Thursday, September 14, 2023

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம். முப்பதாவது ஸர்கம்

 

             ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம்.

                                              முப்பதாவது ஸர்கம்

 

     துயரத்தில் சீதை புலம்பியதையும், திரிஜடையினால் சொல்லப்பட்ட கனவின் விபரங்களையும், பெண் அரக்கியர் சீதையை மிரட்டியதையும், வல்லவரான அனுமனும் கேட்டிருந்தார்.

     தேவலோகத்தில் இந்திரனின் நந்தனவனத்தில் இருக்கும் தேவியைப் போல அனுமனுக்கு சீதை தோற்றமளித்தாள்.  அதனால் அனுமனின் மனதில் பலவிதமான எண்ணங்கள் தோன்றின.

     “எந்த சீதையைப் பல்லாயிரக் கணக்கான, இலட்சக் கணக்கான வானர வீரர்கள் தேடிக் கொண்டுள்ளார்களோ, அந்த சீதையை நான் கண்டு விட்டேன்.”

     “தலைவனால் நியமிக்கப்பட்ட தூதுவனான நான், ரகசியமாகப் பகைவனின் வலிமையை அறிந்து கொண்டேன்.”

     “அந்த வகையில் நான் அரக்கர்களின் திறமைகளையும், இலங்கை மாநகரத்தைப் பற்றியும் அதன் அரசனான இராவணனின் ஆற்றலைப் பற்றியும் அறிந்து கொண்டேன்.”

     “எல்லையற்ற வீரம் மிக்க, அனைவரிடமும் அளவில்லாத கருணை மிக்க தன்னுடைய கணவனான ஸ்ரீராமனை மீண்டும் பார்க்கத் துடித்துக் கொண்டிருக்கும் சீதைக்கு நான் ஆறுதல் கூறுவேன்.”

     “முழு நிலவினைப் போன்று அழகிய முகத்தை உடைய சீதை முன் எப்பொழுதுமே துயரத்தை அறிந்ததில்லை.   ஆனால் இப்பொழுது, அளவற்ற துன்பத்தில் உள்ளாள்.  ஆகவே நான் இவளுக்கு ஆறுதல் கூறுவேன்.”

     “துயரத்தின் வசமாகி, தன் வசமிழந்த நிலையில் இருக்கும் இந்தக் கற்புக்கரசியான சீதைக்கு ஆறுதல் வார்த்தைகள் மொழியாமல் கிஷ்கிந்தாவிற்கு நான் திரும்பிச் சென்றால் அது பெரும் குற்றமாகும்.”

     “நான் இப்படியே சென்றுவிட்டால், புகழ் மிக்க அரச குமாரியான சீதை, தன்னைக் காப்பாற்ற யாருமில்லையே என்ற துயரத்தில் தன் இன்னுயிரை மாய்த்துக் கொள்ளுவாள்.”

     “முழுநிலவைனைப் போன்ற ஒளிரும் முகத்தையும், வலிமையான தோள்களையும் உடைய ஸ்ரீஇராமன் சீதையைப் பார்க்க ஆவலாய் உள்ளார்.  எவ்விதம் சீதையைப் பற்றிய செய்திகளைச் சொல்லி ஸ்ரீராமனை ஆறுதல் கொள்ளச் செய்வது சரியோ, அவ்விதமே சீதையிடமும் ஸ்ரீராமனைப் பற்றிய செய்திகளைச் சொல்வதே சரியான செயலாகும்.”

     “ஆனால், இரவில் உலவும் அரக்கியர் சுற்றிலும் இருக்க, அவர்கள் முன்னே பேசுவது முறையாக இருக்காது.  ஆகவே இந்த இக்கட்டான சூழ்நிலையில் என்னுடைய கடமையை எப்படி நிறைவேற்றுவேன்?”

     “மீதமிருக்கும் இந்த இரவிற்குள் நான் சீதைக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறவில்லையென்றால், சீதை, தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டு விடுவாள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.”

     “அழகான இடையழகு கொண்ட சீதையிடம் நான் பேசாவிட்டால், திரும்பிச் சென்று ஸ்ரீராமனைச் சந்திக்கும் போது, ‘சீதை எனக்குச் சொன்ன செய்தி என்ன?’ என்று ஸ்ரீராமன் கேட்கும் போது எவ்விதம் பதில் சொல்வேன்?”

     “சீதையிடமிருந்து செய்தி பெறாமல் நான் சென்று ஸ்ரீராமனைச் சந்தித்தால், காகுத்த குல அணிகலன் போன்ற ஸ்ரீராமன், சினம் பொங்கும் தன் பார்வையால் என்னை எரித்துச் சாம்பலாக்கி விடுவார்.”

     “சீதைக்கு ஆறுதல் வார்த்தைகள் மொழியாமல் நான் இங்கிருந்து சென்று, ஸ்ரீராமனுக்கான இந்த நடவடிக்கைகளில், வானரர்களின் (என்னுடைய) அரசனான சுக்ரீவனை படையுடன் இங்கு வரத் தூண்டினாலும், அது பயனற்ற செயலாகவே ஆகிவிடும். (சீதை அதற்குள் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டிருப்பாள்).”

     “ஆகவே, அரக்கியர் சூழ்ந்து இருக்கும் நிலையிலேயே, தக்க தருணம் பார்த்து, சீதைக்கு மெதுவாக ஆறுதல் சொல்வேன்.  சீதையின் உள்ளம் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளது.”

     “நான் மிகவும் சிறிய வடிவத்தில் இருக்கும் ஒரு வானரன்.  இருந்தாலும், மனிதர்களின் மொழியான சமஸ்கிருதத்தில் நான் பேசுவேன்.”

     “அதிலும் ஒரு சிக்கல் உள்ளது.  பிராமணர்கள் போல நான் சமஸ்கிருதத்தில் பேசினால், என்னை இராவணன் என்று நினைத்து சீதை அச்சம் கொள்ள வாய்ப்புள்ளது.”

     “ஆகவே, பொதுமக்கள் பேசும் சாதாரண மொழியிலேயே நான் பேச வேண்டும். இல்லையென்றால், குற்றமற்றவளான சீதைக்கு என்னால் ஆறுதல் கூற முடியாது.”

     “நான் இது போல, ஒரு வானர வடிவத்தில், அவள் முன்பு சென்று, மனிதர்கள் பேசும் மொழியில் பேசினால், ஏற்கனவே அரக்கியரால் அச்சுறுத்தப்பட்டுள்ள ஜானகி, மேலும் அச்சப் படக் கூடும்.”

     “அகன்ற விழிகளையும் மெல்லிய இதயமும் கொண்ட சீதை, மனதில் அச்சம் மூண்டவுடன், என்னை விருப்பம் போல வடிவம் எடுக்க வல்ல இராவணன் என்று நினைத்து, உரத்த குரலில்  கூக்குரலிடுவாள்.”

     “சீதையின் கூக்குரலைக் கேட்டதும், பயங்கரமான ஆயுதங்களைக் கைகளில் வைத்திருக்கும் காலனைப் போன்ற அரக்கியர் ஒன்று கூடி சீதையை மிரட்டத் தொடங்குவர்.”

     “உடனே, பலவிதமான முக அமைப்புக்களைக் கொண்ட வலிமை மிக்க இந்த அரக்கியர், அனைத்துத் திசைகளிலிருந்தும் என்னைக் கொல்வதற்கோ இல்லை உயிருடன் பிடிப்பதற்கோ முயற்சி செய்வார்கள்.”

     “நான் பெரிய பெரிய கிளைகளிலும், பக்கவாட்டுக் கிளைகளிலும், மரத்திற்கு மரமாக வேகமாகத் தாவிச் செல்வதைக் கண்டால், இந்த அரக்கியர் மிகுந்த ஐயத்திற்கும் அச்சத்திற்கும் ஆளாவார்கள்.”

     “இந்த அடர்ந்த வனப் பகுதியில், நான் பெரிய வடிவத்துடன் இங்குமங்கும் செல்வதைப் பார்த்து இந்த அரக்கியர் அச்சமுற்று, கூக்குரலிடுவார்கள்.”

     “அவர்கள், பிறகு, அரக்கர்களின் அரசனான இராவணனால் பணியில் அமர்த்தப்பட்ட அரண்மனைப் பாதுகாவலர்களை உதவிக்கு அழைப்பார்கள்.”

     “இந்தக் குழப்பத்தில், அந்த அரக்கர்கள், சூலாயுதம், ஈட்டி, கத்தி முதலிய பயங்கரமான ஆயுதங்களுடன் வேகமாக இங்கு வந்து கூடுவார்கள்.”

     “என்னை நாற்புறங்களிலும் சூழ்ந்து தாக்கும் அரக்கர்களை நான் வெற்றி கொள்ள முடிந்தாலும், பிறகு இந்த பெரிய கடலைக் கடந்து அக்கரைக்குச் செல்ல என்னால் இயலாது.”

     “எண்ணிக்கையில் அதிகம் இருக்கும் இந்த அரக்கர்கள் என்னைப் பிடித்து கைது செய்து விட்டால், சீதையிடம் நான் சொல்ல வேண்டிய செய்தியைச் சொல்ல இயலாமல் போய்விடும்.”

     “பிறகு வன்முறையில் விருப்பம் கொண்ட அரக்கர்கள், ஜனக குமாரியான சீதையைக் கொன்று விட்டால், இராமனும் சுக்ரீவனும் செய்ய நினைத்த காரியம் நிறைவேறாமல் போய் விடும்.”

     “ஜானகி இருக்கும் இந்த இடம் அரக்கியரால் சூழப்பட்டு, யாரும் அறிய முடியாத ரகசிய இடமாக உள்ளது.  மேலும் இந்த இடத்தின் நான்கு புறங்களிலும் கடல் சூழ்ந்துள்ளது.”

     “அரக்கர்களுடன் நடக்கும் போரில் நான் கொல்லப்பட்டாலோ, அல்லது சிறை பிடிக்கப்பட்டாலோ ஸ்ரீராமன் நினைத்துள்ள காரியத்தை நிறைவேற்ற உதவும் வேறு எந்த நபரையும் நான் காண முடியவில்லை.”

     “ஒருவேளை நான் இறந்து விட்டால், நூறு யோஜனை நீளமுள்ள இந்தக் கடலைத் தாண்டும் திறன் படைத்த வேறு வானர வீரனை, எவ்வளவு யோசித்தாலும் என்னால் அறிய முடியவில்லை.”

     “போரில் ஆயிரக்கணக்கான அரக்கர்களைக் கொல்லும் ஆற்றல் எனக்கிருந்தாலும், பின்னர் இந்தப் பெருங்கடலைக் கடந்து மறுபுறம் என்னால் செல்ல இயலாது.”

     “போரின் முடிவு உறுதியானது இல்லை. ஆகவே வெற்றி பெறுவதில் ஐயமிருக்கும் எந்தச் செயலையும் செய்ய எனக்கு விருப்பமில்லை. சந்தேகத்திற்கிடமான காரியத்தை, எந்த அறிவாளியும் செய்யமாட்டார்கள் என்பதில் ஐயம் ஏதுமில்லை.”

     “சீதையிடம் நான் சென்று பேசினால், இவ்வாறான (மேற்சொன்ன) தவறுகள் நேரலாம்.  ஆனால், சீதாவிடம் நான் பேசாமல் திரும்பிச் சென்றாலும், அவள் தன் உயிரை மாய்த்துக் கொள்வது நிச்சயம்.”

     “அறிவாற்றல் இல்லாது, பொறுப்பற்று நடந்து கொள்ளும் தூதுவனிடம் கொடுக்கப்பட்ட திட்டங்கள் எவ்வளவு நல்லனவாய் இருந்தாலும், கால நேரம் சரியில்லாது போனால், சூரிய உதயத்தில் அகன்று விடும் இருளைப் போல, அழிந்து விடும்.”

     “கடமை மற்றும் கடமையற்ற விஷயங்களில், ஒரு அரசனின் (தலைவனின்) உறுதியான முடிவு கூட, ஒரு விவேகமற்ற தூதுவனால் களையிழந்து விடுகிறது.  ஏனெனில், தன்னை மிக உயர்வானவனாக எண்ணிக் கொண்டு செயலாற்றும் தூதுவனால், அவன் செய்ய நினைத்த செயல் கெட்டு விடுகிறது.”

     “நான் செய்து முடிக்க நினைத்த செயல் எவ்விதம் வெற்றி பெறும்? என்னுடைய செயலில் நான் தோல்வியை எவ்விதம் தவிர்ப்பேன்? பெருங்கடலைத் தாண்டிய முயற்சியை, எங்கனம் வீணாகாமல் இருக்கச் செய்வது?”

     “சீதை அச்சப்படாமல் நான் பேசும் வார்த்தைகளை எவ்விதம் கேட்பாள்?” என்று எண்ணிய அனுமன் இவ்விதம் முடிவு செய்தார்.

     “வீர தீரச் செயல்களை எளிதாகச் செய்து முடிப்பவரும், சீதைக்கும் மிகவும் விருப்பமானவருமான ஸ்ரீராமனின் அருமை பெருமைகளை, எப்பொழுதும் ஸ்ரீராமனையே நினைத்துக் கொண்டிருக்கும் சீதையிடம் பாடிக் காட்டுவேன். இதனால், சீதை அச்சம் கொள்ள மாட்டாள்.”

     “இஷ்வாகு வம்சத்தின் மிகச் சிறப்பானவரும், தன்னை முற்றிலும் உணர்ந்தவருமான ஸ்ரீராமனின் அழகிய, அறம் சார்ந்த பேச்சுக்களைக் கூறியபடியே நான் இங்கு அமர்ந்திருப்பேன்.”

     “இனிமையான குரலிலே, ஸ்ரீராமனைப் பற்றிய எல்லா செய்திகளையும் நான் சொல்லும் விதத்தில், சீதைக்கு என் வார்த்தைகளில் நம்பிக்கைப் பிறக்கட்டும்.  அவள் மனதில் உள்ள சந்தேகங்கள் நீங்கும் வண்ணம் நான் சொல்லுவேன்.”

      இவ்விதமாக பலவித யோசனைகள் செய்த ஒளி மிகுந்த ஸ்ரீஅனுமன், அசோக மரத்தின் கிளைகளில் மறைந்தபடி அமர்ந்து கொண்டு, உலகத்தைக் காக்கும் ஸ்ரீராமனின் மனைவியான சீதையைப் பார்த்தபடி, இனிய வார்த்தைகளைப் பேசலானார்.

 

                                      முப்பதாவது ஸர்கம் நிறைவு.

No comments:

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...