Sunday, November 28, 2010
ஹைக்கூ
காலை முதல் அடைமழை
வானம் கருக்க:
இரைதேடும் பறவைகள்.
Thursday, October 14, 2010
அட ராமா! தொடர்கிறது...
இதற்கு நடுவே வண்டியின் நடத்துனர் அவ்வப்பொழுது குண்டு போட்டுக்கொண்டிருந்தார். நாளை தீர்ப்பை முன்னிட்டு பந்த் நடப்பதால் பேருந்துகள் ஓடாது என்றும் சொன்னார். மீண்டும் மனம் கலைய (அலைய) ஆரம்பித்தது. பூமா ரொம்ப strong . என்ன ஆனாலும் சென்று பார்த்து விடலாம் என்று முடிவெடுத்ததும் சற்று நிம்மதியாக உணர முடிந்தது.
சரியாக மாலை ஆறு மணிக்கு மைசூர் சென்று அடைந்தோம். தரையில் காலடி பட்டதும் lodge புரோக்கர்களால் சூழப்பட்டோம். முன்பு தாசரதி இன்போசிஸ்-ல் சேரும்போது தங்கிய ஹோட்டலுக்கே சென்றோம். கூடவே அந்த ப்ரோக்கரும் வந்தார். தங்க அறை கிடைத்தது. வாடகை மிக அதிகம். (தசராவுக்கு முன்பே இந்த நிலை என்றால்...?) அந்த ப்ரோக்கரே K R NAGARA செல்வதற்கு கார் ஏற்பாடு செய்து தருவதாக கூற, அயோத்தி ராமர் மேல் பாரத்தைப்போட்டுவிட்டு , மறுநாள் காலை ஐந்து மணிக்கே கிளம்ப முடிவானது. மருத்துவ மணிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச, காலை 6.30 மணிக்கு வரச்சொன்னார்கள். (k r nagara மைசூரிலிருந்து 40 கல் தொலைவில் ஹாசன் செல்லும் வழியில் உள்ளது).
மறுநாள் காலை சரியாக 5.30 மணிக்கு கார் வந்துவிட்டது. ஊரே அமைதியாக இருந்த அந்த நேரத்தில் எங்கள் பயணம் தொடர்ந்தது. வழியெங்கும் நல்ல மூடு பனி. பயணத்தை அனுபவிக்க முடியாதபடி ஒருவகையான TENSION.
அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, அயோத்தி ராமருக்கும் டாக்டர் மெஹபூப் கானுக்கும் சம்பந்தம் இருந்தால் என்ன செய்வது என்றும் ஒரு பயம்).
அந்த ப்ரோக்கர் வண்டி தேடும் போதே வண்டியின் ஓட்டுனர் ஒரு இந்துவாக இருக்கவேண்டும் என்று தேட, இது ஏதப்பா, பெரிய பிரச்சினையாக இருக்குமோ என்றும் ஒரு புறம் அச்சமாக இருந்தது. வண்டி ஓட்டுனரும் இந்துவாக இருந்தார். வண்டியின் review mirror ல் காவிக்கொடி சுற்றப்பட்டு வண்டி தைரியமாக சென்று கொண்டிருந்தது. போகவர வாடகை பேசி இருந்ததால் திரும்பி வருவது பற்றி கவலை இல்லை. சரியாக 6.30 மணிக்கு மருத்துவ மனைக்கு சென்றால் அங்கே...
ஏற்கனவே முப்பது பேருக்கும் மேல் காத்துக்கொண்டு இருந்தார்கள். சாலை மீதே இருந்த ஒரு சிறிய கட்டிடம். என்னுடைய token 26 . டாக்டர் ஏழு மணிக்குத்தான் வருவார் என்பதால், அருகில் இருந்த shed ல் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்து கொண்டோம். அங்கு இருந்த சிறிய டீ கடையில் சூடான டீ கிடைத்தது. காலை ஐந்து மணியிலிருந்தே நோயாளிகள் வந்து அமர்ந்து இருந்தார்கள்.
(தொடர்வேன்.....)
Monday, October 4, 2010
அட ராமா!
சரி! மைசூர் எதற்கு? விடுமுறையை கொண்டாடவா? இல்லை ஐயா. மைசூருக்கு அருகில் K.R.NAGARA வில் ஒரு unani மருத்துவர் (Dr.Mehaboobkhan) முதுகு வலிக்கு மற்றும் எல்லாவித எலும்பு சம்பந்தமான வலிகளுக்கும் நிவாரணம் அளிப்பதாக செய்தி கேள்விப்பட்டதால் இந்த பயணம் அமைந்தது. என்னுடைய விருப்ப ஓய்வு பிரிவு உபசார விழாவிலேயே இந்த சிகிச்சை எனக்கு பரிந்துரைக்கப்பட்டது. சென்ற வாரம் கோவை சென்றிருந்த போது என் அக்கா கீதாவினால் மீண்டும் அறிவுறுத்தப்பட்டதால் (அவளும் உடன் வர இருந்து சில பல காரணங்களினால் அவள் வர இயலவில்லை- எனவே தள்ளிப்போடப்பட்ட பயணம்) இன்று கைகூடியது.
இது ஒரு matteraa? 29-ம் தேதி புறப்பட சற்று முன்பு வீட்டு வாசலில் குண்டு ஒன்று வெடித்தது செய்தித்தாள் மூலமாக. ஆம்! அயோத்தி ராமருக்கு நாளை (30-ம் தேதி) தீர்ப்பு. ஐம்பது வருடங்களாக கோவில் இல்லாமல் (அயோத்தியில்) இருந்த ராமருக்கு நாளை அல்லாஹாபாத் (நல்ல பேர்!) நீதிமன்றம் மாலை மூன்று மணிக்கு நீதி வழங்க இருப்பதாக செய்தி. ஆகா! அப்பொழுதே அடி வயிறு கலங்க ஆரம்பித்துவிட்டது. நாங்கள் மைசூருக்கு செல்வது ராமருக்கே பொறுக்கவில்லையோ என்று மனம் கலங்க, எல்லாம் ராமர் விட்ட வழி என்று புறப்பட்டு விட்டோம்.
வள்ளுவரில் இட்லிகளுடன் ஆரம்பித்து பஸ் நிலையம் வர கிடைத்த ஈரோடு பேருந்தில் ஏற, கடைசி சீட் வேண்டாம் என்று இறங்கிவிட அடுத்த வண்டிக்கு இன்னும் அரை மணி நேரத்திற்கு மேலாகும் என கேள்விப்பட, ஆகா, ராமா ! இது என்ன சோதனை(மைசூர் வரை செல்ல வேண்டுமே) என்று மனம் அரற்ற ஆரம்பித்துவிட்டது. அந்த வண்டியிலேயே சென்றிருக்கலாமோ என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது நேராக மைசூர் செல்லும் பேருந்தே வந்ததைப் பார்த்ததும் உடம்பும் மனமும் புல்லரித்து விட்டது. ராமன் எங்களை கை விடவில்லை. நானும் உங்களுடன் வருகிறேன் என்பது போலவே இது நிகழ்ந்தது. வசதியான இருக்கைகள் கிடைக்க பயணம் இனிதே துவங்கியது. மாலை ஆறு மணிக்கு மைசூர் சென்று விடலாம் என்று நடத்துனர் சொல்லியிருந்தார்.
ஈரோடு வரை வண்டியில் வண்டியில் எக்கச்சக்க கூட்டம். கொடுமுடி தாண்டி இருக்கமாட்டோம். கீதாவிடமிருந்து phone. நாளை தீர்ப்பில் நாடே கொந்தளிக்கப்போகிறது என்று கேள்விப்பட்டதால் பயணத்தைத் தொடரவேண்டாம், திரும்பி கரூருக்கே சென்று விடவும் என்று சொல்லககேட்டதும் மீண்டும் குழப்பம். நடப்பது நடக்கட்டும் என்று மனம் தெளிய வண்டியில் ஒளிபரப்பிய திரைப்படத்தில் கவனத்தைத் திருப்பினேன்....
(மீண்டும் தொடர்வேன்...)
Saturday, September 4, 2010
உங்கள் பார்வைக்காக:
வடமொழி வான்மீகி வாழ்ந்து வரைந்த
தடந்தோள் இராமன் கதையை – திடமுடன்
செம்மொழி தண்தமிழ் செப்பிய மாகவி
கம்பன் கவியே கவி. -----(1)
அண்ணலும் நோக்க அவளும், உயிரில்
கன்னலெனப் பூத்தநற் காதலைப் – பண்ணாக்கி
நம்மின மாந்தர்க்கு நன்றிதைச் சொல்லிய
கம்பன் கவியே கவி. -----(2)
கற்பின் அணியினைக் கண்களால் கண்டபின்
சுற்றம் சுருங்க வுரைத்தசொல் – விற்பனன்
பெம்மான் அனுமன் சிறப்பை நயந்துரைத்த
கம்பன் கவியே கவி. -----(3)
வானர மன்னனை வீடணனு டஞ்சேர்த்து
கானவன் தன்னுடன் ஏழாக்கி – மானவர்
தம்மிடை யாவருங் கேளிரே வென்றநம்
கம்பன் கவியே கவி. -----(4)
(கானவன் – வேடன் – குகன்)
கண்ணிலான் பெற்றிழந்த வண்ணம் தயரதன்
எண்ணிலாத் துன்ப முழந்துயிர் – மண்ணிலே
வெம்ப மகன்கானே குங்கதை சொன்னநம்
கம்பன் கவியே கவி. -----(5)
தாரிடை வண்டுறங்கும் நல்லுவமை போலாங்கே
தூரிகை வண்ணம் தெரிந்தெடுத்து – சீரிய
தெம்புடன் ராமன் சரிதம் வரைந்திட்ட
கமபன் கவியே கவி. -----(6)
இந்திரன் இச்சை யகலிகை கல்லாக்க
தந்திரத் தாலேதான் தானிழந்தாள் – மந்திர
வம்புடை மாதரின் கற்பினைப் பாடிய
கம்பன் கவியே கவி. -----(7)
(வம்பு – நறுமணம்)
பிறன்மனை நோக்கிய பித்தர்தம் வாழ்வு
உறவழிந் தேகும் நரகம் - மரபிது
வென்றே தகைவுடன் பாடி நெறிசொன்ன
கம்பன் கவியே கவி. -----(8)
கற்றவை நில்லா தொழுகிய வாலியைக்
கொற்றவன் நில்லா துமுன்கொல்ல – உற்றது
உம்பர்க் கழகே வெனவுணர்த் திட்டபெருங்
கம்பன் கவியே கவி. ------(9)
அஞ்சனை மைந்தன் அரக்கன் நெருப்பிட
வெஞ்சினங் கொண்டு நகரமே – அஞ்சிட
விம்மிய லங்கை யெரித்த விதம்சொன்ன
கம்பன் கவியே கவி. ------(10)
Monday, August 30, 2010
வேங்கடேசாய மங்களம்.
நாராயண் மூர்த்தி.....
வேலூர் அக்ரஹாரா வாசிகளுக்கு இது நினைவிருகின்றதா? எனக்கும் மறந்து தான் விட்டது. நேற்று பெரிய சீனியிடம் பேசிக்கொண்டிருந்த போது, சனிக்கிழமை திருப்பதி வெங்கடா சலபதிக்கு மாவிளக்கு ஏற்றியது பற்றி சொன்னபோது, அவனால் நினவு ஊட்டப்பட்ட அந்த நினைவுகள்...
புரட்டாசி மாதம் பிறந்து விட்டால்.. ஒவ்வொரு சனிக்கிழமையும் கிழக்குத்தெரு பையன்கள் வரிசையாக, கும்பல் கும்பலாக ,
(அதில் பாதிப்பேர் குளித்தே இருக்க மாட்டார்கள்..)
வெங்கட்ராமா கோவிந்தா...
நாராயண மூர்த்தி...
என்று கூவிக்கொண்டு அரிசிக்காக படையெடுப்பு நிகழ்த்தும் போது, ஏதோ சிலருக்கு மட்டும் அரிசி போட்டுவிட்டு மிகுதிப்பேரை விரட்டி அடிக்கும் நிகழ்ச்சி தவறாமல் நடக்கும். இன்றும் அதெல்லாம் நடக்கின்றதா என்று தெரியவில்லை.
ஸ்ராவண சனிவாரம்... மாவிடித்து விளக்கேற்றும் வைபவம்;
ஐயா இது ஒன்றும் சாதாரண நிகழ்ச்சி அல்ல. வீட்டு அரிசியினால் இது நிகழாது. வெள்ளிகிழமையே ஒரு பயம் வந்து விடும். சனிக்கிழமை காலை குளித்து விட்டு நாமம் இட்டுக்கொண்டு பட்டு உடுத்திக் கொள்ள வேண்டும். அப்பா சந்தியாவண்ண பேழாவில் சுற்றி சுண்ணாம்பால் வளையமிட்டு குங்குமப் போட்டு வைத்து என் கையில் கொடுத்து விடுவார்கள். அப்போதே கண்களில் நீர் கட்டி விடும்,,, பிறகு...?
குறைந்தது ஐந்து வீடுகளுக்குச் சென்று 'வேங்கடேசாய மங்களம்" என்று கூறி அரிசி வாங்கி வர வேண்டும். வெட்கமும் கோபமும் இணைய சாமி பயம் வேறு. விதிப்படி அய்யர் வீடு, பேங்க் ராம ராவ் வீடு, அய்யங்கார் மாமி வீடு, சென்னம்மா அத்தை வீடு, வெள்ளமண்டி அய்யர் வீடு .... அப்பா போதுமடா சாமி என்று வீட்டுக்கு ஓடி வந்து அரிசியைத் தர வேண்டும். பிறகு அதை ஊற வைத்து மாவிடித்து , விளக்கேற்றி ....
பக்திக்கு மீறிய பயத்துடனும் சலிப்புடனும் வெட்கத்துடனும் செய்யப்பட இந்த வேலை..
என் குழந்தைகளுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு எங்களை சுற்றி இருந்த அக்கிரகாரமும் இல்லை, அந்த மனிதர்களும் இல்லை.
முதல் முறையாக அம்மாவும் அப்பாவும் இல்லாத வீட்டில் நான் மட்டும் பூமாவுடன் ஏதோ காமா சோமாவென்று மாவிளக்கு ஏற்றியபோது,
சலிப்பும் கோபமும் காணாமல் போய்விட்டிருந்தது..
.
oru kolaththin udhayam
தை மாதக் குளிரிலும் அந்த சின்ன ஊரை அழகு படுத்த கங்கணம் கட்டினாற்போல் எல்லாப் பெண்களும் திரட்டி அடித்துக்கொண்டு அதிகாலையில் எழுந்திருந்தார்கள். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் வாளியினால் தண்ணீரை இறைத்தபின், மண்ணின் நிறம் ஆழமான பழுப்பு நிறமாக இருண்டது. ஈர மண்ணின் லேசான மழை வாடை, துல்லியமாக மூக்கைத் துளைத்தது. புழுதி அடங்கிய ஈர மண்ணில் குளுமையான அமைதி. எதோ ஒன்றை எதிர்பார்க்கும் அந்த ஈர வெற்று மண்ணின் ஒரு கணத்தின் நிதானம். அடுத்த வினாடி கறுத்த மண்ணின் மேல் பளீரென்று வெள்ளைப்புள்ளிகள் ஒன்றன் பின் ஒன்றாக சீராக வந்து விழுந்தன. ஈரம் உலர உலர முதலில் சாதுவாக வைக்கப்பட்ட புள்ளிகள் பிரகாசமான நட்சத்திரகளைப்போல் காட்சி அளித்தன. ஒரு வினாடி அந்த சாதாரண மண் தரை புள்ளிமான் தோலாகக் கண் முன்னே விரிந்தது. ஒவ்வொரு புள்ளியும் ஏகாந்தமான கிரகத்தின் வரிசையில், தனித்தன்மையுள்ள ஒரூ செருக்குடன் காட்சியளித்தன. மறு வினாடியே, குனிந்த அந்தப் பெண்களின் விறுவிறுப்பான விரல்கள், அலட்சியமாக இங்கேயும் அங்கேயும் கோடுகளை, வளைவுகளை இழுத்து, ஒரு கணம் தனிச்செருக்குடன் நின்ற புள்ளிகளை இணைத்து, அவர்களுக்கிடையில் மர்ம உறவுகளை ஏற்படுத்தினார்கள். தனி புள்ளிகளின் அகம் அகன்ற பின் கோல பந்தத்தின் குழைவுகளில் தோற்றம் மாறியது.
நன்றி: காவேரி கதைகள்; கண்ணாடி சுவர்கள்.
Friday, April 16, 2010
சித்தப்பா...
சித்தப்பாவும் மறைந்து விட்டார்..
தமிழைத் தன்னுள் அடக்கி
தன குடும்பத்திற்காக வாழ்ந்து
ஒய்வு பெற்ற பின்னும்
பல கலைகளில் தேர்ந்து
திருவனந்தபுரத்திலும் சிறப்புற வாழ்ந்து
தொண்டையில் புற்றுடன்
தொல்லைகள் பல பட்டு - சித்தியின்
மறைவில் அழவும் முடியாமல் -
மூன்று மாதங்களுக்குள் மனை வழி
சென்று விட்ட மா மேதை.
குறுகிய நாட்களில்
தாய் தந்தை இருவரையும்
பிரிந்து நிற்கும்
லதா மற்றும் மணிக்கு
ஆண்டவன் மன தைரியத்தை
அளிக்க - அவனிடம்
வேண்டுகிறேன்...
Sunday, April 11, 2010
மீண்டும் பூத்துக்குலுங்குகிறது.
அம்மா மட்டும் இல்லை.
மார்ச் மாத மத்தியில்
யுகாதிக்கேன்றே துளிர்க்க -
வேப்ப மரத்தின் கணக்கு பிறழ்வதே இல்லை!
அம்மா மட்டும் இல்லை.
வாசல் சிமென்ட் தரையில்
கம்பளமாய் வேப்பம்பூகள்!
ஆசை ஆசையாய் சேகரிக்க
அம்மா மட்டும் இல்லை.
என் வீட்டோடு வளர்ந்த மரம் -
மற்றவர்க்கு அடையாளம்
சொல்ல மிக வசதி
ஆனால்-
என்னை அடையாளம் காட்டிய
அம்மா மட்டும் இல்லை.
அடுத்த வருடமும்
வேப்ப மரம் பூ பூக்கும் !
அம்மா மீண்டும் வருவாளா?
Thursday, April 8, 2010
என்னுடைய விருப்ப ஒய்வு - முடிவு சுபம்
ஆனால் அதற்குள் பதினெட்டு பட்டிக்கும் என்னுடைய விருப்ப ஒய்வு முடிவு காட்டுத்தீயாய் பரவி இருந்தது. கதை துன்பத்தில் முடிந்தது. சூடும் தணிந்து வந்தது. துக்க விசாரிப்புக்கள் தொடர் கதையாய் இருந்தன. நான் திரும்ப வங்கிக்கு சென்றதில் என் அம்மாவுக்கும் வருத்தம் தான். கிட்டத்தட்ட ஒய்வு பெற்ற மனோ நிலைக்கு தள்ளப்பட்ட பின் மீண்டும் பணிக்கு சென்றது எனக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. விருப்ப ஓய்வை ஆயுதமாக பயன்படுத்துவதாக சக நண்பர்கள் நினைக்கத்துவங்கி இருந்தார்கள். இடையில் தாயின் மரணமும் என் மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. வலி நிவாரண மாத்திரைகள் என் வாழ்கையின் வழியாகிப்போனது. வலி இல்லாத வாழ்க்கை மறந்து விட்டிருந்தது. வேலைப்பளுவும் வலிக்கு எண்ணை ஊற்றியது. எனவே மீண்டும் ஜனவரியில் நாள் குறித்து, அதுவும் தள்ளிப்போய் , மார்ச்சில் விண்ணப்பிக்க, இவன் அவ்வளவுதான் என வங்கியும் நினைத்துவிட, கதையின் முடிவு சுபம். மார்ச் 31- வங்கிப்பணியில் எனது இறுதி நாள். 29 வருடங்கள், 10 மாதங்கள் மற்றும் 7 நாட்களுக்கான என் வங்கி வாழ்க்கை நிறைவுக்கு வந்தது. எனது முடிவை தைரியத்துடன் ஆதரித்த என் மனைவிக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். என்னுடை இரு பிள்ளைகளுக்கும் இதில் மகிழ்ச்சியே. இனி என் கனவுகள் நிறைவேற கடவுள் துணை நிற்க வேண்டும்.
Friday, March 5, 2010

அப்பாவின் இந்த படத்தை நம்முடைய குடும்ப வலைதளத்தில் upload செய்ததற்கு ராமாவின் கமெண்ட் மீண்டும் பழைய நினைவுகளை கிளறிவிட்டது. கோமள விலாசில் ஒரு வரலக்ஷ்மி விரதத்தின் போது அப்பா தான் உயிரான இந்த தம்பூராவை வைத்துக்கொண்டு பாடிய போது வேலூர் சக்தி ஸ்டூடியோ மூலம் எடுக்கப்பட்ட போட்டோ,. இந்த கருப்பு வெள்ளை படம் சொல்லும் கதைகள் எத்தனையோ.. அப்பாவின் முகத்தில் அந்த பரவசம்.. பின்னணியில் அலங்கரிக்கப்பட்ட மண்டபம். சுவற்றில் அப்பா தெய்வமாக மதித்து வந்த வேங்கடசுப்பையர் மாமா மற்றும் மாமியின் போட்டோ. திருக்கோவிலூரில் இவர்கள் வீட்டில் தங்கி இருந்து தான் அப்பா சமஸ்கிருதம் கற்றுக்கொண்டார். அப்பாவின் வளர்ச்சிக்கு விதை இங்குதான் ஊற்றப்பட்டது. நான் கூட இவர்கள் வீட்டிற்கு சென்றது புகையாக நினைவில் உள்ளது.
வரலக்ஷ்மி பூஜை ஒரு கோலாகலமாகவே நம் வீட்டில் கொண்டாடப்பட்டது. வாழை மரம் வருவிப்பதிலிருந்து (பந்தல் போடும் கணபதி மூலமாக பெரும்பாலும் கிடைக்கும்), மண்டபம் அலங்கரிப்பது வரை ... இதில் நிறைய நிகழ்வுகள் அடங்கி உள்ளன. சுவற்றில் அப்பாவின் skethcukku என்னுடைய சிறிய painting திறமை(?) யால் கலர் கொடுப்பது தவறாமல் நடக்கும். தேங்காயில் முகம் வரைவதிலிரிந்து (பழைய சைக்கிள் போக்ஸ் கம்பியை தேடுவது ஒவ்வொரு வருடமும் தவறாமல் நடக்கும்) நகைகள் மாட்டி அலங்கரிப்பது வரை அம்மாவின் வேலை. இதில் வேலூர் ராமண்ணாவின் பங்கு மிக அதிகம். அண்ணாவின் அனுபவத்தை இந்த மாதிரி விஷயங்களில் யாராலும் வெற்றி கொள்ள முடியாது. பூஜை முடிந்து அப்பா தவறாமல் தம்பூராவை வைத்துக்கொண்டு மனமுருகி பாடுவதும் நிச்சயம் நடக்கும். இன்று அந்த தம்பூரா
உறையில் உறங்கிக்கொண்டுள்ளது.
ரமா சொன்னது போல் நாம் ஏன் வளர்ந்தோம்? அதனால்தானே அப்பாவையும் அம்மாவையும் இழந்து நிற்கின்றோம்? மீழுமா அந்த இளமைக்காலங்கள்?
Wednesday, February 10, 2010
அன்புள்ள கீதாவிற்கு,
சித்தப்பாவைப்பற்றி உன் blog படித்தேன். உன்னுடைய கருத்துக்கள் அனைத்தும் மிக சரியானவை. அதுவும் அந்த transistor... நம் இளைமைக்காலத்தில் நமது இணை பிரியா தோழனாக ( தோழிதான் சரி.. ஏனென்றால் அது sistor அல்லவா?)
இருந்தததை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா? இன்று எவ்வளவுதான் நவீன சாதனங்களில் நாம் இசையை ரசித்துக்கொண்டிருந்தாலும் அந்த ரேடியோவில் MW /SW பட்டன்களை மாற்றி மாற்றி அமுக்கி .......எவ்வளவு உழைத்திருக்கும் அந்த ரேடியோ.. பாபு சர்வீஸ் சென்டருக்கு எவ்வளவு முறை பயணித்திருக்கும் அது. புதன் கிழமைகளில் ரேடியோ சிலோனில் BINACA GEETH MAALA கேட்டதாகட்டும், சரியாக வராத திருச்சி விவித பாரதி கேட்டதாகட்டும், அப்பா SW ல் மெட்ராஸ் வானொலியில் கச்சேரி கேட்டதாகட்டும்..
தோளால் ஆன சட்டை அணிந்த அந்த ரேடியோ ..ம்ம்ம்ம்...
Wednesday, January 13, 2010
திருவனந்தபுரம், சித்தி மற்றும் சித்தப்பா..
Friday, January 1, 2010
அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். கடந்த ஆண்டில் என் தாயை காலனிடம் பறிகொடுத்தது என் வாழ்க்கையின் பெரும் சோக நிகழ்வு. வலைப்பூவில் என் எண்ணங்கள் வாசமாய் வலம்வர என் தாயின் மறைவு மிகப்பெரு காரணமாய் இருந்தது. தாயின் மரணத்தில் உண்டான ரணம் புரையோடாமல் இந்த நினைவுகள் தான் காப்பற்றிக்கொண்டிருக்கின்றது. வலைப்பூவில் ஏற்கவனவே அறிமுகம் ஆகி இருந்தாலும் என் அக்கா தீபாவளி அன்று பற்ற வைத்த பொறி தான் என்னுள் வெறியாகி, விதையாகி பல வித பூக்களை மலரச்செய்து கொண்டிருக்கின்றது. என் மனைவி அரசு வேலையில் முதலாண்டை வெற்றிகரமாக முடித்தது கடந்த ஆண்டில் தான். வங்கிப்பணியில் இருந்து விருப்ப ஒய்வு பெற விரும்பி அதுவும் நிறைவேறாததில்
எனக்கு சற்று வருத்தம் தான். தாசரதி அமரிக்காவில் இருந்து எட்டு மாதங்கள் கழித்து மே மாதம் இந்தியா திரும்பியது ஒரு நல்ல நிகழ்வு . ஆக 2009 எனக்கு கலக்கங்களையும், குழப்பங்களையும் சோகங்களையும் அள்ளித்தெளித்து சென்றுள்ளது.
நான் கண்ட பொங்கல்!
பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...
-
எழுத்தாக்கம்: B.ரமாதேவி இனிய நண்பர்களே! ஸ்ரீமத்பகவத்கீதையை மொழிபெயர்த்து முடித்த பின்னர், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்த போது, ஆதி...
-
ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டம் முப்பத்த...









