Friday, December 15, 2023

ஸ்ரீ வால்மீகி ராமாயணம். சுந்தர காண்டம். நாற்பத்தேழாவது ஸர்கம்.

 

                               ஸ்ரீ வால்மீகி ராமாயணம்

                                சுந்தர காண்டம்

                         நாற்பத்தேழாவது ஸர்கம்.




 

 ஐந்து சேனாதிபதிகளும் தங்கள் படைவீரர்களுடனும், அவர்களின் வாகனங்களுடனும் அனுமனால் கொல்லப்பட்டதை அறிந்த அந்த அரசன், (இராவணன்) போருக்கு ஆயத்தமாக மிக விருப்பத்துடன் இருந்த அக்ஷன் என்னும் தன் மகனை அன்புடன் பார்த்தான்.

 மன்னனின் விழியசைவைப் புரிந்து கொண்ட அந்த வீரன், தங்கத்தால் செய்யப்பட்ட விசித்திரமான வில்லினைக் கையில் ஏந்தியபடி, சிறந்த அந்தணர்களால் உணவாகக் கொடுக்கப்பட்ட ஹவிஸ்ஸால் உயரக் கிளம்பும் வேள்வித்தீயின் சுடர் போல சபையின் நடுவே விளங்கினான்.

 பின்னர் பராக்ரமசாலியான அந்த அரக்கர் தலைவனான அவன், உருக்கிய தங்கத் தகடுகளைக் கவசமாகக் கொண்டதும், இளஞ்சூரியனைப் போல ஒளிரக் கூடியதுமான ஒரு தேரின் மீது ஏறிக்கொண்டு அந்த வானரத்தை எதிர்த்துப் புறப்பட்டான்.

 அவனது தேரானது சிறந்த தவத்தின் பயனாகப் பெறப்பட்டது. உருக்கிய தங்கத் தகடுகள் தேர் முழுவதும் கவசமாகப் பொருந்தியிருந்தன. இரத்தினங்களால் இழைக்கப்பட்ட கொடிமரத்தில் கொடி அசைந்து கொண்டிருந்தது.

 அந்தத் தேரானது மனோவேகத்தில் பயணிக்கக் கூடிய உயர் ரகமான எட்டுக் குதிரைகளால் பூட்டப் பட்டிருந்தது. தேவர்கள், அசுரர்கள் இவர்கள் யாராலும் அந்தத் தேர் தடுக்க இயலாததாய் இருந்தது. தன் விருப்பம் போலத் தடையின்றி எங்கும் செல்லும் தன்மையும், ஆகாயத்தில் உலவும் வல்லமையும் பெற்றிருந்தது.

 அந்தத் தேரினில், அம்பறாத்தூணிகளும், எட்டுக் கத்திகள் கட்டிய பலகையும் இருந்தன. மேலும் அந்தத் தேரினில் முறையாக வைக்கப் பட்டிருந்த வேல், தோமரம் போன்ற ஆயுதங்களும், போருக்குத் தேவையான அனைத்து விதமானப் பொருட்களும் இருந்தன.

 சூரிய, சந்திரனைப் போல ஒளிரக் கூடிய தங்கக் கயிற்றால் கட்டப்பட்டிருந்த அந்தத் தேரானது, சூரியனைப் போலப் பிரகாசித்தது. அவ்வாறான தேரின் மீது ஏறி, தேவர்களைப் போன்ற பேராற்றல் மிக்க அக்ஷகுமாரன், அரண்மனையிலிருந்து வெளிப்பட்டான். 

 அவன், குதிரைகள், யானைகள், பெரும் பெரும் தேர்கள் கொண்ட பெரும் படை புடைசூழ, பூமியையும் ஆகாயத்தையும் நடுங்க வைக்கும் ஓசையை

உண்டாக்கிக் கொண்டு, தோரண வாயிலில் காத்துக் கொண்டு அமர்ந்திருந்த, திறமைசாலியான வானரரை நெருங்கிச் சென்றான்.

 சிங்கத்தின் விழிகளைப் போன்ற அச்சமூட்டும் விழிகளைக் கொண்ட அக்ஷன், ஊழிக்காலத்தில் உலகினை அழிக்கத் தோன்றும் அக்னி போல, அங்கு உறுதியாக நின்றிருக்கும் வானரத்தை நெருங்கி, வியப்புடனும், செருக்குடனும் நோக்கினான்.

 பெரும் பலசாலியான அந்த இராவண குமாரன், அந்த வானரர் பகைவரிடத்தில் காட்டும் திறமையையும், வீரத்தையும், அதே போலத் தன் வலிமையையும் ஆராய்ந்து கொண்டு, பிரளய கால சூரியன் போல முன்னேறிச் சென்றான்.

 போரில் எவராலும் வெல்ல முடியாத, நிலையான பேராற்றல் கொண்டவரை எதிரில் கண்ட அவன், சினம் தலைக்கேற, மனதை ஒரு முகப் படுத்தி, கூர்மையான மூன்று அம்புகளை, அனுமன் மேல் தொடுத்து, போருக்கு அழைத்தான்.

 கைகளில் நாணேற்றிய வில்லுடனும் அம்புகளுடனும் இருந்த அந்த அக்ஷகுமாரன், களைப்பென்பதையே அறியாதவராயும், செருக்கு மிகுந்தவராயும், பகைவரை வீழ்த்தும் திறமை மிக்கவராயும் இருந்த அந்த வானரத்தைக் கண்டு, பெருமை கொண்டவனாய், (மனதினில் அவருடன் போரிட வேண்டிய முறை பற்றி) யோசிக்கலானான்.

 தங்கத்தாற் செய்யப்பட்ட அழகிய குண்டலங்களைக் காதிலும், கழுத்தில் பதக்கங்களையும் அணிந்திருந்த ஆற்றல் மிக்கவனான அவன், விரைவாக வானரரை நெருங்கித் தாக்கினான். அந்த இருவரது மோதலானது, தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் கூட அச்சமூட்டுவதாய் இருந்தது.

 அந்த வானரருக்கும் அரச குமாரனுக்கும் நடந்த போரினைக் கண்டு, நிலமே அதிர்ந்தது. சூரியன் தான் ஒளி வீசுவதை மறந்தான். காற்று வீசாது ஒடுங்கியது. மலைகள் அதிர்ந்தன. ஆகாயத்தில் பெரும் ஓசை கேட்டது. கடல் பொங்கி வழிந்தது.

 குறி பார்த்து அம்பைத் தொடுக்கும் வல்லமை பெற்றிருந்த அந்த வீரன், தங்கப் பிடி கொண்டதும், விஷம் தோய்ந்ததும் கூரிய முனைகள் உள்ளதும், இறகுகள் கொண்டதுமாய் , விஷப் பாம்புகளை ஒத்திருந்த மூன்று அம்புகளை வானரரின் தலையை நோக்கி மீண்டும் செலுத்தினான்.

 

 ஒரே சமயத்தில் தாக்கிய அந்த அம்புகளால் தலையில் இரத்தம் வழிய, சுழலும் கண்களைக் கொண்ட அந்த வானரரைப் பார்க்கும் போது, அவரின் தலையில் தைத்திருந்த அம்புகள், புதியதாய் உதயமாகும் சூரியனின் கிரணங்கள் ஒளி வீசுவது போல ஒளி வீசிக் கொண்டிருந்தன.

 வானரர்களின் அரசனான சுக்ரீவனின் மந்திரிகளுள் மிகச் சிறந்தவரான அனுமன், போர்க்களத்தில் மிகக் கூரிய ஆயுதங்களையும், விசித்திரமான விற்களையும் கொண்டு போருக்குத் தயாராக இருந்த அரசகுமாரனை உற்று நோக்கினார். உடனே மகிழ்வுடன் போருக்குத் தயாராகி, மிகிழ்ச்சியுடன் பெருங்குரலில் கர்ஜனை செய்தார்.

 மிகவும் வலிமையும், ஆற்றலும் கொண்ட அனுமன், அப்பொழுது பெரும் சினம் கொண்டவரானார். பெரும் சேனைகளுடனும் பலவிதமான வாகனங்களுடனும் போரில் நின்ற அக்ஷகுமாரனை, மந்திரகிரியின் நுனியில் இருக்கும் சூரியனின் வெப்பத்தைப் போன்று, தன் கண்களில் இருந்து கிளம்பும் தீச்சுடரையொத்த பார்வையால் வேதனைக்கு உள்ளாக்கினார்.

 அற்புதமான வில்லிலிருந்து அம்புகளை மழையாகப் பொழியும் ராக்ஷஸ மேகம் போலிருந்த அவன், அதன் காரணமாக, மேகம் எவ்விதம் மலை மீது மழையாகப் பொழியுமோ, அது போல, மலை போல நின்றிருந்த வானரர் மீது, அம்புகளை மழை பெய்வது போலச் செலுத்தினான்.

 அக்ஷகுமாரனென்ற அந்த அரசகுமாரன், போரில் மிகவும் உக்கிரமான பராக்ரமம் கொண்டவனாகவும், மேன் மேலும் வளரக் கூடிய பிரகாசமும், பலமும், வீர்யமும் கொண்டவனாகவும் விளங்குவதைக் கண்ட வானரர், மகிழ்வுற்று, மேகம் போல கர்ஜனை செய்தார்.

 அதனால் கோபமுற்றவனாய், இரத்தம் போன்ற சிவந்த கண்களுடன் தனது சிறுபிள்ளைத் தனமான வீராவேசத்தில் கர்வம் கொண்டவனாய், போரில் ஈடு இணையற்ற வானரர் மீது, புற்களால் மறைக்கப்பட்ட புதைகுழியில் யானை வந்து வீழ்வது போல விழுந்தான்.

 தன் மேல் பலமாக அவன் செலுத்திய அம்புகளால், அவர் மேக முழக்கம் போல கர்ஜனையிட்டார். மாருதியான அனுமன், தன் கைகளையும் தொடைகளையும் அகலமாக விரித்துக் கொண்டு, பயங்கரமான தோற்றம் கொண்டு ஆகாயத்தில் வேகமாகக் கிளம்பினார்.


  போரில் வல்லவனும் மிகச் சிறந்த தேர் வீரனுமான அவன் பலம் மிகுந்த அரக்கனாக விளங்கினான். மேகம் மலையின் மீது கற்களை மழையாகப் பொழிவது போல, வானத்தில் எழுந்து நின்ற அவரை அம்புகளால் தாக்கினான்.

 பெரும் வீரம் மிக்கவரும் மனோவேகமாகச் செல்லக் கூடியவருமான அந்த வானர வீரர், போரில் அவன் செலுத்திய அம்புகளை வலுவிழக்கச் செய்தார். அவன் செலுத்திய அம்புகளிடையே, காற்றைப் போல நுழைந்து, வானத்தில் இங்குமங்குமாக உலவிய வண்ணம் இருந்தார்.

 கையில் வில்லேந்தி, போரில் மிகவும் விருப்பம் கொண்டவனாய், கூர்மையான அம்புகளால் ஆகாயத்தை நிரப்பும் அவனை, வாயுகுமாரர் பெரும் மதிப்புடன் கவனித்தார். செய்ய வேண்டிய செயல் பற்றியும் எண்ணலானார்.

 ஆற்றல் மிக்க அரசகுமாரனால் விடுக்கப்பட்ட அம்புகள், அப்பொழுது அனுமனின் மார்பைக் கிழித்தன. மிகுந்த பலம் கொண்டவரும், காலத்திற்கேற்ப செயலாற்றும் வல்லமை மிக்கவருமான வானரர், பெருங்கர்ஜனை செய்து கொண்டே, இனிப் போரிட வேண்டிய முறைகளைப் பற்றி மனதினுள் எண்ணலானார்.

 “மிகுந்த ஆற்றல் கொண்டுள்ள இவன் இளஞ்சூரியனைப் போல ஒளி வீசிக் கொண்டு, வயதில் முதிர்ந்தவன் போலத் தன் போர்த்தொழிலைச் செய்கின்றான். அனைத்து விதமான போர்த்தந்திரங்களையும் குறைவில்லாமல் மேற்கொள்ளும் இவனை, இப்பொழுதே கொன்று விடுவதில் என் மனம் ஒப்பவில்லை.”

 “இவனுடைய வலிமையையும் ஆற்றலையும் நோக்கினால் இவன் மிகவும் பெரியவனாகத் தோன்றுகிறான். போரில் விழிப்புடனும், எதிரிகளின் பலத்தை உடைப்பதில் வல்லமையுடனும் இருக்கின்றான். இவன் மேற்கொள்ளும் செயல்கள் பெருஞ்சிறப்புடன் இருப்பதால், இவன் நாகர்கள், யக்ஷர்கள் மற்றும் முனிவர்களாலும் கொண்டாடப் பட வேண்டியவன் என்பதில் எந்த வித ஐயமுமில்லை.”

 “பேராற்றல், உற்சாகம் இவற்றால் நிரம்பப் பெற்ற மனத்தையுடைய இவன், என்னை எதிர் கொண்டு உற்று நோக்குகின்றான். அதி விரைவாகச் செயலாற்றும் இவனது பேராற்றல், தேவ, அசுரர்களுடைய நெஞ்சங்களையும் கலங்கச் செய்யும்.”

 “இவனை அலட்சியம் செய்தாலும், இவன் மேலே விழுந்து தாக்க மாட்டான் என்பது உறுதியில்லை. ஏனென்றால், போரில் இவனது ஆற்றல் சிறப்பாகப் பெருகுகிறது. ஆகவே இவனை இப்பொழுதே கொன்று விடுவதே எனக்குச் சரியென்று தோன்றுகிறது. பற்றி எரியும் நெருப்பை உதாசீனம் செய்வது மிகவும் ஆபத்தானது.”

 எதிரியின் பெரும் வேகத்தையும், தன்னுடைய செயல் வெற்றியடைய வேண்டும் என்ற கருத்தையும் ஆராய்ந்த மகா பலசாலியும், பேராற்றல் கொண்ட அனுமன், ஒரு முடிவெடுத்தார். இந்த (மோசமான) ஆபத்தான எதிரியைக் கொன்று விட வேண்டும் என முடிவெடுத்தார்.

 மிகுந்த வேகம் கொண்டவையும், எவ்வித இடர்ப்பாடுகளுக்கு அஞ்சாதவையும், போர்க்களத்தில் மாறி மாறிப் பயணிப்பதில் சலிப்பற்றவையுமான அவனுடைய எட்டுக் குதிரைகளை அந்த வாயுகுமாரரான வானர வீரர், காற்றலையும் ஆகாயத்தில், உள்ளங்கைகளால் அறைந்தே கொன்றார்.

 வானர அரசனின் சிறந்த மந்திரியாகிய அனுமனால், கைகளால் தாக்கப்பட்ட அந்தப் பெரிய தேரானது, நொறுங்கிப் போய், அச்சு முறிந்து, இறந்து போன குதிரைகளுடன் வானத்திலிருந்து பூமியில் வந்து விழுந்தது.


 பேராற்றல் கொண்ட அவன், தன் தேரினை இழந்து, கைகளில் வில்லும், கத்தியும் ஏந்தியவாறு, பெருந்தவத்தால், தங்கள் உடலைத் துறந்து தேவலோகம் செல்லும் முனிவர்கள் போல, ஆகாயத்தில் தோன்றினான்.

 காற்றுக்கு நிகரான ஆற்றல் கொண்ட அந்த வானரர், கருடன், வாயு மற்றும் சித்தர்கள் உலவும் ஆகாயத்தில் ஓடித்திரிந்த அவனை அப்பொழுது தாக்கி, அவனது இரண்டு கால்களையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

 தன் தந்தைக் கொப்ப ஆற்றல் மிக்கவரும், சிறந்த வானர வீரருமான அவர், போர்க்களத்தில் அவன் கால்களைப் பிடித்து, பறவைகளின் அரசனான கருடன், பெரிய பாம்பைப் பிடித்து எவ்விதம் சுழற்றி வீசுமோ, அதுபோலப் பல முறை சுழற்றி, தரையில் ஓங்கி எறிந்தார். 

 கைகள், தொடைகள், இடுப்பு, கழுத்து இவை முறிபட்டு, உடலின் எலும்புகள் தெறிக்க, கண்கள் பிதுங்கி வெளிவர, இரத்தம் சொறிய, உடலின் எல்லா அங்கங்களும் தங்கள் நிலையழிந்து, வாயுகுமாரரால் அந்த அரக்கன் கொலையுண்டு பூமியில் விழுந்தான்.

 பெரும் வானரரான அவர், அவனைத் தரையில் அடித்துக் கொன்று, அரக்கர்களின் அரசனுக்குப் பெரும் அச்சத்தைத் தோற்றுவித்தார்.

 வான மண்டலத்தில் உலவும் தவம் செய்யும் முனிவர்களும், யக்ஷர்கள், பன்னகர்கள், உள்ளிட்ட பூத கணங்களும், இந்திரன் உள்ளிட்ட தேவர்களும் ஒரு சேர கூடி நின்று, அரச குமாரன் கொல்லப்பட்ட அந்த தருணத்தில், அந்த வானரரை வியப்புடன் நோக்கினர்.

 இந்திரனின் மகனுக்கொத்த பெருமையுள்ளவனும், சிவந்த கண்களைக் கொண்டவனுமான அக்ஷனென்ற அரசகுமாரனைக் கொன்று விட்டு, வீரனான வானரர், மக்களைக் கவர்ந்து செல்லும் யமதர்மனைப் போல, தக்க தருணத்திற்காகக் காத்திருப்பதற்காக, மீண்டும் அந்த தோரண வாயிலுக்கே வந்து சேர்ந்தார்.

 

 நாற்பத்தேழாவது ஸர்கம் நிறைவு.

No comments:

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...