Friday, September 22, 2023

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம். முப்பத்து நான்காவது ஸர்கம்.

 

              ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம்.

                                             முப்பத்து நான்காவது ஸர்கம்.






     துயரத்திற்கு மேல் துயரமாக அனுபவிக்கும் சீதையின் வார்த்தைகளைக் கேட்ட ஸ்ரீஅனுமன், அவருக்கு ஆறுதல் அளிக்கும் வண்ணம் இவ்விதமாகப் பதில் சொன்னார்.

     “தேவீ! இராமனுடைய தூதுவனாகிய நான் அவரிடமிருந்து செய்தி கொண்டு வந்துள்ளேன்.  விதேஹ குமாரியே! இராமன் நலமாக உள்ளார்.  உங்களது நலம் பற்றியும் அறிய விரும்புகிறார்.”

     “தேவீ! வேதங்களைப் பூரணமாக அறிந்தவரும், பிரம்மாஸ்திரத்தின் பயனை அறிந்தவரும், வேதங்களைக் கற்றறிந்தவர்களில் மிகச் சிறந்தவரும், தசரதனின் மகனுமான இராமன், தங்கள் நலனைப் பர்றி அறிய ஆவல் கொண்டுள்ளார்.”

     “தங்களது கணவரைப் பின்பற்றி நடக்கும், மிகவும் வலிமை வாய்ந்த இலக்குமணனும் துயரத்தில் மூழ்கியுள்ளார்.  அவரும் தன் வணக்கத்தை உங்களுக்குத் தெரிவித்தார்”

      மனிதர்களுள் சிங்கத்தைப் போன்று கம்பீரம் கொண்ட இராமன் மற்றும் இலக்குமணனைப் பற்றிய செய்திகளைக் கேட்ட சீதையின் உடல் முழுவதும் அதிக மகிழ்ச்சியினால் சிலிர்த்தது. அவள் அனுமனை நோக்கிப் பேசினாள்.

     “ஒரு மனிதன் நூறு வயதைக் கடந்து வாழும் பொழுதும் அவனுக்கு மகிழ்ச்சி கிட்டும் என்பது உலக வாக்காகும்.  அது என் விஷயத்தில் புனிதமான வாக்கானது இன்று!” என்று சொன்னாள்.

     சீதையும் அனுமனும் சந்தித்துக் கொண்டதில் இருவருக்கும் அற்புதமான மகிழ்ச்சி உண்டாயிற்று.  ஒருவர் மீது ஓருவருக்கு நம்பிக்கை உண்டாக, இருவரும் தங்கள் பேச்சைத் தொடர்ந்தனர்.

     துயரம் மிகுந்த சீதையின் வார்த்தைகளைக் கேட்ட வாயுகுமாரனான அனுமன் சீதைக்கு அருகில் சென்றார்.

     அனுமன் தன்னை நெருங்கி வர வர, சீதைக்கு அது இராவணனோ என்ற சந்தேகம் எழுந்தது.

     மனதில் இவ்வாறான எண்ணம் தோன்றியதும், “ஆஹா! என் மனதில் நினைத்தவற்றை இந்த வானரத்தின் முன்பு பேசியது மிகவும் வெட்கக் கேடான செயல்” என வருந்திய சீதை, இது கண்டிப்பாக மாறுவேடத்தில் வந்துள்ள இராவணனே என்று முடிவு செய்தாள்.

     மாசுமறுவற்ற உடலைக் கொண்டிருந்த சீதை, பிறகு தான் பிடித்துக் கொண்டு நின்றிருந்த அசோக மரத்தின் கிளையை விட்டு விட்டு, சோகமே வடிவாக, அப்படியே தரையில் அமர்ந்து விட்டாள்.

     அப்பொழுது நெடிய புருவங்களைக் கொண்டிருந்த அனுமன், சீதையின் கால்களில் விழுந்து வணங்கினார்.  ஆனாலும் தனக்கு உண்டான அச்சத்தின் காரணமாக, சீதை அனுமன் இருந்த திசையில் பார்க்கவேயில்லை.

     தன்னை வணங்கிய அனுமனைப் பார்த்த, முழுநிலவினைப் போன்ற முகம் கொண்டிருந்த சீதை, பெருமூச்சு விட்டபடி, இனிமையான குரலில் பேசத் தொடங்கினாள்.

     “வானரத்தின் வடிவத்தில் தோன்றிய மாயாவி இராவணனாக நீ இருந்தால், எனக்கு மீண்டும் துயரத்தை உண்டாக்குவது உனக்கு அழகல்ல”.

     “தண்டகாரண்ய வனத்தில் உன் உண்மையான உருவத்தை மறைத்துக் கொண்டு துறவி போல உருமாறி வந்த அதே இராவணன் தான் நீ!”

     “இஷ்டப்படி வடிவம் கொண்டு இரவில் திரியும் அரக்கனே! நான் ஏற்கனவே உபவாசத்தாலும், துயரத்தாலும், கடும் அவல நிலையில் உள்ளேன்.  இது போதாதென்று நீ மீண்டும் எனக்கு இன்னல் விளைவிப்பது அழகல்ல!”

     “அவ்வாறில்லையெனில் என் மனதில் எழுந்துள்ள ஐயம் உண்மையாக இருக்காது என்றே நினைக்கின்றேன்.  ஏனென்றால் உன்னைப் பார்க்கும் பொழுது மனதில் மகிழ்ச்சி உண்டாகிறது!”

     “வானரப் பெருமகனே! நீ உண்மையாகவே இராமனின் தூதுவனாக இங்கு வந்திருந்தால், உனக்கு எல்லா நன்மைகளும் உண்டாகட்டும்.  எனக்கு மிகவும் விருப்பமான இராமனின் கதையை உன்னிடம் கேட்க விரும்பிகிறேன்.”

     “ஏ! வானரமே! என்னுடைய அன்பிற்குரிய இராமனின் பண்பு நலன்களை எனக்கு விரிவாகச் சொல்.  ஓ! மிருதுவானவனே! நீரின் வேகம் எவ்விதம் கரையை அரித்துச் செல்லுமோ, அது போல இராமனைப் பற்றிய பேச்சுக்கள், என் இதயத்தை உருக்கி விடுகின்றன!”

     “நீண்ட காலமாக இங்கு அடைபட்டுக் கிடக்கும் நான் எவ்வளவு இனிமையான கனவு காண்கின்றேன்.  இராமனால் அனுப்பப்பட்டுள்ள வானரத்தை இங்கு நான் என் முன்னே காண்கின்றேனே!”

     “என் கனவில் மட்டுமாவது வீரனான இராமனை, இலக்குமணனுடன் காணும் வாய்ப்புக் கிடைத்தால், என்னுடைய துயரங்கள் ஒரு பொருட்டல்ல.  ஆனால், கனவு கூட என்னிடம் பொறாமை கொண்டு என்னை நெருங்குவதில்லையே!”

     “கனவில் ஒரு வானரத்தைக் கண்டால் நல்லது நடக்காது.  ஆனால் எனக்கு இப்பொழுது நல்ல காலம் போல் தோன்றுகிறது.  ஆகவே, வானரத்தை நான் காண்பது கனவாக இருக்க முடியாது.”

     “அல்லது, என் மனதினுள் எழும் ஆசையின் வடிவமா இது? அல்லது உடலின் வாத மாற்றத்தால் ஏற்பட்ட மனதின் கோளாறோ இது? அல்லது என் சித்தப் பிரமையோ? அல்லது இது கானல் நீரோ?”

     “ஆனால் இது சித்தப் பிரமை கிடையாது.  மாயத் தோற்றமும் கிடையாது. ஏனென்றால் என்னால் இந்த வானரத்தை நன்றாகப் பார்க்கவும், புரிந்து கொள்ளவும் முடிகிறது!”

     இவ்விதம் பலவாறாக சிந்தித்த சீதை, அரக்கர்களின் நினைத்த வடிவம் எடுக்க வல்ல ஆற்றலை எண்ணி, அனுமனாக வந்துள்ளது, அரக்கர்களின் அரசனான இராவணன் தான் என்று முடிவு செய்து கொண்டாள்.”

     “சிற்றிடையளான சீதை, இவ்வாறாக முடிவு செய்த பின்னர், வானரத்துடன் எதுவும் பேசவில்லை.”

     சீதையின் மனவோட்டத்தை அறிந்து கொண்ட வாயு குமாரனான ஸ்ரீஅனுமன், செவிக்கு இன்பம் தரத் தக்க வார்த்தைகளால், சீதைக்கு மகிழ்ச்சி ஏற்படும் வண்ணம் பேசினார்.

     “சூரியனைப் போல ஒளி வீசக் கூடிய இராமன், உலகத்தோரால் விரும்பப்படும் நிலவினைப் போன்றவர் ஆவார்.  குபேரனைப் போல எல்லா உலகிற்கும் அரசனாவார்.”

     “இராமன், பெரும் புகழ் கொண்ட கடவுளான விஷ்ணுவைப் போன்று பேராற்றல் மிக்கவர்.  அவர் பிருஹஸ்பதியைப் போல உண்மையைப் பேசுபவரும், இனிமையாகப் பேசுபவரும் ஆவார்.”

     “அழகிலும், பெரும் பேறு பெற்றதிலும், ஒளிவீசும் தன்மையிலும் அவர் மன்மதனுக்கு நிகரானவர்.  இடமறிந்து சினம் கொள்ளும் அவர்,பகைவரைத் தண்டிப்பவர். அவர் தேரைச்  செலுத்துவதில் மிகச் சிறந்த ஆற்றல் மிக்கவர்.”

     “இராமனின் அகன்ற தோள்களின் குளிர்ந்த நிழலில் இவ்வுலகின் உயிர்கள் ஓய்வெடுக்கின்றன.  மிருகங்களின் வடிவமெடுக்கவல்ல, இரவில் உலவும் அரக்கன் ஒருவன், இராமனைக் குடிலிலிருந்து அப்புறப்படுத்திவிட்டு, யாரும் துணையில்லாத உங்களை அபகரித்து வந்துள்ளான்.  இந்தக் கொடுஞ் செயலுக்கான விளைவை அவன் அனுபவிக்கப் போவதை நீங்கள் பார்ப்பீர்கள்.”

     “பேராற்றல் மிக்க இராமன், போர்க்களத்தில், சினங்கொண்டு எய்யும் தீக்கங்குளாய் ஒளிரும் அம்புகளால் விரைவில்  இராவணனை, அழிப்பார்.”

     “இராமனால் அனுப்பப்பட்ட தூதனாக நான் உங்கள் முன் நிற்கின்றேன்.  உங்களைப் பிரிந்து பெருந்துயரத்தில் உள்ள இராமன், தங்களின் நலத்தைப் பற்றி அறிய விரும்புகிறார்.”

     “சுமித்ரையின் குமாரனும், மிக நீண்ட தோள்களும் பெருஞ்சிறப்பும் மிக்க இலக்குமணன் தங்களுக்குத்தன் வணக்கங்களைக் கூறி, தங்கள் நலம் பற்றி விசாரிக்கின்றார்.”

     “தேவீ! சிறந்த வானரங்களுக்கெல்லாம் அரசனும், சுக்ரீவன் என்னும் பேர் கொண்டவருமான இராமனின் நண்பர் தங்களின் நலம் பற்றி அறிய விரும்புகிறார்.  இராமன், இலக்குமணன் மற்றும் சுக்ரீவன் யாவரும் தினந்தோரும் தங்களை நினைத்த வண்ணம் உள்ளனர்.”

     “விதேஹ நாட்டுக் குலமகளே! இவ்வளவு அரக்கியரின் பிடியில் நீங்கள் துயருற்றாலும், உயிருடன் இருப்பது பெரும் பேறாகும்.  இனி விரைவிலேயே, தேரோட்டுவதில் வல்லவரான இராமனை, இலக்குமணனுடன் இங்கு சந்திப்பீர்கள்.”

     “கோடிக்கணக்கான வானரங்கள் புடைசூழ வரும், எல்லையற்ற புகழ் மிக்க  சுக்ரீவனும் கூடவே உங்களைச் சந்திப்பார்.  அனுமன் என்னும் பெயருள்ள  வானரமான நான், சுக்ரீவனின் அமைச்சராக உள்ளேன்.”

     “பெருங்கடலைத் தாவிப் பறந்து, கடந்து வந்து, நான் இந்த இலங்கை நகருக்குள் நுழைந்துள்ளேன்.  கொடிய இராவணின் தலையில் காலால் மிதித்து நான் இங்கு வந்துள்ளேன்.”

     “என்னுடைய பெரும் வலிமையை நம்பி, தங்களைக் காண நான் இங்கு வந்துள்ளேன்.  தேவீ! நீங்கள் நினைப்பது போல நான் இல்லை.  உங்கள் மனதினில் உள்ள ஐயங்களைக் களைந்து விட்டு, நான் சொல்லும் வார்த்தைகளை நம்புங்கள்.”

 

                                 முப்பத்தி நான்காவது ஸர்கம் நிறைவு.

No comments:

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...