Wednesday, April 26, 2023

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம். பதினாறாவது ஸர்கம்

 

            ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம்.

                                       பதினாறாவது ஸர்கம்

 

     மிகவும் போற்றத்தகுந்தவரான சீதையையும், நற்பண்புகளின் உறைவிடமான ஸ்ரீராமனையும் போற்றிய ஸ்ரீஅனுமனின் மனம் மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தது.

     கிட்டத்தட்ட ஒரு முகூர்த்த நேரம் (சுமார் ஒன்றரை மணி நேரம்) அளவிற்கு சிந்தனை வயப்பட்டிருந்த ஸ்ரீஅனுமனின் கண்களிலிருந்து கண்ணீர் நிரம்பி வழிந்தது.  ஒளிபொருந்திய ஸ்ரீஅனுமன், சீதையின் நிலையைப் பார்த்து இவ்வாறு மனம் கலங்கலானார்.

     “சிறந்த ஆசிரியப் பெருமக்களிடம் கல்வி பயின்ற இலக்குமணனால் மதிக்கப்பட்டவளும், ஸ்ரீராமனின் அன்பு மனைவியுமான சீதைக்கே இவ்விதம் இன்னல்கள் நேருமென்றால், காலத்தின் கோலத்தை என்னவென்று சொல்வது?”

     “ஸ்ரீராமன் மற்றும் அவரது அறிவாற்றல் மிக்க தம்பியான இலக்குமணனின் வீரத்தின் பெருமையை முற்றிலும் அறிந்திருந்த சீதை, மழைக்காலத்திலும் கலங்காத கங்கை நதி போல, தன்னுடைய துயரத்தால் அதிகம் கவலையுற்றவராகத் தெரியவில்லை.”

     “கரிய விழிகளைக் கொண்ட சீதை, தன் பண்பினாலும், இயல்பாலும், வயதாலும் மற்றும் நடத்தையாலும், ஸ்ரீராமனுக்கு, மிகவும் பொருத்தமான இணையாவார்.”

     புத்துருக்குத் தங்கம் போல ஒளி பொருந்தியும், உலக மக்கள் அனைவராலும் விரும்பப்படும் திருமகள் போலவும் இருந்த சீதையைப் பார்த்ததும், ஸ்ரீஅனுமன், ஸ்ரீராமனை மனதில் துதித்து, இவ்வாறு சொல்லலானார்.

     “அகன்ற விழிகளையுடைய இந்த சீதையின் பொருட்டு, ஸ்ரீராமன், மிக வலிமைமிக்க வாலியையும், இராவணனின் வீரத்திற்குச் சற்றும் குறைவில்லாத கபந்தனையும் வதம் செய்துள்ளார்.”

     “இந்தச் சீதையின் பொருட்டு, ஸ்ரீராமன், காட்டில், மிகுந்த வீரத்தோடு, மிகவும் அச்சம் தரத்தக்க வீரம் மிகுந்த விராதன் என்ற அரக்கனை, தேவர்களின் அரசன் இந்திரன், சம்பராசுரனைக் கொன்றது போலக் கொன்றார்.”

     “சீதையின் பொருட்டு, ஜனஸ்தானம் என்னுமிடத்தில், நெருப்பை உமிழும் தன்னுடைய அம்புகளால், பதினான்காயிரம் அரக்கர்களை, ஸ்ரீராமன் கொன்றார்.”

     “பெரும் போர்களில், கரன், திரிசரன் மற்றும் வலிமை மிக்க தூஷணன் போன்றோரையும் ஸ்ரீராமன் வதம் செய்துள்ளார்.”

     “அடைவதற்கு அரியதான, வாலியினால் காக்கப்பட்டிருந்த வானர சாம்ராஜ்யம், சீதையின் நிமித்தமாகவே, உலகப் புகழ் பெற்ற சுக்ரீவனுக்குக் கிடைத்தது.”

     “அகன்ற விழிகளைக் கொண்டவரான சீதையின் காரணமாகவே, நதிகள் மற்றும் ஓடைகளின் அரசனான பெருங்கடலை நான் தாண்டினேன்.  இந்த நகரம் முழுவதையும் நான் சோதனை செய்தேன்,”

     “சீதைக்காக, ஸ்ரீராமன், கடல்களுடன் கூடிய இந்த உலகம், மற்றும், வேறு எல்லா உலகங்களையுமே தலைகீழாக மாற்றியிருந்தால் கூட, அவரது செயல் ஏற்புடையதாகவே இருந்திருக்கும்.”

     “சீதைக்கு முன்னால் மூவுலகங்களும் வந்து நின்று போட்டியிட்டாலும், அவரது ஒரு சிறிய பகுதிக்குக்கூட ஈடாக முடியாது. “

     “அறத்தில் சிறந்தவரான, மைதிலி தேசத்தின் பேரரசரான ஜனகனின் மகளான சீதை, தன் கணவன் மீது கொண்ட பக்தியிலிருந்து சிறிதளவும் விலகமாட்டார்.”

     “கலப்பையினால் நிலத்தை உழுதுகொண்டிருந்த பொழுது, அந்தப் பாத்திகளின் உயர்ந்த மண் துகள்கள், தாமரைப் பூக்களின் மகரந்தத் தூள்கள் போல தன் மீது போர்த்தியபடி, நிலத்தைப் பிளந்து கொண்டு பிறந்தவர் சீதை!”

     சீதை, பெரும் வீரம் மிக்கவரும், நற்பண்புகள் வாய்ந்தவரும், போரில் என்றுமே புறமுதுகிட்டுத் திரும்பாதவருமான, மாமன்னர், தசரதனின் புகழ்மிக்க மூத்த மருமகளுமாவார்.”

     “அறநெறியிலிருந்து வழுவாதவரும், கருணை மிக்கவரும், ஆத்ம ஞானியுமான ஸ்ரீராமனின், அன்பினிற்கினிய மனைவியான சீதை இப்பொழுது அரக்கியர் பிடியில் இருக்கிறார்.”

     “தன் கணவன் மீது இருக்கும் அளவற்ற அன்பின் காரணமாக, தனது ஆடம்பரமான, சுகமான வாழ்க்கையைத் துறந்து, எதிர்கொள்ள இருக்கும் இன்னல்களைப் பற்றிக் கவலைப்படாமல், மனித நடமாட்டமற்ற காட்டுக்குள் வந்தவர் சீதை!”

     “கிடைத்த கனி, கிழங்குகளை உண்டு, திருப்தியுடன் கணவனுக்குப் பணிவிடை செய்வதில் மனம் செலுத்தி, அரண்மனையில் இருப்பது போன்ற உற்சாகத்துடனும், மகிழ்வுடனும் அவர் காட்டில் வசித்தார்.”

     “தங்கத்தைப் போன்ற அங்கத்தைப் பெற்று, எப்பொழுதும் மலர்ந்த முகத்துடன் பேசக்கூடிய சீதை, இது போன்ற இன்னல்களுக்கு ஏற்புடையவள் இல்லை எனினும், இவைகளைச் சகித்துக் கொண்டுள்ளார்.”

     “தாகத்தில் இருப்பவன், நீர்ச்சுனையை நாடித் திரிவது போல, இராவணனால் துன்புறுத்தப்பட்டும், தன் இயல்புகளை இழக்காமல் இருக்கும் சீதையைக் காண, ஸ்ரீராமன் விருப்பம் கொண்டுள்ளார்.”

     “தன் நாட்டை இழந்த ஒரு மன்னன், அதை மீண்டும் பெறும்போது எவ்விதம் மகிழ்வானோ, அதைப் போலவே, சீதையை மீண்டும் அடையும் ஸ்ரீராமனும் மகிழ்ச்சி அடைவார்.”

     “தனது உற்றார் உறவினரை இழந்து, வசதியான வாழ்க்கையினையும் இழந்து அல்லலுறும் சீதை, ஸ்ரீராமனை மீண்டும் சந்திக்கும் நம்பிக்கையின் காரணமாகவே, தன் உடலில் உயிரைத் தரித்துள்ளார்.”

     “சீதை, தன்னைச் சுற்றியிருக்கும் அரக்கியரையோ, பூத்துக் குலுங்கும் மலர்ச்சோலைகளையோ பொருட்படுத்தாது, ஸ்ரீராமனையே மனக் கண்களால் நினைத்து தியானித்துக் கொண்டிருக்கிறார் என்பதில் ஐயமில்லை.”

     “எந்த ஒரு பெண்ணுக்கும், தன் கணவருடன் இருப்பதே, எல்லாவித அணிகலன்களையும் விட மேன்மையானதாகும்.  ஆனால், சீதையோ, தன் கணவனை விட்டுப் பிரிந்திருப்பதால், ஒளிமிகுந்து விளங்க வேண்டிய தகுதி பெற்றிருந்தும், ஒளியிழந்துள்ளார்.”

     “மனைவியை விட்டுப் பிரிந்திருக்கும் துயரத்தில் வெகுவாக மூழ்கிவிடாமல், தன் உடலை உயிருடன் தக்க வைத்திருப்பது, ஸ்ரீராமனுக்கு மிகவும் கடினமான செயலாகும்.”

     “கரிய கூந்தலையும், தாமரை மலர்களையொத்த விழிகளையும் கொண்டிருக்கும் சீதை, சுக போகங்களை அனுபவிக்க வேண்டியவர்.  அவர் இவ்வாறு துன்பப்படுவதைப் பார்த்து என் மனமும் வருத்தமடைகிறது.”

     “நிலமகளைப் போல பொறுமை மிக்கவரும், மலர்ந்த தாமரை மலரையொத்த கண்களை உடையவருமான சீதையை, ஸ்ரீராம, இலக்குமணர்கள் பாதுகாத்து வந்தனர்.  அவ்விதம் இருந்த சீதை, இன்று, மரத்தினடியில், குரூரமான அரக்கியரின் பாதுகாப்பில் இருக்கிறார்.”

     “கடும் பனியினால் தாக்கப்பட்ட தாமரை மலரைப் போல ஒளியிழந்து, மீண்டும் மீண்டும் நேரும் இன்னல்களால் மிகுந்த துயரத்தில் இருக்கும் ஜனகனின் மகளாகிய சீதை, தன் இணையிழந்த சக்ரவாகப் பறவையினைப் போல அவல நிலையில் உள்ளார்.”

     “வசந்த காலம் ஆரம்பித்துவிட்டதால், அசோக மரக்கிளைகள் மலர்களால் நிரம்பி, அவற்றின் கனம் தாங்காமல், வளைந்து கிடப்பது, சீதையின் துயரத்தை அதிகரிக்கச் செய்கின்றது.  ஆயிரக்கணக்கான ஒளிக்கதிகர்ளுடன் உதிக்கும் நிலவும் கூட சீதையின் துயரத்தை மேலும் அதிகரிக்கச் செய்கின்றது.”

     வலிமை மிக்க வானரரான ஸ்ரீஅனுமன், இவ்வாறாக பலவித எண்ணங்களால் சூழப்பட்டு, இறுதியில், “இந்தப் பெண்தான் சீதை” என்று உறுதிசெய்து கொண்டு அந்த மரத்தின் மீது அமர்ந்திருந்தார்.

 

                                       பதினாறாவது ஸர்கம் நிறைவு.

Saturday, April 15, 2023

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம். பதினைந்தாவது ஸர்கம்.

 

                              ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம்.

 

                                                     பதினைந்தாவது ஸர்கம்.



    

     அந்த அசோக மரத்தின்  மீதமர்ந்து கொண்டிருந்த ஸ்ரீஅனுமன், அந்த வனம் முழுவதையும் தன் பார்வையால் துழாவி, சீதை இருக்குமிடத்தைக் காண, அந்தப் பகுதியை, கவனமாக முழுமையாகப் பார்த்தார்.

     அந்தப் பகுதி முழுவதும் கல்ப மரங்களாலும் கொடிகளாலும் நிரம்பி, அழகுபடுத்தப்பட்டு, சுகமான நறுமணத்தையும், சுவையான உணர்வுகளையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.

     பலவிதமான விலங்குகளும், பறவைகளும் நிரம்பி, இந்திரனின் (நந்தன வனம்) வனம் போல விரிந்திருந்தது.  மாளிகைகளும் மண்டபங்களும் நிறைந்திருந்தன.  அங்கு குயில்களின் ஓசை கேட்ட வண்ணம் இருந்தது.

     பொன்னிறமான அல்லிமலர்களும், தாமரை மலர்களும் நிரம்பிய குளங்கள் இருந்தன.  அவற்றைச் சுற்றி அமர்வதற்கான இருக்கைகளும், விரிப்புகளும் இருந்தன.  பல தங்கும் குடில்களும் அமைக்கப்பட்டிருந்தன. 

     அனைத்துப் பருவங்களிலும் பூத்து, கனிகளைத் தரும் மரங்கள் அங்கு நிரம்பியிருந்தன.  அசோக மரத்தின் மலர்ந்த மலர்கள், காலை நேர சூரிய உதயத்தைப் போல, அந்த இடத்தை ஒளிரச் செய்து கொண்டிருந்தன.

     அசோகமரத்தின் மீதிருந்து, ஒளிர்ந்துகொண்டிருக்கும் அந்த வனத்தை ஸ்ரீஅனுமன் பார்த்துக்கொண்டிருந்தார்.  பறவைகள் இங்கும் அங்கும் பறந்ததால், அங்கிருந்த மரங்களின் கிளைகளும், இலைகளும் முறிந்து கீழே விழுந்துகொண்டிருந்தன. 

     மரங்களில் மலர்ந்திருந்த பலவகையான பூச்செண்டுகளாலும், நுனிமுதல் வேர் வரை பூக்களால் நிரம்பி, துன்பத்தைப்போக்கிக்கொண்டிருந்த அசோக மரங்களாலும், மலர்களின் கனம் தாங்காமல் வளைந்து, தரையைத் தொட்டுக்கொண்டிருக்கும் செண்பகமரங்களாலும், அழகிய மலர்களைக்கொண்டிருக்கும் பலாச மரங்களாலும், அந்தப் பகுதியே ஒளி மிகுந்து அழகாக இருந்தது. 

     பூநாக மரங்களும், வெண்ணிற சண்பக மலர்கள் பூக்கும் மரங்களும், இது போல் பலவிதமான நிறங்களில் பூத்திருக்கும் மலர்களைக் கொண்டிருந்த மரங்களும், அகன்ற கெட்டியான வேர்ப்பகுதிகளைக் கொண்டிருந்தன.

     அங்கிருந்த நூற்றுக்கணக்கான அசோக மரங்களில், சில பொன்னிறமாக ஒளிவீசிக்கொண்டும், சில நெருப்புப் போல ஜ்வலித்துக்கொண்டும் இருந்தன.   சில மரங்கள் நீல நிறத்திலும், சில மரங்கள் கரிய நிறத்திலும் ஒளி வீசிக்கொண்டிருந்தன. 

     நந்தனனுடைய தேவலோகத்துத் தோட்டத்தைப் போன்று மகிழ்ச்சி தரக் கூடியதாகவும், குபேரனுடைய சைத்ரரதம் என்னும் தோட்டத்தைப் போல அதிசயம் மிக்கதாகவும், இவ்விரண்டையும் விட கற்பனைக்கெட்ட முடியாத அழகு பெற்று அந்த அசோகவனம் விளங்கியது.

     அந்த வனத்தில் நிரம்பியிருந்த பூக்கள் வண்ணமயமான நட்சத்திரங்கள் போல ஒளிர, அது இரண்டாவது ஆகாயமோ என்று நினைக்கும் வண்ணம் இருந்தது.  அங்கிருந்த நூற்றுக்கணக்கான மலர்கள், அந்த வனமானது, விலையுயர்ந்த கற்கள் மின்னும் ஐந்தாவது கடலோ என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியது.  எல்லாப் பருவங்களிலும் கனிகளைத் தரும் நறுமணம் மிக்க மரங்களால் நிறைந்த அந்த வனமானது, பலவிதமான விலங்குகள், பறவைகளைத் தன்னகத்தே கொண்டு, அழகுற விளங்கியது.  அவைகளின் ஒலியானது மிகவும் இன்பம் பயப்பதாக இருந்தது.  அங்கு விளங்கிய நறுமணம், தூய்மையானதாகவும், மனதிற்கினியதாகவும் இருந்தது.  கந்தமாதன மலையைப் போல எங்கும் நறுமணம் வீசியபடி இருந்தது.

     அந்த அசோகவனத்தில் சிறிது தூரத்தில், ஸ்ரீஅனுமன், சைத்யப்ராசாதம் என்னும் ஒரு உயர்ந்த கோயிலைப் பார்த்தார்.  அது ஆயிரக்கணக்கான தூண்களைக் கொண்டிருந்தது.  கைலாய மலையைப் போல வெண்மையாக இருந்தது.  வைரங்களால் இழைக்கப்பட்ட படிகளையும் தங்கத்தால் வேயப்பட்ட தளங்களையும் கொண்டிருந்தது.  மிகவும் ஒளி வீசிக் கொண்டு விண்ணை முட்டும் உயரத்துடன் இருந்தது. 

     அந்தக் கோயிலைப் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீஅனுமன் கண்களில் ஒரு பெண் தென்பட்டாள்.  அவள் கிழிந்த துணிகளுடன், அரக்கியர்களால் சூழப்பட்டு இருந்தாள்.  உணவு உட்கொள்ளாததால், உடல் மெலிந்தும், அடிக்கடி விம்மியபடியும் இருந்தாள். அதே சமயம், அந்தப் பெண், சுக்லபட்சத்துப் பிறைச்சந்திரன் போல களங்கமின்றிக் காணப்பட்டாள்.

     புகை நடுவே தோன்றும் ஒளிமயமான தீநாக்குகள் போல, அந்த உருவம் மெதுவாகக் கண்களுக்குப் புலப்பட்டது.

      சுருக்கம் நிறைந்த ஒரு மஞ்சள் நிறப் பட்டாடையுடுத்தியிருந்த அந்தப் பெண், எந்தவித அலங்காரமுமின்றி, இளைத்துக் காணப்பட்டதால், தாமரை மலர்கள் அற்ற, சேறு நிறைந்த தடாகம் போல களையிழந்து காணப்பட்டாள்.

     தபஸ்வினி போன்று தோற்றமளித்த அந்தப் பெண், துயரம் மிகுந்து, களையிழந்து, செவ்வாய் கிரகத்தால் அழுத்தப்பட்ட ரோகிணி நட்சத்திரம் போல மிகவும் மோசமான நிலையில் இருந்தாள்.

     உண்ணாநோன்பினால் உடல் மெலிந்திருந்த அந்தப் பெண்ணின் முகத்தில் கண்ணீர் பெருக்கெடுத்த வண்ணம் இருந்தது.  துயரத்தாலும், கவலையாலும் பரிதாபமாகக் காட்சியளித்த அந்தப் பெண் இடைவிடாத துயரத்தில் மூழ்கியிருந்தாள்.

     அன்பு காட்டுபவர் யாரும் அவளைச் சுற்றி இல்லாமல், அரக்கியரே அவளைச் சுற்றி அமர்ந்திருந்தனர்.  தன் கூட்டத்தை விட்டுப் பிரிந்த பெண் மான் ஒன்று ஓநாய்கள் கூட்டத்தில் சிக்கிக்கொண்டது போல அவளது நிலை இருந்தது.

     கருநாகம் போலப் பின்புறம் நிலம் வரை நீண்டிருந்த ஒற்றைப் பின்னலைக் கொண்டிருந்த அந்தப் பெண், மழைக்காலத்தின் வனப்பகுதி இருண்டு கிடப்பது போல விளங்கினாள்.

     சுகமான வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டிருந்த அந்தப் பெண், இது போன்ற இன்னல்களுக்குப் பழகியவள் போலத் தோன்றவில்லை.  அகன்ற விழிகளைக் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் மெலிந்த, துயரமான நிலையைக் கண்ட ஸ்ரீஅனுமன், இந்தப் பெண் சீதையாகத்தான் இருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தார்.

     இந்தப் பெண்ணானவள், விருப்பப்படி உருவம் மாற்றிக்கொள்ளும் திறன் படைத்த அரக்கனால் கவரப்பட்ட பொழுது, எவ்விதம் காணப்பட்டாளோ, அவ்விதமே காணப்படுகிறாள்.

     சீதையின் முகமானது முழுநிலவினைப் போல இருந்தது.  அழகிய புருவங்களையும், உருண்டு திரண்ட மார்பகங்களையும் கொண்டிருந்தாள்.  அவளது உடலின் ஒளியால், எல்லாத் திசைகளின் இருளும் விரட்டப்பட்டன.

     அவளது முடி மிகவும் கருமையாக இருந்தது.  உதடுகள் கோவைப்பழம் போலச் சிவந்திருந்தன.   அவளது இடையானது சிறுத்து அழகுடன் விளங்கியது.

     அவளது தாமரை மலர்களையொத்த கண்களைப் பார்க்கும்போது, அவள், மன்மதனின் காதலியான ரதிதேவியை ஒத்திருந்தாள்.  பூமி முழுவதற்கும் ஏற்ற முழுநிலவின் ஒளியழகுடன் அவள் இருந்தாள். 




     தன் நியமங்களைப் பேணும் பெண் முனிவரைப் போல அவள் தரையில் வீற்றிருந்தாள்.  அவள் இயல்பாகவே அச்சத்துடன் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்ததைப் பார்க்கும் போது, பெண் நாகம் போலத் தோற்றமளித்தாள்.

     அதிக துயரத்தில் இருந்ததால், அந்தப் பெண் குன்றிய ஒளியுடன், புகை நடுவே தோன்றும் நெருப்புக் கீற்றுப் போல மங்கலான தோற்றத்தைக் கொடுத்தாள்.

     அவளது நிலையானது, நிச்சயமற்ற நினைவுகள் போலவும், கை நழுவிய செல்வம் போலவும், உடைந்துபோன நம்பிக்கை போலவும், நிறைவேறாத எதிர்ப்பார்ப்புகள் போலவும், பாழ்பட்ட வெற்றி போலவும், தூய்மையிழந்த எண்ணங்கள் போலவும், பொய்யான புகழ் போலவும் இருந்தது.

      பொறியில் சிக்கிக்கொண்ட இளம் மானின் துயரம் மிகுந்த கண்களைப் போல, கலக்கம் கொண்ட கண்களையுடைய அவள், தவிப்புடன் இங்குமங்கும் பார்த்துக்கொண்டிருந்தாள்.

     கறுத்தும், வளைந்தும் காணப்பட்ட புருவங்களையுடைய அவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தபடி இருந்ததால், அவளது முகமானது களையிழந்து காணப்பட்டது. அடிக்கடி பெருமூச்சு விட்ட வண்ணம் இருந்தாள் அந்தப் பெண்.

     அவளது உடலெங்கும் புழுதி படிந்து, களையற்றிருந்தாள்.  உயரிய ஒப்பனைகளுக்கு உரிமையுள்ள பெண்ணாக அவள் இருந்தபோதிலும், இப்போது எந்தவித ஒப்பனையுமின்றி இருந்ததைப் பார்க்கையில், கரிய மேகங்களால் சூழப்பட்ட நிலவு ஒளியற்று காணப்படுவதைப் போல இருந்தாள்.

     முறையாகப் பயிற்சி செய்யப்படாத கல்வியானது, தெளிவான பொருளை உணர்த்தாதது போல, ஸ்ரீஅனுமனுக்கு அவளது தெளிவற்ற நிலையால் சந்தேகம் ஏற்பட்டது.

     நல்ல ஆடையுடுத்தி, ஒப்பனையேதுமில்லாமல், களையற்ற உடலுடன் சீதையிருந்ததைப் பார்த்த ஸ்ரீஅனுமனுக்கு, அவள், இலக்கணத்தையும், தன் பொருளையும் மறந்த சொல் போல அடையாளம் காணப்பட முடியாதவளாக இருந்தாள்.  அவர் மிகவும் சிரமத்துடனே சீதையை அடையாளம் கண்டு கொண்டார்.

     அகன்ற விழிகளையுடைய அரச குமாரியான சீதையை அடையாளம் காண்பதற்கு, ஸ்ரீஅனுமன் பலவேறு காரணங்களை அனுமானித்தார்.

     சீதை அபகரிக்கப்பட்ட பொழுது அவள் அணிந்திருந்ததாக ஸ்ரீராமன் விவரித்தபடியே, இந்தப் பெண்ணின் ஆபரணங்கள் உள்ளன.  காதுகளில் குண்டலங்களும், ஸ்வதம்ஷ்ட்ரம் (நாயின் பற்கள் போன்ற வடிவம்) என்னும் ஆபரணங்களும் இருந்தன.  கைகளில் முத்து, பவழங்கள் பதிக்கப்பட்ட கங்கணங்கள் இருந்தன. 

     நெடு நாட்கள் அணிந்திருந்ததால், சில நகைகள் கறுத்திருந்தன.  அவை அவளின் உடலில் வடுக்களை ஏற்படுத்தியிருந்தன.  ஸ்ரீராமன் சொன்னபடியே நகைகள் உள்ளதாலும், சீதையால் கீழே தவறவிடப்பட்ட நகைகளை அவள் அணிந்திருக்கவில்லையாதலாலும் இவள் சீதையென்பதில் சந்தேகம் ஏதுமில்லை என்று அவர் எண்ணினார்.

     “மலை மீது வீசப்பட்ட தங்க நிற மஞ்சள் பட்டாடையை வானரர்கள் பார்த்தனர்.  தரையில் வீசியெறியப்பட்ட, ஒலியுண்டாக்கக்கூடிய, மிக விலையுயர்ந்த, நகைகளையும் அவர்கள் பார்த்தனர்.  அவைகள் யாவும் இவரால் வீசப்பட்டவையாகவே இருக்க முடியும்.”

     “நெடுநாட்கள் அணிந்திருந்ததால் அவரது ஆடை பழையதாகிவிட்டிருந்தாலும், அதனுடைய மஞ்சள் நிறம் மங்கிவிடவில்லை.  இந்த ஆடையின் ஒளியானது வீசியெறியப்பட்ட துணியைப் போலவே ஒளிர்கிறது.”

     “ஸ்ரீராமனின் மனங்கவர்ந்த, பொன்னிற மேனியையுடைய பேரரசியான சீதை, அவரின் கண்களை விட்டு நீங்கினாலும், மனதை விட்டு நீங்காமல் இருக்கிறார்.”

     “ஸ்ரீராமன், கருணை, இரக்கம், துயரம், அன்பு ஆகிய நான்கு வகையான உணர்வுகளால் பரிதவிக்கக் காரணமான சீதை, இந்தப் பெண்ணாகத்தான் இருக்க முடியும்.”

     “ஒரு பெண் அபகரிக்கப்பட்டுக் காணாமல் போனதால் கருணையும், அவள் தம்மிடம் அடைக்கலமாக இருந்த பெண் என்பதால் இரக்கமும், அவள் தன் மனைவியே என்பதால் துயரமும், அந்த அன்பு மனைவி பிரிந்ததால், காதல் விரகமும் ஸ்ரீராமனுக்கு ஏற்பட்டன.”

     “ஸ்ரீராமனின் சீர்மிகுந்த உடலமைப்பைப் போலவே இந்தப் பெண்ணின் உடலமைப்பும் உள்ளது.  ஆகவே, கரிய நிற விழிகளைக் கொண்டிருக்கும் இந்தப் பெண் தான் ஸ்ரீராமனின் மனைவியான சீதையாக இருக்க முடியும்.”

     “இந்தத் தேவியின் நினைவெல்லாம் ஸ்ரீராமனிடமும், ஸ்ரீராமனின் நினைவெல்லாம் இந்தத் தேவியிடமும் நிலைகொண்டிருப்பதால்தான் இருவரும் உயிர் தரித்துள்ளனர்.  அவர்கள் கண நேரமே உயிர் தரித்திருந்தாலும், அதற்கு, இதுவே காரணமாகும்.”

     “மனைவியைப் பிரிந்த பின்னும் ஸ்ரீராமன், துயரத்தால் தன்னை இழந்துவிடாமல், தன் உயிரைத் தரித்திருப்பது மிகவும் அரிய செயலாகும்.”

     இவ்விதம் அங்கு சீதையைக் கண்டதும் ஸ்ரீஅனுமன் பலவாறாக எண்ணி மிகவும் மகிழ்ச்சி கொண்டார்.  மனமெங்கும் ஸ்ரீராமனை நினைந்து, சீதை போன்ற சிறந்த பெண்மணியை மனைவியாக அவர் பெற்றதற்கு அவரைப் போற்றத் தொடங்கினார்.

 

                                     பதினைந்தாவது ஸர்கம் நிறைவு.

Tuesday, April 11, 2023

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம். பதினான்காவது ஸர்கம்.

 

                         ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம்.

 

                                                       பதினான்காவது ஸர்கம்.


                                        


 

     ஒரு முகூர்த்த நேரத்திற்கு இவ்விதம் பலவித யோசனைகளில் ஆழ்ந்திருந்த, மிகவும் ஒளி பொருந்திய ஸ்ரீஅனுமன், மனதில் செய்துகொண்ட முடிவுடன், இராவணனது மாளிகையில் இருந்து குதித்து இறங்கி, அசோகவனத்தின் மதில்சுவற்றை அடைந்தார்.

     உற்சாக மிகுதியால் சிலிர்த்த உடலுடன், அசோக வனத்தின் மதில்சுவற்றில் அமர்ந்திருந்த ஸ்ரீஅனுமன், வசந்தகாலம் வந்துவிட்டதை உணர்த்தும் விதமாக, கிளைநுனிகளில் பலவிதமான வண்ண மலர்கள் பூத்திருந்த பலவிதமான மரங்களைப் பார்த்தார்.

     அங்கே சால் முதலிய தேக்கு மரங்களும், அழகிய அசோக மரங்களும், சம்பக மற்றும் நாககேசர மரங்களும், குரங்கின் முகம் போன்று சிவந்த பழங்களைக் கொண்டிருந்த மா மரங்களும் பூத்துக் குலுங்குவதைக் கண்டார்.

     நூற்றுக்கணக்கான கொடிகள் பின்னிக் கிடந்த ஏராளமான மரங்களும், மாந்தோப்புகளும் நிறைந்திருந்த அந்த அசோகவனத்தின் உள்ளே, வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல மின்னல் வேகத்தில் ஸ்ரீஅனுமன் நுழைந்தார்.

     வியப்பைத்தரும் அந்த அசோகவனத்தில், நாலாபுறத்திலும் தங்கம் மற்றும் வெள்ளியின் நிறத்தில் மரங்கள் இருந்தன.  மரங்களிலிருந்த பறவைகள் எழுப்பிய ஒலி எங்கும் ஒலித்துக்கொண்டிருந்தது.  உள்ளே நுழைந்த ஸ்ரீஅனுமன், சுற்றிலும் தன் பார்வையைச் செலுத்தினார்.  அங்கிருந்த விதவிதமான பறவைகளும் மான் கூட்டங்களும் வியப்பானதொரு உணர்வை ஏற்படுத்தின.  அந்த வனமானது உதிக்கின்ற சூரியனின் செந்நிறத்தில் இருந்ததைக் கண்டார்.

     அங்கிருந்த பலவிதமான மரங்களில் பூத்துக்குலுங்கிய மலர்களால் கவரப்பட்டு, மதிமயங்கிய குயில்களும் வண்டினங்களும், அந்தப் பூக்களைச் சுற்றிச் சுற்றிப் பறந்துகொண்டிருந்தன.

     அந்த வனத்தினுள் மனிதர்கள் மகிழ்வுற்று இருக்க, விலங்குகளும் பறவைகளும் மதிமயங்கி அலைந்துகொண்டிருந்தன.  இணைதேடும் மயில்களின் அகவல் ஒலிகள் கேட்டுக்கொண்டே இருந்தன.  அங்கு பலவகையான பறவைகள் வசித்து வந்தன.

     குறைகளற்ற வனப்புடைய அரசகுமாரியான சீதையைத் தேடும் பணியைத் தொடங்கிய ஸ்ரீஅனுமன், தன்னுடைய செயல்களால், சுகமான உறக்கத்தில் இருந்த பறவைகளை விழித்துக்கொள்ளச் செய்தார்.

     அதனால் கூடுகளிலிருந்து பறவைகள் பறந்ததால், அவற்றின் இறகுகளால் அசைக்கப்பட்டு, மரங்களிலிருந்து பலவிதமான வண்ண மலர்கள் மழையைப் போல நிலத்தின் மீது சொரிந்தன.

     வாயுகுமாரனான ஸ்ரீஅனுமனின் உடல் முழுவதும் பல வண்ணப்பூக்கள் தெளிக்கப்பட்டு, அந்த அசோக வனத்தில், அவர் ஒரு மலர்களாலான மலையைப் போலத் தோற்றமளித்தார்.

     அசோக வனத்தின் எல்லாத் திசைகளிலும், மரங்களினூடேயும் ஓடித்திரிந்த ஸ்ரீஅனுமனைப் பார்த்த அனைத்து உயிரினங்களும், வசந்தத்தின் அரசனே வானர வடிவெடுத்து வந்துள்ளானோ? என்று வியந்தனர்.

     மரங்களிலிருந்து உதிர்ந்த வண்ண மலர்களால் நிரம்பியிருந்த அந்த அசோகவனத்தின் தரையானது, பலவிதமான பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு மங்கையைப் போலத் தோற்றமளித்தது.

     மிகுந்த ஆற்றல் மிக்க வானர வீரரான ஸ்ரீஅனுமனால் வேகமாக அந்த மரங்கள் அசைக்கப்பட்டதால், பல வண்ண மலர்கள் மழையைப் போலத் தூவிக்கொண்டிருந்தன.

     ஸ்ரீஅனுமனின் வேகத்தால் அலைக்கழிக்கப்பட்ட அந்த மரங்கள், தங்களது கிளைகள், இலைகள், பூக்கள், கனிகள் யாவற்றையும் இழந்து நின்ற காட்சியானது, சூதாடித் தோற்றுப்போனவர்கள் தங்கள் ஆபரணங்களையும், விலையுயர்ந்த உடைகளையும் இழந்து நிற்பது போல இருந்தது.

     மலர்களாலும் கனிகளாலும் நிறைந்திருந்த அந்த மரங்கள், ஸ்ரீஅனுமனது வேகத்தைத் தாளாது, அவையத்தனையையும் இழந்து நின்றன.

     இலைகளும் கனிகளும் இல்லாது வெறும் கிளைகளோடு இருந்த அந்த மரங்களிலிருந்து பறவைக்கூட்டங்கள் இடம் பெயர்ந்துவிட்டதால், அவை கவனிப்பாரற்றுக் கிடந்தன.

     ஸ்ரீஅனுமனது கை, கால்கள் மற்றும் வால் இவற்றினால் தாக்கப்பட்டு, மரங்கள் நிர்மூலமானதால், அந்த அசோக வனமானது, அழகிய பெண்ணானவள், காமக்கேளிக்கைகளால் அலைக்கழிக்கப்பட்டு, அவிழ்ந்த தலைமுடியுடன், பூசியிருந்த சந்தனம் கலைந்து, உலர்ந்த உதடுகளுடனும், மேனியெங்கும் நகங்கள் மற்றும் பற்களால் உண்டான காயங்களுடன் இருப்பதைப் போல இருந்தது. 

     வீசும் காற்றானது, மழைக்கால மேகங்களை அலைக்கழித்து விசிறியடிப்பதுபோல, ஸ்ரீஅனுமன் தனது வேகத்தினால், மரங்களைச் சுற்றியிருந்த கொடிகளையும், புதர்களையும் கலைத்து எறிந்தார்.

     அந்த வனத்தின் பல இடங்களில் உலவிவந்த ஸ்ரீஅனுமன், அங்கிருந்த நிலப்பகுதிகள், தங்கம், வெள்ளி போன்றவற்றாலும், முத்து, வைரம் போன்ற கற்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்ததைக் கண்டார்.

          அந்த வனத்தினில் பல வடிவங்களில் தூய்மையான நீரால் நிரப்பப்பட்ட தடாகங்கள் இருந்தன.  அவற்றின் படிக்கட்டுக்கள் கற்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.  முத்துக்களும் பவழங்களும் மணல்திட்டுக்கள் போல அவற்றைச் சூழ்ந்திருந்தன.  அந்தத் தடாகங்களின் தரைப்பகுதிகள் ஸ்படிகக் கற்களால் நிரவப்பட்டிருந்தன.  அந்தத் தடாகங்களைச் சுற்றிலும் விதவிதமான பொன்னிற மரங்கள் இருந்தன. 

     அந்தக் குளங்களில் தாமரைப்பூக்கள் பூத்திருந்த செடிகள் அடர்ந்திருந்தன.  சக்ரவாகப் பறவைகள் தங்கள் இணையுடன் சுற்றிச்சுற்றி வந்தவண்ணம் இருந்தன.  கொக்கு, அன்னப்பறவை போன்றவற்றின் குரல்கள் அங்கு கேட்ட வண்ணம் இருந்தன.

     அமுதம் போன்ற இனிமையான நீரினால் நிரம்பியிருந்த அந்தக் குளங்களின் கரைகளில் உயரமான மரங்கள் சூழ்ந்திருந்தன.  கண்களுக்கு விருந்தளித்த வண்ணம், நான்கு திசைகளிலிருந்தும் ஓடைகள் அந்தக் குளங்களுக்கு நீரைக் கொண்டு சேர்த்தன. 

     அந்தத் தடாகங்களின் கரைகளில் ஆயிரக்கணக்கான செடி,கொடிகள் புதர்போல மண்டியிருந்தன.  நன்கு பூத்துக்குலுங்கிய கல்ப மரங்கள் அவற்றைச் சூழ்ந்திருந்தன.  இடையிடையே பூத்திருந்த மரங்கள், அவற்றை அலங்கரித்தது போல இருந்தன. 

     பிறகு ஸ்ரீஅனுமன், உயரமான சிகரம் கொண்ட, மேகத்திற்கு ஒப்பான மலையொன்றை அங்கே கண்டார்.  அந்த மலையில் மலைமுகடுகள் வியப்பைத்தருவதாய் இருந்தன.  பல்வேறு மலைக்குன்றுகள் அந்த மலையைச் சூழ்ந்திருந்தன.  அந்த மலையில் பாறைகளால் ஆன குகைகள் பல இருந்தன.  பலவிதமான மரங்களும் வளர்ந்திருந்தன. 

     காதலனின் மடியிலிருந்து துள்ளி விழும் மங்கையைப் போல, அந்த மலையிலிருந்து விழுந்து ஓடி வரும் ஒரு நதியினை ஸ்ரீஅனுமன் கண்டார். 

     காதலனிடம் ஊடல் கொண்டு, பிரிந்துசெல்லும் பெண்ணை, அவளது உறவினர்கள் தடுத்து நிறுத்துவது போல, அந்த நதிக்கரையின் கரையிலிருந்த மரங்களின் கிளைகள், அந்த நதியில் ஓடிக்கொண்டிருந்த நீரின் மீது வளைந்து, படர்ந்து அவற்றின் வேகத்தைக் குறைத்து அழகு சேர்த்தன. 

     மரக்கிளைகளால் தன் வேகம் குறைந்து, தான் வந்த திசையில் திரும்பிச்சென்ற நதியைப் பார்க்கும்போது, கோபம் குறைந்த காதலி, மகிழ்வுடன் தன் காதலனை நாடி, திரும்பிச்செல்வது போலத் தோன்றியது.

     அந்த மலையின் அருகில், தாமரை மலர்கள் நிரம்பியிருந்த குளத்தைக்கண்ட ஸ்ரீஅனுமன், அங்கு பல பறவைகள் மகிழ்ச்சியுடன் ஒலியெழுப்பியவண்ணம் இருந்ததையும் கண்டார்.  அதற்கு அருகில், குளிர்ந்த நீரால் நிரப்பப்பட்டிருந்த ஒரு குளத்தையும் அவர் கண்டார்.  அதில் விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட படிக்கட்டுக்கள் இருந்தன.  முத்துக்கள் மணல் போல அங்கே நிரம்பியிருந்தன. 

     தேவதச்சன் விஸ்வகர்மாவினால் கட்டப்பட்ட பல மாளிகைகள், அங்கே அழகிய மரங்களால் சூழப்பட்டிருந்தன.  பலவகையான மிருகங்கள் அங்கே அலைந்து திரிந்தன.  பல அழகிய மலர்த்தோட்டங்கள் அங்கே இருந்தன. 

     மலர்களும் கனிகளும் நிரம்பியிருந்த மரங்கள் குடை போலக் கவிழ்ந்து அடர்ந்த நிழலைத் தந்தன.  தரைகள் வெள்ளியாலும், கூரைகள் தங்கத்தாலும் வேயப்பட்ட மேடைகள் அங்கே இருந்தன.

     அங்கே ஸ்ரீஅனுமன் பொன்னிறத்தாலான ஒரு அசோக மரத்தைக்(ஸிம்சுபா) கண்டார்.  அந்த மரத்தைச் சுற்றிப் பலவித செடிகொடிகள் இருந்தன. அந்த மரத்தைச் சுற்றி, ஒரு தங்க நிற மேடை அமைக்கப்பட்டிருந்தது. 

     மேலும் அந்த மலைப்பகுதியில், பலவித திறந்த சமவெளிகளையும், மலையருவிகளையும் நெருப்புப் போல ஒளிவீசக்கூடிய மரங்களையும் ஸ்ரீஅனுமன் கண்டார்.

     மேரு மலையைப் போன்ற பொன்னிற ஒளி மிகுந்த மரங்களின் காரணமாக, தானும் பொன்னிறத்தில் மின்னுவது போல ஸ்ரீஅனுமன் உணர்ந்தார்.

     அந்தப் பொன்னிறமான மரங்களினிடையே காற்று நுழைந்து செல்கையில், நூற்றுக்கணக்கான மணிகள் அசைந்து ஒலியெழுப்புவது போல இருந்ததைக் கண்டு ஸ்ரீஅனுமன் வியப்புற்றார்.  அந்த மரங்களில் கிளைகளில் விதவிதமான கனிகள், மலர்கள், விதைகள் ஆகியவை நிரம்பி வழிந்து மிகவும் அழகாக இருந்தன.  மிகுந்த இலைகளுடன் இருந்த அந்த அசோக மரத்தின் மீது ஸ்ரீஅனுமன் ஏறத்தொடங்கினார்.

     “இராமனைக் காணும் ஆவலில், துயரம் தோய்ந்த வைதேஹி, இங்கு தற்செயலாக வரப்பெற்றால், நான் அவளைக் காண்பேன்” என்று பெரும் தோள்வலியரான  ஸ்ரீஅனுமன் நினைத்தார்.

     “கெட்ட எண்ணம் கொண்ட இராவணனின் இந்த அசோகவனமோ, சந்தனம், சண்பகம் மற்றும் வகுள மரங்களால் நிரம்பி மிகவும் வனப்புடன் உள்ளது.”

     “தாமரை மலர்கள் நிரம்பி, பறவைகள் வசிக்கும் இந்த அற்புதமான குளத்தை நோக்கி, இராகவனின் அன்பு மனைவியான சீதை நிச்சயமாக வருவார்.”

     “இராகவனின் அன்பிற்குரியவளும், அரசகுமாரியுமான சீதை, காடுகளில் அதிகம் அலைந்து திரிந்துள்ளதால், இந்த அழகிய இடத்தைக்காண நிச்சயம் வருவார்.”

     “இல்லையேல், இராமனது பிரிவால் துயருற்று மெலிந்து வாடும், மானின் விழிகளையொத்த விழிகளைக் கொண்டவளான சீதை, காடுகளைப் பற்றி அறிந்துள்ளதால், இந்த வனப்புமிக்க இடத்திற்கு அவசியம் வருவார்.”

     “இராமனின் பிரிவால் விரகதாபத்தில் வாடும், மிக அழகிய விழிகளைக் கொண்ட சீதைக்கு காடுகளில் வசிப்பது மிகவும் பிடித்தமான ஒன்றாகையால், அவர் அவசியம் இந்த இடத்தை நாடி வருவார்.”

     “ஜனகனின் மகளும், இராமனின் அன்பினுக்கினிய மனைவியுமான சீதைக்கு வன வலங்குகளிடம் அன்பு அதிகம்.  ஆகவே, அவர் அவைகளை நாடி நிச்சயம் இங்கு வருவார்.”

     “எப்பொழுதும் இளமை மாறாத ஜனக குமாரி சீதா, தனது காலை நேரப் ப்ரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்காக, இந்தக் காலை நேரத்தில், மிகவும் தூய்மையான நீரைக் கொண்ட இந்த இடத்தை நாடி வருவார்.”

     “அரசருக்கெல்லாம் அரசனாகிய ஸ்ரீராமனின் மதிப்பிற்குரிய மனைவியின் இயல்புகளுக்கு ஏற்றவாறு இந்த அசோகவனமானது எல்லாத் தகுதிகளையும் பெற்றுள்ளது.”

     “நிலவின் முகமொத்த வனப்பு மிக்க தோற்றம் கொண்ட சீதை, உயிருடன் இருப்பாரானால், இந்த குளிர்ந்த நீரைக்கொண்ட ஓடைக்கரைக்கு நிச்சயம் வருவார்.”

     இவ்வாறாக, பலவிதமான எண்ணங்களால் நிரம்பியிருந்த ஸ்ரீஅனுமன், மனிதர்களின் மாபெரும் அரசனான ஸ்ரீராமனின் மனைவியான சீதையின் வரவை எதிர்பார்த்து, அடர்ந்த இலைகளைக் கொண்டிருந்த அந்த அசோகமரத்தில் தன்னை மறைத்துக்கொண்டு, அந்தத் தோட்டம் முழுவதிலும் தன் பார்வையைச் செலுத்தினார்.




 

 

                      பதினான்காவது ஸர்கம் நிறைவு.

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...