ஸ்ரீ வால்மீகி ராமாயணம்
சுந்தர காண்டம்
நாற்பத்தைந்தாவது ஸர்கம்.
(ஏழு மந்திரிகுமாரர்கள் வதம்).
அரக்கர்களின் அரசனான இராவணனின் ஆணைப்படி, நெருப்பைப்
போன்று பிரகாசிக்கக் கூடிய அந்த மந்திரியின் ஏழு புதல்வர்களும் மாளிகையிலிருந்து வெளிப்பட்டார்கள்.
அவர்களிடம் பெரிய சேனை இருந்தது. பலசாலிகளான அவர்கள்
கைகளில் வில்லேந்தியிருந்தார்கள். ஆயுதப் பயிற்சியில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்த
அவர்கள் ஒவ்வொருவரும் பகைவனை வெல்ல வேண்டுமென்று தனித்தனியே வெறி கொண்டிருந்தார்கள்.
பொன் மயமான சாளரங்கள் கொண்ட அவர்களது தேர்கள் குதிரைகளால்
பூட்டப்பட்டிருந்தன. கொடி மரங்களில் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. தேர்கள் இழுக்கப்படும்
பொழுது, இடியோசை போல சப்தம் உண்டாயிற்று.
இவ்வாறான தேர்களில் ஏறி மகிழ்ந்த அதிக வீரமும் வலிமையும்
கொண்ட அவர்கள், காய்ச்சி ஊற்றப்பட்ட பொன்னாலான சித்திரங்களைக் கொண்ட தங்கள் விற்களின்
நாணொலியை, மின்னலோடு கூடிய இடியோசை போல ஏற்படுத்திக் கொண்டு முன்னே சென்றார்கள்.
ஏற்கனவே கிங்கரர்கள் எனப்படும் அரக்கர்கள் கொல்லப்
பட்ட செய்தியை அறிந்திருந்ததால், தங்கள் உற்றார் உறவினர்களுடன் இருந்த அவர்களின் தாய்மார்கள்,
துயரத்தால் மனம் கலங்கியிருந்தார்கள்.
அவர்கள் ஒருவரையொருவர் நெருங்கிச் செல்லும் பொழுது
அவர்கள் அணிந்திருந்த தங்கக் கவசங்களும் ஆபரணங்களும் உரசி ஜ்வலித்தன. அவர்கள்,
தோரண வாயிலில் போருக்குத் தயாராக நின்றிருந்த அனுமனை நெருங்கினார்கள்.
தேர்களின் ஓசையானது இடியோசை போல முழங்க, அந்த அரக்கர்கள்
இடைவிடாது மழை பொழியும் மேகங்கள் போல, தங்கள் அம்புகளை அனுமன் மீது செலுத்தினார்கள்.
அந்த அம்புச் சரங்கள் அனுமனின் உடலை மூடி மறைத்தன.
பெரிய மலையொன்று மழைத்துளிகளால் நிறைந்திருப்பது போன்றதொரு தோற்றத்தை அது ஏற்படுத்தியது.
அப்பொழுது தெளிந்த வானத்தில் அதி விரைவாக உயரக் கிளம்பிய
அனுமன், அந்த வீரர்களின் அம்புகளையும் ரதங்களின் ஓசைகளையும் வீணாகும்படி செய்தார்.
வான வில்லோடு விளங்கும் மேகக் கூட்டங்களிடையே விளையாடும்
வாயு பகவான் போல , விற்களைக் கொண்டுள்ள அந்த வீரர்களுடன் ஆகாயத்தில் நின்று விளையாடும்
அனுமன் விளங்கினார்.
அந்தப் பெரும் சேனையை, பேராற்றல் கொண்ட அனுமன், ஒரு
பயங்கரமான கர்ஜனையை எழுப்பி அச்சமுறச் செய்து, மிகுந்த வேகத்துடன் எதிர்க்கத் துணிந்தார்.
பகைவர்களுக்குத் துன்பம் தர வல்ல அனுமன், சிலரைக்
கைகளாலும், சிலரைக் கால்களாலும் அழித்தார். கை முஷ்டியால் சிலரைக் கொன்றார். கூரிய
நகங்களால் சிலரைக் கிழித்தெறிந்தார். தன் மார்பினால் முட்டி சிலரையும், தன் தொடைகளால்
நசுக்கிச் சிலரையும் கொன்றழித்தார். சிலர் அவருடைய சிம்ம நாதத்தால் கதி கலங்கி மண்ணில்
விழுந்தனர்.
அந்த வீரர்கள் பூமியில் வீழ்ந்து மடிந்ததைக் கண்ட
அந்தப் பெரிய சேனை அச்சமுற்றுப், பத்துத் திசைகளிலும் பறந்து ஓடியது.
யானைகள் விகாரமாய்ப் பிளிறின. குதிரைகள் பூமியில்
விழுந்து கிடந்தன. இரதங்கள், கொடிமரமும், நிழற்குடையும் முறிந்து, அந்த நிலப்பரப்பு
முழுவதும் விழுந்து கிடந்தன.
அப்பொழுது வழியெங்கும் குருதியானது, நதிகளின் பெருக்கு போல
வழிந்தோடியது. அரக்கர்களின் பலதரப்பட்ட விசித்திரமான ஓலங்களால், இலங்கையே விசித்திரமான
ஓசையோடு அலறியது.
கொழுத்துத் திரிந்த அரக்கர்களைக் கொன்று குவித்த,
சண்ட பராக்ரமம் கொண்ட மகா பலசாலியான வானரரான அனுமன்,
மீண்டும் மற்ற அர்க்கர்களோடு போர் புரியும் எண்ணத்தோடு அந்தக் கோபுர வாசலுக்கு வந்தார்.
நாற்பத்தைந்தாவது ஸர்கம் நிறைவு.



No comments:
Post a Comment