Thursday, January 12, 2023

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தரகாண்டம். ஏழாவது ஸர்கம்.

 

       ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தரகாண்டம்.

 

ஏழாவது ஸர்கம்.

புஷ்பக விமானத்தைக் கண்ணுற்றல்


   


     மழைக்காலத்தில் ஆகாயத்தில் பறவைக்கூட்டங்களுடனும், மின்னல்களுடனும் கூடியதான மேகக்கூட்டங்களின் வரிசையைப்போல, வைர வைடூரியங்கள் பதிக்கப்பட்டு தங்கத்தால் செய்யப்பட்டு மின்னிக்கொண்டிருக்கும் ஜன்னல்களைக் கொண்ட வீடுகளின் வரிசையை, வலிமைமிக்க ஸ்ரீஅனுமன் கண்டார்.

     அங்கே பற்பலவிதமான அரங்கங்களையும், வில், சங்கு போன்ற ஆயுதங்கள் இருக்கும் அரங்குகளையும், அளவிற் பெரியதான கூடங்களையும், மாடங்களையுமுடைய வீடுகளையும், மலையைப் போன்ற உயரம் மிக்க வீடுகளின் மேல் நிலாமுற்றங்களையும் கண்டார்.    

     தேவர்கள் மற்றும் அசுரர்களால் போற்றப்படுவதாகவும், யாதொருவகையான குற்றமற்றதாகவும், பலவிதமான பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகவும், ஆற்றலினால் பெறப்பட்டதாகவும் அந்த வீடுகள் விளங்கியதை அந்த வானரர் கண்டார்.

     பெரும் முயற்சியால் கட்டப்பட்ட அந்த இலங்கையரசனின் வீடுகள்,  மயனால் கட்டப்பட்டவை போலவும், இந்த நிலவுலகத்தின் எல்லாவிதமான நற்பேறுகளையும் பெற்றவயாகவும் விளங்கியதை அவர் கண்டார்.

     பிறகு அவர், உயரத்தில் இருக்கும் மேகம் போன்று காட்சிக்கினியதாகவும், தங்கம் போல ஒளிர்வதும், இராவணனின் ஆற்றலையும் பெருமையையும் பறைசாற்றுவதாகவும் இருக்கும் அவனது மாளிகை போன்ற புஷ்பக விமானத்தைக் கண்டார்.

     நல்லோருலகமே(ஸ்வர்க்கம்) பூவுலகில் வந்திறங்கியதை போல இருந்த அந்த விமானம், திருவருள் மிகநிரம்பப்பெற்றதாகவும், பலவிதமான இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்டு ஒளிரக்கூடியதாகவும், விதவிதமான மரங்களின் பூக்களாலும் அவற்றின் மகரந்தங்களாலும் அழகுற விளங்கும் மலையுச்சியைப் போலவும் இருந்தது.

     மின்னல்களால் ஒளிரும் மேகம்போல, ஒளிமிகுந்த உயர்குலப் பெண்களால் நிரம்பியிருந்த அந்த விமானமானது, திருவருள் நிரம்பப்பெற்று, மிகச்சிறப்பான அன்னப்பறவைகளால் தாங்கப்பட்டிருப்பது போலவும்,      வான்வழியே பயணம் செய்யும் நற்செயலாற்றியோர் விமானம் போலவும் விளங்கியதைக் கண்டார்.   

      பலநிறப் பாறைகளால் மிளிரும் மலைச்சிகரம் போலவும், சந்திரன் முதலான கோள்களால் அலங்கரிக்கப்பட்ட ஆகாயம் போலவும்,  பலநிறங்களில் ஒளிரும் மேகக்கூட்டம் போலவும், பற்பல விலைமதிப்பற்ற இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்டு, விமானங்களுள் மிகச் சிறந்தது போலவும் அந்த புஷ்பக விமானம் விளங்கியதைக் கண்டார்.

     அந்த விமானத்தின் தரைப்பகுதியில் வரிசையான மலைகளும், அந்த மலைகளில் அடர்த்தியான மரங்களும், அந்த மரங்களில் பலவண்ணப்ப் பூக்களும், அந்த பூக்களில் செந்நிறமான இதழ்களும் மகரந்தங்களும் வடிவமைக்கப்பட்டிருந்தன.

     மேலும் அந்த விமானத்தில், வெண்மையான அரங்கங்களும், அழகிய மலர்கள் பூத்துக்குலுங்கும் வாவிகளும், செந்தாமரை மலர்களும், வியப்பளிக்கும் காடுகளும், ஓடைகளும் வடிவமைக்கப்பட்டிருந்தன.

     பலவிதமான இரத்தினக்கற்களால் ஒளிமயமாக விளங்கிக்கொண்டும், மிகச் சிறந்த மாளிகைகளுக்குள் மிகவும் சிறந்ததாக விளங்கிக்கொண்டும், புஷ்பகம் என்னும் பெயருடன் விளங்கிக்கொண்டுமிருந்த அந்த விமானத்தை அந்தப் பெரும் வானரர் பார்த்தார்.

     மேலும் அந்த விமானத்தினுள், வெள்ளி, பவழம், மற்றும் வைடூரியக்கற்களால் அழகுற செய்யப்பட்ட பறவைகளின் உருவங்களும், பல்வேறு இரத்தினக்கற்களால் புனையப்பட்ட பாம்புகளின் உருவங்களும், தமது மேலான இனத்திற்கேற்ற வடிவழகுடன் செய்யப்பட்ட குதிரை உருவங்களும்  இருந்ததைக் கண்டார்.

     அங்கு வரையப்பட்டிருந்த பறவைகளின் இறகுகளில் தங்கம், பவளம் போன்றவற்றால் சித்தரிக்கப்பட்ட பூக்கள் இருந்தன. அந்தப்பறவைகள் விதவிதமாகத் தங்கள் இறக்கைகளை சாய்த்தும் விரித்தும் விளையாடுவது போல வரையப்பட்டிருந்தன. அவற்றைப் பார்க்கும்பொழுது, அவை மன்மதனுக்கு உதவும் வண்ணம் அவ்வாறு இருந்தனவோ என்று தோன்றியது.

     தாமரைப்பூக்கள் நிறைந்த வாவியுனுள், தங்கள் மேல் தாமரை இதழ்களை சுமந்துகொண்டும், தங்களது அழகிய தும்பிக்கைகளில் கருநெய்தலிலைகளைக் கொண்டும் விளங்கிய யானைகளுடைய படங்களும், தனது அழகிய கரங்களில் தாமரை மலர்களைக் கொண்டிருந்த லக்ஷ்மிதேவியின் படமும் அங்கே வரையப்பட்டிருந்தது.

     அழகான குகைகளையுடைய மலையைப்போலவும், வசந்தகாலத்து அழகிய, நறுமணம் வீசும் மரங்களைப் போலவும் அற்புதமாக விளங்கிய அந்த விமானத்தின் அருகில் நெருங்கிச் சென்று, ஸ்ரீஅனுமன் மிகவும் வியப்புடன் அதைப் பார்த்தார்.   

      அப்பொழுது அந்த வானரர், வணக்கத்திற்குரியதும், பத்துத்தலைகளைக்கொண்ட இராவணனின் தோள்வலிமையால் காக்கப்படுவதுமான அந்த இலங்கை நகரினுள், பல இடங்களிலும் தாவித்திரிந்து தேடியும், ஸ்ரீராமனின் ஆற்றாலினால் பெறப்பட்டவளும், பெரும் வணக்கத்திற்குரியவளும், ஜனகனின் மகளுமான சீதையைக் காணாமல் துன்பம் கொண்டார்.

     சிறந்த அறிவாற்றலும், நல்லொழுக்கமும், நன்னோக்கமும் கொண்டவரான ஸ்ரீஅனுமன், பல இடங்களில் அலைந்து தேடியவராய், ஜனகனின் மகளின் இருப்பிடத்தைக் காண முடியாதவராய், பெரும் மனக்கலக்கத்தோடு துன்பம் கொண்டவரானார்.

 

                                             ஏழாவது ஸர்கம் நிறைவு.

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தரகாண்டம். ஆறாவது ஸர்கம்.

 

      ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தரகாண்டம்.

 

                                                                  ஆறாவது ஸர்கம்.




                                       இராவணனின் மாளிகையில் நுழைதல்.

     தன் விருப்பத்திற்கேற்ப வடிவெடுக்கும் வல்லமை பெற்ற ஸ்ரீஅனுமன், அங்கிருந்த மாளிகைகளிலெல்லாம், சீதையைக் காணாமல், தவிக்கும் நெஞ்சத்துடன், மீண்டும் வேகத்துடனும், லாகவத்துடனும் தன் தேடலைத் தொடர்ந்தார்.

     அப்பொழுது திருவருள் மிகப்பெற்ற ஸ்ரீஅனுமன், சூரியனின் கிரணங்கள் போல தகதகக்கும் மதிற்சுவர்களால் சூழப்பட்ட இலங்கையின் வேந்தனான இராவணனின் மாளிகையை நெருங்கினார்.

     சிங்கக்கூட்டங்களினால் பெரும்வனம் காவல் காக்கப்படுவதைப் போல, கொடும் அரக்கர்களால் அந்த மாளிகை பாதுகாக்கப்பட்டிருப்பதை ஸ்ரீஅனுமன் உற்றுக்கவனித்தார்.

     தங்கத்தால் செய்யப்பட்டு, வெள்ளியிலான சித்திரங்கள் பொறிக்கப்பட்ட விதவிதமான தோரண வாயில்களையும், அற்புதமாக வடிவமைக்கப்பட்ட நிலைகளைக் கொண்டிருந்த வாயிற்படிகளையும் அந்த மாளிகை கொண்டிருந்தது.

     வல்லமைமிக்க யானைப்பாகர்களை மேலே அமர்த்திக்கொண்டிருக்கும் யானைகளும், சோர்வென்பதை அறியாத, தடுக்கவியலாத வேகத்தில் செல்லக்கூடிய குதிரைகளால் பூட்டப்பட்டிருந்த தேர்களும் அங்கு நெருக்கமாக விளங்குவதைக் கண்டார்.

     தங்கம். வெள்ளி, தந்தம் ஆகியவற்றால் செய்யப்பட்டு, சிங்கம், புலி ஆகியவற்றின் மேல்தோல்களைக் கவசங்களாக மேலே அணிவிக்கப்பட்டிருந்த வியத்தகு தேர்கள், வியக்கும் வண்ணம் பலவித ஓசைகளை எழுப்பியபடி, இடைவிடாது இயங்கிக்கொண்டிருந்தன.

     விலையுயர்ந்த இரத்தினக்கற்களால் அலங்கரிக்கப்பட்ட சிம்மாசனங்களும் அங்கு நிறைய இருந்தன. பெரிய பெரிய தேர்கள் வந்து போவதற்கான பெரிய வீதிகளும், மகாரதர்கள்(ஒருவரே ஆயிரம் வில்லாளிகளோடு போர்புரியும் ஆயுதக் கலை அறிந்த விற்பன்னர்) தங்குவதற்கான மிகவும் விசாலமான இடங்களும் இருந்தன.

     பார்ப்பதற்கே வியப்பையும், மகிழ்ச்சியையும் அள்ளித்தர வல்ல ஆயிரக்கணக்கான மிருகங்களும் பறவைகளும் அந்த மாளிகையில் இருந்தன.

     நன்கு பயிற்சியளிக்கப்பட்ட ராக்ஷஸர்கள் வாயிற்காப்பாளர்களாக இருந்த அந்த மாளிகையில், மிகவும் மதிப்புவாய்ந்த பெருங்குலப் பெண்கள் சுற்றிலும் நிரம்பியிருந்ததையும் அவர் கண்டார்.

     அரக்கர்களின் வேந்தனின் இருப்பிடமான அந்த மாளிகையில், மிகுந்த களிப்புடன் விளங்கிய பெண்கள் அணிந்திருந்த ஆபரணங்களின் ஓசையானது, கடலிலிருந்து இடைவிடாது கேட்கும் ஓசையை ஒத்திருந்தது.

     ஒரு அரசனின் மாளிகைக்கான இலக்கணமாக, எல்லாவிதமான உயர்              நலன் களும் கொண்டிருந்த அந்த மாளிகையில், மிகவும் சிறந்த நறுமணப்பொருட்களான, அகில், சந்தனம் போன்றவை எங்கும் கமழ்ந்து கொண்டிருந்தன.  அடர்ந்த காட்டில் சுற்றித் திரியும் சிங்கங்கள் போல, அங்கே பேரரக்கர் கூட்டம் இருந்தது.

     பேரிகை, மிருதங்கம் போன்ற வாத்தியக் கருவிகள் முழங்கியவண்ணம் இருந்தன. சங்குகளின் ஓசை கேட்டவண்ணம் இருந்தது. பர்வ காலங்களில் (அமாவாசை மற்றும் பெளர்ணமி மற்றும் க்ரஹண நேரங்கள்) செய்யப்பட்டிருந்த யாகங்களையும், நாள்தோறும் செய்யப்படும் பூஜைகளையும் அவர் கண்டார். அந்த இடம் எப்பொழுதும் வணக்கத்திற்குரிய இடமாக இருந்ததையும் அவர் கண்டார்.

     பேரரசனின் அந்த மாளிகையானது, பரந்துவிரிந்த பெருங்கடல் போல விளங்கி, அந்தக் கடலிலிருந்து வரும் ஓசையை ஒத்த உற்சாகவோசை நிரம்பிவழிந்தும், வைர, வைடூரியங்களால் இழைக்கப்பட்ட தளங்களால் அலங்கரிக்கப்பட்டும் விளங்கியது.

     இயல்பாகவே ஒளிர்ந்துகொண்டிருந்த அந்த மாளிகை, யானைகள், குதிரைகள், தேர்கள் இவைகளால் மேலும் ஒளிமிகுந்து, இலங்கை நகருக்கே ஒரு ஆபரணம் போலத் துலங்கியதை சிறந்த வானரரான ஸ்ரீஅனுமன் கண்டார். இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டே அவர், இராவணனது அந்த மாளிகையின் அருகிலேயே உலவத்தொடங்கினார்.

     வானரரான ஸ்ரீஅனுமன் வீடுவீடாக அரக்கர்களின் இல்லங்களைப் பார்த்து வருகையில், பூந்தோட்டங்களிலும், மேல்மாடிகளிலும், அச்சம் சிறிதுமின்றி உலவினார்.

     பேராற்றலும் பெரும்வேகமும் கொண்ட அவர், பிரஹஸ்தனுடைய வீட்டில் குதித்தார். அங்கிருந்து மீண்டும் மஹாபார்ஷ்வனுடைய வீட்டின் மீது தாவினார்.

     அங்கிருந்து, மேகத்தைப்போலிருந்த கும்பகர்ணன் வீட்டின் மீதும், பிறகு விபீஷணனின் வீட்டின் மீதும் தாவிச்சென்றார்.

     மேலும் அவர் அவ்வாறு தேடிக்கொண்டே, மகோதரன், வித்யுஜிஹ்வன், விருபாக்ஷன் மற்றும் வித்யுன்மாலி ஆகியோரின் வீடுகளின் மீதும் தாவி ஏறினார்.

     அங்கிருந்து அவர், வஜ்ரதம்ஷ்ட்ரன், சுகர் மற்றும் அறிவாளியான சாரணன் ஆகியோரின் வீடுகளையும் தாவிச்சென்று பார்த்தார். அறிவாற்றல் மிக்க ஸ்ரீஅனுமன், மேலும் இந்திரஜித்தின் வீட்டிற்கும், ஜம்புமாலி மற்றும் சுமாலி ஆகியோரின் வீடுகளுக்கும் சென்றார்.

     மேலும் அவர், ரஷ்மிகேது, சூர்யஷத்ரு, மற்றும் வஜ்ரகாயன் ஆகியோரது வீடுகளைப் பார்வையிட்டார்.

     பிறகு ஸ்ரீஅனுமன், முறையே, தூம்ராக்ஷன், சம்பாதி, வித்யுத்ரூபன், பீமன், கனன், விகனன், ஷுகநாபன், சக்ரன், ஷடன், கபடன், ஹ்ருஷ்வகர்ணன், தம்ஷ்ட்ரன், லோமஷன்,யுத்தோன்மத்தன், மத்தன், த்வஜக்ரீவன், வித்யுஜிஹ்வன், த்விஜிஹ்வன், ஹஸ்திமுகன், கராலன், பிஷாசன் மற்றும் ஷோனிதாக்ஷன் ஆகியோரது இல்லங்களுக்கும் தாவிச்சென்று தேடினார். இவ்விதம் பார்த்த அரக்கர்களின் வீடுகள் எல்லாவற்றிலும் இருந்த செல்வச்செழிப்பை அவர் பார்த்தார்.

     இவ்வாறாக சுற்றிலும் இருந்த வீடுகளில் தாவிச்சென்று தேடிய  திருவருள் மிக்க ஸ்ரீஅனுமன், அரக்கர்களின் அரசனான இராவணனின் மாளிகையை மீண்டும் நெருங்கினார்.

     வானர வீரர்களுள் மிகவும் சிறப்பு வாய்ந்தவரும், பேராற்றல் கொண்ட வானரருமான ஸ்ரீஅனுமன், மாளிகையின் உள்நுழைந்து உலவிய போது, இராவணனின் படுக்கையைச் சுற்றியும், சிலர் உறங்கியும், சிலர் விழித்துமிருந்து, சுழற்சிமுறையில் காவல் இருந்துகொண்டிருந்த, விகாரமான கண்களையுடைய அரக்கியரைக் கண்டார். அந்த அரக்கியரின் கைகளில் சூலம், சம்மட்டி(சுத்தியல் போன்ற), சக்திதோமரம் (உலக்கை மற்றும் கோடரி போன்ற) ஆயுதங்கள் இருந்ததையும் கண்டார்.

     இராவணனின் இருப்பிடத்தில் பெரும் படைகளையும் விதவிதமான ஆயுதங்களைத் தரித்த, பெரிய உடல்களைக்கொண்டிருந்த அரக்கர்களையும் அவர் பார்த்தார்.

     நற்குலத்தில் பிறந்து, நல்ல உடலமைப்பும், பெரும் வேகமும் கொண்ட, சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில், போருக்குத் தயாரான நிலையில் நின்றிருந்த குதிரைகளை அங்கு கண்டார்.

     மாவுத்தன் சொற்படி கேட்கும் பயிற்சிபெற்று, பகைவரின் யானைகளை வெல்லும் திறமையும் தேர்ச்சியும் பெற்று, எதிரிகளின் படைகளுக்கு காலனைப்போலத் திகழும், ஐராவதத்திற்குச் சமமான யானைகள் அங்கே இருக்கக்கண்டார். பொழிந்துகொண்டிருக்கும் மேகங்களால், மலைகளிலிருந்து அருவிகளாய் நீர் வடிந்துகொண்டிருப்பதைப்போல, கண்களில் மதநீர் வடிந்துகொண்டிருந்த, போரில் பிறரால் வெற்றிகொள்ள முடியாத அந்த யானைகள், இடிமுழக்கம்போல கர்ஜனை (மிகவும் ஓசையுடன் பிளிறுதல்) செய்துகொண்டிருந்ததையும் அவர் கண்டார்.

     அங்கே தங்கத்தாலான கவசங்களை அணிந்திருந்த ஆயிரக்கணக்கான படைவீரர்கள். காலைநேரக் கதிரவன் போல ஒளிவீசிக்கொண்டிருந்தார்கள்.  விதவிதமான பல்லக்குகளையும் அவர் கண்டார். மேலும், கொடிகளாலான மண்டபங்களையும், சித்திரங்கள் அலங்கரித்த சித்திர மண்டபங்களையும், விளையாடுவதற்கான அரங்கங்களையும், மரத்தால் செய்யப்பட்ட மலைகளையும் அங்கிருக்கக் கண்டார்.  பெண்களுடன் இருப்பதற்கான தனியிடங்களும், பகற்பொழுதில் காலத்தைக் கழிப்பதற்கான கேளிக்கை விடுதிகளும் , இராவணனின் மாளிகையில் இருந்ததைக் கண்டார்.

     இராவணனின் அந்த மாளிகை, மந்தர மலையைப் போல உயர்ந்திருந்தது. அங்கே மயில்கள் விளையாடுமிடங்களும், கொடிகள் பறக்கும் கொடிக்கம்பங்களும் நிறைந்திருந்தன. பலவிதமான விலையுயர்ந்த நவரத்னங்கள் நிறைந்த பொற்குவியல், தீரமிக்க பாதுகாவலர்களால் முறைப்படி காவல் காக்கப்பட்டு, அந்த இடமே, சிவபெருமான் வசிக்கும் கைலாய மலையோ என்று எண்ணும் வண்ணம் சிறந்து விளங்கியது.

     இராவணனின் மிகச்சிறப்பான தோற்றத்தாலும், பல்வேறு இரத்தினங்களின் ஒளிச்சிதறல்களாலும், அந்த மாளிகையானது, பல்வேறு நிறங்களில் ஒளிக்கற்றைகளை வீசும் சூரியனைப் போல ஒளிர்ந்தது.

     அந்த வானரவீரர், அங்கிருந்த பொன்மயமான கட்டில்களையும், சிம்மாசனங்களையும் இதர பாத்திரங்களையும் ஒளிர்ந்திருக்கக் கண்டார்.

     திராட்சை மதுரசமும், தேனும் கலந்து நனைத்திருந்த தரைகளும், இரத்தின மணிகள் பதிக்கப்பட்ட பாத்திரங்களும், குபேரனின் மாளிகையைப் போன்று விசாலமான மண்டபங்களும் அந்த மாளிகையினுள் இருந்தன.  கால்களில் அணியும் சலங்கைகளின் ஓசைகளும், இடையில் அணியும் மேகலைகளின் ஓசைகளும், மிருதங்கம் முதலான தாளமிசைக்கும் கருவிகளின் கம்பீரமான ஓசைகளும் அந்த மாளிகையில் கேட்டவண்ணம் இருந்தன.  அந்த மாளிகை பல மாடங்களை வரிசையாகக் கொண்டிருந்தது. அவற்றில் நூற்றுக்கணக்கான அழகிய பெண்கள் நிறைந்திருந்தனர். மேலும் அந்த மாளிகை பல அழகிய மண்டபங்களைக் கொண்டிருந்தது. அப்படிப்பட்ட அந்த மாளிகையில் ஸ்ரீஅனுமன் நுழைந்தார்.

               

                                                  ஆறாவது ஸர்கம் நிறைவு

Friday, January 6, 2023

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தரகாண்டம். ஐந்தாவது ஸர்கம்.

 

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தரகாண்டம்.

 

                                                                  ஐந்தாவது ஸர்கம்.


                               இலங்கையின் நகர மாந்தரைக் கண்டு வியத்தல்.





      மாட்டுத்தொழுவத்தில் தினவெடுத்துத் திரியும் காளையைப் போல், தன் ஒளிக்கிரணங்களை வெள்ளமாகப் பாய்ச்சியபடி ஆகாயத்தின் மையப்பகுதிக்கு  அப்பொழுது சந்திரன் வந்துவிட்டிருப்பதை, அறிவாற்றல் மிக்க ஸ்ரீஅனுமன் கண்டுணர்ந்தார்.

     இந்த உலகத்தின் வன்செயல்களைப் போக்கிக்கொண்டும், கடல் அலைகளைத் தன் பால் ஈர்த்து கடலினைப் பெரியதாக்கிக்கொண்டும், அனைத்து உயிரினங்களுக்கும் வெளிச்சம் அளித்துக்கொண்டும் ஆகாயத்தில் சந்திரன் வந்திருப்பதைக் கண்டார்.

     எவ்விதம் திருமகளின் கடைக்கண்பார்வையானது,(திருவருள்), மந்தார மலையிலும், மாலைநேரக்கடலிலும், நீர்நிலைகளில் பூத்துக்குலுங்கும் தாமரைமலர்களிலும் விளங்குமோ, அவ்விதமே அந்த சந்திரனிடத்திலும் விளங்கிக்கொண்டிருந்தது.

     வெள்ளிக்கூண்டில் இருக்கும் அன்னத்தைப் போலவும், மந்தர மலையின் குகையில் உலவும் சிங்கத்தைப் போலவும், செருக்குற்ற யானையின் மீது அமர்ந்திருக்கும் வீரனைப் போலவும் சந்திரன் விளங்கினான்.

     கூரிய கொம்புகளைக் கொண்ட காளையைப் போலவும், நெடிய சிகரங்களைக் கொண்ட வெள்ளியிலான மலையைப் போலவும், பொன்னாலான பூண்களால் அழகுபடுத்தப்பட்ட தந்தங்களைக் கொண்ட யானையைப் போலவும், பலவிதமாக அழகினை வெளிப்படுத்தியபடி சந்திரன் மேலும் விளங்கினான்.

     குளிர்ந்த பனியிலிருந்து விலகியிருப்பவனும், சூரியனின் ஒளிக்கிரணங்களால் தன் இருளைப் போக்கிக்கொள்பவனும், தூய்மையான திருவருள் போன்ற ஒளியைக் கொண்டவனும், முயலின் வடிவத்தைத் தன்னிடம் கொண்டிருப்பவனுமான சந்திரன் ஆகாயத்தில் ஒளிவீசிக்கொண்டிருந்தான்.

     மலையுச்சியில் நிற்கும் விலங்குகளின் அரசனான சிங்கம் போலவும், போர்க்களத்தில் செருக்குடன் நிற்கும் யானையைப் போலவும், பெரிய சாம்ராஜ்யத்தை வென்றெடுத்த அரசன் போலவும் சந்திரன் மிகவும் ஒளிபொருந்தி விளங்கினான்.

     சந்திரனின் ஒளியால் இருளான களங்கம் நீங்கப்பெற்றும், அரக்கர்களின்  புலாலுணவால் களங்கமுற்றும், காதலர்களின் ஊடல் என்னும் களங்கம் விலகப்பெற்றும், சுவர்க்கம் போன்ற மகிழ்வையளித்துக்கொண்டும், வணங்கத்தக்க பிரதோஷ காலம் விளங்கியது. 

     வீணை முதலான கருவிகளில் தந்திகள் மீட்டப்படுவதால் எழும் இனிய ஓசை கேட்ட வண்ணம் இருந்தது. நற்குலப் பெண்கள், தங்கள் கணவன்மாருடன் உறங்கிக்கொண்டிருந்தனர். அதேநேரத்தில், விசித்திரமானதும், பயங்கரமானதுமான பூதகணங்கள் உலவத்தொடங்கியிருந்தன.

     அறிவிற்சிறந்த ஸ்ரீஅனுமன், அந்த மாளிகைகளில் மது பானம் அருந்தி மயங்கிக்கிடந்தவர்களையும், கூடியிருந்த அரக்கர் கூட்டங்களையும், தேர்கள், குதிரைகள், ரத்ன சிம்மாசனங்கள் முதலியவைகளையும், வெற்றித்திருமகளின் அருள்பெற்று விளங்குபவர்களையும் கண்டார்.

     அந்த அரக்கர்களில் சிலர் ஒருவரையொருவர் கேலிசெய்துகொண்டிருந்தார்கள். சிலர் தங்கள் பெருத்த தோள்களை ஆட்டிக்கொண்டிருந்தனர்.  மதுவினால் தம்வசமிழந்த அவர்கள், நிதானமற்ற பேச்சுக்களை பேசிக்கொண்டும், ஒருவரையொருவர் வசைபாடிக்கொண்டும் இருந்தனர்.

     மேலும் அந்த அரக்கர்களில் சிலர், தங்கள் மார்புகளைத் தட்டி, தங்கள் வலிமையை மற்றவர்க்குப் பறைசாற்றிக்கொண்டிருந்தார்கள்.  சிலர் தங்கள் உடல்கள் தங்கள் மனைவியரை உரசும்வண்ணம் அணைத்துக்கொண்டிருந்தனர்.  சிலர் விதவிதமான வடிவங்களில் தங்களை அழகுபடுத்திக்கொண்டும், சிலர் தங்கள் விற்களில் நாணேற்றியபடியும் இருந்தனர்.

     தங்கள் மேனியில் நறுமணம் வீசும் சந்தனம் பூசியபடி இருந்த பெண்களையும், இருந்த இடத்திலேயே உறங்கிக்கொண்டிருந்த பெண்களையும்,  தங்களுக்குள் சிரித்துக்கொண்டிருந்த , நிலவினைப்போன்ற முகவடிவம் கொண்டிருந்த பெண்களையும், சினம் கொண்டு, பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்த பெண்களையும் ஸ்ரீஅனுமன் அங்கே கண்டார்.

     பெரும் யானைகள் பிளிறிக்கொண்டிருந்த அந்த இலங்கை நகரத்தில், அனைவரும் மதிக்கக்கூடிய நன்மக்களும் இருந்ததைக் கண்டார். பெரியதாக சுவாசம் விட்டுக்கொண்டு, திரிந்துகொண்டிருந்த வீரர்களைப் பார்க்கையில், அந்த லங்கை நகரமானது, பாம்புகள் சீறிக்கொண்டிருக்கும் மடுவினைப் போல இருந்தது.

     அந்த நகரத்தில் இருந்த அரக்கர்கள், அறிவாற்றல் மிக்கவர்களாகவும், பிறரைக் கவர்ந்திழுக்கும் சொல்வன்மை கொண்டவர்களாகவும், நல்லிதயம் கொண்டவர்களாகவும், பலரால் போற்றப்படும் மதிப்பு மிக்கவர்களாகவும், பல வடிவங்கொண்டவர்களாகவும், நற்பெயர் கொண்டவர்களாகவும், பலவிதமாக இருந்ததை ஸ்ரீஅனுமன் கண்டார்.

     அழகான வடிவம் கொண்டிருந்த அந்த அரக்கர்கள், தங்கள் இயல்புக்கேற்ற வடிவம் கொண்டிருந்ததைப் பார்த்த ஸ்ரீஅனுமன் மன மகிழ்ச்சி கொண்டார். மாறுபட்ட வடிவம் கொண்டவர்களாக சிலர் இருந்தபோதிலும், அந்த இயல்புக்கேற்றவாறே அவர்கள் இருந்தனர். 

     உயர்ந்த ஆடை ,அணிகலன்கள் அணியும் உடலமைப்பு கொண்ட அழகிய பெண்களையும், தூய்மையான, மற்றும் நல்லொழுக்கம் கொண்ட பெண்களையும், மதுமயக்கத்திலும்  தங்கள் கணவர்களிடம் மிக்க காதல் கொண்ட மனைவிகளையும், விண்மீன்கள் போல் ஒளிர்ந்திருக்கக் கண்டார்.

     திருவருள் ஒளிர்கின்ற அந்தப் பெண்கள், மிகுதியான மோகத்தால் தங்கள் கணவர்களின் அணைப்பில் வெட்கத்துடன் கட்டுண்டு கிடந்ததைப் பார்க்கும்போது, பூக்குவியல்களினிடையே, மறைந்து விளையாடும் பெண் பறவைகளைப் போலத் தோற்றமளித்தார்கள்.

     அறிவாற்றல் மிக்க ஸ்ரீஅனுமன், அங்கிருந்த மேல்மாடிகளில், தங்கள் கணவர்களின் மடியில் மகிழ்ச்சியுடன் அமர்ந்து, அவர்களுடன் கேளிக்கை விளியாட்டுக்களில் ஈடுபட்டவர்களாய், அதிகமான மோகவசப்பட்ட வேறுசில பெண்களையும், அறவழியின்பாற்பட்டவர்களான சில பெண்களையும் கண்டார்.

     பொன் கீற்றைப்போன்ற நிறங்களிலும், உருக்கிய தங்கத்தின் நிறங்களிலும் இருந்த சில பெண்கள், தங்கள் மேலாடைகள் நழுவிய நிலையில் இருந்ததையும், தங்களது அழகிய காதலர்களைக் காணாது தவித்து, அதனால், நிலவினைப் போல் வெளுத்த நிறத்தில் சில பெண்கள் இருந்ததையும் அவர் கண்டார்.  சில வீடுகளில் தங்கள் மனங்கவர்ந்த காதலருடன் கூடிமகிழ்ந்த களிப்பு மிக்க பெண்களையும் அவர் கண்டார்.  மேலும் சில வீடுகளில் மிகவும் அழகுவாய்ந்த பெண்கள் மகிழ்வுடனும் உற்சாகத்துடனும் இருக்கக் கண்டார்.

     முழுநிலவினைப் போன்ற அழகிய முக அமைப்பு கொண்டவர்களையும், அடர்ந்து வளர்ந்திருந்த வளைவான மயிர்க்கற்றைகளாலான இமைகளைக் கொண்டிருக்கும் கண்களை உடையவர்களையும், மின்னல் போல மின்னும் ஆபரணங்களை அணிந்திருப்பவர்களையும் ஸ்ரீஅனுமன் அங்கே கண்டார்.

     எப்பொழுதும் அறவழியினின்று பிறழாதிருக்கும் அரச குடும்பத்தில் பிறந்தவளும், தானாகப் பிறந்த நற்பிறப்புடையவளும், மலர்களுடன் பூத்துக்குலுங்கும் கொடியைப் போல மெல்லியலாளுமான சீதையை மட்டும் அங்கே எங்கும் அவர் காணவில்லை.

     என்றுமே அழிவில்லாத அறவழியில் நடப்பவளும், ஸ்ரீராமனைத் தன்னுடைய கண்களுக்குள்ளேயே எப்பொழுதும் நிறைத்து வைத்திருப்பவளும், ஸ்ரீராமன்மீது பொங்கிவழியும் காதலைக் கொண்டிருப்பவளும், ஸ்ரீராமனின் இதயத்தில் எப்பொழுதும் வசித்திருப்பவளும், மிக உயரிய பெண்களுள் முதன்மையானவளுமான சீதையை அங்கே காண முடியவில்லை.

     கணவனின் பிரிவாற்றாமையால் துன்பம் கொண்டவளும், கண்களில் நீர் வழிய, குரல் தழுதழுக்கும் கழுத்தினையுடையவளும், ஸ்ரீராமனுடன் இணைந்திருந்த காலங்களில், வெகு சிறப்பான பதக்கங்களை அணிந்திருந்த கழுத்தினையுடையவளும், காட்டில், ஒளிரும் கழுத்துடன் அழகிய தோகைவிரித்து ஆடிக்கொண்டிருக்கும் மயிலை ஒத்திருக்கும் சீதையை அங்கே காணவில்லை.

     தன் ஒளியினிற்குறைந்த பிறைச் சந்திரனைப் போலவும், மாசுபடிந்த தங்கத்தின் மங்கிய ஒளி போலவும், காயத்தில் தைத்து, துன்பம் தரும் அம்பு போலவும், காற்றினால் சிதறடிக்கப்பட்ட மேகக்கூட்டம் போலவும் காட்சிதரும் சீதையை அங்கே காணவில்லை.

     சொல்வன்மைமிக்கவரும், இந்த பூமியில் உள்ள அனைவருக்கும் அரசனுமான ஸ்ரீராமனின் மனைவியான சீதையை எங்கும் காண இயலாத ஸ்ரீஅனுமன், சோகமடைந்து மனம் பேதலித்தவரானார்.

 

                                         ஐந்தாவது ஸர்கம் நிறைவு.

Sunday, January 1, 2023

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தரகாண்டம். நான்காவது ஸர்கம்

 

                             ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தரகாண்டம்.

                                                          நான்காவது ஸர்கம்



                        (நகரத்தின் மாளிகைகளின் அழகையும், அரக்கர்களின் தன்மையும் கண்ட பின்னர், இராவணனின் அந்தப்புரத்தில் ஸ்ரீஅனுமன் நுழைதல்)

     பெருந்தோள் வலியரும், பேரொளி படைத்தவரும், வானரர்களில் மிகச்சிறந்தவருமான ஸ்ரீஅனுமன், தான் விரும்பிய வண்ணம் வடிவெடுக்கும் வல்லவளான லங்காதேவியைத் தன் பெரும் வீரத்தால் வீழ்த்தியபின்னர், கோபுர வாயில் வழியாக அல்லாது, அந்த நகரத்தின் மதிற்சுவற்றில் தாவி ஏறினார்.

     வானரவேந்தனாகிய சுக்ரீவரின் நலனுக்காக செயலாற்றும் ஸ்ரீஅனுமன், இலங்கை நகரினுள், பகைவர்களின் முக்கியமான இடத்திலே, தன் இடதுகாலே பொருத்தமென நினைத்து, அதை முன்வைத்து நுழைந்தார்.

     பேராற்றல் மிக்க வாயுகுமாரரான ஸ்ரீஅனுமன், அந்த இரவில் மதிற்சுவற்றைத் தாண்டி, முத்துக்களாலும் பலவண்ணப்பூக்களாலும் நிரம்பிவழிந்த ராஜவீதியை அடைந்து, சிறிதும் மனவச்சம் ஏதுமின்றி அந்த அழகிய நகரத்தில் சுற்றித் திரிந்தார்.

     அங்கிருந்த முக்கியமான மாளிகைகள், முரசம் முதலிய வாத்யங்கள் எழுப்பிய ஒலிகளையும், அங்கிருந்தவர்களின் உற்சாக கூக்குரல்களையும் வெளியிட்ட வண்ணம், வஜ்ராயுதம், அங்குசம் போன்ற ஆயுதங்களுக்கு நிகர்த்து வலிமைவாய்ந்தும், வைரங்களால் இழைக்கப்பட்ட ஜன்னல்களைக் கொண்டும், அழகுபெற்று விளங்கி, அந்த நகரத்தை, மேகங்களால் சூழப்பட்ட ஆகாயம் போல தோன்றச்செய்தன.

     செல்வம் பெருக்கெடுத்து வழியும் அரக்கர்களின் மாளிகைகளால் அந்த நகரம், ஒளிவீசிக்கொண்டிருந்தது.

     அங்கிருந்த சில மாளிகைகள், தாமரை போன்ற வட்ட வடிவத்திலும், சில மாளிகைகள் ஸ்வஸ்திக வடிவத்திலும் (கிழக்கு தவிர மற்ற திசைகளில் வாயில் உள்ள வீடுகள் ஸ்வஸ்திகம் எனப்படும்: இது செல்வத்தையும் மக்கட்பேற்றையும் தர வல்லது), சில மாளிகைகள், வர்த்தமானம் என்னும் வடிவத்திலும் (தெற்கு திசை தவிர மற்ற திசைகளில் வாயில் உள்ள  வீடுகள்; இவை செல்வத்தை நல்கும்) அமையப்பெற்று, சகல விதங்களிலும் அலங்கரிக்கப்பட்டு விளங்கின.

      வானர அரசனான சுக்ரீவரின் நலனை விரும்பும் ஸ்ரீஅனுமன், ஸ்ரீராமனின் கார்யநிமித்தமாக, பல விதமான சித்திர வேலைப்பாடுகளையும், விதவிதமான மாலையணிகளையும் கொண்ட அந்த நகரத்தைப் பல திசைகளிலும் சுற்றிப் பார்த்து மனம் மகிழ்வுற்றார்.

     ஒவ்வொரு மாளிகையாக தாவித் தாவிப் பார்த்துக்கொண்டிருந்த ஸ்ரீஅனுமன், பல வேறு வடிவங்களில் கட்டப்பட்டிருந்த மாளிகைகளைப் பார்த்தார்.

     தேவலோகத்து அப்சரஸ்களைப் போன்ற மயக்கும் அழகினைக் கொண்ட பெண்களின், தலை, கழுத்து மற்றும் மார்புப் பகுதிகளிலிருந்து ஒலிக்கப்பெற்ற தாரம் , மத்யமம் மற்றும் மந்திரம் என்ற மூன்று ஸ்வரங்களால் அலங்கரிக்கப்பட்ட இசையினைக் கேட்டார்.

     பெருஞ்செல்வமிக்க அரக்கர்களின் மாளிகைகளிலிருந்து பெண்களின் இடையணிகலன்கள் மற்றும் கால்களில் அணிந்திருந்த சலங்கைகள், படிகளில் ஏறி, இறங்கும்போது ஏற்படும் கொலுசுகளின் சப்தங்களையும் கேட்டார். அரக்கர்கள் தோள்களைத் தட்டிக் கொள்ளும் ஓசையையும், அவர்கள் கர்ஜனை ஒலிகளையும் கேட்டார்.

     ராக்ஷஸர்களின் வீடுகளிலிருந்து மந்திரங்கள் ஜபிக்கும் ஒலி கேட்டது. அவர்கள் வேதங்கள் பாராயணம் செய்துகொண்டிருக்கக் கேட்டார். கூடவே, இராவணைப் போற்றிப் பாடும் புகழ்மாலைகளையும் செவிமடுத்தார்.

     அங்கே ராஜவீதியில் பெரும் அரக்கர்களின் படை நின்று கொண்டிருப்பதையும், நகரின் நடுவில் பலவிதமான அரக்க ஒற்றர்களின் நடமாட்டங்களையும் கண்டார்.

     அந்த அரக்கர்களுள் சிலர், யாகதீக்ஷை கொண்டும், ஜடாமுடி தரித்தும். மாட்டுத்தோல் அணிந்தும், தலை மொட்டையடித்துக்கொண்டும் இருந்தனர்.  தர்பைப் புற்களை கைகளில் ஆயுதம் போல் தரித்தவர்களும், நெருப்புக் குண்டங்களைக் கைகளில் ஏந்தியவர்களும் இருந்தனர்.

     கூடம், முத்கரம் என்னும் ஆயுதங்களைக் கைகளில் வைத்திருப்பவர்களும், பெரிய தண்டாயுதங்களைப் பிடித்துக்கொண்டிருந்தவர்களும் இருந்தனர்.   ஒற்றைக்கண் கொண்டவர்களாய்ச் சிலரும், ஒற்றைக்காது கொண்டவர்களாய்ச் சிலரும், பானை போன்று பருத்த வயிறுடன் சிலரும், கனத்துத் தொங்கிய மார்புகளுடன் சிலரும் இருந்தனர்.

     வில்லேந்திக்கொண்டிருந்தவர்களும், பயங்கரமான வடிவம் கொண்டவர்களும், வாய் கிழிந்து தொங்கியபடி இருந்தவர்களும், குள்ளமானவர்களாய்ச் சிலரும், பருத்துக்காணப்பட்ட சிலரும் இருந்தனர்.

     பீரங்கி, முசலம் போன்ற ஆயுதங்களைக் கைகளில் வைத்திருந்தவர்களும், கடினமான இரும்புத்தடிகளை வைத்திருந்த சிலரும் இருந்தனர். ஒளிவீசும் வியப்பளிக்கும் கவசங்களை அணிந்திருந்த சிலரும் காணப்பட்டனர்.

     சிலர் அதிகமாகப் பருத்துமில்லை, சிலர் அதிகமாக இளைத்துமில்லை. சிலர் அளவிற்கதிகமான உயரம் கொண்டவர்களாயும் இல்லை, சிலர் அளவிற்கதிகமாக குள்ளமாகவும் இல்லை.  சிலர் நல்ல வெண்மையான நிறத்திலும், சிலர் மிகக் கருமையான நிறத்திலும், சிலர் கூன் விழுந்தவராயும், சிலர் குள்ளர்களாகவும் இருந்தனர்.  

         அழகற்ற வடிவிலும், மிக அழகான வடிவிலும் சிலர் இருந்தனர். சிலர் ஒளிவீசும் வடிவமும் கொண்டிருந்தனர். சிலரின் கைகளில் கொடிகளும், பதாகைகளும் இருந்தன. சிலரது கைகளில் வேல்களும், மரங்களும் ஆயுதங்களாக இருந்தன.

     சிலர் சூலாயுதங்களையும், சிலர் கவண்களையும் கைகளில் வைத்திருந்தனர். சிலர் மாலை தரித்துக்கொண்டும், சிலர் உடம்பில் சந்தனம் பூசிக்கொண்டும் இருந்தனர்.  சிலர் பலவிதமான நகைகளால் அலங்கரித்துக்கொண்டிருந்தனர்.  பல வேடமணிந்தவர்களும், சுய விருப்பத்தில் படையில் சேர்ந்தவர்களும், தங்கள் கைகளில் கூரிய ஆயுதங்களை வைத்திருந்தவர்களும் இருந்தனர். வஜ்ராயுதங்களைக் கைகளில் கொண்டும் சிலர் இருந்தனர்.

     இப்படிப் பலவிதமானவர்களைப் பார்த்த அந்த வானர வீரர், அந்தப்புரத்திற்கு நடுவில், இராவணனால் உண்டாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான வீரர்கள் தயார் நிலையில் இருப்பதைக் கண்டார்.

     இப்படி அந்த நகரம் இருந்ததைப் பார்த்த ஸ்ரீஅனுமன், அங்கே மலையுச்சியின் மீது, பெரிய மதிற்சுவர்கள் சுற்றியிருக்க, தாமரை மலர்கள் பூத்து நிரம்பிய அகழியால் சூழப்பட்டு, பொன்னால் செய்யப்பட்ட தோரண வாயில்களைக் கொண்ட புகழ்மிக்க இராவணனின் அரண்மனையைக் கண்டார்.

     ஸ்வர்க்க லோகத்திற்கு நிகராகவும், இனிய கானங்கள் பொழிந்துகொண்டும் அந்த அரண்மனை இருந்தது. அங்கே குதிரைகளின் கனைப்பொலிகள் நிறைந்திருந்தன. பலவிதமானஅணிகலன்களின்  குலுங்கலோசைகளும் அங்கு இருந்தன.

     தேர்களும், பல்லக்குகளும், அழகிய விமானங்களும், நன்கு அலங்கரிக்கப்பட்ட குதிரைகளும் இருந்தன. வெண்ணிற மேகங்களைப் போன்ற, நான்கு தந்தங்களைக் கொண்ட யானைகளால் பாதுகாக்கப்பட்டவாறும் இருந்த அந்த மாளிகை பெரிய பறவைகள் மற்றும் மிருகங்களால் சூழப்பட்டிருந்தது.

     பேராற்றல் கொண்ட அரக்க வீரர்களால் நாலாப்புறங்களிலும் பாதுகாக்கப்பட்ட அந்த ராக்ஷஸ ராஜனின் அரண்மனையுள் ஸ்ரீஅனுமன் நுழைந்தார்.

     பொன்னிறமான உட்கூடமும், விலைமதிப்பில்லா முத்துக்களாலும், வைரங்களாலும் அலங்கரிக்கப்பட்ட மேற்கூரையும் கொண்டு, உள்ளே அகில், சந்தனம் முதலிய வாசனைப்பொருட்களால் நறுமணம் வீசிக்கொண்டிருக்கும் இராவணனுடைய அந்தப்புரத்தில் ஸ்ரீஅனுமன் நுழைந்தார்.

 

                                           நான்காவது ஸர்கம் நிறைவு

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...