ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தரகாண்டம்.
பன்னிரெண்டாவது
ஸர்கம்.
அந்த மாளிகையின் நடுவில் அமைந்திருந்த பூந்தோட்டங்களோடு
கூடிய அறைகள், ஓவியக்கூடங்கள், இரவில் ஓய்வுகொள்ளும் அறைகள் ஆகிய எல்லா இடங்களிலும்
தேடியும் தான் பார்க்க ஆவலாக இருந்த அழகிய சீதையை மட்டும் அவரால் காண இயலவில்லை.
ஸ்ரீராமனின் அன்பினுக்குரிய சீதையைக் காண இயலாத
அந்தச் சீர்மிகு வானரர், தான் இவ்வளவு நுட்பமாகத் தேடியும், மைதிலி தன் கண்ணுக்கு அகப்படவில்லையே,
ஆகவே நிச்சயமாக அவள் இறந்திருக்க வேண்டும் என மனக் கலக்கம் கொண்டார்.
“சீர்மிகு சான்றோர்களின் வழி நடப்பவளும், நல்லொழுக்கம்
தவறாதவளும், கற்பிற் சிறந்தவளுமான ஜானகி, அரக்கர்களில் வல்லவனான, கொடுஞ்செயல்களைச்
செய்வதில் ஈடுபட்டுள்ள இவனால் (இராவணனால்) கண்டிப்பாகக் கொல்லப்பட்டிருப்பாள்.”
“இராவணனின் பணிப்பெண்களான அரக்கிகளின் ஊனமான
உடலமைப்புக்களையும், ஒளிகுன்றிய அவர்களின் விகாரமான, பருத்த முகங்களையும், அவர்களது
குரூரமான பார்வைகளையும் கண்டு, ஜனகரின் மகளான அவள் பயத்தினால் இறந்திருப்பாள்.”
“வானரக் கூட்டத்தினருடன் அதிக நேரம் தேடியும்
சீதையைக் காணமுடியாததால், ஆற்றலுடல் செய்த முயற்சிகளுக்குரிய பலன் கிட்டாத நிலையில்,
சுக்ரீவனை மீண்டும் சந்திக்கும் பேறு எனக்கு இல்லை. ஏனென்றால் சக்திமிக்க அவர், குற்றமிழைத்தவர்களிடம்
இரக்கம் காட்டாமல் தண்டனை வழங்கக்கூடியவர்.”
“அந்தப்புரம் முழுவதும் சுற்றி இராவணனின் எல்லா
மனைவியரிடையே தேடியும், கற்பினிற் சிறந்த சீதையைக் காண முடியவில்லை. நான் மேற்கொண்ட
முயற்சிகள் அனைத்தும் வீணானது”.
“நான் இங்கிருந்து திரும்பிச் செல்லும்போது,
அங்கிருக்கும் அனைத்து வானரவீரர்களும் ஒன்றுகூடி என்னைப்பார்த்து, “வீரரே! நீர் அங்கு
சென்றபோது என்ன செய்தீர்கள்?” அதை எங்களுக்குச் சொல்வீராக!” என்று
கேட்பார்களே?”
“ஜனகனின் மகளான சீதையைக் காணாமல் செல்லும் நான்
அவர்களுக்கு என்ன பதில் கூறுவேன்? நிர்ணயிக்கப்பட்ட காலம் கடந்துவிட்டதால் அவர்கள்
அனைவரும் நிச்சயம் உண்ணாநோன்பிருந்து உயிரை மாய்த்துக்கொள்வார்கள்.”
“கடலினைக் கடந்து திரும்பிச்செல்லும் என்னைப்
பார்த்து, வயதில் பெரியவரான ஜாம்பவானும், அங்கதனும், இன்னும் ஒன்றுகூடியுள்ள மற்ற வானர
வீரர்களும், என்ன சொல்வார்கள்?”
மனக் கலக்கத்தில் இருந்த ஸ்ரீஅனுமன் தனக்குள்
இவ்வாறு எண்ணுகிறார்.
“மனம் தளராமல் இருப்பதே மிகப்பெரும் செல்வமாகும். அதுவே மிகப் பெரும் இன்பமுமாகும். விடாமல் முயற்சித்துக்கொண்டிருப்பதற்கு மனம்தளராமல்,
உற்சாகத்துடன் இருப்பதே காரணமாகும்.”
“மனிதனின் செயல்கள் யாவற்றிற்கும் வெற்றியைத்
தருவது அவனது உற்சாகமேயாகும். ஆகவே, நான் மனந்தளராது
உற்சாகத்துடன் சிறந்த முயற்சியை மேற்கொள்வேன்!”
“இராவணனின் பாதுகாப்பில் இருக்கும், இதுவரை தேடிப்பார்க்காத
இடங்களில் நான் மீண்டும் தேடுவேன்!” என்ற தீர்மானம் செய்துகொண்டு, கிளம்பினார். மீண்டும்
தேடிக்கொண்டு சுற்ற ஆரம்பித்தார்.
மதுக்கூடங்கள், பூக்கூடங்கள், கலையரங்குகள்,
விளையாடுமிடங்கள் ஆகியவற்றில் மீண்டும் தேடிப்பார்த்தார். தோட்டத்திற்குச் செல்லும் பாதைகள், மாளிகைகளின்
கோபுரங்கள், நிலவறைகள், நினைவிடங்கள், அரண்மனைக்கு வெளியே கட்டப்பட்டிருந்த வீடுகள்
யாவற்றிலும் ஏறியும், இறங்கியும், நின்றும், நடந்தும் அவர் தேடிப்பார்த்தார்.
அந்த
வானர வீரர், மீண்டும் மீண்டும், கதவுகள், ஜன்னல்கள் யாவற்றையும் திறந்தும், உள்நுழைந்தும்,
வெளிவந்தும், மேலே ஏறியும், கீழே குதித்தும், நின்றுகொண்டும் பலவிதமாகத் தேடியலைந்தார்.
அந்த இராவணனின் அந்தப்புரத்தில் அந்த வானரர்
தேடிப்பார்க்காத இடம் நான்கு அங்குல அளவிற்குக்கூட இல்லை.
மதிற்சுவர்களுக்கு இடைப்பட்ட பகுதிகளிலிருந்த
வீடுகள், நாற்சந்திகளில் கட்டப்பட்டிருந்த மேடைகள், தோட்டங்கள், துரவுகள், குளம், குட்டைகள்
போன்ற நீர்நிலைகள் யாவற்றிலும் அவர் தேடினார்.
அங்கே அவர் பார்த்த இடங்களிலெல்லாம் பலவிதமான
கோரமான மற்றும் விகாரமான உடலமைப்புக்களைக் கொண்டிருந்த அரக்கியர் மட்டுமே இருந்தனர்.
ஜனகரின் திருமகளாகிய சீதையை அவரால் காண முடியவில்லை.
உலகிலேயே உருவ அழகில் நிகரில்லாத வித்யாதரக்
குலப் பெண்களை ஸ்ரீஅனுமன் அங்கே கண்டார். எனினும், ஸ்ரீராமனின் அன்பினிற்கினிய சீதையைக்
காண முடியவில்லை.
முழுநிலவினைப் போன்ற முகவழகும், உடல்வனப்பும் கொண்டிருந்த நாகர்குலப் பெண்களைப் பார்க்க முடிந்ததே அன்றி, நுண்ணிடையாளான சீதையை ஸ்ரீஅனுமனால் பார்க்க இயலவில்லை..
அரக்கர் தலைவனால் போரில் பகைவென்று, வன்முறையால்
கவர்ந்து வரப்பட்ட நாககன்னிகைகள் அங்கே இருந்ததை அவர் பார்த்தார். ஆனால், அங்கு எங்குமே
சீதை இல்லை.
பலவிதமான மற்ற அழகிய மங்கையரைக் காணமுடிந்த போதும்
சீதையைக் காண முடியாததால், தோள்வலியரும், அறிவாற்றல் மிக்கவருமான வாயுபுத்திரனான ஸ்ரீஅனுமன்
மனக்கலக்கம் கொண்டார்.
வானர நண்பர்களின் முயற்சியும், கடலைத் தாண்டிவந்து
தேடும் தன் முயற்சியும் பலனளிக்காததை எண்ணி, மீண்டும் மனத்துயரம் கொண்டார்.
துயரம் தந்த வருத்தத்துடன், விமானத்திலிருந்து
கீழே இறங்கிய வாயுபுத்திரரான ஸ்ரீஅனுமன், பெரும் மனக்கவலையில் ஆழ்ந்திருந்தார்.
பன்னிரெண்டாவது
ஸர்கம் நிறைவு.

No comments:
Post a Comment