ஸ்ரீ வால்மீகி ராமாயணம்
சுந்தர காண்டம்
நாற்பத்து நான்காவது ஸர்கம்.
(ஜம்புமாலி வதம்)
அரக்கர்களின் அரசனான இராவணனின் ஆணைப்படி, பெரும்
பலசாலியும், பருத்த கோரைப்பற்களையும் கொண்ட, பிரஹஸ்தனுடைய குமாரனான ஜம்புமாலி என்பவன்,
கையில் வில்லேந்தி, போருக்குப் புறப்பட்டான்.
சிவந்த பூக்களால் ஆன மாலையணிந்து, சிவப்பு நிற ஆடையணிந்து,
காதுகளில் அழகிய குண்டலங்களையும் அவன் தரித்திருந்தான். கண்களை இங்குமங்கும் சுழற்றியபடியே
இருந்த அவன், போரில் வெல்வதற்கரியவனாய், துடுக்குடன் இருந்தான்.
எரிகின்ற திரிகூட மலைக்கு ஒப்பானவனாய், பெரிய மேகக்
கூட்டம் போலிருந்தான். தலை, கழுத்து, தோள்கள் கம்பீரமாய் விளங்க, அகன்ற முகத்தில் பெரும்
கோரைப் பற்களைக் கொண்டிருந்தான். மிக்க வலிமையும் பெருமுயற்சியும் கொண்டவனாய் மிகுந்த
வேகத்துடன் இருந்தான். இந்திரனின் வில்லுக்கு நிகரானதும், அழகிய பாணங்கள் கொண்டதுமான
பெரிய வில்லினை, இடியோசை மற்றும் வஜ்ராயதத்தின் ஓசைக்கு நிகராக நாணொலி செய்து கொண்டு,
அதிக ஆற்றலுடன் வேகமாய் வந்தான்.
அவனுடைய வில்லின் நாணொலியினால் எட்டுத் திக்குகளும்
ஆகாயமும் நிரம்பி வழிந்தன.
கோவேறு கழுதைகள் பூட்டிய இரதத்தில் ஏறி வருகின்ற
அவனைக் கண்டதுமே அனுமன், மிகுந்த உற்சாகம் கொண்டு, மகிழ்ச்சியுடன் சிம்ம நாதம் செய்தார்.
மிகுந்த பலசாலியான ஜம்புமாலி, தோரண வாயிலின் கோபுரத்தின்
மீதமர்ந்திருந்த அனுமன் மீது, கூர்மையான அம்புகளை எய்து தாக்கினான்.
அனுமனின் முகத்தை அர்த்த சந்திரன் என்னும் பாணத்தாலும்,,
தலையை கர்ணிகை என்னும் பாணத்தாலும், கைகளின் மீது பத்து நாராசங்களாலும் (இரும்பு அம்புகளாலும்)
தாக்கினான்.
பாணங்களால் காயமுற்றுச் சிவந்திருந்த அனுமனின் முகத்தைப்
பார்க்கையில், சரத் காலத்தில் சூரியனின் கிரணங்கள் பட்டு, மலர்ந்து குலுங்கும் செந்தாமரை
மலர் போல இருந்தது.
அவருடைய சிவந்த முகத்தில் வழிந்த இரத்தத்தால், முகம்
மேலும் சிவந்து, ஆகாயத்தில் செந்நிறத் தாமரை மலரின் மீது, தங்க நிற நீர்த்திவலைகள்
வழிவது போல இருந்தது.
பாணங்களால் காயமுற்றதால், அனுமன் கடுங்கோபம் கொண்டார்.
தனக்கு அருகில் மிகப் பெரிய பாறை ஒன்றைக் கண்டார். உடனே அதைப் பெயர்த்து, அதிக பலத்துடன்
எறிந்தார்.
அரக்கன் சினம் கொண்டு, அந்தப் பாறையைப் பத்து அம்புகளால்
தகர்த்து விட்டான்.
சண்ட பராக்ரமம் படைத்த வீர்யமிக்க அனுமன், தன் முயற்சி
வீணாகிவிட்டதால், ஒரு பெரிய சால மரத்தைப் பெயர்த்தெடுத்துக் கைகளினால் சுழற்றத் தொடங்கினார்.
சால மரத்தைப் பிடுங்கிச் சுழற்றும் வானரரான அனுமனின்
அதிக பலத்தைக் கண்ணுற்ற பெரும் வீரனான ஜம்புமாலி, பலவிதமான அம்புகளை அவர் மீது எய்தான்.
நான்கு அம்புகளால் அந்தச்சால மரத்தை முறித்த அவன்,
அனுமனின் கைகளை நோக்கி ஐந்து அம்புகளைத் தொடுத்தான். அனுமனின் மார்பை நோக்கி ஒரு அம்பையும்,
மார்பின் மையப் பகுதியை நோக்கிப் பத்து அம்புகளையும் செலுத்தினான்.
உடலெங்கும் அம்புகள் தைத்திருக்க, கடும் கோபம் கொண்ட
அனுமன், மீண்டும் வேகம் கொண்டு, அந்த ஈட்டியை எடுத்துப் பலவாறாக சுழற்றத் தொடங்கினார்.
உக்கிரமான கோபம் கொண்டிருந்த பெரும் பலசாலியான அனுமன்,
அந்த ஈட்டியை மிகுந்த வேகத்துடன் சுழற்றி, ஜம்புமாலியின் அகன்ற மார்புப் பகுதியில்
தாக்கினார்.
அது தாக்கிய வேகத்தில், அவனுடைய தலையோ, கைகளோ,
வில்லோ, அம்புகளோ, முழங்கால்களோ, அவனது தேரோ, குதிரைகளோ, எதுவுமே போன இடம் தெரியவில்லை.
அனுமனால் பலமாய் அடிபட்ட, சிறந்த தேர் வீரனான ஜம்புமாலி,
தனது அங்கங்களும், அணிகலன்களும் நொறுங்க, உயிரிழந்து தரையில் வீழ்ந்தான்.
ஜம்புமாலியும், பலவான்களான கிங்கரர்களும் மாண்ட செய்தியைக்
கேட்ட இராவணனின் கண்கள் கோபத்தால் சிவந்தன.
மகா பலசாலியான பிரகஸ்தபுத்ரனான ஜம்புமாலி கொல்லப்பட்டதால், அரக்கர்களின் அரசனான இராவணன், கண்கள் சிவக்க, அதிக வீர்யமும், பலமும் மிக்க மந்திரிகுமாரர்களை, உடனே போருக்கு அனுப்ப ஆணையிட்டான்.
நாற்பத்து நான்காவது ஸர்கம் நிறைவு.



No comments:
Post a Comment