ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தரகாண்டம்.
(நகரத்தின் மாளிகைகளின் அழகையும், அரக்கர்களின் தன்மையும் கண்ட பின்னர், இராவணனின்
அந்தப்புரத்தில் ஸ்ரீஅனுமன் நுழைதல்)
பெருந்தோள் வலியரும்,
பேரொளி படைத்தவரும், வானரர்களில் மிகச்சிறந்தவருமான ஸ்ரீஅனுமன், தான் விரும்பிய வண்ணம்
வடிவெடுக்கும் வல்லவளான லங்காதேவியைத் தன் பெரும் வீரத்தால் வீழ்த்தியபின்னர், கோபுர
வாயில் வழியாக அல்லாது, அந்த நகரத்தின் மதிற்சுவற்றில் தாவி ஏறினார்.
வானரவேந்தனாகிய
சுக்ரீவரின் நலனுக்காக செயலாற்றும் ஸ்ரீஅனுமன், இலங்கை நகரினுள், பகைவர்களின் முக்கியமான
இடத்திலே, தன் இடதுகாலே பொருத்தமென நினைத்து, அதை முன்வைத்து நுழைந்தார்.
பேராற்றல் மிக்க
வாயுகுமாரரான ஸ்ரீஅனுமன், அந்த இரவில் மதிற்சுவற்றைத் தாண்டி, முத்துக்களாலும் பலவண்ணப்பூக்களாலும்
நிரம்பிவழிந்த ராஜவீதியை அடைந்து, சிறிதும் மனவச்சம் ஏதுமின்றி அந்த அழகிய நகரத்தில்
சுற்றித் திரிந்தார்.
அங்கிருந்த முக்கியமான
மாளிகைகள், முரசம் முதலிய வாத்யங்கள் எழுப்பிய ஒலிகளையும், அங்கிருந்தவர்களின் உற்சாக
கூக்குரல்களையும் வெளியிட்ட வண்ணம், வஜ்ராயுதம், அங்குசம் போன்ற ஆயுதங்களுக்கு நிகர்த்து
வலிமைவாய்ந்தும், வைரங்களால் இழைக்கப்பட்ட ஜன்னல்களைக் கொண்டும், அழகுபெற்று விளங்கி,
அந்த நகரத்தை, மேகங்களால் சூழப்பட்ட ஆகாயம் போல தோன்றச்செய்தன.
செல்வம் பெருக்கெடுத்து
வழியும் அரக்கர்களின் மாளிகைகளால் அந்த நகரம், ஒளிவீசிக்கொண்டிருந்தது.
அங்கிருந்த சில
மாளிகைகள், தாமரை போன்ற வட்ட வடிவத்திலும், சில மாளிகைகள் ஸ்வஸ்திக வடிவத்திலும் (கிழக்கு
தவிர மற்ற திசைகளில் வாயில் உள்ள வீடுகள் ஸ்வஸ்திகம் எனப்படும்: இது செல்வத்தையும்
மக்கட்பேற்றையும் தர வல்லது), சில மாளிகைகள், வர்த்தமானம் என்னும் வடிவத்திலும் (தெற்கு
திசை தவிர மற்ற திசைகளில் வாயில் உள்ள வீடுகள்;
இவை செல்வத்தை நல்கும்) அமையப்பெற்று, சகல விதங்களிலும் அலங்கரிக்கப்பட்டு விளங்கின.
வானர அரசனான
சுக்ரீவரின் நலனை விரும்பும் ஸ்ரீஅனுமன், ஸ்ரீராமனின் கார்யநிமித்தமாக, பல விதமான சித்திர
வேலைப்பாடுகளையும், விதவிதமான மாலையணிகளையும் கொண்ட அந்த நகரத்தைப் பல திசைகளிலும்
சுற்றிப் பார்த்து மனம் மகிழ்வுற்றார்.
ஒவ்வொரு மாளிகையாக
தாவித் தாவிப் பார்த்துக்கொண்டிருந்த ஸ்ரீஅனுமன், பல வேறு வடிவங்களில் கட்டப்பட்டிருந்த
மாளிகைகளைப் பார்த்தார்.
தேவலோகத்து அப்சரஸ்களைப்
போன்ற மயக்கும் அழகினைக் கொண்ட பெண்களின், தலை, கழுத்து மற்றும் மார்புப் பகுதிகளிலிருந்து
ஒலிக்கப்பெற்ற தாரம் , மத்யமம் மற்றும் மந்திரம் என்ற மூன்று ஸ்வரங்களால் அலங்கரிக்கப்பட்ட
இசையினைக் கேட்டார்.
பெருஞ்செல்வமிக்க
அரக்கர்களின் மாளிகைகளிலிருந்து பெண்களின் இடையணிகலன்கள் மற்றும் கால்களில் அணிந்திருந்த
சலங்கைகள், படிகளில் ஏறி, இறங்கும்போது ஏற்படும் கொலுசுகளின் சப்தங்களையும் கேட்டார்.
அரக்கர்கள் தோள்களைத் தட்டிக் கொள்ளும் ஓசையையும், அவர்கள் கர்ஜனை ஒலிகளையும் கேட்டார்.
ராக்ஷஸர்களின் வீடுகளிலிருந்து மந்திரங்கள்
ஜபிக்கும் ஒலி கேட்டது. அவர்கள் வேதங்கள் பாராயணம் செய்துகொண்டிருக்கக் கேட்டார். கூடவே,
இராவணைப் போற்றிப் பாடும் புகழ்மாலைகளையும் செவிமடுத்தார்.
அங்கே ராஜவீதியில்
பெரும் அரக்கர்களின் படை நின்று கொண்டிருப்பதையும், நகரின் நடுவில் பலவிதமான அரக்க
ஒற்றர்களின் நடமாட்டங்களையும் கண்டார்.
அந்த அரக்கர்களுள்
சிலர், யாகதீக்ஷை கொண்டும், ஜடாமுடி தரித்தும். மாட்டுத்தோல் அணிந்தும், தலை மொட்டையடித்துக்கொண்டும்
இருந்தனர். தர்பைப் புற்களை கைகளில் ஆயுதம்
போல் தரித்தவர்களும், நெருப்புக் குண்டங்களைக் கைகளில் ஏந்தியவர்களும் இருந்தனர்.
கூடம், முத்கரம்
என்னும் ஆயுதங்களைக் கைகளில் வைத்திருப்பவர்களும், பெரிய தண்டாயுதங்களைப் பிடித்துக்கொண்டிருந்தவர்களும்
இருந்தனர். ஒற்றைக்கண் கொண்டவர்களாய்ச் சிலரும், ஒற்றைக்காது
கொண்டவர்களாய்ச் சிலரும், பானை போன்று பருத்த வயிறுடன் சிலரும், கனத்துத் தொங்கிய மார்புகளுடன்
சிலரும் இருந்தனர்.
வில்லேந்திக்கொண்டிருந்தவர்களும்,
பயங்கரமான வடிவம் கொண்டவர்களும், வாய் கிழிந்து தொங்கியபடி இருந்தவர்களும், குள்ளமானவர்களாய்ச்
சிலரும், பருத்துக்காணப்பட்ட சிலரும் இருந்தனர்.
பீரங்கி, முசலம்
போன்ற ஆயுதங்களைக் கைகளில் வைத்திருந்தவர்களும், கடினமான இரும்புத்தடிகளை வைத்திருந்த
சிலரும் இருந்தனர். ஒளிவீசும் வியப்பளிக்கும் கவசங்களை அணிந்திருந்த சிலரும் காணப்பட்டனர்.
சிலர் அதிகமாகப் பருத்துமில்லை, சிலர் அதிகமாக இளைத்துமில்லை. சிலர் அளவிற்கதிகமான உயரம் கொண்டவர்களாயும் இல்லை, சிலர் அளவிற்கதிகமாக குள்ளமாகவும் இல்லை. சிலர் நல்ல வெண்மையான நிறத்திலும், சிலர் மிகக் கருமையான நிறத்திலும், சிலர் கூன் விழுந்தவராயும், சிலர் குள்ளர்களாகவும் இருந்தனர்.
அழகற்ற வடிவிலும், மிக அழகான வடிவிலும் சிலர் இருந்தனர். சிலர் ஒளிவீசும் வடிவமும் கொண்டிருந்தனர். சிலரின் கைகளில் கொடிகளும், பதாகைகளும் இருந்தன. சிலரது கைகளில் வேல்களும், மரங்களும் ஆயுதங்களாக இருந்தன.
சிலர் சூலாயுதங்களையும்,
சிலர் கவண்களையும் கைகளில் வைத்திருந்தனர். சிலர் மாலை தரித்துக்கொண்டும், சிலர் உடம்பில்
சந்தனம் பூசிக்கொண்டும் இருந்தனர். சிலர் பலவிதமான
நகைகளால் அலங்கரித்துக்கொண்டிருந்தனர். பல
வேடமணிந்தவர்களும், சுய விருப்பத்தில் படையில் சேர்ந்தவர்களும், தங்கள் கைகளில் கூரிய
ஆயுதங்களை வைத்திருந்தவர்களும் இருந்தனர். வஜ்ராயுதங்களைக் கைகளில் கொண்டும் சிலர்
இருந்தனர்.
இப்படிப் பலவிதமானவர்களைப்
பார்த்த அந்த வானர வீரர், அந்தப்புரத்திற்கு நடுவில், இராவணனால் உண்டாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான
வீரர்கள் தயார் நிலையில் இருப்பதைக் கண்டார்.
இப்படி அந்த
நகரம் இருந்ததைப் பார்த்த ஸ்ரீஅனுமன், அங்கே மலையுச்சியின் மீது, பெரிய மதிற்சுவர்கள்
சுற்றியிருக்க, தாமரை மலர்கள் பூத்து நிரம்பிய அகழியால் சூழப்பட்டு, பொன்னால் செய்யப்பட்ட
தோரண வாயில்களைக் கொண்ட புகழ்மிக்க இராவணனின் அரண்மனையைக் கண்டார்.
ஸ்வர்க்க லோகத்திற்கு
நிகராகவும், இனிய கானங்கள் பொழிந்துகொண்டும் அந்த அரண்மனை இருந்தது. அங்கே குதிரைகளின்
கனைப்பொலிகள் நிறைந்திருந்தன. பலவிதமானஅணிகலன்களின் குலுங்கலோசைகளும் அங்கு இருந்தன.
தேர்களும், பல்லக்குகளும்,
அழகிய விமானங்களும், நன்கு அலங்கரிக்கப்பட்ட குதிரைகளும் இருந்தன. வெண்ணிற மேகங்களைப்
போன்ற, நான்கு தந்தங்களைக் கொண்ட யானைகளால் பாதுகாக்கப்பட்டவாறும் இருந்த அந்த மாளிகை
பெரிய பறவைகள் மற்றும் மிருகங்களால் சூழப்பட்டிருந்தது.
பேராற்றல் கொண்ட
அரக்க வீரர்களால் நாலாப்புறங்களிலும் பாதுகாக்கப்பட்ட அந்த ராக்ஷஸ ராஜனின் அரண்மனையுள்
ஸ்ரீஅனுமன் நுழைந்தார்.
பொன்னிறமான உட்கூடமும்,
விலைமதிப்பில்லா முத்துக்களாலும், வைரங்களாலும் அலங்கரிக்கப்பட்ட மேற்கூரையும் கொண்டு,
உள்ளே அகில், சந்தனம் முதலிய வாசனைப்பொருட்களால் நறுமணம் வீசிக்கொண்டிருக்கும் இராவணனுடைய
அந்தப்புரத்தில் ஸ்ரீஅனுமன் நுழைந்தார்.
நான்காவது ஸர்கம் நிறைவு

No comments:
Post a Comment