பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்!
அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப்பா சுண்ணாம்புக்கல் வாங்கிவந்து, தகர வாளியில் ஊற வைத்து, தண்ணீர் ஊற்றியதும் அது கோபம் கொண்டு சீறி, பின் நுரைத்து அடங்கும்! கை படாமல் குச்சி கொண்டு அதைக்கிளறி விட்டு அது ஆற வைக்க வேண்டும்! பின் தெருவில் விற்க வரும் தென்னமட்டை ப்ரஷ்களை வாங்கி அந்த சுண்ணாம்பை, ராபின் ப்ளூ கலந்து வீட்டுச்சுவர் உள்ளும் வெளியும் அடிக்க, ஈரம் காயக்காய, பளீரிடும் வெண்மை பொங்கலுக்குக்கட்டியம் கூறும்! வீட்டு வாசலில் செம்மண்ணையும்,சுண்ணாம்பையும் வரி வரியாய்த்தீட்டி, வீடே கோயிலாய் தெய்வீகம் கமழும்! கூரை வீடுதான்! மண் சுவர் தான்! தெருவின் எல்லா வீடுகளும் பளிச்சென பொங்கலை வரவேற்கும்! இந்த நினைவுகளுடனே இன்னுமொரு பொங்கல் டி.வி முன்னே!
என் நினைவுகள் ஒரு எதிர்பாரா தருணத்தில் சட்டென்று விரிய, நான் வசித்த வீட்டை வரைய முற்பட்டபோது! கிட்டதட்ட 50 வருடங்கள் முன்பு நாங்கள் வாழ்ந்த வீடு!
இதோ, இந்த முன் அறையில்தான் (ஒரே அறை தான்!)(நான்குக்கு ஆறு அளவு இருக்கலாம்) ரேடியோ பெட்டி வைக்கப்பட்டிருக்கும்! என் தாத்தா போஸ்ட்மாஸ்டராய் சேந்தமங்கலத்தில் பயன்படுத்திய மர டேபிள் மேல் தான் (வீட்டின் ஒரே ஃபர்னிசர்) அது வைக்கப்பட்டிருக்கும்! சுமார் நான்கே அடி உயரமுள்ள மரக்கதவைத்திறந்து விட்டால், இதோ இந்தத் திண்ணையே ஆடிட்டோரியமாய் மாற, தெருவே நிறைந்து ஞாயிற்றுக்கிழமைகளின் சூரியகாந்தியும், மூன்று மணி ஒலிச்சித்திரமும் கலகலக்கும்! பாத்திரம் விற்கும் செட்டியாருக்கும், புடவை விற்கும் செட்டியாருக்கும் இந்த்த்திண்ணைதான் படுக்கை அறை! வீட்டுக்கு வரும் விருந்தினர்க்கும் இதுவே படுக்கை அறை! பனிக்காலங்களில் உத்தரத்திலிருந்து தொங்க விடப்படும் பழைய சீலைகளே சுவராக மாறும் ! பல்லாங்குழி, தாயக்கட்டம் போன்றவற்றிற்கு ஆடுகளம்! நினைவு பீறிடுவதால், அணையிட்டு விட்டு மனைவி போட்ட கோலத்திற்கு வண்ணமிடச்செல்கிறேன்!
