Wednesday, October 11, 2023

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம். முப்பத்தெட்டாவது ஸர்கம்.

 

            ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம்.

                         முப்பத்தெட்டாவது ஸர்கம்.





     சீதையின் வார்த்தைகளைக் கேட்ட சொல்லின் செல்வரும், புலியை நிகர்த்த வலிமையுடையவரும், வானர வீரருமான அனுமன் திருப்தியடைந்தார். அவர் சீதையிடம் இவ்விதம் சொல்லலானார்.

     “காண்போருக்கு மகிழ்ச்சி தரும் தேவீ! நீங்கள் சொன்னவை உங்கள் இயல்பிற்கேற்றவை. பெண்களுக்கு உரித்தான பண்பு நலன்களுடன் கூடிய கற்பிற்சிறந்த பெண்களின் பணிவான பேச்சுக்கள் இவை!”.

     “நூறு யோஜனை அகலமுள்ள பெருங்கடலை, என் முதுகில் அமர்ந்து கொண்டு கடந்து செல்வது ஒரு பெண்ணான உங்களால் இயலாத செயல் தான்.”

     “ஜனக குமாரி! ஸ்ரீராமனைத் தவிர பிற ஆடவரைத் தொடுவதில்லை என்ற உங்களது இரண்டாவது காரணம் மிகவும் ஏற்புடையது.  பணிவு நிரம்பிய தேவி! ஸ்ரீராமனின் மனைவியின் வாயிலிருந்து மட்டுமே இப்படிப் பட்ட வார்த்தைகள் வெளிப்பட இயலும். உங்களைத் தவிர வேறு பெண்ணால் இவ்விதம் பேச இயலுமா?”

     “தேவீ! என் முன்னே நீங்கள் சொல்லிய அனைத்தையும் ஒன்று விடாமல் காகுத்த குல திலகமான ஸ்ரீராமனிடம் சொல்வேன்.”

     “தேவீ! நான் தங்களிடம் கூறிய வழிமுறைகளுக்குப் பலவிதமான காரணங்கள் உண்டு.  ஸ்ரீராமனின் மீதுள்ள அன்பின் காரணமாக, அவரைத் திருப்திப் படுத்தவே மேற்கண்டவாறு நான் பேசினேன்.”

     “கடக்க முடியாத பெருங்கடலைக் கடந்து, நுழைய முடியாத இலங்கைக்குள் நுழைய முடிந்த என் திறமையின் மீது வைத்த நம்பிக்கையின் காரணமாகவே தங்களைச் சுமந்து செல்லும் யோசனையைக் கூறினேன்.”

     “என் குருவான ஸ்ரீராமனின் மீதுள்ள அளவற்ற அன்பினாலும், பக்தியினாலும், இன்றே உங்களை ஸ்ரீராமனிடம் கொண்டு சேர்க்க விருப்பம் கொண்டேன்.  இதைத் தவிர வேறு எந்த எண்ணமும் எனக்கில்லை.”

     “குற்றங்கள் ஏதுமற்ற தேவீ! என்னுடன் வருவதற்கு உங்களுக்கு விருப்பம் இல்லாத நிலையில், உங்களை நான் சந்தித்ததை ஸ்ரீராமனிடம் சொல்வதற்கு வசதியாக உங்கள் உடமைகளில் எதாவது ஒன்றைத் தாருங்கள்.

     தேவ கன்னிகை போன்று ஒளி பொருந்திய சீதை, அனுமன் சொன்னவற்றைக் கேட்ட பிறகு, கண்களில் நீர் தளும்ப, கேவலுடன் மெதுவான குரலில் பதில் சொல்லலானாள்.

     “வானர உத்தமனே! நான் சொல்லும் இதை அடையாளமாக என் அன்புக்குரியவரிடம் சொல்வாயாக! சித்ர கூட மலையின் வட கிழக்குப் பகுதியில், மந்தாகினி ஆற்றின் மிக அருகில் சித்தாஸ்ரமத்தில் நாங்கள் தங்கியிருந்தோம்.  கிழங்கு வகைகளும், பழங்களும் நீர் நிலைகளும் நிறைந்து விளங்கிய தோட்டத்தில் பலவிதமான வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கி நறுமணம் பரப்பின.  என்னுடன் நீர் நிலைகளில் விளையாடிய என் கணவர், ஈரமான உடைகளுடன் என் மடியில் வந்து அமர்ந்து விட்டார்.”

     “ஒரு சமயம், மாமிசத்தை விரும்பி உண்ணும் காகம் ஒன்று என் மீது அமர்ந்து என் அங்கங்களைக் கொத்தத் தொடங்கியது. நான் மண் உருண்டைகளை எறிந்து அதை விரட்டினாலும் மீண்டும் மீண்டும் என்னைக் கொத்துவதும், மறைந்து கொள்வதுமாகவும் இருந்தது.  யாகங்களில் இடப்படும் பலிகளை உண்ணும் பழக்கமுள்ள அந்த காகமானது என்னைக் கொத்துவதை நிறுத்தவில்லை.”

       (தனக்கும் இராமனுக்கும் இடையே நிகழ்ந்ததை  நிகழ்ந்த வண்ணம் சீதை நினைவுகூறுதல்: இராமனிடம் பேசுவது போல சொல்லப்பட்டுள்ளது)

     “காகத்தின் மீது கோபம் கொண்ட நான் என் இடையில் இருந்த கயிற்றை அவிழ்த்து காகத்தை விரட்ட முயற்சி செய்தேன்.  அதனால் என் உடை அவிழும் நிலை ஏற்பட்டது. அதே சமயம் நீங்கள் என்னைப் பார்த்துச் சிரித்து விட்டீர்கள்.”

     “உடனே நீங்கள் என்னைப் பரிகாசம் செய்ய, முதலில் கோபம் கொண்ட நான், வெட்கமுற்றேன்.  உணவில் விருப்பம் கொண்ட அந்த காகம் மீண்டும் என்னைக் கொத்த, நான் அந்த நிலையிலேயே உங்களிடம் வந்தேன்.”

     “காகத்தின் செய்கையால் களைப்புற்ற நான், அமர்ந்திருந்த உங்களின் மடியில் வந்து அமர்ந்தேன்.  அதனால் மகிழ்வுற்ற நீங்கள், கோபமுடன் இருந்த என்னைச் சமாதானம் செய்தீர்கள்.”

     “நாதனே! காகத்தின் செயலால் கோபமுற்றிருந்த நான், எனது கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை மெதுவாகத் துடைத்துக் கொண்டேன்.  நீங்கள் அதனைக் கவனித்து விட்டீர்கள்.”

(இப்பொழுது அனுமனிடம் சீதை சொல்வது தொடர்கிறது).

     “அனுமனே! மிகவும் களைப்புற்றிருந்த நான் நெடுநேரம் ஸ்ரீராமனின் மடியில் தலைவைத்து உறங்கினேன்.  பரதனின் மூத்த சகோதரனான ஸ்ரீராமனும் நான் எழுந்த பிறகு என் மடியில் தலை வைத்து உறங்கினார்.”

     “ஸ்ரீராமனின் மடியிலிருந்து நான் தூங்கி எழுந்தவுடன் அந்த காகம் மீண்டும் அங்கு வந்தது.  உடனே அது பறந்து வந்து என் மார்பின் மீது தன் அலகினால் கொத்தத் தொடங்கியது.  பறந்து பறந்து வந்து மீண்டும் மீண்டும் என் மார்பகங்களில் தன் அலகினால் கொத்தியது.  காயத்திலிருந்து வழிந்த இரத்தத் துளிகள் மடியில் படுத்திருந்த ஸ்ரீராமன் மீது விழுந்து அவரை நனைக்க,  அவரின் உறக்கம் கலைந்தது.”

     “சுகமான உறக்கத்தில் இருந்த, பகைவர்களை விரட்டியடிக்கும் வல்லமை வாய்ந்த ஸ்ரீராமன் என்னுடைய நிலைமையின் காரணமாக உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தார்.”


     “தோள் வலிமை மிக்க ஸ்ரீராமன், என் மார்பகங்களில் இருந்த காயங்களைப் பார்த்து மிகுந்த சினம் கொண்டார்.  சினம் கொண்ட விஷப் பாம்பைப் போல சீற்றத்துடன், பெருமூச்சு வாங்கிய வண்ணம் பேசினார்.”

     “யானையின் துதிக்கை போன்ற வடிவழகு மிக்க தொடைகளைக் கொண்ட சீதையே! உன்னுடைய மார்பகங்களில் காயம் உண்டாக்கியது யார்? கோபம் கொண்ட ஐந்து தலைப் பாம்புடன் யார் விளையாட விரும்புவது?” என்றார்.

     “எல்லாத் திசைகளிலும் பார்வையைச் செலுத்திய ஸ்ரீராமன், காலில் இரத்தக் கறைகளோடு கூடிய, கூரிய நகங்களுடன் என்னைப் பார்த்தவாறு அமர்ந்திருந்த காகத்தைப் பார்த்தார்.”

     “பறவையினங்களில் சிறந்ததும், இந்திரனின் மகனுமான அந்தக் காகம், காற்றின் வேகத்தில் வெகு தூரம் கடந்து இங்கு வந்திருந்தது.”

     “அறிவிற்சிறந்தவரும்,தோள் வலிமை மிக்கவருமான ஸ்ரீராமனின் கண்கள் கோபத்தில் சுழன்றன.  அந்தக் காகத்திற்குக் கொடிய தண்டனை அளிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.”

     “ஸ்ரீராமன் தன் தர்பைப் படுக்கையில் இருந்து ஒரு தர்ப்பையை உருவினார். பிரம்மாஸ்திரத்திற்கான மந்திரத்தை ஜபித்ததும், அந்தத் தர்ப்பையானது உயிரினைக் கொல்லும் நெருப்புப் போல ஒளிரத் துவங்கியது.  அவர் அதை அந்தக் காகத்தை நோக்கிச் செலுத்தினார்.”

     “அந்த எரியும் தர்ப்பையை ஸ்ரீராமன் காகத்தை நோக்கிச் செலுத்தியதும் அது அந்தக் காகத்தைப் பின் தொடர்ந்து விரட்டிச் சென்றது.”

     “அந்தத் தர்ப்பைப் பாணத்தினால் பயந்த காகம், இந்த உலகத்தில் பல்வேறு இடங்களில் தஞ்சம் அடைந்து தப்ப முயற்சித்தும், அந்த அம்பானது அந்தக் காகத்தை விடாது பின் தொடர்ந்தது.”

     “மூன்று உலகங்களிலும் பறந்து அலைந்த அந்தக் காகம், அதனுடைய தந்தை, தேவர்கள், மற்றும் முனிவர்கள் அனைவராலும் நிராகரிக்கப்பட்டது.” இறுதியில் தன்னைக் காக்கும் படி ஸ்ரீராமனிடமே அடைக்கலம் புகுந்தது.”

     “காகுத்த குலத் திலகமான ஸ்ரீராமன், தன்னிடம் அடைக்கலம் தேடி, பூமியில் வந்து விழுந்த காகத்திடம் கருணை கொண்டார்.  கொல்லத் தகுந்த செயலைச் செய்திருந்தாலும் அந்தக் காகத்தைக் காப்பாற்றினார்.”

     “பல்வேறு இடங்களில் அலைந்து திரிந்த வலியினாலும் சோர்வினாலும் தன் முன்னே வந்து விழுந்த அந்தக் காகத்தைப் பார்த்து ஸ்ரீராமன், “செலுத்தப்பட்ட பிரம்மாஸ்த்திரத்தை, அது தன் இலக்கை அடையாமல் திரும்பப் பெற இயலாது.  ஆகவே, இந்த அஸ்திரத்தால் உன்னுடைய உடலின் எந்தப் பகுதி தாக்கப் பட்டும் என விரும்புகிறாய்?” என்று கேட்டார்.”

     “காகத்தின் விருப்பப்படி அந்த அஸ்திரத்தால் காகத்தின் வலது கண் குருடாக்கப்பட்டது.  தன் வலது கண்ணின் பார்வையை இழந்து அந்தக் காகம் தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டது.”

     “அந்தக் காகம் ஸ்ரீராமனையும் அவரது தந்தையாரான மகாராஜா தசரதனையும் வணங்கி விட்டு, பெரும் வீரான ஸ்ரீராமனின் அனுமதியுடன் விடை பெற்றுக் கொண்டு, தன் இருப்பிடம் திரும்பிச் சென்றது.”

(மீண்டும் சீதை இராமனிடம் நேரில் பேசுவது போல் சொல்லத் தொடங்குகிறாள்.)

     “அன்பிற்குகந்த மாவீரனே! சிறு துஷ்டச் செயல் புரிந்த காகத்தின் மீது பிரம்மாஸ்திரத்தை ஏவிய நீங்கள், என்னை உங்களிடமிருந்து அபகரித்துச் சென்றவனை ஏன் மன்னித்து விட்டீர்கள்?”

     “மனித குலத்தின் மிகச் சிறந்தவரே! பெரும் ஆர்வத்துடன் என் மீது கருணை கொள்ளுங்கள்.  எப்பொழுதும் உங்களுடனேயே உறைந்திருக்கும் சீதையானவள், இன்று அனாதை போல ஆகி விட்டாள்.”

     “கருணை காட்டுதல் என்பது மிகப் பெரிய அறம் என்பதை நான் உங்கள் மூலமே அறிந்துள்ளேன்.  உங்களது வலிமை, வீர, தீர, பராக்ரமம், பேரார்வம் அனைத்தையும் நான் அறிவேன்.”

     “எல்லையற்ற ஆற்றல் மிக்க உங்களை அசைத்துப் பார்க்கவோ, வெற்றி கொள்ளவோ யாராலும் இயலாது.  நீங்கள் மிகப் பெரிய ஆழ் கடலைப் போன்ற கம்பீரம் கொண்டவர். அந்தக் கடலுக்கும் பூமிக்கும் தலைவராக விளங்கும் நீங்கள் இந்திரனைப் போன்ற வலிமை மிக்கவர்.”

     “இராகவா! ஆயுதங்களை இது போல் உபயோகப்படுத்துபவர்களுள் உத்தமமானவரும், வலிமை மிக்கவரும், ஆற்றல் மிக்கவருமாக நீங்கள் இருந்த போதிலும், இந்த அரக்கர்கள் மீது ஏன் ஆயுதங்களைப் பிரயோகிக்கவில்லை?”

     (இப்பொழுது அனுமனிடம் பேசுகிறாள்.)

     “ஸ்ரீராமனுடைய தாக்குதலின் வேகத்திற்கு முன், நாகர்களோ, கந்தர்வர்களோ, தேவர்களோ அல்லது மருத கணங்களோ யாராயினும் போர்க்களத்தில் எதிர்த்தாக்குதல் நடத்த இயலாது.”

     “இவ்வளவு அதிக ஆற்றல் கொண்ட ஸ்ரீராமன் மனதில் என்னைப் பற்றி சிறிதளவாவது கவலை இருக்குமானால், தன்னுடைய கூரிய அம்புகளால் இந்த அரக்கர்களை ஏன் அழிக்காமல் இருக்கிறார்?”

     “அல்லது, எதிரிகளுக்கு அழிவைக் கொடுக்க வல்ல மிகவும் வலிமை வாய்ந்த இலக்குமணன், தன் அண்ணனின் உத்தரவைப் பெற்று, என்னைக் காப்பாற்ற ஏன் வரவில்லை?”

     “சிங்கங்களை நிகர்த்த அந்த இருவரும் காற்றுத் தேவனுக்கும் இந்திரனுக்கும் இணையான வலிமை மிக்கவர்கள்.  தேவர்களாலேயே அவர்களை வெற்றி கொள்வது என்பது இயலாது.  அவ்வாறு இருக்கையில் என்னைப் பற்றி ஏன் கவலை கொள்ளவில்லை?”

     “நான் ஏதோ மிகப் பெரிய பிழை இழைத்திருக்க வேண்டும் என்பதில் ஐயம் ஏதுமில்லை.  இல்லையென்றால் பகைவர்களை அழித்தொழிக்கும் வல்லமை பெற்ற அந்த இருவரும் ஏன் என் மீது கருணை காட்டவில்லை?”

     கண்களில் கண்ணீர் பெருக, பெரும் இரக்கம் கொள்ளத்தக்க வார்த்தைகள், வைதேஹியின் வாயிலிருந்து வெளி வந்ததைக் கேட்ட பெரும் வீரனான வாயுகுமாரன் அனுமன் இவ்வாறு மறுமொழி கூறினார்.

     “தேவீ! ஸ்ரீராமன் தங்களைப் பிரிந்த துயரத்தில் வேறு எந்தச் செயலிலும் ஈடுபாடு கொள்ளாமல் இருக்கிறார் என்பதனை நான் சத்தியத்தின் மீது ஆணையிட்டுக் கூறுவேன்.  எப்பொழுதும் துயரத்தில் இருக்கும் ஸ்ரீராமனைக் காணும் இலக்குமணனும் துயரமாகவே உள்ளார்.”

     “அரும்பாடுபட்டு நான் தங்களைத் தரிசித்துள்ளேன்.  இது நீங்கள் துயரம் கொள்ளும் சமயமில்லை.  இனி இந்தக் கணத்திலிருந்து உங்கள் துயரங்கள் எல்லாம் விலகிச் செல்லப் போவதைக் காணப் போகின்றீர்கள்.”

     “சிங்கங்களையொத்த அந்த இரண்டு அரச குமாரர்களும் மிகவும் வலிமை மிக்கவர்கள்.  தங்களைக் காண வேண்டி மிகவும் ஆவலில் உள்ளனர்.  ஆகையினால் எதிர்த்து வரும் அரக்கர் குலத்தையே எரித்துச் சாம்பலாக்கி விடுவர்.”

     “அகன்ற விழிகளையுடைய தேவீ! போர்க்களத்தில் கொடூரமான இராவணனை, அவனுடைய உறவினர்கள் அனைவருடனும் தோற்கடித்து தங்களைத் தன்னுடன் ஸ்ரீராமன் தன் சொந்த நாட்டிற்கு அழைத்துச் செல்வார்.”

     “இப்பொழுது நீங்கள், ஸ்ரீராமன், வலிமை மிக்க இலக்குமணன், ஒளி பொருந்திய சுக்ரீவன் மற்றும் அங்கு கூடியிருக்கும் வானர வீரர்கள் ஆகியோருக்குச் சொல்ல விரும்பும் செய்தியைச் சொல்லலாம்.”

     இவ்வாறாக அனுமன் பேசியதைக் கேட்ட சீதை, அனுமனைப் பார்த்து, “சிறந்த வானர வீரனே! கெளசல்யாவின் வயிற்றில் உதித்த, இந்த உலகம் அனைத்திற்கும் தலைவனான ஸ்ரீராமனுக்கு என் சிரந்தாழ்ந்த வணக்கங்களைத் தெரிவித்து அவரது நலன்களைக் கேட்டறிவாயாக” என்றாள்.

     தொடர்ந்து சொன்ன சீதை, “இந்த உலகத்திலேயே கிடைத்தற்கரிய செல்வங்களையும் விதவித மான இரத்தின மாலைகளையும் அழகிய பெண்களையும் தியாகம் செய்து விட்டு, தந்தை தாயை, சமாதானம் செய்து அவர்களுக்குத் தக்க மரியாதை செய்து, சுமித்திரைக்கு நல்ல பிள்ளையைப் பெற்றவளென்ற நற்பெயரை உருவாக்கிக் கொடுத்த இலக்குமணன், ஸ்ரீராமனுடன் காட்டிற்கு வந்தான். “

     “மிகச் சிறந்த இன்பங்களைத் துறந்துவிட்டு, அறவழியில் நடக்கும் இலக்குமணன், தன் தமையனுக்குப் பணிவிடை செய்யும் பொருட்டு, காகுத்தனான ஸ்ரீராமனுடன் காட்டிற்குச் சென்றான்.”

     “சிங்கத்தின் புஜங்களையொத்த வலிமை மிக்க தோள்களை உடையவனும், பெருஞ்சக்தி படைத்த கைகளைக் கொண்டவனும், மிக அழகிய வடிவம் கொண்டவனுமான இலக்குமணன் என்னைத் தாயாகவும், ஸ்ரீராமனைத் தந்தையாகவுமே கருதினான்.”

     “நான் கவர்ந்துசெல்லப்பட்டதை, இலக்குமணன் அறிந்திருக்கவில்லை.  பெரியவர்களுக்குப் பணிவிடை செய்வதில் விருப்பமுள்ள பெருமை வாய்ந்த இலக்குமணன், அதிகம் பேசுவதில்லை.  அரசகுமாரனும், அனைவருக்கும் விருப்பமானவனுமான இலக்குமணன், என் மாமனாரான தசரத மாமன்னருக்கு இணையானவன்.”

     “தன் சகோதரனான இலக்குமணனிடத்தில், ஸ்ரீராமனுக்கு என்னை விட அன்பு அதிகம்.  பெரும் வீரனான இலக்குமணன், தனக்கு இடப்பட்ட பணி எதுவாகினும், துணிந்து அதை முடிப்பான்.”

     “இலக்குமணனைப் பார்த்துக் கொண்டிருந்தால், ஸ்ரீராமனுக்குத் தன் தந்தை மறைந்து விட்ட நினைவே வருவதில்லை.  அப்படிப்பட்ட இலக்குமணனிடம் எனது அன்பான விசாரிப்புக்களைக் கூறவும்”

     “மிகச் சிறந்த குணங்களை உடையவனும், குறையற்றவனும், ஸ்ரீராமனுக்குப் பிரியமானவனுமான இலக்குமணன், என்னைக் காப்பாற்றும் இந்தச் செயலில் சிறப்புடன் ஈடுபடும் வண்ணம் என்னுடைய வார்த்தைகளை அவனிடம் தெரிவிப்பாயாக!”

     “வானரத் திலகமே! இங்கு நடைபெற்ற எல்லா செயல்களுக்கும் நீயே சாட்சியாய் விளங்குகிறாய்.  உன்னுடைய சொல்லும், செயலுமே ஸ்ரீராமனுக்கு என்னைக் காப்பாற்றும் செயலில் பெரும் உற்சாகத்தை அளிக்கும்.”

     “வீரமிக்க என் கணவனான ஸ்ரீராமனிடம், எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஒரு மாத கெடுவிற்கு மேல் நான் சத்தியமாக உயிர் தரிக்க மாட்டேன் என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்!”

     “எவ்விதம் இந்திரனிடமிருந்து அபகரிக்கப்பட்ட செல்வத்தைப், பாதாள உலகத்திலிருந்து மகாவிஷ்ணு மீட்டு வந்தாரோ, அதைப் போல, இந்த வஞ்சகனான இராவணனின் பிடியிலிருந்து என்னை ஸ்ரீராமன் மீட்டுச் செல்ல வேண்டும்.”

     இவ்விதம் பேசியபடியே, தனது உடையில் முடிந்து வைத்திருந்த, சிறப்பு வாய்ந்த சூடாமணி என்னும் அணிகலனை அனுமனிடம் தந்த சீதை, “இதை ஸ்ரீராமனிடன் சேர்ப்பித்து விடு!” என்று சொன்னாள்.

     சீதையிடமிருந்து பெற்றுக்கொண்ட அதி உத்தமமான அந்த அணிகலனை, அனுமன் தன் கை விரலில் அணிந்து கொண்டார். ஆனால் அது அவரது விரல்களில் பொருந்தாமல் இருந்தது. (அவர் மிகச் சிறிய வடிவம் கொண்டிருந்தார்.)

     சிறந்த மணிரத்னத்தைப் பெற்றுக் கொண்ட அனுமன் சீதையைப் பணிவுடன் வணங்கி, அவரை வலம் வந்து வணங்கி, அவரது அருகில் நின்றார்.

     சீதையைக் கண்டுவிட்ட பெரு மகிழ்ச்சியில் திளைத்த அனுமன், மனதளவில் ஸ்ரீராம, இலக்குமணர்களை சென்று அடைந்து விட்டார். அவரது உடல் மட்டுமே அங்கிருந்தது.  

     “ஜனகனின் மகளாகிய சீதையிடமிருந்து அந்த விலை மதிப்பற்ற சூடாமணியைப் பெற்றுக் கொண்டதுமே, அனுமன் பெரும் காற்றின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட பெரும் மலை அசைவது போல, தன் பயணத்தைத் தொடர முயற்சி செய்தார்.”

 

                    முப்பத்தெட்டாவது ஸர்கம் நிறைவு.

No comments:

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...