Friday, May 19, 2023

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம். பத்தொன்பதாவது ஸர்கம்.

 

                ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம்.

 

                               பத்தொன்பதாவது ஸர்கம்.


 

     உடலெங்கும் பல விதமான நகையலங்காரங்களுடனும், அழகுபடுத்தப்பட்ட வாலிப மிடுக்குடனும், தன்னை நோக்கி வந்த அரக்கர் இனத் தலைவனான இராவணனைப் பார்த்ததும், மாசுமருவற்ற அழகியான சீதை, ஊழிக்காற்றில் அல்லாடும் வாழைச்செடியினைப் போல அச்சத்தில் விதிர்த்து நின்றாள்.

     அகன்ற விழிகளையும், மிக அழகிய உடலழகையும் கொண்டிருந்த சீதை, தன் துடைகளால் வயிற்றுப் பகுதியையும், கைகளால் மார்பகங்களையும் மறைத்துக் கொண்டு அழத்தொடங்கினாள்.

     அரக்கியரின் கடுங்காவலில் இருந்த சீதை, மெலிந்தும், துயரத்துடனும் இருந்தாள்.  சுழற்காற்றில் சிதைந்து, கடலில் மூழ்கும் கப்பலைப் போலப் பெருந்துயரத்தில் இருந்த சீதையை, பத்துத் தலைகளைக் கொண்டிருந்த இராவணன் பார்த்தான்.  மரத்திலிருந்து முறிந்து தரையில் தனியே விழுந்து கிடக்கும் மரக் கிளையைப் போல சீதை வெட்ட வெளியில் அமர்ந்திருந்தாள். ஒரு கடுமையான விரதம் பூண்டவள் போன்று சீதை அமர்ந்திருந்தாள்.

     வாசனைப் பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருக்க வேண்டிய சீதையின் மேனியெங்கும் புழுதி படர்ந்திருந்தது.  எல்லாவிதமான அலங்காரங்களுக்கும் ஏற்புடையவளான சீதை, எந்தவிதமான அலங்காரமும் இல்லாதிருந்தாள்.  தாமரைப் பூவைச் சுமந்துகொண்டு அழகுடன் விளங்கும் தாமரைத் தண்டானது, சேற்றில் மூழ்கி அழுக்குடன் விளங்குவது போல சீதையின் நிலை இருந்தது.

     சீதை, உறுதியான எண்ணங்களைக் குதிரைகளாகப் பூட்டிய மனோரதத்தில், தன்னை அறிந்த ஞானியான, ராஜசிங்கம் போன்ற ஸ்ரீராமனை நோக்கிச் செல்வது  போல இருந்தாள்.

     வெளிறிய உடலுடனும், ஸ்ரீஇராமனைப் பிரிந்த பிரிவாற்றாமையுடனும், துயரத்துடனும் தனிமையில் அழுதபடி, ஸ்ரீஇராமனைத் தியானித்தபடியே இருந்தாள்.  தன் கணவனின் எண்ணம் அறிந்து நடக்கும் ஸ்ரீராமனின் மனைவியான சீதையின் துயரத்திற்கு முடிவில்லையோ என்று தோன்றியது.

     தன்னைச் சுருட்டிக்கொண்டு அமர்ந்திருந்த சீதை, நாகங்களின் அரசி போலவும், புகைந்து கொண்டிருக்கும் வால் நட்சத்திரத்தால் மறைக்கப்பட்ட ரோகிணி நட்சத்திரத்தைப் போலவும் காணப்பட்டாள்.    

     உயர்ந்த குலத்தில் பிறந்து, தர்ம சிந்தனையும், நல்ல உயர்ந்த பழக்க வழக்கங்களும் கொண்ட குலத்தில் நல்ல முறையில் மணம் முடித்துச் சென்றிருந்தாலும், சீதையின் தற்போதைய நிலை, ஒரு இழிகுலத்தின் பிறந்த பெண்ணின் நிலையைப் போல இருந்தது.

     நலிவடைந்த பெரும் புகழ், மதிக்கப்படாத ஈடுபாடு, வீழ்ச்சியடைந்த புத்தி, உடைந்துபோன நம்பிக்கை, அழிந்துபட்ட எதிர்காலம், மதிக்கப்படாத அரசாணை, ஊழிக்காலத்தில் எரியும் திசைகள், தடைப்பட்டுப்போன இறைவனின் பூஜை, கிரகணத்தால் பீடிக்கப்பட்ட நிலவு உதித்திருக்கும் இரவு, பனியினால் பாழ்பட்ட தாமரை, படைத்தலைவனை இழந்த சேனை, கடும் குளிரினால் மறைந்து போன ஒளி, உலர்ந்து போன கொடி, அசுத்தமானவர்களைத் தொட்டுவிட்ட வேதியர், தீ அணைந்து போன மரக்குச்சி ஆகியன போன்ற மோசமான நிலையில் சீதையின் நிலை இருந்தது.

     மதம் பிடித்த யானையின் துதிக்கையால் அலைக்கழிக்கப்பட்டு, இலைகளும், கொடிகளும், தாமரைப் பூக்களும் சிதறியடிக்கப்பட்ட தாமரைக் குளம் போன்று சீதையின் நிலை ஒளியிழந்திருந்தது.

     பல இடங்களில் கால்வாய்கள் மூலம் பிரித்து விடப்பட்டதால், நீர் வற்றிப்போன நதியைப் போலவும் , வாசனைத் திரவியங்கள் ஏதும் பூசியிருக்காததால், கிருஷ்ண பக்ஷத்து இரவினைப் போலவும் ஒளி குன்றியிருந்த சீதை, கணவனின் பிரிவுத் துயரத்தில், மிகவும் கலக்கத்தில் இருந்தாள்.

     அழகிய உடலமைப்பைக் கொண்டிருந்த சீதை, விலையுயர்ந்த கற்களால் அலங்கரிக்கப்பட்ட மாளிகையில் வசிக்க வேண்டியவள்.  ஆனால் வெயிலில் வாட்டமுற்றிருந்த அவள், பிடுங்கி எறியப்பட்ட தாமரைச் செடியைப் போல மிகவும் பரிதாபமான நிலையில் இருந்தாள்.

     கூட்டத்தின் தலைவனிடமிருந்து பிரிக்கப்பட்டு, கம்பத்தில் கட்டப்பட்டிருக்கும் பெண் யானையைப் போல, சீதை நெடுமூச்சு எடுத்துக்கொண்டிருந்தாள்.

     ஒற்றைத் தலைப் பின்னலுடன் இருந்த சீதையைப் பார்க்கும் போது, மழைக்கால முடிவில், பெருத்து வளர்ந்திருக்கும் மரங்களில் வரிசை கொண்ட பூமியைப் போல இருந்தாள்.

     உணவு உட்கொள்ளாததால் இளைத்தும், தியானத்தாலும், பயத்தாலும் மனம் குன்றியும் இருந்த சீதை, குறைந்த உணவே உட்கொண்டும், தவம் செய்வதையே செல்வமாகக் கொண்டும் விளங்கினாள்.

     கைகளைக் குவித்துக்கொண்டு, தன் குல தெய்வங்களை வேண்டி, ரகு குல நாயகனான ஸ்ரீராமன், பதின்முக இராவணனை வதம் செய்ய வேண்டும் என்று யாசிப்பவள் போல விளங்கினாள்.     

      துயரத்தால் அழுகின்ற, குற்றமற்றவளான சீதை, அழகிய புருவங்களுடன் ஓரங்களில் சிவந்த , அகன்ற விழிகளையும் கொண்டு தன்னைக் காப்பாற்றுபவரை நான்கு பக்கங்களிலும் தேடினாள்.  ஸ்ரீராமனையே எப்பொழுதும் நினைத்துக்கொண்டிருந்த சீதையை, தனது அழிவைத் தேடிக்கொள்பவனாக, இராவணன் காமத்துடன் நெருங்கினான்.



      

                                 பத்தொன்பதாவது ஸர்கம் நிறைவு.

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம். பதினெட்டாவது ஸர்கம்.

 

              ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம்.

                                      பதினெட்டாவது ஸர்கம்.


 

     இவ்வாறாக, பூக்கள் சொரியும் மரங்கள் நிறைந்த அந்த அசோக வனத்தின் அழகினைப் பருகியவாறும், சீதையினைத் தேடியவாறும் இருந்ததில் இரவின் பெரும் பகுதி கழிந்து, சிறிதே மிச்சம் இருந்தது.  

     ஆறு அங்கங்களைக் கொண்ட வேதங்களில் விற்பன்னர்களும், சிறந்த யாகங்களைச் செய்தவர்களுமான ப்ரஹ்ம ராக்ஷஸர்கள், இரவின் அந்தப் பின் பகுதியில், வேத கோஷங்கள் முழக்குவதை ஸ்ரீஅனுமன் கேட்டார்.

     அதே நேரத்தில், தோள் வலியனும், பதின்முகனுமான இராவணன், மங்கள இசைக்கருவிகளின் செவிக்கினிய ஒலியின் மூலமாகவும், புகழ் வார்த்தைகளாலும் உறக்கத்திலிருந்து எழுப்பப்பட்டான்.

     தகுந்த நேரத்தில் உறக்கம் கலைந்து எழுந்த, பெரும் வீரனான இராவணன், நழுவிக்கிடந்த மாலைகளுடனும், ஆடைகளுடனும் கூடியவனாய், விதேஹ குமாரியான  சீதையைப் பற்றிய எண்ணம் கொண்டான்.

     காம இச்சை அதிகம் கொண்டிருந்த அந்த அரக்கன், மன்மதனால் தூண்டப்பட்டு, சீதையின் மேல் அதிக மோகம் கொண்டிருந்தான். அவனால் அதை அடக்கிக்கொள்ள இயலவில்லை.

     இராவணன், பலவிதமான நகைகளை அணிந்து, தன்னை அலங்கரித்துக்கொண்டு, அந்த அசோக வனத்தினுள் நுழைந்தான்.  அப்பொழுது அங்கிருந்த மரங்கள், பூக்களோடும், பழங்களோடும் அழகுற விளங்கின.  பல வண்ணப் பூக்கள் அந்த வனத்தின் அழகை மிகைப்படுத்தின.

     தெளிந்த பல நீரோடைகள், அந்த வனத்தைச் சுற்றி இருந்தன.  எப்பொழுதும் காதல் மயக்கத்தில் இருக்கும் பறவைகளின் விசித்திரமான சப்தங்கள் நிரம்பியிருந்தன. 

     விளையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த மான் பொம்மைகள் அல்லாது, பலவிதமான மிருகக் கூட்டங்கள் அங்கு இருந்தன.  பழுத்து, கீழே விழுந்திருந்த பழங்கள் பாதையெங்கும் நிறைந்திருந்தன. 

     அந்த மலர்த்தோட்டத்தில், தங்கத்தாலும், முத்துக்களாலும், விலையுயர்ந்த கற்களாலும் அலங்கரிக்கப்பட்ட தோரண வாயில்கள் இருந்தன.  அவற்றினுள்ளே, நீண்ட வரிசையில் மரங்கள் இருந்தன.  இவற்றையெல்லாம் பார்த்தவாறே, இராவணன், அந்த அசோக வனத்தினுள் நுழைந்தான்.

     எவ்விதம் தேவேந்திரனின் பின்னே, தேவலோகப் பெண்களும், கந்தர்வப் பெண்களும், செல்வார்களோ,அது போலவே, அந்த அசோக வனத்தினுள் நுழையும் புலஸ்த்ய குமாரனனான இராவணனின் (புலஸ்த்யன்- பிரம்மாவின் மகன்) பின்னே, நூற்றுக்கணக்கான பெண்கள் சென்றார்கள்.

      அந்தப் பெண்களில், சிலரது கைகளில் தங்கத்தாலான விளக்குகள் இருந்தன. சிலரது கைகளில் சாமரமும், சிலரது கைகளில் பனை விசிறிகளும் இருந்தன.

     சில பெண்கள் தங்கத்தாலான பாத்திரங்களில், நீர் கொண்டு முன்னே சென்றனர்.  சிலரது கைகளில் வட்ட வடிவமான திண்டுகள் இருந்தன.

     இராவணன் அருகில் ஒரு பெண், ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட விலையுயர்ந்த கலசத்தில், குடிப்பதற்கான பானம் நிரப்பப்பட்டு, அதைத் தன் வலக்கரத்தில் வைத்துக்கொண்டிருந்தாள்.

     இன்னுமொரு பெண், தங்கத்தாலான கைப்பிடியைக் கொண்ட, முழு நிலவினையும், ராஜ அன்னத்தையும் ஒத்த வெண்ணிறத்தில் இருந்த ஒரு குடையைப் பிடித்துக்கொண்டு, இராவணன் பின்னே சென்றாள்.

     மேகத்தைத் தொடரும் ஒளி மின்னல்களைப் போல, இராவணனின் அழகிய மனைவிகள், உறக்கம் கலையாத கண்களுடன் தங்கள் கணவனைப் பின் தொடர்ந்து சென்றனர்.

     அவர்கள் அணிந்திருந்த மாலைகளும், தோள்களில் அணிந்திருந்த அணிகலன்களும் கலைந்திருந்தன.  உடலகளில் பூசியிருந்த சந்தனம் உதிர்ந்துவிட்டிருந்தது.  தலைப் பின்னல்கள் அவிழ்ந்திருந்தன.  முகங்களில் வியர்வைத்துளிகள் இருந்தன. 

     அந்த அழகிய பெண்கள், முதல்நாள் அருந்திய மதுவின் மயக்கம் தெளியாமல், உறக்கம் முற்றும் கலையாத கண்களுடன் சென்று கொண்டிருந்தனர்.  உடலெங்கும் அணிந்திருந்த பூமாலைகள் வியர்வையில் நனைந்திருக்க, பூக்கள் சூடப்பட்டிருந்த அவர்களின் தலை முடிகள் அசைந்து கொண்டிருந்தன. 

     இராவணனின், மயக்கும் விழிகளைக் கொண்டிருந்த அந்த மனைவிமார்கள், தங்கள் கணவரின் மேலிருந்த அபிமானத்தாலும், அன்பினாலும் அவன் பின்னே சென்று கொண்டிருந்தனர்.

     அவர்களின் கணவனான வலிமை மிக்க இராவணன், காம இச்சைக்கு ஆட்பட்டிருந்ததால், மந்த புத்தியுடன் இருந்தான்.  சீதையை நினைத்துக்கொண்டு, மெதுவாக, உற்சாகத்துடன், சீதையின் இருப்பிடம் நோக்கி நடந்து சென்றான்.

     அப்பொழுது அந்தப் பெண்களின் இடுப்பில் அணிந்திருந்த ஒட்டியாணங்களின் ஓசையும், கால்களில் அணிந்திருந்த சலங்கைகளின் ஓசையும் வாயுபுத்ரனான, ஸ்ரீஅனுமனுக்குக் கேட்டது.

     செயலாற்றுவதில் ஈடு இணையற்றவனும் , நினைத்துப் பார்க்க முடியாத வீரமும், ஆண்மையும் கொண்டவனுமான இராவணன், அசோக வனத்தின் நுழைவுப் பகுதிக்கு வந்து விட்டதை, ஸ்ரீ அனுமன் பார்த்தார்.

     இராவணனின் முன்புறம் வாசனை நிரம்பிய எண்ணெய்களால் எரியும் விளக்குகள் கொண்டு செல்லப்பட்டதால், எங்கிருந்து பார்த்தாலும் இராவணன், தெளிவாகத் தெரிந்தான். 

     இராவணன் அதிக காமத்துடனும், கர்வத்துடனும், மயக்கத்துடனும் இருந்தான். அவனது பெரிய கண்கள் சிவந்து, தாழ இருந்தன.  அவனைப் பார்க்கையில், கையில் வில் இல்லாத மன்மதனைப் பார்ப்பது போல இருந்தது.

     இராவணனது உடையானது, கடையப்பட்ட அமுதத்தின் நுரைபோல, குறைகளற்று வெண்மையாக, மிகச் சிறப்பாக இருந்தது.  முத்துக்களும், பூக்களும் அந்த உடையில் இருந்தன. அவனது ஆடை, அவன் கையிலணிந்திருந்த ஆபரணத்தில் சிக்கிவிட, அதை அவன் சரி செய்து கொண்டிருந்தான்.

     அசோக மரத்தின் இலைகள் மற்றும் கிளைகளில் மறைந்திருந்த ஸ்ரீஅனுமன், நூற்றுக்கணக்கான இலைகளினாலும் பூக்களினாலும் மறைக்கப்பட்டிருந்தார்.  அவ்வாறிருக்கும் சமயத்தில், அருகே வந்திருக்கும் இராவணனின் அடையாளங்களைக் கண்டறிய முனைந்தார்.

     அவ்வாறு பார்க்கும்போது, அழகிலும் இளமையிலும் மிளிர்ந்த இராவணனது அழகிய மனைவிகளையும் ஸ்ரீஅனுமன் தன் கண்களால் பார்வையிட்டார்.

      இவ்விதம் அழகிய பெண்கள் பின்தொடர வந்த அந்தப் பெரும் புகழ் வாய்ந்த அரசனான இராவணன், பலவிதமான பறவைகளும், விலங்குகளும் ஒலி எழுப்பிக்கொண்டிருக்கும் அந்த அசோக வனத்தினுள் நுழைந்தான். 

     விஸ்ரவஸரின் குமாரனான இராவணன், மிகுந்த மது மயக்கத்தில் இருந்ததையும், விதவித மான அணிகலன்கள் அணிந்திருந்ததையும், அவனது காதுகள் நீண்டு இருந்ததையும் ஸ்ரீஅனுமன் கண்டார்.

      அழகிய பெண்கள் சூழ நடந்து வரும் ஒளிபொருந்திய அந்த வீரனைப் பார்க்கும் போது, அவன் நட்சத்திரங்களுடன் துலங்கும் நிலவினைப் போல இருந்ததை ஸ்ரீஅனுமன் கண்டார்.

     இந்த மிகப் பெரிய வீரன் இராவணனே என்று ஸ்ரீஅனுமன் உறுதி கொண்டார். “இவன் தான் நகரத்தின் உள்ளே மாளிகையில் உறங்கிக்கொண்டிருந்தவன்” என்று முடிவு செய்து கொண்ட ஸ்ரீஅனுமன், தான் அமர்ந்திருந்த கிளையிலிருந்து கீழே இறங்கினார்.

     சிறந்த அறிவாளியான ஸ்ரீஅனுமன், மிகவும் ஒளி பொருந்தியவராய் இருந்தாலும், இராவணனது ஒளியினால் கூச்சம் அடைந்து, அடர்ந்திருந்த இலை, தலைகளுக்குள் நுழைந்து மறைந்து கொண்டார்.

     அங்கே இராவணன், கரிய கூந்தலையும், மைவிழிகளையும், சிற்றிடையையும், அழகிய மார்பகங்களையும் கொண்டிருந்த சீதையைப் பார்ப்பதற்காக, சீதையின் அருகில் சென்றான். 

 

                     பதினெட்டாவது ஸர்கம் நிறைவு.

Thursday, May 4, 2023

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம். பதினேழாவது ஸர்கம்.

 

            ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம்.

                                  பதினேழாவது ஸர்கம்.




 

     பிறகு, அன்றைய பொழுது கழிந்த பிறகு, குமுத மலர்களின் கூட்டம் போல், இயல்பாகவே களங்கமேதுமற்ற வெண்மை நிற சந்திரன், நீல நிற ஆகாயத்தில் உதித்து எழுந்தான். அதைப் பார்க்கும்போது, அன்னப்பறவையொன்று, நீல நிறத் தடாகத்தில் நீந்தி வருவது போல இருந்தது.

     தெளிந்த ஒளியினை வீசிய சந்திரன், தன்னுடைய அமைதியான குளிர்ந்த கிரணங்களை, ஸ்ரீஅனுமனுக்கு உதவும் வண்ணம் அங்கே வீசத்தொடங்கினான்.

     அந்த ஒளியின் உதவியால், முழுநிலவினையொத்த அழகிய முகத்தை உடைய சீதையின் முகமானது, அதிக எடையினால் நீரினுள் மூழ்கும் மரக்கலம் போல, அதிகத் துயரத்தால், கவிழ்ந்திருந்ததை, ஸ்ரீஅனுமன் கண்டார்.

     ஸ்ரீஅனுமன், சீதையை நன்கு பார்த்த பொழுது, சீதையைச் சுற்றியும், கோரமான பார்வையைக் கொண்ட பல அரக்கியர், அவருக்கு அருகிலேயே அமர்ந்திருந்ததைக் கண்டார்.

     அங்கிருந்த சில அரக்கியர் ஒற்றைக் கண்ணுடனும், சிலர் ஒற்றைக் காதுடனும் இருந்தனர்.  சிலரது காதுகள் அவர்கள் உடம்பை மூடுமளவிற்குப் பெரியதாக இருந்தன.  இன்னும் சிலருக்கு காதுகளே இல்லாமலும், சிலருக்கு முளைக்குச்சி அடித்ததுபோன்ற காதுகளும் இருந்தன.  சிலரது மூக்குகள், நெற்றிப்பகுதியில் அமைந்து, அங்கே சுவாசிக்கும் வகையில் அமைந்திருந்தன.

     ஒரு அரக்கியின் உடல் பெரிதாகவும், ஒருத்தியின் உடல் சரியான அமைப்புடனும் இருந்தது.  ஒருத்தியின் கழுத்து நீண்டிருந்தது.  ஒருத்தியின் கூந்தல் அவிழ்ந்து கிடந்தது.  ஒருத்திக்கு தலையில் முடியே இல்லை.  ஒருத்தியின் முடி கம்பளம் போல படர்ந்திருந்தது.

     ஒருத்தியின் காது பெரிதாகவும், ஒருத்தியின் நெற்றி பெரிதாகவும் இருந்தது.  ஒருத்தியின் வயிறு பெரிதாகவும், ஒருத்தியின் மார்பகங்கள் பெரிதாகவும் இருந்தன.  ஒருத்திக்கு உதடுகள் பெரிதாகத் தொங்கியண்ணம் இருந்தன.  ஒருத்தியின் உதடு, மேவாயோடு ஒட்டியிருந்தது.  ஒருத்தியின் முகம் பெரியதாகவும், ஒருத்தியின் முழங்கால்கள் தொங்கிய வண்ணமும் இருந்தன.

     அவர்களில் ஒருத்தி உயரமாகவும், ஒருத்தி குள்ளமாகவும், ஒருத்தி கூன் விழுந்தவளாகவும், ஒருத்தி விகாரமான உடலுடனும் இருந்தார்கள்.  ஒருத்தி கூரான பற்களுடனும், ஒருத்தி கோணலான வாயுடனும் இருந்தாள்.  ஒருத்தி செம்மஞ்சள் கண்களுடனும், ஒருத்தி விகாரமான முகத்துடனும் இருந்தாள்.   

     அந்த அரக்கியருள் பலர், உருக்குலைந்த உடலுடனும், கருப்பாகவும், மஞ்சள் நிறத்துடனும் இருந்தனர்.  சிலர் கோபத்தை விரும்புபவராகவும், சிலர் சண்டையை விரும்புபவராகவும் இருந்தனர்.  அவர்கள் அனைவரும் கரிய இரும்பினால் செய்யப்பட்ட பெரிய பெரிய சூலாயுதங்களையும், கத்திகளையும், ஈட்டிகளையும் கைகளில் வைத்திருந்தனர்.

     பன்றியைப் போலவும், மானைப் போலவும், சிங்கத்தைப் போலவும், எருதைப் போலவும், ஆட்டைப் போலவும் ஓநாயைப் போலவும் பற்பல வடிவங்களில் அவர்களது முக அமைப்புக்கள் இருந்தன.  சிலர் யானையினது  கால்களையும், சிலர் ஒட்டகத்தினது கால்களையும், சிலர் குதிரையினது கால்களையும் கொண்டிருந்தனர்.  சிலரது கழுத்துகள் உடலுடன் அழுந்தி மார்புவரை இருந்தன.

     அந்த அரக்கியருள் ஒருத்திக்கு ஒரு கையும், இன்னொருத்திக்கு ஒரு காலும் மட்டுமே இருந்தன.  ஒருத்தியுனுடைய காது கழுதையின் காதைப் போலவும், ஒருத்தியின் காது குதிரையின் காதைப் போலவும் இருந்தது.  பசு, யானை, சிங்கம் இவற்றினது காதுகளைப் போன்ற காதுகளைக் கொண்டவர்களாயும் சிலர் இருந்தனர்.

     சிலருடைய மூக்குகள் பெரியதாகவும், சிலரது மூக்குகள் சிறியதாகவும் இருந்தன.  சில அரக்கியருக்கு மூக்கு என்ற ஒன்றே இல்லாதிருந்தது.  யானையின் துதிக்கை போன்ற மூக்கும் சிலருக்கு இருந்தது.  சிலரது மூக்கு அவர்களது நெற்றியோடு ஒட்டி இருக்க, அதன் வழியே சுவாசித்தனர்.

     யானையின் கால்களைப் போன்ற பெரிய கால்களைச் சிலர் கொண்டிருந்தனர்.  மாட்டினுடைய பாதங்களைப் போல சிலரது பாதங்கள் இருந்தன.  சிலரது பாதங்களில் முடி முளைத்திருந்தது.  நீண்ட தலையையும் நீண்ட கழுத்தையும் கொண்டும் சிலர் இருந்தனர்.  சிலரது வயிற்றுப் பகுதி பெரியதாகவும், சிலரது மார்பகங்கள் பெரியதாகவும் இருந்தன.

     சிலரது முகங்களும், கண்களும் அவற்றின் அளவிற்கு மீறியதாக இருந்தன.  சிலரது வாயில் நீண்ட நாக்குகள் இருந்தன.  சில அரக்கியரது முகங்கள், ஆடு, யானை, பசுமாடு, பன்றி, குதிரை,ஒட்டகம், மற்றும் கழுதை ஆகியவற்றினைப் போல இருந்தன. பார்ப்பதற்கே அச்சம் தரும் வகையில் அந்த அரக்கியர் இருந்தனர்.

     சிலரது கைகளில், சூலம், ஈட்டி போன்ற ஆயுதங்கள் இருந்தன.  சிலர் கோபம் கொண்டவர்களாகவும், சிலர் சண்டைகளை விரும்புபவர்களாகவும் இருந்தனர். புகையின் நிறத்தின் முடிகளையும், கோரமான முக அமைப்புகளையும் கொண்டிருந்த அவர்கள், எப்பொழுதும் மது அருந்திய வண்ணமும், மாமிசம் சாப்பிட்டவாறும், அவற்றிலேயே நாட்டம் கொண்டவராகவும் இருந்தனர்.

     மாமிசமும், இரத்தமுமே அவர்களது உணவாக இருந்ததால், அவர்களது உடல் முழுவதும் அவை வழிந்து கிடந்தன.  அந்தக் காட்சிகள் பார்ப்பதற்கே உடலைச் சிலிர்க்கச்செய்வதாய் இருந்தன. வானரவீரராகிய ஸ்ரீஅனுமன் இந்தக் காட்சிகளையெல்லாம் பார்த்தார்.

     அதிகமான கிளைகளையும் பெரிய அடிமரத்தையும் கொண்டிருந்த அந்த அசோக மரத்தைச் சுற்றியும் அந்த அரக்கியர் அமர்ந்திருந்தனர்.  அரசகுமாரியான சீதை, அந்த மரத்தினடியில், அதன் வேர்களுக்கிடையே அமர்ந்திருந்தார்.  ஜனகனின் மகளாகிய சீதையை, ஸ்ரீஅனுமன் கவனத்துடன் பார்த்தார்.  சீதை ஒளி குறைந்து, துயரத்தால் மிகவும் களைத்துக் காணப்பட்டார்.  அவரது தலைமுடி எங்கும் புழுதி படிந்து, அழுக்காக இருந்தது.

     தனது சிறப்புக்களை இழந்து வானத்திலிருந்து தரைமீது வந்து விழும் நட்சத்திரத்தைப் போல, அவர் ஒளிகுன்றியிருந்தார்.  சிறந்த கற்புக்கரசியாகப் போற்றப்படும் சீதை, தன் கணவரைக் காணும் தவிப்புடன் இருந்தார். 

     கணவரது கருணை என்கின்ற மிகச் சிறந்த அணிகலனைத் தவிர, அவரிடம் வேறு விதமான அணிகலன்கள் எதுவும் இல்லாதிருந்தது.  அரக்கர்களின் அரசனான இராவணனால், கவரப்பட்டு, சிறை வைக்கப்பட்டிருந்த சீதை, தன் உற்றார், உறவினரை விட்டுப் பிரிந்திருந்தார்.

     தன் கூட்டத்தை விட்டுப் பிரிந்த பெண்யானை ஒன்று, சிங்கத்தின் பிடியில் அகப்பட்டுக் கொண்டிருப்பது போல, சீதையின் நிலை இருந்தது.  கார் கால இறுதியில், சரத் கால மேகங்களால் சூழப்பட்டிருக்கும் பிறை நிலவினைப் போல அவர் இருந்தார்.

     தன் கணவனின் நெருக்கத்தை இழந்திருந்த அவரது நிலை, கவனிப்பாரற்றுக் கிடக்கும் வீணையினைப் போல, இரங்கத்தக்கதாக இருந்தது.  எப்பொழுதும் கணவனின் பாதுகாப்பில் இருக்க வேண்டிய சீதை, அவ்வாறன்றி, அரக்கியரிடம் அடிமைப் பட்டுக் கிடந்தார்.  அங்காரகன் முதலிய கோள்களால் கவரப்பட்டுக் கிடக்கும் ரோகிணி நட்சத்திரத்தைப் போல, அந்த அசோக மரத்தினடியில், அரக்கியரால் சூழப்பட்டு, பெருந்துயரத்தில் இருந்த சீதையை ஸ்ரீஅனுமன் கண்டார்.

     பூக்களற்ற கொடியின் நிலையில் அவர் இருந்தார்.  அணிகலன்கள் எதுவிமின்றி, உடல் முழுவதும் புழுதி படர்ந்திருந்தபடி இருந்தாலும், அவரது உடலின் இயற்கையான ஒளியால், சேற்றில் புதைந்து கிடக்கும் தாமரைச் செடியின் தண்டு போல, அழகாக இருப்பினும் அழகற்றவர் போல அவர் இருந்தார்.

      மானின் விழிகளையொத்த விழிகளைக் கொண்டிருக்கும் சிறந்த பெண்ணரசியான சீதை, புழுதி நிறைந்த, சுருக்கங்கள் கொண்டிருக்கும் ஆடை அணிந்திருந்ததை ஸ்ரீஅனுமன் கண்டார்.

     துயரத்தால் வாடியிருந்தாலும், கரிய விழிகளைக் கொண்ட சீதை கணவனான ஸ்ரீராமனது ஆற்றல் மிக்க ஒளியினாலும், தன்னுடைய சீரிய பண்புகளாலும் பாதுகாப்பாக இருந்தார்.

     மானின் விழிகள் போல அழகிய கண்களைக் கொண்டிருந்த சீதையின் கண்கள், பயந்த பெண்மானின் கண்கள் போல இங்குமங்கும் அலைபாய்வதை ஸ்ரீஅனுமன் கண்டார்.  சீதையின் சூடான மூச்சுக் காற்றினால், அந்த மரத்தின் தளிர்கள் வெந்தது போலக் கருகின.  சீதை, துயரத்தின் மொத்த உருவமாகவும், உயர எழுந்து வரும் துயரத்தாலான அலை போலவும் காணப்பட்டார். 

     அவரது அழகிய உடலானது, துயரத்தால் களையிழந்திருப்பினும், எவ்வித அணிகலன்களும் அணியாமலேயே அவர் ஒளி குன்றாதிருந்தார்.  மிதிலையின் குமாரியான சீதையை, அந்த நிலையில் கண்ட ஸ்ரீஅனுமன், சீதையை கண்டுபிடித்து விட்டதால், பெரும் மகிழ்ச்சி அடைந்தார்.

     கருணைமிக்க விழிகளையுடைய சீதையைக் கண்டதும், ஸ்ரீஅனுமனின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது.  தன் மனதில், ஸ்ரீராமனை நினைத்து வணங்கினார்.

     சீதையைக் கண்டு விட்ட மகிழ்ச்சியில், ஸ்ரீராம, இலக்குமணர்களை வணங்கிய வானர வீரரான ஸ்ரீஅனுமன், அங்கேயே மறைந்தபடி இருந்தார்.

               

 

                                          பதினேழாவது ஸர்கம் நிறைவு.

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...