இன்று நான் மீண்டும் வேலுர் செல்ல வேண்டி இருந்தது. காவிரி ஆற்றைக் கடக்கும்போது பழைய நினைவுகள் தென்றலாய் வருடிச்சென்றன. காவிரிக்குக் கொண்டாட்டம். ஒன்றுக்கு இரண்டு பாலங்கள். ஆனால் காவிரியின் பழைய நிறம் மாறிவிட்டது. வாகனங்கள் செல்லும் வேகத்தில் பாலத்தில் நின்று ஒடுங்கிச்செல்லும் காவிரியைப்பார்க்க பயமாய் இருக்கின்றது. பெரியப்பாவின் கையைப்பிடித்துக்கொண்டு அக்ரஹாரத்திலிருந்து பாலம் வழியாக நடந்து அக்கரை வரை சென்று நீரேற்று நிலையம் அருகில் மணலில் அமர்ந்திருந்து பின் நடந்தே வீடு வந்த நினைவுகள் மங்காமல் உள்ளன. முசாபுரி பங்ளா (ட்ராவல்ர்ஸ் பங்ளா)o அருகில் பெட்டிக்கடையில் குடல் என்று சொல்லப்படும் வடகம் போன்ற பதார்த்தம் சாப்பிட்டதும் சில சமயங்களில் நால்ரோடு ஈஸ்வரி ஹோட்டலில் தோசை சாப்பிட்டதும் நினைவுக்கு வருகின்றது. பாலத்திலிருந்து முசாபுரி பங்ளா வரும் வரை இரு புறமும் செவ்விள நீர் காய்த்துத்தொங்கும் தென்னை மரங்கள். வற்றாத வாய்க்கால். வாய்க்காலிலிருந்து மேற்குப்பக்கத்தில் பிரிந்து செல்லும் ஒற்றையடிப்பாதை வழியாக சென்றால் வரும் பட்டவர்த்தி பிள்ளையார் கோயில். அரச மரத்தடியில் அமர்ந்திருக்கும் பிள்ளையார். மரத்தில் கட்டித்தொங்க விடப்பட்டிருக்கும் வெண்கல மணிகள்.
ஒற்றையடிப்பாதையின் ஒரு புறம் நீள மண்டிக்கிடக்கும் தாழம்பூ புதர். மறுபுறம் சல சலவென ஓடிக்கொண்டிருக்கும் நீரோடை. குடத்தில் இதில் நீர் பிடித்துத்தான் பிள்ளையாருக்கு குளியல். கோயிலைச்சுற்றி தென்னந்தோப்பு. கோயிலுக்கு எதிரே படிஏறினால் பாலத்திற்கு வந்து விடலாம். வழுக்கும் சாலையில் வேகமாக சென்றதில் பிள்ளையாரைப்பார்க்கமறந்துவிட்டேன்.
இப்போது பாலத்தின் தோற்றம் தரப்பட்டுள்ளது. வயல்கள் தார்முலாம் பூசிக்கொண்டுள்ளன.
நினைவுகள் தொடரும்...............



