ஸ்ரீ வால்மீகி ராமாயணம்.
சுந்தர காண்டம்.
ஐம்பத்து மூன்றாவது ஸர்கம்.
அறவழிக்கும் நடைமுறைக்கும்
உகந்த வார்த்தைகளை வீபீஷணன் சொன்னதைக் கேட்ட தசமுக இராவணன், பெருமை மிகுந்த தன் தம்பியிடம்
இவ்விதம் உரைத்தான்.
“தூதுவனைக் கொல்வது குற்றம் என்று உன்னால் சொல்லப்பட்ட
வார்த்தை சரியானதுதான். இருப்பினும் இதற்கு மரண தண்டனை தவிர வேறு ஏதாவது தண்டனை நிச்சயம்
அளிக்கப்பட வேண்டும்.”
“குரங்குகளுக்கு அவற்றின் வால் தான் மிகவும் பிடித்தமான
அணிகலன். இதனுடைய வால் விரைவில் தீக்கிரையாக்கப்படட்டும். எரிந்து போன வாலுடன் அது
திரும்பிச் செல்லட்டும்!”
“தனது உடலின் ஒரு பகுதி நாசமானதால் இவன் படும் துயரத்தையும்,
இவனது மோசமான நிலையையும், அங்கே இவனது நண்பர்களும், உறவினர்களும், குடும்பத்தாரும்
காணட்டும்.”
“நகரத்தின் எல்லா வீதிகளிலும் நன்றாக கொளுந்து விட்டு
எரியும் வாலுடன், இவனை (அனுமனை) அரக்கர்கள் இழுத்துக் கொண்டு செல்லட்டும்.” என்று அந்த
அரக்கர்களின் அரசன் ஆணையிட்டான்.
அரசனின் உத்தரவைக் கேட்டதும், கோபத்தின் உச்சத்தில்
இருந்த அரக்கர்கள், அனுமனின் வாலின் மீது பழைய கிழிந்த பருத்தித் துணிகளைக் கொண்டு
சுற்றினார்கள்.
வாலின் மீது துணி சுற்றும்போது, உலர்ந்த விறகினைப்
பற்றிக்கொண்டு காட்டுத்தீ எவ்விதம் உயரக் கிளம்புமோ, அது போல, அனுமன், ஓங்கி வளர்ந்தார்.
அவர்கள் எண்ணெயால் அந்தத் துணிகளை நன்றாக நனைத்து, அதில் தீ மூட்டினார்கள். அனுமனின்
கொளுந்து விட்டு எரியும் வாலினைக் காணும் ஆவலில், பெண்கள், குழந்தைகள், வயதான அரக்கர்கள்
அனைவரும் அங்கு வந்து சேர்ந்தார்கள்.
இளஞ்சூரியனைப் போல ஒளிரும் முகம் கொண்ட அனுமன், பெரும்
சினம் கொண்டு, தன் எரிந்து கொண்டிருந்த வாலினால், அரக்கர்களை அடித்துத் துரத்தினார்.
பெரும் அரக்கர் கூட்டத்தால் சூழப்பட்ட வானரோத்தமரும், வீரருமான அனுமன், மீண்டும் கட்டுப்பட்டவராய்,
இனி செய்ய வேண்டிய செயல் பற்றி சிந்திக்கலானார்.
“நான் இந்தக் கயிறுகளை அறுத்தெறிந்துவிட்டு மீண்டும்
உயரக் கிளம்பி, இவர்களைத் தாக்கிக் கொல்லலாம். ஏனெனில், நான் கட்டுண்டு இருந்தாலும்,
இந்த அரக்கர்கள் எனக்கு ஈடாக மாட்டார்கள் என்பதில் ஐயமில்லை.”
“பகவான் ஸ்ரீராமனுக்காக இயங்கும்
என்னை, இந்த மோசமான அரக்கர்கள்
தங்கள் அரசனின் ஆணைப்படி கட்டியுள்ளார்கள். ஆனாலும், இதுவரை நான் செய்ததற்குப் பழிவாங்கும்
அளவிற்கு இந்தச் செயல் இல்லை”.
“போரில், இந்த அரக்கர்கள் அனைவருக்குமே நான் ஒருவனே
ஈடுகொடுக்க வல்லவன். ஆனாலும், ஸ்ரீராமனின் திருவுளப்படி நடக்க வேண்டிய கடமையால் , நான்
இவற்றையெல்லாம் பொறுத்துக் கொள்வேன்.”
“இரவு நேரத்தில் என்னால் இலங்கையை நன்றாகப் பார்க்க
முடியவில்லை. ஆகவே, பகல் பொழுதில் நகரத்தைப் பார்க்க நேர்வதால், இலங்கையின் கோட்டை
அமைப்புக்களை நன்றாக அறிந்து கொள்ள முடியும். எனவே, இன்னுமொரு முறை சுற்றிப் பார்ப்பதற்காகவே
இது அமையட்டும்.”
“இந்த அரக்கர்கள் என் வாலுக்குத் தீ மூட்டியும்,
தங்கள் விருப்பப்படி கட்டப்பட்டுள்ள என்னைத் துன்புறுத்தியும் எனக்கு இன்னல்கள் உண்டாக்கட்டும்.
(இதனால்) எனது மனம் சிறிதும் சோர்வடையாது.”
தன் மனதில் உள்ளதை வெளிக்காட்டாமல் இருக்கும் வானரோத்தமராகிய
பெரும் வானரத்தை, அந்த அரக்கர்கள் சுற்றி வளைத்து அதனால் பெரும் மகிழ்ச்சி கொண்டார்கள்.
கொடிய அரக்கர்கள், உரக்க ஒலி எழுப்பிக் கொண்டே, சங்கம் , பேரிகை போன்றவற்றை முழங்கிக்
கொண்டு, பெரும் இரைச்சலுடன் அந்த நகரில் அவரை இழுத்துக் கொண்டு திரிந்தார்கள்.
பகைவர்களை வெல்லத் தகுந்த அனுமன், அரக்கர்கள் பின்னால்
வர, தன் விருப்பத்துடனேயே எல்லா இடங்களுக்கும் சென்றார். அரக்கர்களின் அந்தப் பெரும்
நகரத்தின் அமைப்பைப் பற்றி நன்கு அறிந்து கொண்டார்.
அங்கு விசித்திரமான விமானங்களையும், சுவரெழுப்பி
மறைக்கப்பட்ட ரகசிய இடங்களையும், நன்றாகக் கட்டமைக்கப்பட்டிருந்த நாற்சந்திகளையும்
அனுமன் கண்டார்.
வாயுகுமாரனாகிய அனுமன், வீடுகள் நிறைந்த வீதிகளையும்,
நான்கு புறமும் வழிகளைக் கொண்ட இடங்களையும் பெரிய மற்றும் சிறிய வீதிகளையும், கரடு
முரடான சந்துகளையும் பற்றி அறிந்து கொண்டார்.
நாற்சந்திகளிலும், நான்கு கால் மண்டபங்களிலும், ராஜ
வீதியிலும், அரக்கர்கள் அனைவரும் அவரை ‘ஒற்றன்’ எனக் கேலி பேசிக் கூக்குரலிட்டார்கள்.
வாலிலே தீப்பற்றி எரிந்தபடி வரும் அனுமனை வினோதமாக
எண்ணி, வாலிபர்கள், பெண்கள், முதியவர்கள் அவரைக் காண ஆங்காங்கே ஆவலுடன் திரண்டார்கள்.
அனுமனின் வாலின் நுனியில் தீப்பற்றி எரிந்ததும்,
விகாரமான கண்களைக் கொண்ட அரக்கியர், சீதையை நெருங்கித், துன்பம் தரத் தக்க செய்தியைச்
சொன்னார்கள்.
“ஓ! சீதையே! சிவந்த முகத்துடன் எந்தக் குரங்கு உன்னுடன்
பேசிக் கொண்டிருந்ததோ, அந்தக் குரங்கு, அதனுடைய வாலில் தீ வைக்கப்பட்டு, கண்டபடி இழுத்துச்
செல்லப்படுகின்றது!”
உயிரைப் பறிப்பது போன்ற கொடுமையான அந்த வார்த்தைகளைக்
கேட்ட வைதேஹி, வருத்தம் மேலிட , அக்னி பகவானை மனதினுள் நினைத்தாள்.
அகன்ற விழிகளைக் கொண்ட சீதை, அப்பொழுது அந்த வானரத்திற்கு
(அனுமனுக்கு) அருள்புரிய வேண்டி, மனதில் தூய்மையுடன் அக்னி தேவனைப் பணிவுடன் வணங்கி
வேண்டிக் கொண்டாள்.
“நான், (என்) கணவனுக்கான பணிகளைச் செவ்வனே செய்பவள்
என்றால், எல்லாத் தவங்களையும் முறைப்படி செய்பவள் என்றால், கொண்ட கணவனே கதி என்று இருப்பது
உண்மையென்றால், அனுமனுக்குக் குளிர்ச்சியை உண்டாக்குவாயாக!”
“அறிவிற்சிறந்த ஸ்ரீராமனுக்கு என்னிடத்தில் சிறிதளவேனும்
அன்பு இருப்பது உண்மையென்றாலோ, எனக்கு நற்பேறு (அதிர்ஷ்டம்) சிறிதளவேனும் இருக்கின்றது
என்றாலோ, அனுமனுக்குக் குளிர்ச்சியைத் தந்து அருள வேண்டும்.”
“அவரை (ஸ்ரீராமனை) அடைவது ஒன்றையே நோக்கமாய், நன்னெறி
தவறாது நான் வேண்டிக் கொண்டிருப்பதை, அறநெறியை முற்றிலும் அறிந்தவரான அவர் அறிவாரேயானால்,
அனுமனுக்கு (நெருப்பிலிருந்து) குளிர்ச்சியை உண்டாக்குவாயாக!”
அனுமனின் தந்தையான வாயுதேவனும், சீதை திருப்தியுறும்
வண்ணம், அனுமன் தன் வாலில் பற்றியெரியும் நெருப்புடன் இருப்பினும், (அவருக்கு உதவும்
நோக்கில்) குளிர்ந்த பனிக் காற்றாய் வீசினார்.
பற்றியெரியும் வாலுடன் இருந்த அனுமன், நன்கு எரியும்
இந்த அக்னிதேவன் தன்னை ஏன் எரிக்க வில்லை என்று யோசிக்கலானார்.
“பெரிதாக எரியும் இந்தத் தீயானது எனக்குக் கஷ்டத்தைக்
கொடுக்கவில்லை. என் வாலின் நுனியில் ஏதோ குளிர்ந்த பொருளைத் தடவியது போல இருக்கின்றது”
“அன்று கடலைத் தாண்டும் போது, ஸ்ரீராமனின் மகிமையால்,
கடலின் நடுவில் ஆச்சர்யமான முறையில் மலை ஒன்று தோன்றியது போல, இதுவும் ஆச்சர்யப் படத்தக்கதே!”
சமுத்திர ராஜனும், புத்திமானாகிய மைனாக மலையும்,
ஸ்ரீராமன் மீது கொண்ட பக்தியை வெளிப்படுத்தி உதவியது போல, அக்னிதேவன் மட்டும் இப்பொழுது
ஏன் உதவி செய்யாமல் இருக்கப் போகிறார்?”
“நிச்சயமாக, சீதாதேவியின் கருணையாலும், இராகவனுடைய
மகிமையாலும், எனது தந்தையிடம் கொண்ட நட்பினாலும் அக்னிதேவன் என்னை எரிக்கவில்லை.”
இவ்வாறு யோசித்தபடி, மேற்கொண்டு செய்யப்போவது பற்றி
ஒரு முகூர்த்த காலம் தன் சிந்தனையைச் செலுத்தினார். “என்னைப் போன்ற வீரர்கள் இந்தக்
கீழான அரக்கர்களால் கட்டுண்டிருப்பது சரியான செயலாகுமா? ஆற்றலுடன் இதற்கான எதிர்வினை
ஆற்றவேண்டும்” என்று முடிவெடுத்தார். உடனே, அவர் தன் தளைகளிலிருந்து விடுபட்டு, வேகமாக
உயர எழும்பி, பெரும் கர்ஜனை செய்தார்.
பெரும் புகழ் கொண்ட வாயுகுமாரர், அதன் பிறகு, அரக்கர்கள்
கூட்டம் இல்லாத, மலைச் சிகரம் போல உயர்ந்த ஒரு கோபுரத்தின் மீது ஏறினார்.
அறிவிற்சிறந்த அவர், மலை போல உயர்ந்து, மறுபடியும்
திடீரென சிறிய உருவம் எடுத்துக் கொண்டு, தன் மீதிருந்த கட்டுக்களை அவிழச் செய்தார்.
புகழ்வாய்ந்த அவர், தன் கட்டுக்களிலிருந்து வெளி
வந்ததும், மீண்டும் மலை போலப் பருத்து விளங்கினார். தோரண வாயிலிலிருந்த உலக்கையை மீண்டும்
அவர் கண்டார்.
கரிய இரும்பினால் செய்யப்பட்டிருந்த அந்த உலக்கையைக்
கொண்டு, தோள் வலிமை மிக்க அந்த வானரர், மீண்டும் அந்த அரக்கர்களைக் கொன்றழித்தார்.
போரில் எல்லையற்ற ஆற்றல் கொண்ட அவர், அவர்களைக் கொன்று
விட்டு, இன்னும் இலங்கை நகரத்தைச் சுற்றிப் பார்த்தார். வாலில் பற்றி எரிந்து கொண்டிருந்த
தீ ஜ்வாலைகள் அவரைச் சுற்றி மாலை போலத் தெரிய, ஒளிக்கிரணங்கள் வீசும் சூரியனைப் போல
பிராகசமாய் விளங்கினார்.
ஐம்பத்து மூன்றாம்
ஸர்கம் நிறைவு.






No comments:
Post a Comment