கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் முடிவு செய்யப்பட்டு, குடும்பத்தினரால் அங்கீகரிக்கப்பட்ட பின் என்னுடைய விருப்ப ஒய்வு விண்ணப்பம் வங்கியில் தரப்பட்டது. சில பல எகிறல்களுக்குப்பின் அந்த விண்ணப்பம் வீணாய் போனது .
ஆனால் அதற்குள் பதினெட்டு பட்டிக்கும் என்னுடைய விருப்ப ஒய்வு முடிவு காட்டுத்தீயாய் பரவி இருந்தது. கதை துன்பத்தில் முடிந்தது. சூடும் தணிந்து வந்தது. துக்க விசாரிப்புக்கள் தொடர் கதையாய் இருந்தன. நான் திரும்ப வங்கிக்கு சென்றதில் என் அம்மாவுக்கும் வருத்தம் தான். கிட்டத்தட்ட ஒய்வு பெற்ற மனோ நிலைக்கு தள்ளப்பட்ட பின் மீண்டும் பணிக்கு சென்றது எனக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. விருப்ப ஓய்வை ஆயுதமாக பயன்படுத்துவதாக சக நண்பர்கள் நினைக்கத்துவங்கி இருந்தார்கள். இடையில் தாயின் மரணமும் என் மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. வலி நிவாரண மாத்திரைகள் என் வாழ்கையின் வழியாகிப்போனது. வலி இல்லாத வாழ்க்கை மறந்து விட்டிருந்தது. வேலைப்பளுவும் வலிக்கு எண்ணை ஊற்றியது. எனவே மீண்டும் ஜனவரியில் நாள் குறித்து, அதுவும் தள்ளிப்போய் , மார்ச்சில் விண்ணப்பிக்க, இவன் அவ்வளவுதான் என வங்கியும் நினைத்துவிட, கதையின் முடிவு சுபம். மார்ச் 31- வங்கிப்பணியில் எனது இறுதி நாள். 29 வருடங்கள், 10 மாதங்கள் மற்றும் 7 நாட்களுக்கான என் வங்கி வாழ்க்கை நிறைவுக்கு வந்தது. எனது முடிவை தைரியத்துடன் ஆதரித்த என் மனைவிக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். என்னுடை இரு பிள்ளைகளுக்கும் இதில் மகிழ்ச்சியே. இனி என் கனவுகள் நிறைவேற கடவுள் துணை நிற்க வேண்டும்.