ஸ்ரீ வால்மீகி ராமாயணம்.
சுந்தர காண்டம்.
ஐம்பத்தாறாவது ஸர்கம்.
அசோக மரத்தின் அடியில் அமர்ந்திருந்த
சீதையிடம் சென்று அனுமன், அவரை வணங்கினார். “தாங்கள் நலமுடன் இருப்பதைக் காணும் பேற்றைப்
பெற்றுள்ளேன்” என்று சொன்னார்.
அப்பொழுது மீண்டும் தன்னைக் காண வந்துள்ள அந்த அனுமனைப்
பார்த்து, கணவனிடம் தன் அன்பை வெளிப்படுத்தும் விதமாக, சீதை மீண்டும் பேசலானாள்.
“குற்றமற்ற வானர வீரனே! உனக்கு ஏற்புடையதென்று நீ
கருதினால், இங்கு எதாவது ஒரு மறைவான இடத்தில் ஓய்வெடுத்துக்கொண்டு செல்வாயாக!”
“நீ அருகில் இருந்தாயானால், என்னைப் போன்ற துர்பாக்யசாலியின்
அளவிட முடியாத துன்பமும் சற்று நேரத்திற்காவது குறைந்து காணப்படும்.”
“சிறந்த வானர வீரனே! இப்பொழுது நீ சென்றுவிட்டால்,
நீ திரும்பி வரும் வரை என் உயிர் இருக்குமா என்பது நிச்சயமில்லை!”
“வீரனே! மேன்மேலும் ஏற்படும் துன்பங்களால் ஏற்படும்
மனத் துயரத்தால் நான் பலவீனமடைந்து வருகின்றேன். உன்னைக் காணாதிருந்தால், அது எனது
இருதயத்தை மேலும் துன்பத்திற்குள்ளாக்கும். பெரிய பெரிய வானரங்களும், கரடிகளும் இருந்தாலும்,
சுக்ரீவன் இந்தக் கடலை எவ்விதம் கடப்பார்? என்ற ஐயம் எனக்கு இன்னும் இருக்கிறது. அவரது
படையின் வானரங்களும், கரடிகளும், அந்த மானுட வீரர்களான ஸ்ரீராமனும் இலக்குமணனும் எவ்விதம்
கடலைக் கடப்பார்கள்?”
“கருடன், வாயு மற்றும் நீ ஆகிய உங்கள் மூவரிடம் மட்டுமே
கடலைத் தாண்டும் சக்தி இருக்கின்றது.”
“செயலாற்றுவதற்குக் கடினமாக முன்னே நிற்கும் இந்தக்
கஷ்டத்திற்கு உன்னிடம் எதாவது தீர்வு இருக்கின்றதா? செயலாற்றுவதில் நீ வல்லவன்! ஆகவே,
அதனை எனக்குக் கூறுவாயாக!”
“பகை வீரர்களை அழிக்கும் வல்லமை பெற்றவரே! உமது ஒருவரால்
மட்டுமே உம்மால் நினைத்து வந்த செயல் வெற்றிகரமாக முடிக்கப்படும். அதற்கு நீர் ஒருவரே
போதுமானவர். உமது சக்தியின் மேன்மை சொல்லில் அடங்குவதில்லை!”
“பகைவரின் ஆற்றலை ஒடுக்கும் காகுஸ்தர் (ஸ்ரீராமன்)
தன் அம்புகளால் இந்த இலங்கையை இல்லாமலாக்கிவிட்டு, என்னை அழைத்துச் செல்வாரேயானால்,
அது அவரது பெருமைக்கு ஏற்றதாக இருக்கும்!”
“ஆகவே, பகைவர்களைப் போரினில் வென்றழிக்கும் செயலை
எவ்விதம் செய்தால், ஸ்ரீராமனுக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்குமோ, அவ்விதத்தை நீ கூறுவாயாக!”
என்றாள்.
அனுமன், அவளது பொருள் பொதிந்ததும், இனிமையானதுமான
அந்த வார்த்தைகளைக் கேட்டு விட்டு, இவ்வாறு பதிலுரைத்தார்.
“தேவீ! வானரர்கள் மற்றும் கரடிக்கூட்டங்களின் படைகளின்
தலைவனான சுக்ரீவன், மிகவும் சக்தி கொண்டவர். உங்களைக் காப்பாற்றுவேன் என்று சூளுரைத்துள்ளார்.
“ஆகவே, வைதேஹி! வானர அரசன் சுக்ரீவன், ஆயிரங்கோடி
வானரர்கள் புடை சூழ விரைவில் இங்கே வருவார்!”
“அவர்களுடன் அந்த இரு மானுட வீர ர்களும் இங்கு வந்து,
தங்கள் அம்புகளால் இலங்கை நகரத்தை அழித்து விடுவார்கள்.”
“தேவீ! ராக்ஷஸனான இராவணனை அவனுடைய கூட்டத்துடன் யமனுலகம்
அனுப்பிவிட்டு, ரகுநாதர், தங்களை விரைவில் தன்னுடைய நகரத்திற்கு அழைத்துச் செல்வார்.”
“ஆகவே தேவீ! மன உறுதியுடன் இருங்கள். தங்களுக்கு
நல்லது நடக்கட்டும். தக்க தருணத்திற்காகக் காத்திருங்கள். ஸ்ரீராமனது கைகளால், இராவணன்
போர்க்களத்தில் கொல்லப்படுவதைத் தாங்கள் காணப் போகின்றீர்கள்.”
“மகன், சகோதரர்கள், உற்றார், உறவினர், மற்றும் அமைச்சர்கள்
அனைவருடனும் இராவணன் கொல்லப்பட்ட பின், எவ்விதம் ரோஹிணி நக்ஷத்திரம் சந்திரனுடன் இணைகிறதோ,
அவ்விதமே தாங்கள் ஸ்ரீராமனுடன் இணைவீர்கள்!”
“யுத்தத்தில் பகைவர்களை வென்று, உங்கள் துன்பத்தைப்
போக்க இருக்கும் காகுஸ்தரான ஸ்ரீராமன், சிறந்த வானர, கரடி வீரர்கள் புடைசூழ விரைவில்
இங்கு எழுந்தருள்வார்.”
வாயுவின் மகனான அனுமன், மேற்கண்டவாறு வைதேஹியைத்
தேற்றும் விதமாக வார்த்தைகளைக் கூறி விட்டு, தான் திரும்பிச் செல்லும் எண்ணம் கொண்டு,
அதை சீதையிடம் தெரிவித்தார்.
பெரும் அரக்க வீரர்களை அழித்துத் தன் ஆற்றலை வெளிப்படுத்திய
அவர், இலங்கையை நாசம் செய்தும், இராவணனுக்குத் தன் அளவற்ற ஆற்றலை வெளிப்படுத்தியும்,
சீதைக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறியும், மீண்டும் கடல் வழியே திரும்பிச் செல்ல எண்ணம்
கொண்டார்.
பகைவரை வெல்லும் ஆற்றல் கொண்ட அந்த வானரோத்தமர்,
தன் தலைவனைக் காணும் ஆவல் கொண்டவராய், அரிஷ்டம் என்று சொல்லப்படும் சிறந்த மலையை அடைந்தார்.
மலையின் வர்ணனை:
அந்த மலையானது பத்மகமென்ற உயரமான மரங்கள் அடர்ந்த
கருமையான காடுகள் நிறைந்திருந்தது. உயரமான மலைச்சிகரங்களின் உச்சியில் தவழும் மேகங்கள்
அவற்றின் மேலாடை போல் மேலே படர்ந்திருந்தன.
வளம் நிறைந்த சூரியனின் கிரணங்கள், அன்புடன் துயிலெழுப்பவது
போல் அங்கு வீசின. அப்பொழுது வெளிப்பட்டு மின்னிய தாதுப் பொருட்கள், அந்த மலையானது
தனது கண்களைக் கொண்டு பார்த்துக் கொண்டிருப்பது போல இருந்தது.
காட்டாறுகளின் ஓசை, மலையே வேத கோஷங்களை முழங்குவது
போலவும், மலையருவிகளின் ஓசையானது, இனிய இசை போலவும் இருந்தன.
வானுயர வளர்ந்திருந்த தேவதாரு மரங்களால், அந்த மலையானது
கைகளை உயரத்தூக்கித் தவமிருக்கும் யோகியைப் போலவும் இருந்தது.
நீர்வீழ்ச்சிகளின் பேரிரைச்சல் எங்கும் எதிரொலித்துக்
கொண்டிருந்தன. சரத் கால மேகங்களின் அசைவுகள் அந்த மலையானது நடுங்கிக் கொண்டிருப்பது
போலானதொரு தோற்றத்தைக் கொடுத்தன.
கீசகம் என்னும் மூங்கில் செடிகள், காற்றில் ஆடுவதால்
எழுந்த ஓசையானது, அந்த மலையே கூவிக்கொண்டிருப்பது போல இருந்தது. அந்த ஓசையானது, விஷம்
கொண்ட கொடிய பாம்புகள், பொறாமைகொண்டு பெருமூச்சு விட்டுக் கொண்டிருப்பது போலவும் இருந்தது.
அடர்ந்த பனிக் குகைகளைப் பார்க்கும் பொழுது, அந்த
மலையானது தியானம் செய்து கொண்டிருப்பது போல இருந்தது. அருகருகே இருந்த மேகங்கள் சூழ்ந்த
மலைக் குன்றுகளால் அந்த மலையானது அசைந்து கொண்டிருப்பது போலவும் இருந்தது.
அந்த மேகங்கள் சூழ்ந்த சிகரங்கள் விண்ணை முட்டி இருந்தன.
மலைச் சிகரங்கள் பல இடங்களில் சிதறுண்டு இருந்தன. அங்கிருந்து மலைக் குகைகள், மலைக்கு
அழகு சேர்த்தன.
அந்த மலையில், சால மரம், பனைமரம், அசுவகர்ணம் முதலான
மரங்கள் இருந்தன. பலவித வகையான மூங்கில் மரங்கள் இருந்தன. அடர்ந்த, மலர்கள் பூத்துக்
குலுங்கிய செடி கொடிகள் நிறைந்திருந்தன.
பற்பல வகையான காட்டு விலங்குகளும், பல்வேறு வகையான
தாதுக்களும், நீரருவிகளும், பாறைக் குவியல்களும் அங்கிருந்தன.
முனிவர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள்,
நாகர்கள் முதலியோர் அங்கு வசித்தனர்.
அடர்ந்த செடி கொடிகளும், சிங்கங்கள் வசிக்கும் குகைகளும்,
புலிகளின் கூட்டமும், அங்கிருந்தன.
சுவை மிக்க கிழங்குகள், பழவகைகள் பழுத்திருந்த மரங்கள்
நிறைந்த அந்த மலையில், வாயு குமாரரான அனுமன், ஸ்ரீராமனின் தரிசனம் வெகு அருகில் இருக்கும்
பெருமகிழ்ச்சியினால், அதிக உற்சாகத்துடன் ஏறினார்.
(Three types of images created by Bing AI)
வலிமையான அவரது பாதங்களால்,
பாறைகள் பொடியாகி, அழகிய மலையின் பள்ளத்தாக்குகளில், பெருஞ்சத்தத்துடன் அவை சிதறுண்டன.
பெருமை மிக்க மலையில்
ஏறிய அனுமன், கடலின் தெற்குக் கரையிலிருந்து, வடக்குக் கரைக்குப் போக எண்ணியவராய்,
தன் உருவத்தை வளர்த்துக் கொண்டார்.
அந்த மலையின் மீதேறிய
காற்றின் குமாரரான வீர அனுமன், பயங்கரமான பாம்புகள் நிறைந்த அதி பயங்கரமான கடலினைப்
பார்வையிட்டார்.
வாயு புத்ரனான அனுமன், ஆகாயத்தில் காற்று உலவுவது போல, தெற்கிலிருந்து
வடக்கு நோக்கிப் புறப்பட்டார்.
அனுமனின் பாதங்களின்
அழுத்தத்தால், நசுக்குண்ட அந்தப் பெரிய மலை, அதன் சிகரங்கள் குலுங்க, பெரிய மரங்கள்
முறிந்து விழ, பேரோசையுடன் அங்கு வாழ்ந்திருந்த உயிரினங்களுடன் பூமிக்குள் புதைந்தது.
பூத்துக் குலுங்கிய மரங்கள், அனுமனின் தொடைகள் தந்த வேகத்தால், வஜ்ராயுதத்தால் அடிபட்டவை
போல, சின்னா பின்னமாகித் தரையில் விழுந்தன.
மலை நொறுங்கியதால்,
குகைகளில் அடைந்திருந்த பெருஞ்சிங்கங்கள் எழுப்பிய கர்ஜனை, ஆகாயத்தைப் பிளந்து கொண்டு
வெளிப்பட்டது.
அச்சத்தால், அலங்கோலமான
ஆடைகளுடனும், கலைந்த ஆபரணங்களுடனும், வித்யாதரப் பெண்கள், திடீரென அந்த மலையிலிருந்து
வெளிப்பட்டு வானத்தை நோக்கிச் சென்றார்கள்.
பெரும் உடல்களும்,
வலிமையும் கொண்ட பாம்புகள், கழுத்துகளும் தலையும் நசுக்குண்டதால் நாக்குகளை நீட்டியபடி,
கொடிய விஷத்தை வெளியிட்டு, சுருட்டிக் கொண்டு பதுங்கின.
பாதிக்கப்பட்ட அந்த
மலையிலிருந்த கின்னரர்கள், நாகர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், வித்யாதரர்கள் முதலானோர்
அந்த மலையை விட்டு விலகி வானத்தை அடைந்தார்கள்.
அனுமனின் வேகத்தால்
பாதிக்கப்பட்ட அந்த அழகிய மலையானது, தன்னுடைய உயர்ந்த சிகரங்கள், மரங்களுடன் பாதாளத்தைச்
சென்றடைந்தது.
பத்து யோஜனை அளவு
அகலமானதும், முப்பது யோஜனை அளவு உயரமானதுமான அந்த மலை, பூமிக்குச் சமமாய், தரையில்
அழுந்திக் கிடந்தது.
பேரலைகள் மோதும்
கரைகளைக் கொண்ட அந்த பயங்கரமான உப்புக் கடலைத் தாண்டும் எண்ணம் கொண்டு, அந்த வானரர்,
வெகு லாகவமாக வானத்தில் கிளம்பினார்.
ஐம்பத்தாறாவது ஸர்கம்
நிறைவு.










