ஸ்ரீ வால்மீகி ராமாயணம்
சுந்தர காண்டம்.
அறுபத்தேழாவது ஸர்கம்.
(சீதை கூறிய செய்திகளை ஸ்ரீராமனிடம் அனுமன் உரைப்பது)
ஸ்ரீராமன் இவ்விதம் தன்னிடம் கேட்டதும், அனுமன்
உடனே சீதை சொல்லிய எல்லா விஷயங்களையும் முழுவதுமாகச் சொல்லலானார்.
“புருஷோத்தமரே! தேவி சீதையானவர், தன்னை அடையாளம்
காட்டுவதற்காகச் சித்ரகூடத்தில் முன்னர் நடந்த நிகழ்ச்சியை, முழுவதுமாக என்னிடம் சொன்னார்.”
“உங்களுடன்
இருக்கும் போது, உறக்கம் கலைந்து முன்னதாக விழித்தெழுந்த சீதையின் மார்புப் பகுதியில்
காகம் ஒன்று கொத்திக் காயப்படுத்தியது.”
“பரதனின் சகோதரரே! நீர் பின்பு தேவியின் மடி
மீது தலைவைத்து உறங்கினீர். அதுசமயம், மீண்டும்
அதே காகமானது, தேவிக்கு வேதனை அளிக்க ஆரம்பித்தது.”
“மீண்டும் மீண்டும் அது மேலே விழுந்து, விழுந்து
காயப்படுத்த, அவருடைய மேனியிலிருந்து இரத்தம் வழிந்து உங்களை நனைத்தது. அதனால் நீங்கள் உறக்கம் களைந்து எழுந்தீர்கள்!”
“எதிரியின் காலனே! தொடர்ந்து துன்புறுத்தப்பட்ட
சீதை, தான் அறியாமலேயே, ஆழ்ந்த சுக நித்திரையிலிருந்த உங்களின் நித்திரையைக் கலைக்க
நேர்ந்தது.”
“தடந்தோள் வீரரே! தேவியின் மார்பினில் காயம்
ஏற்பட்டிருந்ததைக் கண்ட தாங்கள், கோபம் கொண்டு, பாம்பின் சீற்றத்துடன் அவரிடம்
இவ்வாறு பேசினீர்கள்!”
“அச்சமடைந்திருப்பவளே! உனது மார்பில் தனது நகங்களால்
காயப்படுத்தியது யார்? கோபம் கொண்ட ஐந்து தலை நாகத்துடன் யார் விளையாடுவது? என்றீர்கள்.”
“அப்பொழுது சுற்றியும் பார்த்த நீங்கள், கால்
விரல்களில் இரத்தம் வழிய, சீதைக்கு எதிராக நின்று கொண்டிருந்த காகத்தினைக் கண்டு விட்டீர்கள்!”
“இந்திரனின் மகனான அந்தக் காகம், காற்றிற்கு
இணையான வேகத்துடன் பறக்கும் ஆற்றல் கொண்டது.
அது விரைந்து மறைந்து விட்டது.”
“அறிவாற்றல் மிக்கவரே! சக்தி மிக்கவரே! நீங்கள்
காகத்தின் அந்தச் செயலலால், கோபத்தில் சிவந்த கண்களுடன், அதற்குத் தக்க பாடம் புகட்ட
வேண்டும் என்ற எண்ணம் கொண்டீர்!”
“நீங்கள் அமர்ந்திருந்த ஆசனத்திலிருந்து ஒரு
தர்ப்பையை எடுத்து, அதில் பிரம்மாஸ்திரத்தை அமைத்து, காகத்தின் மீது ஏவி விட்டீர்கள்.
அது ஊழித்தீயென பற்றி எரிந்தது!”
“நீங்கள், பற்றி எரிந்துகொண்டிருந்த அந்தத் தர்ப்பையை,
காகத்தை நோக்கிச் செல்லுமாறு பணித்தீர்கள். அதனால் அந்த எரிந்து கொண்டிருந்த தர்ப்பையானது,
அப்பொழுது, காகத்தைத் துரத்திக்கொண்டு, அதன் பின்னேயே சென்றது.”
“மூன்று உலகங்களையும் சுற்றியலைந்த காகத்தைத்
தேவர்கள் முதலானோர் அனைவரும் கை விட்டு விட்டனர்.
அதற்குப் பாதுகாப்புத் தருவதற்கு யாரும் இல்லாமல் போயினர்”.
“அச்சத்தால் அஞ்சி நடுங்கிய அது மறுபடியும் உங்களிடமே
வந்து சேர்ந்தது. பகை வெல்பவரே! காகுஸ்தரே!
சரணாகதி அடைந்தவருக்கு அபயமளிப்பதில் மகிழ்பவரான நீங்கள், அந்தக் காகத்தின் செயல்,
மரண தண்டனைக்கு உரியதாக இருந்தபோதிலும், அதைக் கருணையுடன் காத்தருளினீர்!”
“இராகவரே! இலக்கு நோக்கி வீசப்பட்ட பிரம்மாஸ்திரம்
வீணாகச் செல்ல முடியாது என்பதாலேயே, காகத்தின் வலது கண்ணை அது தாக்கியழிக்குமாறு செய்து
விட்டீர்!”
“அப்பொழுது அந்தக் காகம், உங்களுக்கும் உங்கள்
தந்தைக்கும் பணிவுடன் வணக்கம் செய்த பின்னர், விடை பெற்றுத் தன் இருப்பிடம் சென்று
சேர்ந்தது.”
(இனி வரும் ஸ்லோகங்கள், சீதை,
தன் வாயிலாகவே சொல்வது போல் எழுதப்பட்டுள்ளது).
“இவ்வாறு ஸ்ரீராமன் அஸ்திர வித்தைகளில் முதன்மையானவராகவும்,
வல்லமை மிக்கவராகவும், நற்பண்பு மிக்கவராகவும் இருந்தும், அரக்கர்களின் மீது ஏன் அஸ்திரத்தைப்
பிரயோகிக்காமல் இருக்கின்றார்?”
“போர்க்களத்தில் ஸ்ரீராமனை எதிர்த்து நிற்க,
தானவர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள் மற்றும் மருதகணங்கள் யாவரும் ஒன்றாகக் கூடி வந்தாலும்,
அது இயலாததாகும்.”
“அப்படிப்பட்ட பலசாலியான அவருக்கு என் மீது,
சிறிதளவாவது மதிப்பு இருக்குமேயானால், தன் கூரிய அம்புகளால், போர்க்களத்தில் இராவணனை
அவர் கொன்று விடவேண்டும்.”
“ரகு குலத்தில் பிறந்தவனும், புருஷோத்தமனும்,
பகைவர்களை அழித்துவிடுபவனுமான அந்த இலக்குமணன்தான், தன் அண்ணனின் (ஸ்ரீராமனின்) அனுமதியைப்
பெற்று வந்து, என்னை ஏன் மீட்காமல் இருக்கின்றான்?”
“ஆண் சிங்கங்களையொத்த அவ்விருவரும் காற்றையும்
நெருப்பையும் போலத் திறனுள்ளவர்கள். தேவர்களையே
அஞ்சி நடுங்க வைக்க வல்லவர்களான அவர்கள் என்னை ஏன் காக்க வர வில்லை?”
“நிபுணத்துவம் கொண்டவர்களும், பகைவரை வென்று
வாகை சூடுபவர்களுமான அந்த இருவரும் இணைந்திருக்கும்போதும் எனது நிலைமையைக் காணாதிருக்கின்றார்கள். அப்படியென்றால், நான் பெரும் பாபச்செயல் செய்தவளாகத்தான்
இருக்க வேண்டும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை!”
(மீண்டும் அனுமனின் வார்த்தைகள்)
“இவ்வாறு வைதேஹியால், கண்களில் நீர் வழிய, மனமிரங்கும்படி
பேசப்பட்ட வார்த்தைகளைக் கேட்ட நான், அவரிடம்
பின்வருமாறு மீண்டும் வேண்டுகோள் விடுத்தேன்!”
(அனுமன் சீதையிடம் சொன்னது)
“தேவி! நான் சத்தியத்தின் மீது ஆணையிட்டுக் கூறுவது
என்னவென்றால், ஸ்ரீராமன், உங்களைப் பிரிந்த துயரத்தில் எதிலும் நாட்டமின்றி இருக்கின்றார். ஸ்ரீராமனின் துன்பத்தைப் பார்த்து, இலக்குமணனும்
துன்பம் கொள்கின்றார்.”
“சிறப்பு வாய்ந்த பெண் திலகமே! கடவுளின் கருணையால்
தங்களின் இருப்பிடம் தெரிந்து விட்டது. ஆகவே,
துன்பம் கொள்வதற்கான தருணம் இதுவல்ல! நீங்கள்
இப்பொழுதே உங்களது துன்பங்களின் முடிவைக் காண இருக்கின்றீர்கள்!”
“பகைவலி அழிக்கும் , ஆண்சிங்கங்களையொத்த அந்த
இரு அரச குமாரர்களும், தங்களைக் காணும் ஆவலில் உத்வேகம் கொண்டு, இலங்கை நகரத்தைத் தீக்கிரையாயக்கப்
போகின்றார்கள்.”
“மாசற்ற மங்கையர் திலகமே! கொடிய இராவணனை, அவனது
உற்றார் உறவினர் அனைவருடனும் சேர்த்துப், போரில் கொன்றுவிட்டு, ஸ்ரீராமன் உங்களைத்
தனது இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்வது உறுதி!”
“மாசற்றவரே! ஸ்ரீராமன் இங்கு நடப்பனவற்றை ஏற்றுக்கொள்ளும்
விதமாக, அவருக்கு மகிழ்ச்சியை அளிக்க வல்ல ஏதேனும் ஒன்றை அடையாளச் சின்னமாகத் தந்தருள
வேண்டும்.”
(மீண்டும் அனுமன் ஸ்ரீராமனிடம்
சொல்வது)
“ஓ! பராக்ரமம் மிக்கவரே! அவர் (சீதை) எல்லாத்
திசைகளையும் உற்று நோக்கிவிட்டு, தலையில் அணியக்கூடிய அற்புதமான இந்த மணியை, தனது சேலைமுடிப்பிலிருந்து
அவிழ்த்து என்னிடம் கொடுத்தார்.”
“இரகு வம்சத்தினருக்குப் பிரியமானவரே! மிகச்
சிறப்பான இந்த மணியை உங்களிடம் சேர்ப்பிக்கும் பொருட்டு, எனது இரண்டு கரங்களால் பெற்றுக்
கொண்டேன். பின்னர் தேவியைத் தலைவணங்கிப் பணிந்து, இங்கு திரும்பி வரும் முயற்சியில்
இறங்கினேன்.”
“பரிதாபத்திற்குரிய நிலையில் இருக்கும் ஜனகனின்
மகளாகிய தேவி, நான் திரும்பிச் செல்வதற்காக என் உடலைப் பெரிதாக்கிக்கொண்டதைப் பார்த்ததும்,
நான் திரும்பிச் செல்வதை கண்டு, மனக் கலக்கம் கொண்டார். அதிகமான துயரத்தால், கண்களில் நீர் வழிய, தழுதழுக்கும்
குரலில் இவ்வாறு உரைக்கலானார்.”
“சிறப்புப் பெற்ற வானரமே! பலசாலியான, தாமரை மலர்களையொத்த
கண்களைக் கொண்ட என் அன்பினுக்கினிய ஸ்ரீராமனையும், புகழ் கொண்ட, வலிமைமிக்க என் மைத்துனர்
இலக்குமணனையும், உன் கண்களால் காணப்போகும் நீர் பெரும் பாக்யசாலி! என்றார்.”
“சீதை இவ்விதம் உரைத்ததும், நான் அந்த மிதிலையின்
குமாரியைப் பார்த்து, ‘தேவி! ஜனகனின் மகளே! பெரும் பேறு பெற்றவரே! நீங்கள் விரைந்து
என் முதுகின் மீது ஏறிக் கொள்ளுங்கள். நான்
இப்பொழுதே, சுக்ரீவன் மற்றும் இலக்குமணனுடன் இருக்கும் தங்கள் கணவரான ஸ்ரீராமனிடம்
அழைத்துச் செல்கின்றேன்’ என்றேன்.”
“அதற்கு அவர், ‘சிறந்த வானரோத்தமரே! நான் சுய
நினைவுடன் என் விருப்பத்தின் பேரில் உமது முதுகில் ஏறிக்கொள்வது என்னுடைய தர்மம் ஆகாது’
என்று உரைத்தார்.”
“மேலும் அவர், “வீரரே! முன்பு கொடியவனான இராவணன்
மீது என் உடல் பட்டுவிட்டது. நான் அப்பொழுது என்ன செய்திருக்க முடியும்? எனது விதி
அவ்வாறிருந்தது! ஆகவே, நீர் அந்த இரு வீரர்களிருக்குமிடம்
செல்வாயாக!’ என்று சொல்லிய அவர், இவ்வாறு தொடர்ந்தார்.”
(சீதை அனுமனிடம் சொல்வது)
“அனுமனே! சிங்கங்களையொத்த ஸ்ரீராமன் மற்றும்
இலக்குமணன் ஆகிய இருவரிடமும், மந்திரிகளோடு இருக்கும் சுக்ரீவனிடமும் மற்ற அனைவரிடமும்
இந்தச் செய்திகளைக் கூறி அவர்களது நலன்களை விசாரிக்கவும்.”
“மகா பராக்ரமரான அந்த ஸ்ரீராமனே என்னை இந்தத்
துன்பக் கடலிலிருந்து மீட்கும் வண்ணம் இங்கு நடப்பனவற்றை அவரிடம் கூறுவீராக!”
“வானரோத்தமரே! எனது கொடிய துயரத்தின் தீவிரத்தையும், இந்த அரக்கிகளால்
இடைவிடாது நான் மிரட்டப்படுவதையும், ஸ்ரீராமன் அருகில் சென்று உரைக்க வேண்டும். நீர் திரும்பிச் செல்லும் பாதை, தடையற்றதாக விளங்கட்டும்”
இவ்வாறு சீதை என்னிடம் உரைத்தார்”.
மீண்டும் அனுமன், ஸ்ரீராமனிடம்,
“வேந்தரே! தங்கள் அன்புமிக்க, கற்புமிக்க மனைவியான
சீதை, மிகுந்த துயரத்துடன் இவ்விஷயங்களைச் சொன்னார். ஆகவே என்னால் சொல்லப்பட்ட இந்த விஷயங்களை நன்றாக
ஆராய்ந்து, சீதை கற்புநெறி பிறழாது நலமுடன் இருப்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்!”
என்று சொன்னார்.
அறுபத்தேழாவது
ஸர்கம் நிறைவு.