ஸ்ரீ வால்மீகி ராமாயணம்.
சுந்தர காண்டம்.
நாற்பத்து மூன்றாவது ஸர்கம்.
“இந்த அந்தப்புர வனம் என்னால் அழிக்கப்பட்டது.
ஆனால் நெடிதுயர்ந்த சைத்ய ப்ராஸாதம் என்னும் மாளிகையை நான் இன்னும் அழிக்கவில்லை. ஆகவே
அதை நான் அழித்து விடுகிறேன்.” என்று மனதினுள் நினைத்த வாயு குமாரனாகிய அனுமன், மேரு
மலையின் சிகரத்தையொத்த உயர்ந்த அந்த சைத்ய பிராஸாதத்தின் மீது அதிக வலிமையுடன், தாவி
ஏறினார்.
வானரர்களின் தலைவரான அனுமன், பெரும் மலைக்கு
நிகராக உயர்ந்து விளங்கிய அந்த மண்டபத்தின் மீது, இன்னுமொரு சூரியன் உதிப்பது போல பேரொளியுடன்
தாவி ஏறினார்.
எவராலும் இடித்துத் தள்ள முடியாத அந்த சைத்ய
மாளிகையை அடியோடு இடித்துத் தள்ளிய அனுமன், பாரியாத்ரம் என்கின்ற குல பர்வதம் போல பிரகாசத்துடன்
விளங்கினார்.
தன்னுடைய திறமையினால் பெரும் உருவம் எடுத்துக்கொண்ட
அனுமன், தனது தோள்களைத் தட்டிக் கொண்டு, இலங்கை நகரமே நிறையும்படி பேரொலி எழுப்பினார்.
காதுகளைச் செவிடாக்கும்படி அனுமன் எழுப்பிய சப்தத்தால்
பறவைகள் கலங்கி கீழே விழுந்தன. சைத்ய மாளிகையின்
காவலர்களும் மனம் கலங்கி நின்றார்கள்.
“போர்க்கருவிகளை இயக்குவதில் நிபுணரான ஸ்ரீராமனும்,
மகா பலசாலியான இலக்குமணனும் வெற்றியுடன் விளங்கட்டும். ஸ்ரீராமனால் காப்பாற்றப்படும் ராஜா சுக்ரீவனுக்கும்
மேன்மை உண்டாகட்டும்!”
“பகைவர்களின் படையை அடியோடு அழிக்கும் நான் அனுமன்
ஆவேன். நான் வாயுவின் குமாரன். குறைவில்லாத
செயல் புரியும் திறமை கொண்டவனான ஸ்ரீராமனின் அடியவன் ஆவேன்!”
“போர்க்களத்தில் ஆயிரக்கணக்கான பாறைகளாலும்,
மரங்களாலும் யுத்தம் செய்யும் எனக்கு ஆயிரம் இராவணர்களானாலும் ஈடாக மாட்டார்கள்.”
“மைதிலியின் நல்லாசியுடன் எல்லா அரக்கர்களின்
கண் முன்னே, இந்த இலங்கை நகரைக் கலங்கச் செய்து, எனது காரியங்களை நிறைவேற்றியவனாய்த்
திரும்பச் செல்வேன்.” என்று மீண் .
மண்டபத்தின் கோபுரத்தின் மீது அமர்ந்திருந்த
வானரோத்தமரான அனுமன், அந்த சைத்ய மாளிகையில் காவல் இருந்தவர்களிடம் மேற்சொன்னவாறு கூறியபடி,
அந்த அரக்கர்களுக்கு அச்சம் உண்டாகும் வண்ணம் பெருத்த ஓசையுடன் கர்ஜனை செய்தார்.
அந்த ஓசையைக் கேட்ட சைத்ய மாளிகையின் பாதுகாவலர்களுள்
பெருத்த வடிவம் கொண்ட நான்கு பேர் வெளியே வந்தனர். அவர்கள் கைகளில் பலவகை ஆயுதங்களையும் ஈட்டிகளையும்,
கத்தி, கோடாலி முதலியவற்றையும் எடுத்துக் கொண்டு அனுமனைச் சுற்றி வளைத்துக் கொண்டனர்.
அவர்கள் வானர திலகமான அனுமனைப், பலவகையான தண்டாயுதங்களாலும்,
தங்கப் பூணிட்ட கதைகளாலும், சூரிய ஒளியைப் போல மின்னுகின்ற பாணங்களாலும் தாக்கினர்.
வானரோத்தமரான அனுமனைச் சுழ்ந்திருந்த அரக்கர்
கூட்டத்தைக் காணும் போது, கங்கை நதி நீரில் உண்டான மிகப் பெரிய சுழல் போலத் தோற்றம்
அளித்தது. அதனால் கோபம் கொண்ட வாயுகுமாரர்,
மிகவும் பயங்கரமான உருவம் தரித்தார்.
மகா பலசாலியான வாயுபுத்ர அனுமன், மிகவும் உயரமான
அந்த மண்டபத்திலிருந்து, தங்கத்தினால் வேலைப்பாடு
செய்யப்பட்டிருந்த ஒரு தூணைச் சட்டென்றுப் பெயர்த்தெடுத்து, அதைப் பலவாறாகச் சுற்றத்
தொடங்கினார். அதனால் அந்தத் தூணிலிருந்து நெருப்புப்
பொறிக் கிளம்ப, அந்த மாளிகை, தீப்பற்றி எரிந்தது.
மாளிகை, பற்றி எரிந்ததைப் பார்த்த வலிமை மிக்க வானரரான அனுமன், இந்திரன் வஜ்ராயுதம்
கொண்டு அரக்கர்களை அழித்தது போல. அந்தக் கம்பத்தைக்
கொண்டே பல நூறு அரக்கர்களைக் கொன்றார். பின்னர்
ஆகாயத்தில் எழுந்து நின்று பின் வருமாறு உரைத்தார்.
“சுக்ரீவனுடைய படையிலிருந்து என் போன்ற மற்ற
பல, பெரும் பலசாலிகளும் திறமை மிக்கவர்களுமான வானர வீரர்கள், பல்லாயிரக்கணக்கில் இந்த
பூமி முழுவதும் அலைந்து தேடிக் கொண்டுள்ளார்கள்.”
“அவர்களில் பத்து யானைக்கு நிகரான பலம் கொண்டவர்களும்,
சிலர் அதைவிடப் பன்மடங்கு பலம் மிக்கவர்களும் உள்ளார்கள். சிலர் ஆயிரம் யானைகளுக்கு நிகரான பலம் கொண்டவராய்
உள்ளார்கள்.”
“பல வீரர்களிடத்தில் ஆற்று வெள்ளம் போன்ற பலம்
மிகுந்துள்ளது. பலரிடம் காற்றின் வேகத்திற்கு
ஈடான பலம் உள்ளது. பல வானர வீரர்கள், தங்களுக்குள்ளே
பல சக்திகளைக் கொண்டுள்ளார்கள்.”
“பற்களையும், நகங்களையுமே ஆயுதங்களாகக் கொண்ட
இது போன்ற நூற்றுக் கணக்கான, பல்லாயிரக் கணக்கான, கோடிக் கணக்கான வானர வீரர்கள் புடைசூழ,
உங்கள் எல்லோருக்கும் அழிவைத் தரக் கூடிய, சுக்ரீவரே இங்கு வர இருக்கின்றார்.”
“இஷ்வாகு குலத் தோன்றலான மகாத்மா ஸ்ரீராமனுடன் பகைமை கொண்டதினால், இனி இந்த இலங்கை நகரமும் இருக்கப் போவதில்லை. நீங்களும் இருக்கப் போவதில்லை. இராவணனும் இருக்கப் போவதில்லை.”
நாற்பத்து மூன்றாவது ஸர்கம் நிறைவு.

No comments:
Post a Comment