Friday, September 22, 2023

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம். முப்பத்தாறாவது ஸர்கம்.

 

            ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம்.

                            முப்பத்தாறாவது ஸர்கம்.






     பெரும் வீரரான வாயு புத்ர அனுமன், சீதைக்கு மேலும் நம்பிக்கையூட்டும் வண்ணம், இன்னும் கூறலானார்.

     “மரியாதைக்குரிய தேவீ! அறிவிற் சிறந்த இராமனின் தூதுவனான வானரம் நான். இதோ! ஸ்ரீராமனின் பெயர் பொறிக்கப்பட்ட அடையாள மோதிரத்தைப் பாருங்கள்!”

     “தங்களுக்கு நம்பிக்கையூட்டுவதற்காக ஸ்ரீராமனால் என்னிடம் அளிக்கப்பட்ட மோதிரம் இது.  தங்களுக்கு எல்லா நலன்களும் உண்டாகட்டும்.  நீங்கள் அச்சமற்று இருங்கள்.  நீங்கள் அனுபவித்து வரும் துயரங்களுக்கு முடிவு வந்து விட்டது.”





     கணவனின் கை விரலை அலங்கரித்த அந்த ஆபரணத்தை சீதை பார்த்துக் கொண்டே இருந்தாள்.  தன் கணவனே தன்னைக் காண நேரில் வந்து விட்டது போல சீதை அகமகிழ்ந்தாள்.

     ராகுவின் பிடியிலிருந்து மீண்ட நிலவின் ஒளியைப் போல , செவ்வரி யோடிய அகன்ற விழிகளைக் கொண்ட சீதையின் முகம் ஒளிர்ந்தது.

     கணவனிடமிருந்து செய்தியறிந்த இளநங்கையான சீதை, நாணமும் மகிழ்ச்சியும் ஒருங்கே கொண்டாள்.  அனுமனின் நற்செயலால் அகமகிழ்ந்து அவரைப் பாராட்டி மகிழ்வித்தாள்.

     “வானர திலகமே! தனியொருவனாக நீ, இந்த அரக்கர்களின் நகரத்தில் ஊடுருவியுள்ளதால், உனது வீரமும், வலிமையும், அறிவும் மிகவும் மேம்பட்டது.”

     “மிகவும் போற்றத்தகுந்த வலிமையைக் கொண்டிருக்கும் நீ, முதலைகள் போன்ற கொடிய உயிரினங்கள் வசிக்கும் நூறு யோஜனை அகலமுள்ள கடலை, பசுவின் குளம்பினால் உண்டான பள்ளமென்று நினைத்துத் தாண்டிவிட்டாய். உன் செயல் மிகவும் போற்றத் தகுந்தது.”

     “ஒரு காளையை நிகர்த்த வானரமே! நீ சாதாரண வானரமல்ல.  ஏனென்றால் இராவணனை நினைத்து நீ அச்சமோ, ஆச்சர்யமோ கொஞ்சமும் கொள்ளவில்லை.”

     “முற்றும் அறிந்த ஞானியான இராமனின் தூதுவனாக நீ இருக்கும் நிலையில், ஓ! மிகச் சிறந்த வானரமே! நான் உன்னிடம் பேசுவதற்கான எல்லாவித தகுதிகளும் உன்னிடம் உள்ளது.”

     “யாராலும் வெல்ல இயலாத வலிமை கொண்ட இராமன், என்னிடம் அனுப்பும் எந்த வீரனின் வலிமையையும் சோதித்து அறியாமல் இருக்க மாட்டார்.”

     “உண்மையின் வழி நிற்பவரும், அறநெறியாளருமான இராமன் நலமுடன் இருக்கிறார்; சுமித்திரைக்கு மகிழ்ச்சி கொடுக்கும் பெரும் வீரரான இலக்குமணனும் நலமுடன் உள்ளார்; இந்த மகிழ்ச்சியான செய்திகளைக் கேட்க நான் பெரும் நற்பேறு பெற்றுள்ளேன்.”

     “காகுத்த குல திலகமான இராமன், நலமாக இருக்கும் வேளையில், ஊழிக்கால நெருப்பு போல சினம் கொண்டு, கடலால் சூழப்பட்டுள்ள இந்த பூமியை ஏன் எரித்து சாம்பலாக்காமல் உள்ளார்?”

     “இல்லையென்றால் தேவர்களையே வெற்றி கொண்டு தண்டிக்க வல்ல அந்த சகோதரர்கள் இருவரும் இதுவரை அமைதி காப்பது எனது தீ வினையே! என்னுடைய துயரங்களுக்கு இன்னும் முடிவு வரவில்லை என்றே எண்ணுகின்றேன்.”

     “மனிதருள் மேன்மையானவரான ஸ்ரீராமனின் மனதில் சோர்வோ, கலக்கமோ இல்லையல்லவா? மேற்கொண்டு செய்ய வேண்டிய செயல்களுக்கான ஏற்பாடுகளைச் செய்கின்றாரா இல்லையா?”

     “ஸ்ரீராமன் பரிதாபமான நிலையிலோ அல்லது அச்சத்திலோ இல்லையல்லவா? அவர் மோகத்தில் வயப்படவில்லையல்லவா? சிறந்த ஆண்மகனுக்கான செயல்களைச் செய்கின்றார் அல்லவா?”

     “பகைவர்களுக்கு அச்சமூட்டவல்ல ஸ்ரீராமன், நண்பர்களுடன் நட்பு பாராட்டி, சாம, தான வழிகளோடு நின்று விட்டாரா? பகைவர்களை வெற்றி கொள்ள வேண்டி, தான, பேத, தண்டமாகிய மூன்று வழிகளைக் கையாளுகிறாரா?”

     “ஸ்ரீராமன் தான் விரும்பிய வண்ணம் நண்பர்களைப் பெற்றுள்ளாரா? பகைவர்கள் அவரிடம் சரணாகதி அடைந்து அவரிடம் வருகின்றார்களா? நண்பர்களுக்கு உதவிகள் செய்து அவர்களைத் தன்னுடைய நலம் விரும்புபவர்களாக வைத்துள்ளாரா? நண்பர்களால் அவர் நன்மைகள் பெற்றுள்ளாரா?”

     “அரசகுமாரனான ஸ்ரீராமன், தேவர்களை வணங்கி, அவர்களது ஆசிகளைப் பெற விரும்புகிறாரா? தன்னுடைய வலிமை மற்றும் தெய்வங்களின் கருணை இரண்டிலும் அவர் நம்பிக்கை கொண்டுள்ளாரா?”

     “நான் இராமனை விட்டுப் பிரிந்திருப்பதால் அவருக்கு என் மீது அன்பு குறைந்து விட்டதா? என்னுடைய துயரத்திலிருந்து எப்பொழுது என்னை மீட்பார்?”

     “எப்பொழுதும் சுகத்தையே அனுபவிக்கும் தகுதி வாய்ந்தவரான ஸ்ரீராமன் இப்பொழுது துயரத்தை அனுபவிப்பதால் மனம் உடைந்து விட்டாரா?”

     “கெளசல்யா, சுமித்ரா மற்றும் பரதன் ஆகியோரைப் பற்றிய நல்ல செய்திகள் அவருக்குத் தொடர்ந்து கிடைத்து வருகின்றன அல்லவா?”

     “மரியாதைக்குரிய ஸ்ரீராமன் என் காரணமாக அதிக துயரம் கொண்டுள்ளதால் தன்னை மறந்த நிலையில் உள்ளாரா? என்னை இந்தத் துன்பத்திலிருந்து காத்திடுவாரா?”

     “தன்னுடைய சகோதரன் மேல் பேரன்பு கொண்ட பரதன், என்னைக் காப்பாற்ற வேண்டி அமைச்சர்களால் வழி நடத்தப்படும் பயங்கரமான அக்ஷெளஹினி படையை அனுப்புவாரா?” (அக்ஷெளஹிணி = 109350 காலாட்படை வீரர்கள், 65610 குதிரைப் படை வீரர்கள், 21860 யானைப்படை வீரர்கள் அடங்கியது).

     “தங்களுடைய பற்களையும் நகங்களையும் ஆயுதங்களாகப் பயன்படுத்திப் போரிட வல்ல வானர வீரர்களை அழைத்துக்கொண்டு, வானர அரசன் பெருமை மிக்க சுக்ரீவன் என்னை விடுவிக்க வேண்டி, இங்கு வருவதற்கான இன்னலை மேற்கொள்வாரா?”

     “எப்பொழுதும் சுமித்திரைக்கு மகிழ்ச்சியளிக்க வல்ல மிகச் சிறந்த வீரனான இலக்குமணன் அனைத்துவித ஆயுதங்களை உபயோகிப்பதில் கொண்டுள்ள நிபுணத்துவத்தால், தன்னுடைய அம்புகளை மழை போலப் பொழிந்து அரக்கர் கூட்டத்தை அழித்தொழிப்பாரா?”

     “ஸ்ரீராமனின் நெருப்புப் போன்று தகிக்கும் அஸ்திரங்களால், இராவணன் தன் உற்றார், உறவினர் அனைவருடனும் கூடிய விரைவில் கொல்லப்படுவதை நான் காண்பேனா?”

     “தங்கத்தின் பொலிவுடனும், தாமரை மலரின் நறுமணத்துடனும் துலங்கும் ஸ்ரீராமனின் முகமானது, எனது பிரிவாற்றாமையால், நீர் வற்றிய குளத்தின் தாமரை மலரானது வெப்பத்தால் வாடி விடுவது போல வாடி விட வில்லையே?”

     “தர்மத்தை நிலை நாட்டுவதற்காக, அரசுரிமையைத் துறந்து, என்னை அழைத்துக்கொண்டு, கால் நடையாகவே காட்டிற்குச் சென்ற போது சிறிதும் அச்சமோ, துயரமோ கொள்ளாத ஸ்ரீராமனின் உள்ளத்தில், இந்த இக்கட்டான சூழ்நிலையில் தைரியம் மிக்குள்ளதா?”

     “அவருடைய தாய், தந்தை மற்றும் இதர உறவினர்களிடம் அவர் வைத்துள்ள அன்பைக் காட்டிலும் என்னிடத்தில் அதிக அன்பு வைத்துள்ளார்.  ஓ தூதனே! என்னுடைய அன்பிற்குரியவரிடமிருந்து செய்திகள் அறியும் வரை நான் உயிருடன் இருக்க விழைகின்றேன்”.

     சிறப்பு மிக்க வானரரான அனுமனிடம் பொருள் நிறைந்த, இனிய வார்த்தைகளைக் கூறிய சீதை, ஸ்ரீராமனைப் பற்றிய அனுமனின் வார்த்தைகளை மீண்டும் கேட்பதற்காக அமைதியானாள்.

     சீதையின் வார்த்தைகளைக் கேட்ட பெரும் வீரரான அனுமன், தனது கரங்களைத் தன் தலைக்கு மேலே கூப்பிய வண்ணம் இவ்வாறு பேசினார்.

     “தாமரை மலர்களையொத்த விழிகளைக் கொண்ட ஸ்ரீராமன் நீங்கள் இங்கு இலங்கையில் இருப்பதை அறிந்திருக்கவில்லை.  ஆகவேதான், இந்திரன் தன் மனைவியான சசியைக் காப்பாற்றிக் கொண்டு செல்ல முடிந்தது போல், ஸ்ரீராமனால் உங்களை அழைத்துச் செல்ல முடியவில்லை”

     “நான் இங்கிருந்து சென்று இராமனிடம் செய்தியைச் சொல்லிய உடனே வானரர்களும், கரடிகளும் கொண்ட பெரும் சேனையை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி வருவார்.”

     “காகுத்த குல திலகமான ஸ்ரீராமன் தன் அம்பு மழையால், அலைந்து கொண்டிருக்கும் கடலை அசைவற்று நிற்கச் செய்து, அதைக் கடந்து வந்து, இந்த இலங்கை மாநகரத்து அரக்கர்களை இல்லாது ஓட்டி விடுவார்.”

     “அந்த நேரத்தில் ஸ்ரீராமனின் வழியில் மரணமோ, பிற தேவர்களோ அல்லது பெரிய பெரிய வல்லசுரர்களோ யார் குறுக்கிட்டாலும் அவர்கள் அனைவரையும் வதம் செய்து விடுவார்.”

     “தேவீ! தங்களைக் காண இயலாத துயரத்தில் முழுமையாக அவர் மூழ்கியுள்ளார்.  ஆகவே ஸ்ரீராமனின் நிலைமையானது வலிமையான சிங்கத்திடம் சிக்கிய யானையின் தவிப்பிற்கு ஈடானது.”

     “ஓ தேவீ! எங்கள் இருப்பிடங்களான மந்தர மலை, விந்திய மலை, மற்றும் மேரு மலை, தர்துர மலை ஆகிய யாவற்றின் மீதும், அவற்றில் விளையும் கனி, கிழங்குகள் மீதும் ஆணையிட்டுச் சொல்கிறேன்.  விரைவிலேயே அழகிய விழிகளையும், கோவைப் பழம் போன்ற உதடுகளையும், காதுகளில் அழகிய குண்டலங்களையும் கொண்ட, முழு நிலவினையொத்த ஸ்ரீராமனின் முகத்தைக் காண்பீர்கள்.”

     “ஐராவத யானையின் முதுகில் ஏறி அமர்ந்திருக்கும் இந்திரனைப் போல, ப்ரஸ்ரவன மலையின் உச்சியில் அமர்ந்திருக்கும் ஸ்ரீராமனைக் கூடிய விரைவில் காண்பீர்கள்.”

     “புலால் உணவையோ, மது வகைகளையோ ஸ்ரீராமன் ஒரு போதும் தொடுவதில்லை.  நான்கு வேளை உபவாசமிருந்து, ஒரு வேளை மட்டுமே தர்மத்திற்குட்பட்டு, காடுகளில் கிடைக்கும் கனி, கிழங்கு வகைகளை உணவாகக்கொள்கிறார்.”   

      “ஸ்ரீராமனின் எண்ணம் முழுவதும் தங்களின் மீதே நிலை கொண்டிருப்பதால், தன் உடல் மீது அமரும் பூச்சிகள், புழுக்கள், கொசுக்கள், பாம்புகள் போன்றவற்றை அகற்றும் உணர்வே அவருக்கு ஏற்படுவதில்லை.”

     “உங்கள் மீது கொண்ட அன்பினால் எப்பொழுதும் தங்களையே நினைத்துக் கொண்டு உங்களது பிரிவால் பெருந்துயரத்தில் மூழ்கியிருக்கும் ஸ்ரீராமன் வேறு விஷயங்களைப் பற்றி நினைப்பதே இல்லை.”

     “மனிதருள் சிறந்தவரான ஸ்ரீராமன் தங்களது நினைவால் உறக்கம் கொள்வதே இல்லை.  ஒருவேளை உறக்கம் கொண்டாலும், “சீதை! சீதை!” என்ற இனிய வார்த்தைகளைக் கூறிக் கொண்டே விழித்துக் கொண்டு விடுவார்.”

     “பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் பழங்கள், பூக்கள் மற்றும் வேறு எந்த வித பொருட்களைக் கண்டாலும், உங்களை நினைத்து பெருமூச்சு விட்டுக்கொண்டே, ‘அன்பே! அன்பே!’ என்று அழைக்கத் தொடங்கி விடுவார்.”

     “எப்பொழுதும் உங்கள் நினைவால் தவித்து கொண்டிருக்கும் ஸ்ரீராமன், ‘சீதா! சீதா!’ என்றே அழைத்துக் கொண்டிருப்பார்.  உங்களை மீட்டு விட வேண்டும் என்ற உறுதியுடன் கடும் விரதம் மேற்கொண்டுள்ளார்.”

     ஸ்ரீராமனைப்  பற்றிய செய்திகளால் தன் துயரத்தை மறந்த சீதை, ஸ்ரீராமனின் துயரம் அறிந்து அதற்கீடான துயரம் கொண்டாள்.  மழைக்கால இரவில் மேகங்கள் சூழ்ந்த வானத்தில், குளிர் நிலவும் காய்வது போல, இன்பமும் துன்பமும் ஒருங்கே கொண்டாள்.”

                         முப்பத்தாறாவது ஸர்கம் நிறைவுற்றது.

No comments:

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...