ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம்.
பதினேழாவது ஸர்கம்.
பிறகு, அன்றைய பொழுது கழிந்த பிறகு,
குமுத மலர்களின் கூட்டம் போல், இயல்பாகவே களங்கமேதுமற்ற வெண்மை நிற சந்திரன், நீல நிற
ஆகாயத்தில் உதித்து எழுந்தான். அதைப் பார்க்கும்போது, அன்னப்பறவையொன்று, நீல நிறத்
தடாகத்தில் நீந்தி வருவது போல இருந்தது.
தெளிந்த ஒளியினை
வீசிய சந்திரன், தன்னுடைய அமைதியான குளிர்ந்த கிரணங்களை, ஸ்ரீஅனுமனுக்கு உதவும் வண்ணம்
அங்கே வீசத்தொடங்கினான்.
அந்த ஒளியின்
உதவியால், முழுநிலவினையொத்த அழகிய முகத்தை உடைய சீதையின் முகமானது, அதிக எடையினால்
நீரினுள் மூழ்கும் மரக்கலம் போல, அதிகத் துயரத்தால், கவிழ்ந்திருந்ததை, ஸ்ரீஅனுமன்
கண்டார்.
ஸ்ரீஅனுமன்,
சீதையை நன்கு பார்த்த பொழுது, சீதையைச் சுற்றியும், கோரமான பார்வையைக் கொண்ட பல அரக்கியர்,
அவருக்கு அருகிலேயே அமர்ந்திருந்ததைக் கண்டார்.
அங்கிருந்த சில
அரக்கியர் ஒற்றைக் கண்ணுடனும், சிலர் ஒற்றைக் காதுடனும் இருந்தனர். சிலரது காதுகள் அவர்கள் உடம்பை மூடுமளவிற்குப் பெரியதாக
இருந்தன. இன்னும் சிலருக்கு காதுகளே இல்லாமலும்,
சிலருக்கு முளைக்குச்சி அடித்ததுபோன்ற காதுகளும் இருந்தன. சிலரது மூக்குகள், நெற்றிப்பகுதியில் அமைந்து, அங்கே
சுவாசிக்கும் வகையில் அமைந்திருந்தன.
ஒரு அரக்கியின்
உடல் பெரிதாகவும், ஒருத்தியின் உடல் சரியான அமைப்புடனும் இருந்தது. ஒருத்தியின் கழுத்து நீண்டிருந்தது. ஒருத்தியின் கூந்தல் அவிழ்ந்து கிடந்தது. ஒருத்திக்கு தலையில் முடியே இல்லை. ஒருத்தியின் முடி கம்பளம் போல படர்ந்திருந்தது.
ஒருத்தியின்
காது பெரிதாகவும், ஒருத்தியின் நெற்றி பெரிதாகவும் இருந்தது. ஒருத்தியின் வயிறு பெரிதாகவும், ஒருத்தியின் மார்பகங்கள்
பெரிதாகவும் இருந்தன. ஒருத்திக்கு உதடுகள்
பெரிதாகத் தொங்கியண்ணம் இருந்தன. ஒருத்தியின்
உதடு, மேவாயோடு ஒட்டியிருந்தது. ஒருத்தியின்
முகம் பெரியதாகவும், ஒருத்தியின் முழங்கால்கள் தொங்கிய வண்ணமும் இருந்தன.
அவர்களில் ஒருத்தி உயரமாகவும், ஒருத்தி குள்ளமாகவும், ஒருத்தி கூன் விழுந்தவளாகவும், ஒருத்தி விகாரமான உடலுடனும் இருந்தார்கள். ஒருத்தி கூரான பற்களுடனும், ஒருத்தி கோணலான வாயுடனும் இருந்தாள். ஒருத்தி செம்மஞ்சள் கண்களுடனும், ஒருத்தி விகாரமான முகத்துடனும் இருந்தாள்.
அந்த அரக்கியருள் பலர், உருக்குலைந்த உடலுடனும்,
கருப்பாகவும், மஞ்சள் நிறத்துடனும் இருந்தனர்.
சிலர் கோபத்தை விரும்புபவராகவும், சிலர் சண்டையை விரும்புபவராகவும் இருந்தனர். அவர்கள் அனைவரும் கரிய இரும்பினால் செய்யப்பட்ட
பெரிய பெரிய சூலாயுதங்களையும், கத்திகளையும், ஈட்டிகளையும் கைகளில் வைத்திருந்தனர்.
பன்றியைப் போலவும்,
மானைப் போலவும், சிங்கத்தைப் போலவும், எருதைப் போலவும், ஆட்டைப் போலவும் ஓநாயைப் போலவும்
பற்பல வடிவங்களில் அவர்களது முக அமைப்புக்கள் இருந்தன. சிலர் யானையினது கால்களையும், சிலர் ஒட்டகத்தினது கால்களையும், சிலர்
குதிரையினது கால்களையும் கொண்டிருந்தனர். சிலரது
கழுத்துகள் உடலுடன் அழுந்தி மார்புவரை இருந்தன.
அந்த அரக்கியருள்
ஒருத்திக்கு ஒரு கையும், இன்னொருத்திக்கு ஒரு காலும் மட்டுமே இருந்தன. ஒருத்தியுனுடைய காது கழுதையின் காதைப் போலவும்,
ஒருத்தியின் காது குதிரையின் காதைப் போலவும் இருந்தது. பசு, யானை, சிங்கம் இவற்றினது காதுகளைப் போன்ற காதுகளைக்
கொண்டவர்களாயும் சிலர் இருந்தனர்.
சிலருடைய மூக்குகள்
பெரியதாகவும், சிலரது மூக்குகள் சிறியதாகவும் இருந்தன. சில அரக்கியருக்கு மூக்கு என்ற ஒன்றே இல்லாதிருந்தது. யானையின் துதிக்கை போன்ற மூக்கும் சிலருக்கு இருந்தது. சிலரது மூக்கு அவர்களது நெற்றியோடு ஒட்டி இருக்க,
அதன் வழியே சுவாசித்தனர்.
யானையின் கால்களைப்
போன்ற பெரிய கால்களைச் சிலர் கொண்டிருந்தனர்.
மாட்டினுடைய பாதங்களைப் போல சிலரது பாதங்கள் இருந்தன. சிலரது பாதங்களில் முடி முளைத்திருந்தது. நீண்ட தலையையும் நீண்ட கழுத்தையும் கொண்டும் சிலர்
இருந்தனர். சிலரது வயிற்றுப் பகுதி பெரியதாகவும்,
சிலரது மார்பகங்கள் பெரியதாகவும் இருந்தன.
சிலரது முகங்களும்,
கண்களும் அவற்றின் அளவிற்கு மீறியதாக இருந்தன.
சிலரது வாயில் நீண்ட நாக்குகள் இருந்தன.
சில அரக்கியரது முகங்கள், ஆடு, யானை, பசுமாடு, பன்றி, குதிரை,ஒட்டகம், மற்றும்
கழுதை ஆகியவற்றினைப் போல இருந்தன. பார்ப்பதற்கே அச்சம் தரும் வகையில் அந்த அரக்கியர்
இருந்தனர்.
சிலரது கைகளில்,
சூலம், ஈட்டி போன்ற ஆயுதங்கள் இருந்தன. சிலர்
கோபம் கொண்டவர்களாகவும், சிலர் சண்டைகளை விரும்புபவர்களாகவும் இருந்தனர். புகையின்
நிறத்தின் முடிகளையும், கோரமான முக அமைப்புகளையும் கொண்டிருந்த அவர்கள், எப்பொழுதும்
மது அருந்திய வண்ணமும், மாமிசம் சாப்பிட்டவாறும், அவற்றிலேயே நாட்டம் கொண்டவராகவும்
இருந்தனர்.
மாமிசமும், இரத்தமுமே
அவர்களது உணவாக இருந்ததால், அவர்களது உடல் முழுவதும் அவை வழிந்து கிடந்தன. அந்தக் காட்சிகள் பார்ப்பதற்கே உடலைச் சிலிர்க்கச்செய்வதாய்
இருந்தன. வானரவீரராகிய ஸ்ரீஅனுமன் இந்தக் காட்சிகளையெல்லாம் பார்த்தார்.
அதிகமான கிளைகளையும்
பெரிய அடிமரத்தையும் கொண்டிருந்த அந்த அசோக மரத்தைச் சுற்றியும் அந்த அரக்கியர் அமர்ந்திருந்தனர். அரசகுமாரியான சீதை, அந்த மரத்தினடியில், அதன் வேர்களுக்கிடையே
அமர்ந்திருந்தார். ஜனகனின் மகளாகிய சீதையை,
ஸ்ரீஅனுமன் கவனத்துடன் பார்த்தார். சீதை ஒளி
குறைந்து, துயரத்தால் மிகவும் களைத்துக் காணப்பட்டார். அவரது தலைமுடி எங்கும் புழுதி படிந்து, அழுக்காக
இருந்தது.
தனது சிறப்புக்களை
இழந்து வானத்திலிருந்து தரைமீது வந்து விழும் நட்சத்திரத்தைப் போல, அவர் ஒளிகுன்றியிருந்தார். சிறந்த கற்புக்கரசியாகப் போற்றப்படும் சீதை, தன்
கணவரைக் காணும் தவிப்புடன் இருந்தார்.
கணவரது கருணை
என்கின்ற மிகச் சிறந்த அணிகலனைத் தவிர, அவரிடம் வேறு விதமான அணிகலன்கள் எதுவும் இல்லாதிருந்தது. அரக்கர்களின் அரசனான இராவணனால், கவரப்பட்டு, சிறை
வைக்கப்பட்டிருந்த சீதை, தன் உற்றார், உறவினரை விட்டுப் பிரிந்திருந்தார்.
தன் கூட்டத்தை
விட்டுப் பிரிந்த பெண்யானை ஒன்று, சிங்கத்தின் பிடியில் அகப்பட்டுக் கொண்டிருப்பது
போல, சீதையின் நிலை இருந்தது. கார் கால இறுதியில்,
சரத் கால மேகங்களால் சூழப்பட்டிருக்கும் பிறை நிலவினைப் போல அவர் இருந்தார்.
தன் கணவனின்
நெருக்கத்தை இழந்திருந்த அவரது நிலை, கவனிப்பாரற்றுக் கிடக்கும் வீணையினைப் போல, இரங்கத்தக்கதாக
இருந்தது. எப்பொழுதும் கணவனின் பாதுகாப்பில்
இருக்க வேண்டிய சீதை, அவ்வாறன்றி, அரக்கியரிடம் அடிமைப் பட்டுக் கிடந்தார். அங்காரகன் முதலிய கோள்களால் கவரப்பட்டுக் கிடக்கும்
ரோகிணி நட்சத்திரத்தைப் போல, அந்த அசோக மரத்தினடியில், அரக்கியரால் சூழப்பட்டு, பெருந்துயரத்தில்
இருந்த சீதையை ஸ்ரீஅனுமன் கண்டார்.
பூக்களற்ற கொடியின்
நிலையில் அவர் இருந்தார். அணிகலன்கள் எதுவிமின்றி,
உடல் முழுவதும் புழுதி படர்ந்திருந்தபடி இருந்தாலும், அவரது உடலின் இயற்கையான ஒளியால்,
சேற்றில் புதைந்து கிடக்கும் தாமரைச் செடியின் தண்டு போல, அழகாக இருப்பினும் அழகற்றவர்
போல அவர் இருந்தார்.
மானின் விழிகளையொத்த
விழிகளைக் கொண்டிருக்கும் சிறந்த பெண்ணரசியான சீதை, புழுதி நிறைந்த, சுருக்கங்கள் கொண்டிருக்கும்
ஆடை அணிந்திருந்ததை ஸ்ரீஅனுமன் கண்டார்.
துயரத்தால் வாடியிருந்தாலும்,
கரிய விழிகளைக் கொண்ட சீதை கணவனான ஸ்ரீராமனது ஆற்றல் மிக்க ஒளியினாலும், தன்னுடைய சீரிய
பண்புகளாலும் பாதுகாப்பாக இருந்தார்.
மானின் விழிகள்
போல அழகிய கண்களைக் கொண்டிருந்த சீதையின் கண்கள், பயந்த பெண்மானின் கண்கள் போல இங்குமங்கும்
அலைபாய்வதை ஸ்ரீஅனுமன் கண்டார். சீதையின் சூடான
மூச்சுக் காற்றினால், அந்த மரத்தின் தளிர்கள் வெந்தது போலக் கருகின. சீதை, துயரத்தின் மொத்த உருவமாகவும், உயர எழுந்து
வரும் துயரத்தாலான அலை போலவும் காணப்பட்டார்.
அவரது அழகிய
உடலானது, துயரத்தால் களையிழந்திருப்பினும், எவ்வித அணிகலன்களும் அணியாமலேயே அவர் ஒளி
குன்றாதிருந்தார். மிதிலையின் குமாரியான சீதையை,
அந்த நிலையில் கண்ட ஸ்ரீஅனுமன், சீதையை கண்டுபிடித்து விட்டதால், பெரும் மகிழ்ச்சி
அடைந்தார்.
கருணைமிக்க விழிகளையுடைய
சீதையைக் கண்டதும், ஸ்ரீஅனுமனின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது. தன் மனதில், ஸ்ரீராமனை நினைத்து வணங்கினார்.
சீதையைக் கண்டு
விட்ட மகிழ்ச்சியில், ஸ்ரீராம, இலக்குமணர்களை வணங்கிய வானர வீரரான ஸ்ரீஅனுமன், அங்கேயே
மறைந்தபடி இருந்தார்.
பதினேழாவது
ஸர்கம் நிறைவு.

1 comment:
கண்டேன் சீதையை...🙏🙏🙏🙏
Post a Comment