Friday, September 22, 2023

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம். முப்பத்திரெண்டாவது ஸர்கம்.

 

            ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம்.

                                              முப்பத்திரெண்டாவது ஸர்கம்.

     அப்பொழுது, அடர்ந்த மரக்கிளைகளுக்கிடையே, வெண்மையான உடை தரித்து, மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் மிகுந்த ஒளி வீசிக்கொண்டு ஸ்ரீஅனுமன், மறைந்திருப்பதை சீதை கண்டாள்.

     அசோக மரத்தின் ஒரு பூங்கொத்து போல ஒளி வீசிக்கொண்டு, மனதிற்கினிய வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருந்த அந்த வானரம், கிளைகளுக்கு நடுவே அமர்ந்திருப்பதை அவள் கண்டாள்.  அதனுடைய கண்கள், உருகிய தங்கம் போல பளீரென்று மின்னிக் கொண்டிருந்தன.

     மரத்தின் கிளைகளுக்கிடையே பணிவுடன் அமர்ந்திருந்த அந்த சிறப்பு மிக்க வானரத்தைக் கண்ட சீதை, மிகவும் ஆச்சர்யம் அடைந்தாள். அளவு கடந்த வியப்பெய்திய நிலையில், அவளின் மனத்தினுள் எண்ணங்கள் எழுந்தன.

     “ஓ! அந்த வானர உருவமே பார்ப்பதற்கு அச்சமூட்டுவது போல உள்ளது. அதைப் பிடிப்பதும் மிகவும் கடினம். அதைப் பார்ப்பதற்கு மனதில் துணிவு இல்லை.” இவ்விதம் நினைத்த சீதை, அச்சத்தில் மயக்கம் கொண்டவளானாள்.

     அழகிய சீதை, அதிக அச்சம் கொண்டு, ஓ ராமா! ஓ லக்ஷ்மணா! என்று துயரம் மேலிட புலம்பலானாள்.

     மிகவும் மெல்லிய குரலில் அழுதுகொண்டிருந்த சீதை, அந்த சிறப்பு மிக்க வானரமானது தன் அருகே வந்து பணிவுடன் அமர்ந்திருக்கக் கண்டார்.  பெண்ணரசியான சீதை, “நான் காண்பது கனவா?” என்று யோசித்தாள்.

     மீண்டும் அங்கு நோக்கிய சீதை, வானர அரசனனின் சொல்படி நடக்கும், மிகச் சிறந்த அறிவாற்றலும், சிறந்த பணிவும் கொண்ட வளைந்த முகத்தைக் கொண்டிருந்த வாயுவின் குமாரனாகிய ஸ்ரீஅனுமனை அங்கு கண்டாள்.

     ஸ்ரீஅனுமனைப் பார்த்த உடனேயே சீதை, புலன்கள் செயலிழக்க, மரணித்துவிட்ட நிலையை அடைந்தாள்.  அகன்ற விழிகளைக் கொண்ட சீதை, நெடு நேரத்திற்குப் பிறகு, நினைவு திரும்ப, மீண்டும் எண்ணத் தொடங்கினாள்.

     “நான் இன்று என்னுடைய கனவில், அழகற்ற வானரத்தைக் கண்டுள்ளேன்.  அது நல்லதல்ல என்று சாத்திரங்கள் சொல்கின்றன.  இராமனுக்கும், இலக்குமணனுக்கும், என் தந்தை ஜனகருக்கும் இது நல்லது செய்யட்டும் என்று விரும்புகிறேன்.”

     “ஆனால், இது கனவாக இருக்க முடியாது.  துயரத்திலும் வருத்தத்திலும் உள்ள எனக்குத்தான் உறக்கமே இல்லையே! முழு நிலவினைப் போல முகம் கொண்ட ஸ்ரீராமனைப் பிரிந்துவிட்ட பின்னர் எனக்கு இன்பம் என்ற பேச்சிற்கே இடமில்லை!  

  “எனது மனம் எப்பொழுதுமே “ராம! ராம!” என்று நினைத்துக் கொண்டிருப்பதாலும், எனது வாய் ராம நாமத்தை ஜபித்துக் கொண்டிருப்பதாலும், இது போன்ற இராமனைப் பற்றிய கதைகளைப் பார்க்கவும், கேட்கவும் செய்கிறேன்.

     “எனது எண்ணம் முழுவதும் இராமனைப் பற்றியே இருப்பதாலும், இராமனைச் சந்திக்க வேண்டும் என்ற நினைவு வாட்டிக் கொண்டிருப்பதாலும், எங்கு பார்த்தாலும் இராமனைப் பார்ப்பது போலவும், இராமனின் கதையைக் கேட்பது போலவும் தோன்றுகிறது.”

     “மனதினில் நினைத்துக் கொண்டிருப்பதாலேயே இது போன்று நிகழ்கின்றன என்ற எண்ணம் ஏற்பட்டாலும், எனது அறிவு, இது போன்ற நிகழ்வுகளைச் சரியா, தவறா என்று விவாதிக்கின்றது.  மனதினில் உண்டாகும் எண்ணங்களுக்கு எந்த வடிவமும் இல்லை.  ஆனால் முழு உருவத்துடன் இருக்கும் வானரத்தை நான் என் கண்களால் காண்கின்றேனே? அது என்னிடம் பேசவும் செய்கின்றதே?”

     “பிரம்மா, பிரஹஸ்பதி, இந்திரன் மற்றும் அக்னி தேவன் யாவரையும் நான் வணங்குகிறேன்.  இந்த வானரம் என் முன்னே சொன்ன வார்த்தைகள் யாவும் உண்மையைத் தவிர வேறொன்றாக இருக்கக் கூடாது.”

 

                                   முப்பத்திரெண்டாவது ஸர்கம் நிறைவு.

No comments:

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...