Wednesday, December 5, 2018

சிட்டுக்குருவிக்கென்ன தட்டுப்பாடு?

2.0 x பக்ஷிராஜன்




நேற்று இந்தப்படம் 3டியில் பார்த்தேன். தொழில்நுட்ப நேர்த்தியில் தமிழனுக்கு நிச்சயம் பெருமை சேர்க்கும் படம். 68 வயதில் ஒருவர் இவ்வளவு மெனக்கெட முடியும் (எவ்வளவு பணம் கொடுத்தால் தான் என்ன?) என்பது பெரும் ஆச்சரியம் மற்றும் வியப்பாய் உள்ளது. எமி ஜாக்சனுக்குச் சரியான பாத்திரம் வகுத்து, வசீகரனை டூயட் பாடாமல் காப்பாற்றிய(நம்மையும்) டைரக்டர் சங்கருக்கு பெரும் பாராட்டு. படத்தில் மையக்கருத்து இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்பதே. இதை ஒரு பாணியில் சொல்லியிருக்கிறார்கள். மொத்த உலகமே ஒன்றையொன்று சார்ந்ததாய் இருக்குமாறு தான் இயற்கை வழி செய்துள்ளது.
செல்போன் டவர்களால் பறவைகள் அழிவதற்கு அறிவியல் சான்றுகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பறவைகளின் நடமாட்டம் குறைந்துவிட்டதை உணரமுடிகிறது அல்லவா!
காக்கை, குருவி எங்கள் ஜாதி என்று பாரதி பாடிவிட்டதால், ஜாதியை ஒழிக்க நாம் கிளம்பியதில் காக்கை குருவிகள் அழிந்தனவோ?
எங்கள் ஊரில் சுத்தம்மாய் காகங்களே கண்ணுக்குத் தெரிவதில்லை! காகத்தின் சப்தம் கேட்டு விருந்தாளிக்குக்காத்திருந்த காலமெல்லாம் போச்சு! முன்பெல்லாம், மழை பெய்யும் முன் அதிகாலை நேரத்தில், இன்னும் அணைக்கப்பட்டிராத தெருவிளக்குகளைச்சுற்றிப்பறக்கும் விட்டில்களை கொத்தித்தின்னும் காகக்கூட்டங்கள் எங்கே?
மாலை மயங்கும் நேர்ங்களில், மின் கம்பங்களில் வரிசையாய் அமர்ந்திருக்கும் காகங்களைப் பார்த்து, "" டேய்! காக்காய்ப்பள்ளிக்ககூடம் டா"" என்று வியந்த மாணவப்பருவத்தை நான் இன்னும் மறக்கவில்லை.
அன்னத்தை வைத்துவிட்டு,' கா...கா....' என்று நாம் கரைந்தாலும் காகம் கண்ணுக்குத்தட்டுப்படுவதில்லை! தெருவில் கிடக்கும் எலிகளும் நாய்களும், கார்ச்சக்கரங்களில் காணாமல் போகின்றனவே ஒழிய காகங்கள் அதைத்தின்ன வருவதில்லை! நாம் பள்ளியில் படித்த பாடங்கள் எல்லாம் பொய்த்துவிட்டன. இனி யூடியுப் சேனல் கார்ட்டூன்களில் தான் குழந்தைகளுக்குக் காகத்தைகாட்ட முடியும்!
என் வீட்டுக்கிணற்றில் வசிக்கும் சில குருவிகளை சில நேரங்களில் காணவில்லை என்றாலே மனம் பதைத்துவிடுகிறது. அவற்றை மீண்டும் பார்த்தால் தான் நிம்மதி! பட்டாம் பூச்சிகளும் வண்ணத்துப்பூச்சிகளும் மிகவும் அரிதாகிவிட்டன! மின்மினிப்பூச்சிகள் இப்பொழுது யார் கண்ணுக்காவது தட்டுப்படுகிறதா?
செல்போன் டவர்கள் வேண்டுமானால் இதற்குக்காரணமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் பறவைகளும் பூச்சிகளும் அருகிவிட்டதற்கு ஏதேனும் காரணம் இருக்க வேண்டுமல்லவா!
பறவையை ரசித்த மனிதன் அதை அதிகம் புசிக்க ஆரம்பித்து விட்டானா? சிட்டுக்குருவிகளைப்பிடித்து ஹோட்டல் காரர்களுக்கு விற்று விடுவதாகவும் செய்திகள் உண்டு.
ரஜினி, சங்கர், 3D இவற்றையும் மீறி படம் சொன்ன செய்தியை சிறிதளவாவது பின்பற்ற முயற்சிக்கலாம்.
படம் புணையப்பட்ட தென்றாலும், அதனால் என்னுள் ஏற்பட்ட தாக்கத்தை ஆதங்கமாக வெளிப்படுத்தியுள்ளேன்.
பறவைகளைக்காப்போம்!!!!
இயற்கையைப்போற்றுவோம்!!!!!!
நன்றி!

Sunday, November 18, 2018

அந்தமான் அழகுகள்!

அந்தமான் அழகுகள் தொடர்ச்சி,,,,,,நான்காம் நாள்......(29/09/2018)

                     வணக்கம்.  நேற்றே ஒரு செய்தியை நான் பகிர்ந்து கொள்ளவில்லை!  ஜார்வா காடுகளிலிருந்து திரும்பி, புதிய ஹோட்டலுக்கு வரும் போதுதான் இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம் என்றும், சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவியது. நிலநடுக்கம் அந்தமானுக்கும் புதியது அல்ல! கடலால் சூழப்பட்டுள்ள அந்தமானுக்கும் சுனாமி வரலாம் என்றும் பீதி கிளம்பியது.  குழு நண்பர்கள் பலர் அப்பொழுதே நடுங்க ஆரம்பித்து விட்டனர். நாளை வேறு கடலில் சென்று வேறு தீவுகளைப்பார்க்க வேண்டும்! கடலில் சென்று கொண்டிருக்கும் போது சுனாமி வந்தால் எப்படி இருக்கும் என்ற நினைவுடனேயே தூங்கச்சென்றோம்.  காலை ஏழு மணிக்குக் கிளம்பினால் போதும் என்று சொல்லப்பட்டதால், காலையில் நிதானமாக எழுந்து தயாராகி ஹோட்டல் வெராண்டாவில் வந்தமர்ந்தோம்.  இன்று கடலில் குளிப்பதில்லை என்று முடிவெடுத்திருந்ததால், தூக்கு சுமை குறைவே! அங்கு முன்பே வந்தமர்ந்திருந்த நண்பர், காபி சாப்பிட்டீர்களா? என்று கேட்க, காலை எழுந்து காபியை மறந்திருந்த எங்களுக்கு உடம்பு ஆணையிட, அங்கு சென்று கொண்டிருந்த பையனிடம் காபி ஆர்டர் செய்தோம். இந்த ஹோட்டலில் எல்லோரும் தமிழே பேசினர்.  எல்லோரும் ஒவ்வொருவராக வந்து முன் ஹாலில் அமரத்த்தொடங்கினர்.  காபி மட்டும் இன்னும் வரவில்லை! அறைக்கெல்லாம் கொடுத்து விட்டு, நிதாதனமாய், பையன் காபி கொண்டு வந்து கொடுத்தான். நாங்கள் அருந்துவதைப்பார்த்து, மற்றவர்களும் ஆர்டர் கொடுக்க, சற்று நிம்மதியானது.  நம்மால் தாமதம் ஆகாது என்ற நிம்மதிதான்.

                        இன்று பார்க்க வேண்டிய இடங்கள், ராஸ் தீவுகள் (Ross Islands),  நார்தெர்ன் பே (Northern Bay)!  முதலாவது இடம், ஆங்கிலேயர் தங்களுக்காக அமைத்துக்கொண்ட தீவு!  போர்களிலும், நிலநடுக்கங்களாலும், சுனாமியாலும், இன்று பாழடைந்து உள்ளதை வேடிக்கைப்பார்த்து விட்டு, அங்கிருந்து நார்தெர்ன் பே! அங்கு தான் கடல் குளியல், ஸ்கூபா டைவிங், கடல் பாசிப்பாறகள் தரிசனம் எல்லாம். செல்வோம் வாருங்கள்!

                      எல்லோரும் காபி அருந்திய பிறகு, மீண்டும் வேன் மற்றும் காரில் பயணம். தினமும் செல்வதால் பாதைகள் சற்று மனதில் பதிந்துவிட்டன.  விமான நிலையம் வழிச்செல்லும் பொழுது, உயரத்திலிருந்து அந்து விமான ஓடு பாதை பார்க்க மிக ரம்மியமாக இருந்தது.

                   முதலில் சென்ற இடம் அந்தமான் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ்! இங்கிருந்துதான், ராஸ் தீவு மற்றும் நார்தெர்ன் பேவுக்கு படகில் செல்ல வேண்டும். கடல் விளையாட்டுக்களுக்கும் இங்கேயே பணம் செலுத்தி டிக்கட் வாங்கிவிட வேண்டும். இதன் நுழைவு வாயில் மற்றும் சில காட்சிகள்!

                 









                   
                                     எங்கள் குழுவிற்கென தனியாக ஒருவர் நியமிக்கப்பட்டார்.  நீர் விளையாட்டுக்களின் வகைகளும் அவற்றிற்கான கட்டணமும் சொல்லப்பட்டன. ஸ்கூபா டைவின் மற்றும் சீ வாக்கிங்க் (sea walking) கிற்கு 3500 ரூபாயும், பவளப்பாறைகளைப்பார்க்க, பக்கங்களில் கண்ணாடி உள்ள படகிற்கு 1750 ரூபாயும், படகின் தரையில் பெரிதுபடுத்திக்காட்டும் கண்ணாடி பொறுத்தப்பட்ட படகிற்கு 500 ரூபாயும் கட்டணங்களாகச் சொல்லப்பட்டன.  சீ வாக்கிங்கிற்கு ஆசைப்பட்டாலும், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு உகந்ததல்ல என்பதாலும், குழுவின் 80 சதவிகிதத்தினர் 55ஐக்கடந்தவராய் இருந்ததாலும், பெருவாரியாக 500 ரூபாய் படகில் செல்வதே முடிவானது. இருவர் மட்டும் ஸ்கூபா டைவிங்கிற்கு பணம் செலுத்தினர்.  அப்பொழுதே அவர்களுக்கு வீடியோவும் எடுத்து சிடியும் கொடுத்துவிடுவார்கள் என்றும் சொன்னார்கள்.  பல வித ஆலோசனைகளுக்கு நடுவில் நேரம் கிடைத்ததாலும், இந்த நான்கு நாட்களில் குழுவினர் நெருங்கிப்பழகி விட்டதாலும், நாளை இறுதி நாள் என்பதாலும் எல்லோரிடமும் நெருக்கம் அதிகமாக இருந்தது. எனவே எல்லோரும் எல்லோரையும் காமிராக்களில் படம் எடுத்துத்தள்ளிக்கொண்டிருந்தார்கள்.  நாங்கள் எடுத்த சில படங்கள்.











































                         
                                குழு உறுப்பினர் எண்ணிக்கை அதிகமானதால், 22 பேர் ஒரு படகிலும், பத்து பேர் இன்னொரு படகிலும் செல்வதாக முடிவாகியது.  நாங்கள் இருவரும் பத்து பேர் குழுவில் சேர்ந்தோம்.  அந்த மிதவைப்பாலம் வழியே தள்ளாடித்தள்ளாடி ஒருவழியாய் ஏறி, ஒன்றன் பின் ஒன்றாக இருந்த இருக்கையில் அமர்ந்தோம்.  நான் அமர்ந்ததுமே என் இருக்கை பின் புறம் சாய்ந்தது.  பின்னால் அமர்த்திருந்த நண்பர் நசுங்குமுன் இருவரும் சுதாரித்துக்கொண்டோம்.  எல்லோரும் லைஃப் ஜாக்கட் அணிய எனக்குக்கிடைக்கவில்லை.  படகில் இருந்த கைடு ஒன்றும் பயப்படத்தேவையில்லை என்று சொல்லிவிட்டார். இருந்தாலும் என் துணைவியார், திரும்பிப்பார்த்து, கெட்டியா பிடித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிக்கொண்டு வந்தார். எங்கள் படகில் இருந்து, பெரிய படகுக்காக காத்திருந்த நண்பர்களைக்கிளிக்கிய படம் இது.

                       

                     எங்கள் படகு முதலில் கிளம்பி, ராஸ் தீவு நோக்கிச்சென்றது. படகுகள் போய் வந்த வண்ணம் இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு உதைப்புத்தான்.  திடீரென்று, கடல் அலை அப்படியே மேலெலும்பினால் ...என்ற திகில் வேறு! என்ன !  சாகர சங்கமம் தான்! நல்ல வேளை! அப்படி ஒன்றும் நிகழாமல், ஒரு பத்து நிமிடப்பயணத்தில், ராஸ் தீவை அடைந்தோம்.  இங்கு எங்களுக்கு அளிக்கப்பட்ட நேரம் , கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம்.  மீண்டும்  திரும்ப அதே படகிற்கு வர வேண்டும் என்ற செய்தியுடன் ராஸ் தீவில் காலடி எடுத்து வைத்தோம்.

                        பிரிட்டிஷார் தங்கள் வாழ்க்கையை அனுபவிப்பதற்காக கட்டிக்கொண்ட கட்டிடங்கள் இருந்த தீவு. பிறகு ஜப்பான் காரன் சிறிது காலம் ஆக்கிரமித்துக்கொண்டிருந்த இடம். முற்றிலும் சிதிலமான கட்டிடங்கள்.  அவை இப்பொழுது சுற்றுலாப்பயணிகளுக்கான இடமாகிவிட்டது. ஜப்பான் காரன் பதுங்குகுழிகள் இன்னும் பத்திரமாக உள்ளன,  தீவில் எடுத்த புகைப்படங்கள் உங்களுக்காக.

                 


















































































 

                           அந்த முற்பகல் முழுவதும் நல்ல வெயில். தலையில் கட்டிய கைக்குட்டையை மீறி வியர்த்து வழிந்தது. முதல் நாளே தொப்பியைத் தொலைத்துவிட்டதால், கைக்குட்டையே தொப்பியாகியது.  நாங்கள் பத்து பேருமே நான்கைந்து குழுக்களாக பிரிந்துவிட்டோம்.  யாரோ ஒருவரை அடையாளம் வைத்துக்கொண்டு தொர்ந்துகொண்டிருந்தோம்.  எல்லாமே பாழடைந்த கட்டிடங்கள்.  சரித்திரத்தில் சுழற்சியைக் கட்டியம் கூறிக்கொண்டிருந்த கட்டிடங்கள்.  ஆலமர வேர்களால் முற்றிலும் சூழப்பட்டிருந்தன பெரும்பாலான கட்டிடங்கள்.  இயற்கையை வெல்ல யாருமில்லை என்பதற்கு இந்தத்தீவின் கட்டிடங்கள் ஒரு உதாரணம்.  நல்ல வெயிலினாலும், அதிக ஆர்வமில்லாததாலும், கொடுக்கப்பட்ட நேரம் முடிந்துகொண்டிருந்ததாலும், விரைந்து, படகுத்துறைக்குத்திரும்பினோம்.  வழியில் அங்கிருந்த ஒரு சிறு கடையில் பாதாம் பால் கிடைத்தது.  அனேகமாக இந்த இடத்தில் எல்லோரும் சேர்ந்துவிட்டோம்.  படகுத்துறையை சென்றடைந்து, அங்கு விற்றுக்கொண்டிருந்த குல்ஃபி ஐஸ்ஸயும் சுவைத்திருந்த நேரத்தில் எல்லோரும் வந்துவிட்டிருக்க, மீண்டும் படகில் ஏறி நார்தெர்ன் பே நோக்கி பயணித்தைத்தொடர்ந்தோம்.  இந்த முறை எனக்குப்பின் இருந்தவர், ஜாக்கிரதையாக எனக்கு முன் இருக்கையில் இடம் பிடித்துவிட்டார்.  எனக்கு லைஃப்ஜாக்கட்டும் கிடைத்துவிட்டது,

                   இது சற்று தூரமான பயணம்.  இந்தத்தீவில் தான் நீர் விளையாட்டுக்களும், பவளப்பாறைகளை காணும் வசதியும் இருந்தது.  மீண்டும் ஒரு மிதவைத்தரையில் தரை இறங்கி, அங்கேயே, அடுத்த  படகிற்காகக் காத்திருந்தோம்.

                    இது எட்டு பேருக்கான படகு.  படகின் இருபுறமும் அமர்வதற்கு பெஞ்சுகள் போடப்பட்டிருந்தன. லைஃப்ஜாக்கட்டும் அவசியம் என்று போட்டுக்கொள்ளச்சொன்னார்கள்.  படகின் நடுவில் கண்ணாடித்தரை.  பெரிது படுத்திக்காட்டும் கண்ணாடி.  இருபது முப்பது அடி ஆழத்தில் உள்ளதும் அருகில் உள்ளது போல் தெரிந்தது.  சிறிது தூரம் சென்றதும், கீழே காட்சிகள் தெரிய ஆரம்பித்தன.  சில இடங்களில் விளக்குகளும் போடப்பட்டன. வித வித மான மீன்கள், பவளப்பாறகள், நம் அருகிலேயே இருப்பது போல் தெரிந்தன.  கண்ணாடியாய் இருந்ததால், காமிராவில் படம் எடுக்க இயலவில்லை. பதினைந்து இருபது நிமிடம் சுற்றி வந்த பிறகு, மீண்டும் இற்க்கிவிடப்பட்டோம்.

                      கடலில் குளிப்பவர்களும், ஸ்கூபா டைவிங்க் செய்ய இரண்டு பேரும் சென்றுவிட நாங்கள் அங்கிருந்த ஊசி,மணி, பாசி விற்கும் கடைகளில் அலைய ஆரம்பித்தோம்.  எல்லாக் கடைகளிலும் ஒரே மாதிரியான பொருட்கள். நாங்கள் ஒரு கடையில் சில பாசி மாலைகளும், ஜார்வா ஆதிவாசி பொம்மையும் வாங்கிக்கொண்டு, அங்கிருந்த பந்தலில் அமர்ந்துகொண்டோம்.

மிதைவைத்தரையிலிருந்து நார்தெர்ன் பேவின் தோற்றம்.

ஓய்விற்காக அமர்ந்திருந்த பந்தல்


மீன் வடிவில் இருந்த ஒரு படகு


வெயிலுக்காகக் குடை

முத்துச்சிப்பி வளர்க்கும் இடம். மேல் அமர்ந்திருப்பது சீகல் என்ப்படும் கடல் பறவைகள். 



                          கடலில் குளிக்கச்சென்றவர்களும், ஸ்கூபா டைவிங்க் சென்றவர்களும் வந்து சேர்ந்தார்கள்,  ஸ்கூபாடைவிங்க் செல்பவர்களை இலவசமாக வீடியோ எடுத்து சிடியும் கொடுத்துவிடுவார்கள் என்று முதலில் சொல்லியிருந்தார்கள், ஆனால் அதற்குத்தனியாக ஐநூறு ரூபாய் வாங்கிக்கொண்டுவிட்டார்கள் என்று புலம்பிக்கொண்டிருந்தார்கள். மதிய உணவு அங்கேயே பார்சல்களில் வர இடம் பார்த்து அமர்ந்து உணவருந்தினோம்.  மீண்டும் விட்டுப்போன ஷாப்பிங்க் நடந்தது, ஒருவழியாய் அந்த கைடு அனைவரையும் கட்டாயமாய் அழைத்துச்சென்று படகில் ஏற்றிக்கொண்டார்.  மீண்டும் பயணம் புறப்பட்ட இடம் நோக்கி! இப்பொழுதும் சுனாமி பயம் வரத்தான் செய்தது.  இப்பொழுது ராஸ் தீவு செல்லாமல் நேராகக் காலையில் புறப்பட்ட இடத்தையே சென்றடைந்தோம்,  மற்றவர்களும் வருவதற்காகக் காத்திருந்த வேளையில் எடுத்த புகைப்படங்கள்.

                             
காக்கையை விரட்டும் ராஜீவ் காந்தி









                               இன்றைய நாளுக்கான பயணம் முடிந்ததால், அடுத்து ஷாப்பிங்கிற்காக அந்த வேன் எங்களை அழைத்துச்சென்றது.  அந்த டூர் கைடு ஒரு கடைக்கு எங்களை அழைத்துச்சென்று விட்டார்.  எல்லாப் பொருட்களும் பயங்கர விலை. அந்தக்கைடுக்கும் அந்தக்கடைக்கும் தொடர்பு உண்டு போலும்.  ஆனால் யாரும் ஒன்றும் வாங்காமல் வெளியே வந்து விட்டோம்.  

                           எங்கள் உறவினரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு நல்ல கடையைப்பற்றி விசாரிக்க அவர் ஒரு கடையைச்சொன்னார்.  ஆனால் யாருக்கும் அதில் விருப்பம் இல்லாததால், பொதுவான மார்கெட் பகுதிக்கு கொண்டுவிட்டார்கள்.  நாங்கள் இருவரும் கடைவீதியில் உலாவர, நம்ம ஊர் கடைத்தெரு மாதிரியே ஒரு உணர்வு.  முக்கால்வாசி கடைகள் தமிழர்களின் கடைகளாகவே இருந்தன.  ஏதோ ஒரு கடையில் பேத்திக்கு வளையலும், மாலைகளும் வாங்கிக்கொண்டு, அந்தத் தெரு முனையில் இருந்த வினாயகர் கோவிலில் தரிசனமும் செய்து, மீண்டும் அந்த மார்கட் சர்க்கிளுக்கு வந்தோம்.  அங்கு ஒரு டீ கடையில்  டீ அருந்திவிட்டு, (அதுவும் ஒரு தமிழ்க்கடைதான்) எதிரில் இருந்த பார்க்கில் சென்று அமர்ந்து கொண்டு, மற்றவர்களுக்காக காத்திருக்க ஆரம்பித்தோம்.  மார்கெட் பகுதியில் சில காட்சிகள்.

                      


                                          
                         அன்று மாலை வேறு நிகழ்ச்சிகள் இல்லாததால், உறவினரின் வீட்டுக்குச்சென்று வர முடிவு செய்தோம்.  ஹோட்டல் காரர்களே ஒரு ஆட்டோ பிடித்துத்தர, உறவினரின் வீட்டுக்குச்சென்றோம்.  அது கடலோரக் காவல்படை அதிகாரிகளின் குடியிருப்பு.  மிகப்பாதுகாப்பாய் இருந்தது.  உறவினர் செளம்யாவின் கணவர் கப்பலுக்குச்சென்றுவிட்டதால், அவரும் அவர் குழந்தையும் மட்டும் இருந்தார்கள்.  வீட்டுக்குசென்றதுமே ஒரு நல்ல காபி கிடைத்தது.  முத்து மாலை வாங்க, அவருக்குத்தெரிந்த கடையில் ஏற்பாடு செய்துகொண்டு, இரவு டின்னரும் ஹோட்டலில் சாப்பிட முடிவுசெய்து ஒரு ஆட்டோவில் முத்து விற்கும் கடைக்குச்சென்றோம். அங்கு கையில் இருந்த காசை முத்தாக்கிக்கொண்டு, ஹோட்டலுக்குச்சென்றோம்.  எந்த ஹோட்டல் போனாலும், தோசையே நமக்கு ராசியானதால், அங்கும் அதுவே.  குழந்தையும் அதற்குள் என்னிடம் ஒட்டிக்கொண்டு விளையாட ஆரம்பித்தான். இரவு அவர்களுக்குப்பழக்கமான கார் கிடைக்க, உறவினரை வீட்டில் விட்டு விட்டு நாங்களும் ஹோட்டல் வந்து சேர்ந்தோம்.  இந்தக் கார் ஓட்டும்போது, ஜார்வா மக்களைப்பற்றி அந்த டிரைவர் சொன்ன செய்திகளைத்தான் அப்பொழுது குறிப்பிட்டேன்.  

            சற்று அதிகமான அளவில் புகைப்படங்களைப்பதிந்துள்ளதால், இந்த வலைப்பூ மிகவும் நீளமானதொன்றாகிவிட்டதற்கு வருத்தம் தெரிவிக்கின்றேன்.                          

                             நாளை அந்தமானில் இறுதி நாள்.  காலை அந்தமான் ஜெயில் விஜயம் செய்து விட்டு, விமானம் ஏற வேண்டியதுதான்,  எனவே முடிந்த அளவு பேக்கிங்க் முடித்துவிட்டுப் படுத்துவிட்டோம்.  நாளை அந்தமான் சிறையில் சந்திப்போம். வணக்கம்.

                            

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...