Thursday, September 14, 2023

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம். இருபத்தெட்டாவது ஸர்கம்.

 

      ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம்.

                                         இருபத்தெட்டாவது ஸர்கம்.

 

 

     கணவனைப் பிரிந்து, துயரத்தில் உழன்று கொண்டிருந்த சீதை, இராவணன் பேசிய கடுமையான வார்த்தைகளை நினைத்து, காட்டில் சிங்கத்திடம் சிக்கிய ராஜ யானையின் பெண் குட்டி போல நடுங்கினாள்.

     இராவணனது அச்சுறுத்தும் பேச்சுக்களை நினைத்து, அரக்கியர் நடுவில் அமர்ந்திருந்த சீதை, மிகவும் கலங்கினாள்.  மென்மையான இதயம் கொண்ட அவள், ஆளரவமற்ற அடர்ந்த காட்டுப் பகுதியில் வழிதவறி அழுதுகொண்டிருக்கும் இளம் பெண்ணைப் போல் புலம்பத் தொடங்கினாள்.

     “” அவரவர்க்கான காலம் வரும் வரையில் யாருக்கும் மரணம் ஏற்படாது”” என்பது உலகில் ஆன்றோர் வாக்காகும்.  அதனால்தான் இவ்வாறு பலவிதமாக அச்சுறுத்தப்பட்டும் என்னுடைய தீவினையின் பயனாக நான் உயிர் வாழ வேண்டியுள்ளது.”

     “என்னுடைய உள்ளம் மகிழ்ச்சியற்று, பலவிதமான துயரங்கள் நிரம்பப் பெற்றிருந்தாலும், ஆயிரம் சுக்கல்களாக நொறுங்காமல் வலிமையான இடியைத் தாங்கி நிற்கும் மலைச் சிகரத்தைப் போன்று உறுதியாக உள்ளது.”

     “இராவணனால் நான் கொல்லப்பட இருந்தாலும், நான் என் உயிரை மாய்த்துக் கொண்டால் ஒரு பழியும் இல்லை.  எவ்விதம் ஒரு அந்தணன் தன் வேத அறிவை ஒரு சூத்திரனுக்குச் சொல்லித்தர மாட்டானோ, அவ்விதம் என்னால் இராவணனிடம் அன்பு செலுத்த முடியாது.”

     “உலகத்தின் நாயகனான ஸ்ரீராமன், துஷ்ட இராவணன் விதித்த கெடுவுக்குள் இங்கு வந்து என்னைக் காப்பாற்றவில்லை என்றால், ரண சிகிச்சை செய்பவன், (தாயைக் காப்பாற்றுவதன் பொருட்டு) கர்பத்திலிருக்கும் குழந்தையைத் துண்டு துண்டாக்கிக் கொன்று விடுவதைப் போல இராவணன் தன்னுடைய ஆயுதங்களால் என்னைத் துண்டு துண்டாக்கி விடுவான்.”

     “மிகுந்த துயரத்தில் இருக்கும் எனக்கு, இராவணன் விதித்த இரண்டு மாத கெடு விரைவில் முடிவிற்கு வந்து விடும்.  விடியல் நேரத்தில் மரண தண்டனை பெற இருக்கும், அரச சிறையில் இருக்கும் ஒரு திருடனின் மன நிலையில் நான் இருக்கின்றேன்.”

     “ஓ ராமா! ஓ லக்ஷ்மணா! ஓ சுமித்ரா! ஓ ராஜ மாதாவான கெளசல்யா! ஓ என்னுடைய அன்னையே! நற்பேற்றினை இழந்த நான், புயலில் சிக்கி, கடலில் மூழ்கும் கப்பலின் நிலையில் இருக்கின்றேன்.”

     “இரண்டு இளஞ்சிங்கங்கள் மின்னல் தாக்கி இறந்து விடுவதைப் போல, அந்த மானின் உருவம் தரித்தவன், மனிதர்களில் சிறந்த அந்த சகோதரர்களை, என் பொருட்டுக் கொன்றிருக்க வேண்டும்.”

     “காலன்தான் மான் வடிவில் வந்து, நற்பேறு குறைந்த எனக்கு ஆசையை உண்டாக்கியிருக்க வேண்டும் என்பது நிச்சயம்.  அதனால் தூண்டப்பட்டு அறிவிழந்த நான், இராமனையும், தம்பி இலக்குமணனையும் அந்த மானின் பின்னே அனுப்பினேன்.”

     “ஓ! வாய்மையையே வாழ்க்கையாகக் கொண்டவனே! நெடிய தோள்களைக் கொண்டவனே! முழுநிலவினையொத்த முகம் கொண்டவனே!  உலக மக்கள் அனைவருக்கும் விருப்பமானவனே!  அவர்களுக்கு நலம் அருளுபவனே! இராவணனின் கரங்களால் நான் கொல்லப்பட இருப்பதை ஓ! ராமா! நீர் அறிந்திருக்க வில்லையே!”

     “உன்னைத் தவிர வேறு எவரையுமே தெய்வமாகக் கொள்ளாமல் இருந்தது, பொறுமையைக் கடைப்பிடித்தது, இவ்விதம் தரையில் படுத்து நான் உறங்குவது, அனைத்து வகையான அறங்களின் வழி நடந்தது, கணவனின் நலனில் அக்கறை கொண்டது ஆகிய இவை யாவையுமே, ஒரு நன்றி கெட்ட மனிதனுக்கு மற்ற மனிதர்களால் செய்யப்படும் உதவிகள் போல பயனற்றுப் போய் விட்டன.”

     “அறத்தின் வழி நின்று, உங்களைத் தவிர வேறு எவரையுமே மனதால் கூட நினையாது வாழும் என்னுடைய வாழ்க்கை, பொருளற்றாதாகி விட்டது.  உடல் மெலிந்து, களையிழந்து, உங்களுடன் இணைந்து வாழும் நம்பிக்கையற்று இங்கு இருக்கின்றேன்.”

     “நீங்கள் முறைப்படி தந்தையின் ஆணையை நிறைவேற்றிய பின்னர், பயமற்றும், வெற்றிக் களிப்புடனும், காட்டிலிருந்து நாட்டிற்குத் திரும்பியதும், அகன்ற விழிகளைக் கொண்ட நிறையப் பெண்களுடன் திருமணம் செய்து கொண்டு இன்பமாக இருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.” (துயரத்தில் தன் நிலை மறந்ததால், ஸ்ரீராமன் ஏகபத்னி விரதம் பூண்டவன் என்பதையும்  சீதை இங்கு மறந்துவிட்டாள்).

     “ஓ ராமா! ஆனால் நான் உங்களை மட்டுமே விரும்புகிறேன்.  மிக நீண்ட காலத்திற்கு உங்களோடு மட்டுமே இணைந்திருந்தும், என் நல்வினைகள் முடிந்து போனதால், நான் செய்த தவங்கள், விரதங்கள் அனைத்தும் விரயமாகி, நான் உயிரை இழக்க இருப்பதை என்னவென்று சொல்வது?”

     “ஆகவே நான் விரைவில் ஒரு கூரிய ஆயுதத்தாலோ, அல்லது விஷமருந்தியோ என் உயிரை மாய்த்துக் கொள்வேன்.  ஆனால், இங்கு இந்த அரக்கியர் நடுவே எனக்கு ஆயுதத்தையோ, விஷத்தையோ கொடுக்க யாருமில்லை.”

     இவ்வாறாக பலவிதமாக புலம்பியவண்ணம் இருந்த சீதை, தன்னுடைய தலைப் பின்னலைப் பிடித்தபடி, “நான் இந்தப் பின்னலினால் என் கழுத்தை இறுக்கிக்கொண்டு விரையில் எமனுலகம் சென்று விடுவேன்” என்றாள்.

     மிருதுவான உடலைக் கொண்டிருந்த சீதை, அந்த அசோக மரத்தின் கிளையயைப் பிடித்தபடி நின்றாள்.  தன்னுடைய உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்து, தன் கணவன், கணவனின் தம்பி இலக்குமணன் மற்றும் குலத்தின் முன்னோர்கள் அனைவரையும் மனதினால் நினைத்துக் கொண்டிருந்தாள்.  அப்பொழுது துயரத்தையெல்லாம் போக்க வல்ல நல்ல நிமித்தங்கள் பலவற்றை அவள் கண்டாள்.  அந்த நிமித்தங்களின் பலன்களை அவள் ஏற்கனவே அறிந்திருந்தாள்.

 

                                 இருபத்தெட்டாவது ஸர்கம் நிறைவு.

No comments:

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...