதிலியிடம் பேசிய பிறகு அந்த அரக்கியர்களுக்கு ஆணைகளைப் பிறப்பித்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.

     அரக்கர் குல அரசன் தன் அந்தப்புரம் நோக்கித் திரும்பிச் சென்றதும், அச்சமூட்டும் வடிவங்கள் கொண்ட அரக்கியர் விரைந்து வந்து சீதையைச் சூழ்ந்து கொண்டனர்.

     அங்கு அவர்கள் கடும் கோபத்தில் தங்கள் நிலை மறந்து, கடுமையான வார்த்தைகளால் சீதையிடம் இவ்விதம் பேசலானார்கள்.

     “ஓ! சீதையே! புலஸ்த்ய குலத்தின் தனிச் சிறப்பு வாய்ந்தவனும், மிகச் சிறந்தவனும், பத்துத் தலைகளைக் கொண்டவனுமான இராவணனின் மனைவியாவது பெரும் பேறு என்பதை நீ உணரவில்லையே?”

     அதன் பிறகு ஏகஜடை என்னும் அரக்கி, சினத்தில் சிவந்த கண்களுடன், உள்ளங்கை அளவே இருக்கும் வயிற்றுப் பகுதியைக் கொண்ட சீதையை நெருங்கி, பின்வருமாறு பேசினாள்.

     “பிரம்மாவின் மனதிலுதித்தவரும், புலஸ்த்யர் என்று புகழுடன் அறியப் படுபவருமானவர், ஆறு பிரஜாபதிகளுள் நான்காமவர். (மரீசி, அத்ரி, அங்கீரஸ், புலஸ்த்யர்,புலஹர், க்ரது ஆகியோர் ஆறு பிரஜாபதிகள் ஆவர்).”

     “புலஸ்த்யரின் மனதில் உதித்தவரும், பிரஜாபதிக்கு நிகரான ஆற்றல் மிக்கவருமான விச்ரவஸ் என்பவர் பெரும் தவ முனிவராவார்.  அகன்ற விழிகளைக் கொண்டவளே! பகைவர்களைப் பந்தாடும் இராவணன் அவரது மகன்.  அரக்கர்குல வேந்தனான இராவணனின் மனைவியாவதற்கான எல்லாத் தகுதிகளையும் உடையவள் நீ! பூரண உடலழகு மிக்கவளே! நான் சொல்லும் வார்த்தைகளை நீ ஏன் ஏற்க மறுக்கிறாய்?”

     இதற்குப் பிறகு பூனையின் கண்களைப் போன்ற கண்களைக் கொண்டிருந்த ஹரிஜடா என்னும் அரக்கி, கோபம் கொண்டவளாய், கண்களை உருட்டிய வண்ணம் இவ்விதம் பேசினாள்.

     “முப்பத்து முக்கோடி தேவர்களையும் அவர்களின் அரசனான தேவேந்திரனையும் வென்றவனான அரக்கர்குல வேந்தனான இராவணனின் மனைவியாவதற்கு நீ நிச்சயம் விருப்பம் கொள்ள வேண்டும்!”

     அப்பொழுது, பிரகசா என்னும் அரக்கி கோபத்தில் மதி மயங்கி, மிகவும் கடுமையான வார்த்தைகளைச் சொல்லலானாள். (இந்த ஸ்லோகம் கீதா பிரஸ் பதிப்பில் இல்லை).

     “தன்னுடைய வீரத்தால் செருக்குடையவனும், மிகவும் ஆற்றல் மிக்கவனும், போரிலே தோற்றுப் புறமுதுகிடாதவனுமாகிய வீரனுக்கு மனைவியாக ஏன் நீ விருப்பம் கொள்ளாதிருக்கின்றாய்?”

     “பெரும் வலிமை கொண்ட அரசனான இராவணன், தனது மனைவியருள்ளேயே, மிகவும் மதிப்பு மிக்க மனைவியைக் கூடத் துறந்து விட்டு, உன்னை அடைவதற்கு விருப்பமாய் உள்ளார்!”

     “பெரும் வீரரும், பேரரசருமான இராவணன், ஆயிரக்கணக்கான பெண்கள் நிறைந்ததும், வைர வைடூரியங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான தனது அந்தப்புரத்தையே உன் பொருட்டு துறந்துவிட்டு உன்னிடம் வருவார்!”

     அப்பொழுது விகடா என்னும் அரக்கி,” பலமுறை போர்க்களங்களில், தேவர்கள், நாகர்கள், கந்தவர்கள் ஆகியோரை அழித்தொழித்தவரே, அவராக விரும்பி உன்னிடம் வருகிறார்.!” என்று சொன்னாள்.

     “ஏ! மதி கெட்ட பெண்ணே! அனைத்து விதமான செல்வங்களையும் பெற்றுள்ள, சிறந்த ஆளுமை மிக்க அரக்கர்குல அரசனான இராவணனின் மனைவியாவதில் விருப்பம் கொள்ளப் போகிறாயா இல்லையா?” என்று சொன்னாள்.

      பிறகு துர்முகி என்பவள், “ஓ! அகன்ற நீள் விழிகளைக் கொண்டவளே! யாரைப் பார்த்து சூரியன் வெப்பம் உண்டாக்க அச்சம் கொள்வானோ, யாரைப் பார்த்து வாயுதேவன் காற்று வீச அச்சம் கொள்வானோ, அவருடன் நீ இருக்கப் போகிறாயா இல்லையா?” என்று கேட்டாள்.

     “அழகிய புருவங்களைக் கொண்டவளே! யாரிடம் அச்சம் கொண்டு, அவர் நினைத்த மாத்திரத்தில் மரங்கள் பூக்களைச் சொரியுமோ, யாரிடம் அச்சம் கொண்டு, அவரது விருப்பத்தின் பேரிலேயே மலைகளும் மேகங்களும் தண்ணீரைச் சொரிகின்றனவோ, அப்படிப்பட்ட அரசர்க்கெல்லாம் அரசனாகிய இராவணனுக்கு நீ மனைவியாவதில் மனதைச் செலுத்தப் போகிறாயா, இல்லையா?”

     “சிறந்த புன்னகை கொண்ட அழகிய பெண்ணே! உன்னுடைய நலனுக்காகவே கூறப்பட்ட இந்த  வார்த்தைகளை நல்லதென்று ஏற்றுக்கொள்! இல்லையென்றால்  நீ உயிருடன் இருக்க மாட்டாய்!” என்று கூறினாள்.

 

                                  இருபத்து மூன்றாவது ஸர்கம் நிறைவு.

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம். இருபத்திரண்டாவது ஸர்கம்.

 

           ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம்.

                            இருபத்திரண்டாவது ஸர்கம்.

     சீதையிடமிருந்து வந்த கூர்மையான வார்த்தைகளைக் கேட்ட இராவணன், அழகே வடிவான சீதையைப் பார்த்து, இன்பம் தராத வார்த்தைகளைக் கூறலானான்.

     “உலகத்தின் எந்த ஆண்மகனும், பெண்களிடம் அன்பாகவும் கனிவாகவும் பழகப் பழக, அவன், அவர்களுக்குப் பிரியமானவனாக ஆகிவிடுவான்.  ஆனால், உன்னிடம் நான் கனிவாகப் பேசப்பேச, நீ என்னை வெறுத்து  ஏளனம் செய்கின்றாய்!”

     “நன்கு குதிரையை இயக்கத் தெரிந்தவன், தறிகெட்டு ஓடும் குதிரையை எவ்விதம் நல்வழிப் படுத்துவானோ, அது போல, உன் மேல் நான் வைத்திருக்கும்  அன்பு, என்னுடைய கோபத்தை அடக்குகிறது!”

     “மனிதர்களிடம் இந்த அன்பானது மிகவும் சிக்கலானது.  யாரிடம் அன்பினால் கட்டுண்டு விடுகிறோமோ, அவர் மேல், கருணையும் நட்பும் உண்டாகிவிடுகிறது!”

     “அழகிய முகத்தவளே! அதன் காரணமாகத்தான், பொய்யான துறவறத்துடன் இருக்கும் நீ, அவமானப்படுத்தப் படுவதற்கும், கொல்லப் படுவதற்கும் தகுதி வாய்ந்தவளாக இருந்த போதும், உன்னைக் கொல்லாமல் விடுகிறேன்!”

     “ஓ மைதிலி! நீ என்னிடம் சொன்ன ஒவ்வொரு வருத்தும் வார்த்தைகளுக்கும், நீ மரண தண்டனை பெறுவதற்குத் தகுதியானவளே!”

     விதேஹ அரசகுமாரியாகிய சீதையிடம் இவ்விதம் பதில் சொன்ன அரக்கர்களின் அரசனான இராவணன், மேலும் கோபத்துடன் இவ்விதம் சொல்லலானான்.

     “அழகிய நிறத்தவளே! நான் உனக்கு இரண்டு மாதங்கள் கால அவகாசம் அளிக்கின்றேன். அதற்குள் நீ என் படுக்கையை அலங்கரிக்க வேண்டும். இந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகும் நீ, என்னை உன் கணவனாக ஏற்றுக்கொள்ளாவிட்டால், என்னுடைய காலை உணவிற்காக, கண்டதுண்டமாக வெட்டப்பட்டு என்னுடைய சமையலறையில் நீ சமைக்கப்பட்டு விடுவாய்!”

     இராவணனால் சீதை அச்சுறுத்தப்பட்டதைப் பார்த்த  தேவ, கந்தர்வ குலப் பெண்கள் கண்ணீர் விட்டழுதனர்.

     அந்த அரக்கனால் அச்சுறுத்தப்பட்ட சீதைக்கு ஆறுதல் தரத்தக்க வகையில், அந்தப் பெண்களில் சிலர் உதடுகளாலும், சிலர் கண்களாலும், சிலர் முகங்களாலும் அசைவுகள் செய்து மனதைரியம் அளித்து சமாதானப்படுத்தினர்.

     இவ்விதம் தைரியம் அளிக்கப்பட்ட சீதை, தன்னுடைய நற்பண்புகளின் சீர்மையைக் காட்டும் வகையிலும், தனக்கு மகிழ்ச்சி தரக்கூடிய வகையிலும், அரக்கரர்களின் அரசனான இராவணனைப் பார்த்துச் சொல்லலானாள்.

     “இந்த நகரத்தில், உனது நன்மையை விரும்பி, உனக்கு நல்லது செய்யும் வகையில், உனது இந்தக் கொடும் செயலைத் தடுத்து நிறுத்துபவர் யாருமில்லை என்பது உறுதியாகத் தெரிகின்றது!”

     “இந்திரனுக்கு சசிதேவியைப் போல, ஸ்ரீராமருக்குத் தர்ம பத்னியான என்னை, முன்று லோகங்களிலும், உன்னைத் தவிர வேறு யாரும், என்னை மனைவியாக அடைய மனதாலும் நினைக்க மாட்டார்கள்!”

     “அற்ப அசுரனே! மட்டற்ற ஆற்றல் கொண்ட ஸ்ரீராமரின் மனைவியிடம் இவ்விதம் தகாத வார்த்தைகள் பேசியதால், அவரிடம் நீ அடையப்போகும் தண்டனையிலிருந்து எவ்விதம் தப்பிக்கப் போகிறாய்?”

     “நீசனே! ஒரு காட்டில், ஒரு மதங்கொண்ட யானையின் முன் நிற்கும் ஒரு முயலுக்கு என்ன கதி நேருமோ, அதுவே, முயல் போன்ற உனக்கு யானைக்கு நிகரான ஸ்ரீராமர் முன் நேரும்!”

     “நீ இஷ்வாகு அரசனான ஸ்ரீராமன் பார்த்திராத நேரத்தில் என்னை அபகரித்து வந்துவிட்டு, இங்கே சிறிதும் வெட்கமின்றி அவரை அவமதித்துக் கொண்டிருக்கின்றாய்!”

     “பண்பற்றவனே! என்னைத் தவறாகப் பார்க்கும் உன்னுடைய குரூரமான கறுத்துச் சிவந்த கண்கள், இன்னும் ஏன் நிலத்தில் தெறித்து விழாது இருக்கின்றன?”

     “கொடியவனே! அறநெறியில் நிற்கும் ஸ்ரீராமனின் மனைவியும், தசரதரின் மருமகளுமாகிய என்னைப் பார்த்து இவ்விதம் கொடும் சொற்களைப் பேசும் உன்னுடைய நாக்கு இன்னும் ஏன் அறுந்து விழாது இருக்கின்றது?”

     “பத்துத் தலைகளைக் கொண்ட இராவணனே! என்னுடைய ஆற்றலினாலேயே உன்னை என்னால் எரித்துச் சாம்பலாக்கிவிட முடியும்.  ஆனால் அதற்கு ஸ்ரீராமனின் உத்திரவு வேண்டுமென்பதாலும் எனது கற்புநெறியினால் உண்டான ஆற்றலை நான் பாதுகாப்பாய் வைத்திருப்பதாலும் அவ்விதம் செய்யவில்லை!”

     “அறிவிற் சிறந்த ஸ்ரீராமருடன் நான் சேர்ந்திருந்த சமயத்தில் உன்னால் என்னை அபகரிக்க இயலாது போனது, உன்னுடைய மரணம் இதனால் ஏற்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டிருப்பதால்தான் என்பதில் ஐயம் ஏதுமில்லை!”

     “பெரும் வீரனும், குபேரனின் சகோதரனுமான உன்னிடம் பெரும் சேனை உள்ளது, இருந்தபோதும், எதற்காக, இராமனை அப்புறப்படுத்தி விட்டு, அவரது மனைவியாகிய என்னை அபகரித்தாய்?”

     சீதையின் இந்த விதமான பேச்சுக்களைக் கேட்ட இராவணன், குரூரம் பொங்கும் விழிகளுடன் ஜானகியை நோக்கினான்.

      இராவணனின் தோற்றம் இவ்விதம் இருந்தது:

     கரிய நிற மேகங்களைப் போல இருந்த அவனின் தோள்களும் கழுத்தும் மிகவும் பெரியதாக இருந்தன.  ஒரு சிங்கத்தின் தோற்றத்தில் இருந்த அவன் நெருப்பை உமிழும் நாக்குடனும், அச்சுறுத்தும் கண்களையும் கொண்டிருந்தான்.  அவனது தலையின் இருந்த மகுடம் ஆடிய வண்ணம் இருந்தது.  மிகவும் உயரம் கொண்டிருந்த அவன், தனது வாசனைத் திரவியங்கள் பூசிய உடலில் சிவப்பு நிறப் பூக்களால் ஆன மாலைகளையும், ஆடைகளையும் அணிந்திருந்தான். கைகளில் தங்கத்தாலான பூண்களை அணிந்திருந்தான். 

     அவனது இடையில் அணிந்திருந்த கருநீல நிறத்தினால் ஆன கயிற்றைப் பார்க்கும்போது, பாற்கடலில் அமுதம் கடையும் போது, மந்தர மலையைச் சுற்றிக் கட்டப்பட்ட வாசுகி என்னும் பாம்பு போல இருந்தது.

     இரண்டு பெரிய தோள்களுடன் இருந்த அவனைப் பார்க்கும்போது, இரு பெரும் சிகரங்களைக் கொண்ட மந்தர மலையைப் பார்ப்பது போல இருந்தது.

     இளஞ்சூரியனின் நிறத்தில் காதுகளில் குண்டலங்களை அணிந்திருந்த அவன், சிவந்த தளிருடனும், பூக்களுடனும் இருக்கும் இரு அசோக மரங்கள் வளர்ந்திருக்கும் ஒரு மலையைப் போல இருந்தான்.

     கற்பக மரத்தைப் போன்றும், வசந்த காலமே வடிவெடுத்து வந்தவன் போன்றும் அவன் இருந்தாலும், அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தாலும் மயான பூமியில் கட்டப்படும் கட்டிடத்தைப் போல, அச்சுறுத்தும் வண்ணம் இருந்தான்.

     கோபத்தில் சிவந்த கண்களுடன் இருந்த அவன், ஒரு பாம்பின் சீற்றத்துடன், பெரும் மூச்சுக்களை விட்ட வண்ணம் விதேஹ மன்னரின் மகளான சீதையைப் பார்த்துப் பேசலானான்.

     “ஒரு பொருளற்ற தவறான கொள்கையை நீ பின்பற்றிக்கொண்டிருக்கிறாய்! எவ்விதம் உதிக்கும் சூரியன், அதிகாலை நேரத்தை விரட்டி அழிப்பானோ, அவ்விதமே உன்னை நான் அழித்து விடுகிறேன்!”

     பகைவர்களை அச்சத்தில் நடுங்க வைக்கும் அரக்கர்குல வேந்தனான இராவணன், மிதிலையின் குமாரியான சீதையிடம் இவ்விதம் சொல்லி விட்டு, அங்கிருந்த பயங்கரமான தோற்றம் கொண்டிருந்த அரக்கியரைப் பார்த்தான்.

     அங்கிருந்தவர்களில் ஒருத்திக்கு ஒரு கண்ணும், இன்னொருத்திக்கு ஒரு காதும், மற்றொருத்திக்கு காதுகள் மறைக்கப்பட்டும் இருந்தன. பசுவின் காதுகளையும், யானையின் காதுகளையும், மிக நீண்ட காதுகளையும் கொண்டவர்களும், காதே இல்லாதவர்களும் இருந்தனர்.

     யானையின் காலைப் போல ஒரு கால் கொண்டிருந்தவளும், குதிரையின் குளம்பையொத்த கால்களைக் கொண்டிருந்தவளும் இருந்தனர்.  பசுவின் காலைக் கொண்டிருந்த ஒருவளும், கால்களின் முடி வளர்ந்திருந்த ஒருவளும் இருந்தனர்.  ஒரு கண்ணும், ஒரு காலும், அகன்ற பாதங்களையும் கொண்டவர்களும், காலே இல்லாதவர்களும் அவர்களுள் இருந்தனர்.

     நீண்ட கழுத்தையும், மிகப் பெரிய தலையையும் கொண்டவர்களும், பெருத்த மார்பகங்களையும், பெருத்த வயிற்றைக் கொண்டிருந்தவர்களும் அங்கிருந்தனர்.  பெரிய முகத்தில் பெரிய பெரிய கண்களும், வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் நாக்கையும் கொண்டும் சிலர் இருந்தனர்.  சிலர் மூக்கே இல்லாமல் இருந்தனர்.  சிங்க முகமும், பசுவின் முகமும், பன்றியின் முகமும் கொண்டு சிலர் இருந்தனர்.

     இவர்களையெல்லாம் பார்த்து இராவணன், “அரக்கியரே! நீங்கள் அனைவரும் சேர்ந்து எவ்வாறேனும் முயற்சி செய்து, ஜனக குமாரியான சீதை, என்னிடம் காதல் கொண்டு வருமாறு செய்யவேண்டும்! சீதைக்கு விருப்பமான முறையிலோ அல்லது அவளை வருத்தியோ, அல்லது சாம, பேத, தண்டங்களின் வழியிலோ அவளை என் வசம் வரச் செய்யுங்கள்!” என்றான்.

     இவ்விதம் காமத்தின் வேகத்திலும், கோபத்தின் வேகத்திலும் வசப்பட்டிருந்த அரக்கர் குல வேந்தனான இராவணன், அந்த அரக்கிகளிடம் மேற்கண்டவாறு ஆணைகளை மீண்டும் மீண்டும் இட்டுவிட்டு சீதையைப் பார்த்து கர்ஜித்தான்.

     அப்பொழுது விரைந்து வந்த தான்யமாலினி என்றழைக்கப்படும் அரக்கி, இராவணனை நெருங்கி, அவனை அணைத்தவாறு இவ்விதம் பேசினாள்.

     “அரக்கர் கோமானே! நீங்கள் என்னுடன் களித்திருங்கள்! நிறம் வெளுத்து, பரிதாபமாய்க் காட்சியளிக்கும் இந்த மானுடப் பெண்ணால் உங்களுக்கு என்ன மகிழ்ச்சி கிடைத்து விடும்?”

     “பேரரசே! உங்களது வலிமை மிக்க தோள்கள் மூலம் நீங்கள் பெற்றுள்ள இந்த சுக போகங்களை அனுபவிக்கும் வாய்ப்பை, தேவர்களில் சிறந்தவரான பிரம்மா இந்தப் பெண்ணுக்கு அளிக்கவில்லை என்றே தோன்றுகிறது!”

     “அரசே! காதல் வயப்படாத பெண்ணிடம் ஆசை கொள்பவனுக்கு அந்தத் தாகம் தணிவதில்லை.  ஆனால், தன்னிடம் அன்பு கொள்ளும் பெண்ணிடம் ஆசை கொள்பவனுக்கு மிகச் சிறந்த இன்பம் கிட்டும்!”

     இவ்விதம் சொல்லி இராவணனை வேறு புறம் திருப்பினாள் அந்த அரக்கி.  இதைக் கேட்ட, மேகம் போன்ற நிறத்திலிருந்த பலசாலியான  இராவணன்,  பலமாகச் சிரித்துக் கொண்டே தன் மாளிகையை நோக்கிச் சென்றான்.

     அசோக வனத்திலிருந்து வெளியேறிய பத்துத் தலையுடைய இராவணன், நிலமதிர நடந்து, மதிய நேரத்துச் சூரியனின் ஒளி போல பிரகாசிக்கும் தனது மாளிகையில் நுழைந்தான்.

     அதே சமயம், தேவ, கந்தர்வ, நாக கன்னிகைகள் இராவணனைச் சூழ்ந்த வண்ணம் அந்த மாளிகைக்குள் நுழைந்தனர்.

     அறத்தின் வழி நிற்பவளும், நிலைத்த மனத்தையும் உடையவளுமான மிதிலை குமாரியான சீதையை இவ்விதமாக அச்சுறுத்திய இராவணன், காதல் மோகத்துடனேயே தன் மாளிகையில் நுழைந்தான்.

 

                       இருபத்திரண்டாவது ஸர்கம் நிறைவு.

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...