Wednesday, October 11, 2023

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டம். முப்பத்தொன்பதாவது ஸர்கம்.

 

                                     

                       ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டம்

                             முப்பத்தொன்பதாவது ஸர்கம்.




     சூடாமணியை அனுமனிடம் கொடுத்த சீதை, “இந்த நகையைப் பற்றி ஸ்ரீராமன் மிக நன்றாக அறிவார்!” என்றாள்.

     “பெரும் வீரரான ஸ்ரீராமருக்கு இந்த நகையைக் கண்ணுற்றதுமே, என்னையும், என் தாயையும், பேரரசன் தசரதனையும் பற்றிய நினைவு வந்து விடும்.”

     “சிறந்த வானர வீரனே! இனி நீ பெரும் உற்சாகம் கொண்டு, நீ நினைத்த காரியம் வெற்றியடைய வேண்டிய வழிகளைப் பற்றிச் சிந்திப்பாயாக!”

     “ஓ வானர வீரனே! இந்தச் செயலை வெற்றியுடன் நிறைவேற்றும் முழுப் பொறுப்பும் உன்னிடமே உள்ளது.  ஆகவே என்னுடைய இன்னல்கள் முடிந்து போகும் வண்ணம் சரியான முடிவை எடுப்பாயாக!”

     “ஓ அனுமனே! என்னுடைய இன்னல்களைப் போக்கும் செயல்களுக்கான முயற்சியை எடுப்பதற்கு நீயே ஏற்றவன்.” என்று சீதை சொன்னவுடன், “அவ்வாறே செய்கிறேன்!” என்று உறுதி கூறி பெரும் வல்லமை கொண்ட அனுமன் சீதையைத் தலை வணங்கிப் புறப்படலானார்.

     வாயுகுமாரனாகிய வானர வீரன் அனுமன், தன் பயணத்தைத் தொடங்க இருப்பதை அறிந்ததும், மிதிலையின் குமாரியான சீதை தழுதழுத்த குரலில் சொல்லத் தொடங்கினாள்.

     “வானர திலகமான அனுமனே! ஸ்ரீராமன் மற்றும் இலக்குமணன் இருவரிடமும் ஒருசேர இந்த நற்செய்தியைச் சொல்லவும்.  அதுமட்டுமல்லாது, சிறந்த மந்திரிகளோடு கூடிய சுக்ரீவனிடமும், பிற அனைத்து பெரிய, வயதில் மூத்த வானர வீரர்களிடமும் அறவழிப்படி நலன் விசாரிக்கவும்.”

      “இந்தத் துன்பப் பெருங்கடலிலிருந்து என்னை மீட்கத் தயாராகும் வண்ணம், பெருந் தோள்களையுடைய ஸ்ரீராமனிடம் நீ இங்கு கண்டவற்றைக் கூற வேண்டும்.”

     “அனுமனே! புகழ் பெற்ற ஸ்ரீராமன் நான் உயிருடன் இருக்கும் போதே என்னை மீட்டுக் கொள்ளும் வண்ணம் நீ அவரிடம் சொல்லும் சொற்கள் இருக்க வேண்டும்.  சிறந்த வார்த்தைகளைப் பேசுவதால் கிட்டும் நல்லறத்தை நீ பெறுவாயாக!”

     “நீ சொல்லப் போகும் சொற்களால் மிகுந்த உற்சாகம் கொள்ளும் தசரத குமாரனாகிய ஸ்ரீராமனின் ஆண்மை அதிகமாகி, என்னை மீட்டுச் செல்லும் செயல் விரைவில் நிறைவேறும்.”

     “நான் உன்னிடம் கூறிய செய்திகளை, உன் மூலம் கேட்டறிந்த பின்பே, ஸ்ரீராமன் முறைப்படி தன் வீரத்தை வெளிப்படுத்தும் முயற்சியில் இறங்குவார்.”

     சீதையின் வார்த்தைகளைக் கேட்ட வாயுகுமாரனாகிய அனுமன், சீதையைப் பணிந்து, இரு கரம் கூப்பி, இவ்விதமாகச் சொல்லலானார்.

      “தேவீ! போரில் பகைவர்களை அழித்துத் தங்களைத் துன்பத்திலிருந்து மீட்க வல்ல காகுத்த குலத் தோன்றலான ஸ்ரீராமன், வானர வீரர்களுடனும், கரடிகள் கூட்டத்துடனும் விரைந்து இங்கே வருவார்.”

      “ஸ்ரீராமனின் வில்லிலிருந்து புறப்படும் அம்புகளுக்கு முன் நிற்கும் வல்லமை மிக்க மனிதரையோ, அசுரரையோ அல்ல பிற தேவர்களையோ நான் அறிந்ததில்லை.”

     “ஸ்ரீராமன் தங்களின் பொருட்டு, போர்க்களத்தில், சூரியன், இந்திரன் மற்றும் சூரிய குமாரனான எமனையுமே எதிர்த்து நிற்பார்.”

     “ஓ ஜனக குமாரி! ஸ்ரீராமன் கடலால் சூழப்பட்ட இந்த பூமி முழுவதையுமே வெற்றி கொள்ளும் ஆற்றல் கொண்டவர்.  ஆகவே, உங்களைக் காப்பாற்ற அவர் செய்யும் போரில் நிச்சயம் வெற்றி கொள்வார்!”

      அனுமனின் யுக்தியுடன் கூடிய அழகிய பேச்சினால் அவரின் மீது சீதைக்குப் பெரு மதிப்பு ஏற்பட்டது.  மீண்டும் அனுமனிடம் இவ்விதம் சொல்லானாள்.

      தனது பயணத்தைத் தொடங்கவிருந்த அனுமனைத் திரும்பத் திரும்பப் பார்த்தவண்ணம், தன் கணவனின் மீது தனக்கிருக்கும் அன்பு நன்கு வெளிப்படுமாறு சீதை பேசலானாள்.

     “பகைவர்களை அழிக்க வல்ல வீரனே! உனக்குச் சரியென்று தோன்றினால், இங்கு எதாவதொரு மறைவிடத்தில் இன்று ஒரு நாள் இளைப்பாறிவிட்டு நீ உன் பயணத்தைத் தொடரலாம்.”

     “வீரனே! நீ அருகே இருக்கும்போது, இந்த அபலையின் துன்பமானது சிறிது நேரத்திற்காவது விலகியிருக்கும்”.

     “வானரங்களில் புலிக்கு நிகரான வலிமை மிக்கவனே! நீ இங்கிருந்து சென்றபிறகு, திரும்ப இங்கு வருவது சந்தேகம் என்றானால், எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை”.

     “துன்பத்தின் நெருப்புக் கங்குகளில் எரிந்து கொண்டிருக்கும் நான், நீ புறப்பட்டுச் சென்ற பின், உன்னைக் காணவியலாத வருத்தத்தால், மேலும் துன்பக் கனலில் தவிப்பேன்.” 



     “ஓ வானர வீரனே! உனது நண்பர்களான வானர வீரர்கள் மீதும், கரடிகளின் மீதும் எனக்கு இப்பொழுதும் பெரும் ஐயம் உள்ளது.  இராம, இலக்குமணர் இருவரும் அந்தப் பெரிய வானரங்கள், கரடிகள் கொண்ட படையை  எவ்விதம் இந்தப் பெருங்கடலைக் கடந்து உடன் அழைத்து வருவார்கள்?”

     “இந்த உலகத்தில் இந்த மாபெரும் கடலைக் கடக்கும் வலிமை, கருடன், காற்று மற்றும் உன்னிடம் மட்டுமே உள்ளது என்பதை அனைவரும் அறிவார்கள்.”

     “செயற்கரிய செயலைச் செய்து முடிப்பதில் நீயே முதன்மையானவன்.  ஆகவே கடலைக் கடக்கும் இந்தக் கடினமான செயலைச் செய்து முடிக்க என்ன வழிமுறை வைத்திருக்கின்றாய்?”

     “பகை வீரர்களைத் தனியொருவனாக வென்றழிப்பதில் வல்லவனான நீ,  அவ்விதம் செய்தாயேயானால், இந்த வெற்றியின் பலன், (புகழ், பெருமை முதலானவை) உன் ஒருவனையே சாரும்.”

     “ஆனால், ஸ்ரீராமன் பெரும்படையுடன் இங்கு வந்து, போர் புரிந்து, இராவணனை வென்று, என்னைத் தன்னுடைய இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்வதே சாலச் சிறந்ததாகும்.”

     “எதிரிகளின் படையை அழிக்க வல்ல ஸ்ரீராமன், தனது வலிமையின் மூலம், இந்த இலங்கையை வெற்றி கொண்டு, என்னைத் தன்னுடன் அழைத்துச் செல்வதே அவருக்கு ஏற்ற செயலாக இருக்கும்.”

     “ஆகவே, ஸ்ரீராமனின் வீரத்தின் வெளிப்பாட்டிற்கு உகந்ததான வழிமுறையை யோசித்து அவ்வண்ணமே செயலாற்ற நீர் முயலவேண்டும்.”

     பொருள் மிக்கதும், அறத்தின்பாற் பட்டும், கூறப்பட்ட அந்த வார்த்தைகளைக் கேட்ட அனுமன், எல்லாவற்றையும் பொருத்தி, தான் உரைக்கவேண்டிய மீதிப் பகுதிகளைச் சொல்லத் தொடங்கினார்.

     “தேவீ! வானர, கரடி சேனைகளுக்குத் தலைவரும், வானரங்களில் உத்தமரும், தெளிந்த சிந்தனையும் உடையவருமான சுக்ரீவன், தங்களை மீட்பதில் உறுதியாக உள்ளார்.”

     “வைதேஹீ! அந்த சுக்ரீவன், பல்லாயிரக் கணக்கான வானர சேனைகள் சூழ்ந்தவண்ணம், அரக்கர்களை அழித்தொழிக்க மிக விரைவில் இங்கு வர இருக்கின்றார்.”

     “அவருடைய ஆணைக்கு அடிபணிந்திருக்கும் அந்த வானர வீரர்கள், மிகவும் திறமைசாலிகள்.  அஞ்சா நெஞ்சம் கொண்ட அந்த வலிமை மிக்க வீரர்கள், எண்ணிய காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள்.”

     “மேலும், கீழும், பக்கவாட்டிலும் முன்னேறிச் செல்லும் அவர்களது வேகத்தை யாராலும் தடைசெய்ய முடியாது. அப்படிப்பட்ட அளப்பரிய ஆற்றல் மிக்க அவர்கள், எவ்வளவு கடினமான செயலாக இருந்தாலும், அதை வெற்றிகரமாக முடிக்காமல் ஓயமாட்டார்கள்.”

     “வான் வழியே பயணம் செய்யும் ஆற்றல் கொண்ட மிக வலிமை வாய்ந்த அவர்கள், கடல்கள், மலைகளால் சூழப்பட்டுள்ள இந்த பூமியைப் பலமுறை சுற்றி வந்துள்ளார்கள்.”

     “சுக்ரீவனின் பெரும் படையில் உள்ள வானரர்கள், எனக்கு மேலானவராயும், இணையானவராயும் உள்ளனர்.  என்னுடைய வலிமைக்குக் குறைந்த வானரர்கள் யாரும் அந்தப் படையில் இல்லை.”

     “ஒரு நாட்டின் சாமான்யமான மனிதர்களே தூதுவர்களாக அனுப்பப் படுவார்கள்.  மிகச் சிறந்த வீரர்கள் அவ்வாறு அனுப்பப்படுவதில்லை.  ஆகவே, ஒரு தூதுவனாக நான் இங்கு வந்திருப்பதால், அங்கே மிகுந்திருக்கும் வானரர்களிள் வலிமை எப்படிப்பட்டது என்று கேட்கவும் தகுமோ?”

     “ஆகவே தேவீ! நீங்கள் பரிதவிக்க வேண்டாம்.  உங்கள் துன்பங்கள் தொலைந்து போகட்டும்.  மிகச் சிறந்த வானர வீரர்கள் ஒரே தாவலில் இலங்கையை வந்து அடைய இருக்கின்றார்கள்.”

     “உதயமாகின்ற சூரிய மற்றும் சந்திரனின் ஒளிக்கு நிகரானவர்களும், ஆண் சிங்கங்களுக்கு இணையான வலிமை கொண்டவர்களுமான அந்த இருவரும் (ஸ்ரீராமனும் இலக்குமணனும்) மிகவும் பலம் கொண்ட வானரப் படை சூழ, எனது முதுகின் மீது ஏறிக்கொண்டு இங்கு உங்களிடம் வர இருக்கின்றார்கள்.”

     “மனிதர்களுள் மிகச் சிறந்தவர்களும், மிகவும் வலிமை மிக்கவர்களும், எப்பொழுதும் இணைபிரியாது சேர்ந்தே இருக்கும் ஸ்ரீராமனும் இலக்குமணனும் இங்கு வந்து தங்கள் அம்புகளால் இந்த இலங்கை நகரத்தை அழித்து விடுவார்கள்.”

     “அழகிய சீதையே! ரகு குலத்தில் தோன்றிய இராகவன், இராவணனை அவனது கூட்டத்தாருடன் அழித்து விட்டு, உங்களை அழைத்துக் கொண்டு தன் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்ல இருக்கின்றார்.”

     “ஆகவே மனதில் கலக்கமின்றி, நல்ல தருணத்தை எதிர்பார்த்திருங்கள்.  உங்களுக்கு நலம் உண்டாகும்.  கொழுந்து விட்டு எரியும் நெருப்பைப் போன்ற ஸ்ரீராமனை இதோ நீங்கள் காணப் போகின்றீர்கள்.”

     “இராவணனுடைய மக்கள், அமைச்சர்கள் மற்றும் சுற்றத்தார்கள் அனைவரும் கொல்லப்பட்டதும், சந்திரனோடு இணையும் ரோஹிணி நக்ஷத்திரம் போல நீங்கள் ஸ்ரீராமனோடு இணையப் போகின்றீர்கள்.”

     “தேவீ! மைதிலி! நீங்கள் விரைவிலேயே இந்தத் துன்பப் பெருங்கடலின் கரையை அடைந்து விடுவீர்கள்.  ஸ்ரீராமனால் இராவணன் கொல்லப்படப் போவதையும் பார்க்கப் போகிறீர்கள்.”

      இவ்வாறு பலவிதமாக வைதேஹிக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறிய வாயுகுமாரனாகிய அனுமன், தான் புறப்பட இருப்பதை உத்தேசித்து, மீண்டும் வைதேஹியிடம் இவ்விதம் சொல்லலானார்.

     “மிகவும் தைரியம் மிக்கவரும், பகைவர்களை அழிப்பவருமான ஸ்ரீராமனையும், இலக்குமணனையும் கையில் வில்லை ஏந்தியபடியே, இந்த இலங்கையின் வாயிலில் நிற்பதை விரைவில் காண்பீர்கள்.”

     “சிங்கம், புலி போன்று வலிமை கொண்டவர்களும், பற்களையும், நகங்களையும் ஆயுதங்களாக உபயோகிப்பவர்களும், யானை போன்ற வல்லமை கொண்டவர்களுமான வானர வீரர்கள் ஒன்று கூடி விரைவில் வரப் போகின்றார்கள்.”

     “தேவீ! அந்த வானரங்களின் தலைவர்களின் கூட்டமானது, இலங்கையின் மலய மலைகளின் சிகரங்களில் முழங்குகின்ற மேகக் கூட்டம் போல் ஒன்று கூடி நிற்கப்போவதை விரைவில் காணப் போகின்றீர்கள்.”

     “மன்மதனின் காம பாணத்தால், தன் மர்ம உறுப்பு பாதிக்கப்பட்ட ஸ்ரீராமன், சிங்கத்தால் காயம்பட்ட யானைபோல ஒரு சுகத்தையும் அறிந்திருக்கவில்லை.”

     “தேவீ! தாங்கள் அழுவதை நிறுத்துங்கள்.  தங்கள் மனதில் சற்றும் அச்சம் வேண்டாம்.  தன் கணவனான இந்திரனுடன் கூடியிருக்கும் இந்திராணி போல தாங்கள், தங்கள் கணவருடன் சேர்ந்திருப்பீர்கள்.”

     “தேவீ! ஸ்ரீராமனை விடச் சிறந்தவர் யாரும் உண்டா? இல்லை, இலக்குமணனுக்கு நிகரானவர்தான் உண்டா? நெருப்பும் காற்றும் போன்ற அவ்விரு சகோதரர்களும் தங்களைக் காப்பாற்ற இருக்கிறார்கள்.”

     “தேவீ! அரக்கர்களால் நிர்மாணிக்கப்பட்ட, அதி பயங்கரமான இந்த நாட்டில் நீங்கள் நீண்ட நாட்கள் இருக்க வேண்டாம். உங்கள் பிரியமான ஸ்ரீராமனின் வரவு தாமதமாகாது. நான் சென்று ஸ்ரீராமனிடம் தகவல் சொல்லும் காலம் வரைக்கும் தாங்கள் பொறுத்தருள வேண்டும்.”

             

                            முப்பத்தொன்பதாவது ஸர்கம் நிறைவு.

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம். முப்பத்தெட்டாவது ஸர்கம்.

 

            ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம்.

                         முப்பத்தெட்டாவது ஸர்கம்.





     சீதையின் வார்த்தைகளைக் கேட்ட சொல்லின் செல்வரும், புலியை நிகர்த்த வலிமையுடையவரும், வானர வீரருமான அனுமன் திருப்தியடைந்தார். அவர் சீதையிடம் இவ்விதம் சொல்லலானார்.

     “காண்போருக்கு மகிழ்ச்சி தரும் தேவீ! நீங்கள் சொன்னவை உங்கள் இயல்பிற்கேற்றவை. பெண்களுக்கு உரித்தான பண்பு நலன்களுடன் கூடிய கற்பிற்சிறந்த பெண்களின் பணிவான பேச்சுக்கள் இவை!”.

     “நூறு யோஜனை அகலமுள்ள பெருங்கடலை, என் முதுகில் அமர்ந்து கொண்டு கடந்து செல்வது ஒரு பெண்ணான உங்களால் இயலாத செயல் தான்.”

     “ஜனக குமாரி! ஸ்ரீராமனைத் தவிர பிற ஆடவரைத் தொடுவதில்லை என்ற உங்களது இரண்டாவது காரணம் மிகவும் ஏற்புடையது.  பணிவு நிரம்பிய தேவி! ஸ்ரீராமனின் மனைவியின் வாயிலிருந்து மட்டுமே இப்படிப் பட்ட வார்த்தைகள் வெளிப்பட இயலும். உங்களைத் தவிர வேறு பெண்ணால் இவ்விதம் பேச இயலுமா?”

     “தேவீ! என் முன்னே நீங்கள் சொல்லிய அனைத்தையும் ஒன்று விடாமல் காகுத்த குல திலகமான ஸ்ரீராமனிடம் சொல்வேன்.”

     “தேவீ! நான் தங்களிடம் கூறிய வழிமுறைகளுக்குப் பலவிதமான காரணங்கள் உண்டு.  ஸ்ரீராமனின் மீதுள்ள அன்பின் காரணமாக, அவரைத் திருப்திப் படுத்தவே மேற்கண்டவாறு நான் பேசினேன்.”

     “கடக்க முடியாத பெருங்கடலைக் கடந்து, நுழைய முடியாத இலங்கைக்குள் நுழைய முடிந்த என் திறமையின் மீது வைத்த நம்பிக்கையின் காரணமாகவே தங்களைச் சுமந்து செல்லும் யோசனையைக் கூறினேன்.”

     “என் குருவான ஸ்ரீராமனின் மீதுள்ள அளவற்ற அன்பினாலும், பக்தியினாலும், இன்றே உங்களை ஸ்ரீராமனிடம் கொண்டு சேர்க்க விருப்பம் கொண்டேன்.  இதைத் தவிர வேறு எந்த எண்ணமும் எனக்கில்லை.”

     “குற்றங்கள் ஏதுமற்ற தேவீ! என்னுடன் வருவதற்கு உங்களுக்கு விருப்பம் இல்லாத நிலையில், உங்களை நான் சந்தித்ததை ஸ்ரீராமனிடம் சொல்வதற்கு வசதியாக உங்கள் உடமைகளில் எதாவது ஒன்றைத் தாருங்கள்.

     தேவ கன்னிகை போன்று ஒளி பொருந்திய சீதை, அனுமன் சொன்னவற்றைக் கேட்ட பிறகு, கண்களில் நீர் தளும்ப, கேவலுடன் மெதுவான குரலில் பதில் சொல்லலானாள்.

     “வானர உத்தமனே! நான் சொல்லும் இதை அடையாளமாக என் அன்புக்குரியவரிடம் சொல்வாயாக! சித்ர கூட மலையின் வட கிழக்குப் பகுதியில், மந்தாகினி ஆற்றின் மிக அருகில் சித்தாஸ்ரமத்தில் நாங்கள் தங்கியிருந்தோம்.  கிழங்கு வகைகளும், பழங்களும் நீர் நிலைகளும் நிறைந்து விளங்கிய தோட்டத்தில் பலவிதமான வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கி நறுமணம் பரப்பின.  என்னுடன் நீர் நிலைகளில் விளையாடிய என் கணவர், ஈரமான உடைகளுடன் என் மடியில் வந்து அமர்ந்து விட்டார்.”

     “ஒரு சமயம், மாமிசத்தை விரும்பி உண்ணும் காகம் ஒன்று என் மீது அமர்ந்து என் அங்கங்களைக் கொத்தத் தொடங்கியது. நான் மண் உருண்டைகளை எறிந்து அதை விரட்டினாலும் மீண்டும் மீண்டும் என்னைக் கொத்துவதும், மறைந்து கொள்வதுமாகவும் இருந்தது.  யாகங்களில் இடப்படும் பலிகளை உண்ணும் பழக்கமுள்ள அந்த காகமானது என்னைக் கொத்துவதை நிறுத்தவில்லை.”

       (தனக்கும் இராமனுக்கும் இடையே நிகழ்ந்ததை  நிகழ்ந்த வண்ணம் சீதை நினைவுகூறுதல்: இராமனிடம் பேசுவது போல சொல்லப்பட்டுள்ளது)

     “காகத்தின் மீது கோபம் கொண்ட நான் என் இடையில் இருந்த கயிற்றை அவிழ்த்து காகத்தை விரட்ட முயற்சி செய்தேன்.  அதனால் என் உடை அவிழும் நிலை ஏற்பட்டது. அதே சமயம் நீங்கள் என்னைப் பார்த்துச் சிரித்து விட்டீர்கள்.”

     “உடனே நீங்கள் என்னைப் பரிகாசம் செய்ய, முதலில் கோபம் கொண்ட நான், வெட்கமுற்றேன்.  உணவில் விருப்பம் கொண்ட அந்த காகம் மீண்டும் என்னைக் கொத்த, நான் அந்த நிலையிலேயே உங்களிடம் வந்தேன்.”

     “காகத்தின் செய்கையால் களைப்புற்ற நான், அமர்ந்திருந்த உங்களின் மடியில் வந்து அமர்ந்தேன்.  அதனால் மகிழ்வுற்ற நீங்கள், கோபமுடன் இருந்த என்னைச் சமாதானம் செய்தீர்கள்.”

     “நாதனே! காகத்தின் செயலால் கோபமுற்றிருந்த நான், எனது கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை மெதுவாகத் துடைத்துக் கொண்டேன்.  நீங்கள் அதனைக் கவனித்து விட்டீர்கள்.”

(இப்பொழுது அனுமனிடம் சீதை சொல்வது தொடர்கிறது).

     “அனுமனே! மிகவும் களைப்புற்றிருந்த நான் நெடுநேரம் ஸ்ரீராமனின் மடியில் தலைவைத்து உறங்கினேன்.  பரதனின் மூத்த சகோதரனான ஸ்ரீராமனும் நான் எழுந்த பிறகு என் மடியில் தலை வைத்து உறங்கினார்.”

     “ஸ்ரீராமனின் மடியிலிருந்து நான் தூங்கி எழுந்தவுடன் அந்த காகம் மீண்டும் அங்கு வந்தது.  உடனே அது பறந்து வந்து என் மார்பின் மீது தன் அலகினால் கொத்தத் தொடங்கியது.  பறந்து பறந்து வந்து மீண்டும் மீண்டும் என் மார்பகங்களில் தன் அலகினால் கொத்தியது.  காயத்திலிருந்து வழிந்த இரத்தத் துளிகள் மடியில் படுத்திருந்த ஸ்ரீராமன் மீது விழுந்து அவரை நனைக்க,  அவரின் உறக்கம் கலைந்தது.”

     “சுகமான உறக்கத்தில் இருந்த, பகைவர்களை விரட்டியடிக்கும் வல்லமை வாய்ந்த ஸ்ரீராமன் என்னுடைய நிலைமையின் காரணமாக உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தார்.”


     “தோள் வலிமை மிக்க ஸ்ரீராமன், என் மார்பகங்களில் இருந்த காயங்களைப் பார்த்து மிகுந்த சினம் கொண்டார்.  சினம் கொண்ட விஷப் பாம்பைப் போல சீற்றத்துடன், பெருமூச்சு வாங்கிய வண்ணம் பேசினார்.”

     “யானையின் துதிக்கை போன்ற வடிவழகு மிக்க தொடைகளைக் கொண்ட சீதையே! உன்னுடைய மார்பகங்களில் காயம் உண்டாக்கியது யார்? கோபம் கொண்ட ஐந்து தலைப் பாம்புடன் யார் விளையாட விரும்புவது?” என்றார்.

     “எல்லாத் திசைகளிலும் பார்வையைச் செலுத்திய ஸ்ரீராமன், காலில் இரத்தக் கறைகளோடு கூடிய, கூரிய நகங்களுடன் என்னைப் பார்த்தவாறு அமர்ந்திருந்த காகத்தைப் பார்த்தார்.”

     “பறவையினங்களில் சிறந்ததும், இந்திரனின் மகனுமான அந்தக் காகம், காற்றின் வேகத்தில் வெகு தூரம் கடந்து இங்கு வந்திருந்தது.”

     “அறிவிற்சிறந்தவரும்,தோள் வலிமை மிக்கவருமான ஸ்ரீராமனின் கண்கள் கோபத்தில் சுழன்றன.  அந்தக் காகத்திற்குக் கொடிய தண்டனை அளிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.”

     “ஸ்ரீராமன் தன் தர்பைப் படுக்கையில் இருந்து ஒரு தர்ப்பையை உருவினார். பிரம்மாஸ்திரத்திற்கான மந்திரத்தை ஜபித்ததும், அந்தத் தர்ப்பையானது உயிரினைக் கொல்லும் நெருப்புப் போல ஒளிரத் துவங்கியது.  அவர் அதை அந்தக் காகத்தை நோக்கிச் செலுத்தினார்.”

     “அந்த எரியும் தர்ப்பையை ஸ்ரீராமன் காகத்தை நோக்கிச் செலுத்தியதும் அது அந்தக் காகத்தைப் பின் தொடர்ந்து விரட்டிச் சென்றது.”

     “அந்தத் தர்ப்பைப் பாணத்தினால் பயந்த காகம், இந்த உலகத்தில் பல்வேறு இடங்களில் தஞ்சம் அடைந்து தப்ப முயற்சித்தும், அந்த அம்பானது அந்தக் காகத்தை விடாது பின் தொடர்ந்தது.”

     “மூன்று உலகங்களிலும் பறந்து அலைந்த அந்தக் காகம், அதனுடைய தந்தை, தேவர்கள், மற்றும் முனிவர்கள் அனைவராலும் நிராகரிக்கப்பட்டது.” இறுதியில் தன்னைக் காக்கும் படி ஸ்ரீராமனிடமே அடைக்கலம் புகுந்தது.”

     “காகுத்த குலத் திலகமான ஸ்ரீராமன், தன்னிடம் அடைக்கலம் தேடி, பூமியில் வந்து விழுந்த காகத்திடம் கருணை கொண்டார்.  கொல்லத் தகுந்த செயலைச் செய்திருந்தாலும் அந்தக் காகத்தைக் காப்பாற்றினார்.”

     “பல்வேறு இடங்களில் அலைந்து திரிந்த வலியினாலும் சோர்வினாலும் தன் முன்னே வந்து விழுந்த அந்தக் காகத்தைப் பார்த்து ஸ்ரீராமன், “செலுத்தப்பட்ட பிரம்மாஸ்த்திரத்தை, அது தன் இலக்கை அடையாமல் திரும்பப் பெற இயலாது.  ஆகவே, இந்த அஸ்திரத்தால் உன்னுடைய உடலின் எந்தப் பகுதி தாக்கப் பட்டும் என விரும்புகிறாய்?” என்று கேட்டார்.”

     “காகத்தின் விருப்பப்படி அந்த அஸ்திரத்தால் காகத்தின் வலது கண் குருடாக்கப்பட்டது.  தன் வலது கண்ணின் பார்வையை இழந்து அந்தக் காகம் தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டது.”

     “அந்தக் காகம் ஸ்ரீராமனையும் அவரது தந்தையாரான மகாராஜா தசரதனையும் வணங்கி விட்டு, பெரும் வீரான ஸ்ரீராமனின் அனுமதியுடன் விடை பெற்றுக் கொண்டு, தன் இருப்பிடம் திரும்பிச் சென்றது.”

(மீண்டும் சீதை இராமனிடம் நேரில் பேசுவது போல் சொல்லத் தொடங்குகிறாள்.)

     “அன்பிற்குகந்த மாவீரனே! சிறு துஷ்டச் செயல் புரிந்த காகத்தின் மீது பிரம்மாஸ்திரத்தை ஏவிய நீங்கள், என்னை உங்களிடமிருந்து அபகரித்துச் சென்றவனை ஏன் மன்னித்து விட்டீர்கள்?”

     “மனித குலத்தின் மிகச் சிறந்தவரே! பெரும் ஆர்வத்துடன் என் மீது கருணை கொள்ளுங்கள்.  எப்பொழுதும் உங்களுடனேயே உறைந்திருக்கும் சீதையானவள், இன்று அனாதை போல ஆகி விட்டாள்.”

     “கருணை காட்டுதல் என்பது மிகப் பெரிய அறம் என்பதை நான் உங்கள் மூலமே அறிந்துள்ளேன்.  உங்களது வலிமை, வீர, தீர, பராக்ரமம், பேரார்வம் அனைத்தையும் நான் அறிவேன்.”

     “எல்லையற்ற ஆற்றல் மிக்க உங்களை அசைத்துப் பார்க்கவோ, வெற்றி கொள்ளவோ யாராலும் இயலாது.  நீங்கள் மிகப் பெரிய ஆழ் கடலைப் போன்ற கம்பீரம் கொண்டவர். அந்தக் கடலுக்கும் பூமிக்கும் தலைவராக விளங்கும் நீங்கள் இந்திரனைப் போன்ற வலிமை மிக்கவர்.”

     “இராகவா! ஆயுதங்களை இது போல் உபயோகப்படுத்துபவர்களுள் உத்தமமானவரும், வலிமை மிக்கவரும், ஆற்றல் மிக்கவருமாக நீங்கள் இருந்த போதிலும், இந்த அரக்கர்கள் மீது ஏன் ஆயுதங்களைப் பிரயோகிக்கவில்லை?”

     (இப்பொழுது அனுமனிடம் பேசுகிறாள்.)

     “ஸ்ரீராமனுடைய தாக்குதலின் வேகத்திற்கு முன், நாகர்களோ, கந்தர்வர்களோ, தேவர்களோ அல்லது மருத கணங்களோ யாராயினும் போர்க்களத்தில் எதிர்த்தாக்குதல் நடத்த இயலாது.”

     “இவ்வளவு அதிக ஆற்றல் கொண்ட ஸ்ரீராமன் மனதில் என்னைப் பற்றி சிறிதளவாவது கவலை இருக்குமானால், தன்னுடைய கூரிய அம்புகளால் இந்த அரக்கர்களை ஏன் அழிக்காமல் இருக்கிறார்?”

     “அல்லது, எதிரிகளுக்கு அழிவைக் கொடுக்க வல்ல மிகவும் வலிமை வாய்ந்த இலக்குமணன், தன் அண்ணனின் உத்தரவைப் பெற்று, என்னைக் காப்பாற்ற ஏன் வரவில்லை?”

     “சிங்கங்களை நிகர்த்த அந்த இருவரும் காற்றுத் தேவனுக்கும் இந்திரனுக்கும் இணையான வலிமை மிக்கவர்கள்.  தேவர்களாலேயே அவர்களை வெற்றி கொள்வது என்பது இயலாது.  அவ்வாறு இருக்கையில் என்னைப் பற்றி ஏன் கவலை கொள்ளவில்லை?”

     “நான் ஏதோ மிகப் பெரிய பிழை இழைத்திருக்க வேண்டும் என்பதில் ஐயம் ஏதுமில்லை.  இல்லையென்றால் பகைவர்களை அழித்தொழிக்கும் வல்லமை பெற்ற அந்த இருவரும் ஏன் என் மீது கருணை காட்டவில்லை?”

     கண்களில் கண்ணீர் பெருக, பெரும் இரக்கம் கொள்ளத்தக்க வார்த்தைகள், வைதேஹியின் வாயிலிருந்து வெளி வந்ததைக் கேட்ட பெரும் வீரனான வாயுகுமாரன் அனுமன் இவ்வாறு மறுமொழி கூறினார்.

     “தேவீ! ஸ்ரீராமன் தங்களைப் பிரிந்த துயரத்தில் வேறு எந்தச் செயலிலும் ஈடுபாடு கொள்ளாமல் இருக்கிறார் என்பதனை நான் சத்தியத்தின் மீது ஆணையிட்டுக் கூறுவேன்.  எப்பொழுதும் துயரத்தில் இருக்கும் ஸ்ரீராமனைக் காணும் இலக்குமணனும் துயரமாகவே உள்ளார்.”

     “அரும்பாடுபட்டு நான் தங்களைத் தரிசித்துள்ளேன்.  இது நீங்கள் துயரம் கொள்ளும் சமயமில்லை.  இனி இந்தக் கணத்திலிருந்து உங்கள் துயரங்கள் எல்லாம் விலகிச் செல்லப் போவதைக் காணப் போகின்றீர்கள்.”

     “சிங்கங்களையொத்த அந்த இரண்டு அரச குமாரர்களும் மிகவும் வலிமை மிக்கவர்கள்.  தங்களைக் காண வேண்டி மிகவும் ஆவலில் உள்ளனர்.  ஆகையினால் எதிர்த்து வரும் அரக்கர் குலத்தையே எரித்துச் சாம்பலாக்கி விடுவர்.”

     “அகன்ற விழிகளையுடைய தேவீ! போர்க்களத்தில் கொடூரமான இராவணனை, அவனுடைய உறவினர்கள் அனைவருடனும் தோற்கடித்து தங்களைத் தன்னுடன் ஸ்ரீராமன் தன் சொந்த நாட்டிற்கு அழைத்துச் செல்வார்.”

     “இப்பொழுது நீங்கள், ஸ்ரீராமன், வலிமை மிக்க இலக்குமணன், ஒளி பொருந்திய சுக்ரீவன் மற்றும் அங்கு கூடியிருக்கும் வானர வீரர்கள் ஆகியோருக்குச் சொல்ல விரும்பும் செய்தியைச் சொல்லலாம்.”

     இவ்வாறாக அனுமன் பேசியதைக் கேட்ட சீதை, அனுமனைப் பார்த்து, “சிறந்த வானர வீரனே! கெளசல்யாவின் வயிற்றில் உதித்த, இந்த உலகம் அனைத்திற்கும் தலைவனான ஸ்ரீராமனுக்கு என் சிரந்தாழ்ந்த வணக்கங்களைத் தெரிவித்து அவரது நலன்களைக் கேட்டறிவாயாக” என்றாள்.

     தொடர்ந்து சொன்ன சீதை, “இந்த உலகத்திலேயே கிடைத்தற்கரிய செல்வங்களையும் விதவித மான இரத்தின மாலைகளையும் அழகிய பெண்களையும் தியாகம் செய்து விட்டு, தந்தை தாயை, சமாதானம் செய்து அவர்களுக்குத் தக்க மரியாதை செய்து, சுமித்திரைக்கு நல்ல பிள்ளையைப் பெற்றவளென்ற நற்பெயரை உருவாக்கிக் கொடுத்த இலக்குமணன், ஸ்ரீராமனுடன் காட்டிற்கு வந்தான். “

     “மிகச் சிறந்த இன்பங்களைத் துறந்துவிட்டு, அறவழியில் நடக்கும் இலக்குமணன், தன் தமையனுக்குப் பணிவிடை செய்யும் பொருட்டு, காகுத்தனான ஸ்ரீராமனுடன் காட்டிற்குச் சென்றான்.”

     “சிங்கத்தின் புஜங்களையொத்த வலிமை மிக்க தோள்களை உடையவனும், பெருஞ்சக்தி படைத்த கைகளைக் கொண்டவனும், மிக அழகிய வடிவம் கொண்டவனுமான இலக்குமணன் என்னைத் தாயாகவும், ஸ்ரீராமனைத் தந்தையாகவுமே கருதினான்.”

     “நான் கவர்ந்துசெல்லப்பட்டதை, இலக்குமணன் அறிந்திருக்கவில்லை.  பெரியவர்களுக்குப் பணிவிடை செய்வதில் விருப்பமுள்ள பெருமை வாய்ந்த இலக்குமணன், அதிகம் பேசுவதில்லை.  அரசகுமாரனும், அனைவருக்கும் விருப்பமானவனுமான இலக்குமணன், என் மாமனாரான தசரத மாமன்னருக்கு இணையானவன்.”

     “தன் சகோதரனான இலக்குமணனிடத்தில், ஸ்ரீராமனுக்கு என்னை விட அன்பு அதிகம்.  பெரும் வீரனான இலக்குமணன், தனக்கு இடப்பட்ட பணி எதுவாகினும், துணிந்து அதை முடிப்பான்.”

     “இலக்குமணனைப் பார்த்துக் கொண்டிருந்தால், ஸ்ரீராமனுக்குத் தன் தந்தை மறைந்து விட்ட நினைவே வருவதில்லை.  அப்படிப்பட்ட இலக்குமணனிடம் எனது அன்பான விசாரிப்புக்களைக் கூறவும்”

     “மிகச் சிறந்த குணங்களை உடையவனும், குறையற்றவனும், ஸ்ரீராமனுக்குப் பிரியமானவனுமான இலக்குமணன், என்னைக் காப்பாற்றும் இந்தச் செயலில் சிறப்புடன் ஈடுபடும் வண்ணம் என்னுடைய வார்த்தைகளை அவனிடம் தெரிவிப்பாயாக!”

     “வானரத் திலகமே! இங்கு நடைபெற்ற எல்லா செயல்களுக்கும் நீயே சாட்சியாய் விளங்குகிறாய்.  உன்னுடைய சொல்லும், செயலுமே ஸ்ரீராமனுக்கு என்னைக் காப்பாற்றும் செயலில் பெரும் உற்சாகத்தை அளிக்கும்.”

     “வீரமிக்க என் கணவனான ஸ்ரீராமனிடம், எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஒரு மாத கெடுவிற்கு மேல் நான் சத்தியமாக உயிர் தரிக்க மாட்டேன் என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்!”

     “எவ்விதம் இந்திரனிடமிருந்து அபகரிக்கப்பட்ட செல்வத்தைப், பாதாள உலகத்திலிருந்து மகாவிஷ்ணு மீட்டு வந்தாரோ, அதைப் போல, இந்த வஞ்சகனான இராவணனின் பிடியிலிருந்து என்னை ஸ்ரீராமன் மீட்டுச் செல்ல வேண்டும்.”

     இவ்விதம் பேசியபடியே, தனது உடையில் முடிந்து வைத்திருந்த, சிறப்பு வாய்ந்த சூடாமணி என்னும் அணிகலனை அனுமனிடம் தந்த சீதை, “இதை ஸ்ரீராமனிடன் சேர்ப்பித்து விடு!” என்று சொன்னாள்.

     சீதையிடமிருந்து பெற்றுக்கொண்ட அதி உத்தமமான அந்த அணிகலனை, அனுமன் தன் கை விரலில் அணிந்து கொண்டார். ஆனால் அது அவரது விரல்களில் பொருந்தாமல் இருந்தது. (அவர் மிகச் சிறிய வடிவம் கொண்டிருந்தார்.)

     சிறந்த மணிரத்னத்தைப் பெற்றுக் கொண்ட அனுமன் சீதையைப் பணிவுடன் வணங்கி, அவரை வலம் வந்து வணங்கி, அவரது அருகில் நின்றார்.

     சீதையைக் கண்டுவிட்ட பெரு மகிழ்ச்சியில் திளைத்த அனுமன், மனதளவில் ஸ்ரீராம, இலக்குமணர்களை சென்று அடைந்து விட்டார். அவரது உடல் மட்டுமே அங்கிருந்தது.  

     “ஜனகனின் மகளாகிய சீதையிடமிருந்து அந்த விலை மதிப்பற்ற சூடாமணியைப் பெற்றுக் கொண்டதுமே, அனுமன் பெரும் காற்றின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட பெரும் மலை அசைவது போல, தன் பயணத்தைத் தொடர முயற்சி செய்தார்.”

 

                    முப்பத்தெட்டாவது ஸர்கம் நிறைவு.

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம். முப்பத்தேழாவது ஸர்கம்.

 

            ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம்.

                               முப்பத்தேழாவது ஸர்கம்.



     முழு நிலவினையொத்த பொலிவுடன் விளங்கும் முகம் கொண்ட சீதை, அனுமன் கூறிய வார்த்தைகளைக் கேட்டு விட்டு, அறமும் பொருளும் நிறைந்த வார்த்தைகளைப் பேசினாள்.

     ஓ வானரமே! ஸ்ரீஇராமன் என்னைத் தவிர வேறு சிந்தனையில்லாமல் துயரத்தில் மூழ்கிக் கிடப்பதாய் நீ கூறிய வார்த்தைகள், விஷம் கலந்த அமிர்தம் போல எனக்குத் தோன்றுகிறது.”

     “அளப்பரிய செல்வ வளத்தில் திளைத்துக் கொண்டிருந்தாலும், மிகக் கொடிய துயரத்தில் உழன்று கொண்டிருந்தாலும், மரணமானது கயிற்றில் கட்டி இழுத்துச் செல்வது போல இழுத்துச் சென்று விடுகிறது.”

     “வானர திலகமே! தெய்வம் விதித்ததை மனிதனால் மீற இயலாது.  இலக்குமணனோ, நானோ, ஸ்ரீராமனோ துயரத்தால் பீடிக்கப்பட்டுள்ளதை நீயே காண்பாய்.”

     “கடலில் மூழ்கிய கப்பலிலிருந்து ஒருவன் எவ்விதம் நீந்திக் கரை சேருவானோ, அதைப் போல ஸ்ரீராமன், எப்பொழுது இந்தத் துயரக்கடலை நீந்திக் கரை சேருவார்?”

     “அரக்கர்களை அழித்து, இராவணனை வதம் செய்து, இலங்கையை நிர்மூலம் ஆக்கும் வேலையை என் கணவர் எப்போது செய்வார்?”

     “அவரிடம் சென்று இங்கு விரைந்து வரச் சொல்! இந்த வருடம் முடியும் வரை மட்டுமே நான் உயிருடன் இருப்பேன்.”

     “இரக்கமற்ற இராவணனால் எனக்குக் கொடுக்கப்பட்ட கெடுவில் பத்து மாதங்கள் கழிந்து விட்டன.  இன்னும் இரண்டு மாதங்களே மீதம் உள்ளன.”

     “இராவணனின் தம்பியான விபீஷணன், என்னைத் திருப்பி அனுப்பிவிடுமாறு பலவிதமாக எடுத்துச் சொல்லியும், அதைச் செய்யும் எண்ணம் இராவணனுக்கு இல்லை.”

     “என்னைத் திருப்பி அனுப்பி விடும் எண்ணம் இராவணனுக்குப் பிடிக்கவேயில்லை.  ஏனென்றால், போர்க்களத்தில் அவன் உயிரை விடவேண்டும் என்ற காலனின் வலையில் அவன் சிக்கி விட்டான்.”

     “ஏ வானர வீரனே! விபீஷணனின் மூத்த மகளான அனலையை, அவளது தாயே ப்ரத்யேகமாக என்னிடம் அனுப்பி இந்தத் தகவலைச் சொல்லச் சொன்னாள்.”

     “இராவணனின் நன்மதிப்பைப் பெற்ற அவிந்த்யன் என்னும் வயதான அரக்க வீரன் உள்ளான்.  அவன் மிகவும் புலமை மிக்க அறிவாளி.  வீரம் மிக்கவன்.  பண்பு நிறைந்தவன்.  ஸ்ரீஇராமனின் கரங்களால் அரக்கர்கள் அழியும் காலம் நெருங்கி விட்டது.  ஆகவே என்னைத் திருப்பி அனுப்பி விடும்படி அவன் இராவணனின் நன்மை கருதிச் சொன்ன வார்த்தைகளையும் அவன் கேட்க வில்லை”.

     “வானர வீரனே! என் கணவர் விரைவில் என்னைச் சந்திப்பார் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.  ஏனென்றால் என் உள்ளம் தூய்மையானது.  ஸ்ரீராமனின் மிகச் சிறந்த குணங்களை அது அறியும்.”

     “வானரமே! ஸ்ரீராமனிடத்தில் உற்சாகம், ஆண்மை, வலிமை, இரக்கம், கருணை,பெரும் வீரம் மற்றும் உத்வேகம் ஆகிய அனைத்து குணங்களும் உள்ளன.”

     “தண்டகாரண்யத்தில், தனது சகோதரனின் உதவியில்லாமலேயே, பதினான்காயிரம் அரக்கர்களைக் கொன்றழித்த ஸ்ரீஇராமனை எண்ணி, எந்தப் பகைவர் தான் அச்சம் கொள்ளாதிருப்பர்?”

     “ஆண்களிற் சிறந்தவரான ஸ்ரீராமன் இன்னல்களால் மனக் கலக்கம் அடைந்து விட மாட்டார் என்பது திண்ணம்.  புலோமாவின் மகளான சசி எவ்விதம் இந்திரனின் திறமைகளை அறிந்திருந்தாளோ, அவ்விதமே ஸ்ரீராமனின் திறமைகளை நான் அறிவேன்.”

     “வானரமே! சூரியனுக்கு இணையான ஸ்ரீராமனின் அம்புகள், கடல் போல விரிந்திருக்கும் அரக்கர் படையை, சூரிய ஒளிக் கிரணங்களாய்க் காய்ந்து வற்றச் செய்து விடும்.”

     இவ்விதமாகப் பேசிய சீதையின் முகத்தில் ஸ்ரீராமனை நினைத்துக் கண்ணீர் பெருக்கெடுத்தோடியது.  அப்பொழுது அனுமன் அவரிடம் சொன்னார்.

     “என்னிடமிருந்து தகவலைப் பெற்றதுமே ஸ்ரீராமன், வானரர்களும் கரடிகளும் நிறைந்த மிகப் பெரும் படையை அழைத்துக் கொண்டு இங்கு வருவதற்குப் புறப்பட்டு விடுவார்.”

     “குற்றமற்ற தேவீ! நான் இப்பொழுதே இந்த அரக்கர்களால் படும் துயரத்திலிருந்து உங்களை விடுவித்து விடுகிறேன்.  தாங்கள் என் முதுகின் மீது ஏறி அமர்ந்து கொள்ளுங்கள்.”

     “உங்களை என் முதுகில் சுமந்து கொண்டு நான் இந்தக் கடலைத் தாண்டி விடுவேன்.  இராவணனோடு இந்த இலங்கை மாநகரம் முழுவதையுமே தூக்கிச் செல்லும் ஆற்றல் எனக்குள்ளது.”

     “அக்னியானவன் தனக்குள் ஆஹுதியாய் இடப்படும் ஹவிஸ்களை எவ்வாறு இந்திரனிடம் கொண்டு சேர்க்கின்றானோ, அதைப் போல ப்ரஸ்ரவன மலை முகட்டில் இருக்கும் ஸ்ரீராமனிடம் தங்களைக் கொண்டு சேர்ப்பேன்.”

     “ஓ வைதேஹி! அரக்கர்களை அழிப்பதில் சர்வ வல்லமையுடன் ஈடுபடும் மகாவிஷ்ணுவைப் போல, ஸ்ரீராமன், இலக்குமணனுடன் இந்த அரக்கர்களை அழிக்க இப்பொழுது வந்து விடுவார்.” 

     “தங்களைக் காணும் ஆவலில், மிகவும் வலிமை மிக்க ஸ்ரீராமன் மலையின் மீதுள்ள தன் ஆஸ்ரமத்தில் அமர்ந்துள்ளது எவ்விதம் உள்ளதென்றால், யானைகளின் அரசனான ஐராவதத்தின் மீது இந்திரன் அமர்ந்துள்ளது போல உள்ளது.”

     “தேவீ! நான் கூறியபடி நீங்கள் மறுக்காமல் என் முதுகில் ஏறி அமர்ந்து கொள்ளுங்கள்.  சந்திரனைச் சந்திக்கும் ரோஹிணி போல் நீங்கள் ஸ்ரீராமனிடம் சென்று சேருங்கள்.”

     “ஸ்ரீராமனிடம் சென்று சேர வேண்டும் என்று தாங்கள் சொல்லும் போதே, நிலவினைச் சேரும் ரோஹிணியைப் போல தங்கள் அவரைச் சென்றடைவீர்கள்.  என் முதுகில் அமர்ந்து வான் வழியே இந்தப் பெருங்கடலைக் கடந்து விடலாம்.”

     “அழகிய தேவீ! நான் தங்களை இங்கிருந்து அழைத்துச் செல்லும் போது, இந்த இலங்கை மாநகரில் வசிக்கும் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் கூட என்னைப் பின் தொடர்ந்து வர முடியாது.”

     “நான் எவ்விதம் இங்கு வந்தேனோ, அவ்விதமே உங்களை அழைத்துக் கொண்டு ஆகாய மார்க்கமாகச் செல்வேன் என்பதில் எந்த வித ஐயமுமில்லை.  நீங்கள் இதைக் காண்பீர்கள்.”

     வானரோத்தமனான அனுமனின் வார்த்தைகளைக் கேட்ட மைதிலி, மிகவும் மகிழ்ச்சியுற்று மயிர்க் கூச்செறிந்தாள்.  பின் அனுமனைப் பார்த்துக் கூறலானாள்.

     “சிறந்த வானர வீரனான அனுமனே! என்னை அழைத்துக்கொண்டு இவ்வளவு அதிகமான தொலைவை எவ்வாறு கடந்து செல்வாய்?  உன்னுடைய வானர இயல்பினாலே, இவ்வளவு கடினமான செயலைத் துச்சமென்று எண்ணித் துணிந்தாயோ?”

     “காளை போன்ற வலிமை மிக்க வானரமே! இவ்வளவு சிறிய உருவத்தைக் கொண்டுள்ள நீ, என்னுடைய தலைவனான, மானுடப் பேரரசனான ஸ்ரீராமனிடம் என்னைக் கொண்டு சேர்க்கும் செயலை எவ்விதம் செய்யத் துணிந்தாய்?”

     வாயு புத்ரனாகிய அனுமன், சீதையின் சொற்களைக் கேட்டதும், தன் திறமைக்கு இது இழுக்கு என்று எண்ணத் தொடங்கினார்.

     “கரிய விழிகளைக் கொண்ட வைதேஹியாகிய நீங்கள் என்னுடைய பலத்தையும் திறனையும் அறிந்திருக்க வில்லை.  ஆகவே இன்று நான் என் விருப்பப் படி எடுத்துக் கொள்ளும் என் உண்மையான உருவத்தை நீங்கள் பாருங்கள்.”

     இவ்விதமாக எண்ணம் கொண்ட , பகைவரைக் கொன்றழிக்கும் வலிமை மிக்க அனுமன் அப்பொழுது சீதைக்குத் தன் சுய வடிவடிவத்தைக் காண்பித்தார்.

     மரத்தின் மீதிருந்து கீழே குதித்த அறிவாற்றல் மிக்க அனுமன், சீதைக்கு நம்பிக்கை உண்டாக்குவதற்காக தன் உருவத்தைப் பெரியதாக ஆக்கிக் கொள்ளத் துவங்கினார்.



     கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது உருவமானது, மேரு, மந்தர மலைகளைப் போல வளர்ந்து நின்றது.  ஒளிரும் நெருப்புப் பிழம்பாய்த் தோன்றிய அனுமன் , தன் புதிய உருவத்துடன் சீதைக்கு முன்பு நின்றார்.

     பெரும் மலையைப் போன்று உருவம் கொண்டு, சிவந்த முகத்துடன் நகங்களும் பற்களும் வைரக் கற்கள் போல மின்ன, பார்ப்பவர் அச்சம் கொள்ளும் வண்ணம் நின்ற அனுமன் வைதேஹியிடம் சொல்லலானார்.

     “தேவீ! மலைகள், காடுகள், தோட்டங்கள், கோட்டைகள், தோரண வாயில்கள் கொண்ட இலங்கையை வேருடன் பிடுங்கி, அதன் அரசனான இராவணனையும் சேர்த்துத் தூக்கிச் செல்லக் கூடிய வலிமை என்னிடம் உள்ளது”.

     “தேவீ! தங்களுக்கு என் மீதுள்ள அவநம்பிக்கை பொருளற்றது.  திடமான மனதுடன் இருங்கள்.  என்னுடன் வந்து இராம இலக்குமணர்களின் துயரத்தைப் போக்குங்கள்”.

      வாயுதேவனின் சொந்த மகனான அனுமனை, மலை போன்ற பெரிய அகன்ற உருவத்தில் பார்த்த, தாமரையிதழ்களையொத்த விழிகளைக் கொண்ட ஜனக குமாரி அவனிடம் சொன்னாள்.

     “ஓ சிறந்த வானரமே! உன்னுடைய பலத்தையும் திறமையையும் நான் அறிவேன்.  காற்றைப் போல வேகமும், பெரும் நெருப்பைப் போன்ற மிகச் சிறப்பான ஒளியும் உன்னிடம் உள்ளன.”

     “வானரத் தலைவனே! ஒரு சாதாரண வானரத்தால், அளவிடமுடியாத பெருங்கடலைக் கடந்து இந்த இடத்திற்கு எவ்விதம் வந்து சேர முடியும்?”

     “என்னைச் சுமந்து கொண்டு இந்தப் பெருங்கடலை உன்னால் கடந்து விட முடியும் என்பதை நான் அறிவேன்.  ஸ்ரீராமன் நினைத்த காரியம் தடையின்றி நிறைவேற, சரியாகத் திட்டமிடல் வேண்டும்.”

     “உயர்ந்த வானரமே! உன்னுடன் நான் வருவது ஏற்புடைய செயலாக இருக்க முடியாது.  ஏனென்றால் காற்றைப் போன்ற உன் வேகத்தில் நான் மூர்ச்சையடைந்து விடுவேன்.”

     “கடலின் மீது மேலே மேலே உயரமான வான் வெளியில் அதிவேகத்தில் நீ பறந்து செல்லும் போது, உன் முதுகிலிருந்து நான் கீழே விழுந்தாலும் விழுந்து விடுவேன்.”

     “கடலினுள் விழுவதினால், அங்கு வாழும் பெரும் திமிங்கிலங்கள், முதலைகள், மற்றும் பெரிய மீன்களுக்கு சிறந்த உணவாக மாறுவதைத் தவிர வேறு வழியில்லை” 

     “பகைவர்களுக்கு அழிவை உண்டாக்கும் வீரனே! நான் உன்னுடன் வர இயலாத நிலையில் உள்ளேன்.  ஒரு பெண்ணை உன்னுடன் அழைத்துச் செல்வது உனக்குத் தேவையற்ற சுமையாக இருக்கும்.  ஒரு பெண்ணை அழைத்துச் செல்லும் உன்னை, அரக்கர்கள் பார்த்தால் நிச்சயம் ஐயம் உண்டாகும்.”

     “நீ என்னை அழைத்துச் செல்வதைக் கண்டால், கொடியவனான இராவணனின் ஆணைப்படி, பயங்கரமான இந்த அரக்க வீரர்கள், உன்னைப் பிடிக்கப் பின் தொடர்ந்து வருவார்கள்.”

     “என்னை அழைத்துச் செல்லும் நீ, ஈட்டிகளும் வேல்களும் கொண்ட அரக்கர்களால் சூழப்பட்டு, உன் உயிரையே இழக்கும் அபாயம் ஏற்பட்டு விடும்.”

     “ஆயுதங்கள் எதுவுமின்றி இருக்கும் உன்னை, பலவிதமான ஆயுதங்களுடன், வான வீதியில் அரக்கர்கள் எதிர்த்துப் போர் புரிவார்கள்.  அவர்களிடம் இருந்து என்னைக் காக்கும் பணியும், அவர்களை எதிர்த்துப் போரிடும் பணியும் ஆக இரண்டு பணிகளையும் எவ்விதம் உன்னால் செய்ய முடியும்?”

     “சிறந்த வானர வீரனே! கொடுஞ்செயல் புரியும் அரக்கர் கூட்டத்துடன் நீ தீவிரமாகப் போர் புரியும் போது அச்சமடைந்து நான் உறுதியாக உன் முதுகிலிருந்து விழுந்து விடுவேன்.”

     “வானரத் திலகமே! அந்த பயங்கரமான வலிமை வாய்ந்த பெரிய பெரிய அரக்கர்கள் ஒருவேளை , போரில் உன்னை வெற்றி கொண்டு விடலாம்.”

     “அல்லது யுத்தத்தில் உன் கவனம் முழுவதும் இருக்கும் போது என் மீதுள்ள கவனம் தவறினால், நான் கீழே விழுந்து விட்டால், அந்தப் பாவிகளான அரக்கர்கள் என்னை மீண்டும் தூக்கிச் சென்று விடுவார்களே?”

     “போரில் வெற்றி தோல்வி என்பதை இன்னாருக்கு என்று உறுதியாகச் சொல்ல முடியாது.  ஆகவே என்னை, உன்னிடமிருந்து அந்த ஒழுங்கீனமானவர்கள் அபகரித்து விடலாம் அல்லது என்னைக் கொன்று விடலாம்.”

     “வானர உத்தமனே! அரக்கர்களிடம் மீண்டும் அகப்பட்டு அவர்கள் துன்புறுத்தலால் நான் உயிர் விட நேர்ந்தால், உனது இந்த எல்லா முயற்சிகளும் பயனற்றதாகி விடும்.”

     “ஒருவேளை நீ அனைத்து அரக்கர்களையும் கொன்று வீழ்த்தி விட்டாலும், அது ஸ்ரீராமனின் புகழுக்குக் களங்கத்தை உண்டாக்கி விடுமே!”

     “இல்லையென்றால் என்னைத் தூக்கிச் செல்லும் அரக்கர்கள் மிகவும் ரகசியமான இடத்தில் என்னை மறைத்து வைத்து விட்டால், அது வானரர்களுக்கோ அல்லது ஸ்ரீராமனுக்கோ தெரிய வராமல் போய் விடும்.”

     “இவ்வாறெல்லாம் நிகழ்ந்து விட்டால் உன்னுடைய இந்த செயல்களெல்லாம் பயனற்றதாகி விடும்.  ஸ்ரீராமனும் உன்னுடன் இங்கே வருவதே சாலச் சிறந்த தாகும்.”

     “வலிமையான கரங்களை உடையவனே! பெரும் வீரரான ஸ்ரீராமன், அவருடைய சகோதரர்கள் மற்றும் உன் குலத்தவர்கள் ஆகியோரின் உயிரும், உன் உயிரும், நான் உயிருடன் இருப்பதைப் பொருத்தே உள்ளது.”

     “என்னைத் திரும்ப அடைய முடியாமல் ஏற்படும் நிராசையால், ஸ்ரீராமனும் இலக்குமணனும் மற்ற அனைத்து வானர, கரடி இனத்தவர் அனைவருடனும் உயிர்த்தியாகம் செய்து விடுவார்கள்.”

     “மிகச் சிறப்பு வாய்ந்த வானரனே! என்னுடைய கணவன் மீது கொண்ட அளவற்ற பக்தியினால் வேறு மனிதர்களின் உடலை நான் தீண்ட விரும்புவதில்லை.”

     “இராவணனின் உடலை எனது உடல், அவனது பலாத்காரத்தின் காரணமாகத் தீண்ட நேர்ந்தது. அதற்குக் காரணம் நான் பாதுகாப்பற்ற, செயலற்ற நிலையில் உதவியற்று இருந்ததே ஆகும்.”

     “ஸ்ரீராமன் இங்கு வந்து பத்துத் தலைகளுடைய இராவணனை அவனுடைய கூட்டத்தோடு அழித்து என்னை இங்கிருந்து அழைத்துச் செல்வதே ஏற்புடையதாக இருக்கும்.”

     “போர்க்களத்தில் பகைவர்களை வேட்டையாடும் ஸ்ரீராமனின் வல்லமையை நான் நேரில் பார்த்தும், கேட்டும் உள்ளேன்.  தேவர்கள், கந்தர்வர்கள், நாகர்கள் அரக்கர்கள் அனைவரும் சேர்ந்து வந்தாலும் ஸ்ரீராமனுக்கு ஈடாக மாட்டார்கள்.”

      “போர்க்களத்தில் அற்புதமான வில்லைத் தாங்கிய வண்ணம், இந்திரனின் வலிமைக்கு ஈடாக, இலக்குமணனுடன் ஸ்ரீராமன் நின்று கொண்டு , காற்றின் வேகத்துடனும் அக்னியின் வெப்பத்துடனும் போர் புரியும் போது யார் எதிர்த்து நிற்க முடியும்?”

     “வானர வல்லவனே! பிரளய காலத்துச் சூரியனின் கதிர்களைப் போல பிரகாசிக்கும் அம்புகளை மழை போலப் பொழியச் செய்து, பூமியைத் தாங்கி நிற்கும் மதங்கொண்ட யானையைப் போல, இலக்குமணனுடன் நின்று போர் புரியும் ஸ்ரீராமனை எதிர்க்க வல்லவர் யாருமுண்டோ?”

      “சிறந்த வானரனே! நீ முயற்சி செய்து படைத்தலைவன் சுக்ரீவன் மற்றும் இலக்குமணனுடன் என்னுடைய அன்பிற்குரிய ஸ்ரீராமனை இங்கே அழைத்துக் கொண்டு வா.  ஸ்ரீராமனைப் பிரிந்து நெடுங்காலமாகத் துயரத்தில் இருக்கும் எனக்கு அதனால் மகிழ்ச்சியை உண்டாக்குவாயாக!”

                     முப்பத்தேழாவது ஸர்கம் நிறைவு

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...