ஸ்ரீ வால்மீகி ராமாயணம்.
சுந்தர காண்டம்.
நாற்பத்தொன்பதாவது ஸர்கம்.
அச்சமூட்டத்தக்க ஆற்றல் மிக்க
அந்த அனுமன், இராவணனது செயலால் வியப்புற்று, கோபத்தில் சிவந்த கண்களால், ராக்ஷஸ அரசனை
விழித்துப் பார்த்தார்.
ஒளி வீசும் தன்மை மிக்க ராக்ஷஸ ராஜன், முத்துக்கள்
பதிக்கப்பட்டு, பிரகாசிக்கக் கூடிய விலையுயர்ந்த தங்கத்தால் செய்யப்பட்ட மணிமகுடம்
அணிந்து சிறப்புற்று விளங்கினான்.
அவனது உடலெங்கும், கற்பனையால் உருவாக்கப்பட்ட விசித்திரமான
வடிவங்களில், விலையுயர்ந்த மணிகள், ரத்னங்களால் அலங்கரிக்கப்பட்ட தங்க நகைகள்
நிறைந்திருந்தன.
விலையுயர்ந்த பட்டாடை அணிந்திருந்த அவன், மேனியெங்கும்
செந்நிற சந்தனம் பூசியிருந்தான். அந்தச் சந்தனப் பூச்சு, வித விதமான வடிவங்களில் பூசப்பட்டிருந்தது.
அவன், அனைவராலும் வியந்து
பார்க்கத்தக்கவனாய், அச்சமூட்டக் கூடியவனாய் இருந்தான். இரத்தச் சிவப்பான கண்களையும்,
பளபளப்புடன் கூடிய கூரிய பற்களையும், பருத்த உதடுகளையும் கொண்ட பத்துத் தலைகளுடன் இருந்த
இராவணன், பற்பல கொடிய மிருகங்கள் நிறைந்த, சிகரங்களுடன் கூடிய மந்தர மலை போல ஒளி மிகுந்து
விளங்கினான்.
கருத்த அஞ்சன மலை போன்ற உடலமைப்புக்
கொண்டிருந்த அவன், பூரண சந்திரன் போல பிரகாசிக்கின்ற முத்துமாலையை நடுநாயகமாகத் தன்
மார்பினில் அணிந்திருந்ததால், கொக்குகளுடன் கூடிய மேகம் போல விளங்கினான்.
கேயூரங்கள் கட்டப்பெற்று, அழகான தோள்வளைகளுடன், ஐந்து
தலைகளைக் கொண்ட பாம்பினைப் போன்ற பருத்த புஜங்களைக் கொண்டிருந்தான். அவை மிகச் சிறந்த
சந்தனத்தால் பூசப்பட்டிருந்தன.
உயர்ந்த ரக ஸ்படிகத்தால் ஆனதும், இரத்தினங்களால்
இழைக்கப்பட்டதும் அழகான சித்திரங்கள் கொண்டு போர்த்தப்பட்டதுமான ஆசனத்தில், அழகாய்
அமர்ந்திருந்தான்.
அழகிய பெண்கள் நன்கு அலங்கரித்துக் கொண்டு கைகளில்
சாமரம் ஏந்திய வண்ணம், சுற்றிலும் மிக அருகில் நின்று கொண்டு, மிகவும் அதிக அளவில்
உபசரித்த வண்ணம் இருந்தனர்.
ஆலோசனை அளிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்களும், தங்களது
ஆற்றல் மீது கர்வம் கொண்டவர்களுமான துர்தரன், பிரஹஸ்தன், மகாபார்ஷ்வன், மற்றும் புத்தி
மிக்க நிகும்பன் என்னும் நான்கு ராக்ஷஸர்களால், ஆலோசனையில் துணை புரிய வேண்டி, சகல
உலகமும் நான்கு கடல்களால் சூழப்பட்டு விளங்குவது போல, கவனமுடன் சூழப்பட்டிருந்தான்.
தேவேந்திரனைச் சுற்றிலும் தேவர்கள் சூழ்ந்திருப்பது
போல, ஆலோசனை நுட்பங்களை அறிந்தவர்களும், நற்புத்தியுடைய மற்ற அரக்கர்களும், அரசனுக்கு
உதவி செய்வதற்காக அவனருகில் வீற்றிருந்தார்கள்.
மேரு மலையின் உச்சியில் திகழும் நீருண்ட மேகம் போல,
அந்த இராவணன், அதிக ஒளியுடன் விளங்குவதை அனுமன் கண்டார்.
கொடிய அரக்கர்கள் தன்னைப் பலவாறாகத் துன்புறுத்தியவண்ணம்
இருந்த போதும், அனுமன் அதிக வியப்புடனே, அந்த ராக்ஷஸ அரசனைப் பார்த்த வண்ணம் இருந்தார்.
சிறப்புடன் விளங்கிய ராக்ஷஸ அரசனைப் பார்த்து, அவனுடைய
சிறப்பினால் வியப்புற்ற அனுமன், மனதினுள் இவ்விதம் நினைக்கலானார்.
“ஆஹா! என்னவொரு அழகு! ஆஹா! என்னவொரு தைரியம்! ஆஹா!
என்னவொரு ஒளிமயம்! ஒரு அரசனுக்குரிய அனைத்து குணங்களும் ஒருங்கே அமையப் பெற்றது எவ்வளவு
அதிசயம்?”
“வலிமை மிக்க இந்த அரக்க அரசன், அறமற்ற வழியில் செல்லாதிருந்தால்,
தேவேந்திரன் உள்ளிட்ட தேவலோகத்திற்கும் இவனே அரசனாக இருந்திருப்பான்.”
“இவனது கொடூர குணத்திற்கும், கருணையற்ற செயல்களுக்குமாகவே,
தேவர்கள், தானவர்கள் உள்ளிட்ட அனைவரும் அஞ்சுகின்றனர். இவன் கோபமடைந்தால் பிரளயத்தை
உண்டாக்கி உலகத்தையே அழிக்க வல்லவன் ஆவான்.”
இவ்விதம் பலவிதமாக இராவணனைப் பார்த்து அனுமன் எண்ணினார்.
நாற்பத்தொன்பதாவது ஸர்கம் நிறைவு.


No comments:
Post a Comment