Saturday, December 16, 2023

ஸ்ரீ வால்மீகி ராமாயணம். சுந்தர காண்டம். ஐம்பதாவது ஸர்கம்

 

                        ஸ்ரீ வால்மீகி ராமாயணம்.

                           சுந்தர காண்டம்.

                        ஐம்பதாவது ஸர்கம்





 

 எல்லா உலகங்களையும் அச்சுறுத்த வல்லவனான, பெரும் தோள்களைக் கொண்டிருந்த இராவணன், தன் எதிரில், மஞ்சள் நிறக் கண்களுடன் நிற்கின்ற அனுமனைப் பெருங்கோபத்துடன் நோக்கினான்.

 மிகுந்த உற்சாகத்துடன் நின்றிருக்கும் வானர வீரரைக் கண்டு அதிசயித்த இராவணனின் மனதினில் பலவிதமான ஐயங்கள் எழுந்தன. “ஒரு வேளை இங்கு வந்திருப்பது நந்தி பகவானாக இருக்கக் கூடுமோ?! என்று ஐயுற்றான்.

 “முன்பு ஒரு முறை கைலாய மலையில் இவரைக் கேலி செய்த போது, எனக்கு சாபம் கொடுத்தாரே! அவரே இப்பொழுது வானர வடிவெடுத்து ஒருக்கால் வந்து விட்டாரோ? அல்லது பாணாஸுரனாக இருக்கக் கூடுமோ?” என்றும் சந்தேகித்தான்.

 கோபத்தில் சிவந்த கண்களைக் கொண்ட அந்த அரசனான இராவணன், தன் மந்திரிகளுள் சிறந்தவனான பிரகஸ்தன் என்பவனைப் பார்த்து, அச்சமயத்திற்கேற்றவாறு கம்பீரமாக இவ்வாறு சொன்னான்.

 “இவன் எங்கிருந்து வந்தவன்? வந்த காரணம் என்ன? அரக்கியரை அச்சுறுத்தி வனங்களை அழித்ததில் இவனுக்கு என்ன பயன்? மோசமான இவனிடம் இது பற்றி கேட்கப் பட ட்டும்!” (பிரகஸ்தனைப் பார்த்து அனுமனிடம் இவ்வாறு கேள் என்றான்).

 மேலும், “யாராலும் வெல்ல இயலாத என்னுடைய ராஜ்ஜியத்தில் இவன் உள்ளே வந்த நோக்கம் என்ன? அரக்கர்களுடன் போரிட்டு அவர்களைக் கொன்றதன் நோக்கம் என்ன? நல்லெண்ணம் இல்லாத இவனிடம் இது பற்றிக் கேட்கப் படட்டும்” என்றான்.

 அரசனின் வார்த்தைகளைக் கேட்ட பிரஹஸ்தன் அனுமனைப் பார்த்து, “ஏ! வானரமே! நீ எதுவும் அச்சம் கொள்ள வேண்டாம். உனக்கு இங்கு கெடுதல் எதுவும் உண்டாகாது. தைரியாமாக இருப்பாயாக!” என்றான்.




 மேலும் அவன், “இராவணப் பேரரசரின் இருப்பிடத்திற்கு நீ தேவேந்திரனால் அனுப்பப்பட்டவன் என்றால் உண்மையைச் சொல்லி விடு! உனக்கு எந்த விதமான தீங்கும் விளைவிக்கப் படாது, விடுதலை செய்யப்படுவாய்!”

 “வைஷ்ரவணனுக்காகவோ (குபேரன்), யமன் அல்லது வருணனுக்காகவோ இந்த தூதுவன் வேடத்தில் எங்கள் நகருக்குள் வந்தாயோ?”

 “அல்லது வெற்றி கொள்ள விழைந்த விஷ்ணுவினால் அனுப்பப்பட்ட தூதுவனோ? உன் உருவம் மட்டுமே வானரத்தைப் போல உள்ளது. உனது பேராற்றல் ஒரு வானரத்தினுடையது போல இல்லை. உள்ளது உள்ளபடி சொல்லிவிட்டால் நீ இப்பொழுதே விடுவிக்கப்படுவாய்! பொய் சொல்லும் நிலையில் நீ உயிருடன் இருப்பது மிகவும் கடினம்! ஆகவே, நீ எந்த விதக் காரணத்திற்காக இராவணனின் இருப்பிடத்திற்கு வந்துள்ளாய் என்பதைச் சொல்!” என்றான்.

  மேற்கண்டவாறு வினவப்பட்ட வானரோத்தமர், அரக்கர்குல அரசனைப் பார்த்து ,

 “நான் இந்திரனாலோ, யமதேவனாலோ அல்லது வருணனாலோ அனுப்பப்பட்ட ஆள் இல்லை. குபேரனுடன் எனக்கு நட்பு எதுவும் கிடையாது. விஷ்ணுவினால் அனுப்பப்படவும் இல்லை. இங்கு வந்துள்ள நான் ஒரு வானரமே! நான் பிறந்ததே ஒரு வானரமாகத்தான்!”

 “ராக்ஷஸ ராஜனுடனான சந்திப்பு எனக்கு இயலாததாக இருந்ததால், மன்னரைச் சந்திக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தவே பூந்தோட்டம் என்னால் அழிக்கபட்டது!”

 “ஆகவே போர்வெறி கொண்டு வலிமைவாய்ந்த அந்த அரக்கர்கள் அங்கு வந்தனர். போரில் என்னுடைய உடலைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டே என்னால் எதிர்க்கப்பட்டு போருக்கு உள்ளானார்கள்!”

 “தேவர்களாலோ, அசுரர்களாலோ எந்த வித அஸ்திரங்களாலும் என்னைக் கட்டிவிட முடியாது. இதற்கான வரத்தை நான் பிரம்ம தேவனிடமிருந்து பெற்றுள்ளேன்!”

 “அரசரைக் காண விருப்பம் கொண்டதாலேயே நான் பிரம்மாஸ்திரத்திற்கு கட்டுப்பட இசைந்தேன். அரக்கர்கள் என்னைத் தாக்கத் தொடங்கியதுமே நான் அஸ்திரக் கட்டிலிருந்து விடுபட்டு விட்டேன்.”

 “ஸ்ரீராமனுடைய சில கார்யங்களை நிறைவேற்றும் பொருட்டு நான் உம்மிடம் வந்துள்ளேன். அளப்பரிய ஆற்றல் மிக்க ஸ்ரீராகவனின் தூதுவன் நான் என்ற செய்தியைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்!”

 “பிரபுவே! நன்மையைத் தர வல்ல என்னுடைய ஆலோசனைகளும் கேட்டுக் கொள்ளப்படட்டும்!” என்று சொன்னார்.

 

           ஐம்பதாவது ஸர்கம் நிறைவு.

No comments:

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...