Tuesday, November 14, 2023

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பால காண்டம் By B. Rama Devi

 தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி


ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 1

(நாரத முனிவர், வால்மீகி முனிவரின் ஆசிரமத்துக்கு வருகிறார். அப்போது எல்லா விதமான நல்ல குணங்களும் நிறைந்த முழுமையான மனிதன் யாராவது இருக்கிறானா என்று வால்மீகி நாரதரை விசாரிக்கிறார். முக்காலமும் உணர்ந்த நாரத முனிவர், அப்படிப்பட்ட மனிதன் ஸ்ரீ ராமனே என்று கூறி, அவனைப்பற்றிய விவரங்களைச் சுருக்கமாகக் கூறுகிறார்.)






तपस्स्वाध्यायनिरतं तपस्वी वाग्विदां वरम् ।
नारदं परिपप्रच्छ वाल्मीकिर्मुनिपुङ्गवम् ।।1.1.1।।

 

(வால்மீகி முனிவர்) தவத்திலும், வேத அத்யயனத்திலும் மிகவும் மகிழ்ச்சியுடன் ஈடுபடுபவரும், சிறந்த அறிவாளியும்,  மிகச் சிறப்பான வாக்கு வன்மை உடையவரும் , முனிவர்களுள் சிரேஷ்டரும் ஆன நாரத மகரிஷியைக் கேட்டார்.


कोन्वस्मिन्साम्प्रतं लोके गुणवान्कश्च वीर्यवान् ।
धर्मज्ञश्च कृतज्ञश्च सत्यवाक्यो दृढव्रत:।।1.1.2।।


இப்போது, இந்த உலகத்தில், சிறந்த குண நலன்களுடனும், வீரத்துடனும், தர்மத்துடனும், நன்றியறிதலுடனும், உண்மையுடனும், கொடுத்த வாக்கைக்காப்பதில் உறுதியுடனும் உள்ளவன் யார்?



चारित्रेण च को युक्तस्सर्वभूतेषु को हित: ।
विद्वान्क: कस्समर्थश्च कश्चैकप्रियदर्शन: ।।1.1.3।।

நல்ல நடத்தையுடன் கூடியவனும், எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்பவனும், அறிஞனும், திறமையுள்ளவனும், தன் அழகினால் பார்ப்பவர்களை மகிழச் செய்பவனும் யார்?

 

आत्मवान्को जितक्रोधो द्युतिमान्कोऽनसूयक: ।
कस्य बिभ्यति देवाश्च जातरोषस्य संयुगे ।।1.1.4।।
 

சுயக்கட்டுப்பாடு உள்ளவனும், சினத்தை வென்றவனும், ஒளி நிறைந்தவனும், பொறாமை இல்லாதவனும், கோபம் வந்து விட்டால், தேவர்கள் கூட அவனைக்கண்டு அஞ்சும் படியானவனும் யார்?

 

एतदिच्छाम्यहं श्रोतुं परं कौतूहलं हि मे ।
महर्षे त्वं समर्थोऽसि ज्ञातुमेवंविधं नरम् ।।1.1.5।।

மகரிஷியே! இப்படிப்பட்டகுண நலன்கள் கொண்ட மனிதனைப்பற்றி உங்களிடம் கேட்டு அறிய நான் மிகவும் ஆவலாக உள்ளேன்.


श्रुत्वा चैतत्ित्रलोकज्ञो वाल्मीकेर्नारदो वच: ।
श्रूयतामिति चामन्त्त्र्य प्रहृष्टो वाक्यमब्रवीत् ।।1.1.6।।
 

வால்மீகி மகரிஷியை வரவேற்று இவ்வாறு கேட்ட வால்மீகியிடம், மகிழ்ச்சியுடன் நாரதர் கூறினார், ‘சொல்கிறேன், கேளுங்கள்!’

 

बहवो दुर्लभाश्चैव ये त्वया कीर्तिता गुणा: ।
मुने वक्ष्याम्यहं बुद्ध्वा तैर्युक्तश्श्रूयतान्नर: ।।1.1.7।।

 

“முனிவரே! நீங்கள் வர்ணித்த இந்தக் குணங்களைக்கொண்ட ஒரு மனிதன் கிடைப்பது மிகவும் துர்லபம் தான். ஆனாலும், நான் ஆராய்ந்தறிந்து கண்ட அப்படிப்பட்ட ஒரு மனிதனைப் பற்றிக் கூறுகிறேன். கவனமாகக் கேளுங்கள்!”

इक्ष्वाकुवंशप्रभवो रामो नाम जनैश्श्रुत: ।
नियतात्मा महावीर्यो द्युतिमान्धृतिमान् वशी ।।1.1.8।।

இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்த ராமன் என்பவனைப்பற்றி மக்கள் கேள்விப் பட்டிருக்கிறார்கள். ( ராமன் என்ற பெயருக்கே, பிறரை மகிழ்விப்பவன் என்று பொருள்.) அவன் எப்போதும் மாறாத இயல்புடையவன், மஹாவீரன், ஒளிமிகுந்தவன், தன்னைத் தானே ஆள்பவன், தன் புலன்களைக் கட்டுக்குள் வைத்திருப்பவன்.


बुद्धिमान्नीतिमान्वाग्मी श्रीमान् शत्रुनिबर्हण: ।
विपुलांसो महाबाहु: कम्बुग्रीवो महाहनु: ।।1.1.9।।

 

அவன் சிறந்த புத்திமான், நீதிகளை நன்கறிந்தவன்,பேச்சுத் திறமை மிக்கவன், மங்களகரமானவன், எதிரிகளை அழிப்பவன், அகன்ற தோள்களை உடையவன், வலிமையான கரங்களை உடையவன், சங்கு போன்ற கழுத்தை உடையவன், அழகிய வலிமையான தாடையை உடையவன்;

 

महोरस्को महेष्वासो गूढजत्रुररिन्दमः ।
आजानुबाहुस्सुशिरास्सुललाटस्सुविक्रमः ।।1.1.10।।
 

அவன் அகன்ற மார்பை உடையவன்; மிகப்பெரிய வில்லை ஏந்தியவன்; சதைப்பிடிப்புள்ள தோள் பட்டைகளைக் கொண்டவன்; எதிரிகளை அழித்தொழிப்பவன்; முழங்கால் வரை நீண்ட கைகளையும், அழகிய தலையையும், அகன்ற நெற்றியையும் உடையவன்; பராக்கிரமம் மிக்கவன்.

 

समस्समविभक्ताङ्गस्स्निग्धवर्ण: प्रतापवान् ।
पीनवक्षा विशालाक्षो लक्ष्मीवान् शुभलक्षणः ।। 1.1.11।।

அளவுக்கு மீறிய உயரமாகவோ, குட்டையாகவோ இல்லாமல் திட்டமான உயரமுடையவன்; சரியான அளவில் அமைந்துள்ள அங்கங்களைக் கொண்டவன்; ஒளிமிகுந்த முகத்தை உடையவன்; புகழ் பெற்றவன்; வலிமையான, நன்கு பரந்த மார்பை உடையவன்; அகன்ற கண்களைக்கொண்டவன். திருவுடையவன்; மங்களமான லட்சணங்கள் பொருந்தியவன்.

 


धर्मज्ञस्सत्यसन्धश्च प्रजानां च हिते रतः ।
यशस्वी ज्ञानसम्पन्नश्शुचिर्वश्यस्समाधिमान् ।।1.1.12।।

தர்மங்களை அறிந்தவன்; கொடுத்த வாக்கைக் காப்பதில் உறுதி பூண்டவன்; பிரஜைகளின் நன்மையில் ஈடுபாடு கொண்டவன்; மிகுந்த புகழ் பெற்றவன்; அனைத்தும் அறிந்தவன்; தூய்மையானவன்; தன்னை நாடுபவர்கள் எளிதாக அண்டக்கூடிய விதத்தில் இருப்பவன்; தன்னைப் புகலடைந்தவரைக் காப்பதிலேயே மனதைச் செலுத்துபவன்.

 

 

प्रजापतिसमश्श्रीमान् धाता रिपुनिषूदनः ।
रक्षिता जीवलोकस्य धर्मस्य परिरक्षिता ।।1.1.13।।

ப்ரம்மாவைப்போல மங்களகரமானவன்; இந்த உலக முழுவதையும் தாங்குபவன்; எதிரிகளை அழித்தொழிப்பவன்; இந்த உலகத்து உயிர்களனைத்தையும், தர்மத்தையும் நல்ல விதமாகக் காப்பாற்றுபவன்.



रक्षिता स्वस्य धर्मस्य स्वजनस्य च रक्षिता ।
वेदवेदाङ्गतत्त्वज्ञो धनुर्वेदे च निष्ठितः ।।1.1.14।।


தன்னுடைய தர்மத்தையும், தன் மக்களையும் காப்பாற்றுபவன்; வேத வேதாங்கங்களின் உண்மைப் பொருளை உணர்ந்தவன்; வில் வித்தையிலோ, மிகவும் திறமை பெற்றவன்.


सर्वशास्त्रार्थतत्त्वज्ञस्स्मृतिमान्प्रतिभानवान् ।
सर्वलोकप्रियस्साधुरदीनात्मा विचक्षणः ।।1.1.15।।

சாஸ்திரங்களினுடைய உண்மைப்பொருளை உணர்ந்து கொண்டவன்; மகா திறமைசாலி; எல்லா மக்களுக்கும் பிரியமானவன்; நற்குணங்கள் நிறைந்தவன்; துன்பம் வந்த போது கூட தைரியத்தை இழக்காதவன்; சரியான செயலைச் சரியான நேரத்தில் செய்யும் சாமர்த்தியசாலி.



सर्वदाभिगतस्सद्भिस्समुद्र इव सिन्धुभिः ।
आर्यस्सर्वसमश्चैव सदैकप्रियदर्शनः ।।1.1.16।।

நதிகள் எப்போது வேண்டுமானாலும் வந்து தன்னுடன் கலக்க அனுமதிக்கும் கடலைப் போல, நல்லவர்கள் எப்போதும் வந்து தன்னைச் சந்திக்க அனுமதிப்பவன். மிகச்சிறந்த குணநலன் கள் நிறைந்தவன்; எல்லாரிடத்தும் ஒரே விதமாக நடந்து கொள்பவன்; எப்போதும் இனிமையான முகபாவம் கொண்டவன்.

 

 

स च सर्वगुणोपेत: कौसल्यानन्दवर्धन: ।
समुद्र इव गाम्भीर्ये धैर्येण हिमवानिव ।।1.1.17।।


அனைத்து விதமான நற்குணங்களும் வாய்க்கப்பெற்ற இவன் தனது அன்னையான கௌசல்யாவின் மகிழ்ச்சியை அதிகரிப்பவன்.  அவனுடைய எண்ணங்களின் ஆழம் கடலைப் போன்றது.  சகிப்புத்தன்மையில் அவன் இமயமலை போன்றவன்.

 

विष्णुना सदृशो वीर्ये सोमवत्प्रियदर्शनः ।
कालाग्निसदृशः क्रोधे क्षमया पृथिवीसमः ।।1.1.18।।

 

வீர்யத்தில் விஷ்ணுவைப்போன்றவன்; அழகான தோற்றத்தில் சந்திரனைப்போன்றவன்; கோபத்தில் காலாக்னி போன்றவன்; பொறுமையில் பூமியை ஒத்தவன்;

 

धनदेन समस्त्यागे सत्ये धर्म इवापरः ।
तमेवं गुणसम्पन्नं रामं सत्यपराक्रमम् ।।1.1.19।।


தானம் செய்வதில் குபேரனுக்கு நிகரானவன்; நிலையாக இருப்பதில் மற்றுமொரு சூரியனைப்போன்றவன். நற்குணங்கள் நிறைந்தவன். உண்மையான பராக்கிரமம் உடையவன்.


ज्येष्ठं श्रेष्ठगुणैर्युक्तं प्रियं दशरथस्सुतम् ।
प्रकृतीनां हितैर्युक्तं प्रकृतिप्रियकाम्यया ।।1.1.20।।

यौवराज्येन संयोक्तुमैच्छत्प्रीत्या महीपति: ।

இப்படிப்பட்ட சிறந்த குணங்கள் பொருந்திய, பிரஜைகளுக்கு மிகவும் பிரியமான, தனது மூத்தமகனாகிய ஸ்ரீ ராமனை, தசரத மன்னன், பிரஜைகளின் நலனை முன்னிட்டு
அன்புடன், யுவராஜாவாக நியமிக்க விரும்பினார்.

 

तस्याभिषेकसम्भारान्दृष्ट्वा भार्याऽथ कैकयी ।।1.1.21।।

 

पूर्वं दत्तवरा देवी वरमेनमयाचत ।

विवासनं च रामस्य भरतस्याभिषेचनम् ।।1.1.22।।

அதற்கான ஏற்பாடுகளைக் கண்ட அவருடைய மனைவி கைகேயி, ராமன் நாட்டை விட்டுச் செல்ல வேண்டும் மற்றும், பரதனுக்கு பட்டாபிஷேகம் செய்ய வேண்டும் என்ற இரண்டு வரங்களை யாசித்தாள். (முன்னர் பல காலத்துக்கு முன்பு, தசரதர் அவளுக்கு இரண்டு வரங்கள் கொடுத்திருந்தார். தேவைப்படும் போது அவற்றை வாங்கிக் கொள்வதாகக் கைகேயி கூறியிருந்தாள்.)

 

स सत्यवचनाद्राजा धर्मपाशेन संयत: ।
विवासयामास सुतं रामं दशरथ: प्रियम् ।।1.1.23।।


தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டிய கடமையால் கட்டுண்ட தசரதர், தன் அன்புக்குரிய புதல்வனான ராமனைக் காட்டுக்கு அனுப்பினார்.

 

 

स जगाम वनं वीर: प्रतिज्ञामनुपालयन्।
पितुर्वचननिर्देशात्कैकेय्या: प्रियकारणात् ।।1.1.24।।

மகாவீரனான ராமன், கைகேயியை மகிழ்விப்பதற்காகவும், தன் தந்தையாரின் வாக்கைக் காப்பதற்காகவும், அவருடைய கட்டளைப்படி காட்டுக்குச் சென்றான்.


तं व्रजन्तं प्रियो भ्राता लक्ष्मणोऽनुजगाम ह ।
स्नेहाद्विनयसम्पन्नस्सुमित्रानन्दवर्धन: ।।1.1.25।।
भ्रातरं दयितो भ्रातुस्सौभ्रात्रमनुदर्शयन् ।


ராமன் மேல் மிகவும் அன்பும் மரியாதையும் கொண்ட, சுமித்திரையின் ஆனந்தத்தை அதிகரிக்கச் செய்யும் புதல்வனான லக்ஷ்மணன், சகோதர பாசத்தால், தானும், ராமனைப் பின் தொடர்ந்தான்.


रामस्य दयिता भार्या नित्यं प्राणसमा हिता ।।1.1.26।।
जनकस्य कुले जाता देवमायेव निर्मिता ।

 

 

सर्वलक्षणसम्पन्ना नारीणामुत्तमा वधू: ।।1.1.27।।

सीताप्यनुगता रामं शशिनं रोहिणी यथा ।

ஜனகரின் குலத்தில் பிறந்தவளும், தேவ மாயையால் உருவாக்கப்பட்டவள் போன்று, அனைத்து விதமான அழகுகளும் நிரம்பப்பெற்றவளும், மங்கையருக்குள் உத்தமமானவளும், தசரதரின் மருமகளும், ராமனின் உயிருக்குயிரான அன்பு மனைவியுமான சீதையும், தக்ஷனின் மகளாகிய ரோகிணி, தன் கணவனான சந்திரனைப் பின் தொர்டர்வதைப் போல ராமனைப் பின்தொடர்ந்தாள்.



पौरैरनुगतो दूरं पित्रा दशरथेन च ।।1.1.28।।

शृङ्गिबेरपुरे सूतं गङ्गाकूले व्यसर्जयत् ।
गुहमासाद्य धर्मात्मा निषादाधिपतिं प्रियम् ।।1.1.29।।

गुहेन सहितो रामो लक्ष्मणेन च सीतया ।

அயோத்தி நகர மக்களும், தசரதரும் வெகு தூரம் அவர்களைப் பின் தொடர்ந்தனர்.  தர்மாத்மாவான ராமன் கங்கைக் கரையில் ஸ்ருங்கிவேரபுரம் என்ற இடத்தில், நிஷாதர்களின் தலைவனான குகனைச் சந்த்தித்ததில் இருவருக்கும் இடையே மிகுந்த அன்பு உருவானது. பின்னர் ராமன் சுமந்திரரை அயோத்திக்குத் திருப்பி அனுப்பிவிட்டு, லக்ஷ்மணன் மற்றும் சீதையுடன், குகனின் உதவியால் கங்கையைக் கடந்தான்.

 

ते वनेन वनं गत्वा नदीस्तीर्त्वा बहूदका: ।।1.1.30।।
चित्रकूटमनुप्राप्य भरद्वाजस्य शासनात् ।

रम्यमावसथं कृत्वा रममाणा वने त्रय: ।।1.1.31।।
देवगन्धर्वसङ्काशास्तत्र ते न्यवसन् सुखम् ।
 

ஒரு காட்டிலிருந்து இன்னொரு காட்டுக்குச் சென்றும், பல நீர் நிரம்பிய நதிகளைக் கடந்தும், பரத்வாஜ முனிவரின் ஆணைப்படி சித்ரகூட மலையை அடைந்து, அங்கே தேவ கந்தர்வர்களைப் போல இந்த மூவரும் இன்பமாக வசித்து வந்தார்கள்.



चित्रकूटं गते रामे पुत्रशोकातुरस्तथा ।।1.1.32।।
राजा दशरथस्स्वर्गं जगाम विलपन्सुतम् ।

ராமன் சித்ரகூடத்தை அடைந்த அந்த சமயத்தில், ராமனைப் பிரிந்த புத்திர சோகம் தாங்க முடியாமல், அழுது அழுது, தசரதர் மரணம் அடைந்தார்.

 

मृते तु तस्मिन्भरतो वसिष्ठप्रमुखैर्द्विजै: ।। 1.1.33।।
नियुज्यमानो राज्याय नैच्छद्राज्यं महाबल:।
स जगाम वनं वीरो रामपादप्रसादक: ।। 1.1.34 ।।

 

தசரதர் இறந்த பிறகு, வசிஷ்டர் முதலான அந்தணர்கள், ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் படி வற்புறுத்தியும், கைகேயியின் புதல்வனான பரதன் அதற்கு ஒப்பாமல், ராமனின் பாதம் பணிந்து, (அவனையே திரும்பி வந்து ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் படி) வேண்டிக் கொள்வதற்காகக் காட்டுக்குச் சென்றான். 



गत्वा तु सुमहात्मानं रामं सत्यपराक्रमम् ।
अयाचद्भ्रातरं राममार्यभावपुरस्कृत: ।।1.1.35।।

त्वमेव राजा धर्मज्ञ इति रामं वचोऽब्रवीत् ।

ராமர் இருப்பிடம் சென்றடைந்து, மிகுந்த மரியாதையுடனும், பணிவுடனும் அவரைப்பணிந்த, பரதன், “நீங்கள் தர்மம் அறிந்தவர். நீங்கள் தான் அரசராக இருக்க வேண்டும்” என்று வேண்டிக்கொண்டான். ( மூத்தவன் இருக்கும் போது, இளைய மகன் அரசனாவதை தர்மம் அனுமதிக்காது.)

 

रामोऽपि परमोदारस्सुमुखस्सुमहायशा: ।
न चैच्छत्पितुरादेशाद्राज्यं रामो महाबल: ।।1.1.36।।

ஆனால் ராமன், அனைவரையும் மகிழ்விப்பவனாயினும், மிகவும் தாராள குணமுடையவனாயினும், இன்முகத்துடன் அனைவரிடமும் பேசக்கூடியவனாயினும், நற்புகழ் உடையவனாயினும், பெரிய பலசாலியாயினும், தந்தையாரின் கட்டளையை மீற விரும்பாததால், ராஜ்ஜியத்தை ஏற்க விரும்பவில்லை.



पादुके चास्य राज्याय न्यासं दत्वा पुन:पुन: ।
निवर्तयामास ततो भरतं भरताग्रज: ।।1.1.37।।

பரதனின் தமையனான ராமன், ராஜ்ஜியத்தை ஆள்வதற்காக, அதிகாரம் உள்ள ஒரு அடையாளமாகத் தன் பாதுகைகளை பரதனுக்கு அளித்து, அவனை மீண்டும், மீண்டும் வற்புறுத்தி அயோத்திக்குத் திருப்பி அனுப்பினான்.



स काममनवाप्यैव रामपादावुपस्पृशन् ।।1.1.38।।
नन्दिग्रामेऽकरोद्राज्यं रामागमनकाङ्क्षया ।

தன் விருப்பம் நிறைவேறாத ஏமாற்றத்துடன், பரதன் ராமனின் பாதுகைகளை மரியாதையுடன் ஏற்று, ராமன் திரும்பி வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு, நந்திக்கிராமத்தில் இருந்து அரசாண்டு வந்தான்.



गते तु भरते श्रीमान् सत्यसन्धो जितेन्द्रिय: ।।1.1.39।।

रामस्तु पुनरालक्ष्य नागरस्य जनस्य च ।
तत्रागमनमेकाग्रो दण्डकान्प्रविवेश ह ।।1.1.40।।

பரதன் திரும்பிச் சென்ற பிறகு, சத்யசந்தனும், புலன்களை வென்றவனுமான ராமன், சித்ர கூடத்திலேயே இருந்தால், அயோத்தி நகரத்து மக்கள் மீண்டும் தன்னைக்காண வருவார்கள் என்று உணர்ந்து, தனது நோக்கத்தில் உறுதியுடன், தண்டகாரண்யத்தை நோக்கிப் புறப்பட்டான்.

 

 

प्रविश्य तु महारण्यं रामो राजीवलोचनः ।
विराधं राक्षसं हत्वा शरभङ्गं ददर्श ह ।।1.1.41।।

सुतीक्ष्णं चाप्यगस्त्यं च अगस्त्यभ्रातरं तथा ।

தாமரைக்கண்ணனான ராமன் அந்தப் பெரிய காட்டில் நுழைந்து, விராதன் என்ற அரக்கனைக்கொன்று, பின்னர், சரபங்கர், சுதீக்ஷணர், அகஸ்தியர் மற்றும் அவருடைய சகோதரர் ஆகிய முனிவர்களைச் சந்தித்தான்.

 

 

अगस्त्यवचनाच्चैव जग्राहैन्द्रं शरासनम् ।।1.1.42।।
खड्गं च परमप्रीतस्तूणी चाक्षयसायकौ ।

அகஸ்தியர், தனக்கு இந்திரன் அளித்த வில்லையும், வாளையும், தீரவே தீராத அம்புகளைக்கொண்ட தூணியையும், ராமனுக்கு அளிக்க, அதை ராமன் பெருமகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டான்.



वसतस्तस्य रामस्य वने वनचरैस्सह ।
ऋषयोऽभ्यागमन्सर्वे वधायासुररक्षसाम् ।।1.1.43।।

ராமன் அங்கு சரபங்கமுனிவரின் ஆசிரமத்தில் தங்கி இருந்த போது, முனிவர்கள் எல்லாம், அந்தக் காட்டில் வசிக்கும் மக்களுடன் வந்து, அரக்கர்களிடமிருந்து தங்களைக் காக்குமாறு ராமனை வேண்டிக் கொண்டனர்.



स तेषां प्रतिशुश्राव राक्षसानां तथा वने ।।1.1.44।।

प्रतिज्ञातश्च रामेण वधस्संयति रक्षसाम् ।
ऋषीणामग्निकल्पानां दण्डकारण्यवासिनाम् ।।1.1.45।।


தண்டகாரண்யத்தில் வசிக்கும் அரக்கர்களைக் கொல்வதாக அக்கினி ஜ்வாலையைப்போல் பிரகாசித்துக் கொண்டிருந்த அந்த முனிவர்களுக்கு, ராமன் வாக்களித்தான்.

 

तेन तत्रैव वसता जनस्थाननिवासिनी ।
विरूपिता शूर्पणखा राक्षसी कामरूपिणी ।।1.1.46।।

அருகிலேயே, ஜனஸ்தானம் என்ற இடத்தில் வசித்து வந்த, நினைத்த வடிவம் எடுக்கும் சக்தியுள்ள சூர்ப்பனகை, ( இலக்குவனால்) அங்க பங்கம் செய்யப்பட்டாள்.

 

.

ततश्शूर्पणखावाक्यादुद्युक्तान्सर्वराक्षसान् ।
खरं त्रिशिरसं चैव दूषणं चैव राक्षसम् ।।1.1.47।।

निजघान वने रामस्तेषां चैव पदानुगान् ।

பின்னர், சூர்ப்பனகையின் தூண்டுதலின் பேரில், தன்னுடன் போரிட வந்த கரன், த்ரிசிரசன், தூஷணன் முதலாய அரக்கர்களை ராமன் கொன்றான்.

 

वने तस्मिन्निवसता जनस्थाननिवासिनाम् ।।1.1.48।।
रक्षसां निहतान्यासन्सहस्राणि चतुर्दश ।

அந்தக்காட்டில் ராமன் வசித்து வந்த போது, ஜனஸ்தானத்தில் இருந்த பதினான்காயிரம் அரக்கர்கள் அவனால் கொல்லப்பட்டார்கள்.


ततो ज्ञातिवधं श्रुत्वा रावणः क्रोधमूर्छितः ।।1.1.49।।
सहायं वरयामास मारीचं नाम राक्षसम् ।

தன் இனத்தவர் இவ்வாறு கொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டு, மிகுந்த கோபம் அடைந்த ராவணன், மாரீசன் என்னும் அரக்கனின் உதவியை நாடினான்.



वार्यमाणस्सुबहुशो मारीचेन स रावणः ।।1.1.50।।
न विरोधो बलवता क्षमो रावण तेन ते ।


மாரீசன், “ராவணா! மிகவும் பலசாலியான ராமனை விரோதித்துக் கொள்வது சரியல்ல’ என்று பலவாறு ராவணனுக்கு எடுத்துரைத்தான்.



अनादृत्य तु तद्वाक्यं रावण: कालचोदित: ।।1.1.51।।
जगाम सह मारीचस्तस्याश्रमपदं तदा ।


ஆனால், விதியினால் உந்தப்பட்ட ராவணன், மாரீசனின் சொற்களை அலட்சியப்படுத்தி, அவனுடன், ராமன் தங்கியிருந்த ஆசிரமத்தை நோக்கி வந்தான்.

 

 

तेन मायाविना दूरमपवाह्य नृपात्मजौ ।।1.1.52।।
जहार भार्यां रामस्य गृध्रं हत्वा जटायुषम् ।

மாயாவியாகிய மாரீசனின் சூழ்ச்சியால், ராமனும் லக்ஷ்மணனும் காட்டில் வெகு தூரம் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அப்போது, சீதையைக் கவர்ந்து சென்ற ராவணன், வழியில் குறுக்கிட்டுப் போரிட்ட ஜடாயுவைக் கொன்று, அவளைத் தன்னிடத்துக்குக் கொண்டு சென்றான்.

 

गृध्रं च निहतं दृष्ट्वा हृतां श्रुत्वा च मैथिलीम् ।।1.1.53।।
राघवश्शोकसन्तप्तो विललापाकुलेन्द्रिय: ।

இறப்பதற்கு முன் பேசிய ஜடாயு மூலம், சீதை அபகரிக்கப்பட்டாள் என்பதைக் கேட்ட ராமன் தாங்க முடியாத சோகத்துடன் கதறினான்.



ततस्तेनैव शोकेन गृध्रं दग्ध्वा जटायुषम् ।।1.1.54।।
मार्गमाणो वने सीतां राक्षसं सन्ददर्श ह ।

कबन्धन्नाम रूपेण विकृतं घोरदर्शनम् ।।1.1.55।।

மிகுந்த சோகத்துடன் ஜடாயுவுக்கு ஈமக்கிரியைகள் செய்த பின்னர் சீதையைத் தேடிக் காட்டில் அலைந்த போது, பயங்கரமான உருவம் கொண்ட கபந்தன் என்னும் ராக்ஷஸனை ராமன் கண்டான்.



तं निहत्य महाबाहुर्ददाह स्वर्गतश्च स: ।
स चास्य कथयामास शबरीं धर्मचारिणीम् ।।1.1.56।।

श्रमणीं धर्मनिपुणामभिगच्छेति राघव । 1151

வலிமையான கரங்கள் கொண்ட ராமன் அந்தக் கபந்தனை வதம் செய்து, பின்னர் அவன் உடலைத் தகனம் செய்தான். ஸ்வர்க்கத்துக்குப் புறப்படும் முன் கபந்தன் ராமனிடம் ‘சபரி என்றொரு பெண்துறவி இருக்கிறாள். அவளைச் சென்று பார்’ என்று கூறிச் சென்றான்.



सोऽभ्यगच्छन्महातेजाश्शबरीं शत्रुसूदन: ।।1.1.57।।
शबर्या पूजितस्सम्यग्रामो दशरथात्मज: ।

மகத்தான ஒளி பொருந்தியவனும், எதிரிகளை அழிப்பவனுமான தசரதனின் மகனாகிய ராமன், சபரியைத் தேடிச் சென்றான். அவளும், மிகுந்த மகிழ்ச்சியுடன் அவனைப் பூஜித்தாள்.



पम्पातीरे हनुमता सङ्गतो वानरेण ह ।।1.1.58।।
हनुमद्वचनाच्चैव सुग्रीवेण समागत: ।


பம்பை நதிக்கரையில் ஹனுமான் என்னும் வானரத்தைச் சந்தித்து, அவன் சொற்படி, சுக்கிரீவனுடன் நட்பு பூண்டான்.

 

 

सुग्रीवाय च तत्सर्वं शंसद्रामो महाबल: ।।1.1.59।।
आदितस्तद्यथावृत्तं सीतायाश्च विशेषत: ।

ராமன், சுக்கிரீவனுக்கும், ஹனுமானுக்கும், முதலில் இருந்து அனைத்தையும், முக்கியமாக, சீதையின் அபஹரணம் பற்றியும் கூறினான்.



सुग्रीवश्चापि तत्सर्वं श्रुत्वा रामस्य वानर: ।।1.1.60।।
चकार सख्यं रामेण प्रीतश्चैवाग्निसाक्षिकम् ।

நடந்ததையெல்லாம் கேட்ட சுக்கிரீவன், ராமன் மேல் அன்பு மீதூறி, அக்னி சாட்சியாக, அவனுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டான்.



ततो वानरराजेन वैरानुकथनं प्रति ।।1.1.61।।
रामायावेदितं सर्वं प्रणयाद्दु:खितेन च ।

பின்னர், சுக்கிரீவன், தனது தமையனுடன் தனக்கு ஏற்பட்ட விரோதத்தைப்பற்றி, மிகவும் துயரத்துடன், ராமனுக்கு எடுத்துரைத்தான்.



प्रतिज्ञातं च रामेण तदा वालिवधं प्रति ।।1.1.62।।
वालिनश्च बलं तत्र कथयामास वानर: ।

அப்போது, வாலியைக் கொல்வதாக ராமன் சபதம் செய்ய, வாலியின் வலிமை பற்றி சுக்கிரீவன் விவரித்தான்.


सुग्रीवश्शङ्कितश्चासीन्नित्यं वीर्येण राघवे ।।1.1.63।।

राघवप्रत्ययार्थं तु दुन्दुभे: कायमुत्तमम् ।
दर्शयामास सुग्रीवो महापर्वतसन्निभम् ।।1.1.64।।

சுக்கிரீவனுக்கு, என்ன இருந்தாலும், ராமனின் வலிமை பற்றிய சந்தேகம் இருந்து வந்தது. அவன் ஒரு பெரிய மலையைப் போன்ற உடலுடைய துந்துபி என்னும் அரக்கனின் உடலை, ராமனுக்குக் காண்பித்தான்.



उत्स्मयित्वा महाबाहु: प्रेक्ष्य चास्थि महाबल: ।
पादाङ्गुष्ठेन चिक्षेप सम्पूर्णं दशयोजनम् ।।1.1.65।।

பெருவலிமை பொருந்திய ராமன் அந்த உடலைக் கண்டு, சிறிதே நகைத்துத் தன் காலின் பெருவிரலால் அந்த உடலைப் பத்து யோஜனை தூரம் (80 மைல்கள்) உதைத்து எறிந்தான்.



बिभेद च पुनस्सालान्सप्तैकेन महेषुणा ।
गिरिं रसातलं चैव जनयन्प्रत्ययं तथा ।।1.1.66।।

மேலும் சுக்கிரீவனுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்காக, ராமன் தான் விட்ட ஒரே அம்பானது, ஏழு சால மரங்களையும், ஒரு மலையையும், பூமிக்கடியில் உள்ள ரஸாதலத்தையும் துளைத்துச் செல்லும் படி செய்தான்.

 

तत: प्रीतमनास्तेन विश्वस्तस्स महाकपि: ।
किष्किन्धां रामसहितो जगाम च गुहां तदा ।।1.1.67।।

அதன் பிறகு, ராமனின் வலிமையில் முழு நம்பிக்கை பெற்ற சுக்கிரீவன், மகிழ்ச்சியுடன் அவனை கிஷ்கிந்தையில் இருந்த ஒரு குகைக்கு அழைத்துச் சென்றான்.


ततोऽगर्जद्धरिवर: सुग्रीवो हेमपिङ्गल: ।
तेन नादेन महता निर्जगाम हरीश्वर: ।।1.1.68।।

பின்னர் பொன்னிறமான மேனி உடைய சுக்கிரீவன் பெருங்குரலில் கர்ஜிக்கவும், அந்தப் பேரொலி கேட்டு அந்தக் குகையில் இருந்து வாலி வெளியே வந்தான்.



अनुमान्य तदा तारां सुग्रीवेण समागत: ।
निजघान च तत्रैनं शरेणैकेन राघव: ।।1.1.69।।

தனது மனைவி தாரை எவ்வளவோ தடுத்தும், அவளைச் சம்மதிக்க வைத்து, சுக்கிரீவனுடன் போர் புரிந்த வாலியை ஒரே அம்பால், ராமன் கொன்றான்.


ततस्सुग्रीववचनाद्धत्वा वालिनमाहवे ।
सुग्रीवमेव तद्राज्ये राघव: प्रत्यपादयत् ।।1.1.70।।


சுக்கிரீவனுக்குக் கொடுத்த வாக்கின் படி, வாலியைப்போரில்  கொன்ற பிறகு, ராமன், அந்த ராஜ்ஜியத்துக்கு சுக்கிரீவனையே அரசனாக்கினான்.

 

स च सर्वान्समानीय वानरान्वानरर्षभ: ।
दिश: प्रस्थापयामास दिदृक्षुर्जनकात्मजाम् ।।1.1.71।।

பின்னர், வானரர்களுள் சிறந்தவனான சுக்கிரீவன், தன் வானரங்களை அழைத்து, ஜனகனின் மகளாகிய சீதையை எல்லாத் திசைகளிலும் தேடுமாறு நியமித்துக் கட்டளையிட்டான்.  


ततो गृध्रस्य वचनात्सम्पातेर्हनुमान्बली।
शतयोजनविस्तीर्णं पुप्लुवे लवणार्णवम्।।1.1.72।।

அதன் பிறகு, சம்பாதி என்ற கழுகரசனின் யோசனைப்படி, நூறு யோஜனை அகலமுள்ள உப்புக்கடலை, ஹனுமான் குதித்துத் தாண்டினான்.

 

तत्र लङ्कां समासाद्य पुरीं रावणपालिताम् ।
ददर्श सीतां ध्यायन्तीमशोकवनिकां गताम् ।।1.1.73।।

ராவணனால், ஆளப்பட்ட லங்கையைச் சென்றடைந்து, அங்கே அசோக வனத்தில் தியானம் செய்து கொண்டிருந்த சீதையைக் கண்டான்.

 


निवेदयित्वाऽऽभिज्ञानं प्रवृत्तिं च निवेद्य च ।
समाश्वास्य च वैदेहीं मर्दयामास तोरणम् ।।1.1.74।।

ராமன் அடையாளமாகக் கொடுத்த மோதிரத்தைச் சீதையிடம் கொடுத்து, எல்லா விவரங்களையும் சொல்லி, அவளுக்கு ஆறுதல் அளித்து, அங்கிருந்து திரும்பும் முன்னர், அந்தத் தோட்டத்தின் மதில் சுவரை நசுக்கித் தகர்த்தான்.



पञ्च सेनाग्रगान्हत्वा सप्तमन्त्रिसुतानपि ।
शूरमक्षं च निष्पिष्य ग्रहणं समुपागमत् ।।1.1.75।।

ஹனுமான், ஐந்து சேனாதிபதிகளையும், ஏழு மந்திரிகுமாரர்களையும் கொன்று, ராவணனின் மகனாகிய வீரம் பொருந்திய அக்ஷகுமாரனையும் மிதித்துக் கொன்ற பின்னர், ராவணனின் ஆட்களிடம் பிடிபட்டான்.

 

 

अस्त्रेणोन्मुक्तमात्मानं ज्ञात्वा पैतामहाद्वरात् ।
मर्षयन्राक्षसान्वीरो यन्त्रिणस्तान्यदृच्छया ।।1.1.76।।

ततो दग्ध्वा पुरीं लङ्कामृते सीतां च मैथिलीम् ।
रामाय प्रियमाख्यातुं पुनरायान्महाकपि: ।।1.1.77।।

வீரனான அந்த மஹா வானரன், பிரம்மாவிடம் இருந்து பெற்ற ஒரு வரத்தால், தன்னை அஸ்திரத்தில் இருந்து விடுவித்துக்கொள்ள முடியும் என்றறிந்ததால், ராவணனை நேரில் காணவேண்டும் என்ற ஆசை நிறைவேறும் பொருட்டு, அந்த அரக்கர்கள் கயிற்றால் தன்னைக்கட்டிய போது பொறுத்துக்கொண்டான். தன் வேலை முடிந்த பின்னர், சீதையை மட்டும் விட்டு விட்டு, லங்காபுரி முழுவதையும் எரித்த பிறகு, ராமனுக்கு சீதையைக் கண்ட நற்செய்தியை சொல்லுவதற்காகத் திரும்பிச் சென்றான்.

 

सोऽधिगम्य महात्मानं कृत्वा रामं प्रदक्षिणम् ।
न्यवेदयदमेयात्मा दृष्टा सीतेति तत्त्वत: ।।1.1.78।।

எல்லையற்ற அறிவுக்கூர்மை படைத்த ஹனுமான், மகாத்மாவான ராமனைக் கண்டு, அவனை வலம் வந்து வணங்கித் தான் சீதையைக் கண்ட செய்தியைச் சொன்னான்.


ततस्सुग्रीवसहितो गत्वा तीरं महोदधे: ।
समुद्रं क्षोभयामास शरैरादित्यसन्निभै: ।।1.1.79।।

பின்னர் ராமன், சுக்கிரீவனுடன், பெருங்கடலின் கரைக்குச் சென்று, சூரிய கிரணங்களைப் போன்ற கூரிய அம்புகளால், அந்தக் கடலைக் கலக்கினான்.



दर्शयामास चात्मानं समुद्रस्सरितां पति: ।
समुद्रवचनाच्चैव नलं सेतुमकारयत् ।।1.1.80।।


சமுத்திர ராஜன் நேரில் தோன்றிக் கூறிய அறிவுரைப்படி நலன் என்ற வானரன் மூலம், சமுத்திரத்தின் மேல் பாலத்தைக் கட்டினான்.



तेन गत्वा पुरीं लङ्कां हत्वा रावणमाहवे ।
राम: सीतामनुप्राप्य परां व्रीडामुपागमत् ।।1.1.81।।

ராமன், அந்தப் பாலத்தின் மூலம் லங்காபுரியை அடைந்து, போரில் ராவணனைக்கொன்று, சீதையை திரும்ப அழைத்து வந்தான். ஆனாலும், சீதை இன்னொருவன் வீட்டில் இருந்திருக்கிறாள் என்பது அவனுக்கு மிகவும் சங்கடத்தைத் தந்தது.



तामुवाच ततो राम: परुषं जनसंसदि ।
अमृष्यमाणा सा सीता विवेश ज्वलनं सती ।।1.1.82।।

எல்லார் முன்னிலையிலும், சீதையை நோக்கிக் கடுமையான வார்த்தைகளை ராமன் கூறவே, அவற்றைத் தாங்க முடியாத சீதை தீக்குளித்தாள்.






ततोऽग्निवचनात्सीतां ज्ञात्वा विगतकल्मषाम् ।
बभौ रामस्सम्प्रहृष्ट: पूजितस्सर्वदैवतै: ।।1.1.83।।


அக்கினி தேவன் சீதை பரிசுத்தமானவள் என்று கூற, மிகவும் மகிழ்ந்த ராமன் தேவதைகளால் பூஜிக்கப்பட்டான்.



कर्मणा तेन महता त्रैलोक्यं सचराचरम् ।
सदेवर्षिगणं तुष्टं राघवस्य महात्मन: ।।1.1.84।।

மகாத்மாவான ராமனுடைய இந்தச் செயலினால், உயிருள்ளவைகளும், உயிரற்றவைகளும், தேவர்களும், முனிவர்களும், மூன்று உலகத்தில் உள்ளவர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.



अभिषिच्य च लङ्कायां राक्षसेन्द्रं विभीषणम् ।
कृतकृत्यस्तदा रामो विज्वर: प्रमुमोद ह ।।1.1.85।।

ராமன், விபீஷணனை லங்காபுரியின் அரசனாகப் பட்டாபிஷேகம் செய்வித்துத் தான் செய்ய வேண்டிய செயல்களையெல்லாம் செய்து முடித்த திருப்தியுடன், எந்தக் கவலையும் இல்லாமல் மகிழ்ந்திருந்தான்.



देवताभ्यो वरं प्राप्य समुत्थाप्य च वानरान् ।
अयोध्यां प्रस्थितो राम: पुष्पकेण सुहृद्वृत: ।।1.1.86।।


தேவதைகளிடம் பெற்ற வரத்தால், போரில் மடிந்திருந்த வானரங்களை உயிர்ப்பித்த பின்னர், நண்பர்களுடன் புஷ்பகவிமானத்தில் அயோத்தியை நோக்கிப் புறப்பட்டான்.



भरद्वाजाश्रमं गत्वा रामस्सत्यपराक्रम: ।
भरतस्यान्तिकं रामो हनूमन्तं व्यसर्जयत् ।।1.1.87।।

சத்ய பராக்ரமனும், காண்போரை மகிழ்விக்கச் செய்பவனுமான ராமன், பரத்வாஜ முனிவருடைய ஆசிரமத்துக்குச் சென்று, தன் வருகையை பரதனுக்குத் தெரிவிக்குமாறு ஹனுமானைத் தூதனுப்பினான்.

 

पुनराख्यायिकां जल्पन्सुग्रीवसहितश्च स: ।
पुष्पकं तत्समारुह्य नन्दिग्रामं ययौ तदा ।।1.1.88।।

பின்னர் சுக்கிரீவனுடன், நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றிப் பேசிக்கொண்டு, புஷ்பகவிமானம் ஏறி, நந்திக் கிராமத்துக்குச் சென்றான்.



नन्दिग्रामे जटां हित्वा भ्रातृभिस्सहितोऽनघ: ।
रामस्सीतामनुप्राप्य राज्यं पुनरवाप्तवान् ।।1.1.89।।

பாவங்களற்ற ராமன், நந்திக்கிராமத்தில் தன் சகோதரர்களுடன், ஜடாமுடியைக் களைந்து, சீதையுடன் அயோத்தி சென்று தன் ராஜ்ஜியத்தைத் திரும்பப் பெற்றான்.

.

प्रहृष्टमुदितो लोकस्तुष्ट: पुष्टस्सुधार्मिक: ।
निरामयो ह्यरोगश्च दुर्भिक्षभयवर्जित: ।।1.1.90।।

(ராமனுடைய ஆட்சியில்) உலகத்தார் அனைவரும், மகிழ்வுடனும், தங்கள் விருப்பங்கள் நிறைவேறிய திருப்தியுடனும், வலிமையுடனும், தர்மத்துடனும், ஆரோக்கியத்துடனும், பஞ்சம் போன்ற துயரங்களைப் பற்றிய பயம் இல்லாமலும் வாழ்ந்தார்கள்.


न पुत्रमरणं किञ्चिद्द्रक्ष्यन्ति पुरुषा: क्वचित् ।
नार्यश्चाविधवा नित्यं भविष्यन्ति पतिव्रता: ।।1.1.91।।

ராமன் அரசாண்ட போது, எங்கும் புதல்வர்கள் மரணமடையவில்லை. பெண்கள் விதவைகளாகவில்லை. பெண்கள் அனைவரும் பதிவிரதைகளாக இருந்தார்கள்.



न चाग्निजं भयं किञ्चिन्नाप्सु मज्जन्ति जन्तव: ।
न वातजं भयं किञ्चिन्नापि ज्वरकृतं तथा ।।1.1.92।।

न चापि क्षुद्भयं तत्र न तस्करभयं तथा ।

அந்த ராஜ்ஜியத்தில் நெருப்பினாலோ, நீராலோ, காற்றாலோ, நோயாலோ, பசியாலோ, திருட்டாலோ துன்பம் ஏற்படக்கூடும் என்ற பயமே இல்லை.


नगराणि च राष्ट्राणि धनधान्ययुतानि च ।।1.1.93।।
नित्यं प्रमुदितास्सर्वे यथा कृतयुगे तथा ।

அந்த ராஜ்ஜியத்தின் நகரங்களிலும் கிராமங்களிலும் இருந்த மக்கள், செல்வமும், உணவுப்பொருட்களும் நிறைந்து, க்ருத யுகத்தில் இருந்ததைப் போல , மகிழ்வுடன் இருந்தார்கள்.



अश्वमेधशतैरिष्ट्वा तथा बहुसुवर्णकै: ।।1.1.94।।

गवां कोट्ययुतं दत्वा ब्रह्मलोकं प्रयास्यति ।
असंख्येयं धनं दत्वा ब्राह्मणेभ्यो महायशा: ।।1.1.95।।

நூற்றுக்கணக்கான அஸ்வமேத யாகங்களும், ஏராளமான சுவர்ணகா (தங்கத்தைத் தானமாகக் கொடுக்கும் வேள்வி) யாகங்களும் செய்து தெய்வங்களை மகிழ்வித்து, அந்தணர்களுக்குக் கோடிக்கணக்கான பசுக்களையும், செல்வத்தையும் தானம் செய்த பின்னர், ராமன் பிரம்ம லோகம் திரும்புவான்.


राजवंशान्शतगुणान्स्थापयिष्यति राघव: ।
चातुर्वर्ण्यं च लोकेऽस्मिन् स्वे स्वे धर्मे नियोक्ष्यति ।।1.1.96।।

ராகவன் நூறு மடங்கு அரச வம்சங்களை உருவாக்குவான். நான்கு வர்ணத்தோரும் அவரவருக்குண்டான கடமைகளைச் செய்யுமாறு பார்த்துக்கொள்வான்.



दशवर्षसहस्राणि दशवर्षशतानि च ।
रामो राज्यमुपासित्वा ब्रह्मलोकं प्रयास्यति ।। 1.1.97।।

ராமன் பதினோராயிரம் ஆண்டுகள் அரசாண்ட பின்னர் பிரம்ம லோகம்  சென்றடைவான்.



इदं पवित्रं पापघ्नं पुण्यं वेदैश्च सम्मितम् ।
य: पठेद्रामचरितं सर्वपापै: प्रमुच्यते ।।1.1.98।।


இந்த ராமனுடைய சரித்திரம் பவித்ரமானது. பாவங்களைப் போக்கி, புண்ணியங்களைத் தருவது. வேதங்களுக்கு நிகரானது. இதை எவர் படிக்கிறாரோ, அவர், எல்லா பாவங்களில் இருந்தும் விடுவிக்கப்படுவார்.

 

 

एतदाख्यानमायुष्यं पठन्रामायणं नर: ।
सपुत्रपौत्रस्सगण: प्रेत्य स्वर्गे महीयते ।। 1.1.99।।

இந்த ராமாயணத்தைப் படிப்பவருக்கும், சொல்லுபவருக்கும், ஆயுள் அதிகரிக்கும். தங்கள் புத்திரங்களுடனும், பௌத்திரர்களுடனும், சொந்த பந்தங்களுடனும், நலமாக வாழ்ந்து, மரணம் எய்தியபின் ஸ்வர்க்கத்தில் பூஜிக்கப் படுவார்கள்.

 

पठन्द्विजो वागृषभत्वमीयात्
स्यात्क्षत्रियो भूमिपतित्वमीयात् ।

वणिग्जन: पण्यफलत्वमीयात्
जनश्च शूद्रोऽपि महत्वमीयात् ।।1.1.100।।

இதைப்படிப்பதால் அந்தணர்கள் பதினெட்டு வகைக் கல்வியிலும் சிறந்து விளங்குவார்கள். க்ஷத்தியர்கள், நிலத்தின் மீது அதிகாரம் செலுத்துவார்கள். வைஸ்யர்கள் அவர்களுடைய வியாபாரத்தில் நல்ல பலன்களை அடைவார்கள். சூத்திரர்களும் மேல் நிலை அடைவார்கள். “



इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे (श्रीमद्रामायणकथासङ्क्षेपो नाम) प्रथम: सर्ग:।।

 

இத்துடன், ஆதிகாவியமாகிய ஸ்ரீமத் ராமாயணத்தின், பாலகாண்டத்தின், ஸ்ரீமத் ராமாயணச் சுருக்கம் என்னும் முதல் சர்க்கம் நிறைவு பெற்றது.



***


ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 2

By B Ramadevi

( வால்மீகி மகரிஷி காலைக்கடன்களைக் கழிக்க தமஸா நதிக்குச் செல்கிறார். அப்போது ஒரு ஆண் க்ரௌஞ்சப் பறவையை ஒரு வேடன் அம்பினால் கொன்று வீழ்த்துவதைப் பார்க்கிறார். தன் இணையைப் பிரிந்த பெண் பறவையின் துயரத்திற்காக வருந்தி, அவர் கூறிய சொற்கள் ஒரு அழகான சந்தத்தில் அமைந்த ஸ்லோகமாக வெளிவருகின்றன. அவர் ஆசிரமத்துக்கு வந்ததும் படைப்புக் கடவுள் பிரம்மா அங்கே வருகிறார். அவர் வாயில் இருந்து வந்த ஸ்லோகத்தின் சந்தத்திலேயே நாரதர் அவருக்குச் சொன்ன ராமனின் கதையை இயற்றுமாறு கூறுகிறார். வால்மீகி மகரிஷிக்கு திவ்ய த்ருஷ்டியையும் அளிக்கிறார்.)


नारदस्य तु तद्वाक्यं श्रुत्वा वाक्यविशारद:।
पूजयामास धर्मात्मा सहशिष्यो महामुनि: ।।1.2.1।।

நாரதர் கூறியவைகளைக் கேட்டபின், தர்மாத்வான வால்மீகி மகரிஷி தன் சீடர்களுடன் நாரதரைப் பூஜித்தார்.

 

यथावत्पूजितस्तेन देवर्षिर्नारदस्तदा ।
आपृष्ट्वैवाभ्यनुज्ञातस्स जगाम विहायसम् ।।1.2.2।।

வால்மீகி மகரிஷியால் பூஜிக்கப்பட்ட பின், நாரதர் அவரிடம் விடை பெற்று, தேவலோகம் திரும்பினார்.


स मुहूर्तं गते तस्मिन्देवलोकं मुनिस्तदा ।
जगाम तमसातीरं जाह्नव्यास्त्वविदूरत: ।।1.2.3।।

நாரதர் அங்கிருந்து சென்றதும், வால்மீகி மகரிஷி, காலைக்கடன்களைக் கழிப்பதற்காக, கங்கை நதிக்கு அருகிலேயே பாய்ந்து கொண்டிருந்த தமஸா நதிக்கரைக்குச் சென்றார்.



स तु तीरं समासाद्य तमसाया महामुनि: ।
शिष्यमाह स्थितं पार्श्वे दृष्ट्वा तीर्थमकर्दमम् ।।1.2.4।।

நதிக்கரையை அடைந்து, கலங்கல் இல்லாத தூய நீர் இருந்த ஒரு பகுதி இருப்பதைக் கண்டு, அருகில் நின்றிருந்த தன் சீடனிடம் கூறினார்.



अकर्दममिदं तीर्थं भरद्वाज निशामय ।
रमणीयं प्रसन्नाम्बु सन्मनुष्यमनो यथा ।।1.2.5।।

“பரத்வாஜா! இந்தப் புனிதமான இடத்தைப் பார்! நல்ல மனிதர்களின் உள்ளம் போலக் கலங்கல் இல்லாமல் தூய்மையான, இனிமையான நீரைக்கொண்டிருக்கிறது.



न्यस्यतां कलशस्तात दीयतां वल्कलं मम ।
इदमेवावगाहिष्ये तमसातीर्थमुत्तमम् ।।1.2.6।।

மகனே! நீர் எடுக்கும் கலசத்தைக் கீழே வைத்து விட்டு, என்னுடைய மரவுரியைக் கொடு. புனிதமான இந்தத் தமஸா நதியில் நான் குளிக்கப் போகிறேன்.



एवमुक्तो भरद्वाजो वाल्मीकेन महात्मना ।
प्रायच्छत मुनेस्तस्य वल्कलं नियतो गुरो: ।।1.2.7।।

மகாத்மாவான வால்மீகி மகரிஷியின் ஆணைக்குட்பட்டு, அவருடைய பணிவுள்ள சீடனான பரத்வாஜன், முனிவரின் மரவுரியை அவரிடம் கொடுத்தான்.



स शिष्यहस्तादादाय वल्कलं नियतेन्द्रिय: ।
विचचार ह पश्यंस्तत्सर्वतो विपुलं वनम् ।।1.2.8।।

புலன்களை வென்ற வால்மீகி மகரிஷி, தன் சீடனிடமிருந்து மரவுரியைப் பெற்றுக்கொண்டு, பரந்து விரிந்திருந்த அந்த வனத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டே நடக்கலானார்.



तस्याभ्याशे तु मिथुनं चरन्तमनपायिनम् ।
ददर्श भगवांस्तत्र क्रौञ्चयोश्चारुनिस्वनम् ।।1.2.9।।

அப்போது அங்கே அவர், ஒரு நிமிடம் கூட ஒன்றை விட்டு ஒன்று பிரியாமல் இருக்கும், இனிய குரலைக்கொண்ட, க்ரௌஞ்சப் பறவைகளின் (அன்றில் பறவைகள்) ஜோடியைக் கண்டார்.



तस्मात्तु मिथुनादेकं पुमांसं पापनिश्चय: ।
जघान वैरनिलयो निषादस्तस्य पश्यत: ।।1.2.10।।

அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, பாவ எண்ணங்களுடைய கொடூரமான வேடனொருவன் அந்த இரு பறவைகளில், ஆண் பறவையைக் கொன்று வீழ்த்தினான்.



तं शोणितपरीताङ्गं वेष्टमानं महीतले ।
भार्या तु निहतं दृष्ट्वा रुराव करुणां गिरम् ।।1.2.11।।

वियुक्ता पतिना तेन द्विजेन सहचारिणा ।
ताम्रशीर्षेण मत्तेन पत्रिणा सहितेन वै ।।1.2.12।।

தாமிர நிறக்கொண்டையுடைய தன் கணவன் மீது மிகுந்த அன்பு கொண்ட அந்தப் பெண் பறவை,  உடல் முழுவதும் இரத்தத்தில் நனைந்து, இறந்து கிடக்கும் அவன் உடலைப் பார்த்துப் பரிதாபமாகக் கதறி அழுதது.



तदा तु तं द्विजं दृष्ट्वा निषादेन निपातितम् ।
ऋषेर्धर्मात्मनस्तस्य कारुण्यं समपद्यत ।।1.2.13।।

வேடனால் வீழ்த்தப்பட்ட அந்தப் பறவையைக்கண்ட தர்மாத்வான வால்மீகி மகரிஷியின் உள்ளத்தில் கருணை பொங்கியது.



तत: करुणवेदित्वादधर्मोऽयमिति द्विज: ।
निशाम्य रुदतीं क्रौञ्चीमिदं वचनमब्रवीत् ।।1.2.14।।

அழுதுகொண்டிருக்கும் அந்தப் பெண் க்ரௌஞ்சப் பறவையைக் கண்டு, கருணை மீதூற, இவ்வாறு இரு பறவைகள் இணைந்திருக்கும் வேளை, அவைகளைக் கொல்வது அதர்மம் என்று கீழ்க்கண்ட சொற்களைக் கூறினார்.



मा निषाद प्रतिष्ठां त्वमगमश्शाश्वतीस्समा: ।
यत्क्रौञ्चमिथुनादेकमवधी: काममोहितम् ।।1.2.15।। 15

“ஏ வேடனே! அன்பு கொண்ட இந்த இணைப் பறவைகளில் ஒன்றைக் கொன்ற நீ உனக்கான நிலையை அடையவே மாட்டாய்.”

 

 

तस्यैवं ब्रुवतश्चिन्ता बभूव हृदि वीक्षतः ।
शोकार्तेनास्य शकुने: किमिदं व्याहृतं मया ।।1.2.16।।

அந்த வார்த்தைகளைக் கூறிய பிறகு, வால்மீகி மகரிஷி, ‘அந்தப் பறவையின் துயரத்தைக் கண்ட நான் ஏன் இவ்வாறு கூறினேன்’ என்று யோசித்தார்.



चिन्तयन्स महाप्राज्ञश्चकार मतिमान्मतिम् ।
शिष्यं चैवाऽब्रवीद्वाक्यमिदं स मुनिपुङ्गव: ।।1.2.17।।

கற்றறிந்த அறிஞரும், முனிவர்களுள் சிறந்தவருமான வால்மீகி மகரிஷி, தனது சீடனை நோக்கி இவ்வாறு கூறினார்.

 

.

पादबद्धोऽक्षरसमस्तन्त्रीलयसमन्वित: ।
शोकार्तस्य प्रवृत्तो मे श्लोको भवतु नान्यथा ।।1.2.18।।

பறவையின் துயரம் தாளாமல், நான் சொன்ன சொற்கள் ஒரே எண்ணிக்கையுள்ள எழுத்துக்களுடன் நான்கு அடிகளில்,

தந்தி வாத்தியங்களுடன் பாடத்தகுந்த விதத்தில் அமைந்துள்ளன. இது ஸ்லோகம் என்று அழைக்கப்படட்டும். வேறு எந்தப் பெயரிலும் அல்ல.



शिष्यस्तु तस्य ब्रुवतो मुनेर्वाक्यमनुत्तमम् ।
प्रतिजग्राह संहृष्टस्तस्य तुष्टोऽभवद्गुरु: ।।1.2.19।।

அவருடைய சீடரும், தன் குருவின் வார்த்தைகளைக்கேட்டு, உடனே அந்த ஸ்லோகத்தை மனப்பாடம் செய்து விட்டார். அதைக் கண்ட குரு மிக்க மகிழ்ச்சி கொண்டார்.

.

सोऽभिषेकं तत: कृत्वा तीर्थे तस्मिन्यथाविधि ।
तमेव चिन्तयन्नर्थमुपावर्तत वै मुनि: ।।1.2.20।।

அந்தப் புனிதமான நதியில் நீராடிவிட்டு, முறைப்படி செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்துவிட்டு, இந்த விஷயத்தைப் பற்றியே யோசித்துக்கொண்டு, மகரிஷி ஆசிரமத்தை நோக்கி நடந்தார்.



भरद्वाजस्ततश्शिष्यो विनीतश्श्रुतवान्मुनेः ।
कलशं पूर्णमादाय पृष्ठतोऽनुजगाम ह ।।1.2.21।।

 

பின்னர், கற்றறிந்த முனிவரும், அவருடைய, பணிவுள்ள சீடருமான பரத்வாஜர், நீர் நிறைந்த கலசத்தை எடுத்துக்கொண்டு அவரைப் பின் தொடர்ந்தார்.



स प्रविश्याश्रमपदं शिष्येण सह धर्मवित् ।
उपविष्ट: कथाश्चान्याश्चकार ध्यानमास्थित: ।।1.2.22।।

தர்மங்களையெல்லாம் அறிந்த வால்மீகி மகரிஷி, தனது சீடருடன் ஆசிரமத்துக்கு வந்து அங்கேயே தியானத்தில் அமர்ந்து, மற்ற கதைகளை இயற்றினார்.

 

आजगाम ततो ब्रह्मा लोककर्ता स्वयं प्रभु: ।
चतुर्मुखो महातेजा द्रष्टुं तं मुनिपुङ्गवम् ।।1.2.23।।

அப்போது, மிகுந்த பிரகாசம் உடையவரும், இந்த உலகைப் படைப்பவருமான, நான்முகப் பிரம்மா முனிபுங்கவரான வால்மீகி மகரிஷியைக் காணத் தாமே அங்கு வந்தார்.



वाल्मीकिरथ तं दृष्ट्वा सहसोत्थाय वाग्यत: ।
प्राञ्जलि: प्रयतो भूत्वा तस्थौ परमविस्मित: ।।1.2.24।।

தவத்தினால் தூய்மையடைந்தவரும், பேசுவதில் கட்டுப்பாடு உடையவருமான வால்மீகி மகரிஷி, அவரைக்கண்டு, மிகுந்த வியப்படைந்து, உடனே எழுந்து,  கைகளைக் குவித்து வணங்கி நின்றார்.

पूजयामास तं देवं पाद्यार्घ्यासनवन्दनै: ।
प्रणम्य विधिवच्चैनं पृष्ट्वाऽनामयमव्ययम् ।।1.2.25।।

அந்த பிரம்ம தேவரை முறைப்படி காலில் விழுந்து வரவேற்று, அவருடைய நலம் விசாரித்து, கால்களை அலம்பவும், கைகளை அலம்பவும் நீர் அளித்து, அமர்வதற்கு ஆஸனம் (பாத்யம், அர்க்யம், ஆஸனம்) அளித்துப் பூஜித்தார்.



अथोपविश्य भगवानासने परमार्चिते ।
वाल्मीकये महर्षये सन्दिदेशासनं तत: ।।1.2.26।।

அனைத்தும் அறிந்த பிரம்ம தேவர், வால்மீகியால் வணங்கப்பட்ட பின், அவர் அளித்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டு, வால்மீகியையும் அமரச் சொன்னார்.



ब्रह्मणा समनुज्ञातस्सोऽप्युपाविशदासने ।

उपविष्टे तदा तस्मिन्सर्वलोकपितामहे।
तद्गतेनैव मनसा वाल्मीकिर्ध्यानमास्थित: ।।1.2.27।।

பிரம்மதேவரின் கட்டளைப்படி அவர் முன்னே அமர்ந்த போதிலும், வால்மீகி, நடந்த நிகழ்ச்சிகளையே (க்ரௌஞ்சவதம் சம்பந்தமான)அசை போட்டுக்கொண்டு இருந்தார்.

 

 

पापात्मना कृतं कष्टं वैरग्रहणबुद्धिना ।
यस्तादृशं चारुरवं क्रौञ्चं हन्यादकारणात् ।।1.2.28।।

அந்தக் க்ரௌஞ்சத்தைக் கொன்று எடுத்துச் செல்ல வேண்டும் என்ற கெட்ட எண்ணம் கொண்ட அந்த வேடனால், இனிமையான குரலுடைய அந்தப் பறவை, அநியாயமாகக் கொல்லப்பட்டது.



शोचन्नेव मुहु: क्रौञ्चीमुपश्लोकमिमं पुन: ।
जगावन्तर्गतमना भूत्वा शोकपरायण: ।।1.2.29।।

துயரத்தில் ஆழ்ந்திருந்த வால்மீகி, மீண்டும் மீண்டும், அழுது புலம்பிக்கொண்டிருந்தஅந்தப் பெண் பறவையைப் பற்றித் தனக்குள்ளேயே யோசித்துக்கொண்டு, அந்த ஸ்லோகத்தை உரக்கக் கூறினார்.



तमुवाच ततो ब्रह्मा प्रहसन्मुनिपुङ्गवम् ।
श्लोक एव त्वया बद्धो नात्र कार्या विचारणा ।।1.2.30।।

அதைக் கேட்ட பிரம்ம தேவர், முனி புங்கவரான வால்மீகியைப் பார்த்து, ‘நீங்கள் இயற்றியுள்ளது ஓரு ஸ்லோகத்தைத் தான். அதில் எந்த ஐயமும் இல்லை.


मच्छन्दादेव ते ब्रह्मन् प्रवृत्तेयं सरस्वती ।
रामस्य चरितं सर्वं कुरु त्वमृषिसत्तम ।।1.2.31।।

முனிவர்களுள் சிறந்தவரே! என்னுடைய விருப்பத்தாலேயே உங்கள் வாக்கிலிருந்து இந்த ஸ்லோகம் உருப்பெற்றது. இந்தச் சந்தத்திலேயே, ராமனுடைய சரித்திரம் முழுவதையும் நீங்கள் இயற்ற வேண்டும்.”



धर्मात्मनो गुणवतो लोके रामस्य धीमत: ।
वृत्तं कथय धीरस्य यथा ते नारदाच्छ्रुतम् ।।1.2.32।।

இந்த உலகத்தில், மிகச் சிறந்த தர்மாத்மாவும், குணசாலியாகவும், ஞானியாகவும், மன உறுதி உடையவனாகவும் உள்ள ராமனின் சரித்திரத்தை, நாரதரிடம் இருந்து எவ்வாறு கேட்டீர்களோ, அவ்வாறே இயற்றுங்கள்.”



रहस्यं च प्रकाशं च यद्वृत्तं तस्य धीमत: ।
रामस्य सहसौमित्रेः राक्षसानां च सर्वश: ।।1.2.33।।

वैदेह्याश्चैव यद्वृत्तं प्रकाशं यदि वा रह: ।
तच्चाप्यविदितं सर्वं विदितं ते भविष्यति ।।1.2.34।।

புத்திமானாகிய ராமன், லட்சுமணன், சீதை, அரக்கர்கள், மற்றும் பிறருடைய எண்ணங்கள் மற்றும் செயல்கள், உங்களுக்குத் தெரிந்திருந்தாலும், தெரியாவிட்டலும், அவையனைத்தும் உங்களுக்கு, என் அருளால் காட்டப்படும்.

 
न ते वागनृता काव्ये काचिदत्र भविष्यति ।
कुरु रामकथां पुण्यां श्लोकबद्धां मनोरमाम् ।।1.2.35।।

இந்தக் காவியத்தில் ஒரு வார்த்தை கூட பொய்யாக இருக்காது. புண்ணியமானதும், மனதிற்கு இனிமையானதும் ஆன ராமனின் கதையை ஸ்லோகங்கள் வடிவில் இயற்றுங்கள்.


यावत् स्थास्यन्ति गिरयस्सरितश्च महीतले ।
तावद्रामायणकथा लोकेषु प्रचरिष्यति ।।1.2.36।।
 

இந்தப் பூமியில், மலைகளும், நதிகளும் இருக்கும் வரை, ராமாயணக்கதையும் மக்களிடையே பிரபலமாக இருக்கும்.

 

यावद्रामायणकथा त्वत्कृता प्रचरिष्यति ।
तावदूर्ध्वमधश्च त्वं मल्लोकेषु निवत्स्यसि ।।1.2.37।।

ராமாயணக்கதை இந்தப் பூமியில் இருக்கும் வரை, நீங்கள் மேல் உலகத்திலும், கீழ் உலகத்திலும், என்னுடைய பிரம்ம லோகத்திலும் இருப்பீர்கள்.”


इत्युक्त्वा भगवान्ब्रह्मा तत्रैवान्तरधीयत ।
ततस्सशिष्यो भगवान्मुनिर्विस्मयमाययौ ।।1.2.38।।

இவ்வாறு கூறி, பிரம்ம தேவன் அங்கிருந்து மறைந்து விட்டார். வால்மீகி மகரிஷியும் அவருடைய சீடர்களும் மிகுந்த ஆச்சரியத்துக்குள்ளானார்கள்.



तस्य शिष्यास्ततस्सर्वे जगुश्श्लोकमिमं पुन: ।
मुहुर्मुहु: प्रीयमाणा: प्राहुश्च भृशविस्मिता: ।।1.2.39।।


பின்னர் அவருடைய சீடர்கள் மீண்டும் மீண்டும், அந்த ஸ்லோகத்தை முழங்கிக் கொண்டிருந்தார்கள். மிகுந்த வியப்புடன், நடந்தவைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

 

समाक्षरैश्चतुर्भिर्य: पादैर्गीतो महर्षिणा ।
सोऽनुव्याहरणाद्भूयश्श्लोकश्श्लोकत्वमागत: ।।1.2.40।।
 

மகரிஷி, ஒரே எண்ணிக்கையில் எழுத்துக்களைக் கொண்ட, நான்கு வரிகளில் அமைந்த அந்த ஸ்லோகத்தை  மீண்டும் உச்சரித்தார். மீண்டும் மீண்டும் உச்சரிக்கப்பட்டதால் அந்த ஸ்லோகம் மேன்மை பெற்றது.

 

तस्य बुद्धिरियं जाता वाल्मीकेर्भावितात्मन: ।
कृत्स्नं रामायणं काव्यमीदृशै: करवाण्यहम् ।।1.2.41।।

எண்ணங்களைச் செயலாக்கும் திறமை பெற்ற வால்மீகியின் மனத்தில் ராமாயண காவியத்தை, முழுக்க முழுக்க இந்தச் சந்தத்திலேயே இயற்ற வேண்டும் என்ற எண்ணம் உதித்தது.’

 

उदारवृत्तार्थपदैर्मनोरमैः
तदास्य रामस्य चकारकीर्तिमान् ।

समाक्षरैश्श्लोकशतैर्यशस्विनो
यशस्करं काव्यमुदारधीर्मुनि: ।।1.2.42।।


புகழ் நிறைந்தவரும், புத்திமானுமான வால்மீகி மகரிஷி, எல்லாராலும் போற்றப்பட்ட ராமனுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதத்தில், ஒரே எண்ணிக்கையுடன் நான்கு வரிகளில் அமைந்த அந்த இனிமையான சந்தத்தில், நூற்றுக்கணக்கான ஸ்லோகங்களில், ராமாயணத்தை இயற்றினார்.

 

तदुपगतसमाससन्धियोगं
सममधुरोपनतार्थवाक्यबद्धम् ।

रघुवरचरितं मुनिप्रणीतं
दशशिरसश्च वधं निशामयध्वम् ।।1.2.43।।

ஸமாஸம் ( தொகை), சந்தி ( புணர்ச்சி) ஆகியவைகளுடன், இனிமையான, வார்த்தைகளும் சொற்றொடர்களும் சேர்த்து, வால்மீகி மகரிஷியால் இயற்றப்பட்ட, பத்து தலை உடைய ராவணனைக்கொன்ற ரகுவரனின் சரித்திரத்தைக்கேளுங்கள்.

 

इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे द्वितीयस्सर्ग:।।

 

இத்துடன், ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின், இரண்டாவது சர்க்கம் நிறைவு பெற்றது.

***


ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 3


By B.Ramadevi

 [Valmiki composes the great epic--names it Ramayana--visualises the past events in detail.]

श्रुत्वा वस्तु समग्रं तद्धर्मात्मा धर्मसंहितम् ।
व्यक्तमन्वेषते भूयो यद्वृत्तं तस्य धीमत: ।।1.3.1।।


சிறந்த புத்திமானான நாரதரிடமிருந்து, அறிவார்ந்த ராமனுடைய முழுக் கதையயும் கேட்டிருந்தாலும், இன்னும் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்காக வால்மீகி மகரிஷி  மேலும் தேடினார்.


उपस्पृश्योदकं सम्यग्मुनिस्स्थित्वा कृताञ्जलि: ।
प्राचीनाग्रेषु दर्भेषु धर्मेणान्वेषते गतिम् ।।1.3.2।।

தர்ப்பைப் புல் ஆசனத்தில் அமர்ந்து கொண்டு, முறைப்படி ஆசமனம் செய்து, கைகளைக் கூப்பிக் கொண்டு, தன் தவ வலிமையால், ராமனைப் பற்றித் தெரியாத சில செய்திகளைத் தெரிந்து கொள்ள முனைந்தார்.

 

 

रामलक्ष्मणसीताभी राज्ञा दशरथेन च ।
सभार्येण सराष्ट्रेण यत्प्राप्तं तत्र तत्त्वत: ।।1.3.3।।

हसितं भाषितं चैव गतिर्या यच्च चेष्टितम् ।
तत्सर्वं धर्मवीर्येण यथावत्सम्प्रपश्यति ।।1.3.4।।
 



தனது தவ வலிமையால், மகரிஷியானவர், ராமன்,சீதை, லக்ஷ்மணன், தசரத மன்னர், அவருடைய மனைவியர், அவருடைய ராஜ்ஜியம், அவர்கள் பார்த்தவை, அனுபவித்தவை, செய்ய முயன்றவை, அவர்களுடைய உரையாடல், அவர்களுடைய சிரிப்பு ஆகிய அனைத்தையும் நேரில் பார்ப்பது போலத் தன் மனக்கண்ணால் பார்த்தார்.

 

स्त्रीतृतीयेन च तदा यत्प्राप्तं चरता वने ।
सत्यसन्धेन रामेण तत्सर्वं चान्ववेक्षितम् ।।1.3.5।।

சத்யசந்தனான ராமன், லக்ஷ்மணனுடனும் சீதையுடனும், தண்டகாரண்யக் காட்டில் அலைந்து திரிந்த போது நடந்தவற்றையெல்லாம் பார்த்தார்.


तत: पश्यति धर्मात्मा तत्सर्वं योगमास्थित: ।
पुरा यत्तत्र निर्वृत्तं पाणावामलकं यथा ।।1.3.6।।
 

தர்மாத்வான வால்மீகி, தன் யோக சக்தியால், தியானத்தின் மூலம், ராமனின் வாழ்வில் முன்னர் நடந்த அனைத்தையும், உள்ளங்கை நெல்லிக்கனி போலக் கண்டார்.

 

तत्सर्वं तत्त्वतो दृष्ट्वा धर्मेण स महाद्युति: ।
अभिरामस्य रामस्य चरितं कर्तुमुद्यत: ।।1.3.7।।

कामार्थगुणसंयुक्तं धर्मार्थगुणविस्तरम् ।
समुद्रमिव रत्नाढ्यं सर्वश्रुतिमनोहरम् ।।1.3.8।।

ஒளி மிகுந்த வால்மீகி மகரிஷி, தன் தவ வலிமையால், ராமனின் கதையை முழுக்க அறிந்து கொண்டு, இவ்வுலக மக்கள், செல்வம் மற்றும் சுகங்களை அடைவதற்காகவும், தர்மத்தையே தன் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு வாழ்வதற்காகவும், தன்னகத்தே எண்ணற்ற ரத்தினங்களைக் கொண்டிருக்கும் கடல் போல, அனைவரின் செவிக்கும் விருந்தாகும் படியான ராமனின் கதையை எழுதத் தயாரானார்.

 

स यथा कथितं पूर्वं नारदेन महर्षिणा ।
रघुवंशस्य चरितं चकार भगवानृषिः ।।1.3.9।।

புகழ்பெற்ற நாரத மகரிஷி முதலில் அவருக்கு எவ்வாறு ராமனின் கதையைக் கூறினாரோ, அவ்வாறே வால்மீகி இயற்றலானார்.

 

जन्म रामस्य सुमहद्वीर्यं सर्वानुकूलताम् ।
लोकस्य प्रियतां क्षान्तिं सौम्यतां सत्यशीलताम् ।।1.3.10।।

அந்தக் காவியத்தில், ராமனின் பிறப்பு, அவனுடைய மகத்தான வீரம், அனைவருக்கும் நன்மை செய்யும் குணம், அனைவரும் விரும்பும் நடத்தை, அழகு, உண்மையில் உறுதி ஆகிய குணங்களை விவரித்தார்.

 

नानाचित्रकथाश्चान्या विश्वामित्रसमागमे ।
जानक्याश्च विवाहं च धनुषश्च विभेदनम् ।।1.3.11।।

விஸ்வாமித்திரருடன் ராமனுடைய தொடர்பு, சிவனுடைய பெரிய வில்லை ஒடித்தது, சீதையை மணந்தது போன்ற அற்புதமான நிகழ்ச்சிகளை அதில் சேர்த்தார்.



रामरामविवादं च गुणान्दाशरथेस्तथा ।
तथाऽभिषेकं रामस्य कैकेय्या दुष्टभावताम् ।।1.3.12।।

ராமனுக்கும் பரசுராமனுக்கும் நடந்த விவாதங்கள், ராமனுடைய அற்புதமான குண நலன்கள், ராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்யும் தீர்மானம், கைகேயியின் கெட்ட குணம்,

 

विघातं चाभिषेकस्य राघवस्य विवासनम् ।
राज्ञश्शोकविलापं च परलोकस्य चाश्रयम् ।।1.3.13।।

பட்டாபிஷேகத்துக்கு ஏற்பட்ட தடைகள், ராமனைக் காட்டுக்கு அனுப்புதல், தசரத மன்னனின் துயரம், அவர் பரலோகம் அடைதல்,

 

प्रकृतीनां विषादं च प्रकृतीनां विसर्जनम् ।
निषादाधिपसंवादं सूतोपावर्तनं तथा ।।1.3.14।।

அயோத்தி மக்களின் துயரம், தன்னைத் தொடர்ந்த அந்த மக்களைத் திருப்பி அனுப்புதல், நிஷாத ராஜனான குகனுடன் நட்பு, தேரோட்டியான சுமந்திரரைத் திருப்பி அயோத்திக்கு அனுப்புதல்,


गङ्गायाश्चापि सन्तारं भरद्वाजस्य दर्शनम् ।
भरद्वाजाभ्यनुज्ञानाच्चित्रकूटस्य दर्शनम् ।।1.3.15।।

கங்கையைக் கடத்தல், பரத்வாஜ முனிவரைச் சந்தித்தல், அவருடைய கட்டளைப்படி சித்ரகூட மலைக்குச் செல்லுதல்,


वास्तुकर्म निवेशं च भरतागमनं तथा ।
प्रसादनं च रामस्य पितुश्च सलिलक्रियाम् ।।1.3.16।।

அங்கே ஒரு குடிசையை அமைத்து, அதில் வசித்தல், பரதன் வருகை, ராமனை ஆட்சிப்பொறுப்பு ஏற்குமாறு வேண்டுதல், தந்தையான தசரதருக்கு ஈமச்சடங்குகள் செய்தல்,


पादुकाग्र्याभिषेकं च नन्दिग्रामनिवासनम् ।
दण्डकारण्यगमनं विराधस्य वधं तथा ।।1.3.17।।

பரதன் ராமனின் பாதுகைகளுக்குப் பட்டாபிஷேகம் செய்தல், நந்திக்கிராமத்தில் வசித்தல், ராமன் தண்டகாரண்யத்துக்குச் செல்லுதல், அங்கே விராதனை வதைத்தல்,

 

दर्शनं शरभङ्गस्य सुतीक्ष्णेन समागमम् ।
अनसूयासहास्यामप्यङ्गरागस्य चार्पणम् ।।1.3.18।।

சரபங்கர், சுதீக்ஷ்ணர் போன்ற முனிவர்களைச் சந்தித்தல், சீதை அனசூயாவுடன் அன்போடு இருத்தல், சீதையின் உடம்பில் அவர் வாசனைத் திரவியங்களைத் தடவுதல்,

 

अगस्त्यदर्शनं चैव जटायोरभिसङ्गमम् ।
पञ्चवट्याश्च गमनं शूर्पणख्याश्च दर्शनम् ।।1.3.19।।

அகஸ்திய முனிவரைச் சந்தித்தல், ஜடாயுவைச் சந்தித்தல், பின்னர் பஞ்சவடிக்குச் செல்லுதல், சூர்ப்பனகையின் வருகை,


शूर्पणख्याश्च संवादं विरूपकरणं तथा ।
वधं खरत्रिशिरसोरुत्थानं रावणस्य च ।।1.3.20।।

சூர்ப்பனகையுடன் விவாதம், அவளுக்கு அங்கபங்கம் செய்வித்தல், கரன், த்ரிசிரஸ் ஆகியோரை வதைத்தல், இதைக் கேள்விப்பட்ட ராவணன் ராமனைப் பழி வாங்க எடுக்கும் முயற்சிகள்,


मारीचस्य वधं चैव वैदेह्या हरणं तथा ।
राघवस्य विलापं च गृध्रराजनिबर्हणम् ।।1.3.21।।

மாரீசனை வதம் செய்தல், வைதேகி ராவணனால் கவர்ந்து செல்லப்படுதல், ராமன் சோகத்தில் புலம்புதல், ஜடாயு கொல்லப்படுதல்,

 

कबन्धदर्शनं चापि पम्पायाश्चापि दर्शनम् ।
शबर्या: दर्शनं चैव हनूमद्दर्शनं तथा ।।1.3.22।।

(ராமன்)கபந்தனைப்பார்த்தல், பம்பை நதியைக் காணுதல், சபரிக்கு மோக்ஷம் கொடுத்தல் , ஹனுமானைச் சந்தித்தல்,

 

ऋश्यमूकस्य गमनं सुग्रीवेण समागमम् ।
प्रत्ययोत्पादनं सख्यं वालिसुग्रीवविग्रहम् ।।1.3.23।।
 

(ராமன்)ருஷ்யமூக மலைக்குச் சென்று சுக்கிரீவனைச் சந்தித்தல், அவனுக்குத் தன் மேல் நம்பிக்கை ஏற்படும் படி செய்தல், வாலி சுக்கிரீவரிடையே போர்,

 

वालिप्रमथनं चैव सुग्रीवप्रतिपादनम् ।
ताराविलापं समयं वर्षरात्रनिवासनम् ।।1.3.24।।

(ராமன்) வாலியை வதம் செய்தல், சுக்கிரீவனுக்குப் பட்டம் கட்டுதல், தாரையின் துயரம், சுக்கிரீவனுடன் நட்பு உடன்படிக்கை செய்து கொள்ளுதல், மழைக்காலம் முடிந்ததும் சீதையைத் தேடும் திட்டம்,

 

कोपं राघवसिंहस्य बलानामुपसङ्ग्रहम् ।
दिश: प्रस्थापनं चैव पृथिव्याश्च निवेदनम् ।।1.3.25।।

சீதையைத் தேடச் செல்வதில் ஏற்பட்ட தாமதத்தால் ரகு குலத்தின் சிங்கம் போன்ற ராமனுக்கு உண்டான் கோபம், வானரப்படை திரட்டிப் பல திசைகளிலும் சீதையைத் தேடிச் செல்லவும், திரும்பி வந்து செய்தி சொல்லவும் சுக்கிரீவன் ஆணையிடுதல்,

 

अङ्गुलीयकदानं च ऋक्षस्य बिलदर्शनम् ।
प्रायोपवेशनं चापि सम्पातेश्चापि दर्शनम् ।।1.3.26।।

ராமன் அடையாளத்துக்காகத் தன் மோதிரத்தை ஹனுமானுக்கு அளித்தல், ரிக்ஷ பர்வதத்தின் குகையைக் காணுதல், இறக்கும் வரை உண்ணாவிரதம் இருக்கத் தீர்மானித்தல், கழுகரசனாகிய சம்பாதியைச் சந்தித்தல்,



पर्वतारोहणं चापि सागरस्यापि लङ्घनम् ।
समुद्रवचनाच्चैव मैनाकस्य च दर्शनम् ।।1.3.27।।

ஹனுமான், மகேந்திர மலை மேல் ஏறி சமுத்திரத்தைத் தாண்டுதல், சமுத்திரத்தின் சொற்படி மைனாக மலையைப் பார்த்தல்,

सिंहिकायाश्च निधनं लङ्कामलयदर्शनम् ।
रात्रौ लङ्काप्रवेशं च एकस्याथ विचिन्तनम् ।।1.3.28।।
 

சிம்ஹிகையின் வதம், ஒரு மலை மேல் ஏறி லங்கை முழுவதையும் பார்த்தல், இரவு நேரத்தில் லங்கைக்குள் நுழைதல்,  பிறகு ஹனுமான் தனியாகச் சிந்தனையில் ஆழ்தல்,



दर्शनं रावणस्यापि पुष्पकस्य च दर्शनम् ।
आपानभूमिगमनमवरोधस्य दर्शनम्।।1.3.29।।
 

ராவணனைப் பார்த்தல், புஷ்பக விமானத்தையும் பார்த்தல், குடிவகைகள் ( பானங்கள் ) வைத்திருந்த அறைக்குச் செல்லுதல், பெண்கள் இருக்கும் அந்தப்புரத்தைப் பார்த்தல்,

 

अशोकवनिकायानं सीतायाश्चपि दर्शनम् ।
अभिज्ञानप्रदानं च रावणस्य च दर्शनम् ।।1.3.30।।

அசோக வனத்துள் புகுந்து சீதையைத் தரிசித்தல், அடையாளமாகக் கொண்டு வந்த மோதிரத்தை அவளுக்கு அளித்தல், ராவணனைப் பார்த்தல்,



राक्षसीतर्जनं चैव त्रिजटास्वप्नदर्शनम् ।
मणिप्रदानं सीताया वृक्षभङ्गं तथैव च ।।1.3.31।।
 

ராக்ஷஸிகள் சீதையை மிரட்டுதல், த்ரிஜடை தன் கனவைப்பற்றிக் கூறுதல், சீதை ஹனுமானிடம் சூடாமணியைக் கொடுத்தல், பின்னர் ஹனுமான் அசோகவனத்து மரங்களை அழித்தல்,



राक्षसीविद्रवं चैव किङ्कराणां निबर्हणम् ।
ग्रहणं वायुसूनोश्च लङ्कादाहाभिगर्जनम् ।।1.3.32।।
 

அரக்கிகள் அங்கிருந்து ஓடுதல், ராவணனின் ஆட்கள் ஹனுமானால் கொல்லப் படுதல், வாயு புத்திரனான ஹனுமான் ராவணனுடைய ஆட்களிடம் பிடிபடல், பின்னர் பயங்கரமான கர்ஜனையுடன் ஹனுமான் லங்கையை எரித்தல்,


प्रतिप्लवनमेवाथ मधूनां हरणं तथा ।
राघवाश्वासनं चापि मणिनिर्यातनं तथा ।।1.3.33।।

மீண்டும் சமுத்திரத்தைத் தாண்டி வந்து மதுவனத்தை சேதப்படுத்தி, ராமனைக்கண்டு, அவனுக்கு ஆறுதல் வழங்கி, சீதை கொடுத்த சூடாமணியையும் அவனிடம் கொடுத்தல்,



सङ्गमं च समुद्रेण नलसेतोश्च बन्धनम् ।
प्रतारं च समुद्रस्य रात्रौ लङ्कावरोधनम् ।।1.3.34।।
 

ராமன் சமுத்திர ராஜனைச் சந்தித்தல், நலனின் உதவியால் பாலம் கட்டுதல், அதன் மூலம் சமுத்திரத்தைக் கடத்தல், இரவில் லங்கையுள் நுழைதல்,



विभीषणेन संसर्गं वधोपायनिवेदनम् ।
कुम्भकर्णस्य निधनं मेघनादनिबर्हणम् ।।1.3.35।।

விபீஷணனின் சேர்க்கையால், ராவணனைக்கொல்லும் உபாயம் அறிதல், கும்பகர்ணனின் மரணம், மேக நாதனின் வதம்,

 

रावणस्य विनाशं च सीतावाप्तिमरे: पुरे ।
विभीषणाभिषेकं च पुष्पकस्य च दर्शनम् ।।1.3.36।।

ராவணனை அழித்துச் சீதையைத் திரும்பப் பெறுதல், எதிரிகளின் ராஜ்ஜியத்தில் விபீஷணனுக்குப் பட்டம் கட்டுதல், புஷ்பக விமானத்தைப் பார்த்தல்,


अयोध्यायाश्च गमनं भरतेन समागमम् ।
रामाभिषेकाभ्युदयं सर्वसैन्यविसर्जनम्।

स्वराष्ट्ररञ्जनं चैव वैदेह्याश्च विसर्जनम्।।1.3.37।।

அதன் மூலம், அயோத்தி அடைந்து, பரதனைச் சந்தித்து, ராம பட்டாபிஷேகம் முடிந்த பின்னர், வானர சைன்யத்தைத் திருப்பி அனுப்புதல், ராமன் தன் நாட்டு மக்களை மகிழ்ச்சியாக வைத்திருத்தல், சீதையைக் காட்டுக்கு அனுப்புதல்,


अनागतं च यत्किञ्चिद्रामस्य वसुधातले ।
तच्चकारोत्तरे काव्ये वाल्मीकिर्भगवानृषि: ।।1.3.38।।

ஆகியவற்றைப் பற்றித் தன் காவியத்தில் எழுதிய வால்மீகி மகரிஷி, பின்னர் நடக்கப் போகும் நிகழ்ச்சிகளை உத்தர காண்டத்தில் சேர்த்துக்கொண்டார்.



इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे तृतीयस्सर्ग:।।

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் மூன்றாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

 

***


ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 4


By B.Rama Devi

( வால்மீகி மகரிஷி ராமாயணத்தை24000 ஸ்லோகங்களில் இயற்றி, அதைக் குச லவர்களுக்குக் கற்பித்து, அவர்கள் தங்கள் இனிமையான குரலில் அதைப் பாடிப் பிரபலப் படுத்தும் படி ஆணையிடுகிறார். குச லவர்களும் ஊர் ஊராகப் போய் ராமாயண காவியத்தைப் பாடுகிறார்கள். ராமன் நடத்தும் அஸ்வமேத யாகத்திலும் பாடுகிறார்கள். ஸ்ரீ ராமர் அவர்களை அயோத்தி அரண்மனைக்கு அழைத்து, அங்கே அவர்கள் பாடுவதைக் கேட்கிறார். )

प्राप्तराज्यस्य रामस्य वाल्मीकिर्भगवानृषि:।
चकार चरितं कृत्स्नं विचित्रपदमात्मवान्।।1.4.1।।

ஆன்மீக ஞானம் நிறைந்த வால்மீகி மகரிஷி, தனது ராஜ்ஜியத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்ட ராமனின் முழு சரித்திரத்தையும், அற்புதமான வார்த்தைகளால் அழகுற இயற்றினார்.


चतुर्विंशत्सहस्राणि श्लोकानामुक्तवानृषि:।
तथा सर्गशतान्पञ्च षट्काण्डानि तथोत्तरम् ।।1.4.2।।

வால்மீகி, 24000 ஸ்லோகங்களையும், 500 ஸர்க்கங்களில் அமைத்து, அவற்றை, 6 காண்டங்களாகப் பிரித்ததல்லாமல், அதன் தொடர்ச்சியாக உத்தர காண்டத்தையும் இயற்றினார்.

 

कृत्वापि तन्महाप्राज्ञस्सभविष्यं सहोत्तरम्।
चिन्तयामास कोन्वेतत्प्रयुञ्जीयादिति प्रभु:।।1.4.3।।

இறந்த காலம், நிகழ் கால்ம, எதிர்காலம் ஆகிய முக்காலங்களையும் உணரும் சக்தி வாய்ந்த மஹா புத்திமானான வால்மீகி, உத்தர காண்டம் உள்பட ஏழு காண்டங்களையும் இயற்றியபின்னர், இதை யார் பாடி அரங்கேற்றுவார் என்று யோசிக்கலானார்.


तस्य चिन्तयमानस्य महर्षेर्भावितात्मन:।
अगृह्णीतां तत: पादौ मुनिवेषौ कुशीलवौ ।।1.4.4।।

அவ்வாறு  மரியாதைக்குரிய மகரிஷி யோசித்துக்கொண்டிருந்த போது, முனிவர்களின் வேடத்தில் இருந்த குச லவர்கள் அவருடைய பாதத்தைத் தொட்டு வணங்கினார்கள்.


कुशीलवौ तु धर्मज्ञौ राजपुत्रौ यशस्विनौ।
भ्रातरौ स्वरसम्पन्नौ ददर्शाश्रमवासिनौ ।।1.4.5।।

தர்மத்தைப்பற்றிய ஞானம் உள்ளவர்களும், புகழ் பெற்ற அரச குமாரர்களும், இனிமையான குரல் வளம் பெற்றவர்களுமான, அந்த குச லவ சகோதரர்களை, வால்மீகி பார்த்தார்.

 

स तु मेधाविनौ दृष्ट्वा वेदेषु परिनिष्ठितौ।
वेदोपबृंहणार्थाय तावग्राहयत प्रभु:।।1.4.6।।

குச லவர்கள், அபாரமான அறிவாற்றல் பெற்றிருப்பதையும், அவர்கள் வேதங்களில் சிறந்த பயிற்சி பெற்றிருப்பதையும் கண்ட மகரிஷி அவர்களுக்கு, அவர் இயற்றிய ராமாயணத்தைக் கற்பித்தார்.


काव्यं रामायणं कृत्स्नं सीतायाश्चरितं महत्।
पौलस्त्यवधमित्येव चकार चरितव्रत:।।1.4.7।।

தவத்தில் சிறந்த வால்மீகி, சீதையின் சரிதத்தையும், ராவணனின் வதத்தையும் உள்ளிட்ட ராமாயணம் முழுவதையும் இயற்றி முடித்தார்.

 

पाठ्ये गेये च मधुरं प्रमाणैस्त्रिभिरन्वितम्।
जातिभिस्सप्तभिर्बद्धं तन्त्रीलयसमन्वितम्।।1.4.8।।

रसैश्शृङ्गारकारुण्यहास्यवीरभयानकै:।
रौद्रादिभिश्च संयुक्तं काव्यमेतदगायताम्।।1.4.9।।

तौ तु गान्धर्वतत्त्वज्ञौ मूर्छनास्थानकोविदौ।
भ्रातरौ स्वरसम्पन्नौ गन्धर्वाविव रूपिणौ।।1.4.10।।

रूपलक्षणसम्पन्नौ मधुरस्वरभाषिणौ।
बिम्बादिवोद्धृतौ बिम्बौ रामदेहात्तथाऽपरौ।।1.4.11।।

மங்களகரமான உருவ அழகும், மிகவும் இனிமையான குரலும் உடைய அந்தக் குச லவர்கள், மனித வடிவில் வந்த கந்தர்வர்களை ஒத்திருந்தார்கள். ராமனின் பிரதிபிம்பம் போலக் காணப்பட்டார்கள். நினைவில் பதிந்து விடக்கூடிய இந்த ராமாயண காவியம், சொல்வதற்கு இனிமையாகவும், பாடுவதற்கு ஏற்றதாகவும் அமைந்திருந்தது. இந்த அருமையான காவியம் மூன்று காலங்களில் பாடக்கூடியதாகவும், ஏழு ஸ்வரங்களுக்குள் அமைந்ததாகவும், வாத்தியங்களுடன் இழைந்து பாடக்கூடியதாகவும் இருந்தது. இவை மட்டுமன்றி, ஸ்ருங்காரம், ஹாஸ்யம், காருண்யம்,  வீரம், பயானகம், ரௌத்ரம், முதலாய ஒன்பது சுவைகளையும் தன்னகத்தே கொண்டிருந்த இந்த அற்புதமான காவியத்தை குச லவர்கள் பாடினார்கள்.

 

तौ राजपुत्रौ कार्त्स्न्येन धर्म्यमाख्यानमुत्तमम्।
वाचोविधेयं तत्सर्वं कृत्वा काव्यमनिन्दितौ।।1.4.12।।

ऋषीणां च द्विजातीनां साधूनां च समागमे।
यथोपदेशं तत्त्वज्ञौ जगतुस्सुसमाहितौ।।1.4.13।।

அந்த இளவரசர்கள், தர்மத்தைச் சார்ந்து அமைந்திருந்த அந்த உத்தமமான காவியம் முழுவதையும், எந்தவிதக் குற்றம், குறைகளுமின்றி, வால்மீகியானவர் அவர்களுக்கு எவ்வாறு கற்பித்தாரோ, அதே போல, ரிஷிகளும், அந்தணர்களும் நிரம்பியிருந்த அந்த சபையில் பாடினார்கள்.

 

महात्मानौ महाभागौ सर्वलक्षणलक्षितौ।
तौ कदाचित्समेतानामृषीणां भावितात्मनाम्।

आसीनानां समीपस्थाविदं काव्यमगायताम्।।1.4.14।।

எல்லா லக்ஷணங்களும், கம்பீரமும் பொருந்திய அந்த இளவரசர்கள் மரியாதைக்குரிய ரிஷிகள் எல்லாரும் அமர்ந்திருந்த ஒரு சபையில், அவர்கள் முன்னே, இந்தக் காவியத்தைப் பாடினார்கள்.


तच्छ्रुत्वा मुनयस्सर्वे बाष्पपर्याकुलेक्षणा:।
साधुसाध्विति तावूचु: परं विस्मयमागता:।।1.4.15।।
 

அதை கேட்ட அந்த ரிஷிகள், மிகவும் ஆச்சரியப்பட்டுக் கண்களில் ஆனந்தக் கண்ணீருடன், “ மிக நன்று! மிக நன்று!” என்று அவர்களைப் பாராட்டினார்கள்.


ते प्रीतमनसस्सर्वे मुनयो धर्मवत्सला:।
प्रशशंसु: प्रशस्तव्यौ गायमानौ कुशीलवौ।।1.4.16।।

தர்மத்தின் மேல் பற்றுக் கொண்ட அந்த முனிவர்கள், மனம் மகிழ்ந்து, புகழ்ச்சிக்குத் தகுதியான வகையில் பாடிய குசலவர்களுக்குப் புகழாரம் சூட்டினார்கள்.


अहो गीतस्य माधुर्यं श्लोकानां च विशेषत:।
चिरनिर्वृत्तमप्येतत्प्रत्यक्षमिव दर्शितम्।।1.4.17।।

“ ஆஹா! இவர்கள் பாடுவது எவ்வளவு இனிமையாக இருக்கிறது! அதுவும் அந்தப் பாடல்கள்! எப்போதோ நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றியதானாலும், கண் முன்னே நடப்பது போல் இருக்கிறதே!” என்று பாராட்டினார்கள்.


प्रविश्य तावुभौ सुष्ठु भावं सम्यगगायताम्।
सहितौ मधुरं रक्तं सम्पन्नं स्वरसम्पदा।।1.4.18।।
 

அந்த இருவரும் சேர்ந்து மனத்தைக் கவரும் குரலில், சுஸ்வரமாகவும், இனிமையாகவும், மிகச் சிறப்பாகவும் பாடினார்கள்.

 

एवं प्रशस्यमानौ तौ तपश्श्लाघ्यैर्महात्मभि:।
संरक्ततरमत्यर्थं मधुरं तावगायताम्।।1.4.19।।

தவ சிரேஷ்டர்களால், இவ்வாறு புகழப்பட்டதில், குச லவர்கள் இன்னும் ஊக்கம் அடைந்து, முன்னைக் காட்டிலும் இனிமையாகப் பாடினார்கள்.

 

प्रीत: कश्चिन्मुनिस्ताभ्यां संस्थित: कलशं ददौ।
प्रसन्नो वल्कलं कश्चिद्ददौ ताभ्यां महायशा:।।1.4.20।।

அந்தச் சபையில் இருந்த ஒரு முனிவர் அவர்களுடைய இசையில் மகிழ்ந்து தன் நீர்க்கலசத்தைப் பரிசாக அளித்தார். இன்னுமொரு புகழ் பெற்ற முனிவர் தன்னிடமிருந்த மரவுரியை அளித்தார்.

 

आश्चर्यमिदमाख्यानं मुनिना सम्प्रकीर्तितम्।
परं कवीनामाधारं समाप्तं च यथाक्रमम्।।1.4.21।।

வால்மீகியால் முறைப்படி இயற்றப்பட்டுள்ள இந்தச் சிறப்பான காவியம், கவிஞர்களுக்கெல்லாம் ஆதாரமான நூலாக அமைந்துள்ளது.

 

अभिगीतमिदं गीतं सर्वगीतेषु कोविदौ।
आयुष्यं पुष्टिजनकं सर्वश्रुतिमनोहरम्।।1.4.22।।

प्रशस्यमानौ सर्वत्र कदाचित्तत्र गायकौ ।
रथ्यासु राजमार्गेषु ददर्श भरताग्रज:।।1.4.23।।

சுஸ்வரத்துடன் பாடுவதில் சிறந்த இந்த இரண்டு பாடகர்களும், இந்தக் காவியத்தைத் தெருக்களிலும், ராஜ மார்க்கங்களிலும் பாடிக்கொண்டு போனார்கள். கேட்பதற்கு இனிமையாகவும், உள்ளத்துக்கு ஊட்டம் வழங்குவதாகவும் இருந்த அந்தக் காவியத்தை அவர்கள் பாடிக் கொண்டிருந்த போது, ஒரு நாள் அரசரான  ராமர் அதைக் கேட்க நேர்ந்தது.

स्ववेश्म चानीय तदा भ्रातरौ स कुशीलवौ।
पूजयामास पूजार्हौ रामश्शत्रुनिबर्हण:।।1.4.24।।

எதிரிகளை அழிக்கும் திறன் வாய்ந்த ராமர், பூஜிக்கத்தகுந்த அந்த குச லவர்களைத் தன் அரண்மனைக்கு அழைத்து வரச் செய்து அவர்களுக்குத் தக்க மரியாதை செய்தார். 


आसीन: काञ्चने दिव्ये स च सिंहासने प्रभु:।
उपोपविष्टस्सचिवैर्भ्रातृभिश्च परन्तप:।।1.4.25।।

அரசராகிய ராமர், மந்திரிகளாலும், சகோதரர்களாலும் சூழப்பட்டுத் தங்கத்தினாலான சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார்.


दृष्ट्वा तु रूपसम्पन्नौ तावुभौ नियतस्तथा।
उवाच लक्ष्मणं रामश्शत्रुघ्नं भरतं तदा।।1.4.26।।

சுய கட்டுப்பாடுள்ள ராமர், மிகுந்த அழகுடைய அந்த சகோதரர்களைப்பார்த்துத் தன் சகோதரர்களான, லக்ஷ்மணன், சத்ருக்னன், பரதன் ஆகியோரிடம்,

 

श्रूयतामिदमाख्यानमनयोर्देववर्चसो:।
विचित्रार्थपदं सम्यग्गायकौ तावचोदयत्।।1.4.27।।

“சொல்லும் பொருளும் மிக அழகாக அமைந்துள்ள இந்தக் காவியத்தைக் கேட்போம்” என்று கூறி, தேவர்களைப் போல ஒளி பொருந்திய குச லவர்களிடம் அந்தக் காவியத்தைப் பாடுமாறு வேண்டினார்.

 

तौ चापि मधुरं रक्तं स्वञ्चितायतनिस्वनम् ।
तन्त्रीलयवदत्यर्थं विश्रुतार्थमगायताम् ।।1.4.28।।

அவர்களும், தங்கள் கணீரென்ற இனிமையான குரலில், வாத்தியக்கருவிகளுடன் இணைந்து, பொருளாழம் நிறந்த அந்தக் காவியத்தைக் கேட்போர் மனம் கவரும் விதமாகப் பாடினார்கள்.

 

ह्लादयत्सर्वगात्राणि मनांसि हृदयानि च।
श्रोत्राश्रयसुखं गेयं तद्बभौ जनसंसदि।।1.4.29।।

அவர்களுடைய பாடல் அந்தச் சபையில் இருந்தோர்களின் காதுக்கு இனிமையாக இருந்தது மட்டுமன்றி, அவர்களின் மனம், நெஞ்சம் என்று, அனைத்துப் புலன்களையும் மகிழ்வித்தது.


इमौ मुनी पार्थिवलक्षणान्वितौ
कुशीलवौ चैव महातपस्विनौ।

ममापि तद्भूतिकरं प्रवक्ष्यते
महानुभावं चरितं निबोधत।।1.4.30।।

அந்தச் சபையினரைப் பார்த்து ராமர் கூறினார், “ குசனும் லவனும், அரச லக்ஷணங்களுடன் விளங்கிய போதிலும், மகா தபஸ்விகள். எனக்கும் மிகச்சிறந்த அனுபவத்தைக் கொடுத்து, நன்மை பயக்கும் இந்தக் காவியத்தை அவர்கள் பாடுவதைக் கவனத்துடன் கேளுங்கள். “

 
ततस्तु तौ रामवच:प्रचोदितावगायतां मार्गविधानसम्पदा।
स चापि राम: परिषद्गतः शनैर्बुभूषयासक्तमना बभूव।।1.4.31।।

ராமரால் இவ்வாறு உற்சாகப்படுத்தப்பட்ட குச லவர்கள், பரம்பரையான முறைப்படி அந்தச் சபையின் முன்னே பாடத் தொடங்கினார்கள். ராமரும், மன அமைதி வேண்டி அவர்களின் பாடலில் முழு கவனத்தையும் செலுத்தினார்.

 

.
इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे चतुर्थस्सर्ग:।।


இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் நான்காவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

                                                   ********


ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 5

By B Rama Devi

 

(தசரதனின் ராஜ்ஜியமும், அயோத்தியின் மாட்சியும்)


सर्वा पूर्वमियं येषामासीत्कृत्स्ना वसुन्धरा ।
प्रजापतिमुपादाय नृपाणां जयशालिनाम् ।।1.5.1।।

முற்காலத்தில், இந்த பூமி முழுவதும் பிரஜாபதியில் தொடங்கிப் பல வெற்றி நிறந்த அரசர்களால் ஆளப்பட்டு வந்தது.

 

येषां स सगरो नाम सागरो येन खानित: ।
षष्टि: पुत्रसहस्राणि यं यान्तं पर्यवारयन् ।।1.5.2।।

அவர்களுக்குள், ஸகரர் என்ற ஒரு அரசர் பிரம்மாண்டமான ஒரு கடலைத் தோண்ட ஏற்பாடு செய்தார். (ஆகவே தான் கடல் ஸாகரம் எனப்பட்டது.) அவருடைய 60000 புதல்வர்களும் அவர் செல்லுமிடங்களெல்லாம் பின் தொடர்ந்தார்கள்.

 

इक्ष्वाकूणामिदं तेषां राज्ञां वंशे महात्मनाम् ।
महदुत्पन्नमाख्यानं रामायणमिति श्रुतम् ।।1.5.3।।

இக்ஷ்வாகு வம்சத்தில் தோன்றிய அப்படிப்பட்ட மகாத்மாக்களான அரசர்களின் குலத்தில் தான் ராமாயணம் என்ற புகழ்பெற்ற, இந்தக் காவியம் பிறந்தது.

 

तदिदं वर्तयिष्यामि सर्वं निखिलमादित: ।
धर्मकामार्थसहितं श्रोतव्यमनसूयया ।।1.5.4।।

அறம், பொருள், இன்பம் ஆகிய புருஷார்த்தங்களைக் கொடுக்கக் கூடிய அந்தக் காவியத்தை முதலில் இருந்து முழுமையாகச் சொல்லப் போகிறேன். எந்த விதமான எதிர்மறை எண்ணங்களும் இன்றி, அதைக்கேட்பீர்களாக!


कोसलो नाम मुदितस्स्फीतो जनपदो महान् ।
निविष्टस्सरयूतीरे प्रभूतधनधान्यवान् ।।1.5.5।।


ஸரயு நதிக்கரையில், தன தான்யங்களால் செழிப்புற்ற, செல்வங்கள் நிறைந்த, கோசலம் என்ற ஒரு சிறந்த தேசம் அமைந்திருந்தது.

 

अयोध्या नाम नगरी तत्रासील्लोकविश्रुता ।
मनुना मानवेन्द्रेण या पुरी निर्मिता स्वयम् ।।1.5.6।।

அந்தக் கோசல நகரில், மனிதர்களின் தலைவனான மனுவால் நிர்மாணிக்கப்பட்ட, அயோத்தி என்னும் புகழ்பெற்ற நகரம் இருந்தது.


आयता दश च द्वे च योजनानि महापुरी ।
श्रीमती त्रीणि विस्तीर्णा सुविभक्तमहापथा ।।1.5.7।।

மிகுந்த அழகு வாய்ந்த, நன்கு அமைக்கப்பட்ட சாலைகளுடைய அந்த மகாநகரம் 12 யோஜனை நீளமும்( 96 மைல்கள்) மூன்று யோஜனை அகலமும் (24 மைல்கள்) கொண்டிருந்தது.

 

राजमार्गेण महता सुविभक्तेन शोभिता ।
मुक्तपुष्पावकीर्णेन जलसिक्तेन नित्यश: ।।1.5.8।।

தினந்தோறும் நீரூற்றி, நன்கு கவனிக்கப்பட்ட, மலர்ந்த பூக்கள் நிறைந்த பூச்செடிகளை உடைய அந்த ராஜ மார்க்கம் மிகவும் அழகாக இருந்தது.

 

तां तु राजा दशरथो महाराष्ट्रविवर्धन: ।
पुरीमावासयामास दिवं देवपतिर्यथा ।।1.5.9।।

அந்தத் தேசத்தின் செழிப்பை மேலும் அதிகரிப்பதில், ஈடுபட்டிருந்த தசரதன் என்னும் அந்நாட்டு மன்னன், தேவர்களின் அரசனாகிய இந்திரன் போல் விளங்கினான்.

 

कवाटतोरणवतीं सुविभक्तान्तरापणाम् ।
सर्वयन्त्रायुधवतीमुपेतां सर्वशिल्पिभि: ।।1.5.10।।

தோரணங்கள் கட்டப்பட்ட வளைவான வெளிக்கதவுகளும், நன்றாக அமைக்கப்பட்ட கடைவீதிகளும் கொண்ட அந்த நகரத்தில் எல்லாவிதமான உபகரணங்களையும், ஆயுதங்களையும் உபயோகிப்பதில் கைதேர்ந்தவர்கள் இருந்தார்கள்.


सूतमागधसम्बाधां श्रीमतीमतुलप्रभाम् ।
उच्चाट्टालध्वजवतीं शतघ्नीशतसङ्कुलाम् ।।1.5.11।।

ஒப்புவமையில்லாத சிறப்புகள் வாய்ந்த அந்த நகரத்தில் அரசர்களை அற்புதமாகப்புகழ்ந்து பாடும் கவிஞர்கள் இருந்தார்கள். கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட கம்பீரமான கட்டிடங்களும், நூற்றுக்கணக்கான ‘ஷதங்கி’ என்னும் பீரங்கிகளும் அந்த நகரத்தில் இருந்தன.

 

वधूनाटकसङ्घैश्च संयुक्तां सर्वत: पुरीम् ।
उद्यानाम्रवणोपेतां महतीं सालमेखलाम् ।।1.5.12।।

ஏராளமான நடன மங்கையரையும், நடிகர்களையும், கொண்ட அந்த நகரத்தின் எல்லாப் பக்கங்களிலும், தோட்டங்களும், மாந்தோப்புகளும் இருந்ததோடன்றிப், பெரிய சால மரங்கள் அந்நகருக்கு அரணாக அமைந்திருந்தன.

 

दुर्गगम्भीरपरिघां दुर्गामन्यैर्दुरासदाम् ।
वाजिवारणसम्पूर्णां गोभिरुष्ट्रै: खरैस्तथा ।।1.5.13।।

அந்த நகரம், கம்பீரமான கோட்டைகளாலும், ஆழமான அகழிகளாலும்,  பாதுகாக்கப்பட்டு வந்தது.  வெளியார் யாரும் உள்ளே புகமுடியாத அந்த நகரத்தில், குதிரைகளும், யானைகளும், பசுக்களும், ஒட்டகங்களும், கழுதைகளும் ஏராளமாக இருந்தன.


सामन्तराजसङ्घैश्च बलिकर्मभिरावृताम् ।
नानादेशनिवासैश्च वणिग्भिरुपशोभिताम् ।।1.5.14।।

அரசனுக்குக் கப்பம் கட்ட வேண்டி வந்து குழுமியுள்ள அண்டை நாட்டு அரசர்களாலும், பிற நாட்டில் இருந்து வாணிபம் செய்வதற்காக வந்துள்ள வணிகர்களாலும், அந்த நகரம் மேலும் அழகு பெற்று விளங்கியது.


प्रासादै रत्नविकृतै: पर्वतैरुपशोभिताम् ।
कूटागारैश्च सम्पूर्णामिन्द्रस्येवामरावतीम् ।।1.5.15।।

இந்திரனின் ராஜ்ஜியமான அமராவதியைப் போன்ற, அந்த நகரம், ரத்தினங்கள் பதிக்கப்பட்ட அரண்மனைகளாலும், நெடிதுயர்ந்த மலைகளாலும் அழகு பெற்றிருந்தது.


चित्रामष्टापदाकारां नरनारीगणैर्युताम् ।
सर्वरत्नसमाकीर्णां विमानगृहशोभिताम् ।।1.5.16।।

எழு நிலை மாடங்களுடைய வீடுகளுடனும், அதில் வசிக்கும் ஆடவர், பெண்டிர் ஆகியோருடனும், விலை உயர்ந்த மணிகள் நிறைந்த அந்த நகரம் ‘சொக்கட்டான்’ விளையாட்டிற்கான பலகையைப் போல இருந்தது.

 

गृहगाढामविच्छिद्रां समभूमौ निवेशिताम् ।
शालितण्डुलसम्पूर्णामिक्षुकाण्डरसोदकाम् ।।1.5.17।।
 

அங்கிருந்த வீடுகள் எல்லாம் சம தளத்தில் கட்டப்பட்டிருந்தன. எல்லா வீடுகளிலும் மக்கள் நிறைந்திருந்தனர். எந்த இடமும் காலியாக விடப்படவில்லை. எங்கும் அரிசி ஏராளமாகச் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. நீரின் சுவையோ, கரும்பின் சாற்றை ஒத்திருந்தது.


दुन्दुभीभिर्मृदङ्गैश्च वीणाभि: पणवैस्तथा ।
नादितां भृशमत्यर्थं पृथिव्यां तामनुत्तमाम् ।।1.5.18।।

துந்துபிகள், மிருதங்கங்கள், வீணைகள், பணவங்கள் ஆகியவற்றின் ஒலியுடன் கூடிய அயோத்தி நகரத்தைக் காட்டிலும் சிறந்த நகரம் இந்த உலகத்தில் இருக்கவில்லை.


विमानमिव सिद्धानां तपसाधिगतं दिवि ।
सुनिवेशितवेश्मान्तां नरोत्तमसमावृताम् ।।1.5.19।।

 

ஸ்வர்க்கத்தில், தவத்தில் சிறந்த சித்தர்களால், மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்ட வான ஊர்தியைப் போல, மிகச்சிறந்த மனிதர்கள் வாழ்ந்த அந்த நகரம் விளங்கியது.



ये च बाणैर्न विध्यन्ति विविक्तमपरापरम् ।
शब्दवेध्यं च विततं लघुहस्ता विशारदा: ।।1.5.20।।

सिंहव्याघ्रवराहाणां मत्तानां नर्दतां वने ।
हन्तारो निशितैश्शस्त्रैर्बलाद्बाहुबलैरपि ।।1.5.21।।

तादृशानां सहस्रैस्तामभिपूर्णां महारथै: ।
पुरीमावासयामास राजा दशरथस्तदा ।।1.5.22।।
 

அந்த நகரத்தில் வில் வித்தையில் தேர்ந்த, ஆயிரக்கணக்கான மஹாரதர்கள் வசித்து வந்தார்கள். அவர்கள் தனியாக இருப்பவரையோ, தன்னைக் காப்பாற்றிக்கொள்ள இயலாதவர்களையோ, தப்பி ஓடுபவர்களையோ, (பின் தொடரமுடிந்தாலும்)  தாக்க மாட்டார்கள். தன் வசம் இழந்த சிங்கம், புலி, காட்டுப்பன்றிகள் போன்ற மிருகங்களைத் தங்கள் ஆயுதங்களாலும், கைகளில் வலிமையாலும் தாக்கிக் கொல்வார்கள். 

அப்படிப்பட்ட அயோத்தி நகரத்தில் தசரத மன்னர் வசித்து வந்தார்.

 

तामग्निमद्भिर्गुणवद्भिरावृतां
द्विजोत्तमैर्वेदषडङ्गपारगै: ।

सहस्रदैस्सत्यरतैर्महात्मभि
र्महर्षिकल्पै ऋषिभिश्च केवलै: ।।1.5.23।।

அயோத்தி நகரமானது அக்கினி வேள்வியைத் தொடர்ந்து செய்யும் அந்தணர்களாலும், வேத வேதாங்கங்களில் தேர்ச்சி பெற்ற அறிஞர்களாலும், ரிஷிகளாலும் நிரம்பி இருந்தது. அம்மக்கள் தாராள மனமுடையவர்களாகவும், உண்மையானவர்களாகவும், கண்ணியமானவர்களுமாக இருந்தார்கள்.

 

इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे पञ्चमस्सर्ग:।।

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் ஐந்தாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

                                                       ***    


ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 6

By B Rama Devi

 

(தசரத மன்னரின் ஆட்சியில், அயோத்தியின் செழிப்பு, வசதிகள் ஆகியவற்றைப் பற்றிய வர்ணனை)


तस्यां पुर्यामयोध्यायां वेदवित्सर्वसङ्ग्रह: ।
दीर्घदर्शी महातेजा: पौरजानपदप्रिय: ।।1.6.1।।

इक्ष्वाकूणामतिरथो यज्वा धर्मरतो वशी ।
महर्षिकल्पो राजर्षिस्त्रिषु लोकेषु विश्रुत: ।।1.6.2।।

बलवान्निहतामित्रो मित्रवान्विजितेन्द्रिय: ।
धनैश्च सङ्ग्रहैश्चान्यैश्शक्रवैश्रवणोपम: ।।1.6.3।।

यथा मनुर्महातेजा लोकस्य परिरक्षिता ।
तथा दशरथो राजा वसञ्जगदपालयत् ।। 1.6.4।।

வேதங்களை நன்கு கற்றறிந்தவரும், தீர்க்கதரிசியும், மிகுந்த ஒளி பொருந்தியவரும், நகரங்களிலும், கிராமங்களிலும் வாழும் மக்களுக்கு மிகவும் பிரியமானவரும், இக்ஷ்வாகு வம்சத்து அரசர்களுக்குள்ளே, பல மஹாரதர்களுடன் தனியாக யுத்தம் செய்து வெல்லக்கூடிய அதிரதரும், பல வேள்விகளைச் செய்தவரும், தர்மவழியில் செல்பவரும், தன் பிரஜைகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவரும், பெரிய ரிஷிகளுக்கு ஒப்பானவரும், ராஜரிஷியானவரும், மூவுலகங்களிலும், புகழப்பெற்றவரும், வலிமை கொண்டவரும், எதிரிகளை அழிப்பவரும், நிறைய நண்பர்களை உடையவரும், புலன்களை வென்றவரும், பணமும், பிற செல்வங்களும் ஏராளமாகச் சேர்த்து, இந்திரனுக்கும், குபேரனுக்கும் இணையாகக் கருதப்பட்டவருமான தசரத மன்னர், அந்த அயோத்தியில் இருந்து கொண்டு, இந்த உலக முழுவதையும் ஆண்டு வந்தார்.

 

तेन सत्याभिसन्धेन त्रिवर्गमनुतिष्ठता ।
पालिता सा पुरी श्रेष्ठा इन्द्रेणेवामरावती ।।1.6.5।।

வாக்குத் தவறாதவராய், அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று புருஷார்த்தங்களையும் பின்பற்றி, மனு வடித்த நீதியின் படி, இந்திரன் அமராவதியை ஆள்வதைப் போல, தசரத மன்னன் அயோத்தியை ஆண்டு வந்தார்.


तस्मिन्पुरवरे हृष्टा धर्मात्मानो बहुश्रुता: ।
नरास्तुष्टा धनैस्स्वैस्स्वैरलुब्धास्सत्यवादिन: ।।1.6.6।।

அந்தச் சிறந்த நகரத்தில் வசித்த மக்கள், மகிழ்ச்சியுடனும், தர்மத்தைப் பின்பற்றுபவர்களாகவும், கற்றறிந்த அறிஞர்களாகவும், தங்கள் தங்கள் உடைமைகளுடன் திருப்தியாகவும், பேராசையில்லாமலும், வாக்குத் தவறாதவர்களாகவும் திகழ்ந்தனர்.



नाल्पसन्निचय: कश्चिदासीत्तस्मिन् पुरोत्तमे ।
कुटुम्बी यो ह्यसिद्धार्थोऽगवाश्वधनधान्यवान् ।।1.6.7।।

அந்தச் சிறந்த நகரத்தில், அதிகச் செல்வம் இல்லாதவர்களோ, அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை முறைப்படி பின்பற்றாதவர்களோ, தானியங்கள், கால் நடைச் செல்வங்கள், குதிரைகள் ஆகியவை இல்லாதவர்களோ, எவருமே இல்லை.

 

कामी वा न कदर्यो वा नृशंस: पुरुष: क्वचित् ।
द्रष्टुं शक्यमयोध्यायान्नाविद्वान्न च नास्तिक: ।।1.6.8।।

காமம் நிறைந்தவர்களையோ, கருமிகளையோ, கொடூரமானவர்களையோ, கல்வி கற்காதவர்களையோ, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களையோ, அயோத்தியில் காணவே முடியாது.


सर्वे नराश्च नार्यश्च धर्मशीलास्सुसंयता: ।
उदिताश्शीलवृत्ताभ्यां महर्षय इवामला: ।।1.6.9।।

அந்த நகரத்து ஆடவரும், பெண்டிரும், தர்மத்தின் வழி நடப்பவர்களாகவும், சுய கட்டுப்பாடு உடையவர்களாகவும், நல்ல நடத்தை உள்ளவர்களாகவும், தூய்மையான மகரிஷிகளைப் போல வாழ்ந்தார்கள்.

 

नाकुण्डली नामकुटी नास्रग्वी नाल्पभोगवान् ।
नामृष्टो नानुलिप्ताङ्गो नासुगन्धश्च विद्यते ।।1.6.10।।

காதணிகள் அணியாமலும், கிரீடம் இன்றியும், மாலைகள் அணியாமலும், உடலுக்கு, தூய்மை இன்றியும், வாசனைத் தைலங்கள் தடவாமலும், அந்த நகரத்தில் எவருமே இருக்கவில்லை..


नामृष्टभोजी नादाता नाप्यनङ्गदनिष्कधृक् ।
नाहस्ताभरणो वाऽपि दृश्यते नाप्यनात्मवान् ।।1.6.11।।

அந்த நகரத்தில், முழு திருப்தி இல்லாமல் உணவு உண்ணுபவர்களோ, பிறருக்குத் தானம் செய்யாதவர்களோ, கைகள், கழுத்துகளில் ஆபரணங்கள் அணியாதவர்களோ, தன்னைக் கட்டுக்குள் வைக்காதவர்களோ, யாரும் இருக்கவில்லை.



नानाहिताग्निर्नायज्वा न क्षुद्रो वा न तस्कर: ।
कश्चिदासीदयोध्यायान्न च निर्वृत्तसङ्कर: ।।1.6.12।।

அந்த அயோத்தியில் அக்கினி வேள்விகளும், பிற வேள்விகளும் செய்யாதவர்களோ, கீழான எண்ணம் கொண்டவர்களோ, திருடர்களோ, வர்ணக் கலப்பினால் பிறந்தவர்களோ, யாரும் இருக்கவில்லை.

.

स्वकर्मनिरता नित्यं ब्राह्मणा विजितेन्द्रिया: ।
दानाध्ययनशीलाश्च संयताश्च परिग्रहे ।।1.6.13।।

அந்தணர்கள், தினந்தோறும் தங்கள் கடமைகளைச் செய்பவர்களாகவும், புலன்களை வென்றவர்களாகவும், தானம் செய்வதில் விருப்பம் உடையவர்களாகவும், தானாகவே, கல்வி கற்பதில் நாட்டம் உள்ளவர்களாகவும், பிறர் கொடுக்கும் தானத்தையும், அளவோடு பெற்றுக் கொள்பவர்களாகவும், குடும்ப வாழ்க்கையில் மட்டுமே இன்பம் காண்பவர்களாகவும் இருந்தார்கள்.


न नास्तिको नानृतको न कश्चिदबहुश्रुत: ।
नासूयको न चाऽशक्तो नाविद्वान्विद्यते तदा ।।1.6.14।।

அந்தக் காலத்தில், அந்நகரத்தில், கடவுள் நம்பிக்கை அற்றவரோ, பொய் சொல்பவரோ, சாஸ்திரங்களை அதிகம் கற்காதவரோ, பொறாமை பிடித்தவரோ, வலிமையற்றவரோ, கல்வி அறிவில்லாதவரோ, யாருமே இருக்கவில்லை.


नाषडङ्गविदत्रासीन्नाव्रतो नासहस्रद: ।
न दीन: क्षिप्तचित्तो वा व्यथितो वाऽपि कश्चन ।।1.6.15।।

 

அங்கே, ( சிக்ஷா, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் ஆகிய ) ஆறு வேதாங்கங்களைக்  கற்காதவர்களும், விரதங்களை அனுசரிக்காதவர்களும், ஆயிரக்கணக்கில் தானம் செய்யாதவர்களும், துன்பத்தில் உழல்பவர்களும், நிலையான மன நிலை இல்லாதவர்களும், எரிச்சல் படுபவர்களும் இல்லவே இல்லை.


कश्चिन्नरो वा नारी वा नाश्रीमान्नाप्यरूपवान् ।
द्रष्टुं शक्यमयोध्यायां नापि राजन्यभक्तिमान् ।।1.6.16।।

அயோத்தியில், ஆண்களிலோ, பெண்களிலோ, செல்வம் இல்லாதவர்களோ, அழகில்லாதவர்களோ, அரசன் மீது பக்தி இல்லாதவர்களோ, ஒருவர் கூடக் காணக் கிடைக்க மாட்டார்கள்.

 

वर्णेष्वग्र्यचतुर्थेषु देवतातिथिपूजका:।
कृतज्ञाश्च वदान्याश्च शूरा विक्रमसंयुता: ।।1.6.17।।

दीर्घायुषो नरास्सर्वे धर्मं सत्यं च संश्रिता: ।
सहिता: पुत्रपौत्रैश्च नित्यं स्त्रीभि: पुरोत्तमे ।।1.6.18।।

நகரங்களுள் சிறந்ததான அயோத்தியில், முதல் நான்கு வர்ணத்தினரும், கடவுளை வழிபடுபவர்களாகவும், விருந்தோம்புபவராகவும் இருந்தார்கள். நன்றி மிகுந்தவர்களாய், தாராள மனமுடையவர்களாய், வீரமும், வலிமையும் பொருந்தியவர்களாய், தர்மத்தையும், சத்தியத்தையும் பின்பற்றித் தன் புத்திர பௌத்திரர்களுடனும், மனைவியருடனும், நீண்ட காலம் இன்புற்று வாழ்ந்து வந்தனர்.


क्षत्रं ब्रह्ममुखं चासीद्वैश्या: क्षत्रमनुव्रता: ।
शूद्रास्स्वधर्मनिरतास्त्रीन्वर्णानुपचारिण: ।।1.6.19।।

க்ஷத்திரியர்கள் அந்தணர்களை மதித்தார்கள்; வைசியர்கள், க்ஷத்திரியர்களைப் பின்பற்றினார்கள். சூத்திரர்கள் இந்த மூன்று வர்ணத்தினருக்கும் உதவியாகத் தன் கடமைகளைச் செய்து வந்தார்கள்.


सा तेनेक्ष्वाकुनाथेन पुरी सुपरिरक्षिता ।
यथा पुरस्तान्मनुना मानवेन्द्रेण धीमता ।।1.6.20।।

முன்னர், மனிதர்களுள் மேன்மையானவரும் மிகச் சிறந்த புத்திமானுமான மனுஅரசர் எவ்வாறு ஆட்சி செய்து வந்தாரோ, அவ்வாறே, இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்த தசரதரும், நீதி தவறாமல், தனது நாட்டை ஆண்டு வந்தார்.

 

योधानामग्निकल्पानां पेशलानाममर्षिणाम् ।
सम्पूर्णा कृतविद्यानां गुहा केसरिणामिव ।।1.6.21।।

குகைகளில் சிங்கங்கள் இருப்பது போல, அயோத்தியில் வீரர்கள் இருந்தார்கள். எரியும் தழல் போன்று ஒளி வீசும் அவ்வீரர்கள், திறமையும், மன உறுதியும், போர்க்கலையில் நிபுணத்துவமும் பெற்றிருந்தார்கள்.

काम्भोजविषये जातैर्बाह्लीकैश्च हयोत्तमै: ।
वनायुजैर्नदीजैश्च पूर्णा हरिहयोत्तमै:।।1.6.22।।

அந்த நகரம், காம்போஜம், பாஹ்லிகம், வனயு, சிந்து ஆகிய பகுதிகளில் இருந்து பெறப்பட்ட, இந்திரனின் குதிரையான உச்சிஸ்ரவஸ் போன்ற அற்புதமான குதிரைகளால் நிரம்பியிருந்தது.

 

विन्ध्यपर्वतजैर्मत्तै: पूर्णा हैमवतैरपि ।
मदान्वितैरतिबलैर्मातङ्गै: पर्वतोपमै: ।।1.6.23।।

ऐरावतकुलीनैश्च महापद्मकुलैस्तथा ।
अञ्जनादपि निष्पन्नैर्वामनादपि च द्विपैः ।।1.6.24।।

அந்நகரம் விந்திய மலையில் பிறந்த மதம் பிடித்த யானைகளாலும், இமய மலையில் பிறந்த, மலை போன்ற வலிமை நிறைந்த யானைகளாலும், ஐராவதம், மஹாபத்மம், அஞ்சனா, வாமனா ஆகிய புகழ் பெற்ற யானைகளின் இனத்தைச் சேர்ந்த யானைகளாலும், நிரம்பி இருந்தது.

 

भद्रैर्मन्द्रैर्मृगैश्चैव भद्रमन्द्रमृगैस्तथा।
भद्रमन्द्रैर्भद्रमृगैर्मृगमन्द्रैश्च सा पुरी।

नित्यमत्तैस्सदा पूर्णा नागैरचलसन्निभै:।।1.6.25।।

இவை மட்டுமன்றி, அயோத்தி நகரமானது, பத்ர, மந்த்ர, ம்ருக ஆகிய யானைகளின் கலப்பினங்களான, மலையை நிகர்த்த, மதம் பிடித்த யானைகளால் நிறைந்து இருந்தது.

 

सा योजने च द्वे भूय: सत्यनामा प्रकाशते ।
यस्यां दशरथो राजा वसन् जगदपालयत् ।।1.6.26।।

தசரதரால் ஆளப்பட்ட இந்த நகரம் ( 2 யோஜனை ) 16 மைல் விஸ்தீரணம் உடையதாகத் தன் பெயரின் பெருமையைப் பறைசாற்றிக் கொண்டிருந்தது.

 

तां पुरीं स महातेजा राजा दशरथो महान् ।
शशास शमितामित्रो नक्षत्राणीव चन्द्रमा: ।।1.6.27।।

வலிமை மிக்க தசரத மன்னர், தன் திறமையால், எதிரிகளை அடக்கிச் சந்திரன் நக்ஷத்திரங்களை ஆட்சி செய்வது போல் அயோத்தியை ஆண்டு வந்தார்.

 

तां सत्यनामां दृढतोरणार्गलां
गृहैर्विचित्रैरुपशोभितां शिवाम् ।

पुरीमयोध्यां नृसहस्रसङ्कुलां
शशास वै शक्रसमो महीपति: ।।1.6.28।।

வலிமையான கதவுகளும், பூட்டுகளும், அழகிய வீடுகளும், ஆயிரக்கணக்கான மனிதர்களும் கொண்ட, தன் பெயருக்கேற்ற படி, ‘வெல்ல முடியாத’ நகரமான அயோத்தியை, இந்திரனுக்கு நிகரான தசரத மன்னர்

ஆண்டு வந்தார்.


इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे षष्ठस्सर्ग:।।

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் ஆறாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

                                                  ********


ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 7


By B Rama Devi

( தசரத மன்னரின் அரசவை மற்றும் அமைச்சர்களின் சிறப்பு)

 

तस्यामात्या गुणैरासन्निक्ष्वाकोस्तु महात्मन: ।
मन्त्रज्ञाश्चेङ्गितज्ञाश्च नित्यं प्रियहिते रता: ।।1.7.1।।


இக்ஷ்வாகு வம்சத்து அரசர்களின் அமைச்சர்கள் யாவரும், நற்குணங்கள் நிறைந்தவர்களாகவும், நல்ல புத்திமதிகள் சொல்லக்கூடியவர்களாகவும், ஒருவரின் முகத்தைப் பார்த்தே அவர் மனதில் ஓடக்கூடிய எண்ணங்களைக் கணிக்கக் கூடியவர்களாகவும், அரசனுக்கு

 நன்மை செய்பவர்களாகவும் அமைந்திருந்தனர்.

 

अष्टौ बभूवुर्वीरस्य तस्यामात्या यशस्विन: ।
शुचयश्चानुरक्ताश्च राजकृत्येषु नित्यश: ।।1.7.2।।

வலிமையும், புகழும் பொருந்திய தசரதனுக்குத் தூய நடத்தை உள்ளவர்களும், எப்பொழுதும் அரசனுடைய காரியங்களை நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுபவர்களுமான, எட்டு அமைச்சர்கள் இருந்தனர்.

 

 

धृष्टिर्जयन्तो विजयस्सिद्धार्थो ह्यर्थसाधक: ।
अशोको मन्त्रपालश्च सुमन्त्रश्चाष्टमोऽभवत् ।।1.7.3।।

அவர்கள், த்ருஷ்டி, ஜயந்தன், விஜயன், சித்தார்த்தன், அர்த்தஸாதகன், அசோகன், மந்த்ரபாலன், சுமந்திரன் ஆகியோர்.


ऋत्विजौ द्वावभिमतौ तस्याऽऽस्तामृषिसत्तमौ ।
वसिष्ठो वामदेवश्च मन्त्रिणश्च तथापरे ।।1.7.4।।

தசரதனுக்கு, வசிஷ்டர், வாமதேவர் என்னும் இரண்டு மிகச்சிறந்த ரிஷிகள், குடும்ப புரோகிதர்களாக இருந்தனர். இவர்களைத்தவிர,  நல்வழி கூறுவோர் வேறு சிலரும் இருந்தனர்.


विद्याविनीता ह्रीमन्त: कुशला नियतेन्द्रिया: ।
श्रीमन्तश्च महात्मानश्शास्त्रज्ञा दृढविक्रमा: ।।1.7.5।।

कीर्तिमन्त: प्रणिहिता: यथावचनकारिण: ।
तेज: क्षमायश:प्राप्ता स्मितपूर्वाभिभाषिण: ।।1.7.6।।

அனைத்து விதமான கல்வியையும் பெற்றிருந்த அவர்கள், நியாயமில்லாத செயல்களைச் செய்வதற்கு நாணினார்கள். அவர்கள் நற்பெயர் பெற்றவர்களாகவும், திறமைசாலிகளாகவும், சாஸ்திரங்களை நன்கு கற்றவர்களாகவும், செல்வம் படைத்தவர்களாகவும், பெருந்தன்மை உடையவர்களாகவும் இருந்தார்கள். புலனடக்கமும், செயல்களில் கட்டுப்பாடும் கொண்ட அவர்கள் சொன்னதைச் செய்பவர்களாகவும், தீர்மானத்துடன் செயல்படுபவர்களாகவும் இருந்தார்கள். புத்திசாலிகளாகவும், மன்னிக்கும் குணம் உடையவர்களாகவும், புகழ் பெற்றவர்களாகவும்,  புன்னகையுடன் பேசும் வழக்கத்தைக் கொண்டவர்களாகவும் இருந்தார்கள்.

.

क्रोधात्कामार्थहेतोर्वा न ब्रूयुरनृतं वच: ।
तेषामविदितं किञ्चित्स्वेषु नास्ति परेषु वा ।

क्रियमाणं कृतं वापि चारेणापि चिकीर्षितम् ।।1.7.7।।

கோபத்தினாலோ, ஆசையினாலோ, அவர்கள் ஒரு போதும், பொய்யோ, நியாயமற்ற வார்த்தைகளையோ சொன்னதில்லை. தன்னைச் சார்ந்தவர்களோ, மற்றவர்களோ, செய்த காரியங்கள், செய்து கொண்டிருக்கும் காரியங்கள், செய்ய நினைத்திருக்கும் காரியங்கள் ஆகிய அனைத்தையும் தங்கள் ஒற்றர்கள் மூலம் அந்த அமைச்சர்கள் அறிந்திருந்தார்கள்.

 

कुशला व्यवहारेषु सौहृदेषु परीक्षिता: ।
प्राप्तकालं तु ते दण्डं धारयेयुस्सुतेष्वपि ।।1.7.8।।

மக்களிடம் எவ்வறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். தங்கள் நண்பர்களுக்கு உண்மையாக நடந்து கொண்டார்கள். தங்கள் புதல்வர்களே ஆயினும், தவறிழைத்தால், அவர்களுக்குத் தண்டனை வழங்கத் தவற மாட்டார்கள்.


कोशसङ्ग्रहणे युक्ता बलस्य च परिग्रहे ।
अहितं चापि पुरुषं न विहिंस्युरदूषकम् ।।1.7.9।।

அரசின் கருவூலத்தை நிரப்புவதிலும், படை திரட்டுவதிலும் கை தேர்ந்தவர்கள் அவர்கள். தவறு ஒன்றும் இழைக்காத போது, தங்களுக்கு வேண்டாதவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு எந்த விதமான தீங்கும் இழைக்க மாட்டார்கள்.



वीराश्च नियतोत्साहा राजशास्त्रमनुष्ठिता: ।
शुचीनां रक्षितारश्च नित्यं विषयवासिनाम् ।।1.7.10।।

வீரம் நிறைந்த அவர்கள் எப்போதும் குன்றாத உற்சாகத்துடன் இருந்தார்கள். அரசியல் சாஸ்திரப்படி நடந்து கொண்டு, அந்த ராஜ்ஜியத்தில் வசித்த நல்ல மனிதர்களைப் பாதுகாத்து வந்தார்கள்.

 

ब्रह्म क्षत्रमहिंसन्तस्ते कोशं समपूरयन् ।
सुतीक्ष्णदण्डास्संप्रेक्ष्य पुरुषस्य बलाबलम् ।।1.7.11।।

அரசின் கருவூலத்தை நிரப்பும் போது, எண்ணத்திலோ, சொல்லிலோ, செயலிலோ, அந்தணர்களுக்கோ, க்ஷத்திரியர்களுக்கோ, எந்தத் துன்பமும் ஏற்படாமல் பார்த்துக்கொண்டார்கள்.  தவறுகள் நேரிட்டால், அதைச் செய்த மனிதனின் வலிமை மற்றும் குறைபாடுகளைக் கருத்தில் கொண்டு, கடுமையான தண்டனைகளை விதித்தார்கள்.

 

शुचीनामेकबुद्धीनां सर्वेषां सम्प्रजानताम् ।
नासीत्पुरे वा राष्ट्रे वा मृषावादी नर: क्वचित् ।।1.7.12।।

இவ்வாறு தூய நடத்தையுடன் அந்த அமைச்சர்கள், ஒரு மனதாக ராஜ்ஜியத்தை நடத்திக்கொண்டு வந்ததால், அந்த நகரத்திலோ, அந்த நாட்டிலோ, பொய் பேசுபவர் எவரும் இருக்கவில்லை.

 

कश्चिन्न दुष्टस्तत्रासीत्परदाररतो नर: ।
प्रशान्तं सर्वमेवासीद्राष्ट्रं पुरवरं च तत् ।।1.7.13।।

அந்த நாட்டில் தீய எண்ணம் கொண்டவர்களோ, பிறருடைய மனைவிகள் மேல் விருப்பம் கொண்டவர்களோ இருக்கவில்லை. நகரங்களிலேயே மிகச் சிறந்ததான அயோத்தி முழுவதும், அமைதி நிலவியது.

 

सुवाससस्सुवेषाश्च ते च सर्वे सुशीलिन: ।
हितार्थं च नरेन्द्रस्य जाग्रतो नयचक्षुषा ।।1.7.14।।

நல்ல உடையணிந்து, தங்களை நன்கு அலங்கரித்துக் கொண்டிருந்த அந்த அமைச்சர்கள், அரசனின் நன்மையைக் கருத்தில் கொண்டு, நியாயத்திலேயே கண்ணாக, எச்சரிக்கையுடன் இருந்தார்கள்.

 

गुरोर्गुणगृहीताश्च प्रख्याताश्च पराक्रमे ।
विदेशेष्वपि विज्ञातास्सर्वतो बुद्धिनिश्चयात् ।।1.7.15।।

வயதில் மூத்தவர்களுடைய நல்ல குணங்களைப் பின்பற்றுபவர்களாகவும், தங்கள் வீரத்துக்காகப் புகழ் பெற்றவர்களாகவும், எல்லா விஷயங்களிலும், தங்கள் அறிவாற்றாலால் வழி நடத்தப்படுபவர்களாகவும், வெளி நாடுகளில் கூட அறியப் பட்டவர்களாகவும் இருந்தார்கள்.



सन्धिविग्रहतत्त्वज्ञा: प्रकृत्या सम्पदान्विता: ।।1.7.16।।

मन्त्रसंवरणे शक्ताश्श्लक्ष्णास्सूक्ष्मासु बुद्धिषु ।
नीतिशास्त्रविशेषज्ञास्सततं प्रियवादिन: ।।1.7.17।।

அந்த அமைச்சர்கள், இயற்கையிலேயே, அமைதி, போர் ஆகியவற்றைப் பற்றி, நன்கு புரிந்தவர்களாக இருந்தார்கள். செல்வச் செழிப்பு நிறைந்தவர்களாகவும், ரகசியத்தைக் காப்பாற்றக் கூடியவர்களாகவும், எந்த விஷயத்தையும் கூர்மையான அறிவோடு நுணுக்கமாகப் புரிந்து கொள்பவர்களாகவும் இருந்தார்கள். ஒழுக்கத்தைப் பற்றியும், வாழ்க்கையின் நெறி முறைகளைப்பற்றியும் நன்கு அறிந்திருந்தார்கள். எப்போதும், இனிமையாகப் பேசுபவர்களாகவும் இருந்தார்கள்.



ईदृशैस्तैरमात्यैस्तु राजा दशरथोऽनघ: ।
उपपन्नो गुणोपेतैरन्वशासद्वसुन्धराम् ।।1.7.18।।

குற்றமற்ற தசரத மன்னர், இப்படிப்பட்ட அருமையான அமைச்சர்களால் சூழப்பட்டு, இந்த உலகத்தை ஆண்டு வந்தார்.

 

अवेक्षमाणश्चारेण प्रजा धर्मेण रञ्जयन् ।
प्रजानां पालनं कुर्वन्नधर्मान्परिवर्जयन् ।।1.7.19।।

विश्रुतस्त्रिषु लोकेषु वदान्यस्सत्यसङ्गर: ।
स तत्र पुरुषव्याघ्रश्शशास पृथिवीमिमाम् ।।1.7.20।।

மூன்று உலகங்களிலும், தாராள மனமுடையவர் என்றும், மனிதர்களுக்குள் புலி போன்றவர் என்றும் பெயர் பெற்ற தசரத மன்னர், ஒற்றர்களின் உதவியால் மக்களுக்கு நல்ல பாதுகாப்பைக்கொடுப்பவராகவும், அவர்கள் மன மகிழ்ச்சியுடன் வாழ வழி செய்பவராகவும் இருந்து, தர்ம வழியில் நின்று, அதர்மத்தை விட்டு நல்லாட்சி புரிந்து வந்தார்.

 

नाध्यगच्छद्विशिष्टं वा तुल्यं वा शत्रुमात्मन: ।
मित्रवान्नतसामन्त: प्रतापहतकण्टक: ।।1.7.21।।

स शशास जगद्राजा दिवं देवपतिर्यथा ।


நிறைய நண்பர்களை உடைய தசரத மன்னரைக் கப்பம் கட்டும் மன்னர்கள் வணங்கினார்கள்.  எதிரிகளை அவர் தன் வலிமையால் அழித்தார். அவருக்கு நிகராகவோ, அவரை விடச் சிறந்தவராகவோ, எந்த எதிரியும் அவருக்கு இல்லை. இத்தகைய சிறப்புகளுடன் தேவர்களின் தலைவனைப்போல, இந்த உலகை அவர் ஆண்டு வந்தார்.

 

तैर्मन्त्रिभिर्मन्त्रहिते नियुक्तै
र्वृतोऽनुरक्तै: कुशलैस्समर्थै: ।

स पार्थिवो दीप्तिमवाप युक्त
स्तेजोमयैर्गोभिरिवोदितोऽर्क: ।।1.7.22।।

அவருடைய நலனில் மிகுந்த அக்கறை கொண்ட, சிறந்த ஆலோசனை வழங்கக் கூடிய, திறமையான, விசுவாசமுள்ள அமைச்சர்களால் சூழப்பட்டிருந்த அந்த தசரத மன்னர், ஒளி வீசும் கதிர்களுடைய உதய சூரியனைப்போன்ற மகிமையைப் பெற்றிருந்தார்.

.
इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे सप्तमस्सर्ग: ।।

 

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் ஏழாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.                                                         

                                                           ***   

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 8

(இக்ஷ்வாகு வம்சத்தைத் தொடரச் செய்ய தசரதமன்னருக்குப் புதல்வர்கள் இல்லை. வயதாக ஆக அவருடைய வருத்தம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தனக்கு ஒரு வாரிசு வேண்டி, அஸ்வமேத யாகம் செய்ய எண்ணுகிறார். அமைச்சர்களையும், ஆலோசகர்களையும், குடும்ப புரோகிதர்களையும் அழைத்துத் தனது யோசனைக்கு அனுமதி வாங்க முயல்கிறார்.) 


तस्य त्वेवं प्रभावस्य धर्मज्ञस्य महात्मन:।
सुतार्थं तप्यमानस्य नासीद्वंशकरस्सुत:।।1.8.1।।

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த, தர்மாத்மாவான, கம்பீரமான, பெருந்தன்மையுள்ள அரசருக்கு, எவ்வளவோ தவங்கள் செய்தும், புத்திர பாக்கியம் இருக்கவில்லை.

 

चिन्तयानस्य तस्यैवं बुद्धिरासीन्महात्मन: ।
सुतार्थं हयमेधेन किमर्थं न यजाम्यहम्।।1.8.2।।

இதைப்பற்றி யோசித்துக் கொண்டிருந்த போது, அந்த மகாத்மாவான அரசருக்குப் பிள்ளை வரம் வேண்டித், தான் ஏன் ஒரு அஸ்வமேத யாகம் செய்யக்கூடாது என்று தோன்றியது.

स निश्चितां मतिं कृत्वा यष्टव्यमिति बुद्धिमान्।
मन्त्रिभिस्सह धर्मात्मा सर्वैरेव कृतात्मभि:।।1.8.3।।

ततोऽब्रवीदिदं राजा सुमन्त्रं मन्त्रिसत्तमम्।
शीघ्रमानय मे सर्वान्गुरूंस्तान् सपुरोहितान्।।1.8.4।।

அஸ்வமேத யாகம் செய்ய வேண்டும் என்று நிச்சயித்துக் கொண்ட, தசரத மன்னர், அமைச்சர்களுள் சிறந்தவரான சுமந்திரரிடம், “ என்னுடைய ஆன்மீக குருமார்களையும், குடும்ப புரோகிதர்களையும் அழைத்து வாருங்கள்” என்று கட்டளையிட்டார்.

 

ततस्सुमन्त्रस्त्वरितं गत्वा त्वरितविक्रम:।
समानयत्स तान् सर्वान् समस्तान्वेदपारगान् ।।1.8.5।।

सुयज्ञं वामदेवं च जाबालिमथ काश्यपम् ।
परोहितं वसिष्ठं च ये चान्ये व्दिजसत्तमा: ।। 1.8.6 ।।
 

அதன் படி விரைந்து சென்ற சுமந்திரர், சுயஞ்ஞர்,வாமதேவர், ஜாபாலி, கஸ்யபர், குரு வசிஷ்டர் ஆகியோரையும்,  வேதத்தில் கரைகண்ட சில அந்தணர்களையும் அழைத்து வந்தார்.


तान्पूजयित्वा धर्मात्मा राजा दशरथस्तदा।
इदं धर्मार्थसहितं श्लक्ष्णंवचनमब्रवीत्।।1.8.7।।

அவர்களை மரியாதையாக வரவேற்றுப் பூஜித்த பின்னர், தசரதர் அறமும், பொருளும் நிறைந்த இந்தச் சொற்களைச் சொன்னார்.

 

मम लालप्यमानस्य पुत्रार्थन्नास्ति वै सुखम्।
तदर्थं हयमेधेन यक्ष्यामीति मतिर्मम।।1.8.8।।

புதல்வர்கள் இல்லாத குறையால், நான் மிகுந்த துயரத்தில் இருக்கிறேன்.  புதல்வர்களை வேண்டி, அஸ்வமேத யாகம் செய்யலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.

 

तदहं यष्टुमिच्छामि शास्त्रदृष्टेन कर्मणा।
कथं प्राप्स्याम्यहं कामं बुद्धिरत्रविचार्यताम्।।1.8.9।।

“சாஸ்திரங்களில் கூறியுள்ள முறைப்படி அஸ்வமேத யாகம் செய்ய விரும்புகிறேன். என் விருப்பம் நிறைவேறுவதற்கான வழி யாது? நீங்கள் அனைவரும் கலந்தாலோசித்து ஒரு தீர்வு கூறுங்கள். “

 

ततस्साध्विति तद्वाक्यं ब्राह्मणा: प्रत्यपूजयन्।
वसिष्ठप्रमुखास्सर्वे पार्थिवस्य मुखाच्च्युतम्।।1.8.10।।

வசிஷ்டர் முதலான அந்தணர்கள் மன்னரின் வாயில் இருந்து வந்த இந்தச் சொற்களைக்கேட்டு, “மிக நன்று” என்று பாராட்டினார்கள்.

 

ऊचुश्च परमप्रीतास्सर्वे दशरथं वच:।
सम्भारास्सम्भ्रियन्तां ते तुरगश्च विमुच्यताम्।।1.8.11।।

மிகவும் மகிழ்ந்து, அவர்கள் தசரதரிடம் கூறினார்கள், “ யாகத்துக்கு வேண்டிய பொருட்களைச் சேகரிக்கத் துவங்குவோம். அதற்கான குதிரையையும் அனுப்புவோம்.”

 

सर्वथा प्राप्स्यसे पुत्रानभिप्रेतांश्च पार्थिव।
यस्य ते धार्मिकी बुद्धिरियं पुत्रार्थमागता।।1.8.12।।

அரசே! உங்கள் உள்ளத்தில் உதித்த இந்த விருப்பம் நியாயமானதும், சரியானதும் ஆகும். உங்கள் விருப்பம் நிச்சயம் பூர்த்தி அடையும். “

 

तत: प्रीतोऽभवद्राजा श्रुत्वा तद्विजभाषितम्।
अमात्यांश्चाब्रवीद्राजा हर्षपर्याकुलेक्षण:।।1.8.13।।

அந்தணர்கள் இவ்வாறு கூறக்கேட்ட மன்னர், கண்களில் மகிழ்ச்சி மின்னத் தன் அமைச்சர்களிடம் இவ்வாறு கூறினார்.

 

सम्भारास्सम्भ्रियन्तां मे गुरूणां वचनादिह।
समर्थाधिष्ठितश्चाश्वस्सोपाध्यायो विमुच्यताम्।।1.8.14।।

“என் ஆன்மீக குருமார்கள் கூறியது போல், யாகத்துக்கு வேண்டிய பொருட்களைச் சேகரியுங்கள். திறமை வாய்ந்த வீரர்களுடன், ஒரு நல்ல குதிரையையும் அனுப்பி வையுங்கள்.”

 

सरय्वाश्चोत्तरे तीरे यज्ञभूमिर्विधीयताम्।
शान्तयश्चाभिवर्धन्तां यथाकल्पं यथाविधि।।1.8.15।।

“யாகம் செய்வதற்கான விதி முறைகளின் படி, சரயு நதியின் வடக்கே, யாக சாலை அமைக்கப் படட்டும். தடையில்லாமல் யாகம் நடப்பதற்கான சடங்குகளும் முறைப்படி செய்யப்படட்டும்.”

 

शक्य: प्राप्तुमयं यज्ञस्सर्वेणापि महीक्षिता।
नापराधो भवेत्कष्टो यद्यस्मिन्क्रतुसत्तमे।।1.8.16।।

இந்தச் சிறந்த யாகத்தைச் செய்யும் எல்லா அரசரும், எந்தத் தடையும் எந்தக்குறையும் இன்றி இதை நிறைவேற்றினால், நிச்சயம் தாங்கள் விரும்பியதை அடைய முடியும்.

 

छिद्रं हि मृगयन्तेऽत्र विद्वांसो ब्रह्मराक्षसा: ।
निहतस्य च यज्ञस्य सद्य: कर्ता विनश्यति ।।1.8.17।।

கல்வி கற்றிருந்தும், சாபத்தினால் ப்ரம்ம ராட்சஸர்களாக மாறியவர்கள், இந்த யாகங்களில் எதாவது குற்றம் குறைகள் அகப்படாதா என்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். அப்படிக் கிடைத்து விட்டால், யாகம் செய்பவரையே அழித்து விடுவார்கள்.

तद्यथा विधिपूर्वं मे क्रतुरेष समाप्यते ।
तथा विधानं क्रियतां समर्था: करणेष्विह।।1.8.18।।

ஆகவே, அனைத்து ஏற்பாடுகளும், சாஸ்திரங்களில் சொல்லப் பட்டுள்ள படி , முறையாகச் செய்யப் படவேண்டும். நீங்கள் எல்லாம் அப்படிச் செய்வதில் நிபுணர்கள்.”

 

तथेति चाब्रुवन्सर्वे मन्त्रिण:प्रत्यपूजयन्।
पार्थिवेन्द्रस्य तद्वाक्यं यथाज्ञप्तं निशम्य ते।।1.8.19।।

அந்த அமைச்சர்கள், அரசருடைய இந்தச் சொற்களை மதித்து, “தங்கள் கட்டளைப் படியே” என்று பதிலிறுத்தார்கள்.

 

तथा द्विजास्ते धर्मज्ञा वर्धयन्तो नृपोत्तमम्।
अनुज्ञातास्ततस्सर्वे पुनर्जग्मुर्यथागतम्।।1.8.20।।

பின்னர், தர்மங்களை அறிந்தவர்களான அந்த அந்தணர்கள், தசரத மன்னரை வணங்கி, விடைபெற்றுச் சென்றனர்.

 

विसर्जयित्वा तान्विप्रान्सचिवानिदमब्रवीत्।
ऋत्विग्भिरुपदिष्टोऽयं यथावत्क्रतुराप्यताम्।।1.8.21।।

அந்தணர்களுக்கு விடை கொடுத்த பின்னர் அமைச்சர்களிடம், தசரதர், “ இந்த யாகம் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள படி, அதற்குத் தலைமையேற்று நடத்தும் புரோகிதர்களின் வழிகாட்டுதலுக்கேற்ப நடத்தப் பட வேண்டும்” என்று கூறினார்.




 

इत्युक्त्वा नृपशार्दूलस्सचिवान्समुपस्थितान्।
विसर्जयित्वा स्वं वेश्म प्रविवेश महाद्युति:।।1.8.22।।

இவ்வாறு தன் அமைச்சர்களிடம் கூறி, அவர்களுக்கு விடை கொடுத்த பின்னர், அறிவிற் சிறந்த  தசரத மன்னர், அந்தப்புரத்துக்குள் நுழைந்தார்.

 

ततस्स गत्वा ता:पत्नीर्नरेन्द्रो हृदयप्रिया:।
उवाच दीक्षां विशत यक्ष्येऽहं सुतकारणात्।।1.8.23।।

அங்கே சென்று, தன் மனதிற்கு மிகவும் பிடித்த தன் மனைவியரிடம், “புதல்வனை வேண்டி, நான் யாகம் செய்யத் தீர்மானித்திருக்கிறேன். நீங்களும், விரதம் இருக்கத் தொடங்குங்கள்” என்று கூறினார்.


तासां तेनातिकान्तेन वचनेन सुवर्चसाम्।
मुखपद्मान्यशोभन्त पद्मानीव हिमात्यये।।1.8.24।।

அரசரிடம் இருந்து, இந்த இனிமையான செய்தியைக் கேட்ட அவர்களது முகமலர்கள், பனிக்காலம் முடிந்த பின் அழகாக மலர்ந்து மிளிரும் தாமரைகளைப் போல ஒளிர்ந்தன.


इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे अष्टमस्सर्ग:।।

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் எட்டாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

***

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி     

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 9

(தசரதரின் முக்கியமான அமைச்சரும், நம்பிக்கைக்குரிய தேரோட்டியுமான சுமந்திரர், ருஷ்யஸ்ருங்கரின் கதையைத் தசரதருக்குச் சொல்லி, அவர் மூலம் யாகம் செய்வித்தால் நிச்சயம் புதல்வர்கள் உண்டாவார்கள் என்கிறார்.  அதைக் கேட்ட தசரதர் ருஷ்யஸ்ருங்கரை அயோத்திக்கு வரவழைக்கத் திட்டம் போடுகிறார்.)

 

एतच्छ्रुत्वा रहस्सूतो राजानमिदमब्रवीत्।
ऋत्विग्भिरुपदिष्टोऽयं पुरावृत्तो मया श्रुत:।।1.9.1।।

இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அரசனின் தேரோட்டியான சுமந்திரர் அரசரைத் தனியே சந்தித்து, “யாகம் செய்விக்கும் புரோகிதர்கள் மூலம் நான் இதைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

 

सनत्कुमारो भगवान्पूर्वं कथितवान्कथाम्।
ऋषीणां सन्निधौ राजन् तव पुत्रागमं प्रति।।1.9.2।।

அரசே! உங்களுக்கு புத்திரர்கள் உண்டாகப் போவதைப் பற்றி, ரிஷிகள் முன்னே, பகவான் சனத் குமாரர் இந்தக் கதையை முன்னமே சொல்லியிருக்கிறார்.

 

काश्यपस्यतु पुत्रोऽस्ति विभण्डक इति श्रुत:।
ऋष्यशृङ्ग इति ख्यातस्तस्य पुत्रो भविष्यति।।1.9.3।।

காஷ்யப ரிஷிக்கு விபாண்டகர் என்ற புதல்வர் ஒருவர் இருக்கிறார். விபாண்டகருக்கு, ருஷ்யஸ்ருங்கர் என்ற மகன் பிறப்பான்.

 

स वने नित्यसंवृद्धो मुनिर्वनचरस्सदा ।
नान्यं जानाति विप्रेन्द्रो नित्यं पित्रनुवर्तनात् ।।1.9.4।।

காட்டிலேயே வளர்ந்து, காட்டிலேயே நடமாடிக்கொண்டு, எப்போதும் தனது தந்தையையே பின் தொடர்ந்து செல்லும் அந்த அந்தண குமாரனுக்கு வேறு எதுவுமே தெரியாது.

 

द्वैविध्यं ब्रह्मचर्यस्य भविष्यति महात्मन:।
लोकेषु प्रथितं राजन्विप्रैश्च कथितं सदा।।1.9.5।।

அரசே! அந்தணர்களால் குறிப்பிடப்பட்ட இரண்டு வகையான பிரம்மச்சரியத்தையும் ஒழுங்காக அனுஷ்டிக்கப்போகும் அவன் மூவுலகங்களிலும் புகழப்படுவான்.

 

तस्यैवं वर्तमानस्य कालस्समभिवर्तत ।
अग्निं शुश्रूषमाणस्य पितरं च यशस्विनम्।।1.9.6।।

அக்கினியைத் தினமும் பூஜித்துக்கொண்டும், தனது புகழ்பெற்ற தந்தைக்குக் கீழ்ப்படிந்தும், வெகு காலம் இவ்வாறு வாழ்வான்.

 

एतस्मिन्नेव काले तु रोमपाद: प्रतापवान्।
अङ्गेषु प्रथितो राजा भविष्यति महाबल:।। 1.9.7।।

அந்தச் சமயத்தில் அங்க தேசத்தை ரோமபாதன் என்ற அரசன் ஆட்சி செய்வான்.

 

तस्य व्यतिक्रमाद्राज्ञो भविष्यति सुदारुणा ।
अनावृष्टिस्सुघोरा वै सर्वभूतभयावहा ।।1.9.8।।

அந்த அரசன் முறை தவறி ஆட்சி செய்யப்போக, மழையே பெய்யாமல், அனைத்து உயிர்களையும் அச்சப்படுத்தக்கூடிய ஒரு பயங்கரமான வறட்சி அந்த நாட்டில் ஏற்படும்.

अनावृष्ट्यां तु वृत्तायां राजा दु:खसमन्वित:।
ब्राह्मणान्श्रुतवृद्धांश्च समानीय प्रवक्ष्यति।। 1.9.9।।

தொடர்ந்த வறட்சியினால், மிகவும் துயருற்று, அரசன் ரோமபாதன், மூத்த அறிஞர்களையும் , அந்தணர்களையும் சபைக்கு வரவழைத்து இவ்வாறு கூறுவான்.

 

भवन्तश्श्रुतधर्माणो लोकचारित्रवेदिन: ।
समादिशन्तु नियमं प्रायश्चित्तं यथा भवेत् ।।1.9.10।।

“தாங்கள் அனைவரும்,  தர்மங்களையும், உலக நடைமுறைகளையும் நன்கு அறிந்தவர்கள். தயவு செய்து, இந்த வறட்சியில் இருந்து மீள்வதற்கு, முறைப்படி என்ன பிராயச்சித்தம் செய்யவேண்டும் என்று சொல்லுங்கள்.”

 
वक्ष्यन्ति ते महीपालं ब्राह्मणा वेदपारगा:।
विभण्डकसुतं राजन्सर्वोपायैरिहानय।।1.9.11।।

வேதங்களை நன் கு கற்றறிந்த அந்த அந்தணர்கள் கூறுவார்கள், “அரசே! எவ்வாறாயினும் விபாண்டக ரிஷியின் மகனாகிய ருஷ்யஸ்ருங்கரை இங்கு வரவழையுங்கள்.”

 

आनाय्य च महीपाल ऋश्यशृङ्गं सुसत्कृतम्।
प्रयच्छ कन्यां शान्तां वै विधिना सुसमाहित: ।।1.9.12।।

அரசே! அவரை வரவழைத்து, மிகவும் கௌரவத்துடன் வரவேற்றுத் தங்கள் மகளான சாந்தாவை அவருக்குத் திருமணம் செய்து கொடுங்கள்.”

 

तेषां तु वचनं श्रुत्वा राजा चिन्तां प्रपत्स्यते ।
केनोपायेन वै शक्य इहानेतुं स वीर्यवान् ।।1.9.13।।

அவர்கள் கூறியதைக்கேட்ட மன்னன், எவ்வாறு ருஷ்யஸ்ருங்கரை அங்கு வரவழைப்பது என்று யோசிக்கத் தொடங்குவான்.


ततो राजा विनिश्चित्य सह मन्त्रिभिरात्मवान्।
पुरोहितममात्यांश्च तत: प्रेष्यति सत्कृतान्।।1.9.14।।

பிறகு, புத்திசாலியான அந்த மன்னன், தனது அமைச்சர்களுடன் கலந்தாலோசித்த பின், தனது புரோகிதர்களையும், அமைச்சர்களையும், ருஷ்யஸ்ருங்கரை மரியாதை செய்து அழைத்து வருமாறு வேண்டுவான்.


ते तु राज्ञो वचश्श्रुशृत्वा व्यथिता विनतानना:।
न गच्छेम ऋषेर्भीता अनुनेष्यन्ति तं नृपम् ।। 1.9.15।।

அரசனின் ஆணையைக் கேட்டு அவர்கள், (விபாண்டகரின் சக்தியை நினைத்து) அச்சமும் கலக்கமும் அடைந்து, தலை குனிந்து, “நாங்கள் போக மாட்டோம்” என்பார்கள்.

 

वक्ष्यन्ति चिन्तयित्वा ते तस्योपायांश्च तत्क्षमान्।
आनेष्यामो वयं विप्रं न च दोषो भविष्यति।। 1.9.16।।

பின் அவர்களளே, எவ்வாறு ருஷ்யஸ்ருங்கரை அங்கு வரவழைப்பது என்று யோசித்து, “ஏதாவது நடக்கக்கூடாதது நடந்து விட்டால், எங்களைக் குற்றம் சொல்லாமல் இருப்பீர்களானால், நாங்கள் அவரை அழைத்து வரச் செல்கிறோம்” என்பார்கள்.

 

एवमङ्गाधिपेनैव गणिकाभि: ऋषेस्सुत:।
आनीतोऽवर्षयद्देवश्शान्ता चास्मै प्रदीयते।।1.9.17।।

இவ்வாறு, அரசவைக் கணிகையரின் துணை கொண்டு, ருஷ்யஸ்ருங்கரைத் தன் தேசத்துக்கு ரோமபாதன் அழைத்து வரச் செய்யும் போது, தேவேந்திரன் அங்கு மழை பொழியச் செய்வான். அரசனின் மகள் சாந்தாவை ருஷ்யஸ்ருங்கருக்கு மணமுடித்து வைப்பார்கள். “

 

ऋश्यशृङ्गस्तु जामाता पुत्रांस्तव विधास्यति।
सनत्कुमारकथितमेतावद्व्याहृतं मया।।1.9.18।।

“தங்களுடைய மருமகனான ருஷ்யஸ்ருங்கர் உங்களுக்குப் புதல்வர்கள் கிடைக்க ஏற்பாடு செய்வார்” என்று சனத் குமாரரால் சொல்லப்பட்ட விஷயத்தை நான் உங்களுக்குக் கூறினேன்.”


अथ हृष्टो दशरथस्सुमन्त्रं प्रत्यभाषत।
यथर्श्यशृङ्गस्त्वानीतो विस्तरेण त्वयोच्यताम्।।1.9.19।।

இதைக்கேட்டு மகிழ்ந்த தசரதர், “ருஷ்யஸ்ருங்கர் எவ்வாறு ரோமபாதனின் அரசவைக்கு வரவழைக்கப் பட்டார் என்பதை விவரமாகக் கூறுங்கள்” என்றார்.


इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे नवमस्सर्ग:।।

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் ஒன்பதாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

***

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/        


ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 10

(ருஷ்யஸ்ருங்கரை அங்க தேசத்துக்கு வரவழைத்த விதத்தை சுமந்திரர் வர்ணிக்கிறார். வறட்சியால் வாடும் அங்க தேசத்துக்கு அவரை வரவழைக்க வேண்டி ரோமபாதர் கணிகைகளை அனுப்புகிறார். ருஷ்யஸ்ருங்கர் அங்க தேசத்துக்கு வந்தவுடனேயே மழை பெய்து வறட்சியும் பஞ்சமும் நீங்குகின்றன. ரோமபாதர் தன் மகள் சாந்தாவை ருஷ்யஸ்ருங்கருக்கு மணம் செய்து கொடுக்கிறார்.)


सुमन्त्रश्चोदितो राज्ञा प्रोवाचेदं वचस्तदा।
यथर्श्यशृङ्गस्त्वानीत श्श्रुणु मे मन्त्रिभिस्सह।।1.10.1।।

தசரதர், அவ்வாறு கேட்டதால் சுமந்திரர் கூறினார், “ருஷ்யஸ்ருங்கர் ரோமபாதனின் அவைக்கு எவ்வாறு அழைத்து வரப்பட்டார் என்பதை விவரமாகக் கூறுகிறேன். நீங்களும், உங்கள் அமைச்சர்களும், கேளுங்கள்.”



रोमपादमुवाचेदं सहामात्य: पुरोहित:।
उपायो निरपायोऽयमस्माभिरभिचिन्तित:।। 1.10.2।।

(ரோமபாதனின் அவையில் இருந்த) புரோகிதர்களும், அமைச்சர்களும், ரோமபாதனிடம் வந்து,” நிச்சயம் தோல்வியடையாத ஒரு திட்டத்தை யோசித்திருக்கிறோம்” என்றார்கள்.

ऋश्यशृङ्गो वनचरस्तपस्स्वाध्ययने रत:।
अनभिज्ञस्स नारीणां विषयाणां सुखस्य च।1.10.3।।

காட்டில் வசித்து வரும் ருஷ்யஸ்ருங்கர், எந்நேரமும், தவத்திலும், வேதங்களைக் கற்பதிலுமே ஈடுபட்டிருக்கிறார். அவருக்குப் பெண்கள் பற்றியோ, உடலின்பம் பற்றியோ, ஒன்றுமே தெரியாது.”

 

इन्द्रियार्थैरभिमतैर्नरचित्तप्रमाथिभि: ।
पुरमानाययिष्याम: क्षिप्रं चाध्यवसीयताम्।। 1.10.4।।

ஆகவே, ஆண்களின் மனதை வெற்றி கொள்ளக்கூடிய, இந்திரிய சுகங்களை அவருக்கு அறிமுகப் படுத்துவது மூலம் ருஷ்யஸ்ருங்கரை, நம் நகரத்துக்கு அழைத்து வர முடியும். இதைப் பற்றி, விரைவில் தீர்மானிக்க வேண்டும்.”

 

गणिकास्तत्र गच्छन्तु रूपवत्यस्स्वलङ्कृता:।
प्रलोभ्य विविधोपायैरानेष्यन्तीह सत्कृता:।।1.10.5।।

நன்கு அலங்கரித்துக்கொண்ட அழகான கணிகைகளை அவரிடம் அனுப்புங்கள். அவர்கள் பல விதமான உபாயங்கள் செய்து ருஷ்யஸ்ருங்கரை இங்கே வரும் படி செய்து விடுவார்கள்.

 

श्रुत्वा तथेति राजा च प्रत्युवाच पुरोहितम्।
पुरोहितो मन्त्रिणश्च तथा चक्रुश्च ते तदा।।1.10.6।।

(இந்த யோசனையைக்கேட்ட)  அரசர், “அப்படியே செய்யுங்கள்” என்று கூறவே, புரோகிதர்களும், அமைச்சர்களும் அதன் படி செய்தார்கள்.


वारमुख्याश्च तच्छ्रुत्वा वनं प्रविविशुर्महत्।
आश्रमस्याविदूरेऽस्मिन् यत्नं कुर्वन्ति दर्शने।।1.10.7।।

ऋषिपुत्रस्य धीरस्य नित्यमाश्रमवासिन:।

அவர்கள் சொற்படி, அரசவையில் இருந்த அழகான கணிகைகள், அந்த அடர்ந்த காட்டுக்குள் நுழைந்து, (ருஷ்யஸ்ருங்கர் இருந்த) ஆசிரமத்திலிருந்து அதிக தூரம் இல்லாத இடத்தில் இருந்து கொண்டு, புலன்களை வென்றவரான ருஷ்யஸ்ருங்கரை எப்படியாவது பார்த்து விட முயற்சித்தார்கள்.

 

पितुस्सनित्यसन्तुष्टो नातिचक्राम चाश्रमात्।।1.10.8।।

न तेन जन्मप्रभृति दृष्टपूर्वं तपस्विना।
स्त्री वा पुमान्वा यच्चान्यत्सर्वं नगरराष्ट्रजम्।। 1.10.9।।

எப்போதும், திருப்தியுடன் இருந்த ருஷ்யஸ்ருங்கர், தன் தந்தையாரின் ஆசிரமத்தை விட்டு வெளியே சென்றதே இல்லை. தவத்திலேயே ஆழ்ந்திருந்த அவர், நகரத்தைச் சேர்ந்த ஆணையோ, பெண்ணையோ, பிறந்ததிலிருந்து, பார்த்ததே இல்லை.

 

तत: कदाचित्तं देशमाजगाम यदृच्छया।
विभण्डकसुतस्तत्र ताश्चापश्यद्वराङ्गना:।।1.10.10।।

பிறகு ஒரு நாள், யதேச்சையாக, அந்தப் பெண்கள் இருந்த இடத்துக்கு (விபாண்டகரின் புதல்வரான) ருஷ்யஸ்ருங்கர் வந்த போது, அங்கே, அந்த அழகிய பெண்களைக்கண்டார்.

 

ताश्चित्रवेषा: प्रमदा गायन्त्यो मधुरस्वरा:।
ऋषिपुत्रमुपागम्य सर्वा वचनमब्रुवन्।। 1.10.11।।

அழகாக உடையணிந்து, இனிய குரலில் பாடிக்கொண்டிருந்த அந்தப் பெண்கள், ருஷ்யஸ்ருங்கரை நெருங்கி, இவ்வாறு கேட்டார்கள்:

 

कस्त्वं किं वर्तसे ब्रह्मन् ज्ञातुमिच्छामहे वयम्।
एकस्त्वं विजने घोरे वने चरसि शंस न:।। 1.10.12।।

“அந்தணரே! நீங்கள் யார்? எவ்வாறு இங்கே வாழ்கிறீர்கள்? இந்த பயங்கரமான காட்டிலே, தனியாக ஏன் அலைந்து கொண்டிருக்கிறீர்கள்? நாங்கள் அறிய விரும்புகிறோம். தயவு செய்து சொல்லுங்கள். “

 

अदृष्टरूपास्तास्तेन काम्यरूपा वने स्त्रिय:।
हार्दात्तस्य मतिर्जाता व्याख्यातुं पितरं स्वकम्।।1.10.13।।

அது வரை அந்தக்காட்டில் அவர் கண்டிராத அந்த மனங்கவரும் அழகியரைப் பார்த்து, அவர்கள் மேல் அன்பு கொண்ட, ருஷ்யஸ்ருங்கருக்குத் தன் தந்தையாரைப் பற்றி, அவர்களிடம் பேசும் விருப்பம் எழுந்தது.

 

 पिता विभण्डकोऽस्माकं तस्याहं सुत औरस:।
ऋश्यशृङ्ग इति ख्यातं नाम कर्म च मे भुवि।।1.10.14।।

“விபாண்டகர் என்னும் முனிவருடைய சொந்த மகன் நான். என்னுடைய கர்மாவால், ருஷ்யஸ்ருங்கர் என்று அழைக்கப்படுகிறேன். (அவருக்குத் தலையில் ஒரு கொம்பு இருந்தது. அதனால் அந்தப் பெயர்.)

 

इहाश्रमपदोऽस्माकं समीपे शुभदर्शना:।
करिष्ये वोऽत्र पूजां वै सर्वेषां विधिपूर्वकम्।।1.10.15।।

மங்களகரமான பெண்களே! என்னுடைய ஆசிரமம் அருகில் தான் இருக்கிறது. (தயவு செய்து வாருங்கள்) நான் உங்களை முறைப்படி வரவேற்று உபசரிப்பேன்.

 

ऋषिपुत्रवचश्श्रुत्वा सर्वासां मतिरास वै।
तदाश्रमपदं द्रष्टुं जग्मुस्सर्वाश्च तेन ता:।। 1.10.16।।

ரிஷிபுத்திரனான ருஷ்யஸ்ருங்கரின் சொற்களைக் கேட்ட அந்த அழகிய மங்கையருக்கு, அவருடைய ஆசிரமத்தைக் காணும் விருப்பம் உண்டானதால், அவர்கள் அவரைப் பின் தொடர்ந்தனர்.

 

आगतानां तत: पूजामृषिपुत्रश्चकार ह।
इदमर्घ्यमिदं पाद्यमिदं मूलमिदं फलं च न:।।1.10.17।।

ருஷ்யஸ்ருங்கர்  அவர்களை மரியாதையுடன் வரவேற்று, அர்க்யம் ( நிவேதிக்கும் பொருட்கள்), பாத்யம் ( கால் கழுவும் நீர்) ஆகியவை கொடுத்துப் பின்னர், பழங்களையும், கிழங்குகளையும் கொடுத்தார்.

 

प्रतिगृह्य च तां पूजां सर्वा एव समुत्सुका:।
ऋषेर्भीताश्च शीघ्रं ता गमनाय मतिं दधु:।।1.10.18।।

ருஷ்யஸ்ருங்கர் அளித்த உபசாரங்களை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டாலும், அவருடைய தந்தையார் திரும்பி வந்து விடுவார் என்ற அச்சத்தால், விரைவில் அங்கிருந்து சென்று விடவேண்டும் என்று அந்தப் பெண்கள் தீர்மானித்தார்கள்.

 

अस्माकमपि मुख्यानि फलानीमानि वै द्विज ।
गृहाण प्रति भद्रं ते भक्षयस्व च मा चिरम्।।1.10.19।।

“அந்தணரே! இந்த அருமையான பழங்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் அதைச் சாப்பிடுங்கள். தாமதம் செய்ய வேண்டாம். “

 

ततस्तास्तं समालिङ्ग्य सर्वा हर्षसमन्विता:।
मोदकान्प्रददुस्तस्मै भक्ष्यांश्च विविधान् बहून्।।1.10.20।।

பின்னர், அந்த மங்கையர் ருஷ்யஸ்ருங்கரை மகிழ்ச்சியுடன் தழுவிக்கொண்டு, பல விதமான இனிய தின்பண்டங்களையும், உணவுப் பதார்த்தங்களையும் கொடுத்தார்கள்.

 

तानि चास्वाद्य तेजस्वी फलानीति स्म मन्यते।
अनास्वादितपूर्वाणि वने नित्यनिवासिनाम्।।1.10.21।।

காட்டில் வசிப்பவர் கொடுக்கும் பழங்கள் கிழங்குகள் முதலியவைகளை மட்டுமே சுவைத்திருந்த ருஷ்யஸ்ருங்கர், அந்தத் தின்பண்டங்களையும் பழங்கள் என்றே எண்ணினார்.

 

आपृच्छ्य च तदा विप्रं व्रतचर्यां निवेद्य च।
गच्छन्ति स्मापदेशात्ता भीतास्तस्य पितुस्स्त्रिय:।।1.10.22।।

ருஷ்யஸ்ருங்கருடைய தந்தையார் வந்து விடுவார் என்ற அச்சத்தினால், மாலையில் செய்ய வேண்டிய சடங்குகள் செய்ய வேண்டும்  என்ற காரணத்தைச் சொல்லி, அங்கிருந்து சென்று விட்டார்கள்.

 

गतासु तासु सर्वासु काश्यपस्यात्मजो द्विज:।
अस्वस्थहृदयश्चासीद्दु:खं स्म परिवर्तते।।1.10.23।।

அந்தப் பெண்கள் அங்கிருந்து சென்ற பிறகு, காஷ்யப குலத்து அந்தணரான ருஷ்யஸ்ருங்கர், மிகுந்த மனவருத்தம் அடைந்தார்.

 

ततोऽपरेद्युस्तं देशमाजगाम स वीर्यवान्।
मनोज्ञा यत्र ता दृष्टा वारमुख्यास्स्वलङ्कृताः।।1.10.24।।

அடுத்த நாள், தவத்தில் சிறந்த ருஷ்யஸ்ருங்கர், நல்ல அலங்காரத்துடன், மனத்தைக் கவரும் விதத்தில் இருந்த அந்தக் கணிகையர் இருந்த இடத்துக்கு வந்தார்.

 

दृष्ट्वैव च तास्तदा विप्रमायान्तं हृष्टमानसा:।
उपसृत्य ततस्सर्वास्तास्तमूचुरिदं वच:।।1.10.25।।

தங்களை நோக்கி வந்து கொண்டிருக்கும் ருஷ்யஸ்ருங்கரைக் கண்டு, மிகவும் மகிழ்ந்த அவர்கள், அவர் அருகில் வந்து, இவ்வாறு கூறினார்கள்:

 

एह्याश्रमपदं सौम्य ह्यस्माकमिति चाब्रुवन्।
तत्राप्येष विधिश्श्रीमान् विशेषेण भविष्यति।।1.10.26।।

“அழகிய அந்தணரே! எங்களுடைய ஆசிரமத்துக்கு வாருங்கள். உங்களுக்காக, சிறப்பான வரவேற்பு வழங்கப்படும்.”

 

श्रुत्वा तु वचनं तासां सर्वासां हृदयङ्गमम्।
गमनाय मतिं चक्रे तं च निन्युस्तदा स्त्रिय:।।1.10.27।।

மனதிற்கினிய இந்த வார்த்தைகளைக் கேட்ட ருஷ்யஸ்ருங்கர் அவர்களுடன் செல்லச் சம்மதித்தார். அவர்களும், அவரைத் தம்முடன் அழைத்துச் சென்றனர்.

 

तत्र चानीयमाने तु विप्रे तस्मिन्महात्मनि।
ववर्ष सहसा देवो जगत्प्रह्लादयंस्तदा।।1.10.28।।

அந்த ஒளி பொருந்திய முனிவர் அங்க தேசத்துக்கு அழைத்து வரப் பட்ட பொழுது, மழைக் கடவுள் இந்த உலகை மகிழ்விப்பதற்காக, திடீரென்று மழை பொழிந்தார்.

 

वर्षेणैवागतं विप्रं विषयं स्वं नराधिप:।
प्रत्युद्गम्य मुनिं प्रह्वश्शिरसा च महीं गत:।।1.10.29।।

வரும் பொழுதே, மழையை அழைத்து வந்த ருஷ்யஸ்ருங்க முனிவரைத் தானே, வெளியில் வந்து வரவேற்ற அரசர் ரோமபாதர், அவருக்குத் தலை வணங்கி, அவர் முன், கீழே விழுந்து நமஸ்காரம் செய்தார்.


अर्घ्यं च प्रददौ तस्मै न्यायतस्सुसमाहित:।
वव्रे प्रसादं विप्रेन्द्रान्मा विप्रं मन्युराविशेत्।।1.10.30।।

பிறகு அந்தணர்களுள் சிறந்தவரான ருஷ்யஸ்ருங்கருக்குப் பல விதமான அர்க்யங்கள் கொடுத்து, அவருடைய தந்தையாருடைய கோபம் தன்னைத் தண்டிக்காமல் செய்யுமாறு வரம் வேண்டினார்.


अन्त:पुरं प्रविश्यास्मै कन्यां दत्त्वा यथाविधि।
शान्तां शान्तेन मनसा राजा हर्षमवाप स:।।1.10.31।।

एवं स न्यवसत्तत्र सर्वकामैस्सुपूजित:।
 

பிறகு, அவரை அந்தப்புரத்துக்கு அழைத்துச் சென்று, தன் மகளான சாந்தாவை முறைப்படி மணம் செய்து கொடுத்து, மன நிம்மதியும், மிகுந்த மகிழ்ச்சியும் அடைந்தார். ருஷ்யஸ்ருங்கர், தன் அனைத்து விருப்பங்களும் நிறைவேற்றப் பட்டு, அங்கேயே வசிக்கத் தொடங்கினார்.”


इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे दशमस्सर्ग:।।

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் பத்தாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

***

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/                    

 

 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 11

(சுமந்திரர் சனத் குமாரர் சொன்ன கதையை மேலும் தொடர்கிறார். சுமந்திரரின் அறிவுரைப் படி, தசரதர், ரோமபாதரிடம் சென்று, அஸ்வமேத யாகம் செய்விக்க ருஷ்யஸ்ருங்கரின் உதவியை நாடுகிறார். ருஷ்யஸ்ருங்கர் அயோத்திக்கு வருகிறார்.)


भूय एव हि राजेन्द्र शृणु मे वचनं हितम्।
यथा स देवप्रवर: कथायामेवमब्रवीत्।।1.11.1।।

சுமந்திரர் சொன்னார்: “ அரசர்களுள் சிறந்தவரே! தேவர்களுள் மேன்மையானவரான சனத் குமாரர் மேலும் என்ன சொன்னார் என்பதைச் சொல்லுகிறேன். அதைக் கேட்பதால் உங்களுக்கு நன்மை உண்டாகும்.”

 

इक्ष्वाकूणां कुले जातो भविष्यति सुधार्मिक:।
राजा दशरथो नाम्ना श्रीमान्सत्यप्रतिश्रव:।।1.11.2।।

“இக்ஷ்வாகு வம்சத்தில், மங்களகரமானவரும், சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவரும், தர்மவானும் ஆன தசரதர் என்ற பெயருள்ள அரசர் தோன்றுவார்.


अङ्गराजेन सख्यं च तस्य राज्ञो भविष्यति।
कन्या चास्य महाभागा शान्ता नाम भविष्यति।।1.11.3।।

தசரதமன்னருக்கு, அங்க தேசத்து அரசருடன் நட்பு உண்டாகும். அந்த அரசருக்கு, பண்பில் சிறந்த சாந்தா என்ற மகள் பிறப்பாள்.

 

पुत्रस्तु सोऽङ्गराजस्य रोमपाद इति श्रुत:।
तं स राजा दशरथो गमिष्यति महायशा:।।1.11.4।।

அங்க தேசத்து அரசனான ரோமபாதனிடம், புகழ் பெற்ற  தசரத மன்னர் செல்வார்.

 

अनपत्योऽस्मि धर्मात्मन् शान्ताभर्ता मम क्रतुम्।
आहरेत त्वयाज्ञप्तस्सन्तानार्थं कुलस्य च।।1.11.5।।

“தர்மாத்வான அரசரே! நான் புத்ர பாக்யம் இல்லாதவனாக இருக்கிறேன். தயவு செய்து உங்கள் மகள் சாந்தாவின் கணவரை (ருஷ்யஸ்ருங்கரை) எனக்குப் புத்திரர்கள்பிறக்க வேண்டி, யாகம் நடத்திக் கொடுக்குமாறு, நீங்கள் கட்டளையிட வேண்டும். “ என்று வேண்டுவார்.

 

श्रुत्वा राज्ञोऽथ तद्वाक्यं मनसा स विचिन्त्य च।
प्रदास्यते पुत्रवन्तं शान्ताभर्तारमात्मवान्।।1.11.6।।

அந்தச் சொற்களைக் கேட்டு ரோமபாத மன்னர், தசரதருக்குப் புத்ர பாக்யம் உண்டாக்கும் வேள்வியை நடத்தும் திறனுள்ள ருஷ்யஸ்ருங்கரை, தசரதருடன் அனுப்பி வைக்கச் சம்மதிப்பார்.

 

प्रतिगृह्य च तं विप्रं स राजा विगतज्वर:।
आहरिष्यति तं यज्ञं प्रहृष्टेनान्तरात्मना।।1.11.7।।

தன் மனத்துயர் நீங்கிய தசரதர், அந்த அந்தணரின் உதவியால், முழு மனதுடன் யாகத்தை நடத்துவார்.

 

तं च राजा दशरथो यष्टुकाम: कृताञ्जलि:।
ऋश्यशृङ्गं द्विजश्रेष्ठं वरयिष्यति धर्मवित्।। 1.11.8।।

यज्ञार्थं प्रसवार्थं च स्वर्गार्थं च नरेश्वर:।
लभते च स तं कामं द्विजमुख्याद्विशांपति:।।1.11.9।।

தர்மங்களை நன்கு அறிந்த, சத்ய சந்தனாகிய தசரத மன்னர், இரு கைகளையும் கூப்பிக்கொண்டு, அந்தணர்களுள் சிறந்தவரான ருஷ்யஸ்ருங்கரிடம், புத்திரர்கள் பிறக்க வேண்டியும், பின்னர் ஸ்வர்க்கம் கிடைக்க வேண்டியும், யாகத்தை நடத்திக்கொடுக்குமாறு வேண்டித் தான் விரும்பியதை அடைவார்.

 

पुत्राश्चास्य भविष्यन्ति चत्वारोऽमितविक्रमा:।
वंशप्रतिष्ठानकरास्सर्वलोकेषु विश्रुता:।।1.11.10।।

தங்கள் குலத்துக்குப் பெருமை சேர்க்கும் படியான, அளவற்ற வீரமுடைய நான்கு புதல்வர்கள் அவருக்குப் பிறப்பார்கள். அவர்கள் உலகம் முழுவதும் புகழ் அடைவார்கள்.

 

एवं स देवप्रवर: पूर्वं कथितवान्कथाम्।
सनत्कुमारो भगवान्पुरा देवयुगे प्रभु:।।1.11.11।।

க்ருதயுகத்தில், தேவர்களுள் சிறந்தவரான சனத்குமாரர் இந்தக் கதையைக் கூறினார்.

 

स त्वं पुरुषशार्दूल तमानय सुसत्कृतम्।
स्वयमेव महाराज गत्वा सबलवाहन:।।1.11.12।।

மனிதர்களுள் சிறந்தவரே! பேரரசே! நீங்களே, படையுடனும், வாகனங்களுடனும், நேரில் சென்று, அவரை (ருஷ்யஸ்ருங்கரை) கௌரவத்துடன், இங்கு அழைத்து வாருங்கள்.


अनुमान्य वसिष्ठं च सूतवाक्यं निशम्य च।
सान्त:पुरस्सहामात्य: प्रययौ यत्र स द्विज:।।1.11.13।।

தேரோட்டியின் சொற்களைக் கேட்ட தசரத மன்னர், வசிஷ்டரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு, தன் அந்தப்புர அரசிகளுடனும், அமைச்சர்களுடனும், அந்த அந்தணர் (ருஷ்யஸ்ருங்கர்) இருக்கும் இடத்திய நோக்கிப் புறப்பட்டார்.



वनानि सरितश्चैव व्यतिक्रम्य शनैश्शनै:।
अभिचक्राम तं देशं यत्र वै मुनिपुङ्गव:।।1.11.14।।

மெதுவாகக் காடுகளையும், நதிகளையும் கடந்து, தவத்தில் சிறந்த அந்த அந்தணர்(ருஷ்யஸ்ருங்கர்) வசித்த இடத்தைச் சென்றடைந்தார்.


आसाद्य तं द्विजश्रेष्ठं रोमपादसमीपगम्।
ऋषिपुत्रं ददर्शादौ दीप्यमानमिवानलम्।।1.11.15।।

அந்த அரசவையில், அரசர் ரோமபாதருக்கு அருகில், நெருப்பைப் போல ஜ்வலித்துக்கொண்டு அமர்ந்திருந்த, அந்தண ஸ்ரேஷ்டரான ரிஷிபுத்திரரைக் (ருஷ்யஸ்ருங்கர்)  கண்டார்.

 
ततो राजा यथान्यायं पूजां चक्रे विशेषत:।
सखित्वात्तस्य वै राज्ञ: प्रहृष्टेनान्तरात्मना।।1.11.16।।

பின்னர், அரசர் ரோமபாதர், தசரத மன்னரை மனதார வரவேற்று, மகிழ்வுடனும், நட்புடனும், முறைப்படி, அவருக்குப் பூஜைகள் செய்தார்.


रोमपादेन चाख्यातमृषिपुत्राय धीमते।
सख्यं सम्बन्धकं चैव तदा तं प्रत्यपूजयत्।।1.11.17।।

ருஷ்யஸ்ருங்கருக்குத் தசரதருடன், தனக்கிருந்த நட்பைப் பற்றி ரோமபாதர் விளக்கிக் கூறியதும், ருஷ்யஸ்ருங்கரும் தசரதருக்குப் பூஜைகள் செய்தார்.

 

एवं सुसत्कृतस्तेन सहोषित्वा नरर्षभ:।
सप्ताष्टदिवसान्राजा राजानमिदमब्रवीत्।।1.11.18।।

இவ்வாறு, நன்கு மரியாதை செய்யப்பட்ட, மனிதர்களுள் சிறந்தவரான தசரதர், ரோமபாதருடன் ஏழெட்டு நாட்கள் தங்கி விட்டுப் பிறகு, இந்த வார்த்தைகளைக் கூறினார்.

 

शान्ता तव सुता राजन् सह भर्त्रा विशांपते।
मदीयनगरं यातु कार्यं हि महदुद्यतम्।।1.11.19।।

மக்களின் தலைவரே! என்னுடைய நகரத்தில் ஒரு முக்கியமான வேள்வியை நடத்த எண்ணியிருக்கிறேன். நீங்கள்உங்கள் மகளையும், அவளது கணவரையும் என் நகரத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


तथेति राजा संश्रुत्य गमनं तस्य धीमत:।
उवाच वचनं विप्रं गच्छ त्वं सह भार्यया।।1.11.20।।

தசரதரின் வேண்டுகோளுக்கு இணங்கிய ரோமபாதர், ருஷ்யஸ்ருங்கரிடம், “ நீங்கள் உங்கள் மனைவியுடன் போய் வாருங்கள்” என்று கூறி விடை கொடுத்தார்.

 

ऋषिपुत्र: प्रतिश्रुत्य तथेत्याह नृपं तदा।
स नृपेणाभ्यनुज्ञात: प्रययौ सह भार्यया।।1.11.21।।

மன்னர் சொன்ன சொற்களைக் கேட்ட ருஷ்யஸ்ருங்கர், ‘அப்படியே ஆகட்டும்’ என்று கூறி, மன்னருடைய அனுமதி பெற்றுத் தன் மனைவியுடன் (அயோத்திக்கு) புறப்பட்டார்.

 

तावन्योन्याञ्जलिं कृत्वा स्नेहात्संश्लिष्य चोरसा।
ननन्दतुर्दशरथो रोमपादश्च वीर्यवान्।।1.11.22।।

தசரதரும், ரோம பாதரும், மகிழ்ந்து, ஒருவரை ஒருவர் கை கூப்பி வணங்கி, மனதாரத் தழுவிக்கொண்டார்கள்.


ततस्सुहृदमापृच्छ्य प्रस्थितो रघुनन्दन:।
पौरेभ्य: प्रेषयामास दूतान्वै शीघ्रगामिन:।।1.11.23।।

பின்னர், தசரதர், தன் நண்பர் ரோமபாதரிடம் விடைபெற்று, அயோத்திக்குப் புறப்பட்டார். விரைந்து செல்லக்கூடிய தூதர்களிடம், நகர மக்களுக்கு,  இந்த செய்தியைச் சொல்லி அனுப்பினார்.

 

क्रियतां नगरं सर्वं क्षिप्रमेव स्वलङ्कृतम्।
धूपितं सिक्तसम्मृष्टं पताकाभिरलङ्कृतम्।।1.11.24।।

“நகரம் முழுவதையும் நன்றாக அலங்கரியுங்கள். தரையெல்லாம், தண்ணீர் தெளித்துச் சுத்தம் செய்து, வாசனைத் திரவியங்களைத் தெளித்துக், கொடிகளை ஏற்றி, நன்றாக அழகு படுத்துங்கள்.”

 

तत: प्रहृष्टा: पौरास्ते श्रुत्वा राजानमागतम्।
तथा प्रचक्रुस्तत्सर्वं राज्ञा यत्प्रेषितं तदा ।।1.11.25।।

அரசர் அயோத்திக்குத் திரும்ப வருகிறார் என்பதைக் கேட்டறிந்த நகர மக்கள், மிகவும் மகிழ்ந்து, அரசர் சொல்லி அனுப்பிய படியே, அனைத்தையும் செய்தார்கள்.


ततस्स्वलङ्कृतं राजा नगरं प्रविवेश ह।
शङ्खदुन्दुभिनिर्घोषै: पुरस्कृत्य द्विजर्षभम्।।1.11.26।।

தசரத மன்னர், மிகச் சிறந்த அந்தணரான ருஷ்யஸ்ருங்கரைத் தேரின் முன்புறம் அமர்த்தி, துந்துபிகளும், முரசுகளும் ஒலிக்க,  நன்றாக அலங்கரிக்கப்பட்ட நகரத்துக்குள் பிரவேசித்தார்.


तत: प्रमुदितास्सर्वे दृष्ट्वा तं नागरा द्विजम्।
प्रवेश्यमानं सत्कृत्य नरेन्द्रेणेन्द्रकर्मणा।।1.11.27।।

அயோத்தி மக்களனைவரும், வீரத்தில், தேவேந்திரனுக் கிணையான தசரதரால், நல்ல முறையில் கௌரவிக்கப்பட்ட அந்த அந்தணரைக் கண்டு, மனமகிழ்ந்தார்கள்.

 

अन्त:पुरं प्रवेश्यैनं पूजां कृत्वा च शास्त्रत:।
कृतकृत्यं तदात्मानं मेने तस्योपवाहनात्।।1.11.28।।

பின்னர் தசரதர், ருஷ்யஸ்ருங்கரை அந்தப் புரத்துக்கு அழைத்துச் சென்று, அங்கே, சாஸ்திர முறைப்படி அவருக்குப் பூஜைகள் செய்வித்த பின், தான் செய்ய வேண்டிய பெரிய காரியத்தைச் செய்து முடித்து விட்டதாக உணர்ந்தார்.

 

अन्त:पुरस्त्रियस्सर्वाश्शान्तां दृष्ट्वा तथागताम्।
सह भर्त्रा विशालाक्षीं प्रीत्यानन्दमुपागमन्।।1.11.29।।

அரச குலத்து மகளிர் அனைவரும், தன் கணவருடன் அங்கே வந்துள்ள (அகன்ற கண்களையுடைய) சாந்தாவைக் கண்டு, அன்பு பொங்க, மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

 

पूज्यमाना च ताभिस्सा राज्ञा चैव विशेषत:।
उवास तत्र सुखिता कञ्चित्कालं सहर्त्विजा।।1.11.30।।

அரச குலப் பெண்டிரும், குறிப்பாக, தசரதரும்  செய்த மரியாதைகளைப் பெற்றுக்கொண்டு,  தன் கணவரான ருஷ்யஸ்ருங்க முனிவருடன், சற்று நேரம் சாந்தா அங்கே தங்கி இருந்தாள்.


इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे एकादशस्सर्ग:।।

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் பதினொன்றாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

 

***

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/


ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 12

 (தசரதர் ரிஷ்யஸ்ருங்கரிடம் யாகத்தை நடத்திக் கொடுக்குமாறு வேண்டுகிறார். அவர் அந்த வேண்டுகோளை ஏற்று, யாகத்துக்கு வேண்டிய பொருள்களைச் சேகரிக்கவும், யாகக் குதிரையை அனுப்பவும் ஏற்பாடு செய்யச் சொல்கிறார். மன்னர் தன் அமச்சர்களிடத்தில், தேவையான ஏற்பாடுகளைக் கவனிக்கச் சொல்லி ஆணையிடுகிறார்.)

तत: काले बहुतिथे कस्मिंश्चित्सुमनोहरे।
वसन्ते समनुप्राप्ते राज्ञो यष्टुं मनोऽभवत्।।1.12.1।।

 

பிறகு, வெகு காலம் கழித்து, மனோகரமான வசந்த காலம் துவங்கிய போது, தசரத மன்னருக்கு, யாகம் செய்ய வேண்டும் என்ற விருப்பம் உண்டாயிற்று.


तत: प्रसाद्य शिरसा तं विप्रं देववर्णिनम्।
यज्ञाय वरयामास सन्तानार्थं कुलस्य वै।।1.12.2।।

அதன் படி, ஒரு தேவனைப் போல் ஒளி வீசிக்கொண்டிருந்த அந்த அந்தணரிடம் (ருஷ்யஸ்ருங்கர்) சென்று, அவரை வணங்கித் தன் குலத்தைச் செழிக்க வைக்கும் புத்திரபாக்கியத்திற்கான யாகம் செய்விப்பதற்கு, அவரை  அதிகார பூர்வ புரோகிதராக நியமித்தார்.


तथेति च स राजानमुवाच च सुसत्कृत:।
सम्भारा सम्भ्रियन्तां ते तुरगश्च विमुच्यताम्।।1.12.3।।

ருஷ்யஸ்ருங்கர், ‘அப்படியே ஆகட்டும்’ என்று சொல்லி, “ யாகத்துக்கு வேண்டிய பொருட்களைச் சேகரியுங்கள். அதற்கான உங்கள் குதிரையை அனுப்புங்கள்’ என்று கூறினார்.

 

ततो राजाऽब्रवीद्वाक्यं सुमन्त्रं मन्त्रिसत्तमम्।
सुमन्त्रावाहय क्षिप्रं ऋत्विजो ब्रह्मवादिन:।।1.12.4।।

सुयज्ञं वामदेवं च जाबालिमथ काश्यपम्।
पुरोहितं वसिष्ठं च ये चान्ये द्विजसत्तमा:।।1.12.5।।

பின்னர் தசரத மன்னர், அமைச்சர்களுள் சிறந்தவரான சுமந்திரரிடம், “ சுமந்திரரே! வேதங்களில் தேர்ந்த சுயக்ஞ்யர், வாமதேவர், ஜாபாலி, காஷ்யபர், ராஜ புரோகிதரான வசிஷ்டர் ஆகியோரையும், இன்னும் பல சிறந்த அந்தணர்களையும் உடனடியாக இங்கு வரவழையுங்கள்.”


ततस्सुमन्त्रस्त्वरितं गत्वा त्वरितविक्रम:।
समानयत्स तान्विप्रान् समस्तान्वेदपारगान्।।1.12.6।।

உடனே, சுமந்திரர் வேகமாகச் சென்று, வேதங்களில் தேர்ந்த அந்த அந்தணர்களை அழைத்து வந்தார்.

 

तान्पूजयित्वा धर्मात्मा राजा दशरथस्तदा।
धर्मार्थसहितं युक्तं श्लक्ष्णं वचनमब्रवीत्।।1.12.7।।

அவர்களைப் பூஜித்த தர்மாத்வான தசரதர், அறமுடையதும், பொருள் பொதிந்ததுமாகிய, இனிய வார்த்தைகளைக் கூறினார்.


मम लालप्यमानस्य पुत्रार्थं नास्ति वै सुखम्।
तदर्थं हयमेधेन यक्ष्यामीति मतिर्मम।।1.12.8।।

“புத்திரர்கள் இல்லாததால், மிகவும் வருந்தும் எனக்கு மகிழ்ச்சி என்பது இல்லை. அதற்காக வேண்டி அஸ்வமேத யாகம் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறேன்.”


तदहं यष्टुमिच्छामि शास्त्रदृष्टेन कर्मणा।
ऋषिपुत्रप्रभावेन कामान्प्राप्स्यामि चाप्यहम्।।1.12.9।।

சாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ள படி அனைத்து ஆன்மீகச் சடங்குகளையும் செய்து, இந்த வேள்வியைப் பூர்த்தி செய்து, ரிஷி புத்திரரான ருஷ்யஸ்ருங்கரின் அருளால், என் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்வேன்.”


ततस्साध्विति तद्वाक्यं ब्राह्मणा: प्रत्यपूजयन्।
वसिष्ठप्रमुखास्सर्वे पार्थिवस्य मुखाच्च्युतम्।।1.12.10।।

அரசரின் வாயில் இருந்து வந்த இந்த வார்த்தைகளைக் கேட்டு, வசிஷ்டர் முதலாய அந்தணர்கள், “ நன்று! நன்று!” எனப் பாராட்டினார்கள்.

 

ऋष्यशृङ्गपुरोगाश्च प्रत्यूचुर्नृपतिं तदा।
सम्भारास्सम्भ्रियन्तां ते तुरगश्च विमुच्यताम्।।1.12.11।।


ருஷ்யஸ்ருங்கரின் தலைமையில் இருந்த அந்தப் புரோகிதர்கள், “ யாகத்துக்கு வேண்டிய பொருள்கள் சேகரிக்கப்படட்டும். குதிரையும் அனுப்பப் படட்டும்”

 

सर्वथा प्राप्स्यसे पुत्रांश्चत्वारोऽमितविक्रमान्।
यस्य ते धार्मिकी बुद्धिरियं पुत्रार्थमागता ।।1.12.12।।

‘புத்திரர்களை அடைய வேண்டும் என்ற இந்த மேலான எண்ணம் உங்களுக்கு வந்திருப்பதால், வீரமும் சக்தியும் நிறைந்த நான் கு புதல்வர்களைப் பெறுவீர்கள்” என்று கூறினார்கள்.

 

तत: प्रीतोऽभवद्राजा श्रुत्वा तद्विजभाषितम्।
अमात्यांश्चाब्रवीद्राजा हर्षेणेदं शुभाक्षरम्।।1.12.13।।

அந்த அந்தணர்களின் வார்த்தைகளைக் கேட்ட அரசர் மிகவும் மகிழ்ந்து, இந்த மங்களகரமான சொற்களைச் சொன்னார்.

 

गुरूणां वचनाच्छीघ्रं सम्भारास्सम्भ्रियन्तु मे।
समर्थाधिष्ठितश्चाश्वस्सोपाध्यायो विमुच्यताम्।।1.12.14।।

“என் குருமார்கள் கூறியபடி, யாகத்துக்கு வேண்டிய பொருள்களைச் சேகரிப்பேன். தலைமைப் புரோகிதருடன், திறமையான படைவீரர்களின் பாதுகாப்பில் குதிரையையும் அனுப்புவேன்.

 

सरय्वाश्चोत्तरे तीरे यज्ञभूमिर्विधीयताम्।
शान्तयश्चाभिवर्धन्तां यथाकल्पं यथाविधि।।1.12.15।।

ஸரயு நதிக்கு வடக்கே, ஒரு யாகசாலை அமைக்கப்படட்டும். சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளின் படி, சாந்தி கர்மங்களும், செய்யப்படட்டும்.

 

शक्य: प्राप्तुमयं यज्ञस्सर्वेणापि महीक्षिता।
नापराधो भवेत्कष्टो यद्यस्मिन्क्रतुसत्तमे।।1.12.16।।

எந்த ஒரு அரசரும், இந்த மிகச்சிறந்த யாகத்தை, எந்த விதமான தடைகளும், தவறுகளும் நேராமல் நடத்தி முடித்தால், அவர் விரும்பிய பலனை நிச்சயம் பெறலாம்.

 

छिद्रं हि मृगयन्तेऽत्र विद्वांसो ब्रह्मराक्षसा:।
निहतस्य च यज्ञस्य सद्य: कर्ता विनश्यति।।1.12.17।।

கல்வி கற்றிருந்தும், சாபத்தினால் பிரம்ம ராட்சஸர்களாக மாறியவர்கள், இந்த யாகங்களில் எதாவது குற்றம் குறைகள் அகப்படாதா என்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். அப்படிக் கிடைத்து விட்டால், யாகம் செய்பவரையே அழித்து விடுவார்கள்.

तद्यथा विधिपूर्वं मे क्रतुरेष समाप्यते।
तथा विधानं क्रियतां समर्था: करणेष्विह।।1.12.18।।

ஆகவே, அனைத்து ஏற்பாடுகளும், சாஸ்திரங்களில் சொல்லப் பட்டுள்ள படி , முறையாகச் செய்யப் படவேண்டும். நீங்கள் எல்லாம் அப்படிச் செய்வதில் நிபுணர்கள்.”

 

तथेति च ततस्सर्वे मन्त्रिण: प्रत्यपूजयन्।
पार्थिवेन्द्रस्य तद्वाक्यं यथाज्ञप्तमकुर्वत।।1.12.19।।

அந்த அமைச்சர்கள், அரசருடைய இந்தச் சொற்களை மதித்து, “தங்கள் கட்டளைப் படியே” என்று பதிலிறுத்தார்கள்.

 

ततो द्विजास्ते धर्मज्ञमस्तुवन्पार्थिवर्षभम्।
अनुज्ञातास्ततस्सर्वे पुनर्जग्मुर्यथागतम्।।1.12.20।।

பின்னர், தர்மங்களை அறிந்தவர்களான அந்த அந்தணர்கள், தசரத மன்னரை வணங்கி, விடைபெற்றுச் சென்றனர்.

 

गतेष्वथ द्विजाग्य्रेषु मन्त्रिणस्तान्नराधिप:।
विसर्जयित्वा स्वं वेश्म प्रविवेश महाद्युति:।।1.12.21।।

அந்தச் சிறந்த அந்தணர்கள் விடை பெற்றுச் சென்ற பின்னர், அமைச்சர்களையும் அனுப்பி விட்டுத்
தசரத மன்னர் தன் அந்தப் புரத்துக்குள் பிரவேசித்தார்.


इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे द्वादशस्सर्ग:।।2

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் பன்னிரண்டாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

 

***

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

 

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/


ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 13

( தசரதர் வசிஷ்டரிடம், யாகத்தைத் தொடங்குமாறு வேண்டிக்கொள்கிறார். பல துறைகளிலும் புகழ் பெற்ற நிபுணர்களை யாகம் சம்பந்தப்பட்ட வேலைகளைப் பார்த்துக் கொள்ளுமாறு பணிக்கிறார். சுமந்திரரிடம் பல தேசத்து அரசர்களையும் யாகத்துக்கு அழைக்கச் சொல்கிறார். வந்தவர்களை மரியாதையுடன் வரவேற்கிறார். பின்னர், தன் மனைவிகளுடன் யாகத்தைத் தொடங்குகிறார். )

 

पुन: प्राप्ते वसन्ते तु पूर्णस्संवत्सरोऽभवत्।–
प्रसवार्थं गतो यष्टुं हयमेधेन वीर्यवान्।।1.13.1।।

வஸந்த காலம் மீண்டும் வந்த போது, ஒரு வருடம் ஆகியிருந்தது. வலிமை மிகுந்த தசரத மன்னர், தேவதைகளை வேண்டிப் புதல்வர்களை அடைவதற்காக, யாக சாலைக்குள் நிழைந்தார்.


अभिवाद्य वसिष्ठं च न्यायत: परिपूज्य च।
अब्रवीत्प्रश्रितं वाक्यं प्रसवार्थं द्विजोत्तमम्।।1.13.2।।

அந்தணர்களுள் சிறந்தவரான வசிஷ்டரை வணங்கி, அவருக்கு, முறைப்படி பூஜைகள் செய்த தசரதர், புதல்வர்கள் கிடைக்க வேண்டி, மிகவும் பணிவுடன் கூறினார்:

 

यज्ञो मे क्रियतां ब्रह्मन्यथोक्तं मुनिपुङ्गव।
यथा न विघ्न: क्रियते यज्ञाङ्गेषु विधीयताम्।।1.13.3।।

“முனிவர்களுள் சிறந்தவரே! எந்த விதமான தடைகளும் இன்றி, இந்த யாகம் நிறைவேறும் பொருட்டு, முறைப்படி செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்யுங்கள்.

 

भवान् स्निग्धस्सुहृन्मह्यं गुरुश्च परमो महान्।
ओढव्यो भवता चैव भारो यज्ञस्य चोद्यत:।।1.13.4।।

தாங்கள் தான் என் மேல் அன்பு கொண்ட நண்பரும், எனது மிக்ச்சிறந்த ஆன்மீக குருவும் ஆவீர்கள். இப்போது துவங்கியுள்ள் இந்த யாகத்தின் முழுப் பொறுப்பையும் தாங்கள் தான் ஏற்க வேண்டும். “

 

तथेति च स राजानमब्रवीद्द्विजसत्तमः।
करिष्ये सर्वमेवैतद्भवता यत्समर्थितम्।।1.13.5।।

அந்தணர்களுள் சிறந்த வசிஷ்டரும், “தாங்கள் கூறியபடியே எல்லாவற்றையும் செய்கிறேன்” என்று அரசருக்கு உறுதி அளித்தார்.


ततोऽब्रवीद्विजान्वृद्धान्यज्ञकर्मसु निष्ठितान्।
स्थापत्ये निष्ठितांश्चैव वृद्धान्परमधार्मिकान्।।1.13.6।।

कर्मान्तिकान् शिल्पकरान्वर्धकीन् खनकानपि।
गणकान्शिल्पिनश्चैव तथैव नटनर्तकान्।।1.13.7।।

तथा शुचीन्शास्त्रविद: पुरुषान् सुबहुश्रुतान्।
यज्ञकर्म समीहन्तां भवन्तो राजशासनात्।।1.13.8।।

इष्टका बहु साहस्राश्शीघ्रमानीयतामिति। 0
उपकार्या: क्रियन्तां च राज्ञां बहुगुणान्विता:।।1.13.9।।

அதன் பிறகு, வசிஷ்டர் யாகம் செய்விப்பதில் அனுபவம் உள்ள மூத்த அந்தணர்களையும், சிற்ப வேலைப்பாட்டில் கை தேர்ந்த சிற்பிகளையும், சிறந்த தச்சர்களையும், கிணறு வெட்டுபவர்களையும், சிறந்த முறையில் கணக்கு வைத்துக் கொள்பவர்களையும், கைவினை செய்பவர்களையும், செங்கற்களைச் செய்பவர்களையும், நடனமாடுபவர்களையும், நடிகர்களையும், சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்தவர்களையும், நேர்மையானவர்களையும், பல விஷயங்களைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பவர்களையும், வரவழைத்தார்.  பிறகு, யாகம் செய்விப்பவர்களிடம், “ அரசருடைய ஆணைப்படி, யாகத்துக்கான சடங்குகளைத் தொடங்குங்கள்” என்று கூறினார். செங்கல் செய்பவர்கள், கட்டிடம் கட்டுவோர் ஆகியோரிடம் , “ஆயிரக்கணக்கான செங்கற்களைக் கொண்டு தற்காலிகமாகத் தங்குவதற்கான கட்டிடங்கள் எழுப்புங்கள். வந்திருக்கும் விருந்தினருக்கு, அனைத்து வித வசதிகளும் நிறைந்த, தங்குமிடங்களை அமையுங்கள் “

 

ब्राह्मणावसथाश्चैव कर्तव्याश्शतशश्शुभा:।
भक्ष्यान्नपानैर्बहुभिस्समुपेतास्सुनिष्ठिता:।।1.13.10।।


அந்தணர்கள் தங்குவதற்கு, நிறைய உணவுப் பொருட்களும், பானங்களும் நிறைந்த,  நூற்றுக்கணக்கான தூய்மையான தங்குமிடங்களை அமையுங்கள்.

 

तथा पौरजनस्यापि कर्तव्या बहुविस्तरा:।
आवासा बहुभक्ष्या वै सर्वकामैरुपस्थिता:।।1.13.11।।

நகர மக்கள் தங்குவதற்கு, நிறைய உணவுப்பொருட்களுடனும், அவர்களுடைய எல்லா விருப்பங்களும் நிறைவேறுவதற்கான ஏற்பாடுகளுடனும் கூடிய, விஸ்தாரமான  தங்குமிடங்களை அமையுங்கள்.


तथा जानपदस्यापि जनस्य बहुशोभनम्।
दातव्यमन्नं विधिवत्सत्कृत्य न तु लीलया।।1.13.12।।

அதே போல, கிராமத்து மக்களுக்கும், சிறந்த உணவுகளை, முறைப்படி உபசரித்துக் கொடுங்கள். அலட்சியமாகக் கொடுக்கக் கூடாது.

 

सर्वे वर्णा यथा पूजां प्राप्नुवन्ति सुसत्कृता:।
न चावज्ञा प्रयोक्तव्या कामक्रोधवशादपि।।1.13.13।।

அனைத்து வர்ணத்தினரும், மரியாதையுடன் நடத்தப் படவேண்டும். தனிப்பட்ட விருப்பம், கோபம் ஆகியவற்றால், யாரையும் அவமானப் படுத்தக்கூடாது.


यज्ञकर्मसु ये व्यग्रा: पुरुषाश्शिल्पिनस्तथा।
तेषामपि विशेषेण पूजा कार्या यथाक्रमम्।।1.13.14।।

ते च स्युस्सम्भृतास्सर्वे वसुभिर्भोजनेन च।

யாக காரியத்தில் ஈடுபட்டுள்ள சிற்பிகளையும் சிறப்பாக கௌரவித்து அவர்களைப் பணத்தாலும், உணவுகளாலும் திருப்திப் படுத்த வேண்டும்.

 

यथा सर्वं सुविहितं न किञ्चित्परिहीयते।।1.13.15।।
तथा भवन्त: कुर्वन्तु प्रीतिस्निग्धेन चेतसा।

எல்லாவற்றையும் சரியாகச் செய்ய வேண்டும். ஒரு சிறிய விஷயத்தைக்கூட விட்டு விடக்கூடாது. எல்லா வேலைகளையும், மனமார்ந்த அன்புடன் செய்யுங்கள்.”

 

ततस्सर्वे समागम्य वसिष्ठमिदमब्रुवन्।।1.13.16।।

यथोक्तं तत्सुविहितं न किञ्चित्परिहीयते।
यथोक्तं तत्करिष्यामो न किञ्चित्परिहास्यते।।1.13.17।।

இதைக்கேட்ட அவர்கள் வசிஷ்டரிடம் வந்து, “தாங்கள் கூறிய படியே, எதையும் விட்டு விடாமல் எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டோம். இனிமேலும், தாங்கள் கூறிய படியே, எதையும் விட்டு விடாமல், சரியாகச் செய்வோம்” என்று பதில் கூறினார்கள்.

 

ततस्सुमन्त्रमानीय वसिष्ठो वाक्यमब्रवीत्।
निमन्त्रयस्व नृपतीन्पृथिव्यां ये च धार्मिका:।।1.13.18।।

பின்னர், வசிஷ்டர் சுமந்திரரை அழைத்து, “ இந்தப் பூமியில் உள்ள தர்மத்தைக் கடைப் பிடிக்கும் அரசர்கள் அனைவரையும் அழையுங்கள்.

 

ब्राह्मणान्क्षत्रियान्वैश्याञ्छूद्रांश्चैव सहस्रश:।
समानयस्व सत्कृत्य सर्वदेशेषु मानवान्।।1.13.19।।

அனைத்து நாடுகளிலும் வசிக்கும், ஆயிரக்கணக்கான அந்தணர்களையும், க்ஷத்திரியர்களையும், வைசியர்களையும், நான்காம் வர்ணத்தினரையும், மரியாதையுடன் அழையுங்கள். (பிற நாடுகளில் வர்ணாசிரமப் பாகுபாடு இருக்கிறதா என்ற ஐயம் எழலாம். எல்லா நாடுகளிலும், கற்பிப்பவர்கள், ஆட்சி செய்பவர்கள், விவசாயம், வாணிகம் ஆகியவை செய்பவர்கள், கட்டளைகளை நிறைவேற்றுபவர்கள் ஆகியோர், உண்டு தானே!)

 

मिथिलाधिपतिं शूरं जनकं सत्यविक्रमम्।
निष्ठितं सर्वशास्त्रेषु तथा वेदेषु निष्ठितम्।।1.13.20।।

तमानय महाभागं स्वयमेव सुसत्कृतम्।
पूर्वसम्बन्धिनं ज्ञात्वा तत: पूर्वं ब्रवीमि ते।।1.13.21।।

மிகச்சிறந்த போர்வீரரும், உண்மையையே, தனது வலிமையாகக் கொண்டவரும், அனைத்து சாஸ்திரங்களிலும், விற்பன்னரும், மிதிலையின் அரசரும் ஆன புகழ் பெற்ற ஜனக மஹாராஜாவை, நீங்களே நேரில் சென்று, அழையுங்கள். அவர் நமது பழைய நண்பர் என்பதால், முன்னமேயே உங்களுக்குச் சொல்கிறேன்.

 

तथा काशीपतिं स्निग्धं सततं प्रियवादिनम्।
वयस्यं राजसिंहस्य स्वयमेवानयस्व ह।।1.13.22।।

அதே போல், அன்பு நிறைந்தவரும், இனிமையாகப் பேசுபவரும், அரசர்களுக்குள் சிங்கம் போன்றவரும், நல்ல நண்பரும் ஆன காசி தேசத்து மன்னரை, நீங்களே சென்று அழைத்துக் கொண்டு வாருங்கள்.

 

तथा केकयराजानं वृद्धं परमधार्मिकम्।
श्वशुरं राजसिंहस्य सपुत्रं त्वमिहानय।।1.13.23।।

பின்னர், சிறந்த தார்மீகரானவரும், அரசர்களுள் சிங்கம் போன்றவரும், நம் அரசர் தசரதரின் மாமனாருமான, வயது முதிர்ந்த கேகய தேசத்து அரசரையும், அவருடைய புதல்வர்களையும் அழைத்து வாருங்கள்.

 

अङ्गेश्वरम् महाभागं रोमपादं सुसत्कृतम्।
वयस्यं राजसिंहस्य समानय यशस्विनम्।।1.13.24।।

அரசர்களுள் சிறந்தவரும்,  நமது அரசரின் நெருங்கிய நண்பரும் ஆன, புகழ் பெற்ற  அங்க தேசத்து அரசர் ரோமபாதரை, கௌரவத்துடன் அழைத்து வாருங்கள்.

 

प्राचीनान्सिन्धु सौवीरान्सौराष्ट्रेयांश्च पार्थिवान्।
दाक्षिणात्यान्नरेन्द्रांश्च समस्तानानयस्व ह।।1.13.25।।

கிழக்குத் திசையில் உள்ள பழமையான தேசங்களின் மன்னர்களையும், சிந்து, சௌவீரம், சௌராஷ்டிரம் ஆகிய தேசங்களின் மன்னர்களையும்,  தெற்குப் பகுதியில் ஆட்சி செய்து வரும் மன்னர்களையும் அழையுங்கள்.

 

सन्ति स्निग्धाश्च ये चान्ये राजान: पृथिवीतले।
तानानय यथाक्षिप्रं सानुगान्सह बान्धवान्।।1.13.26।।

இன்னும், இந்த உலகத்தில், நம்முடன் நட்பு பாராட்டும் அரசர்கள் அனைவரையும், அவர்களுடைய குடும்பத்தினருடனும், பரிவாரங்களுடனும், அழையுங்கள்.”

वसिष्ठवाक्यं तच्छ्रुत्वा सुमन्त्रस्त्वरितस्तदा।
व्यादिशत्पुरुषांस्तत्र राज्ञामानयने शुभान्।।1.13.27।।

வசிஷ்டரின் வார்த்தைகளைக் கேட்ட சுமந்திரர், அந்த மன்னர்களையெல்லாம் அழைத்து வர ஆணையிட்டு, மரியாதைக்குரிய மனிதர்களை அனுப்பினார்.


स्वयमेव हि धर्मात्मा प्रययौ मुनिशासनात्।
सुमन्त्रस्त्वरितो भूत्वा समानेतुं महीक्षित:।।1.13.28।।


முனிவரின் கட்டளைப்படி,  நேரில் அழைக்கப் படவேண்டிய ( ஜனகர் முதலாய) அரசர்களைத் தாமே சென்று அழைத்து வருவதற்காகச் சுமந்திரர் விரைந்தார்.

 

ते च कर्मान्तिकास्सर्वे वसिष्ठाय च धीमते।
सर्वं निवेदयन्ति स्म यज्ञे यदुपकल्पितम्।।1.13.29।।

கட்டளைகளைச் சரியாக நிறைவேற்றிய அனைத்து வேலையாட்களும், தாங்கள் காரியங்களைச் செய்து முடித்ததை அறிவிப்பதற்காக, அறிஞரான வசிஷ்டர் முன் கூடினார்கள்.

 

तत:प्रीतो द्विजश्रेष्ठस्तान् सर्वानिदमब्रवीत् ।
अवज्ञया न दातव्यं कस्यचिल्लीलयाऽपि वा।।1.13.30।।

अवज्ञया कृतं हन्याद्दातारं नात्र संशय:। 28

அதைக் கேட்டு மகிழ்ந்த வசிஷ்ட முனிவர் அவர்களிடம் கூறினார்,” யாருக்கும், எதையும், மரியாதையில்லாமலோ, அலட்சியத்துடனோ, கொடுக்காதீர்கள். அவ்வாறு அசட்டையுடன் கொடுக்கப் படும் தானமானது, தானம் கொடுத்தவருக்கே தீங்கு விளைவிக்கும். “

 

तत: कैश्चिदहोरात्रैरुपयाता महीक्षित:।।1.13.31।।
बहूनि रत्नान्यादाय राज्ञो दशरथस्य वै।

இதற்கிடையில்,  இரவும் பகலும் பிரயாணித்துக்கொண்டு வந்த அரசர்கள், தசரத மன்னருக்குப் பலவித ரத்தினங்களைப் பரிசாகக் கொண்டு வந்தார்கள்.

 

ततो वसिष्ठस्सुप्रीतो राजानमिदमब्रवीत्।।1.13.32।।

उपयाता नरव्याघ्र राजानस्तव शासनात्।
मयापि सत्कृता: सर्वे यथार्हं राजसत्तमा:।।1.13.33।।

பின்னர், தசரத மன்னரிடம், வசிஷ்ட முனிவர் மகிழ்ச்சியுடன் கூறினார், “மனிதர்களுள் சிறந்தவரே! தங்கள் ஆணைப்படி, பல தேசங்களில் இருந்தும் மன்னர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களையெல்லாம் முறைப்படி வரவேற்று அவர்களுக்கேற்ற விருந்தோம்பலுக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன்.

 

यज्ञीयं च कृतं राजन् पुरुषैस्सुसमाहितै:।
निर्यातु च भवान्यष्टुं यज्ञायतनमन्तिकात्।।1.13.34।।

“அரசே! யாக விதிகளை நன்றாக அறிந்துள்ளவர்கள் எல்லா ஏற்பாடுகளையும்  செய்திருக்கிறார்கள். அருகிலுள்ள யாக சாலைக்கு, யாகம் செய்வதற்காகத் தாங்கள் எழுந்தருள வேண்டும்.”

 

सर्वकामैरुपहृतैरुपेतं च समन्तत:।
द्रष्टुमर्हसि राजेन्द्र मनसेव विनिर्मितम्।।1.13.35।।

மன்னருள் முதன்மையானவரே! கற்பனையால் உருவாக்கியதைப் போல, பலவிதமான மன மகிழ்ச்சி தரும் பொருட்களுடன், நிர்மாணிக்கப் பட்டுள்ள யாக சாலையைத் தாங்கள் பார்க்க வேண்டும்.

 

तथा वसिष्ठवचनादृश्यशृङ्गस्य चोभयो:।
शुभे दिवसनक्षत्रे निर्यातो जगतीपति:।।1.13.36।।

வசிஷ்டர், ருஷ்யஸ்ருங்கர் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி, நல்ல நக்ஷத்திரம் உடைய ஒரு நல்ல நாளில், தசரதர், யாக சாலைக்குள் பிரவேசித்தார்.

 

ततो वसिष्ठप्रमुखास्सर्व एव द्विजोत्तमा:।
ऋश्यशृङ्गं पुरस्कृत्य यज्ञकर्मारभन् तदा।।1.13.37।।

यज्ञवाटगतास्सर्वे यथाशास्त्रं यथाविधि। 3

அதைத் தொடர்ந்து, ருஷ்யஸ்ருங்கருடைய தலைமையிலும், வசிஷ்டரின் வழிகாட்டுதலிலும், அந்தணஸ்ரேஷ்டர்கள், யாகத்திற்காக அமைக்கப்பட்ட பகுதியில் பிரவேசித்து, சாஸ்திரங்களில் கூறியுள்ள விதி முறைகளின் படி, யாகத்தைத் தொடங்கினார்கள்.


इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे त्रयोदशस्सर्ग:।।

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் பதின்மூன்றாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

***

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

 

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

No comments:

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...