ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம்.
பத்தொன்பதாவது ஸர்கம்.
உடலெங்கும் பல
விதமான நகையலங்காரங்களுடனும், அழகுபடுத்தப்பட்ட வாலிப மிடுக்குடனும், தன்னை நோக்கி
வந்த அரக்கர் இனத் தலைவனான இராவணனைப் பார்த்ததும், மாசுமருவற்ற அழகியான சீதை, ஊழிக்காற்றில்
அல்லாடும் வாழைச்செடியினைப் போல அச்சத்தில் விதிர்த்து நின்றாள்.
அகன்ற விழிகளையும்,
மிக அழகிய உடலழகையும் கொண்டிருந்த சீதை, தன் துடைகளால் வயிற்றுப் பகுதியையும், கைகளால்
மார்பகங்களையும் மறைத்துக் கொண்டு அழத்தொடங்கினாள்.
அரக்கியரின்
கடுங்காவலில் இருந்த சீதை, மெலிந்தும், துயரத்துடனும் இருந்தாள். சுழற்காற்றில் சிதைந்து, கடலில் மூழ்கும் கப்பலைப்
போலப் பெருந்துயரத்தில் இருந்த சீதையை, பத்துத் தலைகளைக் கொண்டிருந்த இராவணன் பார்த்தான். மரத்திலிருந்து முறிந்து தரையில் தனியே விழுந்து
கிடக்கும் மரக் கிளையைப் போல சீதை வெட்ட வெளியில் அமர்ந்திருந்தாள். ஒரு கடுமையான விரதம்
பூண்டவள் போன்று சீதை அமர்ந்திருந்தாள்.
வாசனைப் பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருக்க வேண்டிய சீதையின் மேனியெங்கும் புழுதி படர்ந்திருந்தது. எல்லாவிதமான அலங்காரங்களுக்கும் ஏற்புடையவளான சீதை, எந்தவிதமான அலங்காரமும் இல்லாதிருந்தாள். தாமரைப் பூவைச் சுமந்துகொண்டு அழகுடன் விளங்கும் தாமரைத் தண்டானது, சேற்றில் மூழ்கி அழுக்குடன் விளங்குவது போல சீதையின் நிலை இருந்தது.
சீதை, உறுதியான எண்ணங்களைக் குதிரைகளாகப் பூட்டிய
மனோரதத்தில், தன்னை அறிந்த ஞானியான, ராஜசிங்கம் போன்ற ஸ்ரீராமனை நோக்கிச் செல்வது போல இருந்தாள்.
வெளிறிய உடலுடனும், ஸ்ரீஇராமனைப் பிரிந்த பிரிவாற்றாமையுடனும்,
துயரத்துடனும் தனிமையில் அழுதபடி, ஸ்ரீஇராமனைத் தியானித்தபடியே இருந்தாள். தன் கணவனின் எண்ணம் அறிந்து நடக்கும் ஸ்ரீராமனின்
மனைவியான சீதையின் துயரத்திற்கு முடிவில்லையோ என்று தோன்றியது.
தன்னைச் சுருட்டிக்கொண்டு அமர்ந்திருந்த சீதை, நாகங்களின் அரசி போலவும், புகைந்து கொண்டிருக்கும் வால் நட்சத்திரத்தால் மறைக்கப்பட்ட ரோகிணி நட்சத்திரத்தைப் போலவும் காணப்பட்டாள்.
உயர்ந்த குலத்தில் பிறந்து, தர்ம சிந்தனையும்,
நல்ல உயர்ந்த பழக்க வழக்கங்களும் கொண்ட குலத்தில் நல்ல முறையில் மணம் முடித்துச் சென்றிருந்தாலும்,
சீதையின் தற்போதைய நிலை, ஒரு இழிகுலத்தின் பிறந்த பெண்ணின் நிலையைப் போல இருந்தது.
நலிவடைந்த பெரும் புகழ், மதிக்கப்படாத ஈடுபாடு,
வீழ்ச்சியடைந்த புத்தி, உடைந்துபோன நம்பிக்கை, அழிந்துபட்ட எதிர்காலம், மதிக்கப்படாத
அரசாணை, ஊழிக்காலத்தில் எரியும் திசைகள், தடைப்பட்டுப்போன இறைவனின் பூஜை, கிரகணத்தால்
பீடிக்கப்பட்ட நிலவு உதித்திருக்கும் இரவு, பனியினால் பாழ்பட்ட தாமரை, படைத்தலைவனை
இழந்த சேனை, கடும் குளிரினால் மறைந்து போன ஒளி, உலர்ந்து போன கொடி, அசுத்தமானவர்களைத்
தொட்டுவிட்ட வேதியர், தீ அணைந்து போன மரக்குச்சி ஆகியன போன்ற மோசமான நிலையில் சீதையின்
நிலை இருந்தது.
மதம் பிடித்த யானையின் துதிக்கையால் அலைக்கழிக்கப்பட்டு,
இலைகளும், கொடிகளும், தாமரைப் பூக்களும் சிதறியடிக்கப்பட்ட தாமரைக் குளம் போன்று சீதையின்
நிலை ஒளியிழந்திருந்தது.
பல இடங்களில் கால்வாய்கள் மூலம் பிரித்து விடப்பட்டதால்,
நீர் வற்றிப்போன நதியைப் போலவும் , வாசனைத் திரவியங்கள் ஏதும் பூசியிருக்காததால், கிருஷ்ண
பக்ஷத்து இரவினைப் போலவும் ஒளி குன்றியிருந்த சீதை, கணவனின் பிரிவுத் துயரத்தில், மிகவும்
கலக்கத்தில் இருந்தாள்.
அழகிய உடலமைப்பைக் கொண்டிருந்த சீதை, விலையுயர்ந்த
கற்களால் அலங்கரிக்கப்பட்ட மாளிகையில் வசிக்க வேண்டியவள். ஆனால் வெயிலில் வாட்டமுற்றிருந்த அவள், பிடுங்கி
எறியப்பட்ட தாமரைச் செடியைப் போல மிகவும் பரிதாபமான நிலையில் இருந்தாள்.
கூட்டத்தின் தலைவனிடமிருந்து பிரிக்கப்பட்டு,
கம்பத்தில் கட்டப்பட்டிருக்கும் பெண் யானையைப் போல, சீதை நெடுமூச்சு எடுத்துக்கொண்டிருந்தாள்.
ஒற்றைத் தலைப் பின்னலுடன் இருந்த சீதையைப் பார்க்கும்
போது, மழைக்கால முடிவில், பெருத்து வளர்ந்திருக்கும் மரங்களில் வரிசை கொண்ட பூமியைப்
போல இருந்தாள்.
உணவு உட்கொள்ளாததால் இளைத்தும், தியானத்தாலும்,
பயத்தாலும் மனம் குன்றியும் இருந்த சீதை, குறைந்த உணவே உட்கொண்டும், தவம் செய்வதையே
செல்வமாகக் கொண்டும் விளங்கினாள்.
கைகளைக்
குவித்துக்கொண்டு, தன் குல தெய்வங்களை வேண்டி, ரகு குல நாயகனான ஸ்ரீராமன், பதின்முக
இராவணனை வதம் செய்ய வேண்டும் என்று யாசிப்பவள் போல விளங்கினாள்.
துயரத்தால் அழுகின்ற, குற்றமற்றவளான சீதை, அழகிய
புருவங்களுடன் ஓரங்களில் சிவந்த , அகன்ற விழிகளையும் கொண்டு தன்னைக் காப்பாற்றுபவரை
நான்கு பக்கங்களிலும் தேடினாள். ஸ்ரீராமனையே
எப்பொழுதும் நினைத்துக்கொண்டிருந்த சீதையை, தனது அழிவைத் தேடிக்கொள்பவனாக, இராவணன்
காமத்துடன் நெருங்கினான்.
பத்தொன்பதாவது ஸர்கம் நிறைவு.


No comments:
Post a Comment