Wednesday, November 18, 2009

TNR வீட்டுத் திண்ணை :

எங்கள் தெருவில் முதல் வீடு TNR வீடு என்று சொன்னேன் அல்லவா. அது கௌரி மாமி வீடு . அந்த வீட்டுத திண்ணையைப்பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. வீட்டை ஒட்டி சுமார் ஆறு அல்லது ஏழு அடி நீளத்தில் சாலை வரை அமைந்த திண்ணை. தரையிலிருந்து மூன்று அல்லது மூன்றரை அடி உயரத்தில் இருக்கும். நீளவாக்கிலும் சாலையை ஒட்டி மடிந்த இடத்திலும் சாய்ந்து அமரும் வகையில் சிமெண்டினால் பூசப்பட்டிருக்கும். பெரும்பாலும் இங்காச்சியால்ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் இந்தத்த்திண்ணை நாங்கள் அருகில் சென்றதுமே எங்களுக்கு கிடைத்து விடும். இங்காச்சி... மன நலம் குன்றியவர். நான் சிறுவனாக இருந்த போதே இங்காச்சிக்கு முப்பது வயதுக்கு மேல் இருக்கும். வேஷ்டியை மார்பு வரை கட்டிக்கொண்டு வீட்டு உள்ளுக்கும் வாசலுக்கும் நடந்து கொண்டிருக்கும் இங்காச்சியல் யாருக்கும் தொந்திரவு இருக்காது. பிற மனிதர்களைக் கண்டாலே வீட்டுக்குள் ஓடி விடுவார். வீட்டுக்கு யார் வந்தாலும் கோகிலா காப்பி கலந்து தா என்று திருப்பி திருப்பி சொல்லிக்கொண்டே உள்ளுக்கும் வெளிக்கும் ஓடிக்கொண்டிருக்கும் இங்காச்சி காலி செய்த திண்ணை பிறகு எங்களுக்கு சொந்தம். திண்ணையில் ஏறி சாய்ந்து அமர்ந்து கொண்டு எவ்வளவு கதை பேசி இருப்போம்? தெருவில் நடக்கும் கிரிக்கெட் மாட்சுக்கும் அதுதான் stadium. தைப்பூசக்காவடி வேடிக்கை பார்க்க இநத திண்ணைதான் வசதி. காவிரிக்கரைக்கு செல்லும் இறுதி யாத்திரைகளை பயத்துடன் ஒளிந்து கொண்டு பார்த்ததும் இநத திண்ணையில் தான். மாலை நேரத்து சூடு அடங்க தண்ணீர் தெளிக்கப்பட்டு ஜில்லென்று ஆக்கப்பட்டிருக்கும் திண்ணை. (பிற்காலத்தில் இநத வீட்டிலும் நாங்கள் சில காலம் குடி இருக்க நேர்ந்தது). இரவு சாப்பாட்டிற்கு அழைப்பு வரும் வரை நண்பர்களுடன் இநத திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தது தொடர்கதை.

எனது தாயாரின் அஸ்தியை கரைக்க நாங்கள் வேலூர் காவிரிக்கு இரண்டு மாதங்களுக்கு முன் சென்ற போது, இந்தத் திண்ணையைக் காணவில்லை. எதோ ஒரு பெட்டிக்கடை இநத இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது. மனிதர்களே காணாமல் போய்விட்ட பிறகு , திண்ணை இருந்தென்ன ? போயென்ன? நினைவுகள் தான் மிச்சம்.................

No comments:

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...