Thursday, March 23, 2023

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம். பதின்மூன்றாவது ஸர்கம்.

 





                

                   ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம்.

                                பதின்மூன்றாவது ஸர்கம்.


 

     விமானத்திலிருந்து இறங்கி வந்த ஸ்ரீஅனுமன், மாளிகையின் மதிலில் தாவி ஏறினார்.   மேகங்களிடையே தோன்றும் மின்னலின் வேகத்தில் இங்கும் அங்கும் தேடத் தொடங்கினார்.

     இராவணனது எல்லா வீடுகளிலும் மீண்டும் வேகமாகத் தேடியும் சீதையைக் காண முடியாத ஸ்ரீஅனுமன், தனக்குள்ளே இவ்விதம் பேசத் தொடங்கினார்.

     “ஸ்ரீராமனை மகிழ்விக்க வேண்டி, நான் இந்த இலங்கையைப் பலமுறை சோதித்துத் தேடியும் மிகவும் அழகிய உடலமைப்புக் கொண்ட, வைதேஹியான   சீதையை நான் பார்க்க இயலவில்லை.”

     “நான் இங்கிருக்கும் குளம், குட்டை, ஏரிகள், நதிகள், காடுகள், ஏறமுடியாத மலைச்சிகரங்கள் அனைத்திலும் தேடிவிட்டேன்.  இந்த இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் தேடியும், சீதையைக் காண இயலவில்லை.”

     “பறவைகளின் அரசனான சம்பாதியும், சீதை இராவணனது மாளிகையில் இருப்பதாகத் தானே சொன்னார்? ஆனாலும் என்னால் ஏன் பார்க்க இயலவில்லை?”

     “விதேஹ குலத்தின் குலவிளக்காக மிதிலையில் பிறந்த ஜனகனின் மகளான சீதை, இராவணனால் பலாத்காரமாக அபகரிக்கப்பட்டதால், வேறு வழியில்லாமல் சோர்வடைந்து, இராவணனுக்கு பணிவிடை செய்ய நேரிட்டிருக்குமோ?  அதற்குச் சிறிதும் வாய்ப்பில்லை”.

     “ஸ்ரீராமனின் அம்புகளுக்குப் பயந்து, சீதையைத் தூக்கிக்கொண்டு, அதிவிரைவாக இராவணன் பறக்கும்போது, ஒருவேளை சீதை நழுவி, கீழே விழுந்திருக்கக் கூடுமோ?”

     “இல்லையெனில், சித்தர்கள் பயணிக்கும் பாதையான ஆகாயத்தின் வழியே பறக்கும்போது, கீழே கடலைப்பார்த்து, மயக்கமுற்று, கீழே விழுந்திருப்பாளோ?”

     “இராவணன் அவளைத் தன்னுடைய வலிமையான கரங்களால் கட்டியபடி, பெரும் வேகத்தில் சென்றதால், அழகிய நீண்ட விழிகளைக் கொண்ட சீதை, தன் உயிரை விட்டிருப்பாளோ?”

     “கடலின் மீது இராவணன், சீதையுடன் பறக்கும்போது, இராவணனின் பிடியிலிருந்து விடுபடும் முயற்சியில் சுழன்றதால், கீழே விழுந்திருக்கக்கூடுமோ?”

     “இல்லையென்றால், தன்னுடைய மானத்தைக் காத்துக்கொள்ள, உறவினர் யாருடைய உதவியும் இல்லாமல் போராடிய சீதையை, கொடிய இராவணன் கொன்று தின்றிருப்பானோ?”

     “அவ்வாறில்லையெனில், தீய எண்ணங்கள் கொண்ட இராவணனின் மனைவியர், நிர்மலமான கரிய விழிகளைக் கொண்ட சீதையைத் தின்றிருப்பார்களோ?”

     “முழுநிலவின் ஒளியையும், தாமரையின் இதழ்களையொத்த கண்களையும் கொண்ட ஸ்ரீராமனை மனத்தில் இருத்தி, தியானம் செய்துகொண்டே, வருத்தம் மிகுந்த சீதை உயிரை விட்டிருப்பாளோ?”

     “’ஹே ராமா! ஹே லக்ஷ்மணா! ஹே அயோத்யா!’ என்று சோகத்துடன் அழைத்தபடியே, விதேஹ குமாரி சீதை, தன் உயிரை விட்டிருக்கவேண்டும்!’

     “இவ்வாறெல்லாம் இல்லையென்றால், இராவணனால் ஏதும் இரகசிய அறையில் சீதை அடைக்கப்பட்டிருந்து, கூண்டிலடைபட்ட மைனாவைப் போல மீண்டும் மீண்டும் குரலெடுத்து அழுது கொண்டிருப்பாளோ? என்று எனக்குத் தோன்றுகிறது.”

     “ஜனக வம்சத்தில் பிறந்தவளும், ஸ்ரீராமனின் மனைவியும், நீலத்தாமரையினையொத்த கண்களையும், மெல்லிய இடையையும் உடையவளான சீதை, எவ்விதம் இராவணனிடம் அடைபட்டிருக்க முடியும்?”

     “ஜனகனின் மகளாகிய சீதை, பாதாள அறையில் இரகசியமாக அடைக்கப்பட்டிருந்தாலும், அல்லது கடலில் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்டிருந்தாலும், அல்லது, ஸ்ரீராமனைப் பிரிந்த துயரத்தால் உயிரை விட்டிருந்தாலும், இந்தச் செய்தியை, தனது மனைவியை மிகவும் நேசிக்கும் ஸ்ரீராமனிடம் சொல்வது ஏற்புடையதாக இராது.”

     “இந்தச் செய்தியைச் சொல்வதும் குற்றமாகும், சொல்லாமல் மறைப்பதும் குற்றமாகும்!  ஆகவே நான் என்ன செய்வது?”

     “எந்தச் செயல் செய்வதாக இருந்தாலும் அது இன்னல் மிகுந்ததாக உள்ளது. எனவே, இந்த இக்கட்டான நேரத்தில், எந்தச் செயலைச் செய்வது சரியானதாக இருக்கும்?” என்று ஸ்ரீஅனுமன் யோசிக்கலானார்.

     “சீதையைக் காணாமல், நான் வானர ராஜ்யமான கிஷ்கிந்தைக்குத் திரும்பிச் சென்றால் எனது வீரம் என்னாவது?”

     “அவ்வாறு நிகழ்ந்தால், இந்தக் கடலைத் தாண்டி இலங்கையில் நுழைந்து, இந்த அரக்கர்களிடையே தேடிய என் முயற்சிகள் அனைத்தும் வீணாகிப்போகுமே?”

     “இப்படியே நான் கிஷ்கிந்தைக்குச் சென்றால், அங்கே சுக்ரீவன், மற்ற வானர வீரர்கள், ஸ்ரீராமன் மற்றும் இலக்குவன் ஆகியோர் என் செயலைப்பார்த்து என்ன சொல்வார்கள்?”

     “அங்கே போகும் நான், ஸ்ரீராமனிடம், ‘என்னால் சீதை இருக்குமிடத்தை அறிய முடியவில்லை’ என்று சொல்லும் கொடிய வார்த்தைகளைக் கேட்டு அவர் தன் உயிரை விட்டுவிடுவாரே?”

     “சீதையைப் பற்றி நான் கூறும் இத்தகைய கடுமையான, கொடூரமான, கருணையற்ற, புலன்களை வருந்தச்செய்யும் செய்தியைக் கேட்டால், ஸ்ரீராமன் சிறுபொழுதும் உயிர் தரித்திருக்கமாட்டாரே?”

     “ஸ்ரீராமனிடத்தில் அதிக அன்பு கொண்ட, புத்திசாலியான இலக்குமணனும், துயரம் மிகுந்து வருந்தி அவர் உயிர் துறக்கும் நிலையைக் கண்ணுற்றால், தானும் உயிரை விட்டு விடுவாரே?”

     “தன்னுடைய சகோதரர்களான ஸ்ரீராமன், மற்றும் இலக்குவன் ஆகியோருக்கு நேர்ந்த முடிவைக் கேள்வியுறும் பரதனும் தன் இன்னுயிரை விட்டுவிடுவாரே? அதைப் பார்க்கும் சத்ருக்னனும் உயிர் தரித்திருக்கமாட்டாரே?”

     “தங்களுடைய குமாரர்களின் மரணச்செய்திகளைக் கேட்கும் இவர்களின் அன்னையர்களான, கெளசல்யா, சுமித்திரை, மற்றும் கைகேயி ஆகியோரும் தங்கள் உயிரை நிச்சயமாக விட்டுவிடுவார்கள் அல்லவா?”

     “வானர அரசனான சுக்ரீவன், கருணைமிக்கவனும், வாக்குத்தவறாதவனும் ஆவார்.  ஸ்ரீராமன் இவ்விதம் உயிர்விடுவதை அறிந்தால், அவரும் தன் உயிரை நீத்துவிடுவாரே?”

     கணவனை இழந்து, உடைந்த இதயத்துடன், மகிழ்ச்சியற்று துன்பத்தில் இருக்கும் தபஸ்வியான ரூமாவும் (சுக்ரீவனின் மனைவி) தன் உயிரை விட்டுவிடுவாரே?”

     “வாலியைப் பிரிந்து சோகத்தில் இருக்கும் ராணி தாராவும் இந்த நிகழ்ச்சிகளைப் பார்த்து உயிருடன் இருக்க மாட்டாரே?”

     “பெற்றோரையும் மற்றும் சுக்ரீவனையும் இழந்து துயரம் கொள்ளும் இளவரசன் அங்கதனும் எவ்விதம் உயிர் வாழ முடியும்?”

     “தங்கள் தலைவனை இழந்த வானரங்கள், அந்தத் துயரம் தாளாமல், தங்கள் கைகளாலும், முட்டியாலும் தங்கள் தலைகளில் அடித்துக் கொள்வார்களே?”

     “புகழ்மிக்க வானர அரசனான சுக்ரீவன், நல்வார்த்தைகளாலும், தாராளமான கொடைகளாலும் வானரர்களை அன்புடன் ஆண்டு வந்தான். அவன் உயிரிழந்தால், இந்த வானரர்களும் தங்கள் உயிரை விட்டுவிடுவார்களே?”

     “மீதமுள்ள வானரர்களும் காடுகளிலும் மலைகளிலும், குகைகளிலும் சேர்ந்து விளையாடி மகிழ்வதை விட்டு விடுவார்களே?”

     “தங்கள் அரசனுக்கு நேர்ந்த துயரத்தைக் காண இயலாமல், இந்த வானரர்கள், தங்கள் மனைவியர், குழந்தைகள், மற்றும் அமைச்சர் பெருமக்களுடன் மலைகளின் உச்சியிலிருந்து சமதரையிலும் பாறைகள் மீதும் விழுந்து தங்கள் உயிரைப்போக்கிக் கொள்வார்களே?”

     “இல்லையென்றால், எல்லா வானரர்களும் விஷம் அருந்தியோ, தூக்கிட்டுக்கொண்டோ, எரியும் தீயில் நுழைந்தோ, உண்ணாநோன்பிருந்தோ அல்லது ஆயுதங்களைப் பயன்படுத்தியோ தங்கள் உயிரை விட்டுவிடுவார்களே?”

     “நான் அங்கு செல்ல நேர்கையில், இவ்வாறு, இஷ்வாகு வம்ச அழிவினாலும், வானர குல அழிவினாலும் மிகவும் அச்சம்கொள்ளத்தக்க ஓலம் கேட்கும் என்று நினைக்கிறேன்”.

     “ஆகையினால் நான் இங்கிருந்து கிஷ்கிந்தைக்குச் செல்ல மாட்டேன்.  மிதிலையின் குமாரியான சீதையைக் கண்டுபிடிக்காமல், என்னால் சுக்ரீவனைச் சந்திக்க முடியாது.”

     “எனவே, நான் இங்கேயே தங்கி, கிஷ்கிந்தைக்குக் செல்லாமல் இருந்தால், நான் வருவேன் என்ற நம்பிக்கையுடன், தர்மத்திலும் வீரத்திலும் நிகரற்ற ஸ்ரீராமனும், இலக்குவணனும், உயிருடன் இருப்பார்கள்.  வேகத்தில் சிறந்த வானரர்களும் உயிருடன் இருப்பார்கள்.”

     “ஜனகனின் மகளாகிய சீதையை நான் இங்கே காணமுடியாவிட்டால், வானப்பிரஸ்தம் மேற்கொண்டு, இங்கேயே இருந்துவிடுவேன்.  கைக்குக் கிடைப்பதையும், வாய்க்கு அதுவாகக் கிடைப்பதையும் உண்டு, நியமத்துடன் மரங்களில் வசித்து வருவேன்”.

     “கடலுக்கு அருகில், நீர்வளமும் காய் கனிகளும் நிறைந்த பகுதியில். தீ மூட்டி, கொழுந்துவிட்டு எரியும் அந்த நெருப்பில் நுழைந்து உயிர் துறப்பேன்”.




     “உடலினுள் இருக்கும் ஆன்மாவை விட்டுவிடுவதற்காக, கடும் உபவாசம் மேற்கொண்டிருக்கையில், காகங்களும், மாமிசம் உண்ணும் மிருகங்களும் என் உடலை உணவாக்கிக்கொள்ளட்டும்.”

     “சீதையைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால், நீரினுள் நுழைந்து என் உயிரைப் போக்கிக்கொள்வேன்.  ஏனென்றால், மாமுனிவர்களும் இந்த வழியில் தான் தங்கள் உடலைத் தியாகம் செய்து மேலுலகம் சென்றுள்ளார்கள் என்பதை நான் அறிந்துள்ளேன்.”

     “நல்ல முறையில் வெற்றியுடன் ஆரம்பிக்கப்பட்டும், சீதையைக் காண இயலாததால், நிலவொளியுடன் கூடிய இந்த நெடிய இரவு வீணாகக் கழிந்தது.”

     “மிகுந்த நெறிமுறையுடன் மரத்தின் கீழே வசித்துத் தவம் செய்யும் முனிவனாக ஆவேனே தவிர, கரியவிழிகளைக் கொண்ட சீதையைக் காணாமல் ஒருபொழுதும் திரும்பிச்செல்ல மாட்டேன்.”

     “சீதையைப் பற்றிய செய்திகளை அறிந்துகொள்ளாமல் நான் திரும்பிச்சென்றால், அங்கதன் முதலான வானர வீரர்கள் உயிருடன் இருக்க மாட்டார்கள்!”.

     “உயிரை மாய்த்துக்கொள்வதால் துன்பங்கள்தான் ஏற்படும்.  ஆனால் உயிருடன் இருந்தால் மட்டுமே நல்ல விஷயங்கள் உறுதியாக ஏற்படும்.  ஆகவே, நான் உயிரை விட மாட்டேன்.  உயிருடன் இருந்தால் மட்டுமே, நினைத்த காரியம் கைகூடவும் , மகிழ்ச்சி ஏற்படவும் வாய்ப்புக் கிடைக்கும்.”

     இவ்விதாமாக பலவித சிந்தனைகளால் உண்டான வருத்தங்களை மனதினுள் சுமந்துகொண்டிருந்த வானரவீரனான ஸ்ரீஅனுமன் மிகுந்த துயரத்தில் இருந்தார். 

     திடீரென்று மிகவும் தைரியம் வரப்பெற்ற ஸ்ரீஅனுமன், “பத்துத் தலைகள் கொண்ட பலம்வாய்ந்த இராவணனை நான் கொன்று விடுகிறேன்.  அவனால் கவர்ந்துவரப்பட்ட சீதைக்கு என்ன நேர்ந்திருந்தாலும், அதுவே அவனது செயலுக்குத் தரும் சரியான பதிலடியாக இருக்கும்” என்று எண்ணினார்.

     “இல்லையெனில், வேள்வியில், தேவதைகளுக்கு மிருகங்களை உணவாகப் படைப்பது போல், இராவணனைப் பிடித்து இழுத்துக்கொண்டு, கடலின் மீது பறந்து சென்று, ஸ்ரீராமனிடம் ஒப்படைத்து விடுகிறேன்.”

     சீதையைக் கண்டுபிடிக்க முடியாத துயரத்தில் இருந்த ஸ்ரீஅனுமனின் மனம் முழுவதும் கவலையாலும் பலவித எண்ணங்களாலும் அலைபாய்ந்துகொண்டிருந்தது.  அவர் மீண்டும் இவ்வாறு எண்ணத்தொடங்கினார்.

     “சீதையைப் பார்க்க எவ்வளவு நாட்களானாலும், அதுவரை, இந்த இலங்கையில் நான் மீண்டும் மீண்டும் தேடிகொண்டே இருப்பேன்.”

     “நான் சம்பாதி பறவையின் பேச்சை நம்பி, ஸ்ரீராமனை இங்கு அழைத்து வந்திருந்தால், சீதையை இங்கு காணாத அவர், எல்லா வானரர்களையும் எரித்துச் சாம்பலாக்கியிருப்பாரே!”

     “ஆகவே, உணவையும் புலன்களையும் சுருக்கிக்கொண்டு, இங்கேயே வாழ்ந்துவிடுகிறேன்.  இதனால், மனிதர்களும், வானரர்களும் அழிவிலிருந்து காக்கப்படுவார்கள்!”

      “இதோ! இங்கே மிகப்பெரிய அசோக வனம் இருக்கிறது.  இதனுள் மிகப்பெரிய மரங்கள் உள்ளன.  நான் இதனுள் இதுவரை நுழைந்து பார்க்கவில்லை.  ஆகவே இதனுள் சென்று தேடுவேன்!”

     “அரக்கர்களுக்கு பெருந்துன்பம் அளிக்க வல்ல நான், வசுக்கள்,ருத்ரர்கள், ஆதித்யர்கள், அஸ்வினிகுமாரர்கள் மற்றும் மாருதர்களையும் வணங்கிவிட்டு இந்த அசோக வனத்திற்குள் நுழைகிறேன்!”

     “நான் இங்கு எல்லா அரக்கர்களையும் வென்றுவிட்டு, இஷ்வாகு குலத்திற்கு மகிழ்ச்சியைத் தரவல்ல சீதையை மீட்டு, தவம் செய்பவர்கள் பெறும் தவப்பயன் போல, ஸ்ரீராமனுக்குப் பரிசாகக் கொண்டு சேர்ப்பேன்.!”

     இவ்விதமாக, ஒரு முகூர்த்த நேரம் பலவிதமான எண்ணங்களினால் மனக்கலக்கம் கொண்டிருந்த ஸ்ரீஅனுமன், தனது புலன்களையெல்லாம் தன்வசம் மீட்டுக்கொண்டு, எழுந்து நின்றார்.

     “இராம இலக்குவணருக்கு என் வணக்கங்கள்.  ஜனக குமாரி சீதாதேவிக்கு என் வணக்கங்கள்.  ருத்ரன், இந்திரன், எமன் மற்றும் வாயு முதலான தேவர்களுக்கும் எனது வணக்கங்கள்.  சந்திரன், அக்னி, மற்றும் மருத கணங்களுக்கு என் வணக்கங்கள்.”

     இவ்விதமாக அனைவரையும் பணிந்து வணங்கிய ஸ்ரீஅனுமன், தன் அரசனான சுக்ரீவனையும் வணங்கி, எல்லாத் திசைகளிலும் கவனமாகப் பார்த்துக்கொண்டு, அசோகவனம் இருக்கும் இடம் நோக்கிச் செல்லத் தொடங்கினார்.

     அந்த அசோக வனத்தினுள் முதலில் மானசீகமாக நுழைந்த வாயுகுமாரரான ஸ்ரீஅனுமன், தான் செய்ய வேண்டிய செயல்களைப் பற்றி நினைக்கலானார்.

     “பல காடுகளால் சுற்றிலும் சூழப்பட்டுள்ள இந்த அசோக வனம் எல்லா விதமான சிறப்புக்களையும் கொண்டதாய் உள்ளது.  ஆகவே, பல அரக்கர்கள் சுற்றி நின்று இதைக் காவல் காத்திருப்பார்கள்!”

     “இராவணனால் நியமிக்கப்பட்ட அரக்கர்கள் நிச்சயம் இந்த வனத்தின் மரங்களைத் தீவிரமாகப் பாதுகாப்பார்கள். அதனால்தான், உயிர்காக்கும் தேவனான வாயுதேவனும் இங்கு தன் வேகத்தைக் காட்டவில்லை.”

     “ஸ்ரீராமனின் காரியம் வெற்றியடையவும், இராவணனின் பார்வையிலிருந்து தப்பவும், நான் என் உருவத்தைச் சிறிதாக்கிக்கொண்டுள்ளேன்.  அனைத்து முனிவர்களும் தேவர்களும் எனக்கு வெற்றியை அளிக்க வேண்டும்.”

     “தானே உருவானவரான பிரம்ம தேவரும், மற்றனைத்து தேவ கணங்களும், தவவலிமை மிக்க முனிவர்களும், அக்னி,வாயு முதலான தேவர்களும்,  வஜ்ராயுதத்தைத் தரித்தவனான இந்திரனும் எனது வெற்றிக்கு உதவி செய்யட்டும்!”

     “கையில் பாசாயுதம் தரித்த வருணனும், சந்திர, சூரியர்களும், மஹா அஸ்வினிகுமாரர்களும், எல்லா மருத கணங்களும், எல்லா பூத கணங்களும், அவற்றின் அதிபதிகளும், வழியில் கண்ணில் தெரியும் தேவதைகளும், மறைந்திருக்கும் தேவதைகளும் எனக்கு வெற்றியை அருளட்டும்.!”

     “எடுப்பான நாசியும், முத்துக்கள் போன்ற வெண்ணிறப் பற்களும், மாசு மருவற்ற புன்னகையுடன் கூடிய முகமும், மலர்ந்த தாமரை போன்ற கண்களும், களங்கமில்லாத முழுநிலவினைப் போன்ற ஒளியும் கொண்ட அந்த சீதாதேவியை நான் எப்பொழுது பார்ப்பேன்?”

     “கொடியவனும், தீச்செயல் புரிபவனும், கருணையற்றவனும், கொடூரமான உருவத்தையுமுடைய இராவணன், மாய வேடம் பூண்டு, தன்னை அலங்கரித்துக்கொண்டு, உதவியற்ற அபலையான சீதையை அபகரித்து வந்து, மறைத்து வைத்துள்ளான்.  அந்த சீதையை நான் எவ்விதம் என் கண்களால் காண்பேன்?”  




Monday, March 13, 2023

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தரகாண்டம். பன்னிரெண்டாவது ஸர்கம்.

 

             ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தரகாண்டம்.

 

                                         பன்னிரெண்டாவது ஸர்கம்.


 

     அந்த மாளிகையின் நடுவில் அமைந்திருந்த பூந்தோட்டங்களோடு கூடிய அறைகள், ஓவியக்கூடங்கள், இரவில் ஓய்வுகொள்ளும் அறைகள் ஆகிய எல்லா இடங்களிலும் தேடியும் தான் பார்க்க ஆவலாக இருந்த அழகிய சீதையை மட்டும் அவரால் காண இயலவில்லை.

     ஸ்ரீராமனின் அன்பினுக்குரிய சீதையைக் காண இயலாத அந்தச் சீர்மிகு வானரர், தான் இவ்வளவு நுட்பமாகத் தேடியும், மைதிலி தன் கண்ணுக்கு அகப்படவில்லையே, ஆகவே நிச்சயமாக அவள் இறந்திருக்க வேண்டும் என மனக் கலக்கம் கொண்டார்.

     “சீர்மிகு சான்றோர்களின் வழி நடப்பவளும், நல்லொழுக்கம் தவறாதவளும், கற்பிற் சிறந்தவளுமான ஜானகி, அரக்கர்களில் வல்லவனான, கொடுஞ்செயல்களைச் செய்வதில் ஈடுபட்டுள்ள இவனால் (இராவணனால்) கண்டிப்பாகக் கொல்லப்பட்டிருப்பாள்.”

     “இராவணனின் பணிப்பெண்களான அரக்கிகளின் ஊனமான உடலமைப்புக்களையும், ஒளிகுன்றிய அவர்களின் விகாரமான, பருத்த முகங்களையும், அவர்களது குரூரமான பார்வைகளையும் கண்டு, ஜனகரின் மகளான அவள் பயத்தினால் இறந்திருப்பாள்.”

     “வானரக் கூட்டத்தினருடன் அதிக நேரம் தேடியும் சீதையைக் காணமுடியாததால், ஆற்றலுடல் செய்த முயற்சிகளுக்குரிய பலன் கிட்டாத நிலையில், சுக்ரீவனை மீண்டும் சந்திக்கும் பேறு எனக்கு இல்லை. ஏனென்றால் சக்திமிக்க அவர், குற்றமிழைத்தவர்களிடம் இரக்கம் காட்டாமல் தண்டனை வழங்கக்கூடியவர்.”

     “அந்தப்புரம் முழுவதும் சுற்றி இராவணனின் எல்லா மனைவியரிடையே தேடியும், கற்பினிற் சிறந்த சீதையைக் காண முடியவில்லை. நான் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணானது”.

     “நான் இங்கிருந்து திரும்பிச் செல்லும்போது, அங்கிருக்கும் அனைத்து வானரவீரர்களும் ஒன்றுகூடி என்னைப்பார்த்து, “வீரரே! நீர் அங்கு சென்றபோது என்ன செய்தீர்கள்?” அதை எங்களுக்குச் சொல்வீராக!”  என்று   கேட்பார்களே?”

     “ஜனகனின் மகளான சீதையைக் காணாமல் செல்லும் நான் அவர்களுக்கு என்ன பதில் கூறுவேன்? நிர்ணயிக்கப்பட்ட காலம் கடந்துவிட்டதால் அவர்கள் அனைவரும் நிச்சயம் உண்ணாநோன்பிருந்து உயிரை மாய்த்துக்கொள்வார்கள்.”

     “கடலினைக் கடந்து திரும்பிச்செல்லும் என்னைப் பார்த்து, வயதில் பெரியவரான ஜாம்பவானும், அங்கதனும், இன்னும் ஒன்றுகூடியுள்ள மற்ற வானர வீரர்களும், என்ன சொல்வார்கள்?”

     மனக் கலக்கத்தில் இருந்த ஸ்ரீஅனுமன் தனக்குள் இவ்வாறு எண்ணுகிறார்.

     “மனம் தளராமல் இருப்பதே மிகப்பெரும் செல்வமாகும்.  அதுவே மிகப் பெரும் இன்பமுமாகும்.   விடாமல் முயற்சித்துக்கொண்டிருப்பதற்கு மனம்தளராமல், உற்சாகத்துடன் இருப்பதே காரணமாகும்.”  

     “மனிதனின் செயல்கள் யாவற்றிற்கும் வெற்றியைத் தருவது அவனது உற்சாகமேயாகும்.  ஆகவே, நான் மனந்தளராது உற்சாகத்துடன் சிறந்த முயற்சியை மேற்கொள்வேன்!”

     “இராவணனின் பாதுகாப்பில் இருக்கும், இதுவரை தேடிப்பார்க்காத இடங்களில் நான் மீண்டும் தேடுவேன்!” என்ற தீர்மானம் செய்துகொண்டு, கிளம்பினார். மீண்டும் தேடிக்கொண்டு சுற்ற ஆரம்பித்தார்.

     மதுக்கூடங்கள், பூக்கூடங்கள், கலையரங்குகள், விளையாடுமிடங்கள் ஆகியவற்றில் மீண்டும் தேடிப்பார்த்தார்.  தோட்டத்திற்குச் செல்லும் பாதைகள், மாளிகைகளின் கோபுரங்கள், நிலவறைகள், நினைவிடங்கள், அரண்மனைக்கு வெளியே கட்டப்பட்டிருந்த வீடுகள் யாவற்றிலும் ஏறியும், இறங்கியும், நின்றும், நடந்தும் அவர் தேடிப்பார்த்தார்.   

        அந்த வானர வீரர், மீண்டும் மீண்டும், கதவுகள், ஜன்னல்கள் யாவற்றையும் திறந்தும், உள்நுழைந்தும், வெளிவந்தும், மேலே ஏறியும், கீழே குதித்தும், நின்றுகொண்டும் பலவிதமாகத் தேடியலைந்தார்.

     அந்த இராவணனின் அந்தப்புரத்தில் அந்த வானரர் தேடிப்பார்க்காத இடம் நான்கு அங்குல அளவிற்குக்கூட இல்லை.

     மதிற்சுவர்களுக்கு இடைப்பட்ட பகுதிகளிலிருந்த வீடுகள், நாற்சந்திகளில் கட்டப்பட்டிருந்த மேடைகள், தோட்டங்கள், துரவுகள், குளம், குட்டைகள் போன்ற நீர்நிலைகள் யாவற்றிலும் அவர் தேடினார்.

     அங்கே அவர் பார்த்த இடங்களிலெல்லாம் பலவிதமான கோரமான மற்றும் விகாரமான உடலமைப்புக்களைக் கொண்டிருந்த அரக்கியர் மட்டுமே இருந்தனர். ஜனகரின் திருமகளாகிய சீதையை அவரால் காண முடியவில்லை.

     உலகிலேயே உருவ அழகில் நிகரில்லாத வித்யாதரக் குலப் பெண்களை ஸ்ரீஅனுமன் அங்கே கண்டார். எனினும், ஸ்ரீராமனின் அன்பினிற்கினிய சீதையைக் காண முடியவில்லை.

     முழுநிலவினைப் போன்ற முகவழகும், உடல்வனப்பும் கொண்டிருந்த நாகர்குலப் பெண்களைப் பார்க்க முடிந்ததே அன்றி, நுண்ணிடையாளான சீதையை ஸ்ரீஅனுமனால் பார்க்க இயலவில்லை..

     அரக்கர் தலைவனால் போரில் பகைவென்று, வன்முறையால் கவர்ந்து வரப்பட்ட நாககன்னிகைகள் அங்கே இருந்ததை அவர் பார்த்தார். ஆனால், அங்கு எங்குமே சீதை இல்லை.

     பலவிதமான மற்ற அழகிய மங்கையரைக் காணமுடிந்த போதும் சீதையைக் காண முடியாததால், தோள்வலியரும், அறிவாற்றல் மிக்கவருமான வாயுபுத்திரனான ஸ்ரீஅனுமன் மனக்கலக்கம் கொண்டார்.

     வானர நண்பர்களின் முயற்சியும், கடலைத் தாண்டிவந்து தேடும் தன் முயற்சியும் பலனளிக்காததை எண்ணி, மீண்டும் மனத்துயரம் கொண்டார்.

     துயரம் தந்த வருத்தத்துடன், விமானத்திலிருந்து கீழே இறங்கிய வாயுபுத்திரரான ஸ்ரீஅனுமன், பெரும் மனக்கவலையில் ஆழ்ந்திருந்தார்.

 

                                        பன்னிரெண்டாவது ஸர்கம் நிறைவு.

Wednesday, March 1, 2023

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தரகாண்டம். பதினொன்றாவது ஸர்கம்

 

            ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தரகாண்டம்.

                                                பதினொன்றாவது ஸர்கம்

மதுபான அரங்கத்தில் ஸ்ரீஅனுமன் சீதையைத் தேடுதல்.




         அந்தப் பெண் சீதையாக இருக்கக்கூடும் என்று தன் மனதில் தோன்றிய எண்ணத்தை உதறித்தள்ளிய ஸ்ரீஅனுமன், மீண்டும் சீதையைத் தேடும் எண்ணம் கொண்டவராய் நிலைத்த மனதுடன் சிந்தனையில் ஆழ்ந்தார்.

     இராமனைப் பிரிந்து வாடும் சீதையானவள் எவ்விதம் இவ்வாறு உறக்கம் கொள்ள இயலும்? அன்ன ஆகாரம் தான் உட்கொள்ள முடியுமா? இவ்விதம் விதவிதமாகத் தன்னை அலங்கரித்துக்கொள்ளத்தான் முடியுமா? அதிலும் மதுவருந்தி மயக்கத்தில் தான் இருக்க முடியுமா?

     ஒருவன் தேவலோகத்திற்கே தலைவனாக இருந்தபோதிலும், அவனை சீதை நாடமாட்டாள்.  தேவர்களிலும் கூட இராமனுக்கு இணையானவர் யாரும் இல்லை.  ஆகவே இந்தப் பெண் வேறு யாரோதான் என்ற உறுதிகொண்டு மீண்டும் அங்கிருந்த மதுசாலையில் சீதையைத் தேடி உலவத்தொடங்கினார்.

     அங்கே அந்த மதுவரங்கத்தில், சில பெண்கள் அதிகமான களியாட்டங்களில் ஈடுபட்டதால் களைப்புற்றிருந்தார்கள். சில பெண்கள், பாட்டுக்கள் பாடியதாலும் சில பெண்கள் அதிகமாக நடனமாடியதாலும் களைத்திருந்தனர்.  சிலர் மதுவின் மயக்கத்திலும் ஆழ்ந்திருந்தனர். 

     சில பெண்கள், தங்களின் இசைக்கருவிகளான டோலக், மிருதங்கம் போன்றவற்றின் மீதே சாய்ந்து உறங்கிக்கொண்டிருந்தனர். சிலர் சிறிய ஆசனங்களிலும், சிலர் உயர்ந்த விரிப்புக்களிலும் படுத்திருந்தனர். 

     விதவிதமான நகைகள் அணிந்திருந்த சில பெண்கள், உறக்கத்திலும் தங்கள் மேனியழகினைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள்.  சிலர் உறக்கத்திலும் பாடற்கலையினைப் பற்றிய சரியான வாதங்களைப் பேசக்கூடியவர்களாக இருந்தனர்.   காலத்திற்கேற்றவாறு பொருத்தமான கருத்துக்களைப் பேசுபவராகவும் சிலர் இருந்தனர். 

     இவ்விதமான பலவித குணநலன்கள் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான பெண்களுடன், உள்ளும் புறமும் காம விளையாட்டுக்களில் ஈடுபட்டு களிப்புற்று, மெய்மறந்து, இராவணன் உறங்கிக்கொண்டிருந்ததை வானரப்படைக்குத் தலைவரான ஸ்ரீஅனுமன் கண்டார்.

     தனது பெருத்த கரங்களுடன் இராவணன் அந்தப் பெண்களுக்கிடையில் படுத்துக்கிடந்ததைப் பார்க்கும்போது, பசுக்களின் பெரிய தொழுவத்தில் இருக்கும் காளைமாடு போலத் தோன்றினான்.

     பெண்களே விரும்பி அவனைச் சூழ்ந்து படுத்திருந்ததைப் பார்க்கும்போது, காட்டில், பெண் யானைகள் சூழ்ந்திருக்கும் பெரிய ஆண் யானையைப் போல விளங்கினான்.

     சிறந்த வானரரான ஸ்ரீஅனுமன், பெரும் பேறு பெற்ற அந்த இராவணனின் மாளிகையில், அனைத்துவிதமான விருப்பங்களையும் நிறைவேற்றவல்ல ஒரு மதுவருந்தும் அரங்கத்தைப் பார்த்தார்.

     அவர் அந்த மதுசாலையில், மான், எருது மற்றும் பன்றி ஆகியவற்றின் மாமிசங்கள், தனித்தனியே பிரித்துவைக்கப்பட்டிருந்ததைக் கண்டார்.





     அந்த வானரோத்தமர் அங்கே அகலமான தங்கமயமான பாத்திரங்களில் பாதி உண்ணப்பட்டு மீதம் வைக்கப்பட்டிருந்த மயில்கள், கோழிகள் ஆகியவற்றின் இறைச்சிகளைக் கண்டார்.

     தயிர் மற்றும் செளவர்சலம் என்னும் ஒருவகை உப்பையும் கலந்து செய்யப்பட்ட பன்றி மற்றும் காட்டுக்கோழிகளின் மாமிசங்களையும், மான், மயில், முள்ளம்பன்றி ஆகியவற்றின் மாமிசங்களையும் ஸ்ரீஅனுமன் கண்டார்.

     பலவிதமாக பக்குவம் செய்யப்பட்டு தயாரிக்கப்பட்ட க்ரகர என்னும் பறவைகளின் மாமிசங்களும், பாதி உண்ணப்பட்டிருந்த சகோரப்பறவைகளின் மாமிசங்களும், எருதுகள், பன்றிகள், செம்மறியாடுகள், ஏகசல்யான் எனப்படும் ஒருவகை மீன் ஆகியவற்றின் மாமிசங்கள் சுவைபட சமைக்கப்பட்டும் அங்கே வைக்கப்பட்டிருந்ததைக் கண்டார்.

     நாவினால் நக்கிச்சுவைக்கப்படத்தகுந்த பலவிதமான பண்டங்களும்,  குடிப்பதற்கு ஏதுவான உயர்ந்த பானங்களும், வாயினால் சுவைத்து மகிழக்கூடிய உணவுப்பொருட்களும் அங்கே வைக்கப்பட்டிருந்ததை ஸ்ரீஅனுமன் கண்டார்.

     மேலும் உப்பு மற்றும் புளிப்பினால் சுவையூட்டப்பட்ட உணவு வகைகளாலும், திராட்சை, மாதுளை பழங்களின் ரசங்கள் கலக்கப்பட்ட மதுவகைகளாலும்,  விலையுயர்ந்த நகைகள், சலங்கைகள், தோள்வளைகள் போன்றவை இறைந்து கிடந்ததாலும், மதுக்கோப்பைகளில் வைக்கப்பட்டிருந்த பழவகைகளாலும், மலர்கள் தூவப்பட்டிருந்ததாலும் அந்த இடமே அழகுற விளங்கியது.




     அந்த மது அருந்தும் இடத்தில், நன்கு கட்டமைக்கப்பட்டு, வரிசைக்கிரமமாய் அமைக்கப்பட்டிருந்த படுக்க ஏதுவான ஆசனங்கள் அழகுற விளங்கி, நெருப்பற்ற தீக்கங்குகள் போல ஒளிர்ந்துகொண்டிருந்தன.

     சிறந்த சமையல் நிபுணர்களால் திறமையுடன் சமைக்கப்பட்டு அவற்றிற்குரிய நறுமணப்பொடிகளால் தூவப்பட்டு தனியாக வைக்கப்பட்டிருந்த மாமிச உணவுகளாலும், மிகச்சிறந்த மதுவகைகளாலும், சர்க்கரைப்பாகு, தேன், பூக்களின் சாறு, பழங்களின் சாறு இவைகள் கலக்கப்பட்டு அவற்றிற்கான சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டு அவை அங்கு தனித்தனியே சிறப்புற வைக்கப்பட்டிருந்ததாலும், பலவிதமாக அலங்கரிக்கப்பட்ட மலர் மாலைகளாலும், பலவிதமான தங்கப்பாத்திரங்கள், ஸ்படிகப்பாத்திரங்கள், தங்கக்குடங்கள் நிரம்பியிருந்ததாலும் அந்த மதுவரங்கம் அழகுற விளங்கியது.




     வெள்ளி மற்றும் தங்கத்திலான குடங்களில் உயர்வகை மதுபானங்கள் நிரப்பபட்டு, அங்கு எல்லா இடங்களிலும் வைக்கப்பட்டிருந்ததை அந்த வானரர் கண்டார்.

     மணிகளும் ரத்தினக்கற்களும் பதிக்கப்பட்டிருந்த தங்க, வெள்ளிக் குடங்கள், மதுவகைகளால் நிரப்பப்பட்டு அங்கிருந்ததை அந்த பெரும் வானரர் கண்டார்.

     மதுபானங்கள் வைக்கப்பட்டிருந்த குடங்களில் சில, பாதி குடிக்கப்பட்டும், சில, முழுவதுமாகக் குடிக்கப்பட்டும், மற்றும் சில, குடிக்கப்படாமல் நிரம்பி இருந்ததையும் அவர் கண்டார்.

     ஓரிடத்தில் உண்பதற்கான உணவு வகைகளும், இன்னுமொரு இடத்தில் அருந்துவதற்கான மதுபானங்களும் தனித்தனியாக வைக்கப்பட்டிருந்ததையும், வேறோரிடத்தில் சமைக்கப்பட்ட உணவுகள் பாதியுண்ணப்பட்டிருந்ததையும் அவர் உலவியபடியே கண்டார்.

      சில இடங்களில் உடைந்து கிடந்த ஜாடிகளையும், சில இடங்களில் உருண்டு கிடந்த குடங்களையும் கண்டார், சில இடங்களில், மலர்மாலைகள் பழங்களுடனும், தண்ணீருடனும் பின்னிக்கிடந்ததையும் கண்டார். (இந்த ஸ்லோகம் கீதாபிரஸ் பதிப்பில் இல்லை)

     அங்கிருந்த பல படுக்கைகள் காலியாக இருந்தன(கீதா பிரஸ்).  பல படுக்கைகள் விரிப்புக்கள் கசங்காமல் இருந்தன. (வேறு பதிப்புகள்).  பல அழகிய பெண்கள் ஒருவரையொருவர் தழுவியபடி உறங்கிக்கொண்டிருந்ததையும் அவர் கண்டார்.

     ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பெண்களில் சிலர், தங்கள் அருகில் உறங்கிக்கொண்டிருந்தவர்களின் ஆடைகளைத் தங்கள் மீது போர்த்துக்கொண்டிருந்தனர்.

     அந்தப் பெண்களின் மேலாடைகளும் மாலைகளும் அவர்களது மூச்சுக்காற்றினால், இளந்தென்றலினால் அசைந்தாடுவது போலவே அசைந்துகொண்டிருந்தன.

     குளிர்ந்த சந்தனத்தினுடையதும், மதுவகைகளினுடையதும், பலவித மலர்மாலைகளினுடையதுமான நறுமணங்கள் கலந்த காற்று அங்கே வீசியது.  மேலும் அந்த புஷ்பக விமானத்தில், குளிக்கும்போது பயன்படுத்தும் சந்தனத்தின் நறுமணமும், தூபங்களின் நல்ல நறுமணமும் கலந்து நிறைந்திருந்தது.

     அந்த அரக்கனின் மாளிகையில் இருந்த பெண்கள் நீல நிறத்திலும், கரிய நிறத்திலும், நல்ல வெண்ணிறத்திலும், சிலர் பொன்னிறத்திலும் தோற்றமளித்தனர். காம கேளிக்கைகளினால் களைப்புற்று ஆழ்ந்த உறக்கத்தில் அந்தப் பெண்கள் இருந்த போதிலும், அவர்கள் இரவு நேரத்து தாமரை மொட்டுக்கள் போல கண்களைக் கவரும் வண்ணம் இருந்தனர்.

          பேரொளிமிக்க வானரரான ஸ்ரீஅனுமன், இவ்வாறாக அந்த அந்தப்புரம் முழுமையும் ஒரிடம் விடாமல் தேடிப்பார்த்தார். சீதையை அவரால் காண இயலவில்லை.

     உறக்கத்திலிருந்த பெண்களைத் தான் பார்க்க நேர்ந்ததால், அச்செயல், அறவழிக்குப் புறம்பானதோ என்ற எண்ணத்தில் அந்த வானரர் கவலையுற்றார்.

     உறக்கத்திலிருக்கும் பிறரது மனைவியரைத் தான் பார்த்த செயல் அறத்திற்கு இழுக்கானதே என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.

     “அடுத்தவர் வீட்டுப் பெண்களை ஏறெடுத்தும் பார்த்திராத நான், இங்கு அவ்வாறு பார்க்க நேர்ந்துவிட்டதே” என்று நினைத்தார். இவ்வாறு எண்ணங்கள் தோன்றினாலும், ஒருமித்த கவனத்துடன் இருக்கும் அவர் அடுத்துத் தான் செய்யவேண்டிய செயலைப் பற்றிச் சிந்தித்தார்.

     “தங்களுக்கு எதுவும் ஆபத்தில்லை என்று தம்மை மறந்த நிலையில் உறங்கிக்கிடக்கும் இராவணனது மனைவியரைப் பார்த்தாலும் என் மனதில் தீய எண்ணங்கள் சிறிதும் தோன்றவில்லை.”

     “மனதின் தூண்டுதலாலேயே, புலன்கள் நல்ல மற்றும் தீய செயல்களைச் செய்கின்றன. ஆனால் என்னுடைய மனமோ, நிலைபிறழாதது.  மேலும் பெண்கள் இருக்குமிடங்களில் தான் பெண்களைத் தேட இயலும்.  ஆகவே வைதேஹியை வேறு இடங்களில் தேட முடியாது.”

     “காணாமல் போனவர்களைத் தேடும்போது, அவர்களைச் சேர்ந்தவர்களிடையேதான் தேட முடியும், மானிடப் பெண்ணை பெண்மான் களின் கூட்டத்தில்  தேட முடியாது”.

     “ஆகையினால், களங்கமற்ற மனத்துடன், இராவணனின் இந்த அந்தப்புரம் முழுமையாக என்னால் தேடப்பட்டது, ஆனாலும் சீதை கண்ணுக்குப் புலப்படவில்லை”.

     இவ்வாறாக சிந்தித்த, வீரராகிய ஸ்ரீஅனுமன், அங்கே தேவலோகத்துப் பெண்களையும், கந்தர்வப்பெண்களையும், நாக கன்னிகைகளையும் கண்டபோதிலும், சீதையை மட்டும் காண முடியவில்லை.

     அங்கு வேறு சிறந்த பெண்களைக் கண்ட வீர அனுமன், சீதையை மட்டும் காணாததால், அங்கிருந்து வெளியேறி மீண்டும் சிந்திக்கலானார்.

     பேரருளாளரான ஸ்ரீஅனுமன், அந்த மதுவரங்கத்தை விட்டு வெளியேறி, புது முயற்சியுடன் மீண்டும் தன் தேடும் பணியினைத் தொடர்ந்தார்

                     பதினொன்றாவது  ஸர்கம் நிறைவு.

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...