ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டம்.
அறுபத்தைந்தாவது ஸர்கம்.
அவர்கள் வித விதமான காடுகள் மண்டியிருந்த பிரஸ்ரவனமென்னும்
மலையில் வந்திறங்கி, அங்கே ஸ்ரீராமனுக்கும், வலிமைவாய்ந்த இலக்குமணனுக்கும், சுக்ரீவனுக்கும்
கை கூப்பி வணக்கம் செய்தார்கள். பிறகு இளவரசர்
முன் நடத்திச் செல்ல, சீதையின் இப்போதைய நிலவரத்தைச் சொல்வதற்காகக் காத்து நின்றார்கள்.
இராவணனது அந்தப்புரத்தில் சீதை சிறை வைக்கப்பட்டிருப்பதையும்,
அரக்கியரால் அவர் மிரட்டப் படுவதையும், ஸ்ரீராமனிடம் அவர் (சீதை) வைத்திருந்த அன்பினைப்
பற்றியும், அவருக்கு (சீதைக்கு) காலக் கெடு விதிக்கப் பட்டிருப்பதையும் உள்ளது உள்ளபடி,
அந்த வானரர்கள் ஸ்ரீராமன் முன்னிலையில் அறிவித்தார்கள்.
ஸ்ரீராமன் அவர்களைப் பார்த்து, “வானரர்களே! சீதை
எங்கிருக்கிறாள்? என்னைப் பற்றி என்ன சொல்கிறாள்? வைதேஹியைப் பற்றிய இப்படிப்பட்ட எல்லா
விபரங்களையும் சொல்லுங்கள்!” என்றார்.
ஸ்ரீராமனின் மொழிகளைக் கேட்ட வானரர்கள், சீதையைப்
பற்றி முற்றிலும் அறிந்தவரான அனுமனை, ஸ்ரீராமனுக்குப் பதிலிறுக்குமாறு வேண்டினர்.
வானரர்களின் வேண்டுகோளை ஏற்ற பேச்சாற்றல் மிக்க,
வாயுவின் மைந்தனான அனுமன், சீதை இருக்கும் திசை நோக்கித் தலை வணங்கினார். பிறகு, தானாகவே ஒளி வீசிக்கொண்டிருக்கும் அந்த உயர்ந்த
காஞ்சனமணியை, ஸ்ரீராமனின் கைகளில் கொடுத்த அனுமன், பின்வருமாறு கூறலானார்.
“நான் ஜனகரின் மகளாகிய சீதையைக் காண விரும்பி,
தேடிச் செல்கையில், நூறு யோஜனை அளவு அகலமான, ஒரு கடலைத் தாண்டிச் சென்றேன். அப்பொழுது
கடலின் தென் திசையில் இருந்த தெற்குப்புறக் கரையில் கெட்டவனான இராவணனின் இலங்கை என்னும்
நகரம் இருந்தைப் பார்த்தேன்.”
“ஸ்ரீராம! கற்புநெறி மிக்க அழகுமிகு சீதையை,
இராவணனுடைய அந்தப்புரத்தில் கண்டேன். தனது
மனம் முழுவதிலும் உங்களது நினைவை நிரப்பியே வாழ்ந்துகொண்டிருக்கின்றார். அங்கிருந்த அழகான வனத்தில் அரக்கியர்கள் காவல் காக்க,
விகாரமான அரக்கியரால் மீண்டும் மீண்டும் மிரட்டப்பட்டு, திகிலடைந்தவராக இருப்பதைக்
கண்டேன்.”
“குற்றமற்ற உயர்ந்த மானுடரே! இஷ்வாகு குலத்தின்
பெருமைகளை நான் போற்றிப் பாடிக் கொண்டிருந்ததைக் கேட்டுக்கொண்டிருந்த
அவருக்கு இயல்பாக என் மீது
நம்பிக்கை ஏற்பட்டது. அப்பொழுது என்னிடம் பேசிய தேவியிடம் எல்லாச் செய்திகளையும் சொன்னேன். உங்களுக்கும் சுக்ரீவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள
நட்பை அறிந்து மனமகிழ்ச்சி கொண்டார். உங்களிடம்
கொண்ட பக்தியால் கற்பு நெறி தவறாது இருப்பதையே தன் குறிக்கோளாகக் கொண்டுள்ளார்.”
“புருஷோத்தமரே! இவ்வாறு உங்களிடம் கொண்ட பக்தி
என்னும் கடுந்தவம் இருப்பவராக, ஜனகனின் மகளாகிய திருமங்கையைக் கண்டேன்.”
“சர்வ ஞானியான இராகவரே! சித்ரகூடத்தில் தங்களுக்கும்
தேவிக்கும் இடையே ஒரு காகத்தின் பொருட்டு நடந்த நிகழ்வை, எங்கள் சந்திப்பின் அடையாளமாக
உங்களுக்கு நினைவு படுத்தச் சொன்னார்.”
சீதை என்னிடம், “வாயுகுமாரரே! இங்கு காணப்படும்,
சொல்லப்படும் அனைத்தையும் புருஷோத்தமரான ஸ்ரீராமனிடம் தெரிவிக்க வேண்டும். என்னால் ஒருவரும் அறியா வண்ணம் பாதுகாக்கப்பட்டு
வரும் இந்த சூடாமணியை அவரிடம் கொடுத்து விட வேண்டும்!” என்றும் சொன்னார்.
மேலும் அவர் என்னிடம், “சுக்ரீவன் அருகிலிருந்து
நீர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கும் சமயத்தில், நான் பாதுகாப்பாக வைத்திருந்த இந்த
அபூர்வ சூடாமணியை அவரிடம் கொடுக்க வேண்டும்.
நீரில் தோன்றியதும், மனக் கிளர்ச்சி தருவதுமான இந்தச் சூடாமணி எம்மால் உமது
வழியாக அனுப்பப்படுகிறது. கற்களைப் பொடித்த காவியினால் எனது நெற்றியில் அவர்
(ஸ்ரீராமன்) வைத்த திலகத்தையும் நினைவூட்டுங்கள்!” என்றார்.
“குற்றமற்றவரே! நான் துன்புற்றிருக்கும் சமயத்தில்
எல்லாம் இதனைப் பார்த்துத்தான் உம்மைப் பார்ப்பது போல ஆறுதல் கொள்வேன். தசரதனின் மைந்தனே!
இன்னும் ஒரு மாதமே நான் உயிர் தரித்திருப்பேன்.
அரக்கியரின் பிடியில் இருக்கும் நான், அந்த ஒரு மாதம் கழிந்ததும் உயிர் தரித்திருக்க மாட்டேன்” என்று
இராவணனின் அந்தப்புரத்தில் சிறைவைக்கப்பட்டுள்ள, மான் குட்டியின் கண்களையொத்த மலர்ந்த
கண்களைக் கொண்ட, கற்பு நெறி வழுவாது வாழும் அவர், (சீதை) மனம் கலங்கி, உடல் இளைத்தவராய்
உம்மிடம் சொல்லச் சொல்லி என்னிடம் சொன்னார்.”
“இராகவரே!
இவ்விதமாக அனைத்து விவரங்களையும் ஒன்றுவிடாமல் நான், தங்களிடம் சொல்லிவிட்டேன்.
இனி எவ்வாறாகிலும் கடலைக் கடந்து செல்வதற்கான முயற்சியைச் செய்யுங்கள்!” என்றார்.
இவ்வாறாக வாயுகுமாரரான அனுமன், அந்த இரண்டு அரச
குமாரர்களும் மனம் தேறியிருப்பதை அறிந்து கொண்டார். இராகவரிடம் அந்த அடையாளச் சின்னத்தைக் கொடுத்தார். தேவியால் சொல்லப்பட்ட அனைத்தையும், முதலிலிருந்து
முடிவு வரை வாய்மொழியாகவும் உரைத்தார்.
அறுபத்தைந்தாவது ஸர்கம் நிறைவு.

No comments:
Post a Comment