எனக்கு சாப்பிடும் பொழுது , இடது கையில் அவசியம் எதாவது படிக்க இருக்க வேண்டும்! என் அம்மாவிடமிருந்து எனக்கும் என் தமக்கைக்கும் தொற்றிக்கொண்ட பழக்கம்! அது பேப்பர் துணுக்காகக் கூட இருக்கலாம்! ஆனால் திருமணத்திற்குப் பிறகு இந்தப் பழக்கம் எப்படியோ விடுபட்டுவிட்டது! இப்பொழுது சாப்பிடும்பொழுது தொல்லைக்காட்சிதான்!
பள்ளிப்பருவத்தில் முத்து காமிக்ஸ் மீது வெறி உண்டு! கண்ணன், அம்புலிமாமா பருவம் முடித்ததும், கோடை விடுமுறையில் பள்ளி நூலகத்தில் ஈசாப், பஞ்ச தந்திரக் கதைகள் முதலியன! விகடன்,
குமுதத்தில் ஜோக்குகள் படிக்க அனுமதி! தீபாவளி மலர்களின் மரிக்கொழுந்து வாசம் நுகரலாம்! பின் கல்லூரிக் காலங்களில் கல்கியில் பொன்னியின் செல்வன், குமுதத்தில் சாண்டில்யன், பட்டாம்பூச்சியெல்லாம் அறிமுகம்! பின் வாசிப்பு வார இதழ்களின் மற்ற கதைகளிலும் தொடர்ந்தது! நாபா,மணியன்,சாவி, சிவசங்கரி,இந்துமதி , சுஜாதா போன்றோர் ஆக்கிரமிக்க ஆரம்பித்தார்கள்! ராணிமுத்து மாத இதழும் பெரிதும் விரும்பப்பட்டது! பின் மாத நாவல்களின் பெருக்கத்தில் எழுத்துக்களின் மலினத்தில் ஈர்ப்பு குறையத்தொடங்கியது!
கல்லூரிக்காலங்களில் அக்கா மூலம் R K நாராயணும், 80 களின் இறுதியில் அலுவலக நண்பர் மூலம் சிட்னி ஷெல்டனும் அறிமுகம்! இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் R K நாராயணனின் வாரத்தொடர்கள் வசீகரித்தன! பின்னர் மிர்ரர், தி வீக் போன்ற இதழ்கள்!
அப்பா மூலம் ஹிந்தி படித்ததால், ஹிந் பாக்கட் புக்ஸ் மாதம் மாதம் வரவழைத்து ஹிந்தி நாவல்களும் கல்லூரிக் காலத்திலேயே அறிமுகம்!
அப்பாவின் வருமானத்தில் ஒரு பகுதி புத்தகங்களுக்காக ஆனது என்றதால் வீட்டின் பெரும்பாலான அசையும் சொத்துக்கள் புத்தகங்களாகவே இருந்தன! கோரக்பூர் கீதா பிரஸ்ஸின் புத்தகங்களே அதிகம்! வீட்டில் எல்லோருமே படித்ததால் ஒவ்வொரு முறை வீடு மாறும்போதும், இவை இனிய சுமையாகவே இருந்தன! அம்மா பெயரில் இன்றும் அமுதசுரபி வந்துகொண்டிருக்கிறது! (அம்மா இறந்து பத்து வருடங்கள் ஆகப் போகின்றன).
விகடன், குமுதம் தடம் மாறியதால் அவை வாங்கும் வழக்கொழிந்தது. தற்பொழுதும் பீரோ புத்தகங்களால் நிரம்பி வழிகின்றன! புத்தகக்கடைக்கும் புத்தகத் திருவிழாக்களுக்கும் இப்பொழுது தடா போடப்பட்டு விட்டது! பாதுகாப்புச்சிக்கல்கள் தான்!
அதுவுமில்லாமல் டிஜிடல் புத்தகங்கள் கணக்கற்ற அளவில் பதிவிறக்கம் செய்வதால், அவை கம்ப்யூட்டரின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துள்ளன! கண்கள் உலர்வதால் அவற்றைப்படிக்கவும் இயலவில்லை! நிஜப்புத்தகங்கள் இரண்டு பக்கம் தாண்டுவதற்குள் தூக்கம் வேறு வந்துவிடுகிறது! கனமான புத்தகங்கள் கை வலிக்கவும் செய்கின்றன!
உடையாரை வாசித்து, ராஜராஜனை சுவாசித்து, பெரிய கோயிலின் சுவற்றை நான் தடவியதும் நடந்தது!
என் தந்தை சர்க்கரை நோயினால் கண்கள் பாதிக்கப்பட்டதால் படிக்க இயலாமல் போனதே அவருக்குப் பெரும் துயரமாக இருந்தது! லைட் வைத்த பூதக்கண்ணாடி வைத்தெல்லாம் படித்துள்ளார்! ( இன்றும் அதை வைத்துள்ளேன்!)
இது நாள் வரை படித்ததற்கும், இனி படிக்க வாய்ப்பளிக்கப்போவதற்காகவும் இறைவனுக்கு நன்றிகள்! படிப்பது பிடிக்கும் மனையாளைக் கொடுத்ததற்கும் மேலும் நன்றிகள்! வரைவதில் நாட்டம் அதிகமாகிவிட்டதால், படிப்பது குறைந்து விட்டது! எனினும் படித்துக்கொண்டே இருப்பேன்!
அனைவருக்கும் புத்தக தின வாழ்த்துக்கள்!
Tuesday, April 23, 2019
Subscribe to:
Posts (Atom)
நான் கண்ட பொங்கல்!
பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...
-
எழுத்தாக்கம்: B.ரமாதேவி இனிய நண்பர்களே! ஸ்ரீமத்பகவத்கீதையை மொழிபெயர்த்து முடித்த பின்னர், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்த போது, ஆதி...
-
ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டம் முப்பத்த...