ஸ்ரீ வால்மீகி ராமாயணம்.
சுந்தர காண்டம்.
ஐம்பத்து ஐந்தாவது ஸர்கம்.
இலங்கை நகரம் எரிந்து சாம்பலானதையும்,
அரக்கர் கூட்டம் அஞ்சி நடுங்கியபடி ஓடிக்கொண்டிருப்பதையும் கண்ட வானரரான அனுமன், பின்வறுமாறு
கவலையுற்றார்.
“தன்னால் இலங்கை கொளுத்தப்பட்ட நிகழ்வு எதன் காரணமாக
ஏற்பட்டது? தான் செய்த செயல் தவறோ?” என்று மனதில் அச்சம் கொண்டார்.
“எரியும் நெருப்பை நீரைக்கொண்டு அணைப்பது போல் எவர்
தன் அறிவால் பொங்கிவரும் சினத்தை அடக்குகிறார்களோ, அவர்களே சிறந்த மனிதர்கள் ஆவார்கள்!”
“சினத்தின் வசப்பட்டவன் எவன் தான் கொடிய செயலைச்
செய்யாதிருப்பான்? கோபம் கொண்டவன், சான்றோர்களையும் கொலை செய்வான். கோபம் கொண்ட மனிதன்,
தவசீலர்களையும் கடும் வார்த்தைகளால் ஏசுவான்.”
“சினம் தலைக்கேறியவனால், சொல்லத் தகுந்தது எது, சொல்லத்
தகாதது எது, எனப் பிரித்தறிய முடியாது. சினங்கொண்டவனால் செய்யக் கூடாத செயல் என்று
எதனையும் பிரித்தறிய முடியாது. அவனால் சொல்லத் தகாத சொல் என்று எதுவும் இருக்கவும்
முடியாது!”
“ஒரு பாம்பு எவ்வாறு பொறுமையாகத் தன் தோலை(சட்டையை)
உரித்துக் கொள்கிறதோ, அது போல, எவன் தன் தலைக்குமேல் ஏறிய சினத்தை, மன்னித்து விட்டு
விடுகிறானோ, அவனே ஆண்மகன் என்று அறியப் படுவான்!”
“சீதையைப் பற்றி நினைக்காமல், இலங்கையைத் தீயிட்டுக்
கொளுத்திய என்னை அறிவற்ற மூடனென்றும், வெட்கமில்லாதவனென்றும், இழிசெயல் புரிவதில் சிறந்தவனென்றும்,
தன் தலைவனுக்குத் துரோகம் புரிந்தவனென்றும் இகழ்ந்துகொள்ள வேண்டும்.”
“இந்த இலங்கை முழுவதும் எரிந்துவிட்டது என்னும் போதே,
உத்தமியான சீதையும் எரிந்திருப்பார் என்பதில் ஐயமில்லை. மதிகெட்ட என்னால் செய்யப்பட்ட
இந்தச் செய்கையால், என் தலைவனுக்காக நான் செய்ய வேண்டிய செயல் பாழாகிவிட்டது”
“எதற்காக நான் முயற்சி செய்தேனோ, அது கெட்டு விட்டது.
ஏனென்றால் இலங்கையை எரித்த நான், சீதையைக் காப்பாற்றவில்லை.”
“அரிய செயலாக இருக்க வேண்டியது, அற்ப செயலாக முடிந்து
விட்டது. சினத்தின் வயப்பட்ட என்னால் தான், நான் செய்து முடிக்க வேண்டிய செயலின் ஆணிவேர்
அழிக்கப்பட்டது.”
“இலங்கை நகரம் முழுவதும் எரிந்து சாம்பலாகிவிட்டது.
தீயினால் கருகாத இடம் எதுவும் கண்ணிற்குத் தென்படவில்லை. ஆகவே, சீதையும் தீயில் கருகி
உயிரிழந்திருப்பார்.”
“எனது மடமையினால், ஒருவேளை அவ்விதம் நிகழ்ந்திருக்குமேயானால்,
நானும் என்னுடைய உயிரை இங்கேயே மாய்த்துக் கொள்வதுதான் மிகவும் சிறந்தது என்று தோன்றுகிறது.”
“வடவாக்னி என்று சொல்லப்படும் நெருப்பில் நான் விழுந்து
என் உயிரை மாய்த்துக் கொள்ளட்டுமா? இல்லையெனில், கடலில் வாழும் உயிர்களுக்கு இரையாக
எனது உடலைக் கொடுத்து விடட்டுமா?”
“காரியத்தை முழுவதுமாகக் கெடுத்து விட்ட என்னை உயிருடன்
காண்பது, வானர அரசனுக்காகட்டும், அல்லது அந்த இரண்டு உத்தம மனிதர்களுக்காகட்டும், எவருக்கும்
சரியான செயலாக இருக்க முடியாது.”
“குரங்குகளின் மனம் நிலையற்றது” என்ற, மூவுலகிலும்
எவராலும் அறியப்பட்ட செய்தியை, என்னுடைய கோபம் என்னும் தீய குணம் நிரூபித்து விட்டது.”
“ராஜஸ குணமானது, அறிவைக் கட்டுக்குள் வைத்திராமல்,
செயல்களை நிலையாகச் செய்ய விடாது. எனவே அது கண்டிக்கத் தக்கது. சினத்தின் வயப்பட்டதால்தான்,
காரியத்தைச் செவ்வனே செய்து முடிக்கும் வல்லமை பெற்ற என்னாலுங்கூட சீதையைக் காப்பாற்ற
முடியவில்லை.”
“சீதை இறந்து விட்டால், அந்த இரு அரச குமாரரும் மாண்டு
விடுவர். அவர்கள் இறந்தால், சுக்ரீவனும் தன் சுற்றத்துடன் மாண்டு விடுவார்.”
“இந்தச் செய்திகளை அறிந்த பின்னர், தர்மசீலரும்,
தன் சகோதர்களிடத்தில் பேரன்பு கொண்டவருமான பரதனும், அவரின் தம்பியுமான சத்ருக்னனும்
உயிருடன் இருக்க எவ்விதம் சம்மதிப்பார்கள்?”
“இவ்விதம் அறத்தின் வழி நிற்கும் இஷ்வாகு குலமே அழிந்து
விட்டால், அனைத்து மக்களும், பெரும் சோகமென்னும் துன்பத்தில் தவிப்பார்கள் என்பதில்
ஐயம் எதுவுமில்லை.”
“ஆகவே, நான், கோபமென்னும் தீய குணத்தைக் கொண்டதினால்,
நற்பேற்றினை இழந்து, அறம், பொருள் ஆகிய பெருமைகளையும் இழந்து, இந்த உலகத்திற்கு அழிவை
உண்டாக்கியவனாய் ஆகிவிட்டேன் என்பது தெளிவு.”
இவ்விதம் பலவாறாக
எண்ணிக் கொண்டிருந்த அனுமன், அப்போது தோன்றிய நிமித்தங்களின் பலன்களை
முன்பே நேரிடையாக உணர்ந்திருந்தார். எனவே மனதினுள் இவ்விதமாக எண்ணத்
தொடங்கினார்.
“இல்லையேல் பேரழகியான
அவளின் சக்தியே அவளைக் காத்திருக்கும். பிறர் நலன் பேணும் அவளுக்கு அழிவு ஏற்பட்டிராது.
நெருப்பினால் நெருப்பை எரிக்க இயலாது”
“அழிவற்ற ஆற்றல்
கொண்ட, சிறந்த அறத்தின் வழி செல்லும் ஸ்ரீராமனின் மனைவியான அவள், தன் கற்பின் சக்தியினாலேயே
காக்கப்பட்டிருப்பாள். எனவே, அவளை நெருப்பினால் தீண்டியிருக்க முடியாது.”
“ஆகவேதான், எரிப்பதைக்
கடமையாகக் கொண்ட இந்த நெருப்பு, ஸ்ரீராமனின் ஆற்றலாலும், வைதேஹியின் நற்குணங்களாலும்
தான் என்னை இப்பொழுது எரிக்காதிருந்தது.”
“இராமனின் மனங்கவர்ந்த
மனைவியாகவும், பரதன் முதலான உடன் பிறந்த மூவருக்கும் தெய்வமாகவும் யார் விளங்குகிறார்களோ
அவள் எவ்விதம் அழிவைச் சந்திக்க முடியும்?”
“யாவற்றையும் தவறாது
எரிக்கும் வல்லமை படைத்த நெருப்பிற்கு எரிப்பதே கடமையாகும்!” அப்படிப்பட்ட அக்னியானவர்,
என் வாலினை எரிக்காத போது, தேவியை எவ்விதம் துன்புறுத்த முடியும்?!
இவ்விதம் யோசித்துக்
கொண்டிருந்த அனுமனுக்கு, கடலின் நடுவே தோன்றிய மைநாக மலையைப் பற்றிய நினைவு தோன்றவே,
மிகவும் வியப்பெய்தினார்.
“தன் தவ வலிமையாலும்,
உண்மை பேசும் சக்தியாலும், கணவனிடம் கொண்ட பக்தியாலும், அவளே (சீதையே) நெருப்பைக் கொளுத்தும்
வல்லமை கொண்டவள். அவளை நெருப்பு துன்புறுத்த முடியாது!”
இவ்விதம் சீதையின்
சக்திகளைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்த அனுமன், பெருமை மிக்க சாரணர்கள் பேசியதைக் கேட்டார்.
“அரக்கர்கள் வசிக்கும்
இடத்தில் இடைவிடாது பயங்கரமான நெருப்பை இட்ட அனுமனால், பெரிதும் தைரியம் மிக்க செயல்
செய்து முடிக்கப் பட்டது என்பதில் உறுதியாய் ஐயம் எதுவுமில்லை. ஆஹா! எப்படிப் பாராட்டுவது?”
“வீடுகளை விட்டு
ஓடிய அரக்கர்கள், அரக்கியர், குழந்தைகள், வயதானவர்கள் ஆகியோர் இட்ட ஓலங்கள் மலைக் குகைகளில்
எதிரொலிப்பது போல் ஒலிக்க, மாளிகைகள், மதில்கள், தோரண வாயில்கள் அனைத்தும் இந்த இலங்கையில்
எரிக்கப்பட்டுள்ளன. ஆனால், சீதை மட்டும், இந்த நெருப்பால் எரிக்கப் படாமல் உள்ளார்
என்பது மிகவும் அற்புதமான வியப்பு” என்று அவர்கள் மேலும் சொன்னார்கள்.
சாரணர்களின் வாயிலிருந்து
அமிர்தத்திற்கு நிகரான இந்த வார்த்தைகளைக் கேட்ட அனுமன், உடனடியாகப் பேருவகை கொண்டார்.
சீதை எந்த விதத்
துன்பத்திற்கும் ஆளாகாதவளாய் இருப்பதை மனதினில் உணர்ந்தாலும், அந்த வானரர் மீண்டும்
அவளை நேரில் கண்டு, தன் மனோரதம் (மனதில் எண்ணிய செயல்) நிறைவேறியதை உணர்ந்தபின், திரும்பிச்
செல்ல தீர்மானித்தார்.
ஐம்பத்தைந்தாவது
ஸர்கம் நிறைவு.



No comments:
Post a Comment