ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம்.
முப்பத்தேழாவது
ஸர்கம்.
முழு நிலவினையொத்த பொலிவுடன் விளங்கும்
முகம் கொண்ட சீதை, அனுமன் கூறிய வார்த்தைகளைக் கேட்டு விட்டு, அறமும் பொருளும் நிறைந்த
வார்த்தைகளைப் பேசினாள்.
“ஓ
வானரமே! ஸ்ரீஇராமன் என்னைத் தவிர வேறு சிந்தனையில்லாமல் துயரத்தில்
மூழ்கிக் கிடப்பதாய் நீ கூறிய வார்த்தைகள், விஷம் கலந்த அமிர்தம் போல
எனக்குத் தோன்றுகிறது.”
“அளப்பரிய செல்வ
வளத்தில் திளைத்துக் கொண்டிருந்தாலும், மிகக் கொடிய துயரத்தில் உழன்று கொண்டிருந்தாலும்,
மரணமானது கயிற்றில் கட்டி இழுத்துச் செல்வது போல இழுத்துச் சென்று விடுகிறது.”
“வானர திலகமே!
தெய்வம் விதித்ததை மனிதனால் மீற இயலாது. இலக்குமணனோ,
நானோ, ஸ்ரீராமனோ துயரத்தால் பீடிக்கப்பட்டுள்ளதை நீயே காண்பாய்.”
“கடலில் மூழ்கிய
கப்பலிலிருந்து ஒருவன் எவ்விதம் நீந்திக் கரை சேருவானோ, அதைப் போல ஸ்ரீராமன், எப்பொழுது
இந்தத் துயரக்கடலை நீந்திக் கரை சேருவார்?”
“அரக்கர்களை
அழித்து, இராவணனை வதம் செய்து, இலங்கையை நிர்மூலம் ஆக்கும் வேலையை என் கணவர் எப்போது
செய்வார்?”
“அவரிடம் சென்று
இங்கு விரைந்து வரச் சொல்! இந்த வருடம் முடியும் வரை மட்டுமே நான் உயிருடன் இருப்பேன்.”
“இரக்கமற்ற இராவணனால்
எனக்குக் கொடுக்கப்பட்ட கெடுவில் பத்து மாதங்கள் கழிந்து விட்டன. இன்னும் இரண்டு மாதங்களே மீதம் உள்ளன.”
“இராவணனின் தம்பியான
விபீஷணன், என்னைத் திருப்பி அனுப்பிவிடுமாறு பலவிதமாக எடுத்துச் சொல்லியும், அதைச்
செய்யும் எண்ணம் இராவணனுக்கு இல்லை.”
“என்னைத் திருப்பி
அனுப்பி விடும் எண்ணம் இராவணனுக்குப் பிடிக்கவேயில்லை. ஏனென்றால், போர்க்களத்தில் அவன் உயிரை விடவேண்டும்
என்ற காலனின் வலையில் அவன் சிக்கி விட்டான்.”
“ஏ வானர வீரனே!
விபீஷணனின் மூத்த மகளான அனலையை, அவளது தாயே ப்ரத்யேகமாக என்னிடம் அனுப்பி இந்தத் தகவலைச்
சொல்லச் சொன்னாள்.”
“இராவணனின் நன்மதிப்பைப்
பெற்ற அவிந்த்யன் என்னும் வயதான அரக்க வீரன் உள்ளான். அவன் மிகவும் புலமை மிக்க அறிவாளி. வீரம் மிக்கவன். பண்பு நிறைந்தவன். ஸ்ரீஇராமனின் கரங்களால் அரக்கர்கள் அழியும் காலம்
நெருங்கி விட்டது. ஆகவே என்னைத் திருப்பி அனுப்பி
விடும்படி அவன் இராவணனின் நன்மை கருதிச் சொன்ன வார்த்தைகளையும் அவன் கேட்க வில்லை”.
“வானர வீரனே!
என் கணவர் விரைவில் என்னைச் சந்திப்பார் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. ஏனென்றால் என் உள்ளம் தூய்மையானது. ஸ்ரீராமனின் மிகச் சிறந்த குணங்களை அது அறியும்.”
“வானரமே! ஸ்ரீராமனிடத்தில்
உற்சாகம், ஆண்மை, வலிமை, இரக்கம், கருணை,பெரும் வீரம் மற்றும் உத்வேகம் ஆகிய அனைத்து
குணங்களும் உள்ளன.”
“தண்டகாரண்யத்தில்,
தனது சகோதரனின் உதவியில்லாமலேயே, பதினான்காயிரம் அரக்கர்களைக் கொன்றழித்த ஸ்ரீஇராமனை
எண்ணி, எந்தப் பகைவர் தான் அச்சம் கொள்ளாதிருப்பர்?”
“ஆண்களிற் சிறந்தவரான
ஸ்ரீராமன் இன்னல்களால் மனக் கலக்கம் அடைந்து விட மாட்டார் என்பது திண்ணம். புலோமாவின் மகளான சசி எவ்விதம் இந்திரனின் திறமைகளை
அறிந்திருந்தாளோ, அவ்விதமே ஸ்ரீராமனின் திறமைகளை நான் அறிவேன்.”
“வானரமே! சூரியனுக்கு
இணையான ஸ்ரீராமனின் அம்புகள், கடல் போல விரிந்திருக்கும் அரக்கர் படையை, சூரிய ஒளிக்
கிரணங்களாய்க் காய்ந்து வற்றச் செய்து விடும்.”
இவ்விதமாகப்
பேசிய சீதையின் முகத்தில் ஸ்ரீராமனை நினைத்துக் கண்ணீர் பெருக்கெடுத்தோடியது. அப்பொழுது அனுமன் அவரிடம் சொன்னார்.
“என்னிடமிருந்து
தகவலைப் பெற்றதுமே ஸ்ரீராமன், வானரர்களும் கரடிகளும் நிறைந்த மிகப் பெரும் படையை அழைத்துக்
கொண்டு இங்கு வருவதற்குப் புறப்பட்டு விடுவார்.”
“குற்றமற்ற தேவீ!
நான் இப்பொழுதே இந்த அரக்கர்களால் படும் துயரத்திலிருந்து உங்களை விடுவித்து விடுகிறேன். தாங்கள் என் முதுகின் மீது ஏறி அமர்ந்து கொள்ளுங்கள்.”
“உங்களை என்
முதுகில் சுமந்து கொண்டு நான் இந்தக் கடலைத் தாண்டி விடுவேன். இராவணனோடு இந்த இலங்கை மாநகரம் முழுவதையுமே தூக்கிச்
செல்லும் ஆற்றல் எனக்குள்ளது.”
“அக்னியானவன்
தனக்குள் ஆஹுதியாய் இடப்படும் ஹவிஸ்களை எவ்வாறு இந்திரனிடம் கொண்டு சேர்க்கின்றானோ,
அதைப் போல ப்ரஸ்ரவன மலை முகட்டில் இருக்கும் ஸ்ரீராமனிடம் தங்களைக் கொண்டு சேர்ப்பேன்.”
“ஓ வைதேஹி! அரக்கர்களை
அழிப்பதில் சர்வ வல்லமையுடன் ஈடுபடும் மகாவிஷ்ணுவைப் போல, ஸ்ரீராமன், இலக்குமணனுடன்
இந்த அரக்கர்களை அழிக்க இப்பொழுது வந்து விடுவார்.”
“தங்களைக் காணும்
ஆவலில், மிகவும் வலிமை மிக்க ஸ்ரீராமன் மலையின் மீதுள்ள தன் ஆஸ்ரமத்தில் அமர்ந்துள்ளது
எவ்விதம் உள்ளதென்றால், யானைகளின் அரசனான ஐராவதத்தின் மீது இந்திரன் அமர்ந்துள்ளது
போல உள்ளது.”
“தேவீ! நான்
கூறியபடி நீங்கள் மறுக்காமல் என் முதுகில் ஏறி அமர்ந்து கொள்ளுங்கள். சந்திரனைச் சந்திக்கும் ரோஹிணி போல் நீங்கள் ஸ்ரீராமனிடம்
சென்று சேருங்கள்.”
“ஸ்ரீராமனிடம்
சென்று சேர வேண்டும் என்று தாங்கள் சொல்லும் போதே, நிலவினைச் சேரும் ரோஹிணியைப் போல
தங்கள் அவரைச் சென்றடைவீர்கள். என் முதுகில்
அமர்ந்து வான் வழியே இந்தப் பெருங்கடலைக் கடந்து விடலாம்.”
“அழகிய தேவீ!
நான் தங்களை இங்கிருந்து அழைத்துச் செல்லும் போது, இந்த இலங்கை மாநகரில் வசிக்கும்
அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் கூட என்னைப் பின் தொடர்ந்து வர முடியாது.”
“நான் எவ்விதம்
இங்கு வந்தேனோ, அவ்விதமே உங்களை அழைத்துக் கொண்டு ஆகாய மார்க்கமாகச் செல்வேன் என்பதில்
எந்த வித ஐயமுமில்லை. நீங்கள் இதைக் காண்பீர்கள்.”
வானரோத்தமனான
அனுமனின் வார்த்தைகளைக் கேட்ட மைதிலி, மிகவும் மகிழ்ச்சியுற்று மயிர்க் கூச்செறிந்தாள். பின் அனுமனைப் பார்த்துக் கூறலானாள்.
“சிறந்த வானர
வீரனான அனுமனே! என்னை அழைத்துக்கொண்டு இவ்வளவு அதிகமான தொலைவை எவ்வாறு கடந்து செல்வாய்? உன்னுடைய வானர இயல்பினாலே, இவ்வளவு கடினமான செயலைத்
துச்சமென்று எண்ணித் துணிந்தாயோ?”
“காளை போன்ற
வலிமை மிக்க வானரமே! இவ்வளவு சிறிய உருவத்தைக் கொண்டுள்ள நீ, என்னுடைய தலைவனான, மானுடப்
பேரரசனான ஸ்ரீராமனிடம் என்னைக் கொண்டு சேர்க்கும் செயலை எவ்விதம் செய்யத் துணிந்தாய்?”
வாயு புத்ரனாகிய
அனுமன், சீதையின் சொற்களைக் கேட்டதும், தன் திறமைக்கு இது இழுக்கு என்று எண்ணத் தொடங்கினார்.
“கரிய விழிகளைக்
கொண்ட வைதேஹியாகிய நீங்கள் என்னுடைய பலத்தையும் திறனையும் அறிந்திருக்க வில்லை. ஆகவே இன்று நான் என் விருப்பப் படி எடுத்துக் கொள்ளும்
என் உண்மையான உருவத்தை நீங்கள் பாருங்கள்.”
இவ்விதமாக எண்ணம்
கொண்ட , பகைவரைக் கொன்றழிக்கும் வலிமை மிக்க அனுமன் அப்பொழுது சீதைக்குத் தன் சுய வடிவடிவத்தைக்
காண்பித்தார்.
மரத்தின் மீதிருந்து
கீழே குதித்த அறிவாற்றல் மிக்க அனுமன், சீதைக்கு நம்பிக்கை உண்டாக்குவதற்காக தன் உருவத்தைப்
பெரியதாக ஆக்கிக் கொள்ளத் துவங்கினார்.
கண்ணிமைக்கும்
நேரத்தில் அவரது உருவமானது, மேரு, மந்தர மலைகளைப் போல வளர்ந்து நின்றது. ஒளிரும் நெருப்புப் பிழம்பாய்த் தோன்றிய அனுமன்
, தன் புதிய உருவத்துடன் சீதைக்கு முன்பு நின்றார்.
பெரும் மலையைப்
போன்று உருவம் கொண்டு, சிவந்த முகத்துடன் நகங்களும் பற்களும் வைரக் கற்கள் போல மின்ன,
பார்ப்பவர் அச்சம் கொள்ளும் வண்ணம் நின்ற அனுமன் வைதேஹியிடம் சொல்லலானார்.
“தேவீ! மலைகள், காடுகள், தோட்டங்கள், கோட்டைகள்,
தோரண வாயில்கள் கொண்ட இலங்கையை வேருடன் பிடுங்கி, அதன் அரசனான இராவணனையும் சேர்த்துத்
தூக்கிச் செல்லக் கூடிய வலிமை என்னிடம் உள்ளது”.
“தேவீ! தங்களுக்கு
என் மீதுள்ள அவநம்பிக்கை பொருளற்றது. திடமான
மனதுடன் இருங்கள். என்னுடன் வந்து இராம இலக்குமணர்களின்
துயரத்தைப் போக்குங்கள்”.
வாயுதேவனின்
சொந்த மகனான அனுமனை, மலை போன்ற பெரிய அகன்ற உருவத்தில் பார்த்த, தாமரையிதழ்களையொத்த
விழிகளைக் கொண்ட ஜனக குமாரி அவனிடம் சொன்னாள்.
“ஓ சிறந்த வானரமே!
உன்னுடைய பலத்தையும் திறமையையும் நான் அறிவேன்.
காற்றைப் போல வேகமும், பெரும் நெருப்பைப் போன்ற மிகச் சிறப்பான ஒளியும் உன்னிடம்
உள்ளன.”
“வானரத் தலைவனே!
ஒரு சாதாரண வானரத்தால், அளவிடமுடியாத பெருங்கடலைக் கடந்து இந்த இடத்திற்கு எவ்விதம்
வந்து சேர முடியும்?”
“என்னைச் சுமந்து
கொண்டு இந்தப் பெருங்கடலை உன்னால் கடந்து விட முடியும் என்பதை நான் அறிவேன். ஸ்ரீராமன் நினைத்த காரியம் தடையின்றி நிறைவேற, சரியாகத்
திட்டமிடல் வேண்டும்.”
“உயர்ந்த வானரமே!
உன்னுடன் நான் வருவது ஏற்புடைய செயலாக இருக்க முடியாது. ஏனென்றால் காற்றைப் போன்ற உன் வேகத்தில் நான் மூர்ச்சையடைந்து
விடுவேன்.”
“கடலின் மீது
மேலே மேலே உயரமான வான் வெளியில் அதிவேகத்தில் நீ பறந்து செல்லும் போது, உன் முதுகிலிருந்து
நான் கீழே விழுந்தாலும் விழுந்து விடுவேன்.”
“கடலினுள் விழுவதினால், அங்கு வாழும் பெரும் திமிங்கிலங்கள், முதலைகள், மற்றும் பெரிய மீன்களுக்கு சிறந்த உணவாக மாறுவதைத் தவிர வேறு வழியில்லை”
“பகைவர்களுக்கு
அழிவை உண்டாக்கும் வீரனே! நான் உன்னுடன் வர இயலாத நிலையில் உள்ளேன். ஒரு பெண்ணை உன்னுடன் அழைத்துச் செல்வது உனக்குத்
தேவையற்ற சுமையாக இருக்கும். ஒரு பெண்ணை அழைத்துச்
செல்லும் உன்னை, அரக்கர்கள் பார்த்தால் நிச்சயம் ஐயம் உண்டாகும்.”
“நீ என்னை அழைத்துச்
செல்வதைக் கண்டால், கொடியவனான இராவணனின் ஆணைப்படி, பயங்கரமான இந்த அரக்க வீரர்கள்,
உன்னைப் பிடிக்கப் பின் தொடர்ந்து வருவார்கள்.”
“என்னை அழைத்துச்
செல்லும் நீ, ஈட்டிகளும் வேல்களும் கொண்ட அரக்கர்களால் சூழப்பட்டு, உன் உயிரையே இழக்கும்
அபாயம் ஏற்பட்டு விடும்.”
“ஆயுதங்கள் எதுவுமின்றி
இருக்கும் உன்னை, பலவிதமான ஆயுதங்களுடன், வான வீதியில் அரக்கர்கள் எதிர்த்துப் போர்
புரிவார்கள். அவர்களிடம் இருந்து என்னைக் காக்கும்
பணியும், அவர்களை எதிர்த்துப் போரிடும் பணியும் ஆக இரண்டு பணிகளையும் எவ்விதம் உன்னால்
செய்ய முடியும்?”
“சிறந்த வானர
வீரனே! கொடுஞ்செயல் புரியும் அரக்கர் கூட்டத்துடன் நீ தீவிரமாகப் போர் புரியும் போது
அச்சமடைந்து நான் உறுதியாக உன் முதுகிலிருந்து விழுந்து விடுவேன்.”
“வானரத் திலகமே!
அந்த பயங்கரமான வலிமை வாய்ந்த பெரிய பெரிய அரக்கர்கள் ஒருவேளை , போரில் உன்னை வெற்றி
கொண்டு விடலாம்.”
“அல்லது யுத்தத்தில்
உன் கவனம் முழுவதும் இருக்கும் போது என் மீதுள்ள கவனம் தவறினால், நான் கீழே விழுந்து
விட்டால், அந்தப் பாவிகளான அரக்கர்கள் என்னை மீண்டும் தூக்கிச் சென்று விடுவார்களே?”
“போரில் வெற்றி
தோல்வி என்பதை இன்னாருக்கு என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆகவே என்னை, உன்னிடமிருந்து அந்த ஒழுங்கீனமானவர்கள்
அபகரித்து விடலாம் அல்லது என்னைக் கொன்று விடலாம்.”
“வானர உத்தமனே!
அரக்கர்களிடம் மீண்டும் அகப்பட்டு அவர்கள் துன்புறுத்தலால் நான் உயிர் விட நேர்ந்தால்,
உனது இந்த எல்லா முயற்சிகளும் பயனற்றதாகி விடும்.”
“ஒருவேளை நீ
அனைத்து அரக்கர்களையும் கொன்று வீழ்த்தி விட்டாலும், அது ஸ்ரீராமனின் புகழுக்குக் களங்கத்தை
உண்டாக்கி விடுமே!”
“இல்லையென்றால்
என்னைத் தூக்கிச் செல்லும் அரக்கர்கள் மிகவும் ரகசியமான இடத்தில் என்னை மறைத்து வைத்து
விட்டால், அது வானரர்களுக்கோ அல்லது ஸ்ரீராமனுக்கோ தெரிய வராமல் போய்
விடும்.”
“இவ்வாறெல்லாம்
நிகழ்ந்து விட்டால் உன்னுடைய இந்த செயல்களெல்லாம் பயனற்றதாகி விடும். ஸ்ரீராமனும் உன்னுடன் இங்கே வருவதே சாலச் சிறந்த
தாகும்.”
“வலிமையான கரங்களை
உடையவனே! பெரும் வீரரான ஸ்ரீராமன், அவருடைய சகோதரர்கள் மற்றும் உன் குலத்தவர்கள் ஆகியோரின்
உயிரும், உன் உயிரும், நான் உயிருடன் இருப்பதைப் பொருத்தே உள்ளது.”
“என்னைத் திரும்ப
அடைய முடியாமல் ஏற்படும் நிராசையால், ஸ்ரீராமனும் இலக்குமணனும் மற்ற அனைத்து வானர,
கரடி இனத்தவர் அனைவருடனும் உயிர்த்தியாகம் செய்து விடுவார்கள்.”
“மிகச் சிறப்பு
வாய்ந்த வானரனே! என்னுடைய கணவன் மீது கொண்ட அளவற்ற பக்தியினால் வேறு மனிதர்களின் உடலை
நான் தீண்ட விரும்புவதில்லை.”
“இராவணனின் உடலை
எனது உடல், அவனது பலாத்காரத்தின் காரணமாகத் தீண்ட நேர்ந்தது. அதற்குக் காரணம் நான்
பாதுகாப்பற்ற, செயலற்ற நிலையில் உதவியற்று இருந்ததே ஆகும்.”
“ஸ்ரீராமன் இங்கு
வந்து பத்துத் தலைகளுடைய இராவணனை அவனுடைய கூட்டத்தோடு அழித்து என்னை இங்கிருந்து அழைத்துச்
செல்வதே ஏற்புடையதாக இருக்கும்.”
“போர்க்களத்தில்
பகைவர்களை வேட்டையாடும் ஸ்ரீராமனின் வல்லமையை நான் நேரில் பார்த்தும், கேட்டும் உள்ளேன். தேவர்கள், கந்தர்வர்கள், நாகர்கள் அரக்கர்கள் அனைவரும்
சேர்ந்து வந்தாலும் ஸ்ரீராமனுக்கு ஈடாக மாட்டார்கள்.”
“போர்க்களத்தில்
அற்புதமான வில்லைத் தாங்கிய வண்ணம், இந்திரனின் வலிமைக்கு ஈடாக, இலக்குமணனுடன் ஸ்ரீராமன்
நின்று கொண்டு , காற்றின் வேகத்துடனும் அக்னியின் வெப்பத்துடனும் போர் புரியும் போது
யார் எதிர்த்து நிற்க முடியும்?”
“வானர வல்லவனே!
பிரளய காலத்துச் சூரியனின் கதிர்களைப் போல பிரகாசிக்கும் அம்புகளை மழை போலப் பொழியச்
செய்து, பூமியைத் தாங்கி நிற்கும் மதங்கொண்ட யானையைப் போல, இலக்குமணனுடன் நின்று போர்
புரியும் ஸ்ரீராமனை எதிர்க்க வல்லவர் யாருமுண்டோ?”
“சிறந்த வானரனே!
நீ முயற்சி செய்து படைத்தலைவன் சுக்ரீவன் மற்றும் இலக்குமணனுடன் என்னுடைய அன்பிற்குரிய
ஸ்ரீராமனை இங்கே அழைத்துக் கொண்டு வா. ஸ்ரீராமனைப்
பிரிந்து நெடுங்காலமாகத் துயரத்தில் இருக்கும் எனக்கு அதனால் மகிழ்ச்சியை உண்டாக்குவாயாக!”
முப்பத்தேழாவது ஸர்கம் நிறைவு


No comments:
Post a Comment