ஸ்ரீ வால்மீகி ராமாயணம்.
சுந்தர காண்டம்.
ஐம்பத்தொன்றாவது ஸர்கம்.
பெரும் வீரரான அனுமன், பெரும் வீரனான அந்தப் பத்துத்
தலை கொண்ட இராவணனை உற்று நோக்கி, தான் சொல்ல வேண்டியதை, பொருள் மாறாமல் உரைக்கலானார்.
“அரக்கர்களின் அரசனே! நான் வானர அரசன் சுக்ரீவனின்
ஆணைக்கிணங்க உமது இடத்திற்கு இப்பொழுது வந்துள்ளேன். உமது சகோதரனைப் போலத் திகழும்
வானர மன்னர் உமது நலத்தைக் கோரி, தமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.”
“உமது நெருங்கிய நண்பரும், வல்லவருமான சுக்ரீவனுடைய,
அறவழியின்பாற்பட்டதும், இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை தர வல்ல சொற்களைக் கேளுங்கள்!”
“தேர்கள், யானைகள், குதிரைகள் நிரம்பப்பெற்றவரும்,
இந்திரனுக்கு ஒப்பான பெருமை கொண்டவரும், உலகத்திற்கே தந்தை போன்ற உறவுமுறை கொண்டவருமான
தசரதர் என்ற ஒரு அரசர் இருந்தார்.”
“அவருடைய மூத்த குமாரரும், பேரொளி மிக்கவரும், போர்
வல்லமை மிக்கவரும் யாவருக்கும் நன்மையே செய்யக்கூடிய தலைவருமான ஸ்ரீராமன் என்பவர்,
தன் தந்தையின் ஆணைப்படி, அற வழியில் நடந்தவராய், உடன் பிறந்த இலக்குமணனுடனும், தனது
மனைவியான சீதையுடனும், நாட்டை விட்டு வெளியேறி , தண்டகாவனத்தில் வந்து தங்கி இருந்தார்.”
“பெருமை மிக்கவரும், விதேஹ நாட்டு மன்னரான ஜனகர்
என்பவரது மகளுமான சீதை, ஸ்ரீராமனுடைய மனைவியாவார். அவர் அந்த வனத்தில் காணாது போய்விட்டார்.”
“தனது தம்பியுடன் அந்த அரச குமாரர், தன் மனைவியைத்
தேடியவாறே ருஷ்யமுகம் என்னும் இடத்திற்கு வந்தார். அங்கு சுக்ரீவனோடு நட்பு கொண்டார்.”
“சீதையைக் கண்டுபிடித்துத் தருவதாக அவரால் ஸ்ரீராமனுக்கு
வாக்கு அளிக்கப்பட்டது. சுக்ரீவனுக்கு (வாலியிடமிருந்து) வானர ராஜ்ஜியத்தை மீட்டுத்
தருவதாக ஸ்ரீராமனால் வாக்குத் தரப்பட்டது.”
“போரில், அந்த அரசகுமாரனால் வாலி கொல்லப்பட்டு, வானரர்கள்
மற்றும் கரடிகள் அடங்கிய ராஜ்ஜியத்திற்கு சுக்ரீவன் அரசன் ஆக்கப்பட்டார்.”
“வாலி என்ற வானர வீரைப் பற்றியும் தங்களுக்கு ஏற்கனவே
தெரிந்திருக்கும். அந்த வாலி, ஸ்ரீராமனால் ஒரே அம்பினால், கொல்லப்பட்டார்.”
“வானர அரசரான அந்த சுக்ரீவர், சொன்ன சொல் தவறாது,
சீதையைத் தேடுவதில் முழுமுனைப்புடன் ஈடுபட்டு, சகல திசைகளிலும் வானரர்களைத் தேடுவதற்காக
அனுப்பினார்.”
“அந்த நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, இலக்ஷக்கணக்கான
வானரர்கள், எல்லாத் திசைகளிலும், ஆகாயம், பாதாளம் ஆகிய எல்லா இடங்களிலும் சீதையைத்
தேடிக் கொண்டுள்ளனர்.”
“அவர்களில் பல வானர வீரர்கள் கருடனையொத்த பெரும்
வேகம் கொண்டவர்கள். மற்றும் பலர் காற்றைப் போல எங்கும் தடையின்றி செல்லத் தக்க வீரர்கள்
ஆவர்.”
“வாயு பகவானால் உண்டாக்கப்பட்ட அவரது மகனான நான்,
அனுமன் எனப்படுபவன் ஆவேன். சீதையைக் கண்டறிய வேண்டும் என்ற செயலுக்காக, நூறு யோஜனை
நீளமுள்ள கடலை, விரைவாகத் தாண்டி, இங்கு வந்துள்ளேன். இங்குமங்கும் அலைந்து கொண்டிருந்த
நான், உமது இருப்பிடத்தில் ஜனகரின் மகளைக் கண்டேன்.”
“சிறந்த அறிவாற்றல் கொண்டவரே! நீர் அறத்தின் பொருளை
அறிந்தவர். தவங்கள் பல செய்து அதன் பலன்களைப் பெற்றவர். ஆகவே, பிறரது மனைவியைச் சிறைப்
பிடித்து வைப்பது தங்களுக்கு ஏற்ற செயல் அல்ல!”
“அறவழிக்கெதிராய், பல துன்பங்களை உண்டாக்கி, அடியோடு
அழித்துவிட வல்ல செயல்களை, உம்மைப் போன்ற அறிவாற்றல் மிக்கவர்கள் பிடிவாதமாகச் செய்து
கொண்டிருக்க மாட்டார்கள்.”
“சினம் கொண்ட இலக்குமணனிடமிருந்தோ, ஸ்ரீராமனிடமிருந்தோ
எய்யப்படும் அம்புகளை எதிர்த்து நிற்க, தேவர்களாகட்டும், அசுரர்களாகட்டும், எவருக்கும்
ஆற்றல் இல்லை. அரசனே! ஸ்ரீராமனுக்கு ஒரு துன்பத்தை உண்டாக்கி விட்டு, இந்த மூவுலகங்களிலும்
எவன் ஒருவனாலும் சுகமாக இருந்து விட முடியாது.”
“ஆகவே, மூன்று காலத்திற்கும் நன்மை விளைவிப்பதுவும்,
அறவழிப்பட்டதுவும்,, நெடுங்காலத்திற்குப் பயன் விளைவிக்கக் கூடியதுவுமான எனது வார்த்தைகளை
ஏற்றுக் கொள்வீராக! ஜானகியை மனித தெய்வமான ஸ்ரீராமனிடம் திருப்பிக் கொண்டுபோய்ச் சேர்ப்பித்து
விடுங்கள்!”
“மிகவும் கடினமான செயலான சீதை இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்கும் வேலை என்னால் செய்து முடிக்கப் பட்டு விட்டது. இனி இவ்விஷயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த நடவடிக்கைகள் ஸ்ரீராகவனின் ஆணைப்படி நடக்கும்!”
“இந்தச் சீதையை அளப்பரிய துன்பத்தில் தவிப்பவளாய்
நான் கண்டேன். உங்கள் வீட்டில் இருக்கும் அவள், ஐந்து தலையுடைய பெண் நாகம் என்பதை அறியாது
இருக்கின்றீர்!”
“விஷம் கலந்த அன்னம் அதிகம் உண்ணப்பட்டால், அது எவ்வளவு
பலம் மிக்கவர்களுக்கும் கேடு விளைவிக்குமோ, அது போல, சீதையை நெருங்கும் செயல், தேவர்கள், அசுரர்களுடன் கூடிய சக்தியால்
செய்யப்பட்டாலும் கேடுதான் விளைவிக்கும்!” (சீதையை அடைய நினைக்கும் செயலானது விஷம்
கலந்த அன்னத்தை உண்பதற்கு இணையானதாகும்.)
“தவ வலிமையாலும், அறத்தின் பயனாகவும் உன்னால் அடையப்பட்ட
செல்வ வளங்களுடன் நீண்ட நாட்கள் உயிரோடு வாழ வேண்டிய நற்பலனை, நீ இழந்துவிட நினைப்பது
நியாயமான செயலன்று!”
“அரசே! தேவர்களாலோ, அசுரர்களாலோ உமக்கு மரணம் ஏற்படாது
என்று உமது தவத்தின் வலிமையால் நீர் பெற்றுள்ள வரத்தால், நீர் மனதில் தைரியமாக இருக்கின்றீர்.
ஆனால் நீங்கள் செய்த செயலானது உங்களது மரணத்தைத் தடுக்க வல்லதல்ல!”
“அரக்கர் குல வேந்தனே! சுக்ரீவனோ, ஸ்ரீராமனோ தேவருமல்லர்,
யக்ஷருமல்லர், அசுரருமல்லர். ஸ்ரீராமன் ஒரு மானிடன். சுக்ரீவன் ஒரு வானர மன்னன். ஆகவே,
உங்கள் உயிரை எவ்விதம் காப்பாற்றிக் கொள்வீர்?”
“அறமழிந்த வழியில் நடப்பவனுக்கு அறவழியில் நடப்பதால்
கிட்டும் பயன்கள் கிடைக்காது. அறவழியும், அறமற்ற வழியில் நடப்பதை அழிக்கக்கூடிய பலனையே
தரும்!”
“அற வழியில் சென்றதற்கான எவ்வளவு நற்பலன்கள் கிட்ட
வேண்டுமோ, அவற்றை இதுவரை நீர் பெற்று விட்டீர். இதில் ஏதும் ஐயமில்லை. இப்பொழுது நீர்
செய்துள்ள இந்த அறமற்ற செயலுக்கான விளைவையும் விரைவில் அனுபவிக்கப் போகின்றீர்கள்!”
“ஜனஸ்தானத்தில் நடந்த அரக்கர்களின் அழிவையும், வாலியின்
அழிவையும், ஸ்ரீராம, சுக்ரீவர்களின் நட்பையும் பற்றி நன்கு அறிந்து கொண்டு, உமக்கு
எது நன்மை பயக்கும் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்!”
“மாட மாளிகைகளும், கூட கோபுரங்களும், ராஜ வீதிகளும்
அமைந்துள்ள இந்த இலங்கை நகரமானது, சீதையின் ஒளியின் தாக்கத்தால் வெப்பமுறுவதையும்,
ஸ்ரீராமனது கோபத்தால் இன்னலுற்று எரிந்து சாம்பலாவதையும் இப்பொழுதே அறிந்து கொள்ளுங்கள்!”
“உமது நண்பர்களையும், மந்திரிகளையும், சுற்றத்தினரையும்,
சகோதரர்களையும், பெற்ற மக்களையும், உமக்கு சுகம் விரும்புபவர்களையும், நீர் அனுபவிக்க
வேண்டியவற்றையும், மனைவிமார்களையும், இலங்கையையும் அழிந்து போகச் செய்யாதிருப்பீராக!”
“அரக்கர்களின் மாமன்னரே! ஸ்ரீராமனால் ஆட்கொள்ளப்பட்டு,
அவருக்காகத் தூது சொல்ல வந்த வானரமாகிய நான் சொல்லும் உண்மையான வார்த்தைகளைக் கவனமாகக்
கேட்பீராக!”
“இந்த உலகங்கள் அனைத்தையும், பஞ்ச பூதங்களையும்,
இவ்வுலகில் உள்ள அசையும், அசையாப் பொருட்கள் அனைத்தையும் ஒருங்கே அழித்து விட்டு, பிறகு
அவையனைத்தையும் மீண்டும் உருவாக்கும் பேராற்றல் கொண்டவர் ஸ்ரீராமன் ஆவார்!”
“தேவர்களிலோ, அசுரர்களிலோ, மானிட அரசர்களிலோ, யக்ஷ,
ராக்ஷஸ கூட்டங்களிலோ, வித்யாதரர்களிலோ, கந்தர்வர்களிலோ, உரகர்களிலோ, சித்தர்களிலோ,
கின்னரேந்திரர்களிலோ, பறவைக் கூட்டங்களிலோ, அனைத்து வகையான பூதங்களிலோ, அனைத்து வகையான
உலகங்களிலோ, இவை எல்லாவற்றிலும், எல்லா இடங்களிலும், எல்லாக் காலங்களிலும், விஷ்ணுவிற்கு
நிகரான பேராற்றல் மிக்க ஸ்ரீராமனைப் போருக்கு அழைக்கும் ஆற்றல் கொண்டவர் எவரும் கிடையாது.”
“அனைத்து உலகங்களுக்கும் தலைவரான, ராஜசிம்மம் போன்ற
ஸ்ரீராமனுக்கு, இப்படிப்பட்ட விருப்பமில்லாச் செயலைச் செய்து விட்டு, நீர் உயிரோடு
இருப்பதற்கு வாய்ப்பே இல்லை!”
“அரக்கர்களில் இந்திரனே! சகல விதமான தேவர்களுக்கும்,
அசுரர்களுக்கும், மற்றும் கந்தர்வர்கள், வித்யாதரர்கள், நாகர்கள், யக்ஷர்கள் போன்ற
எவருக்கும், மூவுலகிற்கும் அதிபதியான ஸ்ரீராமரைப் போரில் எதிர்த்து நிற்கும் வல்லமை,
இல்லை!”
“தானே தோன்றியவரான நான்முக பிரம்மனாலோ, முப்புரத்தை
எரித்த முக்கண்ணனான ருத்ரமூர்த்தியாலோ, தேவர்களின் அரசனான மகேந்திரனான இந்திரனாலோ,
ஸ்ரீராமனைப் போரில் வெல்ல நினைப்பவரைக் காத்தருள முடியாது!”
மிகவும் துணிச்சலுடன், சாதுர்யமாகப்
பேசிய வானரத்தின் பேச்சுக்கள், தன்னுடைய மனதிற்குகந்ததாய் இல்லாததால், ஒப்பற்ற அந்த
பதின்முக இராவணன், சினத்தால் கண்களை உருட்டிக்கொண்டு, அந்த வானரர்க்குக் கொலைத் தண்டனையை
விதித்தான்.
ஐம்பத்தொன்றாவது ஸர்கம் நிறைவு.



No comments:
Post a Comment