Friday, September 22, 2023

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம். முப்பத்தாறாவது ஸர்கம்.

 

            ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம்.

                            முப்பத்தாறாவது ஸர்கம்.






     பெரும் வீரரான வாயு புத்ர அனுமன், சீதைக்கு மேலும் நம்பிக்கையூட்டும் வண்ணம், இன்னும் கூறலானார்.

     “மரியாதைக்குரிய தேவீ! அறிவிற் சிறந்த இராமனின் தூதுவனான வானரம் நான். இதோ! ஸ்ரீராமனின் பெயர் பொறிக்கப்பட்ட அடையாள மோதிரத்தைப் பாருங்கள்!”

     “தங்களுக்கு நம்பிக்கையூட்டுவதற்காக ஸ்ரீராமனால் என்னிடம் அளிக்கப்பட்ட மோதிரம் இது.  தங்களுக்கு எல்லா நலன்களும் உண்டாகட்டும்.  நீங்கள் அச்சமற்று இருங்கள்.  நீங்கள் அனுபவித்து வரும் துயரங்களுக்கு முடிவு வந்து விட்டது.”





     கணவனின் கை விரலை அலங்கரித்த அந்த ஆபரணத்தை சீதை பார்த்துக் கொண்டே இருந்தாள்.  தன் கணவனே தன்னைக் காண நேரில் வந்து விட்டது போல சீதை அகமகிழ்ந்தாள்.

     ராகுவின் பிடியிலிருந்து மீண்ட நிலவின் ஒளியைப் போல , செவ்வரி யோடிய அகன்ற விழிகளைக் கொண்ட சீதையின் முகம் ஒளிர்ந்தது.

     கணவனிடமிருந்து செய்தியறிந்த இளநங்கையான சீதை, நாணமும் மகிழ்ச்சியும் ஒருங்கே கொண்டாள்.  அனுமனின் நற்செயலால் அகமகிழ்ந்து அவரைப் பாராட்டி மகிழ்வித்தாள்.

     “வானர திலகமே! தனியொருவனாக நீ, இந்த அரக்கர்களின் நகரத்தில் ஊடுருவியுள்ளதால், உனது வீரமும், வலிமையும், அறிவும் மிகவும் மேம்பட்டது.”

     “மிகவும் போற்றத்தகுந்த வலிமையைக் கொண்டிருக்கும் நீ, முதலைகள் போன்ற கொடிய உயிரினங்கள் வசிக்கும் நூறு யோஜனை அகலமுள்ள கடலை, பசுவின் குளம்பினால் உண்டான பள்ளமென்று நினைத்துத் தாண்டிவிட்டாய். உன் செயல் மிகவும் போற்றத் தகுந்தது.”

     “ஒரு காளையை நிகர்த்த வானரமே! நீ சாதாரண வானரமல்ல.  ஏனென்றால் இராவணனை நினைத்து நீ அச்சமோ, ஆச்சர்யமோ கொஞ்சமும் கொள்ளவில்லை.”

     “முற்றும் அறிந்த ஞானியான இராமனின் தூதுவனாக நீ இருக்கும் நிலையில், ஓ! மிகச் சிறந்த வானரமே! நான் உன்னிடம் பேசுவதற்கான எல்லாவித தகுதிகளும் உன்னிடம் உள்ளது.”

     “யாராலும் வெல்ல இயலாத வலிமை கொண்ட இராமன், என்னிடம் அனுப்பும் எந்த வீரனின் வலிமையையும் சோதித்து அறியாமல் இருக்க மாட்டார்.”

     “உண்மையின் வழி நிற்பவரும், அறநெறியாளருமான இராமன் நலமுடன் இருக்கிறார்; சுமித்திரைக்கு மகிழ்ச்சி கொடுக்கும் பெரும் வீரரான இலக்குமணனும் நலமுடன் உள்ளார்; இந்த மகிழ்ச்சியான செய்திகளைக் கேட்க நான் பெரும் நற்பேறு பெற்றுள்ளேன்.”

     “காகுத்த குல திலகமான இராமன், நலமாக இருக்கும் வேளையில், ஊழிக்கால நெருப்பு போல சினம் கொண்டு, கடலால் சூழப்பட்டுள்ள இந்த பூமியை ஏன் எரித்து சாம்பலாக்காமல் உள்ளார்?”

     “இல்லையென்றால் தேவர்களையே வெற்றி கொண்டு தண்டிக்க வல்ல அந்த சகோதரர்கள் இருவரும் இதுவரை அமைதி காப்பது எனது தீ வினையே! என்னுடைய துயரங்களுக்கு இன்னும் முடிவு வரவில்லை என்றே எண்ணுகின்றேன்.”

     “மனிதருள் மேன்மையானவரான ஸ்ரீராமனின் மனதில் சோர்வோ, கலக்கமோ இல்லையல்லவா? மேற்கொண்டு செய்ய வேண்டிய செயல்களுக்கான ஏற்பாடுகளைச் செய்கின்றாரா இல்லையா?”

     “ஸ்ரீராமன் பரிதாபமான நிலையிலோ அல்லது அச்சத்திலோ இல்லையல்லவா? அவர் மோகத்தில் வயப்படவில்லையல்லவா? சிறந்த ஆண்மகனுக்கான செயல்களைச் செய்கின்றார் அல்லவா?”

     “பகைவர்களுக்கு அச்சமூட்டவல்ல ஸ்ரீராமன், நண்பர்களுடன் நட்பு பாராட்டி, சாம, தான வழிகளோடு நின்று விட்டாரா? பகைவர்களை வெற்றி கொள்ள வேண்டி, தான, பேத, தண்டமாகிய மூன்று வழிகளைக் கையாளுகிறாரா?”

     “ஸ்ரீராமன் தான் விரும்பிய வண்ணம் நண்பர்களைப் பெற்றுள்ளாரா? பகைவர்கள் அவரிடம் சரணாகதி அடைந்து அவரிடம் வருகின்றார்களா? நண்பர்களுக்கு உதவிகள் செய்து அவர்களைத் தன்னுடைய நலம் விரும்புபவர்களாக வைத்துள்ளாரா? நண்பர்களால் அவர் நன்மைகள் பெற்றுள்ளாரா?”

     “அரசகுமாரனான ஸ்ரீராமன், தேவர்களை வணங்கி, அவர்களது ஆசிகளைப் பெற விரும்புகிறாரா? தன்னுடைய வலிமை மற்றும் தெய்வங்களின் கருணை இரண்டிலும் அவர் நம்பிக்கை கொண்டுள்ளாரா?”

     “நான் இராமனை விட்டுப் பிரிந்திருப்பதால் அவருக்கு என் மீது அன்பு குறைந்து விட்டதா? என்னுடைய துயரத்திலிருந்து எப்பொழுது என்னை மீட்பார்?”

     “எப்பொழுதும் சுகத்தையே அனுபவிக்கும் தகுதி வாய்ந்தவரான ஸ்ரீராமன் இப்பொழுது துயரத்தை அனுபவிப்பதால் மனம் உடைந்து விட்டாரா?”

     “கெளசல்யா, சுமித்ரா மற்றும் பரதன் ஆகியோரைப் பற்றிய நல்ல செய்திகள் அவருக்குத் தொடர்ந்து கிடைத்து வருகின்றன அல்லவா?”

     “மரியாதைக்குரிய ஸ்ரீராமன் என் காரணமாக அதிக துயரம் கொண்டுள்ளதால் தன்னை மறந்த நிலையில் உள்ளாரா? என்னை இந்தத் துன்பத்திலிருந்து காத்திடுவாரா?”

     “தன்னுடைய சகோதரன் மேல் பேரன்பு கொண்ட பரதன், என்னைக் காப்பாற்ற வேண்டி அமைச்சர்களால் வழி நடத்தப்படும் பயங்கரமான அக்ஷெளஹினி படையை அனுப்புவாரா?” (அக்ஷெளஹிணி = 109350 காலாட்படை வீரர்கள், 65610 குதிரைப் படை வீரர்கள், 21860 யானைப்படை வீரர்கள் அடங்கியது).

     “தங்களுடைய பற்களையும் நகங்களையும் ஆயுதங்களாகப் பயன்படுத்திப் போரிட வல்ல வானர வீரர்களை அழைத்துக்கொண்டு, வானர அரசன் பெருமை மிக்க சுக்ரீவன் என்னை விடுவிக்க வேண்டி, இங்கு வருவதற்கான இன்னலை மேற்கொள்வாரா?”

     “எப்பொழுதும் சுமித்திரைக்கு மகிழ்ச்சியளிக்க வல்ல மிகச் சிறந்த வீரனான இலக்குமணன் அனைத்துவித ஆயுதங்களை உபயோகிப்பதில் கொண்டுள்ள நிபுணத்துவத்தால், தன்னுடைய அம்புகளை மழை போலப் பொழிந்து அரக்கர் கூட்டத்தை அழித்தொழிப்பாரா?”

     “ஸ்ரீராமனின் நெருப்புப் போன்று தகிக்கும் அஸ்திரங்களால், இராவணன் தன் உற்றார், உறவினர் அனைவருடனும் கூடிய விரைவில் கொல்லப்படுவதை நான் காண்பேனா?”

     “தங்கத்தின் பொலிவுடனும், தாமரை மலரின் நறுமணத்துடனும் துலங்கும் ஸ்ரீராமனின் முகமானது, எனது பிரிவாற்றாமையால், நீர் வற்றிய குளத்தின் தாமரை மலரானது வெப்பத்தால் வாடி விடுவது போல வாடி விட வில்லையே?”

     “தர்மத்தை நிலை நாட்டுவதற்காக, அரசுரிமையைத் துறந்து, என்னை அழைத்துக்கொண்டு, கால் நடையாகவே காட்டிற்குச் சென்ற போது சிறிதும் அச்சமோ, துயரமோ கொள்ளாத ஸ்ரீராமனின் உள்ளத்தில், இந்த இக்கட்டான சூழ்நிலையில் தைரியம் மிக்குள்ளதா?”

     “அவருடைய தாய், தந்தை மற்றும் இதர உறவினர்களிடம் அவர் வைத்துள்ள அன்பைக் காட்டிலும் என்னிடத்தில் அதிக அன்பு வைத்துள்ளார்.  ஓ தூதனே! என்னுடைய அன்பிற்குரியவரிடமிருந்து செய்திகள் அறியும் வரை நான் உயிருடன் இருக்க விழைகின்றேன்”.

     சிறப்பு மிக்க வானரரான அனுமனிடம் பொருள் நிறைந்த, இனிய வார்த்தைகளைக் கூறிய சீதை, ஸ்ரீராமனைப் பற்றிய அனுமனின் வார்த்தைகளை மீண்டும் கேட்பதற்காக அமைதியானாள்.

     சீதையின் வார்த்தைகளைக் கேட்ட பெரும் வீரரான அனுமன், தனது கரங்களைத் தன் தலைக்கு மேலே கூப்பிய வண்ணம் இவ்வாறு பேசினார்.

     “தாமரை மலர்களையொத்த விழிகளைக் கொண்ட ஸ்ரீராமன் நீங்கள் இங்கு இலங்கையில் இருப்பதை அறிந்திருக்கவில்லை.  ஆகவேதான், இந்திரன் தன் மனைவியான சசியைக் காப்பாற்றிக் கொண்டு செல்ல முடிந்தது போல், ஸ்ரீராமனால் உங்களை அழைத்துச் செல்ல முடியவில்லை”

     “நான் இங்கிருந்து சென்று இராமனிடம் செய்தியைச் சொல்லிய உடனே வானரர்களும், கரடிகளும் கொண்ட பெரும் சேனையை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி வருவார்.”

     “காகுத்த குல திலகமான ஸ்ரீராமன் தன் அம்பு மழையால், அலைந்து கொண்டிருக்கும் கடலை அசைவற்று நிற்கச் செய்து, அதைக் கடந்து வந்து, இந்த இலங்கை மாநகரத்து அரக்கர்களை இல்லாது ஓட்டி விடுவார்.”

     “அந்த நேரத்தில் ஸ்ரீராமனின் வழியில் மரணமோ, பிற தேவர்களோ அல்லது பெரிய பெரிய வல்லசுரர்களோ யார் குறுக்கிட்டாலும் அவர்கள் அனைவரையும் வதம் செய்து விடுவார்.”

     “தேவீ! தங்களைக் காண இயலாத துயரத்தில் முழுமையாக அவர் மூழ்கியுள்ளார்.  ஆகவே ஸ்ரீராமனின் நிலைமையானது வலிமையான சிங்கத்திடம் சிக்கிய யானையின் தவிப்பிற்கு ஈடானது.”

     “ஓ தேவீ! எங்கள் இருப்பிடங்களான மந்தர மலை, விந்திய மலை, மற்றும் மேரு மலை, தர்துர மலை ஆகிய யாவற்றின் மீதும், அவற்றில் விளையும் கனி, கிழங்குகள் மீதும் ஆணையிட்டுச் சொல்கிறேன்.  விரைவிலேயே அழகிய விழிகளையும், கோவைப் பழம் போன்ற உதடுகளையும், காதுகளில் அழகிய குண்டலங்களையும் கொண்ட, முழு நிலவினையொத்த ஸ்ரீராமனின் முகத்தைக் காண்பீர்கள்.”

     “ஐராவத யானையின் முதுகில் ஏறி அமர்ந்திருக்கும் இந்திரனைப் போல, ப்ரஸ்ரவன மலையின் உச்சியில் அமர்ந்திருக்கும் ஸ்ரீராமனைக் கூடிய விரைவில் காண்பீர்கள்.”

     “புலால் உணவையோ, மது வகைகளையோ ஸ்ரீராமன் ஒரு போதும் தொடுவதில்லை.  நான்கு வேளை உபவாசமிருந்து, ஒரு வேளை மட்டுமே தர்மத்திற்குட்பட்டு, காடுகளில் கிடைக்கும் கனி, கிழங்கு வகைகளை உணவாகக்கொள்கிறார்.”   

      “ஸ்ரீராமனின் எண்ணம் முழுவதும் தங்களின் மீதே நிலை கொண்டிருப்பதால், தன் உடல் மீது அமரும் பூச்சிகள், புழுக்கள், கொசுக்கள், பாம்புகள் போன்றவற்றை அகற்றும் உணர்வே அவருக்கு ஏற்படுவதில்லை.”

     “உங்கள் மீது கொண்ட அன்பினால் எப்பொழுதும் தங்களையே நினைத்துக் கொண்டு உங்களது பிரிவால் பெருந்துயரத்தில் மூழ்கியிருக்கும் ஸ்ரீராமன் வேறு விஷயங்களைப் பற்றி நினைப்பதே இல்லை.”

     “மனிதருள் சிறந்தவரான ஸ்ரீராமன் தங்களது நினைவால் உறக்கம் கொள்வதே இல்லை.  ஒருவேளை உறக்கம் கொண்டாலும், “சீதை! சீதை!” என்ற இனிய வார்த்தைகளைக் கூறிக் கொண்டே விழித்துக் கொண்டு விடுவார்.”

     “பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் பழங்கள், பூக்கள் மற்றும் வேறு எந்த வித பொருட்களைக் கண்டாலும், உங்களை நினைத்து பெருமூச்சு விட்டுக்கொண்டே, ‘அன்பே! அன்பே!’ என்று அழைக்கத் தொடங்கி விடுவார்.”

     “எப்பொழுதும் உங்கள் நினைவால் தவித்து கொண்டிருக்கும் ஸ்ரீராமன், ‘சீதா! சீதா!’ என்றே அழைத்துக் கொண்டிருப்பார்.  உங்களை மீட்டு விட வேண்டும் என்ற உறுதியுடன் கடும் விரதம் மேற்கொண்டுள்ளார்.”

     ஸ்ரீராமனைப்  பற்றிய செய்திகளால் தன் துயரத்தை மறந்த சீதை, ஸ்ரீராமனின் துயரம் அறிந்து அதற்கீடான துயரம் கொண்டாள்.  மழைக்கால இரவில் மேகங்கள் சூழ்ந்த வானத்தில், குளிர் நிலவும் காய்வது போல, இன்பமும் துன்பமும் ஒருங்கே கொண்டாள்.”

                         முப்பத்தாறாவது ஸர்கம் நிறைவுற்றது.

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம். முப்பத்து ஐந்தாவது ஸர்கம்.

 

               ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம்.

                          முப்பத்து ஐந்தாவது ஸர்கம்.

 

     எருதைப் போன்ற வலிமை மிக்க வானரமான அனுமனிடமிருந்து, இராமனைப் பற்றிய வார்த்தைகளைக் கேட்ட வைதேஹி, இனிமையான வார்த்தைகளை, அமைதியாகப் பேசினார்.

     “வானர ஷ்ரேஷ்டனே! உனக்கும் இராமனுக்கும் எவ்விதம் தொடர்பு ஏற்பட்டது? இலக்குமணனை எவ்வகையில் நீ அறிவாய்? மனிதர்களுக்கும் வானரர்களுக்குமான இந்த இணைப்பு எவ்விதம் ஏற்பட்டது?”

     “வானரனே! இராமன் மற்றும் இலக்குமணனின் அங்க அடையாளங்களை மீண்டும் எனக்குச் சொல்வாயாக! அதைக் கேட்பதால், என் மனதினில் சிறிதும் துயரம் ஏற்படாதிருக்கட்டும்!”

     “இராம, இலக்குமணர்களின் உடலமைப்புகளைப் பற்றி எனக்குக் கூறு! அவர்களது தோற்றம் எவ்வாறு உள்ளது? அவர்களது வலிய துடைகளும், தோள்களும் எவ்விதம் உள்ளன?”

     விதேஹ நாட்டரசனின் மகளான வைதேஹியின் இந்த வார்த்தைகளைக் கேட்ட வாயுவின் குமாரனான அனுமன், இராமனின் வடிவத்தை உள்ளது உள்ளபடி வர்ணிக்க ஆரம்பித்தார்.

     “தாமரையின்  இதழொத்த விழிகளைக் கொண்ட சீதா தேவியே! இராமன் மற்றும் இலக்குமணன் ஆகிய இருவரின் அங்க அடையாளங்களைத் தாங்கள் ஏற்கனவே அறிந்திருந்தாலும், அவற்றை நீங்கள் என் வாய் மூலம் கேட்க விரும்புவது நான் செய்த பெரும் பேறாகும்.”

     “அகன்ற விழிகளையுடைய தேவீ! நான் பார்த்து அறிந்த வகையில் இராமன் மற்றும் இலக்குமணன் ஆகியோரின் அங்க அடையாளங்களைக் கூறுகின்றேன். நான் சொல்வதைக் கேளுங்கள்.”

     “ஜனக குமாரியே! முழுநிலவினைப் போன்ற அழகிய முகத்தில், அழகிய தாமரை மலரின் இதழ்கள் போன்ற விழிகளைக் கொண்ட இராமன், பிறந்தது முதலே, கருணையும், சிறந்த பண்பு நலன்களையும் கொண்டிருந்தார்.”

     “சூரியனைப் போன்ற ஒளியையும், பூமியைப் போன்ற பொறுமையையும் கொண்ட இராமன், பிரகஸ்பதிக்கு நிகரான அறிவையும், இந்திரனுக்கு நிகரான புகழையும் பெற்றுள்ளார்.”

     “அவர் தன்னுடைய நாட்டின் மக்களுக்கு மட்டுமல்லாது, அனைத்து உலக மக்களுக்கும் பாதுகாப்பு அளிப்பவர்.  எதிரிகளை அழித்து, நற்பண்புகளும், நல்லறமும் தழைத்தோங்க, அவற்றைப் பாதுகாப்பவர்.”

     “அழகிய பெண்ணே! இந்த உலகத்தின் நான்கு வர்ணங்களைச் சார்ந்த மக்களுக்கும் அவரே பாதுகாவலர்.  அறத்தின் வழி நடப்பதற்கான விதிமுறைகளை வகுத்து, தானும் அவ்வழி நடந்து, மற்றோரையும் அதன் வழி நடக்க வைப்பவர்.”

     “பலராலும் மிகுந்த பக்தியுடன் அவர் வணங்கப்படுகிறார்.  பிரம்மச்சர்ய விரதம் பூண்டு, ஒளி மிகுந்து காணப்படுபவர். அவர் துறவிகளின் கடமைகளை நன்கு மதிக்கத் தெரிந்தவர். நல்வழியில், நற்செயல்களைச் செய்யும் வழி அறிந்தவர்.”

     “அவர் அரசியல் அறிவு முழுதும் பெற்றவர்.  அந்தணர்களை ஆதரித்து அவர்களை வணங்குபவர்.  அறிவு நிறைந்தவர். பண்பு மிக்கவர்.  பணிவு மிக்கவர்.  எதிரிகளுக்குத் துன்பம் தருவதில் தேர்ந்தவர்.”

     “அவர் யஜுர் வேதம் முற்றும் அறிந்தவர்.  வேத விற்பன்னர்களே அவரை வணங்குகிறார்கள்.  நான்கு வேதங்களையும், ஆறு வகையான வேதாங்கங்களையும் (சிக்ஷா, வ்யாகரண, ஜ்யோதிஷ, நிருக்தா, சந்தஸ் மற்றும் கல்ப) கற்றறிந்தவர்.  தனுர் வேதத்திலும் நிபுணத்வம் மிக்கவர்.”

     “அகன்ற தோள்களையும், நீண்ட கைகளையும் கொண்ட இராமன் அழகான முகத்தையும், சங்கு போன்ற கழுத்தையும் கொண்டவர்.  கழுத்தெழும்புகள் சதைப் பற்றோடு அமைந்து, தோள்களுக்கு வட்ட வடிவமான தோற்றத்தைத் தருகின்றன.  சற்று சிவந்த நிறத்தில் இருக்கும் கண்களைக் கொண்ட அவர் இராமன் என்ற பெயரில் மக்களால் அழைக்கப்படுகிறார்.”

     “மத்தளத்தின் ஒலியைப் போன்ற கம்பீரமான குரலைக் கொண்ட அவரது உடல் ஒளியுடன் விளங்கும்.  அவரது புகழ் எல்லா இடங்களிலும் ஓங்கியுள்ளது. ஒன்றுக்கொன்று பொருந்திய உடல் அமைப்பைக் கொண்ட அவர் கரிய நிற மேனியைக் கொண்டவர்.”

     “அவரது உடலில் மூன்று பாகங்கள் உறுதியானவையாக இருக்கும்.  மூன்று அவயவங்கள் நீளமானவை.  மூன்று அவயவங்கள் சம அளவில் இருக்கும்.  மூன்று பகுதிகள் முன்னெடுத்து இருக்கும்.  மூன்று இடங்கள் சிவந்திருக்கும்.  மூன்று பாகங்கள் மென்மையாக இருக்கும். மூன்று பாகங்கள் கம்பீரமானவையாக இருக்கும்.” 

     “வயிற்றிலும் கழுத்திலும் மூன்று ரேகைகளைக் கொண்டவர்.  உள்ளங்கால்கள், மார்புக் காம்புகள் வளைவானவை.  நான்கு பாகங்கள் சிறுத்தவை.  தலையில் மூன்று சுழிகள் இருக்கும்.  கால் கட்டை விரல்களுக்கு அடியிலும் நெற்றியிலும் நான்கு ரேகைகள் உண்டு. நான்கு முழங்கைகள் உயரம் கொண்டவர்.  நான்கு உறுப்புகள் சமமானவை.”

     “அவரது உடலின் பதினான்கு பாகங்கள் நல்ல வடிவத்துடன் உள்ளன.  நான்கு கூர்மையான பற்களைக் கொண்ட அவர், நான்கு விதமான வேகங்களில் (சிங்கம், சிறுத்தை, யானை, எருது) செல்லக் கூடிய ஆற்றல் கொண்டவர்.  கூரிய மூக்கும், கவர்ச்சியான உதடுகளும், தாடையும் கொண்டவர்.  மிருதுவான ஐந்து அங்கங்களையும், நீளமான எட்டுப் பகுதிகளையும் தன் உடலில் கொண்டவர்.”

     “தாமரை மலர் போன்ற பத்து உடல் பாகங்களைக் கொண்ட இராமனின் பத்து அவயவங்கள் சரியான விகிதத்தில் உள்ளன.  செல்வம், புகழ், வீரம் ஆகிய மூன்றும் நிரம்பப் பெற்றவர்.  அவரது தாய் வழி, தந்தை வழி இரண்டும் தூய்மையானவை.  அவரது ஆறு அங்கங்கள் உயரமானவை.  ஒன்பது பாகங்கள் மிருதுவானவை.  ஒரு நாளின் மூன்று பொழுதுகளிலும் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் பின்பற்றுபவர்.”

     “இராமன் சத்தியத்தின் வழியே எப்பொழுதும் நடப்பவர்.  நேர்வழியில் செல்வத்தைச் சேர்த்து, அதை மக்களுக்காக செலவழிப்பவர்.  தன் சூழ்நிலையையும், செயலாற்ற வேண்டிய சரியான தருணத்தையும் நன்கு அறிந்திருக்கும் இராமன், எல்லோரிடமும் இனிமையாகப் பேசுபவர்.”

     “அவரது மாற்றாந்தாயின் வயிற்றில் பிறந்த சகோதரனான இலக்குமணனும் மிகவும் ஒளி பொருந்தியவர்.  அன்பு காட்டும் இயல்பிலும், சிறந்த பண்பு நலன்களைக் கொண்டிருப்பதிலும், மற்றும் உருவ அமைப்பிலும் இராமனையே ஒத்திருப்பார்.”

     “இலக்குமணனின் மேனி பொன்னிறத்திலும், புகழ் பொலியும் இராமனின் மேனி கரிய நிறத்திலும் இருக்கும்.  புலிக்கு நிகரான ஆற்றல் கொண்ட இருவரும் உங்களைக் காண வேண்டி, இந்த பூமி முழுவதும் தேடியபடி வந்தபோது, எங்களைச் சந்தித்தனர்.”

     “இந்தப் பூமியெங்கும் உங்களைத் தேடியபடி வந்த இரு சகோதரர்களும் தன்னுடைய அண்ணனால் நாட்டை விட்டு விரட்டப்பட்ட வானர அரசன் சுக்ரீவனைச் சந்தித்தனர்.”

     “ருஷ்யமுக மலையின் நடுவில் அடர்ந்த மரங்கள் சூழ்ந்திருந்த வனப் பகுதியில் தன் சகோதரனைக் கண்டு அச்சம் கொண்டு அமர்ந்திருந்த சுக்ரீவனைச் சந்தித்தார்கள்.”

     “தன் அண்ணனால் நாட்டை விட்டு துரத்தப்பட்ட, சத்தியத்தின் வழி நடக்கும் வானர அரசனான சுக்ரீவனிடம் நாங்கள் பணிவிடை செய்து வந்தோம்.”  

      “கைகளில் விற்களையும் உடலில் மரவுரியும் தரித்துக்கொண்டு அந்த இரு சகோதரர்களும் ருஷ்யமுக மலையின் அந்த அழகிய வனப் பகுதிக்கு வந்தனர்.  புலிகளுக்கு நிகரான ஆற்றல் கொண்ட அவர்கள் அங்கு வந்ததைப் பார்த்த சிறந்த வானர வீரரான சுக்ரீவன், அச்சமடைந்து, குதித்தோடி, அந்த மலையில் உச்சியில் ஏறிவிட்டார்.”

     “அந்த மலையுச்சியில் அமர்ந்திருந்த வானர அரசனான சுக்ரீவன், அவர்களைச் சந்திக்க உடனடியாக என்னை அனுப்பினார்.”

     “சுக்ரீவனின் ஆணையின் படி, நான் கைகளைக் கூப்பி வணங்கிய வண்ணம், அந்த ஒளி மிக்க, அழகான தோற்றம் கொண்ட , புலிகளைப் போன்று விளங்கிய வீரர்களை நெருங்கினேன்.”

     “என்னுடைய செயல்களினால் மகிழ்ச்சியுற்ற அந்த, ஆற்றலில் காளைகளுக்கு நிகரான வீரர்களை எனது முதுகில் சுமந்து கொண்டு, சுக்ரீவன் இருக்குமிடம் சென்றேன்.”

     “அங்கு, மிகச் சிறந்தவரான சுக்ரீவனிடத்தில், அந்த இருவரைப் பற்றிய உண்மைகளைச் சொல்லி, அறிமுகப்படுத்தினேன்.  அவர்களிடையே நடந்த, நெருக்கமான பேச்சு வார்த்தைகளின் மூலம் அவர்களுக்கிடையே அன்பு மிகுந்த நட்பு உருவானது.”

     “அங்கு வானர அரசனுக்கும், மனித அரசர்களுக்கும் நடந்த பேச்சுவார்த்தையில், தங்கள் வாழ்க்கையில் அதுவரை நடந்தவற்றை, ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்.  அவர்கள் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக் கொண்டனர்.”

     “அந்த சமயத்தில், இலக்குமணனின் அண்ணனாகிய இராமன், ஒரு பெண்ணின் காரணமாக, தன் சகோதரனான வாலியினால் நாட்டை விட்டுத் துரத்தப்பட்ட சுக்ரீவனுக்கு ஆறுதல் கூறினார்.”

     “அப்பொழுது இலக்குமணன், எவ்வித இன்னலும் இன்றி பெருஞ்செயல்களை ஆற்ற வல்ல இராமனுக்குத் தங்கள் பிரிவால் நேர்ந்த துயரத்தைப் பற்றி சுக்ரீவனிடத்தில் சொன்னார்.”

     “இலக்குமணனால் கூறப்பட்ட செய்திகளைக் கேட்ட சுக்ரீவன், கிரஹங்களால் பீடிக்கப்பட்ட சூரியன் போல ஒளியிழந்தார்.”

     “அப்பொழுது, அரக்கனால் நீங்கள் அபகரித்துச் செல்லப்பட்ட போது, உங்கள் உடலை அலங்கரித்துக் கொண்டிருந்த நகைகளை நீங்கள் கீழே வீசியதை எடுத்து வந்து இராமனிடத்தில் மகிழ்ச்சியுடன் காண்பித்தார்கள்.  ஆனால், அவர்களுக்கு நீங்கள் இருக்குமிடம் பற்றித்  தெரியவில்லை.”

     “நான் பொறுக்கியெடுத்த நகைகளையும் அவரிடத்தில் தந்தேன்.  அவற்றைப் பெற்றுக் கொண்டு, தன் மடி மேல் வைத்துக் கொண்டு பார்த்த இராமன், தன் நினைவிழக்கும் நிலையை அடைந்தார்.  அந்த நகைகளை மார்புறத் தழுவிக் கொண்ட, தெய்வீக ஒளி வீசிக்கொண்டிருந்த இராமன் மிகவும் புலம்பினார்.”    

     “அந்த நகைகளைத் திரும்பத் திரும்பப் பார்த்து துன்பத்தில் ஆழ்ந்த தசரத குமாரனான இராமனின் துயரம், தீக்கங்குகளாய்க் கொழுந்து விட்டு எரிந்தது.”

     “தரையில் கிடந்து, மூர்ச்சையடைந்து, வெகு நேரம் துன்பத்தில் தோய்ந்திருந்த இராமனை, பலவிதமான ஆறுதல் வார்த்தைகள் கூறி, மிகவும் சிரமத்துடன் தரையில் இருந்து எழுப்பினேன்.”

     “இலக்குமணனுடன் சேர்ந்து, நீண்ட கரங்களைக் கொண்டிருந்த இராமன், விலைமதிப்பற்ற அந்த நகைகளை, மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருந்து விட்டு சுக்ரீவனிடத்தில் கொடுத்தார்.”

     “சிறந்த பெண்மணியே! தங்களைக் காணாமல் இராகவன், துன்பத்தில் தவித்துக் கொண்டிருந்தார்.  எரிமலையானது எவ்விதம் எப்பொழுதும் நெருப்பைக் கக்கிக் கொண்டிருக்குமோ அவ்விதம், அவர் துயரமாகிய நெருப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.”

     “உறக்கமின்மை, துயரம் மற்றும் கவலை ஆகிய மூன்றும், யாக குண்டத்தின்  புனிதமான மூன்று வித நெருப்புக்களைப் போல இராமனை எரித்துக் கொண்டிருந்தன.”

     “பெரும் நில நடுக்கத்தால் பெருமலையே ஆட்டம் கொள்வது போல, தங்களது பிரிவாற்றாமை இராமனைக் கவலையில் நிலைகுலையச் செய்தது.”

     “ஓ அரச குமாரியே! தங்களைக் காண இயலாத வருத்தத்தில் தோய்ந்திருந்த இராமனால், அழகிய காடுகளையும், ஆறுகளையும், நீரூற்றுகளையும் கடந்து செல்லும்போது, அவற்றின் அழகை ரசித்திருக்க முடியவில்லை.”

     “ஓ ஜனக குமாரியே! பெரிய புலியினைப் போன்ற வலிமை கொண்ட இராமன், தன் உறவினருடனும், நண்பர்களுடனும் வெகு விரைவில் இராவணனைக் கொன்று, தங்களை அடைவார்.”

     “இராமனுக்கும் சுக்ரீவனுக்கும் இடையே ஏற்பட்ட நட்புறவால், ஒருவருக்கொருவர் உதவுவதாக உறுதியளித்துக் கொண்டனர்.  இராமன் வாலியை வதம் செய்து சுக்ரீவனுக்கு உதவுவதாகவும், சுக்ரீவன் தங்களைக் கண்டு பிடிப்பதில் இராமனுக்கு உதவுவதாகவும் தீர்மானித்துக் கொண்டனர்.”

     “பிறகு இரண்டு அரச குமாரர்களும் கிஷ்கிந்தைக்குச் சென்று, வாலியுடன் போரிட்டு அவனைக் கொன்றனர்.”

     “போரில் வெகு விரைவில் வாலியை வெற்றி கொண்ட இராமன், அனைத்து வானர இனங்கள் மற்றும் கரடிகள் கூட்டத்திற்கு, சுக்ரீவனை அரசனாக நியமித்தார்.”

     “இவ்விதம் இராமனுக்கும் சுக்ரீவனுக்குமிடையே ஒப்பந்தம் ஏற்பட்டு, நான் அவர்களது தூதுவனாக இங்கே வந்துள்ளேன். தேவீ!  நான்தான் அனுமன் என்பதை தாங்கள் அறிந்து கொள்ளவேண்டும்.”

     “தனது ராஜ்ஜியத்தைத் திரும்பப் பெற்ற சுக்ரீவன், தனது நாட்டிலிருந்த பெரிய பெரிய வானர வீரர்களை அழைத்து, அவர்களைப் பத்து விதமான திசைகளிலும் தங்களைத் தேடுவதற்காக அனுப்பினார்.”

     “வானர அரசன் சுக்ரீவனின் ஆணைக்கிணங்க, மலையரசனுக்கு ஒப்பான வானர வீரர்கள் பூமியின் எல்லாத் திசைகளிலும் சென்றார்கள்.”

     “சுக்ரீவனின் ஆணையை நிறைவேற்றும் கவலை கொண்டு, வானரர்களாகிய நாங்கள் அனைவரும் இந்த பூமியெங்கும் தேடிக் கொண்டிருக்கின்றோம்.”

     “பெரும் புகழும், வீரமும், புலியினைப் போன்ற வலிமையும் கொண்ட வாலியின் மகனான அங்கதன், மூன்றில் ஒரு பங்கு படையை அழைத்துக் கொண்டு, தங்களைத் தேடிக் கிளம்பினான்.”

     “மிகவும் சிறப்பு மிக்க விந்திய மலைப் பகுதிகளில் தேடியலைந்த போது, எங்கள் பாதையைத் தவற விட்டதால், பல பகல், இரவுப் பொழுதுகள் வீணாக விரயமாகின.”

     “நாங்கள் எங்கள் காரியம் வெற்றியடையுமென்ற நம்பிக்கையை இழந்து விட்டோம்.  எங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த  காலக் கெடுவும் நிறைவடைந்து விட்டதால், வானர அரசன் சுக்ரீவனை நினைத்து அச்சம் ஏற்பட்டிருந்தது.  ஆகவே நாங்கள் அனைவரும் எங்கள் உயிரை விட்டு விடத் தீர்மானித்தோம்.”

     “அந்த மலைப் பகுதியின் கடினமான பகுதிகளிலும், ஆற்றங்கரைகளிலும், நீர்நிலைகள் இருக்கும் பகுதிகளிலும் எவ்வளவு தேடியும் உங்களைக் கண்டு பிடிக்க முடியாததால், நாங்கள் எங்களது உயிரை விட்டு விடத் தயாராக இருந்தோம்.”

     “உயிர் நீங்கும் வரை உண்ணா நோன்பு மேற்கொண்டு நாங்கள் அனைவரும் மலையுச்சியில் சென்றமர்ந்து கொண்டோம்.  எங்களை அந்த நிலையில் கண்ட பெரும் வீரரான அங்கதன் பெரும் துயரக் கடலில் மூழ்கினார்.”

     “ஓ வைதேஹி! தங்களைக் கண்டுபிடிக்க இயலாதது, வாலியின் மரணம், எங்களது சாகும் வரையிலான உண்ணாநோன்பு, ஜடாயு அவர்களின் மரணம் ஆகியவற்றை எண்ணி, இளவரசன் அங்கதனுக்கு பெரும் துன்பம் உண்டானது.”

     “தங்களைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாத ஏமாற்றத்தால், எங்கள் அரசனின் ஆணைக்கிணங்க, நாங்கள் அனைவரும் உயிர்த்தியாகம் செய்ய முடிவு செய்திருக்கும் பொழுது, தெய்வச்செயலாக, எங்கள் காரியம் வெற்றியடைய உதவும் பொருட்டு, கழுகுகளின் அரசனான ஜடாயுவின் சகோதரனான சம்பாதி எனப்படும் கழுகுகளின் அரசன் அங்கு வந்தார்.”

     “தனது சகோதரனான ஜடாயுவின் மரணச்செய்தியைக் கேட்டு கோபமுற்ற அவர்,” சிறந்த வானர வீரர்களே! எனது தம்பியான ஜடாயுவை யார் கொன்றது? எந்த இடத்தில் கொல்லப்பட்டு வீழ்த்தப்பட்டார்? என்று கேட்டார்.”” 

     “தண்டகாரண்ய வனத்தில் தங்களைக் காப்பாற்ற முயன்ற சமயத்தில், கொடிய உருவம் கொண்ட அரக்கனால் ஜடாயு கொல்லப்பட்டு வீழ்த்தப்பட்ட செய்தியை அங்கதன் அவரிம் சொன்னார்.”

     “ஜடாயுவின் மரணச்செய்தி அறிந்த அருணனின் குமாரனான சம்பாதி மிகவும் வருத்தமடைந்தார்.  அழகிய தேவியே! இராவணனின் இருப்பிடத்தில் தாங்கள் இருக்கும் செய்தியை அவர் தான் சொன்னார்.” (காஷ்யபருக்கும் வினதாவிற்கும் பிறந்த மகன்கள் அருணன் மற்றும் கருடன் ஆவர். அருணனின் இரண்டு மகன்கள் சம்பாதி மற்றும் ஜடாயு ஆவர்).

     “சம்பாதியின் பேச்சைக் கேட்ட வானரர்களுக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது.  தங்களைக் காணும் ஆவலில் அங்கதன் முதலான நாங்கள் அனைவரும் விந்திய மலையிலிருந்து புறப்பட்டு, கடலின் வடக்குத் திசையை அடைந்தோம்.  இவ்விதமாக அங்கதன் முதலான வானரத் தலைவர்கள் கடற்கரையை அடைந்தோம்.”

     “எங்கள் முன் பரந்து விரிந்திருந்த கடலைப் பார்த்து எல்லா வானரர்களும் மீண்டும் கவலை கொண்டோம்.  வானர சேனையின் துயரத்தை அறிந்த நான், அவர்களின் அச்சத்தைப் போக்கி, நூறு யோஜனை தூரம் இருந்த அந்தக் கடலைத் தாண்டி, தாவிப் பறந்து இங்கு வந்தேன்.”

     “அரக்கர்களால் நிரம்பி வழியும் இலங்கைக்குள் நான் இரவு நேரத்தில் நுழைந்தேன்.  இராவணனைப் பார்த்த நான், துயரத்தில் மூழ்கியுள்ள தங்களையும் பார்த்தேன்.”

     “குறைகள் ஏதுமற்ற தேவியே! நான் அனைத்து செய்திகளையும் தங்களிடம் தெரிவித்துள்ளேன்.  தேவீ! நான் தசரதனின் மகனான இராமனின் தூதுவன்.  நீங்கள் என்னிடம் பேசலாம்.”

     “இறைவனான ஸ்ரீராமனுக்காக, உங்களைக் காணும் பொருட்டு நான் என்னுடைய பணிகளை மேற்கொண்டுள்ளேன்.  தேவீ! நான் ராஜா சுக்ரீவனின் அமைச்சராவேன்.  அனுமன் என்றழைக்கப்படும் நான் வாயுதேவனின் மகனுமாவேன்.”

     “தேவீ! அனைத்துவிதமான ஆயுதங்களை இயக்கும் ஆற்றல் கொண்ட, காகுஸ்த வம்சத்தின் வழி வந்த, உங்கள் கணவரான இராமன் நலமுடன் உள்ளார்.  தன் தமையனைக் குருவாகப் போற்றி, அவருக்கு அனைத்துவிதமான பணிவிடைகளையும் செய்து வரும் இலக்குமணனும் நலமாக உள்ளார்.”

     “தங்கள் கணவரின் நலனைக் கருதி எப்பொழுது செயலாற்றும் நான், சுக்ரீவனின் ஆணைப்படி, தனியாக இங்கே வந்துள்ளேன்”

     “நினைத்த உருவம் கொள்ளும் வல்லமை மிக்க நான், தங்களைக் கண்டு பிடிப்பதற்காக, யாருடைய உதவியும் இன்றி, தனியாக அலைந்து, தென் திசையில் என்னுடைய பயணத்தை மேற்கொண்டு இங்கு வந்துள்ளேன்.”

     “தாங்கள் காணாமல் போனதால் ஏற்பட்டுள்ள பெருந்துயரத்தில் உழலும் வானர வீரர்களுக்கு, தாங்கள் கிடைத்து விட்ட  பெருஞ் செய்தியைக் கூறி, அவர்களின் அச்சத்தைப் போக்குவேன்.  இது என்னுடைய நற்பேறான தருணமாகும்”.

     “தேவீ! நான் கடலைத் தாண்டி இங்கே வந்தது வீணாகவில்லை.  தங்களை முதன் முதலில் நான் இங்கே பார்த்து விட்டேன் என்னும் புகழ் எனக்குக் கிடைக்கும்.  இது எனது பெரும் நற்பேறாகும்”.

     “பெரும் வீரரான ஸ்ரீராமன், வெகு விரைவில் அசுரர்களின் அரசனான இராவணனை அவனுடைய குமாரர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு அழித்து, தங்களிடம் வந்து சேர்வார்”.

     “விதேஹ குமாரியே! மலைகளில் மிகச் சிறந்த மலையான மால்யவான் என்னும் மலையில் கேசரி என்னும் பெயருள்ள வானரர் வசித்து வந்தார். ஒருநாள் அவர் கோகர்ணம் என்னும் மலைக்குச் சென்றார்.”

     “என்னுடைய தந்தையாரான கேசரி என்னும் அந்தப் பெரிய வானர வீரர், முனிவர்களின் ஆணைப்படி கடற்கரையில் இருந்த அந்த கோகர்ண மலையில், சம்பாசதன் என்னும் அரக்கனை வதம் செய்தார்.”

     “மைதிலி! அந்தப் புனிதமான இடத்தில் வாயு பகவான் மூலமாக நான் பிறந்தேன்.  என்னுடைய செயல்களின் காரணமாக நான் ‘அனுமன்’ என்று அனைவராலும் அழைக்கப்படுகிறேன்.”

     “வைதேஹி! உங்களுக்கு என் மீது நம்பிக்கை உண்டாவதற்காக, உங்கள் கணவரின் பெருமைகளை நான் கூறினேன்.  குற்றங்களேதுமற்ற தேவியே! ஸ்ரீராமன் வெகு விரைவில் உங்களை இங்கிருந்து அழைத்துச் செல்வார்.”

     அனுமனின் கூற்றில் இருந்த உண்மையான செய்திகளின் நம்பகத் தன்மையின் காரணமாக, துயரத்தில் மெலிந்திருந்த சீதை, அனுமனை ஸ்ரீராமனின் தூதுவனாக ஏற்றுக்கொண்டார்.

     அனுமனின் கூற்றுக்களால் சீதைக்குப் பேரானந்தம் ஏற்பட்டது.  மகிழ்ச்சியின் மிகுதியால் சீதையின் வளைந்த இரு கண்களிலிருந்தும் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.

      அந்தச் சமயத்தில், செவ்வரியோடிய அகன்ற வெண்ணிற விழிகளைக் கொண்டிருந்த சீதையின் முகமானது, ராகுவின் பிடியில் இருந்து விடுபட்ட நிலவினைப் போல ஒளிர்ந்தது.

     அனுமன் உண்மையாகவே வானரம் தான் என்பதையும், அரக்கனின் மாயத்தோற்றம் அல்ல என்பதையும் சீதை ஏற்றுக் கொண்டார்.  அழகிய சீதையைப் பார்த்து அனுமன் மேலும் சொன்னார்.

     “மிதிலை குமாரியே! நான் சொல்ல விரும்பியது அனைத்தையும் தங்களிடம் சொல்லி விட்டேன்.  நீங்கள் இப்பொழுது தைரியமாக இருங்கள்.  தங்களுக்கு நான் எவ்விதம் சேவை செய்வது? தாங்கள் விரும்புவது என்ன? உத்தரவு கொடுத்தால் நான் திரும்பிச் செல்வேன்.”

     “சம்பாசதன் என்னும் அரக்கன் என் தந்தையாரால் முனிவர்களின் ஆணைப்படி கொல்லப் பட்டபோது, வாயுபகவான் மூலமாக எனக்குப் பிறவி ஏற்பட்டது.  ஆகவே, மைதிலி! நான் வாயுபகவானின் ஆற்றல் பெற்ற வானரம் ஆவேன்.”

                                      முப்பத்தைந்தாவது ஸர்கம் நிறைவு.

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம். முப்பத்து நான்காவது ஸர்கம்.

 

              ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம்.

                                             முப்பத்து நான்காவது ஸர்கம்.






     துயரத்திற்கு மேல் துயரமாக அனுபவிக்கும் சீதையின் வார்த்தைகளைக் கேட்ட ஸ்ரீஅனுமன், அவருக்கு ஆறுதல் அளிக்கும் வண்ணம் இவ்விதமாகப் பதில் சொன்னார்.

     “தேவீ! இராமனுடைய தூதுவனாகிய நான் அவரிடமிருந்து செய்தி கொண்டு வந்துள்ளேன்.  விதேஹ குமாரியே! இராமன் நலமாக உள்ளார்.  உங்களது நலம் பற்றியும் அறிய விரும்புகிறார்.”

     “தேவீ! வேதங்களைப் பூரணமாக அறிந்தவரும், பிரம்மாஸ்திரத்தின் பயனை அறிந்தவரும், வேதங்களைக் கற்றறிந்தவர்களில் மிகச் சிறந்தவரும், தசரதனின் மகனுமான இராமன், தங்கள் நலனைப் பர்றி அறிய ஆவல் கொண்டுள்ளார்.”

     “தங்களது கணவரைப் பின்பற்றி நடக்கும், மிகவும் வலிமை வாய்ந்த இலக்குமணனும் துயரத்தில் மூழ்கியுள்ளார்.  அவரும் தன் வணக்கத்தை உங்களுக்குத் தெரிவித்தார்”

      மனிதர்களுள் சிங்கத்தைப் போன்று கம்பீரம் கொண்ட இராமன் மற்றும் இலக்குமணனைப் பற்றிய செய்திகளைக் கேட்ட சீதையின் உடல் முழுவதும் அதிக மகிழ்ச்சியினால் சிலிர்த்தது. அவள் அனுமனை நோக்கிப் பேசினாள்.

     “ஒரு மனிதன் நூறு வயதைக் கடந்து வாழும் பொழுதும் அவனுக்கு மகிழ்ச்சி கிட்டும் என்பது உலக வாக்காகும்.  அது என் விஷயத்தில் புனிதமான வாக்கானது இன்று!” என்று சொன்னாள்.

     சீதையும் அனுமனும் சந்தித்துக் கொண்டதில் இருவருக்கும் அற்புதமான மகிழ்ச்சி உண்டாயிற்று.  ஒருவர் மீது ஓருவருக்கு நம்பிக்கை உண்டாக, இருவரும் தங்கள் பேச்சைத் தொடர்ந்தனர்.

     துயரம் மிகுந்த சீதையின் வார்த்தைகளைக் கேட்ட வாயுகுமாரனான அனுமன் சீதைக்கு அருகில் சென்றார்.

     அனுமன் தன்னை நெருங்கி வர வர, சீதைக்கு அது இராவணனோ என்ற சந்தேகம் எழுந்தது.

     மனதில் இவ்வாறான எண்ணம் தோன்றியதும், “ஆஹா! என் மனதில் நினைத்தவற்றை இந்த வானரத்தின் முன்பு பேசியது மிகவும் வெட்கக் கேடான செயல்” என வருந்திய சீதை, இது கண்டிப்பாக மாறுவேடத்தில் வந்துள்ள இராவணனே என்று முடிவு செய்தாள்.

     மாசுமறுவற்ற உடலைக் கொண்டிருந்த சீதை, பிறகு தான் பிடித்துக் கொண்டு நின்றிருந்த அசோக மரத்தின் கிளையை விட்டு விட்டு, சோகமே வடிவாக, அப்படியே தரையில் அமர்ந்து விட்டாள்.

     அப்பொழுது நெடிய புருவங்களைக் கொண்டிருந்த அனுமன், சீதையின் கால்களில் விழுந்து வணங்கினார்.  ஆனாலும் தனக்கு உண்டான அச்சத்தின் காரணமாக, சீதை அனுமன் இருந்த திசையில் பார்க்கவேயில்லை.

     தன்னை வணங்கிய அனுமனைப் பார்த்த, முழுநிலவினைப் போன்ற முகம் கொண்டிருந்த சீதை, பெருமூச்சு விட்டபடி, இனிமையான குரலில் பேசத் தொடங்கினாள்.

     “வானரத்தின் வடிவத்தில் தோன்றிய மாயாவி இராவணனாக நீ இருந்தால், எனக்கு மீண்டும் துயரத்தை உண்டாக்குவது உனக்கு அழகல்ல”.

     “தண்டகாரண்ய வனத்தில் உன் உண்மையான உருவத்தை மறைத்துக் கொண்டு துறவி போல உருமாறி வந்த அதே இராவணன் தான் நீ!”

     “இஷ்டப்படி வடிவம் கொண்டு இரவில் திரியும் அரக்கனே! நான் ஏற்கனவே உபவாசத்தாலும், துயரத்தாலும், கடும் அவல நிலையில் உள்ளேன்.  இது போதாதென்று நீ மீண்டும் எனக்கு இன்னல் விளைவிப்பது அழகல்ல!”

     “அவ்வாறில்லையெனில் என் மனதில் எழுந்துள்ள ஐயம் உண்மையாக இருக்காது என்றே நினைக்கின்றேன்.  ஏனென்றால் உன்னைப் பார்க்கும் பொழுது மனதில் மகிழ்ச்சி உண்டாகிறது!”

     “வானரப் பெருமகனே! நீ உண்மையாகவே இராமனின் தூதுவனாக இங்கு வந்திருந்தால், உனக்கு எல்லா நன்மைகளும் உண்டாகட்டும்.  எனக்கு மிகவும் விருப்பமான இராமனின் கதையை உன்னிடம் கேட்க விரும்பிகிறேன்.”

     “ஏ! வானரமே! என்னுடைய அன்பிற்குரிய இராமனின் பண்பு நலன்களை எனக்கு விரிவாகச் சொல்.  ஓ! மிருதுவானவனே! நீரின் வேகம் எவ்விதம் கரையை அரித்துச் செல்லுமோ, அது போல இராமனைப் பற்றிய பேச்சுக்கள், என் இதயத்தை உருக்கி விடுகின்றன!”

     “நீண்ட காலமாக இங்கு அடைபட்டுக் கிடக்கும் நான் எவ்வளவு இனிமையான கனவு காண்கின்றேன்.  இராமனால் அனுப்பப்பட்டுள்ள வானரத்தை இங்கு நான் என் முன்னே காண்கின்றேனே!”

     “என் கனவில் மட்டுமாவது வீரனான இராமனை, இலக்குமணனுடன் காணும் வாய்ப்புக் கிடைத்தால், என்னுடைய துயரங்கள் ஒரு பொருட்டல்ல.  ஆனால், கனவு கூட என்னிடம் பொறாமை கொண்டு என்னை நெருங்குவதில்லையே!”

     “கனவில் ஒரு வானரத்தைக் கண்டால் நல்லது நடக்காது.  ஆனால் எனக்கு இப்பொழுது நல்ல காலம் போல் தோன்றுகிறது.  ஆகவே, வானரத்தை நான் காண்பது கனவாக இருக்க முடியாது.”

     “அல்லது, என் மனதினுள் எழும் ஆசையின் வடிவமா இது? அல்லது உடலின் வாத மாற்றத்தால் ஏற்பட்ட மனதின் கோளாறோ இது? அல்லது என் சித்தப் பிரமையோ? அல்லது இது கானல் நீரோ?”

     “ஆனால் இது சித்தப் பிரமை கிடையாது.  மாயத் தோற்றமும் கிடையாது. ஏனென்றால் என்னால் இந்த வானரத்தை நன்றாகப் பார்க்கவும், புரிந்து கொள்ளவும் முடிகிறது!”

     இவ்விதம் பலவாறாக சிந்தித்த சீதை, அரக்கர்களின் நினைத்த வடிவம் எடுக்க வல்ல ஆற்றலை எண்ணி, அனுமனாக வந்துள்ளது, அரக்கர்களின் அரசனான இராவணன் தான் என்று முடிவு செய்து கொண்டாள்.”

     “சிற்றிடையளான சீதை, இவ்வாறாக முடிவு செய்த பின்னர், வானரத்துடன் எதுவும் பேசவில்லை.”

     சீதையின் மனவோட்டத்தை அறிந்து கொண்ட வாயு குமாரனான ஸ்ரீஅனுமன், செவிக்கு இன்பம் தரத் தக்க வார்த்தைகளால், சீதைக்கு மகிழ்ச்சி ஏற்படும் வண்ணம் பேசினார்.

     “சூரியனைப் போல ஒளி வீசக் கூடிய இராமன், உலகத்தோரால் விரும்பப்படும் நிலவினைப் போன்றவர் ஆவார்.  குபேரனைப் போல எல்லா உலகிற்கும் அரசனாவார்.”

     “இராமன், பெரும் புகழ் கொண்ட கடவுளான விஷ்ணுவைப் போன்று பேராற்றல் மிக்கவர்.  அவர் பிருஹஸ்பதியைப் போல உண்மையைப் பேசுபவரும், இனிமையாகப் பேசுபவரும் ஆவார்.”

     “அழகிலும், பெரும் பேறு பெற்றதிலும், ஒளிவீசும் தன்மையிலும் அவர் மன்மதனுக்கு நிகரானவர்.  இடமறிந்து சினம் கொள்ளும் அவர்,பகைவரைத் தண்டிப்பவர். அவர் தேரைச்  செலுத்துவதில் மிகச் சிறந்த ஆற்றல் மிக்கவர்.”

     “இராமனின் அகன்ற தோள்களின் குளிர்ந்த நிழலில் இவ்வுலகின் உயிர்கள் ஓய்வெடுக்கின்றன.  மிருகங்களின் வடிவமெடுக்கவல்ல, இரவில் உலவும் அரக்கன் ஒருவன், இராமனைக் குடிலிலிருந்து அப்புறப்படுத்திவிட்டு, யாரும் துணையில்லாத உங்களை அபகரித்து வந்துள்ளான்.  இந்தக் கொடுஞ் செயலுக்கான விளைவை அவன் அனுபவிக்கப் போவதை நீங்கள் பார்ப்பீர்கள்.”

     “பேராற்றல் மிக்க இராமன், போர்க்களத்தில், சினங்கொண்டு எய்யும் தீக்கங்குளாய் ஒளிரும் அம்புகளால் விரைவில்  இராவணனை, அழிப்பார்.”

     “இராமனால் அனுப்பப்பட்ட தூதனாக நான் உங்கள் முன் நிற்கின்றேன்.  உங்களைப் பிரிந்து பெருந்துயரத்தில் உள்ள இராமன், தங்களின் நலத்தைப் பற்றி அறிய விரும்புகிறார்.”

     “சுமித்ரையின் குமாரனும், மிக நீண்ட தோள்களும் பெருஞ்சிறப்பும் மிக்க இலக்குமணன் தங்களுக்குத்தன் வணக்கங்களைக் கூறி, தங்கள் நலம் பற்றி விசாரிக்கின்றார்.”

     “தேவீ! சிறந்த வானரங்களுக்கெல்லாம் அரசனும், சுக்ரீவன் என்னும் பேர் கொண்டவருமான இராமனின் நண்பர் தங்களின் நலம் பற்றி அறிய விரும்புகிறார்.  இராமன், இலக்குமணன் மற்றும் சுக்ரீவன் யாவரும் தினந்தோரும் தங்களை நினைத்த வண்ணம் உள்ளனர்.”

     “விதேஹ நாட்டுக் குலமகளே! இவ்வளவு அரக்கியரின் பிடியில் நீங்கள் துயருற்றாலும், உயிருடன் இருப்பது பெரும் பேறாகும்.  இனி விரைவிலேயே, தேரோட்டுவதில் வல்லவரான இராமனை, இலக்குமணனுடன் இங்கு சந்திப்பீர்கள்.”

     “கோடிக்கணக்கான வானரங்கள் புடைசூழ வரும், எல்லையற்ற புகழ் மிக்க  சுக்ரீவனும் கூடவே உங்களைச் சந்திப்பார்.  அனுமன் என்னும் பெயருள்ள  வானரமான நான், சுக்ரீவனின் அமைச்சராக உள்ளேன்.”

     “பெருங்கடலைத் தாவிப் பறந்து, கடந்து வந்து, நான் இந்த இலங்கை நகருக்குள் நுழைந்துள்ளேன்.  கொடிய இராவணின் தலையில் காலால் மிதித்து நான் இங்கு வந்துள்ளேன்.”

     “என்னுடைய பெரும் வலிமையை நம்பி, தங்களைக் காண நான் இங்கு வந்துள்ளேன்.  தேவீ! நீங்கள் நினைப்பது போல நான் இல்லை.  உங்கள் மனதினில் உள்ள ஐயங்களைக் களைந்து விட்டு, நான் சொல்லும் வார்த்தைகளை நம்புங்கள்.”

 

                                 முப்பத்தி நான்காவது ஸர்கம் நிறைவு.

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம். முப்பத்திமூன்றாவது ஸர்கம்

 

             ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம்.

                         முப்பத்திமூன்றாவது ஸர்கம்.

     பவழம் போன்ற சிவந்த நிறத்தில் முகத்தைக் கொண்டிருந்த வாயு குமாரனான ஸ்ரீஅனுமன், இரக்கம் மேலிட, அந்த அசோக மரத்திலிருந்து கீழிறங்கி, சீதைக்கு அருகில் சென்று பணிவுடன், கைகளைத் தலைக்கு மேல் குவித்து அவரை வணங்கினார். பிறகு சீதையிடம் இனிமையான குரலில் பேசினார்.

     “தாமரை மலரின் இதழ் போன்ற கண்களை உடைய தேவீ! கசங்கிய பட்டாடை உடுத்திக் கொண்டு, இந்த மரக் கிளையைப் பிடித்தவாறு நின்று கொண்டிருக்கும் தாங்கள் யார்?”

     “தாமரை மலரின் இதழ்களிலிருந்து வடியும் நீர் போல, உங்கள் கண்களிலிருந்து கண்ணீர் பெருகுவதன் காரணம் யாது?”

     “ஒளியுடன் விளங்கும் தேவீ! தாங்கள் தேவ கன்னிகையா?  அல்லது அசுர, நாக, ராக்ஷஸ, கந்தர்வ இனத்தைச் சேர்ந்தவரா? இல்லையென்றால் யட்சர்கள் அல்லது கின்னரர்கள் இனத்தைச் சேர்ந்தவரா?”

     “அழகிய பெண்ணே! நீங்கள் ருத்ரர்கள், மருதர்கள்(வாயு) அல்லது வசுக்கள் இனத்தைச் சேர்ந்தவரா? சிறந்த பெண்மணியே! உங்களைப் பார்க்கும் போது நீங்கள் தேவ லோகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.”

     “நீங்கள் தேவ லோகத்தில் உள்ள சந்திரனை விட்டுப் பிரிந்து கீழே விழுந்த, நட்சத்திரங்களுள் மிகச் சிறந்ததும், சிறந்த பண்புகளை உடையதுமான ரோகிணி தேவியா?”

     “கரிய விழிகளைக் கொண்ட தேவி! கோபம் கொண்டோ அல்லது காதலினாலோ, கணவரான வசிஷ்டரைக் கோபம் கொள்ளச் செய்து விட்டு, இங்கே வந்திருக்கும் கற்புக்கரசியான அருந்ததி தேவியோ நீங்கள்?”

     “அழகிய இடை கொண்ட தேவீ! ஒருவேளை, உங்கள் மகன், தந்தை, சகோதரன் அல்லது கணவன் போன்ற யாரும் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து வேறு உலகம் சென்று விட்டார்களோ? அதற்காகத் துயரம் கொண்டுள்ளீர்களோ?”

     “நீங்கள் அழுது கொண்டிருப்பதாலும், பெருமூச்சு விட்டுக் கொண்டிருப்பதாலும், தங்கள் கால்கள் நிலத்தைத் தொட்டுக்கொண்டிருப்பதாலும் தாங்கள் தேவ கன்னிகையாக இருக்க முடியாது”.

     “தங்களது நடை, உடை, பாவனைகளையும், அழகிய உடல் தோற்றத்தையும் வைத்துப் பார்த்தால், நீங்கள் ஒரு பேரரசரின் மனைவியாகவோ அல்லது மகளாகவோ இருக்கவேண்டும் என்றே என் மனதில் தோன்றுகிறது.” 

     “தண்டகாரண்ய வனத்திலிருந்து இராவணனால் வலிந்து அபகரிக்கப்பட்ட சீதையாக நீங்கள் இருப்பீர்களேயானால், உங்களுக்கு எல்லா நன்மைகளும் உண்டாகட்டும்.  நீங்கள் உங்களைப் பற்றிய அனைத்து விவரங்களையும் கூறுங்கள்.  அவற்றைக் கேட்க நான் ஆவலாக உள்ளேன்.”

     “துயரத்தின் காரணமாக தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அவல நிலையும், உங்களது உன்னதமான தோற்றப் பொலிவும், ஒரு தபஸ்வினியின் உடையலங்காரமும், நீங்கள் கண்டிப்பாக ஸ்ரீராமனின் மனைவியாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.”

       இராமனைப் புகழ்ந்து பேசிய அனுமனின் வார்த்தைகளைக் கேட்ட சீதை, பெரு மகிழ்ச்சி கொண்டாள்.  ஆகவே, மரத்தைப் பிடித்தபடி நின்று கொண்டிருந்த அனுமனிடம் இவ்விதம் பேசினாள்.

     “சீர்மிகு வானரமே! நான், இந்தப் பூமியில் உள்ள அரசர்களிலெல்லாம் முதன்மையானவரும், பெரும் புகழ் வாய்ந்தவரும், பகைவர்களின் படைகளை முறியடிப்பதில் வல்லவருமான பேரரசர் தசரதனின் மருமகள் ஆவேன்.”

     “நான் விதேஹ நாட்டின் பேரரசரான ஜனகனின் மகள் ஆவேன். மிகச் சிறந்த அறிவாளியான இராமனின் மனைவி நான். என் பெயர் சீதா ஆகும்.”

     “அயோத்தியில் இராமனுடைய அந்தப்புரத்தில் பன்னிரெண்டு வருடங்கள் இந்த உலகத்திற்குண்டான எல்லாவிதமான இன்பங்களையும் அனுபவித்தேன். என்னுடைய எல்லா விருப்பங்களும் எப்பொழுதும் நிறைவேற்றப்பட்டன.”

     “அப்பொழுது, பதிமூன்றாவது வருடத்தில், ராஜா தசரதன், தன் குல குருவான வசிட்ட முனிவருடன் கலந்து, இஷ்வாகு வம்சத்தின் அணிகலனாகத் திகழும் இராமனுக்கு பட்டாபிஷேகம் செய்ய முடிவெடுத்தார்கள்.”

     “இராமனின் பட்டாபிஷேகத்திற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்த போது, தசரத ராஜாவின் மனைவியான கைகேயி, “இனி நான் நீர் அருந்த மாட்டேன்! தினம் உண்ணும் உணவை உண்ண மாட்டேன்! இராமனின் பட்டாபிஷேகம் நடக்கும் நாளே என் வாழ்வின் இறுதி நாளாகும்!      அரசர்களுக்கெல்லாம் அரசனே! நீங்கள் மகிழ்வுடன் எனக்கு அளித்திருந்த வரங்கள் பொய்யாகப் போக வேண்டாமெனில், இராகவன் கானகத்திற்குச் செல்ல வேண்டும்” என்று கூறினாள்.

     “சத்தியத்திற்குக் கட்டுப்பட்ட பேரரசருக்கு, கைகேயிக்குத் தான் அளித்த வரங்கள் நினைவிற்கு வந்தன.  கைகேயியின் கொடூரமான, அன்பற்ற வார்த்தைகளைக் கேட்ட தசரத மன்னர்  மூர்ச்சையடைந்தார்.”

     “என்றுமே உண்மையின் வழி நிற்கும் தசரத மன்னர், துயரம் மேலோங்க, கண்களில் நீர் சொரிய, தன் மூத்த குமாரனான இராமனிடமிருந்து, ராஜ்ஜியத்தைத் திரும்பக் கேட்டார்.”

     “சிறந்த பண்பாளரான இராமன், பட்டாபிஷேகத்தை விட தன் தந்தையின் சொல் கேட்பதே மிகவும் இன்பமானது என்று கருதினார்.  ஆகவே தந்தையின் வார்த்தைகளை மனதினுள் ஏற்றுக்கொண்டு, வாய் மொழியாகவும் ஒப்புக் கொண்டார்.”

     “சத்தியத்தைக் கடைப் பிடிக்கும் வீரரான இராமன், கேட்டதைக் கொடுக்க வல்லவர்.  ஆனால், எதையும் திரும்பப் பெற மாட்டார்.  எப்பொழுதும் உண்மையையே பேசும் அவர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய சூழல் வந்தாலும், பொய் பேச மாட்டார்.”

     “பெரும் புகழ்மிக்க இராமன், தன் உயர்ந்த மேலாடைகளைத் துறந்தார்.  மனதினால் பேரரசைத் துறந்தார்.  என்னைத் தன்னுடைய தாயிடம் ஒப்புவித்தார்.”

     “ஆனால் நான் விரைந்து, அவருக்கு முன்பாகவே கானகம் செல்லத் தயாராக இருந்தேன்.  ஏனென்றால் இராமனைப் பிரிந்து சுவர்க்கத்தில் இருந்தாலும் எனக்கு அது பிடிக்காது.”

     “தன்னுடைய நண்பர்களுக்கெல்லாம் மகிழ்ச்சி அளிக்கவல்ல, சுமித்திரையின் மகனான இலக்குமணன், இராமனுடன் தானும் செல்வதற்காக, அவருக்கு முன்பே மரவுரியணிந்து, தயாராக நின்றார்.”

     “இவ்வாறாக எங்களுக்கெல்லாம் தலைவரான தசரதனின் ஆணைப்படி, நாங்கள் மூவரும், திட மனத்துடன், நல் விரதம் பூண்டு, இதுவரை கண்டிராத அடர்ந்த காட்டிற்குள் நுழைந்தோம்.”

     “தண்டகாரண்ய வனத்தில் நாங்கள் தங்கியிருந்த பொழுது, ஒளிமிக்க இராமனின் மனைவியாகிய சீதையாகிய என்னை, கொடிய அரக்கனான இராவணன் அபகரித்து, இங்கே கொண்டு வந்து விட்டான்.”

     “இராவணன் எனக்கு உயிர் வாழ இரண்டு மாத காலம் கெடு விதித்துள்ளான்.  அந்த இரண்டு மாதங்கள் கழிந்த பின்னர், நான் உயிரை விட்டு விடுவேன்.”

           இவ்விதம் அனுமனிடன் சீதை உரைத்தாள்.

 

                          முப்பத்துமூன்றாவது ஸர்கம் நிறைவு.

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம். முப்பத்திரெண்டாவது ஸர்கம்.

 

            ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம்.

                                              முப்பத்திரெண்டாவது ஸர்கம்.

     அப்பொழுது, அடர்ந்த மரக்கிளைகளுக்கிடையே, வெண்மையான உடை தரித்து, மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் மிகுந்த ஒளி வீசிக்கொண்டு ஸ்ரீஅனுமன், மறைந்திருப்பதை சீதை கண்டாள்.

     அசோக மரத்தின் ஒரு பூங்கொத்து போல ஒளி வீசிக்கொண்டு, மனதிற்கினிய வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருந்த அந்த வானரம், கிளைகளுக்கு நடுவே அமர்ந்திருப்பதை அவள் கண்டாள்.  அதனுடைய கண்கள், உருகிய தங்கம் போல பளீரென்று மின்னிக் கொண்டிருந்தன.

     மரத்தின் கிளைகளுக்கிடையே பணிவுடன் அமர்ந்திருந்த அந்த சிறப்பு மிக்க வானரத்தைக் கண்ட சீதை, மிகவும் ஆச்சர்யம் அடைந்தாள். அளவு கடந்த வியப்பெய்திய நிலையில், அவளின் மனத்தினுள் எண்ணங்கள் எழுந்தன.

     “ஓ! அந்த வானர உருவமே பார்ப்பதற்கு அச்சமூட்டுவது போல உள்ளது. அதைப் பிடிப்பதும் மிகவும் கடினம். அதைப் பார்ப்பதற்கு மனதில் துணிவு இல்லை.” இவ்விதம் நினைத்த சீதை, அச்சத்தில் மயக்கம் கொண்டவளானாள்.

     அழகிய சீதை, அதிக அச்சம் கொண்டு, ஓ ராமா! ஓ லக்ஷ்மணா! என்று துயரம் மேலிட புலம்பலானாள்.

     மிகவும் மெல்லிய குரலில் அழுதுகொண்டிருந்த சீதை, அந்த சிறப்பு மிக்க வானரமானது தன் அருகே வந்து பணிவுடன் அமர்ந்திருக்கக் கண்டார்.  பெண்ணரசியான சீதை, “நான் காண்பது கனவா?” என்று யோசித்தாள்.

     மீண்டும் அங்கு நோக்கிய சீதை, வானர அரசனனின் சொல்படி நடக்கும், மிகச் சிறந்த அறிவாற்றலும், சிறந்த பணிவும் கொண்ட வளைந்த முகத்தைக் கொண்டிருந்த வாயுவின் குமாரனாகிய ஸ்ரீஅனுமனை அங்கு கண்டாள்.

     ஸ்ரீஅனுமனைப் பார்த்த உடனேயே சீதை, புலன்கள் செயலிழக்க, மரணித்துவிட்ட நிலையை அடைந்தாள்.  அகன்ற விழிகளைக் கொண்ட சீதை, நெடு நேரத்திற்குப் பிறகு, நினைவு திரும்ப, மீண்டும் எண்ணத் தொடங்கினாள்.

     “நான் இன்று என்னுடைய கனவில், அழகற்ற வானரத்தைக் கண்டுள்ளேன்.  அது நல்லதல்ல என்று சாத்திரங்கள் சொல்கின்றன.  இராமனுக்கும், இலக்குமணனுக்கும், என் தந்தை ஜனகருக்கும் இது நல்லது செய்யட்டும் என்று விரும்புகிறேன்.”

     “ஆனால், இது கனவாக இருக்க முடியாது.  துயரத்திலும் வருத்தத்திலும் உள்ள எனக்குத்தான் உறக்கமே இல்லையே! முழு நிலவினைப் போல முகம் கொண்ட ஸ்ரீராமனைப் பிரிந்துவிட்ட பின்னர் எனக்கு இன்பம் என்ற பேச்சிற்கே இடமில்லை!  

  “எனது மனம் எப்பொழுதுமே “ராம! ராம!” என்று நினைத்துக் கொண்டிருப்பதாலும், எனது வாய் ராம நாமத்தை ஜபித்துக் கொண்டிருப்பதாலும், இது போன்ற இராமனைப் பற்றிய கதைகளைப் பார்க்கவும், கேட்கவும் செய்கிறேன்.

     “எனது எண்ணம் முழுவதும் இராமனைப் பற்றியே இருப்பதாலும், இராமனைச் சந்திக்க வேண்டும் என்ற நினைவு வாட்டிக் கொண்டிருப்பதாலும், எங்கு பார்த்தாலும் இராமனைப் பார்ப்பது போலவும், இராமனின் கதையைக் கேட்பது போலவும் தோன்றுகிறது.”

     “மனதினில் நினைத்துக் கொண்டிருப்பதாலேயே இது போன்று நிகழ்கின்றன என்ற எண்ணம் ஏற்பட்டாலும், எனது அறிவு, இது போன்ற நிகழ்வுகளைச் சரியா, தவறா என்று விவாதிக்கின்றது.  மனதினில் உண்டாகும் எண்ணங்களுக்கு எந்த வடிவமும் இல்லை.  ஆனால் முழு உருவத்துடன் இருக்கும் வானரத்தை நான் என் கண்களால் காண்கின்றேனே? அது என்னிடம் பேசவும் செய்கின்றதே?”

     “பிரம்மா, பிரஹஸ்பதி, இந்திரன் மற்றும் அக்னி தேவன் யாவரையும் நான் வணங்குகிறேன்.  இந்த வானரம் என் முன்னே சொன்ன வார்த்தைகள் யாவும் உண்மையைத் தவிர வேறொன்றாக இருக்கக் கூடாது.”

 

                                   முப்பத்திரெண்டாவது ஸர்கம் நிறைவு.

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...