Thursday, September 14, 2023

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம். இருபத்தொன்பதாவது ஸர்கம்

 

            ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம்.

                                         இருபத்தொன்பதாவது ஸர்கம்.

 

     துயரத்தின் தோய்ந்த இதயத்துடனும், மகிழ்ச்சியற்ற மனத்துடனும், கழிவிரக்கம் மிகுந்த எண்ணங்களுடனும் அந்த அசோக மரத்தின் அடியில் நின்றிருந்த குற்றமற்றவளான சீதையிடம், பொருள் நிறைந்த மனிதரை அண்டி நிற்கும் உறவினர் போல், நல்ல நிமித்தங்கள் தோன்றின.

     அழகிய கூந்தலையுடைய சீதையின், வளைந்த கண் இமைகளையும், வெண்ணிறத்திற்கு நடுவே கருமையாக அமைந்திருந்த கண்மணியையும் கொண்ட இடது கண்ணானது, நீர் நிலையில் மீனினால் மோதப்பட்டு ஆடும் சிவப்பு நிறத் தாமரை மலர் போலத் துடித்தது.

     கணவனுக்கு நெடுங்காலம் அன்புக்குரியவளாக இருந்த சீதையின், அகிலும் சிறந்த சந்தனமும் அரைத்துப் பூசத் தகுதி வாய்ந்த, அழகிய, வளைந்த , திடமான இடது தோளும் அப்பொழுது துடித்தது.

     ஒன்றோடொன்று பிணைந்திருக்கும் சீதையின் இரண்டு தொடைகளுள், யானையின் துதிக்கையை நிகர்த்த அவளது இடது தொடை அவ்வப்பொழுது துடித்தது.  அது அவளது அன்புக்குரிய ஸ்ரீராமன், அவள் முன்னே வந்து நிற்பதற்கான நல்ல அறிகுறியாய்த் தோன்றியது.

     மரத்தினடியில் நின்றிருந்த, மாதுளை முத்துக்களைப் போன்ற பல் வரிசையையும், அழகிய தோள்களையும், உவமைகளை மீறிய கண்களையும் கொண்டிருந்த சீதையின் தூசு படிந்திருந்த தங்க நிறத்தாலான மேலாடை சற்றே நெகிழ்ந்து கொடுத்தது.  இதுவும் ஒரு நல்ல சகுனமாகத் தோன்றியது.

     இது போன்ற நிமித்தங்களால் முன்பே நற்செயல்கள் விளைந்ததற்கான அனுபவம் இருந்ததால், அழகிய புருவங்களைக் கொண்ட சீதை, காற்றிலும், வெய்யிலிலும் காய்ந்து கிடந்த விதையானது, மழை பெய்ததும் மகிழ்வுற்று துளிர் விடுவதைப் போன்று மகிழ்ச்சியடைந்தாள்.

     கோவைப் பழத்தைப் போன்று சிவந்த உதடுகளையும், அழகிய கண்களையும், வளைந்த புருவங்களையும், நீண்ட கூந்தலையும், வெண்ணிறமாக ஒளி வீசும் பற்களையும் கொண்ட சீதையின் முகமானது, ராகுவின் பிடியிலிருந்து விடுபட்டு, மீண்டும் ஒளிரும் நிலவைப் போல் பிரகாசித்தது.

     சீதையின் துயரம் அகன்று விட்டது. உள்ளத்திலிருந்த வெப்பம் தணிந்து விட்டது.  எல்லா அயற்சிகளும் மறைந்து விட்டன.  மனம் மகிழ்ச்சியால் துள்ளியது.  வளர்பிறையின் குளிர் நிலவில் நனைந்து மகிழும் இரவினைப் போல, சீதையின் முகமானது ஒளிர்ந்தது.

 

                              இருபத்தொன்பதாவது ஸர்கம் நிறைவு.

No comments:

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...