Thursday, February 16, 2023

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தரகாண்டம் பத்தாவது ஸர்கம்



            ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தரகாண்டம்.

 

                                                    பத்தாவது ஸர்கம்

         ஸ்ரீஅனுமன் மந்தோதரியைப்பார்த்து அவள் சீதையோ என எண்ணுதல்.



 

     அவ்வாறு அந்த மாளிகையில் சுற்றியலைந்த ஸ்ரீஅனுமன், தேவலோகத்திற்கு ஒப்பான ஒளிமிகுந்த மேடையொன்றைக் கண்டார். அங்கே அவர் ஸ்படிகங்களாலும் வைடூரியங்களாலும் செய்யப்பட்டிருந்த ஒரு விலைமதிப்பற்ற கட்டிலைக் கண்டார். அந்தக் கட்டிலின் பகுதிகள் தந்தத்தாலும், தங்கத்தாலும் செய்யப்பட்டிருந்த சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டிருந்தன.  அந்தக் கட்டிலின் மீது மிகவும் விலையுயர்ந்த மெத்தைகளும் விரிப்புக்களும் விரிக்கப்பட்டு இருந்ததைக் கண்டார்.

     அவர் அந்தக் கட்டிலின் மேற்புறத்தில், மிகவும் உயரிய மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட, நிலவினைப்போல வெண்ணிறத்தில் இருந்த ஒரு குடையினைக் கண்டார்.

     தங்கத்தால் செய்யப்பட்டிருந்த அந்தக் கட்டில் நெருப்பைப் போல ஒளிர்ந்தது.  மேலும் அது அசோக மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

     அந்தக் கட்டிலைச் சுற்றிலும் பெண்கள் தங்கள் கைகளில் வெண்சாமரம் கொண்டு விசிறிக்கொண்டிருந்தனர். மிகச் சிறந்த வாசனைப்பொருட்கள், தூபங்கள் ஆகிவற்றின் நறுமணம் அங்கு நிறைந்திருந்தது. செம்மறியாட்டின் தோலினால் செய்யப்பட்ட மென்மையான கம்பளங்கள் அங்கு விரிக்கப்பட்டிருந்தன. மிகவும் உயரிய மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகள் அந்தக் கட்டிலை அலங்கரித்தன. 

     அந்தக் கட்டிலின் மீது, மேகம் போன்று தோற்றமளித்துக் கொண்டு, அழகிய குண்டலங்களைக் காதுகளில் அணிந்துகொண்டு, சிவந்த கண்களையும், நெடிய கைகளையும் கொண்டிருந்த இராவணன், மிகச்சிறந்த தங்கத்தாலான ஜரிகைகளைக் கொண்ட உயரிய ஆடைகளை அணிந்து கொண்டு படுத்திருந்தான்.

     நறுமணம் வீசும் செந்நிற சந்தனத்தை உடல் முழுதும் பூசிக்கொண்டிருந்த அவன், ஆகாயத்தில் இருக்கும் மாலைநேரச் செந்நிற மேகம் போலத் தோற்றமளித்தான்.

     நினைத்த வடிவம் கொள்ளும் வல்லமை மிக்க அவன் மிகவும் பொலிவுடன், பலவித அழகிய அணிகலன்களை அணிந்துகொண்டு, மரங்களையும், அடர்ந்த புதர்களையும் கொண்டு நிலையாக நிற்கும் மந்தர மலைக்கு நிகராக இருந்தான்.     

     அரக்கர்குலப் பெண்களுக்கு அன்பானவனும், அரக்கர்களுக்கு நல்லது செய்பவனும், மிகவுயர்ந்த நகைகளை அணிந்திருந்தவனும், இரவு செய்த களியாட்டங்களால் களைத்திருந்தவனும், மதுவின் மயக்கத்தால் ஓய்ந்திருந்தவனும், அந்த அழகிய படுக்கையில் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தவனும்,  வீரனுமான அந்த அரக்கர்களின் அரசனை  அவர் பார்த்தார்.

     சிறந்த வானரரான அவர் இராவணனை நெருங்கியதும், சீறிக்கொண்டிருக்கும் பாம்பினைப் பார்த்தவர் போல மனம் கலங்கி, பின்வாங்கினார்.

     பின்னர் அவர் அங்கிருந்து நகர்ந்து, அருகிலிருந்த படிகளின் மீது ஏறி, அங்கிருந்த மாடத்தை அடைந்து, உறங்கிக்கொண்டிருந்து சீர்மிகுந்த அரக்கனை உன்னிப்பாகக் கவனித்துப் பார்த்தார்.

     அரக்கர்குல அரசனான இராவணன் உறங்கிக்கொண்டிருந்த அந்தக் கட்டிலானது, மதங்கொண்ட யானைகளுள் மிகவும் வலியதான கந்தஹஸ்தியெனும் யானை உறங்கிக்கொண்டிருக்கும் ப்ரஸ்ரவனத்து மலையைப் போலத் தோற்றமளித்தது.

     தங்கத்தாலான அணிகலன்கள் பூட்டப்பட்டிருந்த அவனது இரண்டு நெடிய கைகளும், இந்திரனின் கொடிக்கம்பங்கள் போலத் தோற்றமளித்தன.  விரிந்து கிடந்த கைகள் இரண்டிலும், ஐராவதமென்னும் இந்திரனின் யானையின் தந்தங்களின் நுனிகள் குத்தியதால் ஏற்பட்ட வடுக்கள் இருந்தன.  திண்ணிய அவனது தோள்களிலும் கைகளிலும் வஜ்ராயுதம் உரசியதால் ஏற்பட்டிருந்த காயங்களின் வடுக்கள் இருந்ததையும் அவர் கண்டார்.

     அந்தக் கைகள் சீராகவும், அழகிய வடிவிலும், நல்ல சதைப்பிடிப்புடனும் இருந்தன. கட்டைவிரல்களும், நகங்களும் திருத்தமுடன் இருந்தன.   ஏனைய விரல்களும், உள்ளங்கைகளும் நல்ல அழகுடன் இருந்தன.  இரும்பு உலக்கையைப்போல உருண்டையாக இருந்த அந்தக் கைகள், யானையின் தும்பிக்கையின் வீச்சுடன் இருந்தன.  வெண்மையான படுக்கையில் இவ்விதம் கிடந்த அந்தக்கைகளைப் பார்க்கும்போது, படுத்திருக்கும் ஐந்து தலை நாகங்கள்  போல விளங்கின.

     அவனது கைகளில் குளிர்ச்சியூட்டக்கூடிய, நறுமணம் கமழும், முயலின் குருதி போன்று செந்நிறத்தில் இருந்த சந்தனம் பூசப்பட்டிருந்தது.  நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தக் கைகளை, சந்தனம் பூசியவண்ணம் அழகிய மங்கையர் இதமாகப் பிடித்துவிட்டபடி இருந்தனர். யட்சர்கள், நாகர்கள், கந்தர்வர்கள், தேவர்கள், மற்றும் தானவர்கள் போன்றோரை அச்சுறுத்தி வெருட்டிய அந்தக் கைகள் படுக்கையில் உறங்கிக்கிடந்தன.  அப்படிக்கிடந்த அந்தக் கைகள், மந்தர மலையின் நடுவில் கிடந்துறங்கும் பெரும்பாம்புகள் போலவும் இருந்ததை அந்த வானரர் கண்டார்.

     சிறப்புமிக்க இரண்டு மலைச்சிகரங்களுடன் எவ்விதம் மந்தர மலை விளங்குமோ, அவ்விதமே தனது சிறப்புமிக்க இரண்டு கைகளுடன், மலைக்கு ஒப்பாக இருந்த அந்த அரக்கவேந்தன் விளங்கினான்.

       உறக்கத்திலிருந்த அந்த அரக்கர்குல அரசனின் மூச்சுக்காற்றானது, மா மற்றும் புன்னாகம் ஆகியவற்றுடன் மகிழம்பூ கலந்த வாசத்துடனும், சிறந்த உணவுப்பண்டங்களின் வாசத்துடனும், மதுவின் வாசத்துடனும், அந்த அறையே நிறைந்திருக்கும் வண்ணம், அவனது பெரிய முகத்திலிருந்து வீசிகொண்டிருந்தது.

     முத்துக்களாலும், மணிகளாலும் வியக்கும்வண்ணம் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தாலான அவனுடைய மணிமுடி சற்றே சாய்ந்திருந்தது. காதுகளில் அணிந்திருந்த குண்டலங்களால் அவனது முகம் ஒளிபெற்று விளங்கியது.

     மாலைகளணிந்திருந்த அவனது விரிந்து அகன்ற, மார்பின் மீது செஞ்சந்தனம் பூசப்பட்டிருந்தது. அவனது பளபளப்புடன் கூடிய வெண்ணிறப்பட்டாலான மேலாடை நழுவியிருந்தது. விலையுயர்ந்த மஞ்சள் வண்ணப்பட்டாலான ஆடையுடுத்தியிருந்த அவனின் கண்கள் சிவந்திருந்தன.

     குவித்து வைக்கப்பட்ட உளுந்துக்குவியல் போலக் கிடந்த அவன், பாம்பு போல மூச்சுவிட்டுக்கொண்டிருந்தான்.  கங்கையின் பெருவெள்ளத்தின் நடுவில் கலங்காது கிடந்து உறங்கும் யானையைப் போல அவன் விளங்கினான். 

      மின்னல்களினால் எல்லாத்திசைகளிலும் வெளிச்சம் பெரும் மேகக்கூட்டம் போல, நான்கு திசைகளிலும் எரிந்துகொண்டிருந்த பொன்விளக்குகளால் அவனது உடல் முழுவதும் ஒளிர்ந்தது.  தனது மனைவிகளிடம் அன்பு கொண்டவனும், பேராற்றல் மிக்கவனுமான அந்த அரக்கவேந்தனின் காலருகில் அவனது மனைவியர் படுத்திருந்ததையும் அவர் கண்டார்.

     அந்த மங்கையரின் முகங்கள் நிலவினைப்போல ஒளிவீசின. காதுகளில் அழகான குண்டலங்களோடு இருந்த அவர்கள் வாடாத மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகளை அணிந்திருந்ததையும் வானரவீரர் கண்டார்.

     இசையிலும் நடனத்திலும் வல்லவர்களான அந்த மங்கையர், சிறந்த அணிகலன்களை அணிந்திருந்தனர். அவர்கள் அவனது தோள்களின்மீதும், மடியின் மீதும் சாய்ந்து கிடந்ததையும் அவர் கண்டார்.

     அந்தப்பெண்களின் தோள்களில் பசும்பொன்னினால் செய்யப்பட்ட நகைகளும், காதுகளில் வைர வைடூரியங்களால் இழைக்கப்பட்ட குண்டலங்களும் இருந்ததை அவர் கண்டார்.

     நிலவினையொத்த முகங்களையும், பலவிதமாக ஒளிரும் குண்டலங்களையும் கொண்ட அந்தப் பெண்களை அங்கே பார்க்கும்போது, அந்த விமானம், நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருக்கும் ஆகாயம் போலத் தோற்றமளித்தது.

     அரக்கவேந்தனின் மனைவியரான அந்த மெல்லிடை மங்கையர், மதுவின் மயக்கத்தினாலும், காமக்களியாட்டங்களினால் உண்டான அழற்சியாலும் அவர்கள் இருந்த நிலையிலேயே உறங்கிக்கொண்டிருந்தார்கள்.

     பேரழகு வாய்ந்த பெண்ணொருத்தி, நளினமான நாட்டிய முத்திரைகளை அபிநயித்தவண்ணம், தன் சீரிய அங்கங்களைப் படுக்கையில் கிடத்தியவாறு உறங்கிக்கொண்டிருந்தாள்.

     நீரோட்டத்தில் தத்தளிக்கும் தாமரைக்கொடியானது, நீரில் மிதந்துகொண்டிருக்கும் படகொன்றை அண்டி, தழுவிக்கொண்டிருப்பதுபோல, அங்கே இன்னொரு பெண் வீணையை அணைத்தவாறே உறங்கிக்கொண்டிருந்தாள்.

     பச்சிளங்குழந்தைதைத் தன் தோளினில் அணைத்தவண்ணம் இருக்கும் பெண் போல், அங்கே ஒரு கருவிழியாள், மத்தளத்தைத் தன் தோள்களுக்கிடையில் அணைத்தவண்ணம் உறங்கிக்கொண்டிருந்தாள்.

     வெகுநாட்கள் கழித்துத் தன் கணவனைக் காணும் பெண்ணொருத்தி, தன் கணவனைத் தழுவியவண்ணம் உறங்குவதைப்போல, சிறந்த வடிவழகும், அழகிய மார்பகங்களையும் கொண்டிருந்த பெண்ணொருவள், “படஹம்” என்ற இசைக்கருவியைத் தன் மார்புடன் அணைத்தவாறு உறங்கிகொண்டிருந்தாள்.

     காதலியானவள், தனிமையில் தன் காதலனைக் காதலுடன் ஆரத்தழுவிக்கிடப்பது போல், தாமரை மலர் போன்ற கண்களைக் கொண்டிருந்த பெண்ணொருவள் வீணையைத் தழுவியபடி உறங்கிக்கொண்டிருந்தாள்.

     நடனத்தில் வல்லவளும், நல்லொழுக்கம் கொண்டவளுமாகத் தோன்றிய இன்னொரு அழகிய பெண், தன் நாயகனுடன் கூடியிருப்பவள்போல, தனது “விபஞ்சி” (ஏழு தந்திகள் கொண்டது) என்னும் வீணையைக் கட்டிக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்தாள்.

     மயங்கிய விழிகளைக் கொண்டிருந்த இன்னுமொரு பெண், தன் பொன்மயமான மிருதுவான, செழிப்பான அங்கங்களால் மத்தளத்தைக் கட்டியணைத்தபடி தூங்கிக்கொண்டிருந்தாள்.

     குறையேதுமில்லாத அழகிய உடலையும், சுருங்கிய வயிற்றையும் கொண்டிருந்த இன்னுமொரு பெண், மதுவின் மயக்கத்தினால், தன் தோளுக்கும் விலாவிற்கும் இடைப்பகுதியான அக்குளில் “பணவ” என்னும் இசைக்கருவியை அணைத்தபடி உறங்கிக்கொண்டிருந்தாள்.

     பெண்ணானவள் எவ்விதம் தன் இளங்குழந்தையை நெஞ்சோடு அணைத்தபடி உறங்குவாளோ, அவ்விதம், இன்னுமொரு அழகிய பெண், “டிண்டிமம்” என்னும் இசைக்கருவியை தன் மார்புற அணைத்துக்கொண்டு உறங்கிக்கிடந்தாள். 

     மதுவருந்தியதால் உண்டான மயக்கத்தால், செந்தாமரை மலரின் இதழொத்த கண்களைக் கொண்டிருந்த இன்னுமொரு பெண், “ஆடம்பரம்” என்னுமொரு இசைக்கருவியைத் தன் தோளொடு அணைத்தபடி உறங்கிக்கொண்டிருந்தாள்.    

     இன்னுமொரு பெண், நீர் நிறைந்த குடத்தைச் சாய்த்துவிட்டு அதில் நனைந்தபடி உறங்கிக்கொண்டிருந்தாள். அந்தக் காட்சியானது, வசந்த காலத்தில் நீரினால் தெளிக்கப்பட்ட பலவண்ண மலர்களைக்கொண்ட மாலையொன்று கிடப்பதைப் போல இருந்தது.

     ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்திருந்த ஒரு இளம்பெண், தங்கக்குடங்கள் போல இருந்த தன் மார்பகங்களை மறைக்கும் வண்ணம் தன் கைகளை அவற்றின் மீது வைத்துக்கொண்டிருந்தாள்.

     மதுவின் மயக்கத்தால், முழுநிலவினைப் போன்ற முகமும், தாமரையிதழ் போன்ற கண்களையும் கொண்டிருந்த இன்னொரு பெண், அழகிய இடையுடன் கூடிய இன்னொரு பெண்ணைத் தழுவியபடி உறங்கிக்கொண்டிருந்தாள்.

      மையல் கொண்ட பெண்கள் தங்கள் காதலரைத் தழுவுவிக்கிடப்பது போல, அங்கு பல பெண்கள், தாங்கள் இசைக்கும் இசைக்கருவிகளை மார்புறத் தழுவியபடியே உறங்கிக்கொண்டிருந்தார்கள்.

     இப்படிப் பல பெண்களைக் கண்ட அந்த வானரர், அங்கே தனித்த ஓரிடத்தில், அழகிய கட்டிலின் மீது, பேரழகுவாய்ந்த ஒரு பெண்ணொருத்தி உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார்.

     முத்துக்களாலும், வைர வைடூரியங்களாலும் ஒளிர்ந்த நகைகளை அணிந்திருந்த அந்தப் பெண், இயற்கையாகவே ஒளிர்ந்துகொண்டிருந்த அந்த மாளிகையை மேலும் ஒளிரச்செய்தாள்.


     தூய வெண்மையான நிறத்தில், பொன்னிறத்தில் ஒளிவீசும் அங்கங்களைக்கொண்டிருந்த அந்தப் பெண், இராவணனுக்குப் பிடித்தமானவள். அந்த அந்தப்புரத்திற்கே அவள்தான் தலைவி. அவள் பெயர் மந்தோதரியாகும். அந்தப் பெண்ணின் வடிவழகைக் கண்ட பெருந்தோள்களைக் கொண்ட வானர வீரரும், வாயுவின் மைந்தருமான அந்த வானரர், அவள் சீதையாகத்தான் இருக்கவேண்டும் என்று ஊகித்தத்தால், பெரும் மகிழ்ச்சி கொண்டார்.

     வானரங்களுக்கு உரிய இயல்புடன், அவர் தன் தோள்களைத் தட்டிக்கொண்டார்.  தன் வாலினை முத்தமிட்டுக்கொண்டார்.  மகிழ்ச்சியுடன் துள்ளிக்குதித்து ஆடிப்பாடினார். இங்குமங்கும் ஓடினார். தூண்களின் மீது தாவி ஏறி மிண்டும் கீழே நிலத்தில் குதித்தார்.

 

                              பத்தாவது ஸர்கம் நிறைவு.

 


Tuesday, February 7, 2023

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தரகாண்டம். ஒன்பதாவது ஸர்கம்

 

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தரகாண்டம்.

 

                                                                ஒன்பதாவது ஸர்கம்

இராவணனின் அந்தப்புரத்தின் செழிப்பும், புஷ்பக விமானத்தின் சிறப்பும்,

                                      அங்கிருந்த பெண்களின் தோற்றமும்.


.

 

     வாயுவின் மைந்தனான ஸ்ரீஅனுமன், அந்த மாளிகை வளாகத்தின் நடுவே, மிகவும் உயரமும் அகலமும் கொண்ட ஒரு சிறந்த மாளிகையைக் கண்டார்.

      நீளத்தில் ஒரு யோஜனை அளவிற்கும், அகலத்தில் அரை யோஜனை அளவிற்கும் இருந்த அந்த இராவணனின் மாளிகையில் ஏராளமான மேல்மாடங்கள் இருந்தன.

     எதிரிகளை அழிப்பதில் வல்லவரான ஸ்ரீஅனுமன், நீள்விழியாளான வைதேஹியெனப்படும் சீதையைத் தேடியவண்ணம், அந்த மாளிகை எங்கும் சுற்றித் திரிந்தார்.

     திருவருள் மிக்க ஸ்ரீஅனுமன், சிறப்புமிக்க அரக்கர்களின் வீடுகளில் நன்றாகத் தேடிப்பார்த்தவண்ணம், அரக்கர்களின் வேந்தனின் இருப்பிடத்தைச் சென்றடைந்தார்.

     பரப்பளவு மிக அதிகம் கொண்ட அந்த மாளிகையை, நான்கு மற்றும் மூன்று தந்தங்களுடைய யானைகள் சூழ, உயர்த்திப்பிடித்த ஆயுதங்களுடன் அரக்கர்கள் காவல் காத்து வந்தனர்.

     அந்த மாளிகை முழுவதும், இராவணின் மனைவிகளும், போரில் வென்று கைப்பற்றிக் கொண்டுவரப்பட்ட அரசகுமாரிகளும் நிரம்பியிருந்தனர்.

     அந்த மாளிகையானது, முதலைகள், திமிங்கிலம், சுறா போன்ற பெரிய பெரிய மீன்களும், பாம்புகளும் நிறைந்து, காற்றின் வேகத்தில் எழும்பும் பேரலைகளைக் கொண்டிருக்கும் பெருங்கடலைப் போன்றிருந்தது.

     குபேரன் மற்றும் இந்திரன் ஆகியோரது இல்லங்களில் உள்ளது போல் இராவணனின் இல்லத்திலும் செல்வமானது பெருகி வழிந்தது.

     பேரரசனான குபேரன், எமதர்மன் மற்றும் வருணதேவன் ஆகியோரது செல்வச்செழிப்பிற்கு ஈடாகவோ அல்லது அதனை மிஞ்சும் வண்ணமோ அந்த அரக்கர்களின் வீடுகளில் செல்வச்செழிப்பு மிகுந்திருந்தது.

     அந்த மாளிகையின் மேல்தளத்தின் நடுவில், மிகவும் சிறந்த வேலைப்பாடுகளுடன் கூடிய இன்னுமொரு அழகிய மாளிகையை, வாயுமைந்தனான ஸ்ரீஅனுமன் கண்டார். மேலும், அந்த மாளிகையைச் சுற்றிலும் மதங்கொண்ட யானைகள் நின்றிருப்பதையும் அவர் கண்டார்.

      அனைத்துவித வைர, வைடூரிய, இரத்தினக்கற்களால் இழைக்கப்பட்ட, விஷ்வகர்மாவினால், நான்முகனுக்காகவென்றே உருவாக்கப்பட்ட, மிகவும் அழகுவாய்ந்த அந்த மாளிகை,  புஷ்பகவிமானம் என்றழைக்கப்பட்டது.

     தனது கடுந்தவத்தால் நான்முகனிடமிருந்து வரமாகக் குபேரன் அந்த புஷ்பகவிமானத்தைப் பெற்றான். அரக்கர்குல வேந்தன் தனது வலிமையால், அதைக் குபேரனிடமிருந்து வென்று, தனதாக்கிக்கொண்டான்.

     தங்கத்தால் செய்யப்பட்டு, ஒளிர்ந்து கொண்டிருந்த அந்த அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட தூண்களில் ஓநாய்களின் உருவங்கள் செதுக்கப்பட்டிருந்தன.

     மேருமலை, மந்தரமலை போன்றவற்றிற்கு நிகராக ஆகாயத்தை முட்டும் உயரங்களுடன், எல்லா நலன்களையும் கொண்டிருக்கும் கோபுரங்கள் அதன் எல்லாத்திசைகளிலும் நின்று ஒளி வீசின.

     நெருப்பு, சூரியன் போன்று ஒளிவீசும் வண்ணம் விஷ்வகர்மாவினால் வடிவமைக்கப்பட்ட அந்த விமானத்தில், தங்கத்தால் செய்யப்பட்ட படிக்கட்டுக்களுடன் கூடிய அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

     அந்த விமானத்தின் ஜன்னல்களும் சாளரங்களும் தங்கத்தினாலும், ஸ்படிகத்தினாலும் செய்யப்பட்டிருந்தன. இந்த்ரநீலம், மகாநீலம் எனப்படும் உயர்ந்தரக கற்களினால் அதன் மேடைகள் அழகுபடுத்தப்பட்டிருந்தன.

     அதனுடைய தரையானது, பவழங்களாலும், வியப்பளிக்கும் விலைமதிப்பற்ற இரத்தினக்கற்களாலும், நிகரற்ற முத்துக்களாலும் அலங்கரிக்கப்பட்டு, ஒளிவீசிக்கொண்டிருந்தது.

     செக்கச்சிவந்த, உருக்கிய தங்கம் போன்ற நிறத்தில், நறுமணம் கமழ்ந்துகொண்டிருந்த சந்தனம் அதில் இருந்ததால், அது உதிக்கின்ற சூரியனைப்போலப் பிராகாசித்தது.

     பலவித அழகிய மேல்மாடிகளால் அலங்கரிக்கப்பட்ட அந்த மிகச்சிறந்த புஷ்பகவிமானத்தின் மீது ஸ்ரீஅனுமன் தாவி ஏறினார்.

     அங்கே, உணவுப்பண்டங்கள், பானங்கள் ஆகிவற்றின் நறுமணம் நிறைந்து, தவழ்ந்துகொண்டிருந்த  காற்றை அவர் முகர்ந்துபார்த்தார்.

     மதிப்புமிக்க உறவினரை, “இங்கே வருக!” என்று விரும்பியழைக்கும் உறவினன் போல, அந்த நறுமணம் இராவணனின் வீட்டிற்கு, ஆற்றல்மிக்க ஸ்ரீஅனுமனை அழைப்பது போல் இருந்தது.

     முன்னே சென்ற அவர், மிகவும் விசாலமானதும், சிறந்த குலமகள் போன்ற சிறப்புப் பெற்றதுமான, இராவணனின் மனதிற்குப் பிடித்தமான மண்டபத்தைப் பார்த்தார்.

        அந்த மண்டபத்தில் இருந்த படிகளில், விலையுயர்ந்த இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. கதவுகளும் ஜன்னல்களும் தங்கத்தால் இழைக்கப்பட்டிருந்தன. மண்டபத்தின் தரையானது ஸ்படிகக்கற்களால் வேயப்பட்டிருந்தது. இடையிடையே தந்தத்தால் செய்யப்பட்ட சிற்பங்கள் வைக்கப்பட்டிருந்தன.

      அந்த மண்டபத்தைத் தாங்கி நின்ற தூண்கள், தங்கத்தாலும் வெள்ளியாலும் செய்யப்பட்டு, முத்துக்கள், பவழங்கள் மற்றும் இரத்தினக்கற்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

     மேலும் அங்கிருந்த பல தூண்கள் சமமானதாகவும், உயரமானதாகவும், சுற்றிலும் அலங்கரிக்கப்பட்டதாகவும் இருந்தன. இறக்கைகள் போலக் காட்சியளித்த அந்த உயர்ந்த தூண்களால், அந்த விமானம், உயரக்கிளம்பி, வானுலகம் நோக்கிச் செல்லவிருப்பது போல இருந்தது.

     அந்த மண்டபத்தின் தரையில் மிகவும் பெரியதான கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது.  அதில் பூமியின் முக்கிய பாகங்கள் (மலை, காடு, ஆறு) சித்திரங்ளாக வரையப்பட்டிருந்தன. மேலும் அதில் மாளிகைகளும், வீடுகளும் ஒரு வரிசையாய் மாலையைப்போல வரையப்பட்டிருந்தன. அவற்றைப் பார்க்கும்போது, பூமியே தன் விசாலமான உருவத்துடன் அங்கு வந்துவிட்டதுபோல இருந்தது.

     அந்த மண்டபத்தில் இணைதேடும் பறவைகளின் கூக்குரல் ஓசைகள் கேட்ட வண்ணம் இருந்தன. அரக்கவேந்தன் வசிக்கும் அந்த இடம் நறுமணம் நிறைந்ததாய் இருந்தது. பல வண்ணங்களில் வரையப்பட்ட சித்திரங்கள் கொண்ட திரைச்சீலைகள் எங்கும் தொங்கியபடி இருந்தன.

    அன்னப்பறவை போல, களங்கமற்ற வெண்ணிறத்தில் இருந்த அந்த மண்டபத்தில் அகில் முதலானவைகளினால் உண்டான கரும்புகை சூழ்ந்திருந்தது.  பலவித மலர்களால் அர்ச்சிக்கப்பட்டிருந்த அந்த மண்டபம், காண்பதற்கு, நினைத்ததையெல்லாம் கொடுக்கும் காமதேனு போல் மிளிர்ந்தது.

     அந்த மாளிகையின் ஒளி அசாதாரணமாய் இருந்தது. மனதை மயக்குவதாய் இருந்தது. மனதில் இருக்கும் கவலைகளைப் போக்கும் வல்லமை கொண்டதாய் இருந்தது. அனைத்துவிதமான செல்வங்களும் உற்பத்தியாகும் இடம் போல அது இருந்ததை ஸ்ரீஅனுமன் பார்த்தார்.

     ஒரு தாயானவள் எவ்விதம் தன் அரவணைப்பால் ஐம்புலன்களுக்கும் மகிழ்ச்சி கொடுப்பாளோ, அது போல இராவணனின் அந்த மண்டபம், மனதிற்கு மகிழ்ச்சி கொடுப்பதை உணர்ந்தார்.

     “இது சொர்க்கலோகமோ, அல்லது தேவர்கள் வாழுமிடமோ அல்லது இந்திரனின் அமராவதி நகரமோ அல்லது கிடைத்தற்கரிய வீடுபேறோ” என்ற பலவிதமான எண்ணங்கள் ஸ்ரீஅனுமன் மனதினுள் ஏற்பட்டன.  

     அங்கிருந்த பொன்மயமான விளக்குகள் அசையாமல் ஒளிவீசிக்கொண்டிருந்ததைப் பார்க்கையில், சூதாட்டத்தில், பெரிய ஆட்டக்காரனிடம் தன் உடமைகளை இழந்தவனின் எண்ணமானது மீண்டும் ஆட்டம் ஆடி வென்றுவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மாறாமல் இருப்பது போல இருந்தது.

         அங்கே எரிந்து கொண்டிருக்கும் விளக்குகளாலோ, அல்லது இராவணனிடமிருந்து வீசும் ஒளியினாலோ அல்லது அலங்கரிக்கப்பட்டிருந்த நகைகளின் காரணமாகவோ, அந்த இடமே தீப்பற்றியிருப்பது போன்ற தோற்றத்தைத் தந்தது.

     பலவிதமான வண்ணங்களில் விதவிதமான உடைகள் அணிந்து, கழுத்தில் மாலைகளுடன், அழகாக அலங்கரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்கள் அந்த விரிப்பில் இருந்ததை அவர் கண்டார்.

     இரவு தொடக்கம் முதல் கேளிக்கை விளையாட்டுக்களில் ஈடுபட்டிருந்த  அவர்கள், களைப்புற்றதாலும், மதுவருந்திய மயக்கத்தினாலும், உறக்கம் மேலிட, அந்த பாதியிரவு கழிந்த நிலையில், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள்.

     அணிந்திருந்த ஆபரணங்களின் ஓசையெதுவிமின்றி ,பெண்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அந்த இடமானது,  ஒலியெழுப்பாமல் நீந்தும் அன்னப்பறவைகளையும், ரீங்கரிக்காத வண்டுகளையும் கொண்ட பெரிய தாமரைக்குளம் போல  இருந்தது.

     பற்கள் தெரியாமல் ஒன்றுடன் ஒன்று கூடி மூடியிருந்த உதடுகளையும், மூடிய கண்களையும் கொண்டிருந்த அந்தப் பெண்களின் முகங்கள், தாமரை மலர்களின் நறுமணத்துடன் இருந்ததை , வாயுமைந்தன் பார்த்தார்.

     பகற்பொழுதில் இதழ் விரித்துப் பொலிவுடன் இருக்கும் தாமரை மலரானது, இரவினில் இதழ் குவித்து பொலிவிழந்து இருப்பது போல அந்தப் பெண்களின் முகங்கள் இருந்தன.

     அவர்கள் அணிந்திருந்த மாலைகளிலிருந்த பூக்களில் தேனுண்ட கிறக்கத்தில் இருந்த வண்டுகள் மீண்டும் மீண்டும் அந்த முகத்தாமரைகளை விரும்பிச் சுற்றிக்கொண்டிருப்பதைப் பார்க்கையில், அந்த முகங்களின் வடிவமைப்பால், அவை நீரில் பூத்த தாமரை மலர்களுக்கு நிகர்த்தவையே என்று  ஸ்ரீஅனுமன் எண்ணினார்.

     அந்தப் பெண்களின் அழகால், இராவணனின் அந்த மண்டபமானது, மின்னும் நட்சத்திரங்களினால் ஒளிரும் இலையுதிர்கால ஆகாயம் போல் ஒளிர்ந்தது.

     அந்தப் பெண்களால் சூழப்பட்டிருந்த அந்த இராவணனும், அழகிய நிலவானது ஒளிரும் நட்சத்திரங்களால் சூழப்பட்டிருப்பதுபோல விளங்கினான்.

     ஆகாயத்திலிருந்து, மீதமிருந்த தங்கள் நல்வினைகளோடு பூமியில் விழுந்த நட்சத்திரங்களெல்லாம் ஒன்றுகூடி அங்கிருந்த பெண்களாக இருந்தார்களோ என்று அந்த வானரர் எண்ணினார்.

     ஏனென்றால், அந்தப் பெண்களின் வடிவழகும், கவர்ச்சியும், நட்சத்திரங்கள் வீசும், நலம் தரும் ஒளியின் சிறப்பையும் கவர்ச்சியையும் ஒத்திருந்தன.

     காம விளையாட்டுக்களாலும், மதுவின் மயக்கத்தாலும் அந்தப் பெண்கள், நிலைதிரிந்த மாலைகளுடனும், அவிழ்ந்துகிடந்த ஆபரணங்களுடனும் உறக்கத்தின் பிடியில் இருந்தார்கள்.

     அந்தப்பெண்களில் சிலருக்கு நெற்றித்திலகங்கள் அழிந்திருந்தன.  சிலருக்கு கால் கொலுசுகள் கழண்டிருந்தன. சிலரது கழுத்தணிகள் அவிழ்ந்திருந்தன.

     அணிந்திருந்த முத்துமாலைகள் சுற்றிலும் சிதறுண்டுகிடக்க சில பெண்கள் இருந்தார்கள். ஆடைகள் அவிழ்ந்திருந்த பெண்கள் சிலர் இருந்தார்கள்.  இடையணிகள் அவிழ்ந்த நிலையிலும் சில பெண்கள் இருந்தார்கள்.  அவர்கள் இருந்த நிலையைப் பார்க்கும்போது, வெகுதூரம் பாரம் சுமந்துவந்தபின் தங்கள் தளைகளிலிருந்து விடுவிக்கப்பட்ட பெண்குதிரைகள் களைப்புடன் விழுந்துகிடப்பது போலத்தோன்றியது.

     காதுகளில் அழகிய குண்டலங்களை அணிந்திருந்த அந்தப் பெண்களின் கழுத்தில் இருந்த மாலைகள் கசங்கி, பூக்கள் உதிர்ந்து கிடந்திருந்ததைப் பார்க்கும்போது, கானகத்தில் யானையின் கால்களால் மிதிபட்டு நசுங்கியிருக்கும் செடிகொடிகளில் அழகிய பூக்கள் பூத்திருந்தது போலத் தோன்றியது.    அந்தப்பெண்களின் மார்பகங்களுக்கு நடுவில் கிடந்த, நிலவினைப்போல ஒளிர்ந்துகொண்டிருந்த முத்துமாலைகளைப் பார்க்கும்போது, அவை உறங்கிக்கொண்டிருக்கும் அன்னப்பறவைகளைப் போலத் தோன்றின.

     சில பெண்களின் மார்புகளில் இருந்த வைடூரிய மாலைகள் அன்னப்பறவைகள் போலவும், சிலரது மார்பில் இருந்த தங்க நகைகள் சக்ரவாகப்பறவைகள் போலவும் தோற்றமளித்தன.

     நதிக்கரைகளில் உள்ள மணற்குன்றுகள் போலத்திகழ்ந்த அந்தப் பெண்களின் பின்னழகுகள், அன்னப்பறவைகளும், நீர்ப்பறவைகளும், சக்ரவாகப் பறவைகளும் நிறைந்து மிளிரும் ஆறுகள் போலத் தோற்றமளித்தன.

     அவர்களின் காற்சதங்கைகள் மலர்மொட்டுக்களாகவும், முகங்கள் பொற்றாமரை மலர்களாகவும், உடலின் காம நெளிவுகள் முதலைகளாகவும், உடலின் ஒளிவண்ணங்கள் ஆற்றின் கரைகளாகவும் தோற்றமளிக்க, அந்தப் பெண்கள், ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றின் நீரோட்டம் போலவிருந்தனர்.

     அந்தப்பெண்களின் மென்மையான உடற்பகுதிகளிலும், மார்பகங்களிலும் அவர்கள் அணிந்திருந்த நகைகளின் அழுத்தத்தினால் உண்டாயிருந்த தழும்புகள், உண்மையான நகைகள் போலவே தோற்றமளித்தன.

     சில பெண்களின் முகம் வரை இழுக்கப்பட்டிருந்த மேலாடைகள், அவர்களின் வாயிலிருந்து வரும் மூச்சுக்காற்றினால் மீண்டும் மீண்டும் அசைந்துகொண்டே இருந்தன. 

     பலவிதமான நிறங்களில் இருந்த இராவணனின் மனைவியர் அணிந்திருந்த பலவண்ண ஆடைகளின் புடவை நுனிகள், கழுத்திற்குக் கிழே அசைந்தவண்ணம் இருந்ததைப் பார்க்கையில், கொடிக்கம்பங்களில் ஒளிவீசிக்கொண்டு பறந்துகொண்டிருக்கும் பலவண்ணக் கொடிகள் போலத் தோற்றமளித்தன.

     கவர்ந்திழுக்கும் அழகையுடைய சில பெண்கள் விடும் மூச்சுக்காற்றினால் அவர்கள் காதுகளில் அணிந்திருந்த குண்டலங்கள் அழகாக ஆடியவண்ணம் இருந்தன.

     அந்தப்பெண்களின் இயல்பாகவே நறுமணத்துடன் இருக்கும் மூச்சுக்காற்றானது, அவர்கள் அருந்தியிருந்த சர்க்கரை கலந்த மதுவிலிருந்து வந்த இனிய, சுகமான வாசனையோடு, இராவணனுக்கு மேலும் இன்பம் அளித்துக்கொண்டிருப்பது (பணிவிடை) போல இருந்தது.

     இராவணனின் மனைவியருள் சிலர், அருகில் இருந்த மற்ற மனைவியரின் முகங்களை, இராவணைனின் முகமென்று மயங்கி, முகர்ந்தவண்ணம் இருந்தனர்.

     இராவணனிடம் இருந்த அதிக ஆசையால், அந்த உத்தம மனைவியரும், தங்கள் சுயநினைவின்றி, அவர்களுடன்   களித்திருந்தனர்.

     சில பெண்கள், வளையல்கள் அணிந்திருந்த தங்கள் கைகளையும், சில பெண்கள் தங்கள் புடவைத்தலைப்புக்களையுமே தலையணைகளாக வைத்துக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்தார்கள்.

     ஒருத்தி, இன்னொருத்தியின் மார்பின் மீது தலைவைத்துப் படுத்திருக்க, அவளின் தோளின் மீது இன்னொருத்தி சாய்ந்திருக்க, வேறொருத்தி மற்றொருத்தியினுடைய மடியில் தலைவைத்திருக்க, இவ்விதம் பலநிலைகளில் அவர்கள் மயக்கத்தில் உறங்கிக்கிடந்தனர்.

     காமத்தின் வேகத்திலும் மதுவின் மயக்கத்திலும் வசமிழந்திருந்த அந்தப் பெண்கள், ஒருவர் மற்றவரின் இடைப்பகுதி, தொடைப்பகுதி, பின்புறம், முதுகுப்பகுதி, மடி ஆகியவற்றைக் கைகளால் தழுவிக்களித்திருந்தனர். மெல்லிடையினரான அந்தப் பெண்கள், இவ்விதம் மற்றப்பெண்களின் உடற்பகுதிகளைத் தழுவிக்கொண்டு, தங்கள் காதலரையே தழுவுவதாக நினைத்து மகிழ்ந்திருந்தனர்.

     ஒருவருக்கொருவர் கைகளால் பின்னிக்கொண்டு கிடந்த அந்தப் பெண்களின் வரிசையைப்பார்க்கும் பொழுது, நூலில் கோர்க்கப்பட்ட ஒரு பூமாலையை, மதுவை நாடி, சுற்றித்திரியும், வண்டுகள் சூழ்ந்திருப்பது போலிருந்தது.

     வசந்தகாலமான வைகாசி மாதத்தில் பூத்துக்குலுங்கும் கொடிகள் போலவே இராவணனின் அந்த மனைவியர் தோற்றமளித்தனர். காற்றினால் கொடிகளின் கிளைகள் ஒன்றுடன் ஒன்று பின்னிக்கொள்வது போல அந்தப் பெண்களின் தோள்கள் பின்னிக்கிடந்தன.

     மலர்த்தோட்டங்களில் வேறு வேறு கொடிகளில் பூத்திருக்கும் மலர்களும் ஒன்றுடன் மற்றொன்று கலந்திருக்க, அவற்றைச்சுற்றும் வண்டுகளும் தங்களுக்குள் கலந்துவிடுவதுபோல, அந்தப் பெண்களின் கூந்தல்களும் அவற்றில் சூடியிருந்த மலர்களும் கலந்து கிடக்க, அந்த இடமே ஒரு மலர்த்தோட்டம் போலத் காட்சியளித்தது. 

     அங்கு கிடந்திருந்த பெண்கள் அனைவரும் தத்தமது உடலமைப்புகள், ஆடைகள், மாலைகள், அணிகலண்களுடன் விளங்கினாலும், இன்னாருடையது இது என்று பிரித்துச்சொல்ல இயலாதவாறு ஒருவருடனொருவர் கலந்து கிடந்தார்கள்.

     இராவணன் சுகமான ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால், அந்த ஒளிவீசிக்கொண்டிருந்த பெண்களை இமைகொட்டாது பார்த்து ரசிக்க அதுவே தக்க தருணம் என்று நினைத்தது போல, பொன்விளக்குகளில் எரிந்துகொண்டிருந்த ஒளிச்சுடர்கள் அசையாது நிலைத்திருந்தன.

     “அரசர்கள், முனிவர்கள், தேவதைகளான முன்னோர்கள், தைத்யர்கள், கந்தர்வர்கள் முதலியோரது பெண்களும், அசுரகுலத்துப் பெண்களும் இராவணன் மேல் மையல் கொண்டு அங்கிருந்தார்கள்.”

     “அந்தப் பெண்களில் பலர், போர்மீது பெருவிருப்பம் கொண்ட இராவணனால் கவர்ந்துவரப்பட்டவர்கள் என்றாலும் சிலர் இராவணன் மீது கொண்ட ஆசையால் தாமாகவே அவனின் மனைவிகளாக அங்கு வந்திருந்தார்கள்.”

     “ஜனகனின் மகளான சீதையைப்போலல்லாமல், அங்கிருந்த பெண்கள் யாரும் (சதியின் மூலமாக) பலாத்காரமாகக் கொண்டுவரப்பட்டவர்கள் அல்ல. அனைவரும் இராவணனின் போராற்றலால் வெல்லப்பட்டவர்கள்.  அந்தப் பெண்கள் வேறு ஆடவர் யாருடனும் விருப்பம் கொண்டவராகவோ, அதற்கு முன் வேறு எவரின் மனைவியாகவோ இல்லை.”

     “அந்தப்பெண்களில் யாரும் தாழ்ந்தகுலத்தில் பிறந்தவராகவோ, வடிவழகில் குறைந்தவராகவோ, அறிவாற்றலில் குறைந்தவராகவோ, நன்கு மதிக்கப்படாதவராகவோ, திறமைகுறைந்தவராகவோ, கணவனால் விரும்பப்படாதவராகவோ இல்லை.”

     எவ்விதம் அரக்கர்குல அரசனின் மனைவியர் தங்கள் கணவருடன் மகிழ்ச்சியுடன் இருக்கின்றார்களோ, அவ்விதமே ஸ்ரீராமனின் மனைவியை அவரது கணவருடன் இருக்கவிடுவது இராவணனுக்கு நன்மை பயப்பதாக இருக்கும் என்று நல்லறிவாற்றல் மிக்க வானரர் தலைவரான ஸ்ரீஅனுமன் நினைத்தார்.

     “சீதையானவள் எல்லாப் பெண்களையும் விட நற்குணங்களில் சிறந்தவள் என்பதில் ஐயமேதுமில்லை. ஆனால் இந்தப் பேராண்மைமிக்க இராவணன் அவரை சூழ்ச்சியால் கவர்ந்து வந்து இழிசெயலை செய்துவிட்டானே” என்று வருந்தி, மேலும் அவர் சிந்திக்கலானார்.

 

                                                       ஒன்பதாவது ஸர்கம் நிறைவு.

Saturday, February 4, 2023

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தரகாண்டம் எட்டாவது ஸர்கம்

           ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தரகாண்டம்.

                                  

                                                   எட்டாவது ஸர்கம்


 

     பெரும் வீரரும் வாயுவின் மைந்தனுமான அவ்வானரர், அந்த மாளிகையின் நடுவில், உருக்கிய தங்கத்தால் செய்யப்பட்டு, மணிகளும் இரத்தினங்களும் பதிக்கப்பட்ட ஜன்னல்களைக் கொண்டிருந்த அந்த விமானத்தைப் பார்த்தார்.

     அளவிடமுடியாததும், இன்னதென்று அறுதியிட்டு விவரிக்க முடியாத வியப்புக்களைக் கொண்டதும், விஷ்வகர்மாவினாலேயே செய்யப்பட்டு, அவராலேயே இது மிகவும் சிறந்தது என மகிழப்பட்டதும், வான்வழியே செல்லவல்லதுமான அந்த விமானம், சூரியன் செல்லும் பாதையில் ஒரு விளக்கம் போல் விளங்கியது.

     அந்த விமானத்தில் இருந்த ஒவ்வொரு பொருளும் மிகவும் கவனத்துடனும் பெரும் முயற்சியுடனும் செய்யப்பட்டிருந்தது. உயர்ரக இரத்தினக்கற்களால் அலங்கரிக்கப்படாத பகுதிகளே அதில் இல்லை. தேவர்களுக்கூட வாய்த்திருக்காத அந்த விமானத்தில், அரிதற்ற பொருளென்று ஏதுமில்லை.

     ஒருமித்த மனதுடன் செய்யப்பட்ட கடுமையான தவத்தின் பயனாகப் பெறப்பட்ட அந்த விமானம், மனம் நினைத்த இடத்திற்கு அழைத்துச் செல்லும் வல்லமை வாய்ந்தது.  பலவிதமான தங்குமிடங்களைக் கொண்டிருந்த அந்த விமானம், மிகவும் கவனத்தைக் கவரும் நேர்த்தியான வேலைப்பாடுகளை ஆங்காங்கே கொண்டிருந்தது.

     செலுத்துபவரின் மனமறிந்து தன் வேகத்தை அமைத்துக்கொள்ளும் திறன் கொண்ட அது, எவராலும் வெல்ல முடியாததாக இருந்தது. காற்றின் வேகத்தில் கடுகிச்செல்லும் அந்த விமானம், ஆன்றோர்களும், நல்வினையாற்றியவர்களும், அனைத்துப் பேறுகளையும் பெற்றவர்களும், பெரும் புகழ் கொண்டவர்களும், தேவர்களும் உறையும் இடம் போலத்துலங்கியது.

     வியத்தகு பொருட்களால் வியக்கும்வண்ணம் செய்யப்பட்டிருந்த அந்த விமானம், மனதிற்குகந்ததாயும், களங்கமற்ற இலையுதிர்காலத்து முழுநிலவினைப் போலவும் விளங்கியது, அற்புதமான பல அழகிய உயர்ந்த கோபுரங்களைக் கொண்டிருந்த அது, பல சிகரங்கள் சூழ நிற்கும் உயர்ந்த சிகரத்தைக் கொண்டிருக்கும் மலையைப் போலவும் விளங்கியது.

     காதுகளை அலங்கரிக்கும் குண்டலங்களினால் பொலிவுற்ற முகங்களையும், அகன்ற சுழலும் கண்களையும் கொண்டு, வேகமாகச்செல்லும், பெருந்தீனியுண்ணும், வானத்தில் இயங்கும் ஆயிரக்கணக்கான பூதகணங்களால் தாங்கப்படுவதுமாக அந்த விமானம் இருந்தது.

     இவ்விதமாக மிகச்சிறப்புக்களுடன் இருந்த அந்த விமானம், பூத்துக்குலுங்கும் வசந்தகாலத்து மலர்க்கொத்துக்களைப் போல அழகுற விளங்கி , வசந்தகாலத்தையே விஞ்சும் வண்ணம் பொலிவுடன் விளங்கியதை, வானரர்களுள் மிகச்சிறந்தவரான ஸ்ரீஅனுமன் கண்ணுற்றார்.

    

                                            எட்டாவது ஸர்கம் நிறைவு

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...