ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம்.
முப்பத்திமூன்றாவது
ஸர்கம்.
பவழம் போன்ற
சிவந்த நிறத்தில் முகத்தைக் கொண்டிருந்த வாயு குமாரனான ஸ்ரீஅனுமன், இரக்கம் மேலிட,
அந்த அசோக மரத்திலிருந்து கீழிறங்கி, சீதைக்கு அருகில் சென்று பணிவுடன், கைகளைத் தலைக்கு
மேல் குவித்து அவரை வணங்கினார். பிறகு சீதையிடம் இனிமையான குரலில் பேசினார்.
“தாமரை மலரின்
இதழ் போன்ற கண்களை உடைய தேவீ! கசங்கிய பட்டாடை உடுத்திக் கொண்டு, இந்த மரக் கிளையைப்
பிடித்தவாறு நின்று கொண்டிருக்கும் தாங்கள் யார்?”
“தாமரை மலரின்
இதழ்களிலிருந்து வடியும் நீர் போல, உங்கள் கண்களிலிருந்து கண்ணீர் பெருகுவதன் காரணம்
யாது?”
“ஒளியுடன் விளங்கும்
தேவீ! தாங்கள் தேவ கன்னிகையா? அல்லது அசுர,
நாக, ராக்ஷஸ, கந்தர்வ இனத்தைச் சேர்ந்தவரா? இல்லையென்றால் யட்சர்கள் அல்லது கின்னரர்கள்
இனத்தைச் சேர்ந்தவரா?”
“அழகிய பெண்ணே!
நீங்கள் ருத்ரர்கள், மருதர்கள்(வாயு) அல்லது வசுக்கள் இனத்தைச் சேர்ந்தவரா? சிறந்த
பெண்மணியே! உங்களைப் பார்க்கும் போது நீங்கள் தேவ லோகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்
என்று தோன்றுகிறது.”
“நீங்கள் தேவ
லோகத்தில் உள்ள சந்திரனை விட்டுப் பிரிந்து கீழே விழுந்த, நட்சத்திரங்களுள் மிகச் சிறந்ததும்,
சிறந்த பண்புகளை உடையதுமான ரோகிணி தேவியா?”
“கரிய விழிகளைக்
கொண்ட தேவி! கோபம் கொண்டோ அல்லது காதலினாலோ, கணவரான வசிஷ்டரைக் கோபம் கொள்ளச் செய்து
விட்டு, இங்கே வந்திருக்கும் கற்புக்கரசியான அருந்ததி தேவியோ நீங்கள்?”
“அழகிய இடை கொண்ட
தேவீ! ஒருவேளை, உங்கள் மகன், தந்தை, சகோதரன் அல்லது கணவன் போன்ற யாரும் இந்த உலகத்தை
விட்டுப் பிரிந்து வேறு உலகம் சென்று விட்டார்களோ? அதற்காகத் துயரம் கொண்டுள்ளீர்களோ?”
“நீங்கள் அழுது
கொண்டிருப்பதாலும், பெருமூச்சு விட்டுக் கொண்டிருப்பதாலும், தங்கள் கால்கள் நிலத்தைத்
தொட்டுக்கொண்டிருப்பதாலும் தாங்கள் தேவ கன்னிகையாக இருக்க முடியாது”.
“தங்களது நடை, உடை, பாவனைகளையும், அழகிய உடல் தோற்றத்தையும் வைத்துப் பார்த்தால், நீங்கள் ஒரு பேரரசரின் மனைவியாகவோ அல்லது மகளாகவோ இருக்கவேண்டும் என்றே என் மனதில் தோன்றுகிறது.”
“தண்டகாரண்ய
வனத்திலிருந்து இராவணனால் வலிந்து அபகரிக்கப்பட்ட சீதையாக நீங்கள் இருப்பீர்களேயானால்,
உங்களுக்கு எல்லா நன்மைகளும் உண்டாகட்டும்.
நீங்கள் உங்களைப் பற்றிய அனைத்து விவரங்களையும் கூறுங்கள். அவற்றைக் கேட்க நான் ஆவலாக உள்ளேன்.”
“துயரத்தின்
காரணமாக தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அவல நிலையும், உங்களது உன்னதமான தோற்றப் பொலிவும்,
ஒரு தபஸ்வினியின் உடையலங்காரமும், நீங்கள் கண்டிப்பாக ஸ்ரீராமனின் மனைவியாகத்தான் இருக்க
வேண்டும் என்று தோன்றுகிறது.”
இராமனைப் புகழ்ந்து
பேசிய அனுமனின் வார்த்தைகளைக் கேட்ட சீதை, பெரு மகிழ்ச்சி கொண்டாள். ஆகவே, மரத்தைப் பிடித்தபடி நின்று கொண்டிருந்த அனுமனிடம்
இவ்விதம் பேசினாள்.
“சீர்மிகு வானரமே!
நான், இந்தப் பூமியில் உள்ள அரசர்களிலெல்லாம் முதன்மையானவரும், பெரும் புகழ் வாய்ந்தவரும்,
பகைவர்களின் படைகளை முறியடிப்பதில் வல்லவருமான பேரரசர் தசரதனின் மருமகள் ஆவேன்.”
“நான் விதேஹ
நாட்டின் பேரரசரான ஜனகனின் மகள் ஆவேன். மிகச் சிறந்த அறிவாளியான இராமனின் மனைவி நான்.
என் பெயர் சீதா ஆகும்.”
“அயோத்தியில்
இராமனுடைய அந்தப்புரத்தில் பன்னிரெண்டு வருடங்கள் இந்த உலகத்திற்குண்டான எல்லாவிதமான
இன்பங்களையும் அனுபவித்தேன். என்னுடைய எல்லா விருப்பங்களும் எப்பொழுதும் நிறைவேற்றப்பட்டன.”
“அப்பொழுது,
பதிமூன்றாவது வருடத்தில், ராஜா தசரதன், தன் குல குருவான வசிட்ட முனிவருடன் கலந்து,
இஷ்வாகு வம்சத்தின் அணிகலனாகத் திகழும் இராமனுக்கு பட்டாபிஷேகம் செய்ய முடிவெடுத்தார்கள்.”
“இராமனின் பட்டாபிஷேகத்திற்கான
வேலைகள் நடந்து கொண்டிருந்த போது, தசரத ராஜாவின் மனைவியான கைகேயி, “இனி நான் நீர் அருந்த
மாட்டேன்! தினம் உண்ணும் உணவை உண்ண மாட்டேன்! இராமனின் பட்டாபிஷேகம் நடக்கும் நாளே
என் வாழ்வின் இறுதி நாளாகும்! அரசர்களுக்கெல்லாம்
அரசனே! நீங்கள் மகிழ்வுடன் எனக்கு அளித்திருந்த வரங்கள் பொய்யாகப் போக வேண்டாமெனில்,
இராகவன் கானகத்திற்குச் செல்ல வேண்டும்” என்று கூறினாள்.
“சத்தியத்திற்குக்
கட்டுப்பட்ட பேரரசருக்கு, கைகேயிக்குத் தான் அளித்த வரங்கள் நினைவிற்கு வந்தன. கைகேயியின் கொடூரமான, அன்பற்ற வார்த்தைகளைக் கேட்ட
தசரத மன்னர் மூர்ச்சையடைந்தார்.”
“என்றுமே உண்மையின்
வழி நிற்கும் தசரத மன்னர், துயரம் மேலோங்க, கண்களில் நீர் சொரிய, தன் மூத்த குமாரனான
இராமனிடமிருந்து, ராஜ்ஜியத்தைத் திரும்பக் கேட்டார்.”
“சிறந்த பண்பாளரான
இராமன், பட்டாபிஷேகத்தை விட தன் தந்தையின் சொல் கேட்பதே மிகவும் இன்பமானது என்று கருதினார். ஆகவே தந்தையின் வார்த்தைகளை மனதினுள் ஏற்றுக்கொண்டு,
வாய் மொழியாகவும் ஒப்புக் கொண்டார்.”
“சத்தியத்தைக்
கடைப் பிடிக்கும் வீரரான இராமன், கேட்டதைக் கொடுக்க வல்லவர். ஆனால், எதையும் திரும்பப் பெற மாட்டார். எப்பொழுதும் உண்மையையே பேசும் அவர், தன் உயிரைக்
காப்பாற்றிக் கொள்ள வேண்டிய சூழல் வந்தாலும், பொய் பேச மாட்டார்.”
“பெரும் புகழ்மிக்க
இராமன், தன் உயர்ந்த மேலாடைகளைத் துறந்தார்.
மனதினால் பேரரசைத் துறந்தார். என்னைத்
தன்னுடைய தாயிடம் ஒப்புவித்தார்.”
“ஆனால் நான்
விரைந்து, அவருக்கு முன்பாகவே கானகம் செல்லத் தயாராக இருந்தேன். ஏனென்றால் இராமனைப் பிரிந்து சுவர்க்கத்தில் இருந்தாலும்
எனக்கு அது பிடிக்காது.”
“தன்னுடைய நண்பர்களுக்கெல்லாம்
மகிழ்ச்சி அளிக்கவல்ல, சுமித்திரையின் மகனான இலக்குமணன், இராமனுடன் தானும் செல்வதற்காக,
அவருக்கு முன்பே மரவுரியணிந்து, தயாராக நின்றார்.”
“இவ்வாறாக எங்களுக்கெல்லாம்
தலைவரான தசரதனின் ஆணைப்படி, நாங்கள் மூவரும், திட மனத்துடன், நல் விரதம் பூண்டு, இதுவரை
கண்டிராத அடர்ந்த காட்டிற்குள் நுழைந்தோம்.”
“தண்டகாரண்ய
வனத்தில் நாங்கள் தங்கியிருந்த பொழுது, ஒளிமிக்க இராமனின் மனைவியாகிய சீதையாகிய என்னை,
கொடிய அரக்கனான இராவணன் அபகரித்து, இங்கே கொண்டு வந்து விட்டான்.”
“இராவணன் எனக்கு
உயிர் வாழ இரண்டு மாத காலம் கெடு விதித்துள்ளான்.
அந்த இரண்டு மாதங்கள் கழிந்த பின்னர், நான் உயிரை விட்டு விடுவேன்.”
இவ்விதம்
அனுமனிடன் சீதை உரைத்தாள்.
முப்பத்துமூன்றாவது ஸர்கம்
நிறைவு.
No comments:
Post a Comment