Monday, December 18, 2023

ஸ்ரீ வால்மீகி ராமாயணம். சுந்தர காண்டம். ஐம்பத்து நான்காவது ஸர்கம்.

 

                           ஸ்ரீ வால்மீகி ராமாயணம்.

                           சுந்தர காண்டம்.

                 ஐம்பத்து நான்காவது ஸர்கம்.




 

 வானரரான அனுமன், தான் மனதில் எண்ணி வந்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறியதால், மிகுந்த உற்சாகம் மேலிட, இலங்கையைப் பார்த்துக்கொண்டே, அடுத்துத் தான் செய்ய வேண்டிய செயலைப் பற்றி சிந்திக்கலானார்.

 “எனக்கு இப்பொழுது செய்து முடிக்க வேண்டிய காரியம் இன்னும் என்ன மீதமுள்ளது? இந்த அரக்கர்களுக்கு மேலும் துன்பம் தரத் தக்க செயல் என்னவாக இருக்கும்?”

 “அசோக வனம் நாசம் செய்யப்பட்டு விட்டது. சிறந்த அரக்க வீரர் பலர் கொல்லப்பட்டு விட்டனர். சேனையின் ஒரு பகுதியும் அழிக்கப்பட்டு விட்டது. இப்பொழுது இந்தக் கோட்டையை அழிக்கும் வேலை மீதம் உள்ளது.”

 “இந்தக் கோட்டை அழிக்கப்பட்டால், கடலைத் தாண்டி இங்கு வந்த எனது முயற்சி, பயனுள்ளதாக ஆகும். சிறிய முயற்சியிலேயே, இந்தச் செயலைச் செய்வது பட்ட இன்னல்களுக்குப் பலனுள்ளதாக ஆகும்.”

 “எனது வாலில் எரிந்து கொண்டிருக்கும் இந்த அக்னிதேவனுக்கு, இந்தப் பெரிய மாளிகைகளை எரிப்பதற்காக அளித்தால், அது அக்னிதேவனைத் திருப்தி செய்த செயலாக இருக்கும்.”

 பிறகு அவர், மின்னலோடு கூடிய மேகம் போல, எரிந்து கொண்டிருக்கும் தன் வாலுடன், இலங்கையின் மாளிகைகள் முன்பு சுற்றித் திரிந்தார்.

 அந்த வானர வீரர் சற்றும் பயமின்றி, அரக்கர்களின் ஒவ்வொரு வீட்டையும் பார்த்துக் கொண்டே, அவர்களின் தோட்டங்களிலும் மாளிகைகளிலும் சுற்றித் திரிந்தார்.

 காற்றுக்கு நிகரானவரும், பெரும் வேகத்துடன் செல்லக் கூடியவருமான அனுமன், திரிந்து கொண்டே, பிரஹஸ்தனுடைய மாளிகையை அடைந்து, அதற்கு நெருப்பைப் பற்ற வைத்து விட்டு, அங்கிருந்து பறந்தார். மேலும் மஹாபார்ஷ்வனுடைய மாளிகைக்கும், பிரளய கால நெருப்பின் ஜ்வாலையை ஒத்த நெருப்பைப் பற்ற வைத்தார்.


 

 வானர சேனைத் தலைவரும், பேரொளி மிக்கவருமான அந்த பெரும் வானரர், அவ்வாறே, வஜ்ரதம்ஷ்ட்ரன், சுகன், அறிவாளியான ஸாரணன் மற்றும் இந்த்ரஜித் ஆகியோரின் வீடுகளை அடைந்து நெருப்பைப் பற்ற வைத்தார். மேலும் ஜம்புமாலி மற்றும் ஸுமாலியினுடைய வீடுகளையும் சுட்டெரித்தார்.

 பேராற்றல் கொண்ட அந்த பெரும் வானரர், முறையே, ரஷ்மிகேது, சூர்யசத்ரு, ஹ்ரஸ்வகர்ணன், தம்ஷ்ட்ரன், ரோமசன் ஆகிய அரக்கர்களின் வீட்டை எரித்தார். அவ்வாறே, யுத்தோத்தமன், மத்தன், த்வஜக்ரீவன், பயங்கரமான வித்யுஜிஹ்வன், ஹஸ்திமுகன், கராளன், பிசாசன், சோணிதாக்ஷன், கும்பகர்ணன், மகராக்ஷஸன் ஆகியோர் வீடுகளையும் எரித்தார். அவ்விதமே, யக்ஞசத்ரு, பிரம்மசத்ரு, துராத்மாவான நிகும்பன், நராந்தகன், கும்பன் ஆகியோர் வீடுகளையும் எரித்தார். விபீஷணரது வீட்டை மட்டும் விட்டுவிட்டு, மற்ற வீடுகளை வரிசையாக எரித்தார்.

 பெரும் புகழ் கொண்ட வாயுகுமாரர், பல்வேறு மாடமாளிகைகளையும், செல்வச் செருக்குடன் வாழ்ந்த அரக்கர்களின் செல்வங்களையும் எரித்துச் சாம்பலாக்கினார்.

 ஒளி பொருந்திய அனுமன், எல்லோருடைய மாளிகைகளையும் அழித்த பின்னர், அரக்க வேந்தனாகிய இராவணனின் வீட்டை அடைந்தார்.

 வீர அனுமன், மேரு மந்தர மலைகளைப் போன்று உயரமானதும், எல்லாச் செல்வங்களும் குறைவற்று விளங்கியதும், பலவித ரத்னங்களால் அலங்கரிக்கப்பட்டதும், மிக முக்கியமானதுமான அந்த வீட்டில், தன் வாலின் நுனியில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த நெருப்பைப் பற்ற வைத்து விட்டு, ப்ரளய கால மேகம் போல கர்ஜனை செய்தார்.

 ப்ரளய கால நெருப்புப் போல ஜ்வலித்த அந்த நெருப்பு, காற்றின் துணையுடன் மிகவும் கடுமையாகவும், வலிமையாகவும் பற்றி எரிந்தது. காற்றானது எல்லா வீடுகளுக்கும் நெருப்பைப் பரவச் செய்தது. பொன்னால் செய்யப்பட்ட சாளரங்களும், முத்து, மணி, இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட மாளிகைகளும் எரிந்து சாம்பலாயின. எரிந்து, இடிந்து விழுந்த மாளிகைகளின் கோபுரங்களைப் பார்க்கும் போது, சிறப்பழிந்த சித்தர்களின் வீடுகள் ஆகாயத்திலிருந்து பூமியின் மீது வந்து விழுவது போல இருந்தது.

 தங்கள் தங்கள் வீடுகளைக் காப்பாற்றிக்கொள்ள அங்குமிங்கும் ஓடிய அரக்கர்கள், தங்கள் தைரியத்தையும், உடமைகளையும் இழந்து, “ஐயோ! இந்த அக்னிதான் குரங்கின் உருவம் கொண்டு வந்து விட்டார்” என்று கூக்குரல் இட்டனர்.

 பல அரக்கியர், கைகளில் குழந்தைகளுடன் கதறிக்கொண்டு, தலைவிரி கோலமாய், தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த மேல் மாடிகளிலிருந்து திடீரெனக் கீழே விழுந்தார்கள். மேகங்களில் தோன்றும் மின்னல்கள் போல, மேலிருந்து விழுபவர்கள் காட்சியளித்தார்கள்.

 வைரம், பவழம், வைடூரியம், முத்து மற்றும் வெள்ளி முதலானவற்றால் கட்டப்பட்ட அதிசயமான வீடுகள், பற்றி எரிந்ததில், அவைகள் எல்லாம் உருகிய உலோகத் தாதுக்களுடன் கலந்து தரையில் விழுவதை அனுமன் கண்டார்.

 புற்களையும் காய்ந்த குச்சிகளையும் எரிக்கும் நெருப்பிற்கு, அதனால் திருப்தி ஏற்படுவதில்லை. அது போல, நெருப்பினால் அழிந்து போன பெரும் ராக்ஷஸ வீரர்களால், அனுமனுக்கும் திருப்தி ஏற்படவில்லை. அனுமனால் கொல்லப்பட்ட அரக்கர்களின் உடலைத் தாங்கிய பூமிக்கும் திருப்தி ஏற்படவில்லை.

 நெருப்பின் தீ நாக்குகள், சில இடங்களில், பலாசப்பூ போலவும், சில இடங்களில் இலவம் பூ போலவும், சில இடங்களில் குங்குமம் போலவும் விளங்கின. (கீதா பிரஸ் பதிப்பில் இந்த ஸ்லோகம் இல்லை).

 ருத்ரனால் முப்புரம் எவ்விதம் எரிக்கப்பட்டதோ, அது போல, எண்ணியதை முடிக்கும் ஆற்றல் கொண்ட வானரரான அனுமனால் இலங்கை நகரம் எரிக்கப்பட்டது.

 பேராற்றல் கொண்ட அனுமனால் வைக்கப்பட்ட நெருப்பானது, பெரிதும் வலுப்பெற்று, கொழுந்து விட்டு எரிந்து, தன் நாக்குகளை எல்லா இடங்களிலும் பரவச் செய்தது. அதனால் இலங்கையின் மலையின் உச்சியிலேயே நெருப்புப் பற்றி எரிந்தது.


 காற்றின் வேகத்தில் வீடுகளில் பற்றியெரிந்த நெருப்பு, சிறிதும் புகையை உண்டாக்கவில்லை. அரக்கர்களின் உடல்களே, நெய் போலாகி அத் தீயை வளர்க்க, அதன் ஜ்வாலையானது, பிரளய கால நெருப்புப் போல வானளாவி உயரக் கிளம்பியது.

 இலங்கை நகர் முழுவதும் பற்றியெரிந்த நெருப்பு, கோடி சூரியன்களின் பிரகாசத்தைக் கொடுத்தது. வீடுகள், மலைகள் பற்றியெரியும்போது உண்டான ஓசை, இடியோசைபோலப் பெருஞ்சத்தத்தைக் கிளப்பி, அண்டத்தையே பிளந்து விடுவது போல இருந்தது.

 ஆகாயம் வரை உயர்ந்து எரிந்த நெருப்பு, கடுமையான ஒளியுடன், பலாசப்பூ போலக் கொழுந்து விட்டெரிந்தது. எரிந்து முடிந்த நெருப்பினால் உண்டான புகை வானத்தில் பரவி, நீலோத்பலம் போன்ற நிறத்துடன் விளங்கியது.

 எண்ணற்ற அரக்கர்கள் பலரும் அங்கு கூடினர். ஒரே சமயத்தில் அந்த நகரமே, வாழும் உயிர்களோடும், வீடுகளோடும், மரங்களோடும் பற்றியெரிவதைப் பார்த்து, பின் வருமாறு பேசிக் கொண்டார்கள்.

 “வஜ்ராயுதம் தாங்கிய தேவேந்திரனோ? இல்லை, அந்த எம தர்மனோ? வருணனோ இல்லை, வாயுதேவனோ? ருத்ரமூர்த்தியோ இல்லை, சூரியனோ? குபேரனோ? இல்லை, சந்திரனோ? இல்லை இது நேரிடையாக வந்திருக்கும் எமனேதான்! வானரம் அல்ல!”

 “எல்லாவற்றையும் படைக்கும் நான்முகனான, அனைவருக்கும் பாட்டனான, பிரம்ம தேவரின் கோபம், அரக்கர்களை உண்டில்லாமல் ஆக்குவதற்காக வானர வேடம் பூண்டு வந்ததோ? அல்லது எல்லையற்றதும், புலனுக்கு எட்டாததும், அறிவிற்கப்பாற்பட்டதும், இணையற்றதும், எல்லாவற்றிலும் மேலானதுமான விஷ்ணு என்னும் பெரும் சக்தியே, ராக்ஷஸர்களின் அழிவிற்காக, தனது மாய சக்தியினால் குரங்கிங்கின் வடிவம் கொண்டு இங்கு வந்ததா என்ன?”

 ஒரே நேரத்தில், அரக்கர்கள், குதிரைகள், யானைகள், தேர்கள், பறவைகள், மிருகங்கள், மரங்கள் அனைத்தும் பற்றி எரிந்ததால், அந்த நேரத்தில் தீனமான பெருங்குரலில் அதிகக் கலவரத்தோடு அந்த இலங்கை நகரமே புலம்பியது.

 “ஐயோ அப்பா! ஐயோ மகனே! ஐயோ நாதனே! ஐயோ நண்பனே! செழித்திருந்த வாழ்க்கை இவ்வாறு அழிந்துவிட்டதே!” என்று பலவாறாக அரற்றிக் கொண்டிருந்த அரக்கர்களால் பேரிரைச்சல் உண்டானது.

 அனுமனின் கோபத்தின் வீர்யத்தினால், அந்த இலங்கை நகரம், நெருப்பு நாக்குகளால் தீண்டப்பட்டு, இறந்து கிடந்த வீரர்களையும், சிதறியோடிய வீரர்களையும் கொண்டு, கடும் சாபத்தால் அழிக்கப்பட்டது போலானது.

 உயர்வு மிக்க அனுமன், பரபரப்பும் பயமும் கொண்ட அரக்கர்களைக் கொண்ட, பெரும் ஆரவாரத்துடன் எரியும் நெருப்பினால் சூழப்பட்ட இலங்கையைப் பார்க்கும் போது, பிரம்மனின் கோபத்தால் அழிந்த பூவுலகைப் போல இருப்பதாக நினைத்துக் கொண்டார்.

 மிகச் சிறந்த மரங்களைக் கொண்டிருந்த வனத்தை அழித்து, போரில் மிகப் பெரிய அரக்கர்களைக் கொன்று, மலைகளுக்கு நிகரான மாளிகைகளைக் கொண்டிருந்த அந்த நகரத்தை எரித்து விட்டு, அனுமன் எனப்படும் அந்த வானரர், நினைத்த காரியத்தை முடித்தவராய் சுற்றித் திரிந்தார்.

 உயர்வு மிக்க அனுமன், பலவிதமான மரங்களைக் கொண்ட வனத்தை அழித்துவிட்டு, மிகவும் பெரிய அரக்கர்களையும் மாய்த்து விட்டு, அரக்கர்களின் மாளிகைகளில் நெருப்பையும் பற்ற வைத்து விட்ட அந்தக் கணத்தில், மனதில், ஸ்ரீராமனை நினைக்கலானார்.

 அதே நேரத்தில் பெரும் வலிமை மிக்கவரும், காற்றுக்கிணையான வேகம் கொண்டவரும், அறிவிற் சிறந்தவரும், வானர வீரர்களின் சிறந்த தலைவராக விளங்குபவருமான அந்த வாயுகுமாரை, அனைத்து தேவர்களும் வணங்கினார்கள்.

 அனைத்துத் தேவர்களும், முனிவர்களும், கந்தர்வர்களும், வித்யாதரர்களும், நாகர்களும், யக்ஷர்களும், பெரும் பூத கணங்களும் அங்கு நடந்ததைப் பார்த்து ஈடில்லாத மகிழ்ச்சி அடைந்தார்கள்.

 அந்த வானரர், வனத்தை அழித்து, அரக்கர்களைப் போரினில் மாய்த்து, அழகிய இலங்கையை எரித்துச் சாம்பலாக்கிவிட்டு, மிகவும் ஒளிமயமாக விளங்கினார்.




 உயர்ந்த மாளிகையின் உச்சியில், தன் வாலினில் எரியும் நெருப்பிலிருந்து எழும் ஒளியின் இடையில் நின்று கொண்டிருந்த அனுமன், ஒளிரும் கிரணங்களைக் கொண்ட சூரியன் போல விளங்கினார்.

 இவ்விதம் இலங்கை நகரை எரித்துப், பெரும் இன்னலை உண்டாக்கிய, சிறந்த வானரரான அனுமன், வாலில் எரிந்து கொண்டிருந்த நெருப்பைக் கடல் நீரால் அப்பொழுது அணைத்தார்.




 எரிந்து சாம்பலான இலங்கை நகரைப் பார்த்த தேவர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், முனிவர்கள் அனைவரும் மகிழ்ச்சி கொண்டார்கள்.

 அனைத்து வகையான உயிரினங்களும், அந்தப் பெரிய வானரரும், வானரர்களில் சிறந்தவருமான அனுமனைக் கண்டு, இவர் பிரளய கால நெருப்போ என்று அஞ்சி நடுங்கின.

 

 

 ஐம்பத்து நான்காவது ஸர்கம் நிறைவு.

No comments:

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...