Thursday, January 18, 2024

ஸ்ரீ வால்மீகி ராமாயணம். சுந்தர காண்டம். அறுபத்தெட்டாவது ஸர்கம்.

 

                                        

                                           ஸ்ரீ வால்மீகி ராமாயணம்.

                                          சுந்தர காண்டம்.                                                              அறுபத்தெட்டாவது ஸர்கம்.                 (சீதையுடன் நடந்த அனுமனின் உரையாடல்)


     “புருஷோத்தமரே! நான் திரும்பிச் செல்வதில் முனைப்பாக இருந்தபோது, நீங்கள் (ஸ்ரீராமன்) என் மீது கொண்டிருந்த நட்பினாலும், எனக்கு நீங்கள் வேண்டப்பட்டவராய் இருந்ததாலும், தேவியால் மிகவும் கெளரவிக்கப் பட்டேன்.  மேலும் செய்ய வேண்டிய செயல்களைப் பற்றி அவர் இவ்விதம் தெரிவித்தார்.”

          “தசரத குமாரரான ஸ்ரீராமன் போர்க்களத்தில் இராவணனைக் கொன்று, விரைந்து என்னைத் தன்னித்தில் சேர்த்துக் கொள்வதற்கு ஏதுவாக இந்தப் பல விஷயங்களை அவரிடம் சொல்ல வேண்டும்.”

     “பகை வெல்லும் வீரரே! நீங்கள் ஒரு வேளை விருப்பப்பட்டால் இங்கு எதாவது ஓரிடத்டதில் மறைவாகத் தங்கி ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.  நாளை திரும்பலாம்.”

     “வானர வீரரே! நீங்கள் அருகில் இருந்தால், எனது நற்பேறற்ற துயரமான நிகழ்வுகளிலிருந்து சற்று விடிவு பிறப்பதாக இருக்கும்!”

     “வீரரே! மீண்டும் இங்கு திரும்பி வர வேண்டிய நீர் இப்பொழுது செல்வதாக இருந்தாலும், அந்த நேரத்தில் கண்டிப்பாக எனது உயிருக்கு ஆபத்து நேரிடும், இதில் ஐயம் எதுவுமில்ல.”

     “துன்பத்திற்கு மேல் துன்பம் கொண்டு, துன்பத்திலேயே உழன்று கொண்டிருக்கும் நற்பேறற்றவளான நான், நீர் என் கண் முன்னே இல்லாது போனால், மேலும் அதிகமாகத் துயரம் கொள்வேன்!”

     “தலையாய வானர வீரரே! உமது துணைவர்களான வானரர்கள் மற்றும் கரடிகள் விஷயத்தில், முதலானதும், முக்கியமானதுமான பெருத்த ஐயம் ஒன்று எனக்கு இருக்கின்றதே?”

      “வானர, கரடிப் படைகளும், இரண்டு அரச குமாரர்களும், தாண்டுவதற்குக் கடினமான அந்தப் பெருங்கடலை எவ்வாறு கடக்க முடியும்?”

     “குற்றமற்றவரே! இந்தக் கடலைத் தாண்டும் திறமை, கருடன், வாயு மற்றும் நீர் ஆகிய மூவரிடம் மட்டுமே உள்ளது!”

     “செயல் முடிப்பதில் வல்ல வீரரே! இப்படிப்பட்ட தடையிருக்கும் பட்சத்தில், காரியத்தைச் செயலாற்றுவதற்கு என்ன வழியை யோசித்து வைத்துள்ளீர்கள் என்று சொல்லுங்கள்!”

        “பகைவரை அழிக்கும் ஆற்றல் மிக்கவரே! இந்தச் செயலை நீர் ஒருவரே செய்து முடிக்கும் வல்லமை பெற்றவர் ஆவீர்! அப்படிச் செய்யும் போது, உங்கள் ஆற்றலுக்கான புகழ் உங்களை மட்டுமே சாரும்!”

     “தனது அனைத்துப் படை பலங்களுடன் ஸ்ரீராமன் வந்து, போர்க்களத்தில் இராவணனைக் கொன்று, என்னைத் தன்னுடன் தனது நாட்டிற்கு அழைத்துச் செல்வதே சாலச் சிறந்ததாகும்!”

     “காட்டிலிருந்த என்னை, எவ்விதம் அந்த அரக்கன் அச்சத்துடன் (ஸ்ரீராமன் பார்த்திடா வண்ணம்) சூழ்ச்சி செய்து கவர்ந்து சென்றானோ, அதே முறையில் ஸ்ரீராமனும் செய்வது என்றால் அது ஏற்புடைய செயல் ஆகாது!”

     “பகைவர்களின் பலத்தைச் சூறையாடும் வல்லமை பெற்ற காகுஸ்தர், தன் படையுடன் வந்து, இலங்கையைச் சின்னா பின்னமாக்கி, என்னை அழைத்துப் போவாரேயானால், அதுவே அவருக்கு ஏற்ற செயலாகும்!”

     “ஆகவே, போர்வீரரான அந்த மாமனிதனின் பேராண்மைக்கு ஏற்புடையதான செயல் எதுவாக இருக்க முடியுமோ, அவ்வண்ணமே செயலாற்றுவதற்கான வழிமுறையைச் சிந்தியுங்கள்!”

     அனுமன் ஸ்ரீராமனிடம் உரைப்பது:

     “சரியான பொருள் பொதிந்த, சரியான காரணங்களுடன் பொருத்திச் சொல்லப்பட்ட அந்த வார்த்தைகளைக் கேட்ட நான், அதற்கு மறுமொழியாக இவ்விதம் உரைத்தேன்.”

     அனுமன் சீதையிடம் உரைத்தாகச் சொல்வது:

     “தேவி! வானர, கரடிப் படைகளுக்குத் தலைவரும், வானரர்களிலேயே சிறந்தவருமான சுக்ரீவன், நிலையான மனம் கொண்டவர்.  அவர் உங்கள் விஷயத்தில் செயலாற்றுவதில் முழு முனைப்பாக உள்ளார்!”

     “அவருடைய ஆணையின் கீழ் இயங்கும் வானரர்கள் ஆற்றல் மிக்கவர்கள்.  திட நெஞ்சம் கொண்ட பலசாலிகள்.  வலிமை மிக்கவர்கள்.  மனம் செல்லும் வேகத்தில் பாய்ந்து செல்லக் கூடியவர்கள்!”

     “மேல், கீழ், அல்லது பக்கவாட்டுத் திசைகளிலும் அவர்களது வேகம் தடைப்படுவதில்லை.  ஆகவே, ஒப்பற்ற திறனுடைய அவர்கள் எப்படிப்பட்ட பெருஞ்செயல்களிலும் தடைப்பட மாட்டார்கள்.” (அவர்களைத் தடுக்க முடியாது).

     “வான் வழியே செல்பவர்களும், தங்கள் ஆற்றலின் மேல் கர்வம் கொண்டவர்களும், வலிமையானவர்களுமான அந்த வானரர்களால், இந்தப் பூமி அநேக முறை சுற்றி வரப்பட்டுள்ளது.”

         “சுக்ரீவனின் படையில் எனக்கு மேலானவர்களும், எனக்கு இணையானவர்களுமான வானரர்கள் இருக்கின்றார்கள்.  என் திறமைக்குக் குறைந்தவர்கள் எவரும் அங்கு இல்லை!”

     “பொதுவாகச் சாதாரணமானவர்களையே தூதுவர்களாக அனுப்புவார்கள்.  சிறந்த வீரர்களை அவ்வாறு அனுப்புவதில்லை.  என்னாலேயே இங்கு வர முடிந்தது என்றால் அவர்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ?”

     “ஆகவே தேவீ! இனி நீங்கள் துயரம் கொள்ளத் தேவையில்லை.  உங்கள் துன்பங்கள் விலகிச் செல்லட்டும். பெரும் வானர வீரர்கள் ஒரே பாய்ச்சலில் இலங்கையை அடைந்து விடுவார்கள்!”

     “அம்மையே! உதிக்கின்ற சூரிய, சந்திரர் போல் ஒளிரக்கூடிய, ஆண் சிங்கங்களை ஒத்த அந்த இருவரும் என் முதுகில் ஏறிக் கொண்டு, உம்மிடம் வந்து சேர்வார்கள்!”  

     “பகைவர்களை அழிப்பவர்களும், சிங்கத்தின் ஆற்றலுக்கு இணையானவர்களுமான ஸ்ரீராமனும், இலக்குமணனும் கைகளில் வில்லேந்தியவர்களாய், இலங்கையில் வாயிலில் நிற்கப் போவதை, இதோ, காணப்போகின்றீர்கள்!”

     “நகங்களையும், பற்களையும் ஆயுதமாகக் கொண்டவர்களும், சிங்கமும், புலியும் போல வலிமை மிக்கவர்களும், யானைகள் போலப் பெரிய உருவம் கொண்டவர்களுமான வானர வீரர்கள் அனைவரும் ஒன்று கூடி இங்கே வரப் போவதை நீங்கள் இதோ, விரைவில் காணப்போகின்றீர்கள்!”

     “இலங்கையின் மலைகளின் பள்ளத்தாக்குகளில், மலைச் சிகரங்களில் முழங்கும், மேகங்களின் இடியோசை போல, வானர வீரர்களின் முழக்கத்தை மிக விரைவில் கேட்கப் போகின்றீர்கள்!”

     “பகைவர்களை அழித்த ஸ்ரீராமன், தனது வன வாசத்தை நிறைவு செய்து  கொண்டு, உங்களை அழைத்துக் கொண்டு அயோத்தி திரும்பிச் செல்லப் போவதையும், அங்கு பட்டாபிஷேகம் செய்து கொண்டு உங்களுடன் மகிழ்ந்திருக்கப்போவதையும் விரைவில் காணப் போகின்றீர்கள்!”

     மீண்டும் ஸ்ரீராமனிடம் சொல்வது:

     “உங்களைப் பிரிந்த துயரத்தில் வாடும் மிதிலை நாட்டரசனின் மகளான சீதை, நம்பும் வகையிலும், நல்ல விஷயங்களாகவும், கம்பீரமாகப் பேசப்பட்ட எனது வார்த்தைகளால், சமாதானம் ஏற்பட்டவராய், தனது துயரத்திலிருந்து விடுபட்டு, மனத் திருப்தி (அமைதி) கொண்டார்.”.




                    அறுபத்தெட்டாவது ஸர்கம் நிறைவு.

                    ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம், சுந்தர                                   காண்டம் நிறைவு.

                                                       ஜெய் ஸ்ரீராம்!

No comments:

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...