ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டம்
முப்பத்தொன்பதாவது ஸர்கம்.
சூடாமணியை அனுமனிடம் கொடுத்த சீதை, “இந்த நகையைப்
பற்றி ஸ்ரீராமன் மிக நன்றாக அறிவார்!” என்றாள்.
“பெரும் வீரரான ஸ்ரீராமருக்கு இந்த நகையைக் கண்ணுற்றதுமே,
என்னையும், என் தாயையும், பேரரசன் தசரதனையும் பற்றிய நினைவு வந்து விடும்.”
“சிறந்த வானர வீரனே! இனி நீ பெரும் உற்சாகம் கொண்டு, நீ நினைத்த காரியம் வெற்றியடைய வேண்டிய வழிகளைப் பற்றிச்
சிந்திப்பாயாக!”
“ஓ வானர வீரனே! இந்தச் செயலை வெற்றியுடன் நிறைவேற்றும்
முழுப் பொறுப்பும் உன்னிடமே உள்ளது. ஆகவே என்னுடைய
இன்னல்கள் முடிந்து போகும் வண்ணம் சரியான முடிவை எடுப்பாயாக!”
“ஓ அனுமனே! என்னுடைய இன்னல்களைப் போக்கும் செயல்களுக்கான
முயற்சியை எடுப்பதற்கு நீயே ஏற்றவன்.” என்று சீதை சொன்னவுடன், “அவ்வாறே செய்கிறேன்!”
என்று உறுதி கூறி பெரும் வல்லமை கொண்ட அனுமன் சீதையைத் தலை வணங்கிப் புறப்படலானார்.
வாயுகுமாரனாகிய வானர வீரன் அனுமன், தன் பயணத்தைத்
தொடங்க இருப்பதை அறிந்ததும், மிதிலையின் குமாரியான சீதை தழுதழுத்த குரலில் சொல்லத்
தொடங்கினாள்.
“வானர திலகமான அனுமனே! ஸ்ரீராமன் மற்றும் இலக்குமணன்
இருவரிடமும் ஒருசேர இந்த நற்செய்தியைச் சொல்லவும். அதுமட்டுமல்லாது, சிறந்த மந்திரிகளோடு கூடிய சுக்ரீவனிடமும்,
பிற அனைத்து பெரிய, வயதில் மூத்த வானர வீரர்களிடமும் அறவழிப்படி நலன் விசாரிக்கவும்.”
“இந்தத் துன்பப் பெருங்கடலிலிருந்து என்னை மீட்கத்
தயாராகும் வண்ணம், பெருந் தோள்களையுடைய ஸ்ரீராமனிடம் நீ இங்கு கண்டவற்றைக் கூற வேண்டும்.”
“அனுமனே! புகழ் பெற்ற ஸ்ரீராமன் நான் உயிருடன்
இருக்கும் போதே என்னை மீட்டுக் கொள்ளும் வண்ணம் நீ அவரிடம் சொல்லும் சொற்கள் இருக்க
வேண்டும். சிறந்த வார்த்தைகளைப் பேசுவதால்
கிட்டும் நல்லறத்தை நீ பெறுவாயாக!”
“நீ சொல்லப் போகும் சொற்களால் மிகுந்த உற்சாகம்
கொள்ளும் தசரத குமாரனாகிய ஸ்ரீராமனின் ஆண்மை அதிகமாகி, என்னை மீட்டுச் செல்லும் செயல்
விரைவில் நிறைவேறும்.”
“நான் உன்னிடம் கூறிய செய்திகளை, உன் மூலம் கேட்டறிந்த
பின்பே, ஸ்ரீராமன் முறைப்படி தன் வீரத்தை வெளிப்படுத்தும் முயற்சியில் இறங்குவார்.”
சீதையின் வார்த்தைகளைக் கேட்ட வாயுகுமாரனாகிய
அனுமன், சீதையைப் பணிந்து, இரு கரம் கூப்பி, இவ்விதமாகச் சொல்லலானார்.
“தேவீ! போரில் பகைவர்களை அழித்துத் தங்களைத்
துன்பத்திலிருந்து மீட்க வல்ல காகுத்த குலத் தோன்றலான ஸ்ரீராமன், வானர வீரர்களுடனும்,
கரடிகள் கூட்டத்துடனும் விரைந்து இங்கே வருவார்.”
“ஸ்ரீராமனின் வில்லிலிருந்து புறப்படும் அம்புகளுக்கு
முன் நிற்கும் வல்லமை மிக்க மனிதரையோ, அசுரரையோ அல்ல பிற தேவர்களையோ நான் அறிந்ததில்லை.”
“ஸ்ரீராமன் தங்களின் பொருட்டு, போர்க்களத்தில்,
சூரியன், இந்திரன் மற்றும் சூரிய குமாரனான எமனையுமே எதிர்த்து நிற்பார்.”
“ஓ ஜனக குமாரி! ஸ்ரீராமன் கடலால் சூழப்பட்ட இந்த
பூமி முழுவதையுமே வெற்றி கொள்ளும் ஆற்றல் கொண்டவர். ஆகவே, உங்களைக் காப்பாற்ற அவர் செய்யும் போரில்
நிச்சயம் வெற்றி கொள்வார்!”
அனுமனின் யுக்தியுடன் கூடிய அழகிய பேச்சினால்
அவரின் மீது சீதைக்குப் பெரு மதிப்பு ஏற்பட்டது.
மீண்டும் அனுமனிடம் இவ்விதம் சொல்லானாள்.
தனது பயணத்தைத் தொடங்கவிருந்த அனுமனைத் திரும்பத்
திரும்பப் பார்த்தவண்ணம், தன் கணவனின் மீது தனக்கிருக்கும் அன்பு நன்கு வெளிப்படுமாறு
சீதை பேசலானாள்.
“பகைவர்களை அழிக்க வல்ல வீரனே! உனக்குச் சரியென்று
தோன்றினால், இங்கு எதாவதொரு மறைவிடத்தில் இன்று ஒரு நாள் இளைப்பாறிவிட்டு நீ உன் பயணத்தைத்
தொடரலாம்.”
“வீரனே! நீ அருகே இருக்கும்போது, இந்த அபலையின்
துன்பமானது சிறிது நேரத்திற்காவது விலகியிருக்கும்”.
“வானரங்களில் புலிக்கு நிகரான வலிமை மிக்கவனே!
நீ இங்கிருந்து சென்றபிறகு, திரும்ப இங்கு வருவது சந்தேகம் என்றானால், எனது உயிருக்கு
ஆபத்து ஏற்பட்டு விடும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை”.
“துன்பத்தின் நெருப்புக் கங்குகளில் எரிந்து கொண்டிருக்கும் நான், நீ புறப்பட்டுச் சென்ற பின், உன்னைக் காணவியலாத வருத்தத்தால், மேலும் துன்பக் கனலில் தவிப்பேன்.”
“ஓ வானர வீரனே! உனது நண்பர்களான வானர வீரர்கள்
மீதும், கரடிகளின் மீதும் எனக்கு இப்பொழுதும் பெரும் ஐயம் உள்ளது. இராம, இலக்குமணர் இருவரும் அந்தப் பெரிய வானரங்கள்,
கரடிகள் கொண்ட படையை எவ்விதம் இந்தப் பெருங்கடலைக்
கடந்து உடன் அழைத்து வருவார்கள்?”
“இந்த உலகத்தில் இந்த மாபெரும் கடலைக் கடக்கும்
வலிமை, கருடன், காற்று மற்றும் உன்னிடம் மட்டுமே உள்ளது என்பதை அனைவரும் அறிவார்கள்.”
“செயற்கரிய செயலைச் செய்து முடிப்பதில் நீயே
முதன்மையானவன். ஆகவே கடலைக் கடக்கும் இந்தக்
கடினமான செயலைச் செய்து முடிக்க என்ன வழிமுறை வைத்திருக்கின்றாய்?”
“பகை வீரர்களைத் தனியொருவனாக வென்றழிப்பதில்
வல்லவனான நீ, அவ்விதம் செய்தாயேயானால், இந்த
வெற்றியின் பலன், (புகழ், பெருமை முதலானவை) உன் ஒருவனையே சாரும்.”
“ஆனால், ஸ்ரீராமன் பெரும்படையுடன் இங்கு வந்து,
போர் புரிந்து, இராவணனை வென்று, என்னைத் தன்னுடைய இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்வதே
சாலச் சிறந்ததாகும்.”
“எதிரிகளின் படையை அழிக்க வல்ல ஸ்ரீராமன், தனது
வலிமையின் மூலம், இந்த இலங்கையை வெற்றி கொண்டு, என்னைத் தன்னுடன் அழைத்துச் செல்வதே
அவருக்கு ஏற்ற செயலாக இருக்கும்.”
“ஆகவே, ஸ்ரீராமனின் வீரத்தின் வெளிப்பாட்டிற்கு
உகந்ததான வழிமுறையை யோசித்து அவ்வண்ணமே செயலாற்ற நீர் முயலவேண்டும்.”
பொருள் மிக்கதும், அறத்தின்பாற் பட்டும், கூறப்பட்ட
அந்த வார்த்தைகளைக் கேட்ட அனுமன், எல்லாவற்றையும் பொருத்தி, தான் உரைக்கவேண்டிய மீதிப்
பகுதிகளைச் சொல்லத் தொடங்கினார்.
“தேவீ! வானர, கரடி சேனைகளுக்குத் தலைவரும், வானரங்களில்
உத்தமரும், தெளிந்த சிந்தனையும் உடையவருமான சுக்ரீவன், தங்களை மீட்பதில் உறுதியாக உள்ளார்.”
“வைதேஹீ! அந்த சுக்ரீவன், பல்லாயிரக் கணக்கான
வானர சேனைகள் சூழ்ந்தவண்ணம், அரக்கர்களை அழித்தொழிக்க மிக விரைவில் இங்கு வர இருக்கின்றார்.”
“அவருடைய ஆணைக்கு அடிபணிந்திருக்கும் அந்த வானர
வீரர்கள், மிகவும் திறமைசாலிகள். அஞ்சா நெஞ்சம்
கொண்ட அந்த வலிமை மிக்க வீரர்கள், எண்ணிய காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிக்கும்
ஆற்றல் கொண்டவர்கள்.”
“மேலும், கீழும், பக்கவாட்டிலும் முன்னேறிச்
செல்லும் அவர்களது வேகத்தை யாராலும் தடைசெய்ய முடியாது. அப்படிப்பட்ட அளப்பரிய ஆற்றல்
மிக்க அவர்கள், எவ்வளவு கடினமான செயலாக இருந்தாலும், அதை வெற்றிகரமாக முடிக்காமல் ஓயமாட்டார்கள்.”
“வான் வழியே பயணம் செய்யும் ஆற்றல் கொண்ட மிக
வலிமை வாய்ந்த அவர்கள், கடல்கள், மலைகளால் சூழப்பட்டுள்ள இந்த பூமியைப் பலமுறை சுற்றி
வந்துள்ளார்கள்.”
“சுக்ரீவனின் பெரும் படையில் உள்ள வானரர்கள்,
எனக்கு மேலானவராயும், இணையானவராயும் உள்ளனர்.
என்னுடைய வலிமைக்குக் குறைந்த வானரர்கள் யாரும் அந்தப் படையில் இல்லை.”
“ஒரு நாட்டின் சாமான்யமான மனிதர்களே தூதுவர்களாக
அனுப்பப் படுவார்கள். மிகச் சிறந்த வீரர்கள்
அவ்வாறு அனுப்பப்படுவதில்லை. ஆகவே, ஒரு தூதுவனாக
நான் இங்கு வந்திருப்பதால், அங்கே மிகுந்திருக்கும் வானரர்களிள் வலிமை எப்படிப்பட்டது
என்று கேட்கவும் தகுமோ?”
“ஆகவே தேவீ! நீங்கள் பரிதவிக்க வேண்டாம். உங்கள் துன்பங்கள் தொலைந்து போகட்டும். மிகச் சிறந்த வானர வீரர்கள் ஒரே தாவலில் இலங்கையை
வந்து அடைய இருக்கின்றார்கள்.”
“உதயமாகின்ற சூரிய மற்றும் சந்திரனின் ஒளிக்கு
நிகரானவர்களும், ஆண் சிங்கங்களுக்கு இணையான வலிமை கொண்டவர்களுமான அந்த இருவரும் (ஸ்ரீராமனும்
இலக்குமணனும்) மிகவும் பலம் கொண்ட வானரப் படை சூழ, எனது முதுகின் மீது ஏறிக்கொண்டு
இங்கு உங்களிடம் வர இருக்கின்றார்கள்.”
“மனிதர்களுள் மிகச் சிறந்தவர்களும், மிகவும்
வலிமை மிக்கவர்களும், எப்பொழுதும் இணைபிரியாது சேர்ந்தே இருக்கும் ஸ்ரீராமனும் இலக்குமணனும்
இங்கு வந்து தங்கள் அம்புகளால் இந்த இலங்கை நகரத்தை அழித்து விடுவார்கள்.”
“அழகிய சீதையே! ரகு குலத்தில் தோன்றிய இராகவன்,
இராவணனை அவனது கூட்டத்தாருடன் அழித்து விட்டு, உங்களை அழைத்துக் கொண்டு தன் சொந்த நாட்டிற்குத்
திரும்பிச் செல்ல இருக்கின்றார்.”
“ஆகவே மனதில் கலக்கமின்றி, நல்ல தருணத்தை எதிர்பார்த்திருங்கள். உங்களுக்கு நலம் உண்டாகும். கொழுந்து விட்டு எரியும் நெருப்பைப் போன்ற ஸ்ரீராமனை
இதோ நீங்கள் காணப் போகின்றீர்கள்.”
“இராவணனுடைய மக்கள், அமைச்சர்கள் மற்றும் சுற்றத்தார்கள்
அனைவரும் கொல்லப்பட்டதும், சந்திரனோடு இணையும் ரோஹிணி நக்ஷத்திரம் போல நீங்கள் ஸ்ரீராமனோடு
இணையப் போகின்றீர்கள்.”
“தேவீ! மைதிலி! நீங்கள் விரைவிலேயே இந்தத் துன்பப்
பெருங்கடலின் கரையை அடைந்து விடுவீர்கள். ஸ்ரீராமனால்
இராவணன் கொல்லப்படப் போவதையும் பார்க்கப் போகிறீர்கள்.”
இவ்வாறு பலவிதமாக வைதேஹிக்கு ஆறுதல் வார்த்தைகள்
கூறிய வாயுகுமாரனாகிய அனுமன், தான் புறப்பட இருப்பதை உத்தேசித்து, மீண்டும் வைதேஹியிடம்
இவ்விதம் சொல்லலானார்.
“மிகவும் தைரியம் மிக்கவரும், பகைவர்களை அழிப்பவருமான
ஸ்ரீராமனையும், இலக்குமணனையும் கையில் வில்லை ஏந்தியபடியே, இந்த இலங்கையின் வாயிலில்
நிற்பதை விரைவில் காண்பீர்கள்.”
“சிங்கம், புலி போன்று வலிமை கொண்டவர்களும்,
பற்களையும், நகங்களையும் ஆயுதங்களாக உபயோகிப்பவர்களும், யானை போன்ற வல்லமை கொண்டவர்களுமான
வானர வீரர்கள் ஒன்று கூடி விரைவில் வரப் போகின்றார்கள்.”
“தேவீ! அந்த வானரங்களின் தலைவர்களின் கூட்டமானது,
இலங்கையின் மலய மலைகளின் சிகரங்களில் முழங்குகின்ற மேகக் கூட்டம் போல் ஒன்று கூடி நிற்கப்போவதை
விரைவில் காணப் போகின்றீர்கள்.”
“மன்மதனின் காம பாணத்தால், தன் மர்ம உறுப்பு
பாதிக்கப்பட்ட ஸ்ரீராமன், சிங்கத்தால் காயம்பட்ட யானைபோல ஒரு சுகத்தையும் அறிந்திருக்கவில்லை.”
“தேவீ! தாங்கள் அழுவதை நிறுத்துங்கள். தங்கள் மனதில் சற்றும் அச்சம் வேண்டாம். தன் கணவனான இந்திரனுடன் கூடியிருக்கும் இந்திராணி
போல தாங்கள், தங்கள் கணவருடன் சேர்ந்திருப்பீர்கள்.”
“தேவீ! ஸ்ரீராமனை விடச் சிறந்தவர் யாரும் உண்டா?
இல்லை, இலக்குமணனுக்கு நிகரானவர்தான் உண்டா? நெருப்பும் காற்றும் போன்ற அவ்விரு சகோதரர்களும்
தங்களைக் காப்பாற்ற இருக்கிறார்கள்.”
“தேவீ! அரக்கர்களால் நிர்மாணிக்கப்பட்ட, அதி பயங்கரமான இந்த நாட்டில் நீங்கள் நீண்ட நாட்கள் இருக்க
வேண்டாம். உங்கள் பிரியமான ஸ்ரீராமனின் வரவு தாமதமாகாது. நான் சென்று ஸ்ரீராமனிடம்
தகவல் சொல்லும் காலம் வரைக்கும் தாங்கள் பொறுத்தருள வேண்டும்.”
முப்பத்தொன்பதாவது ஸர்கம்
நிறைவு.


No comments:
Post a Comment