Friday, September 22, 2023

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம். முப்பத்தொன்றாவது ஸர்கம்.

                   ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம்.

                                              முப்பத்தொன்றாவது ஸர்கம்.

     அறிவினிற் சிறந்த ஸ்ரீஅனுமன், இவ்வாறாகப் பலவித யோசனைகளைச் செய்த பின்னர், சீதைக்குக் கேட்கும் வண்ணம், தன் இனிமையான குரலில் சொல்லத் தொடங்கினார்.

     “இஷ்வாகு வம்சத்திலே, தசரத ராஜா என்ற பெயருடன் மிகவும் புகழ் மிக்க அரசர் ஒருவர் இருந்தார்.  அவரிடத்தில், எண்ணற்ற தேர்களும், யானைகளும், குதிரைகளும் இருந்தன.”

     “அவர் அரசர்களிலேயே சிறந்த ராஜரிஷியாக விளங்கினார்.  தவஞ்செய்யும் முனிவர்களுக்கு ஈடாக தவ வலிமை மிக்கவர்.  சக்ரவர்த்திகளின் குலத்திலேயே பிறந்த அவர். தேவேந்திரனுக்கு நிகரான வல்லமை படைத்தவர்.”

     “அஹிம்சை வழியை நேசிப்பவரான அவர் பெருந்தன்மை மிக்கவராகவும், கருணை உள்ளம் கொண்டவராகவும் விளங்கினார்.  உண்மையே அவரது மிகச் சிறந்த ஆயுதமாக இருந்தது.  இஷ்வாகு குலத்தின் பெருமையை மேன்மேலும் வளர்ப்பதில் வல்லவராக இருந்தார்.”

     “ஒரு அரசருக்கு வேண்டிய அனைத்து குணங்களும் ஒருங்கே அமையப் பெற்று, அதிகமான செல்வங்களையும் பெற்ற அவர், அரசர்களுக்குள் ஒரு வலிமை மிக்க எருதினைப் போலத் திகழ்ந்தார்.  நான்கு புறங்களிலும் கடலால் சூழப்பட்ட பூமியெங்கும் அவரது புகழ் ஓங்கியிருந்தது.  தானும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்து, மற்றவரையும் மகிழ்ச்சியோடு வைத்திருப்பார்.”

     “அப்படிப்பட்டவரின் மூத்த மகனாக இராமன் என்பவர் இருந்தார்.  அவரது முகம் முழு நிலவினைப் போலப் பொலிவினைக் கொண்டது.  அனைத்துக் கலைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்த அவர், வில் வித்தை அறிந்தவர்களுள் முதன்மையானவராக இருந்தார்.  அனைத்து வித ஆயுதங்களின் அறிவையும் பெற்றிருந்தார்.”

     “தன்னுடைய பகைவர்களுக்குக் கடும் துன்பத்தைத் தர வல்ல இராமன், தன்னுடைய நல்லொழுக்கங்களுக்கும், தன்னுடைய உறவினர்களுக்கும், இந்த உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களுக்கும், நல்லறத்திற்கும் பாதுகாவலராக இருக்கிறார்.”

     “உண்மையின் வழி நிற்கும் அவரது வயதான தந்தையின் ஆணைக்கிணங்க, வீரனான இராமன், தனது மனைவியுடனும், தன் சகோதரனான இலக்குமணனுடனும் வசிப்பதற்காக கானகம் வந்தார்.”

     “அவர் அந்தக் காட்டில் மிருகங்களை வேட்டையாடியபடியே, நினைத்த வடிவம் கொள்ளும் ஆற்றல் பெற்ற அரக்கர்கள் பலரை அழித்தார்.”

     “தண்டகாரண்ய வனத்தில், வல்லமை மிக்கவர்களான கர, தூஷணர்களை இராமன் கொன்றதை அறிந்து, ஆதங்கம் கொண்ட இராவணன், ஜானகியை அபகரித்தான்.”

     “மாய சக்தி கொண்ட மாரீசனை, மான் போல வேடம் கொள்ள வைத்து, இராமன், காட்டில் அந்த மானைத் தேடுமாறு சூழ்ச்சி செய்து,  சீதையை இராவணன் அபகரித்தான்.  தூயவளான சீதையைக் வனப் பிரதேசங்களிலெல்லாம் தேடியபடியே வந்த இராமன், சுக்ரீவன் என்னும் வானரத்துடன் நட்புக் கொண்டார்.”

     “அப்பொழுது, பகைவர்களின் கோட்டைகளை அழித்து வெற்றி கொள்ளும் வல்லமை படைத்த இராமன், வாலியைக் கொன்று, மிகச் சிறந்த சுக்ரீவனிடம் வானர ராஜ்ஜியத்தை ஒப்படைத்தார்.”

     “வானர அரசனான சுக்ரீவனின் ஆணைப்படி, நினைத்த வடிவம் எடுக்கும் வல்லமை படைத்த ஆயிரக்கணக்கான வானரர்கள், சீதையைக் கண்டுபிடிப்பதற்காக, எல்லாத் திசைகளிலும் சென்றுள்ளார்கள்.”

     “அவர்களில் ஒருவனான நான், சம்பாதி என்பவர் சொன்னதைக் கேட்டு, அகன்ற விழிகளைக் கொண்ட சீதையைத் தேடி, நூறு யோஜனை அகலமுள்ள பெருங்கடலை வேகத்துடன் தாவி இங்கு வந்துள்ளேன்.”

     “சீதையின் அடையாளங்களை இராமன் எவ்விதம் வர்ணித்தாரோ, அவ்விதமே தோற்றமும், அதே நிறம் மற்றும் வடிவமைப்புக்களையும் கொண்ட ஒருவரை நான் இங்கே கண்டுள்ளேன்.”

     இவ்விதம் பேசிய ஸ்ரீஅனுமன், பேச்சை நிறுத்தி விட்டு, அமைதியாகி விட்டார்.

     ஸ்ரீஅனுமனின் வார்த்தைகளைக் கேட்ட சீதை மிகவும் பிரமிப்படைந்தாள்.  அழகிய சுருண்ட கூந்தலைக் கொண்ட, அச்சம் கொள்ளும் இயல்புள்ள சீதை, கூந்தலால் மறைந்திருந்த தன் முகத்தை உயர்த்தி, அசோக மரத்தின் திசையில் பார்த்தாள்.

      வானரத்தின் பேச்சைக் கேட்ட சீதை மிகவும் மகிழ்ச்சியடைந்தாள்.  எல்லையற்ற மகிழ்ச்சியுடன், அனைத்திற்கும் ஆன்மாவாக விளங்கும் பகவானான ஸ்ரீராமனை நினைத்தவாறே, எல்லாத் திசைகளிலும் பார்த்தாள்.

     மேலும், கீழும், பக்கவாட்டிலும் மற்றும் அனைத்துத் திசைகளிலும் தன் பார்வையால் துழாவிய சீதை, அளவிட முடியாத அறிவுடன் விளங்கும், வாயுபுத்ரனான ஸ்ரீஅனுமனை, விடியல் நேரத்து சூரியனைப் போல ஒளியுடன் திகழக் கண்டார்.

 

                                       முப்பத்தொன்றாவது ஸர்கம் நிறைவு

No comments:

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...