Monday, June 12, 2023

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம். இருபதாவது ஸர்கம்

 

               ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம்.

                                     இருபதாவது ஸர்கம் 




     ஒரு பெண் துறவியைப் போலிருந்த சீதை, அரக்கியரால் சூழப்பட்டு பெரும் துன்பத்தில் இருந்த நிலையில், இராவணன், அவளைப் பார்த்து, தன் மனத்தினுள் இருக்கும் ஆசைகளை வெளிப்படுத்தும் வண்ணம் இனிய வார்த்தைகளை இவ்விதம் பேசினான்.

     “யானையின் துதிக்கை போன்ற துடைகளைக் கொண்ட சீதையே! நீ என்னைக் கண்டதும் உன் கைகளால் உன் மார்பகங்களையும், வயிற்றுப்பகுதிகளையும் மறைத்துக் கொள்வதைப் பார்க்கும்போது, அச்சத்தால், நீ, என்னிடம் இருந்து உன்னை மறைத்துக்கொள்ள நினைக்கின்றாய் என்று தோன்றுகிறது!”

     “அழகிய விழிகளையுடைய சீதையே! நான் உன்னை விரும்புகிறேன்.  இந்த பிரபஞ்சமே கொண்டாடும் உடலழகைக் கொண்ட அன்புக்குரியவளே! என்னை மதித்து என் வேண்டுகோளை ஏற்றுக்கொள்!”

     “சீதையே! என்னைத் தவிர, இந்த இடத்தில் வேறு மனிதர்களோ, அல்லது நினைத்தபடி வடிவம் கொள்ளத்தக்க வேறு அரக்கரோ, எவருமில்லை.  ஆகவே, உனக்கு உண்டான அச்சத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும்!”

     “ஓ! அச்சம் கொண்டிருக்கும் பெண்ணே! பிறர் வீட்டுப் பெண்களிடம் செல்வதும், அவர்களைக் கட்டாயப்படுத்தி அபகரித்து வருவதும், அரக்கர்களின் இயல்பான செயலாகும், அவர்களுக்கு அதுவே அறமுமாகும்! இதில் சந்தேகம் இல்லை!”

     “மிதிலை குமாரியே! இந்த நிலையிலும், நீ என்னை விரும்பாத வரை, நான் உன்னைத் தொட மாட்டேன்.  என்னுடைய மனதில் காம தேவன் எவ்வளவு மோகத்தை உண்டாக்கினாலும், நான் கவலைப் பட மாட்டேன்!”

     “தேவி! இந்த விஷயத்தில், நீ அச்சம் கொள்ளத் தேவையில்லை.  அன்பிற்குரியவளே! என்னை நம்பி, என்னிடம் உண்மையான அன்பைச் செலுத்து! இது போலத் துயரத்தில் மூழ்கி இருக்காதே!”

     “ஒற்றைத் தலைப்பின்னலுடன், தரையில் படுத்துறங்கி, கவலையில் மூழ்கி, அழுக்கான உடைகளுடன், தகுதியற்ற நேரங்களில் உண்ணா நோன்பு இருப்பது உனக்கு ஏற்புடைய செயலல்ல!”

       “மிதிலையின் குமாரியே! என்னை நீ ஏற்றுக்கொண்டால், பல வண்ண மாலைகள், மிகச் சிறந்த சந்தனம் மற்றும் அகில் போன்ற நறுமணப் பொருட்கள், விலையுயர்ந்த பல வண்ணப் பட்டாடைகள், பலவிதமான அணிகலன்கள், மிகச் சிறந்த பானங்கள், படுக்கைகள், இருக்கைகள் இவையாவும் உனக்குக் கிடைக்கும்.  ஆடலும், பாடலும், இசைக்கருவிகளின் இன்னிசையும் உனக்குச் சொந்தமாகும்!”

     “ஹே சீதையே! நீ பெண்களுள் உயர்ந்த மாணிக்கம் போன்றவள்!  இவ்விதம் எளிமையான தோற்றத்தில் இருக்காதே! அழகியே! உன்னுடைய அங்கங்களில் விதவிதமான நகைகளை அணிந்துகொள்! என்னை அடையப்போகும் நீ, பலவிதமான அலங்காரங்களிலிருந்து எவ்விதம் விலகியிருக்க இயலும்? (எவ்விதம் இவற்றை வெறுக்க இயலும்?)”

     “உன்னுடைய புத்தம் புதிய இளமையானது, வீணே கழிந்து கொண்டுள்ளது.  நதியின் வழிச் செல்லும் நீரோட்டம் போல, கழிந்தது, திரும்பி வர இயலாது!”

     “அழகிய பெண்ணே! இந்த உலகத்தைப் படைத்த அந்த பிரம்மா, உன் வடிவத்தை உருவாக்கிய பிறகு, தன் படைக்கும் தொழிலையே விட்டு விட்டான் போலும்.  ஏனென்றால், உன் அழகிற்கு இணையான வேறொரு பெண் எங்குமே இல்லை!”

     “விதேஹ நாட்டின் அரச குமாரியே! உடலழகிலும், இளமையிலும் இணையற்று விளங்கும் உன்னைப் பார்த்தபின், எந்த ஆண்மகனும், அவன்  அந்த பிரம்மாவாகவே இருந்த போதிலும், மனம் பிறழாமல் இருக்க முடியுமா?

     “முழு நிலவினைப் போன்ற அழகிய முகம் கொண்டவளே! உன்னுடைய உடலின் எந்தவொரு பகுதியைப் பார்த்தாலும், என் கண்கள், அந்த இடத்திலேயே நிலை கொண்டு விடுகின்றனவே!”

     “மிதிலையின் குமாரியே! நீ என்னுடைய மனைவியாகி விடு! கணவன் பால் கொண்ட அன்பை விட்டு விடு! எனது அரண்மனையில் ஏராளமான அழகிய ராணியர் இருக்கின்றனர்.  உன்னை அவர்களுக்கெல்லாம் அரசியாக, பட்டத்தரசி ஆக்கிவிடுகிறேன்!”

     “அச்சத்தில் இருக்கும் பெண்ணே! நான் பல இடங்களில் போரிட்டு, கவர்ந்து வந்த அனைந்து விலையுயர்ந்த இரத்தினங்களும் உனக்குச் சொந்தமானவையாகும்.  இந்த மாபெரும் தேசத்தையே உனக்குக் காணிக்கையாக்குகிறேன்!”

     “அழகிய பெண்ணே! உன்னுடைய மகிழ்விற்காக வேண்டி, பல்வேறு அழகிய நகரங்களைக் கொண்ட இந்த உலகத்தை வெற்றி கொண்டு, அதை, ஜனக மகாராஜாவின் கரங்களில், ஒப்படைத்து விடுகிறேன்!”

     “இந்த உலகத்தில், என்னை எதிர்க்கக்கூடிய எந்தவொரு ஆண்மகனையும் நான் பார்த்ததில்லை.  போர்க்களத்தில், என்னுடைய வீரத்திற்குப் பதில் சொல்லக் கூடியவர்கள் யாருமில்லை என்பதை நீ உணரவேண்டும்!”

     “பல தேவ, அசுரர்களின் கொடிகளை நான் போரில் முறித்து வீழ்த்தியுள்ளேன்.  அவர்கள் அனைவரும் போரில் என்னை எதிர் கொள்ள முடியாமல், புறமுதுகிட்டு ஓடியுள்ளனர்.”

     “நீ என்னை ஏற்றுக்கொள்! நீ மிகவும் சிறந்த முறையில் இன்று அலங்கரிக்கப்படுவாய்! உன்னுடைய உடலில் மின்னக்கூடிய நகைகள் பூட்டப்படட்டும்! ஓ அழகிய பெண்ணே! நீ நல்ல முறையில் அலங்கரித்துக் கொண்டிருப்பதை நான் கண்டு இன்புற வேண்டும்.”

     “ஓ அச்சம் கொண்டவளே! உன்னுடைய ஆசைப்படி வித விதமான வசதிகளை அனுபவிப்பாயாக! மிகச் சிறந்த பானங்களை அருந்திக் களிப்பாயாக! உன்னுடைய மனம் திருப்தியுறும் வண்ணம் நிலங்களையும் செல்வங்களையும் தானம் கொடுப்பாயாக!”

     “என் மீது நம்பிக்கை கொண்டு என்னுடன் மகிழ்வாய் இரு! அச்சமின்றி தைரியத்துடன் எனக்கு நீ ஆணையிடலாம்.  நீ என்னுடன் உல்லாசமாய் இருப்பதைக் காணும் உனது சுற்றத்தாரும் மகிழ்ச்சியுறுவர்!”

     “ஓ புகழுடைய பெண்ணே! நீ என்னுடைய பெரு வளத்தையும், செல்வச் செழிப்பையும், பெரும் புகழையும் பார்!  அழகானவளே! மரவுரி தரித்த ராமனை அடைந்து நீ என்ன செய்வாய்?”

     “வெற்றியின் மீதான நம்பிக்கையை இழந்து விட்ட இராமன், செல்வங்களை இழந்து, காடுகளில் அலைந்து கொண்டிருக்கின்றான்.  பல விதமான கடும் விரதங்களைக் கடைப்பிடித்து, மண்தரையில் உறக்கம் கொள்கிறான்.  எனக்கென்னவோ, இராமன் உயிருடன் இருக்கிறானோ, இல்லையோ என்ற ஐயமே உள்ளது!”

     “ஓ விதேக குமாரியே! கரு மேகங்கள் சூழ்ந்துள்ள நிலவினை எவ்விதம் வானில் பறக்கும் கொக்குகள் கூட காண இயலாதோ, அது போல, இராமன் உன்னை அடைவதென்பதும் காண்பதென்பதும் இயலாது!”

     “ஹிரண்யகசிபு, இந்திரனால் கவர்ந்து செல்லப்பட்ட கீர்த்தியென்னும் தனது மனைவியை மீட்டுக் கொண்டது போல, என் வசமிருக்கும் உன்னை இராமனால் மீட்க இயலாது!” (இதுவே கீதாபிரஸ், அனந்தராம தீக்ஷிதர், மற்றும், பாலக்காடு தர்மாலயா பதிப்புகளில் உள்ளது. ஐஐடி ன் பதிப்பில் , ‘ஹிரண்ய கசிபு, இந்திரனால் கவர்ந்து செல்லப்பட்ட தனது புகழை மீட்டுக்கொண்டது போல’ என்று உள்ளது)

     “மனதைக் கொள்ளை கொள்ளும் உன்னுடைய புன்சிரிப்பு, உன்னுடைய அழகிய பல் வரிசை, உன்னுடைய காந்தம் போன்று கவர்ந்திழுக்கும் கண்கள் ஆகியவை, கருடன் நாகப் பாம்பை கவர்ந்திழுப்பது போல எனது மனதைக் கொள்ளை கொள்கின்றன!”

     “மெலிந்த தேகத்துடன், உடலில் எந்தவித அணிகலன்களும்  அணியாது, கிழிந்த பட்டாடையுடன் இருக்கும் உன்னைப் பார்த்தது முதல், எனது மனைவியர் மீது என் மனம் ஈடுபாடு கொள்ளவில்லை!”

     “ஓ ஜனகனின் குமாரியே! என்னுடைய அந்தப்புரத்தில் வசிக்கும் மிகச் சிறந்த ராணியர் அனைவருக்கும் நீ தலைவியாகிவிடு!”

     “அழகிய கரும் கூந்தலையுடைய பெண்ணே! தேவலோக அப்சரஸ்கள் திருமகளுக்குப் பணிவிடை செய்வது போல, என்னிடம் உள்ள, மூவுலகிலும் மிகச்சிறந்த பெண்கள் உனக்குப் பணிவிடை செய்வார்கள்!”

     “பெருத்த புட்டங்களையும், அழகிய புருவங்களையும் உடைய பெண்ணே! குபேரனுடைய வைர வைடூரியங்கள் அடங்கிய அனைத்து செல்வங்களையும், அனைத்து உலகங்களையும் என்னுடன் சேர்ந்து அனுபவிப்பாயாக!”

     “ஓ தேவீ! என்னுடைய தவ வலிமை, உடல் வலிமை, பெரும் வீரம், செல்வம், அறிவாற்றல் மற்றும் புகழ் யாவற்றுக்கும் இராமனால் ஈடு கொடுக்க முடியாது!”

     “ஓ மகிழ்ச்சியைத் தருபவளே! மிகவும் ருசி மிக்க பானங்களை அருந்தி, கேளிக்கை விளையாட்டுக்களில் ஈடுபடுவாய்!  உனக்குச் செல்வக் குவியலையும், வேண்டிய பூமிகளையும் அன்பளிப்பாகத் தருகிறேன்!  அழகியே! என்னுடன் வேடிக்கைக் களியாட்டங்களில் ஈடுபட்டு, மகிழ்ச்சி அடைவாயாக! உன்னுடைய உற்றார் உறவினரும் உன்னுடன் இணைந்து இந்தச் செல்வங்களை அனுபவிக்கட்டும்.!”

     “ஓ அச்சம் கொள்ளும் அழகிய பெண்ணே! நீ குறையற்ற பொன்னாலான நகைகளை அணிந்து கொண்டு, பூத்துக் குலுங்கும் மரக்கிளைகளும், அவற்றைச் சுற்றிவரும் வண்டுகளும் நிறைந்த காடுகள் வளர்ந்துள்ள கடற்கரைகளில் என்னுடன் சேர்ந்து விளையாடி மகிழ்வாயாக!”

 

                                     இருபதாவது ஸர்கம் நிறைவு.

1 comment:

K Aravindhankrishna said...

காமுகனின் வார்த்தை ஜாலம்....
புகழ். - கீர்த்தி. அர்த்தம் ஒன்றுதானே..!!


ஜெய் ஸ்ரீராம்..🙏

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...