ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம்.
முப்பத்து
ஐந்தாவது ஸர்கம்.
எருதைப் போன்ற
வலிமை மிக்க வானரமான அனுமனிடமிருந்து, இராமனைப் பற்றிய வார்த்தைகளைக் கேட்ட வைதேஹி,
இனிமையான வார்த்தைகளை, அமைதியாகப் பேசினார்.
“வானர ஷ்ரேஷ்டனே!
உனக்கும் இராமனுக்கும் எவ்விதம் தொடர்பு ஏற்பட்டது? இலக்குமணனை எவ்வகையில் நீ அறிவாய்?
மனிதர்களுக்கும் வானரர்களுக்குமான இந்த இணைப்பு எவ்விதம் ஏற்பட்டது?”
“வானரனே! இராமன்
மற்றும் இலக்குமணனின் அங்க அடையாளங்களை மீண்டும் எனக்குச் சொல்வாயாக! அதைக் கேட்பதால்,
என் மனதினில் சிறிதும் துயரம் ஏற்படாதிருக்கட்டும்!”
“இராம, இலக்குமணர்களின்
உடலமைப்புகளைப் பற்றி எனக்குக் கூறு! அவர்களது தோற்றம் எவ்வாறு உள்ளது? அவர்களது வலிய
துடைகளும், தோள்களும் எவ்விதம் உள்ளன?”
விதேஹ நாட்டரசனின்
மகளான வைதேஹியின் இந்த வார்த்தைகளைக் கேட்ட வாயுவின் குமாரனான அனுமன், இராமனின் வடிவத்தை
உள்ளது உள்ளபடி வர்ணிக்க ஆரம்பித்தார்.
“தாமரையின் இதழொத்த விழிகளைக் கொண்ட சீதா தேவியே! இராமன் மற்றும்
இலக்குமணன் ஆகிய இருவரின் அங்க அடையாளங்களைத் தாங்கள் ஏற்கனவே அறிந்திருந்தாலும், அவற்றை
நீங்கள் என் வாய் மூலம் கேட்க விரும்புவது நான் செய்த பெரும் பேறாகும்.”
“அகன்ற விழிகளையுடைய
தேவீ! நான் பார்த்து அறிந்த வகையில் இராமன் மற்றும் இலக்குமணன் ஆகியோரின் அங்க அடையாளங்களைக்
கூறுகின்றேன். நான் சொல்வதைக் கேளுங்கள்.”
“ஜனக குமாரியே!
முழுநிலவினைப் போன்ற அழகிய முகத்தில், அழகிய தாமரை மலரின் இதழ்கள் போன்ற விழிகளைக்
கொண்ட இராமன், பிறந்தது முதலே, கருணையும், சிறந்த பண்பு நலன்களையும் கொண்டிருந்தார்.”
“சூரியனைப் போன்ற
ஒளியையும், பூமியைப் போன்ற பொறுமையையும் கொண்ட இராமன், பிரகஸ்பதிக்கு நிகரான அறிவையும்,
இந்திரனுக்கு நிகரான புகழையும் பெற்றுள்ளார்.”
“அவர் தன்னுடைய
நாட்டின் மக்களுக்கு மட்டுமல்லாது, அனைத்து உலக மக்களுக்கும் பாதுகாப்பு அளிப்பவர். எதிரிகளை அழித்து, நற்பண்புகளும், நல்லறமும் தழைத்தோங்க,
அவற்றைப் பாதுகாப்பவர்.”
“அழகிய பெண்ணே!
இந்த உலகத்தின் நான்கு வர்ணங்களைச் சார்ந்த மக்களுக்கும் அவரே பாதுகாவலர். அறத்தின் வழி நடப்பதற்கான விதிமுறைகளை வகுத்து,
தானும் அவ்வழி நடந்து, மற்றோரையும் அதன் வழி நடக்க வைப்பவர்.”
“பலராலும் மிகுந்த
பக்தியுடன் அவர் வணங்கப்படுகிறார். பிரம்மச்சர்ய
விரதம் பூண்டு, ஒளி மிகுந்து காணப்படுபவர். அவர் துறவிகளின் கடமைகளை நன்கு மதிக்கத்
தெரிந்தவர். நல்வழியில், நற்செயல்களைச் செய்யும் வழி அறிந்தவர்.”
“அவர் அரசியல்
அறிவு முழுதும் பெற்றவர். அந்தணர்களை ஆதரித்து
அவர்களை வணங்குபவர். அறிவு நிறைந்தவர். பண்பு
மிக்கவர். பணிவு மிக்கவர். எதிரிகளுக்குத் துன்பம் தருவதில் தேர்ந்தவர்.”
“அவர் யஜுர்
வேதம் முற்றும் அறிந்தவர். வேத விற்பன்னர்களே
அவரை வணங்குகிறார்கள். நான்கு வேதங்களையும்,
ஆறு வகையான வேதாங்கங்களையும் (சிக்ஷா, வ்யாகரண, ஜ்யோதிஷ, நிருக்தா, சந்தஸ் மற்றும்
கல்ப) கற்றறிந்தவர். தனுர் வேதத்திலும் நிபுணத்வம்
மிக்கவர்.”
“அகன்ற தோள்களையும்,
நீண்ட கைகளையும் கொண்ட இராமன் அழகான முகத்தையும், சங்கு போன்ற கழுத்தையும் கொண்டவர். கழுத்தெழும்புகள் சதைப் பற்றோடு அமைந்து, தோள்களுக்கு
வட்ட வடிவமான தோற்றத்தைத் தருகின்றன. சற்று
சிவந்த நிறத்தில் இருக்கும் கண்களைக் கொண்ட அவர் இராமன் என்ற பெயரில் மக்களால் அழைக்கப்படுகிறார்.”
“மத்தளத்தின்
ஒலியைப் போன்ற கம்பீரமான குரலைக் கொண்ட அவரது உடல் ஒளியுடன் விளங்கும். அவரது புகழ் எல்லா இடங்களிலும் ஓங்கியுள்ளது. ஒன்றுக்கொன்று
பொருந்திய உடல் அமைப்பைக் கொண்ட அவர் கரிய நிற மேனியைக் கொண்டவர்.”
“அவரது உடலில் மூன்று பாகங்கள் உறுதியானவையாக இருக்கும். மூன்று அவயவங்கள் நீளமானவை. மூன்று அவயவங்கள் சம அளவில் இருக்கும். மூன்று பகுதிகள் முன்னெடுத்து இருக்கும். மூன்று இடங்கள் சிவந்திருக்கும். மூன்று பாகங்கள் மென்மையாக இருக்கும். மூன்று பாகங்கள் கம்பீரமானவையாக இருக்கும்.”
“வயிற்றிலும்
கழுத்திலும் மூன்று ரேகைகளைக் கொண்டவர். உள்ளங்கால்கள்,
மார்புக் காம்புகள் வளைவானவை. நான்கு பாகங்கள்
சிறுத்தவை. தலையில் மூன்று சுழிகள் இருக்கும். கால் கட்டை விரல்களுக்கு அடியிலும் நெற்றியிலும்
நான்கு ரேகைகள் உண்டு. நான்கு முழங்கைகள் உயரம் கொண்டவர். நான்கு உறுப்புகள் சமமானவை.”
“அவரது உடலின்
பதினான்கு பாகங்கள் நல்ல வடிவத்துடன் உள்ளன.
நான்கு கூர்மையான பற்களைக் கொண்ட அவர், நான்கு விதமான வேகங்களில் (சிங்கம்,
சிறுத்தை, யானை, எருது) செல்லக் கூடிய ஆற்றல் கொண்டவர். கூரிய மூக்கும், கவர்ச்சியான உதடுகளும், தாடையும்
கொண்டவர். மிருதுவான ஐந்து அங்கங்களையும்,
நீளமான எட்டுப் பகுதிகளையும் தன் உடலில் கொண்டவர்.”
“தாமரை மலர்
போன்ற பத்து உடல் பாகங்களைக் கொண்ட இராமனின் பத்து அவயவங்கள் சரியான விகிதத்தில் உள்ளன. செல்வம், புகழ், வீரம் ஆகிய மூன்றும் நிரம்பப் பெற்றவர். அவரது தாய் வழி, தந்தை வழி இரண்டும் தூய்மையானவை. அவரது ஆறு அங்கங்கள் உயரமானவை. ஒன்பது பாகங்கள் மிருதுவானவை. ஒரு நாளின் மூன்று பொழுதுகளிலும் அறம், பொருள்,
இன்பம் ஆகிய மூன்றையும் பின்பற்றுபவர்.”
“இராமன் சத்தியத்தின்
வழியே எப்பொழுதும் நடப்பவர். நேர்வழியில் செல்வத்தைச்
சேர்த்து, அதை மக்களுக்காக செலவழிப்பவர். தன்
சூழ்நிலையையும், செயலாற்ற வேண்டிய சரியான தருணத்தையும் நன்கு அறிந்திருக்கும் இராமன்,
எல்லோரிடமும் இனிமையாகப் பேசுபவர்.”
“அவரது மாற்றாந்தாயின்
வயிற்றில் பிறந்த சகோதரனான இலக்குமணனும் மிகவும் ஒளி பொருந்தியவர். அன்பு காட்டும் இயல்பிலும், சிறந்த பண்பு நலன்களைக்
கொண்டிருப்பதிலும், மற்றும் உருவ அமைப்பிலும் இராமனையே ஒத்திருப்பார்.”
“இலக்குமணனின்
மேனி பொன்னிறத்திலும், புகழ் பொலியும் இராமனின் மேனி கரிய நிறத்திலும் இருக்கும். புலிக்கு நிகரான ஆற்றல் கொண்ட இருவரும் உங்களைக்
காண வேண்டி, இந்த பூமி முழுவதும் தேடியபடி வந்தபோது, எங்களைச் சந்தித்தனர்.”
“இந்தப் பூமியெங்கும்
உங்களைத் தேடியபடி வந்த இரு சகோதரர்களும் தன்னுடைய அண்ணனால் நாட்டை விட்டு விரட்டப்பட்ட
வானர அரசன் சுக்ரீவனைச் சந்தித்தனர்.”
“ருஷ்யமுக மலையின்
நடுவில் அடர்ந்த மரங்கள் சூழ்ந்திருந்த வனப் பகுதியில் தன் சகோதரனைக் கண்டு அச்சம்
கொண்டு அமர்ந்திருந்த சுக்ரீவனைச் சந்தித்தார்கள்.”
“தன் அண்ணனால் நாட்டை விட்டு துரத்தப்பட்ட, சத்தியத்தின் வழி நடக்கும் வானர அரசனான சுக்ரீவனிடம் நாங்கள் பணிவிடை செய்து வந்தோம்.”
“அந்த மலையுச்சியில்
அமர்ந்திருந்த வானர அரசனான சுக்ரீவன், அவர்களைச் சந்திக்க உடனடியாக என்னை அனுப்பினார்.”
“சுக்ரீவனின்
ஆணையின் படி, நான் கைகளைக் கூப்பி வணங்கிய வண்ணம், அந்த ஒளி மிக்க, அழகான தோற்றம் கொண்ட
, புலிகளைப் போன்று விளங்கிய வீரர்களை நெருங்கினேன்.”
“என்னுடைய செயல்களினால்
மகிழ்ச்சியுற்ற அந்த, ஆற்றலில் காளைகளுக்கு நிகரான வீரர்களை எனது முதுகில் சுமந்து
கொண்டு, சுக்ரீவன் இருக்குமிடம் சென்றேன்.”
“அங்கு, மிகச்
சிறந்தவரான சுக்ரீவனிடத்தில், அந்த இருவரைப் பற்றிய உண்மைகளைச் சொல்லி, அறிமுகப்படுத்தினேன். அவர்களிடையே நடந்த, நெருக்கமான பேச்சு வார்த்தைகளின்
மூலம் அவர்களுக்கிடையே அன்பு மிகுந்த நட்பு உருவானது.”
“அங்கு வானர
அரசனுக்கும், மனித அரசர்களுக்கும் நடந்த பேச்சுவார்த்தையில், தங்கள் வாழ்க்கையில் அதுவரை
நடந்தவற்றை, ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்.
அவர்கள் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக் கொண்டனர்.”
“அந்த சமயத்தில்,
இலக்குமணனின் அண்ணனாகிய இராமன், ஒரு பெண்ணின் காரணமாக, தன் சகோதரனான வாலியினால் நாட்டை
விட்டுத் துரத்தப்பட்ட சுக்ரீவனுக்கு ஆறுதல் கூறினார்.”
“அப்பொழுது இலக்குமணன்,
எவ்வித இன்னலும் இன்றி பெருஞ்செயல்களை ஆற்ற வல்ல இராமனுக்குத் தங்கள் பிரிவால் நேர்ந்த
துயரத்தைப் பற்றி சுக்ரீவனிடத்தில் சொன்னார்.”
“இலக்குமணனால்
கூறப்பட்ட செய்திகளைக் கேட்ட சுக்ரீவன், கிரஹங்களால் பீடிக்கப்பட்ட சூரியன் போல ஒளியிழந்தார்.”
“அப்பொழுது,
அரக்கனால் நீங்கள் அபகரித்துச் செல்லப்பட்ட போது, உங்கள் உடலை அலங்கரித்துக் கொண்டிருந்த
நகைகளை நீங்கள் கீழே வீசியதை எடுத்து வந்து இராமனிடத்தில் மகிழ்ச்சியுடன் காண்பித்தார்கள். ஆனால், அவர்களுக்கு நீங்கள் இருக்குமிடம் பற்றித் தெரியவில்லை.”
“நான் பொறுக்கியெடுத்த நகைகளையும் அவரிடத்தில் தந்தேன். அவற்றைப் பெற்றுக் கொண்டு, தன் மடி மேல் வைத்துக் கொண்டு பார்த்த இராமன், தன் நினைவிழக்கும் நிலையை அடைந்தார். அந்த நகைகளை மார்புறத் தழுவிக் கொண்ட, தெய்வீக ஒளி வீசிக்கொண்டிருந்த இராமன் மிகவும் புலம்பினார்.”
“அந்த நகைகளைத்
திரும்பத் திரும்பப் பார்த்து துன்பத்தில் ஆழ்ந்த தசரத குமாரனான இராமனின் துயரம், தீக்கங்குகளாய்க்
கொழுந்து விட்டு எரிந்தது.”
“தரையில் கிடந்து,
மூர்ச்சையடைந்து, வெகு நேரம் துன்பத்தில் தோய்ந்திருந்த இராமனை, பலவிதமான ஆறுதல் வார்த்தைகள்
கூறி, மிகவும் சிரமத்துடன் தரையில் இருந்து எழுப்பினேன்.”
“இலக்குமணனுடன்
சேர்ந்து, நீண்ட கரங்களைக் கொண்டிருந்த இராமன், விலைமதிப்பற்ற அந்த நகைகளை, மீண்டும்
மீண்டும் பார்த்துக் கொண்டிருந்து விட்டு சுக்ரீவனிடத்தில் கொடுத்தார்.”
“சிறந்த பெண்மணியே!
தங்களைக் காணாமல் இராகவன், துன்பத்தில் தவித்துக் கொண்டிருந்தார். எரிமலையானது எவ்விதம் எப்பொழுதும் நெருப்பைக் கக்கிக்
கொண்டிருக்குமோ அவ்விதம், அவர் துயரமாகிய நெருப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.”
“உறக்கமின்மை,
துயரம் மற்றும் கவலை ஆகிய மூன்றும், யாக குண்டத்தின் புனிதமான மூன்று வித நெருப்புக்களைப் போல இராமனை
எரித்துக் கொண்டிருந்தன.”
“பெரும் நில
நடுக்கத்தால் பெருமலையே ஆட்டம் கொள்வது போல, தங்களது பிரிவாற்றாமை இராமனைக் கவலையில்
நிலைகுலையச் செய்தது.”
“ஓ அரச குமாரியே!
தங்களைக் காண இயலாத வருத்தத்தில் தோய்ந்திருந்த இராமனால், அழகிய காடுகளையும், ஆறுகளையும்,
நீரூற்றுகளையும் கடந்து செல்லும்போது, அவற்றின் அழகை ரசித்திருக்க முடியவில்லை.”
“ஓ ஜனக குமாரியே!
பெரிய புலியினைப் போன்ற வலிமை கொண்ட இராமன், தன் உறவினருடனும், நண்பர்களுடனும் வெகு
விரைவில் இராவணனைக் கொன்று, தங்களை அடைவார்.”
“இராமனுக்கும்
சுக்ரீவனுக்கும் இடையே ஏற்பட்ட நட்புறவால், ஒருவருக்கொருவர் உதவுவதாக உறுதியளித்துக்
கொண்டனர். இராமன் வாலியை வதம் செய்து சுக்ரீவனுக்கு
உதவுவதாகவும், சுக்ரீவன் தங்களைக் கண்டு பிடிப்பதில் இராமனுக்கு உதவுவதாகவும் தீர்மானித்துக்
கொண்டனர்.”
“பிறகு இரண்டு
அரச குமாரர்களும் கிஷ்கிந்தைக்குச் சென்று, வாலியுடன் போரிட்டு அவனைக் கொன்றனர்.”
“போரில் வெகு
விரைவில் வாலியை வெற்றி கொண்ட இராமன், அனைத்து வானர இனங்கள் மற்றும் கரடிகள் கூட்டத்திற்கு,
சுக்ரீவனை அரசனாக நியமித்தார்.”
“இவ்விதம் இராமனுக்கும்
சுக்ரீவனுக்குமிடையே ஒப்பந்தம் ஏற்பட்டு, நான் அவர்களது தூதுவனாக இங்கே வந்துள்ளேன்.
தேவீ! நான்தான் அனுமன் என்பதை தாங்கள் அறிந்து
கொள்ளவேண்டும்.”
“தனது ராஜ்ஜியத்தைத்
திரும்பப் பெற்ற சுக்ரீவன், தனது நாட்டிலிருந்த பெரிய பெரிய வானர வீரர்களை அழைத்து,
அவர்களைப் பத்து விதமான திசைகளிலும் தங்களைத் தேடுவதற்காக அனுப்பினார்.”
“வானர அரசன்
சுக்ரீவனின் ஆணைக்கிணங்க, மலையரசனுக்கு ஒப்பான வானர வீரர்கள் பூமியின் எல்லாத் திசைகளிலும்
சென்றார்கள்.”
“சுக்ரீவனின்
ஆணையை நிறைவேற்றும் கவலை கொண்டு, வானரர்களாகிய நாங்கள் அனைவரும் இந்த பூமியெங்கும்
தேடிக் கொண்டிருக்கின்றோம்.”
“பெரும் புகழும்,
வீரமும், புலியினைப் போன்ற வலிமையும் கொண்ட வாலியின் மகனான அங்கதன், மூன்றில் ஒரு பங்கு
படையை அழைத்துக் கொண்டு, தங்களைத் தேடிக் கிளம்பினான்.”
“மிகவும் சிறப்பு
மிக்க விந்திய மலைப் பகுதிகளில் தேடியலைந்த போது, எங்கள் பாதையைத் தவற விட்டதால், பல
பகல், இரவுப் பொழுதுகள் வீணாக விரயமாகின.”
“நாங்கள் எங்கள்
காரியம் வெற்றியடையுமென்ற நம்பிக்கையை இழந்து விட்டோம். எங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த காலக் கெடுவும் நிறைவடைந்து விட்டதால், வானர அரசன்
சுக்ரீவனை நினைத்து அச்சம் ஏற்பட்டிருந்தது.
ஆகவே நாங்கள் அனைவரும் எங்கள் உயிரை விட்டு விடத் தீர்மானித்தோம்.”
“அந்த மலைப்
பகுதியின் கடினமான பகுதிகளிலும், ஆற்றங்கரைகளிலும், நீர்நிலைகள் இருக்கும் பகுதிகளிலும்
எவ்வளவு தேடியும் உங்களைக் கண்டு பிடிக்க முடியாததால், நாங்கள் எங்களது உயிரை விட்டு
விடத் தயாராக இருந்தோம்.”
“உயிர் நீங்கும்
வரை உண்ணா நோன்பு மேற்கொண்டு நாங்கள் அனைவரும் மலையுச்சியில் சென்றமர்ந்து கொண்டோம். எங்களை அந்த நிலையில் கண்ட பெரும் வீரரான அங்கதன்
பெரும் துயரக் கடலில் மூழ்கினார்.”
“ஓ வைதேஹி! தங்களைக்
கண்டுபிடிக்க இயலாதது, வாலியின் மரணம், எங்களது சாகும் வரையிலான உண்ணாநோன்பு, ஜடாயு
அவர்களின் மரணம் ஆகியவற்றை எண்ணி, இளவரசன் அங்கதனுக்கு பெரும் துன்பம் உண்டானது.”
“தங்களைத் தேடிக்
கண்டுபிடிக்க முடியாத ஏமாற்றத்தால், எங்கள் அரசனின் ஆணைக்கிணங்க, நாங்கள் அனைவரும்
உயிர்த்தியாகம் செய்ய முடிவு செய்திருக்கும் பொழுது, தெய்வச்செயலாக, எங்கள் காரியம்
வெற்றியடைய உதவும் பொருட்டு, கழுகுகளின் அரசனான ஜடாயுவின் சகோதரனான சம்பாதி எனப்படும்
கழுகுகளின் அரசன் அங்கு வந்தார்.”
“தனது சகோதரனான
ஜடாயுவின் மரணச்செய்தியைக் கேட்டு கோபமுற்ற அவர்,” சிறந்த வானர வீரர்களே! எனது தம்பியான
ஜடாயுவை யார் கொன்றது? எந்த இடத்தில் கொல்லப்பட்டு வீழ்த்தப்பட்டார்? என்று கேட்டார்.””
“தண்டகாரண்ய
வனத்தில் தங்களைக் காப்பாற்ற முயன்ற சமயத்தில், கொடிய உருவம் கொண்ட அரக்கனால் ஜடாயு
கொல்லப்பட்டு வீழ்த்தப்பட்ட செய்தியை அங்கதன் அவரிம் சொன்னார்.”
“ஜடாயுவின் மரணச்செய்தி
அறிந்த அருணனின் குமாரனான சம்பாதி மிகவும் வருத்தமடைந்தார். அழகிய தேவியே! இராவணனின் இருப்பிடத்தில் தாங்கள்
இருக்கும் செய்தியை அவர் தான் சொன்னார்.” (காஷ்யபருக்கும் வினதாவிற்கும் பிறந்த மகன்கள்
அருணன் மற்றும் கருடன் ஆவர். அருணனின் இரண்டு மகன்கள் சம்பாதி மற்றும் ஜடாயு ஆவர்).
“சம்பாதியின்
பேச்சைக் கேட்ட வானரர்களுக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது. தங்களைக் காணும் ஆவலில் அங்கதன் முதலான நாங்கள்
அனைவரும் விந்திய மலையிலிருந்து புறப்பட்டு, கடலின் வடக்குத் திசையை அடைந்தோம். இவ்விதமாக அங்கதன் முதலான வானரத் தலைவர்கள் கடற்கரையை
அடைந்தோம்.”
“எங்கள் முன்
பரந்து விரிந்திருந்த கடலைப் பார்த்து எல்லா வானரர்களும் மீண்டும் கவலை கொண்டோம். வானர சேனையின் துயரத்தை அறிந்த நான், அவர்களின்
அச்சத்தைப் போக்கி, நூறு யோஜனை தூரம் இருந்த அந்தக் கடலைத் தாண்டி, தாவிப் பறந்து இங்கு
வந்தேன்.”
“அரக்கர்களால்
நிரம்பி வழியும் இலங்கைக்குள் நான் இரவு நேரத்தில் நுழைந்தேன். இராவணனைப் பார்த்த நான், துயரத்தில் மூழ்கியுள்ள
தங்களையும் பார்த்தேன்.”
“குறைகள் ஏதுமற்ற
தேவியே! நான் அனைத்து செய்திகளையும் தங்களிடம் தெரிவித்துள்ளேன். தேவீ! நான் தசரதனின் மகனான இராமனின் தூதுவன். நீங்கள் என்னிடம் பேசலாம்.”
“இறைவனான ஸ்ரீராமனுக்காக,
உங்களைக் காணும் பொருட்டு நான் என்னுடைய பணிகளை மேற்கொண்டுள்ளேன். தேவீ! நான் ராஜா சுக்ரீவனின் அமைச்சராவேன். அனுமன் என்றழைக்கப்படும் நான் வாயுதேவனின் மகனுமாவேன்.”
“தேவீ! அனைத்துவிதமான
ஆயுதங்களை இயக்கும் ஆற்றல் கொண்ட, காகுஸ்த வம்சத்தின் வழி வந்த, உங்கள் கணவரான இராமன்
நலமுடன் உள்ளார். தன் தமையனைக் குருவாகப் போற்றி,
அவருக்கு அனைத்துவிதமான பணிவிடைகளையும் செய்து வரும் இலக்குமணனும் நலமாக உள்ளார்.”
“தங்கள் கணவரின்
நலனைக் கருதி எப்பொழுது செயலாற்றும் நான், சுக்ரீவனின் ஆணைப்படி, தனியாக இங்கே வந்துள்ளேன்”
“நினைத்த உருவம்
கொள்ளும் வல்லமை மிக்க நான், தங்களைக் கண்டு பிடிப்பதற்காக, யாருடைய உதவியும் இன்றி,
தனியாக அலைந்து, தென் திசையில் என்னுடைய பயணத்தை மேற்கொண்டு இங்கு வந்துள்ளேன்.”
“தாங்கள் காணாமல்
போனதால் ஏற்பட்டுள்ள பெருந்துயரத்தில் உழலும் வானர வீரர்களுக்கு, தாங்கள் கிடைத்து
விட்ட பெருஞ் செய்தியைக் கூறி, அவர்களின் அச்சத்தைப்
போக்குவேன். இது என்னுடைய நற்பேறான தருணமாகும்”.
“தேவீ! நான்
கடலைத் தாண்டி இங்கே வந்தது வீணாகவில்லை. தங்களை
முதன் முதலில் நான் இங்கே பார்த்து விட்டேன் என்னும் புகழ் எனக்குக் கிடைக்கும். இது எனது பெரும் நற்பேறாகும்”.
“பெரும் வீரரான
ஸ்ரீராமன், வெகு விரைவில் அசுரர்களின் அரசனான இராவணனை அவனுடைய குமாரர்கள், உறவினர்கள்
மற்றும் நண்பர்களோடு அழித்து, தங்களிடம் வந்து சேர்வார்”.
“விதேஹ குமாரியே!
மலைகளில் மிகச் சிறந்த மலையான மால்யவான் என்னும் மலையில் கேசரி என்னும் பெயருள்ள வானரர்
வசித்து வந்தார். ஒருநாள் அவர் கோகர்ணம் என்னும் மலைக்குச் சென்றார்.”
“என்னுடைய தந்தையாரான
கேசரி என்னும் அந்தப் பெரிய வானர வீரர், முனிவர்களின் ஆணைப்படி கடற்கரையில் இருந்த
அந்த கோகர்ண மலையில், சம்பாசதன் என்னும் அரக்கனை வதம் செய்தார்.”
“மைதிலி! அந்தப்
புனிதமான இடத்தில் வாயு பகவான் மூலமாக நான் பிறந்தேன். என்னுடைய செயல்களின் காரணமாக நான் ‘அனுமன்’ என்று
அனைவராலும் அழைக்கப்படுகிறேன்.”
“வைதேஹி! உங்களுக்கு
என் மீது நம்பிக்கை உண்டாவதற்காக, உங்கள் கணவரின் பெருமைகளை நான் கூறினேன். குற்றங்களேதுமற்ற தேவியே! ஸ்ரீராமன் வெகு விரைவில்
உங்களை இங்கிருந்து அழைத்துச் செல்வார்.”
அனுமனின் கூற்றில்
இருந்த உண்மையான செய்திகளின் நம்பகத் தன்மையின் காரணமாக, துயரத்தில் மெலிந்திருந்த
சீதை, அனுமனை ஸ்ரீராமனின் தூதுவனாக ஏற்றுக்கொண்டார்.
அனுமனின் கூற்றுக்களால்
சீதைக்குப் பேரானந்தம் ஏற்பட்டது. மகிழ்ச்சியின்
மிகுதியால் சீதையின் வளைந்த இரு கண்களிலிருந்தும் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.
அந்தச் சமயத்தில்,
செவ்வரியோடிய அகன்ற வெண்ணிற விழிகளைக் கொண்டிருந்த சீதையின் முகமானது, ராகுவின் பிடியில்
இருந்து விடுபட்ட நிலவினைப் போல ஒளிர்ந்தது.
அனுமன் உண்மையாகவே
வானரம் தான் என்பதையும், அரக்கனின் மாயத்தோற்றம் அல்ல என்பதையும் சீதை ஏற்றுக் கொண்டார். அழகிய சீதையைப் பார்த்து அனுமன் மேலும் சொன்னார்.
“மிதிலை குமாரியே!
நான் சொல்ல விரும்பியது அனைத்தையும் தங்களிடம் சொல்லி விட்டேன். நீங்கள் இப்பொழுது தைரியமாக இருங்கள். தங்களுக்கு நான் எவ்விதம் சேவை செய்வது? தாங்கள்
விரும்புவது என்ன? உத்தரவு கொடுத்தால் நான் திரும்பிச் செல்வேன்.”
“சம்பாசதன் என்னும்
அரக்கன் என் தந்தையாரால் முனிவர்களின் ஆணைப்படி கொல்லப் பட்டபோது, வாயுபகவான் மூலமாக
எனக்குப் பிறவி ஏற்பட்டது. ஆகவே, மைதிலி! நான்
வாயுபகவானின் ஆற்றல் பெற்ற வானரம் ஆவேன்.”
முப்பத்தைந்தாவது
ஸர்கம் நிறைவு.
No comments:
Post a Comment