Thursday, July 13, 2023

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம். இருபத்தியேழாவது ஸர்கம்.

 

           ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம்.

                                         இருபத்தியேழாவது ஸர்கம்.

 

      சீதை இவ்விதமாகப் பேசுவதைக் கேட்ட அரக்கியரின் கோபம் அவர்கள் தலைக்கேறியதால், நிலை தடுமாறினர்.  இந்தச் செய்தியை, கல்நெஞ்சம் படைத்த இராவணனிடம் தெரிவிக்க சில அரக்கியர் விரைந்து சென்றனர்.

     உடனே அச்சுறுத்தும் தோற்றம் கொண்ட சில அரக்கியர் சீதையை நெருங்கினர்.  சீதையை மீண்டும் துன்புறுத்தும் வண்ணம், மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் கடுமையான வார்த்தைகளைக் கூறத் தொடங்கினர்.

     “அறமற்ற எண்ணங்களைக் கொண்டுள்ள இழிவான சீதையே! இங்கிருக்கும் அரக்கியர் இன்று உனது மாமிசத்தை மனம் நிறையும் வண்ணம் உண்டு களிக்கப் போகின்றார்கள்.”

     அப்பொழுதுதான் உறக்கத்திலிருந்து கண் விழித்த ‘திரிஜடை’ என்னும் வயதான அரக்கி, அந்த தரமிழந்த அரக்கியரால் சீதை மிரட்டப்படுவதைப் பார்த்ததும், அவர்களைப் பார்த்து இவ்விதம் சொல்லலானாள்.

     “ஏ மோசமான அரக்கியரே! முடிந்தால் நீங்கள் உங்களையே சாப்பிட்டுக் கொள்ளுங்கள். அரசனான ஜனகனின் அன்பு மகளும், பேரரசனான தசரதனின் அன்பு மருமகளுமான சீதையை உங்களால் உண்ண இயலாது.”

     “இன்று நான் அதி பயங்கரமானதும், மயிர்க் கூச்சமெடுக்க வைப்பதுமான ஒரு கனவினைக் கண்டேன்.  அதில் அரக்கர்களின் அழிவையும், சீதையின் கணவனான இராமனின் வெற்றியையும் கண்டேன்.”

     கோபத்தினால் வசமிழந்து காணப்பட்ட அரக்கியர், திரிஜடையின் வார்த்தைகளைக் கேட்டதும் அச்சமுற்று, அவளிடம் இவ்வாறு பேசத் தொடங்கினர்.

     “ஏ திரிஜடையே! இரவில் என்னதான் கனவு கண்டாய் என்பதை எங்களுக்கு நீ சொல்!” என்று அந்த அரக்கியர் கேட்டதும், திரிஜடை தான் கண்ட கனவினைப் பற்றி சொல்லத் தொடங்கினாள்.

     “நான் கண்ட கனவில், ஆகாயத்தில் பறக்கக்கூடிய, யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட ஒரு பல்லக்கைக் கண்டேன்.  வெண்ணிற மலர்களால் செய்யப்பட்ட மாலையையும், வெண்ணிற ஆடைகளையும் அணிந்திருந்த இராகவன், தன் தம்பி இலக்குமணனுடன், ஆயிரம் குதிரைகள் பூட்டிய அந்தப் பல்லக்கில் ஏறி இங்கு வந்திறங்கினார்.”

     “கடலால் சூழப்பட்டிருந்த ஒரு வெண்மையான மலையின் மீது, வெண்ணிற உடையணிந்து அமர்ந்திருந்த சீதையையும் என் கனவினில் கண்டேன்.  ஒளியானது எவ்விதம் சூரியனுடன் இணைந்திருக்குமோ, அவ்விதமே இராமனுடன் சீதை ஒன்றியிருந்தாள்!”

     “மேலும் அந்தக் கனவில், நான்கு  தந்தங்களுடன் கூடிய, பெரிய மலையைப் போல இருந்த யானையொன்றின் மீது இராமன், இலக்குமணனுடன் இருந்ததை நான் கண்டேன்.”

      “அப்பொழுது, சூரியனைப் போல் ஒளி வீசிக்கொண்டிருந்த அந்த இரண்டு சகோதரர்களும் வெண்ணிற மாலையும், வெண்ணிற ஆடையும் அணிந்து கொண்டு சீதையை நோக்கி வந்தனர்.”

     “பிறகு, மலையின் மீதிருந்த ஜானகி, ஆகாயத்திலிருந்தபடியே, இராமனால் தனதாக்கிக்கொள்ளப்பட்டிருந்த அந்த யானையின் மீது வந்து அமர்ந்தாள்.”

     “பிறகு தாமரை மலர்களையொத்த கண்களைக் கொண்ட சீதை, கணவனின் மடியிலிருந்து எழுந்து,  சூரிய சந்திரர்களை எட்டிப் பிடித்துத் தன் கைகளினால் தடவிக் கொடுத்தாள்.”

     “அதன் பிறகு, அவ்விரண்டு இளவரசர்களும், அகன்ற விழிகளைக் கொண்ட சீதையும் அமர்ந்திருந்த அந்தப் பெரிய  யானை, இலங்கை நகரத்தின் மேலே வந்து நின்றது.”

     “சீதை மற்றும் இலக்குமணனோடு கூடிய காகுத்தன் (இராமன்) , வெண்ணிற மாலைகளையும், வெண்ணிற ஆடைகளையும் அணிந்து கொண்டு, எட்டு வெண்ணிற எருதுகள் பூட்டிய தேரில் இங்கு வந்ததைக் கண்டேன்.”

     “அந்தக் கனவில் மேலும் நான், பெரும் வீரம் மிக்க இராமன், வேறொரு இடத்தில், மனைவி சீதையுடனும், தம்பி இலக்குமணனுடனும், சூரியனைப் போல ஒளி வீசிக்கொண்டிருந்த  புஷ்பக விமானத்தில் ஏறி, வடக்கு திசை நோக்கிச் செல்லக் கண்டேன்.”

     “இவ்வாறாக நான், விஷ்ணுவிற்கு நிகரான வீரமும் ஆற்றலுமிக்க இராமனைத் தன்னுடைய மனைவியான சீதையுடனும், தம்பியான இலக்குமணனுடனும் கண்டேன்.”

     “எவ்விதம் தீவினை செய்தவர்களால் சுவர்க்கலோகத்தை வெற்றி கொள்ள இய்லாதோ, அவ்விதமே, தேவர்களாலோ, அசுரர்களாலோ, அரக்கர்களாலோ, பெரும் ஒளி வீசக் கூடிய இராமனை வெற்றி கொள்ள இயலாது.”

     “மேலும் இன்னொரு கனவில் நான், இராவணன் எண்ணெய் தேய்க்கப்பட்ட உடலுடன், சிவப்பு நிற ஆடைகள் அணிந்தவனாய், அலரி மாலைகள் அணிந்து, மது அருந்திய மயக்கத்துடன் கீழே கிடப்பதைக் கண்டேன்.”

     “இன்று இன்னுமொரு கனவில், தலை மொட்டையடிக்கப்பட்டு, கருப்பு நிற உடைகளுடன் புஷ்பக விமானத்திலிருந்து கீழே விழுந்திருந்த இராவணன், , ஒரு பெண்ணினால் இழுக்கப்படுவதாய்க் கண்டேன்.”

     “பிறகு கழுதைகளால் இழுத்துச் செல்லப்படும் ஒரு தேரில், சிவப்பு நிற மாலைகள் அணிந்து, செந்நிற சந்தனம் பூசியவனாய் இராவணனைக்  கண்டேன்.  எண்ணெய் போன்ற திரவத்தைக் குடித்துக் கொண்டும், சிரித்துக் கொண்டும், நடனமாடிக்கொண்டும் இருந்தான்.  மனம் பிறழ்ந்தவர்களைப் போல அவனது அறிவும், புலன்களும் தடுமாறிக்கொண்டிருந்தன.  கழுதை மீது ஏறிக்கொண்ட அவன், விரைவாகத் தெற்குத் திசை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.”

     “பிறகு இராவணன் கழுதை மீதிருந்து பூமியில் தலை குப்புற வீழ்ந்து கிடப்பதைக் கண்டேன்.  அவன் பயத்தினால் நடுங்கிக்கொண்டிருந்தான்.”

     “பிறகு பயத்துடன் நடுங்கியபடியே அவன் எழுந்தான்.  மதுவின் மயக்கத்தில் தடுமாறியபடி, ஆடைகள் அற்ற நிலையில், தகாத வார்த்தைகள் பேசியபடி முன்னே சென்றான்.  அவனுக்கு முன்புறம், துர்நாற்றம் வீசிக்கொண்டு இருண்டிருந்த கழிவுகளிடையே நுழைந்து மறைந்து போனான்.”

     “அந்தக் கனவில், மேலும் பிறகு ஒரு கரிய நிறமுடைய பெண், சிவப்பு நிற ஆடையணிந்து, உடலெல்லாம் சேறாக இருக்க, பத்துத் தலை இராவணனின் கழுத்தைப் பிடித்து, தெற்கு திசை நோக்கி இழுத்துச் சென்றாள்.  பெரும் வீரனான கும்பகர்ணனையும் இதே நிலையில் கண்டேன்.”

     “இராவணனின் அனைத்துப் புதல்வர்களும் தலைகள் மொட்டையடிக்கப்பட்டு, உடலெங்கும் எண்ணெய் தடவப்பட்டிருந்ததைக் கண்டேன்.  மேலும் அந்தக் கனவில், இராவணன் ஒரு பன்றியின் மீது அமர்ந்தும், இந்திரஜித், ஒரு முதலையின் மீது அமர்ந்தும், கும்பகர்ணன் ஒரு ஒட்டகத்தின் மீது அமர்ந்தும் தெற்குத் திசை நோக்கிச் சென்றதைக் கண்டேன்.”

     “இந்தக் கனவில், விபீஷணன் மட்டுமே வெண்ணிறக் குடையுடனும், வெண்ணிற ஆடையுடனும், வெண்ணிற பூ மாலையுடனும், வெண்ணிறமான சந்தனம் உடலெங்கும் பூசியபடியும் இருந்ததைக் கண்டேன்.”

     “இந்த விபீஷணனுக்கு அருகில் சங்குகளின் முழக்கங்களும், பேரிகைகளின் ஓசைகளும் கேட்டன.  ஆடலும் பாடலும் நடந்து கொண்டிருந்தன.  பெரும் மலையைப் போன்ற பெரிய உடலுடனும், இடிமுழக்கத்தைப் போன்ற கர்ஜனையுடனும், நான்கு தந்தங்களுடன் இருந்த யானை மீது அமர்ந்திருந்த விபீஷணன், தன்னுடைய நான்கு அமைச்சர்களுடன் ஆகாயத்தில் நின்றிருந்தான்.”

     “அந்த இடத்தில், மது அருந்திக் கொண்டும், சிவப்பு வண்ண மாலைகளும், ஆடைகளும் அணிந்திருந்த அரக்கர்கள் கூட்டத்தைக் கண்டேன்.  அங்கு இசையொலியும், பலவித வாத்யங்களின் ஓசையும் கேட்டது.”

     “அழகிய இலங்கை நகரம், குதிரைகள், தேர்கள் மற்றும் யானைகளுடன் கடலில் மூழ்கிக் கிடந்ததைக் கண்டேன். அதன் தோரண வாயில்கள் இடிபட்டுக் கிடந்தன.”

     “என்னுடைய கனவில், இராவணனால் பாதுகாக்கப்படும் இந்த இலங்கை மாநகரம், இராமனின் தூதுவனாக வந்திருக்கும் மிகவும் வேகம் கொண்ட வானரம் ஒன்றால் எரிக்கப்பட்டு, சாம்பலாக்கப் படுவதைக் கண்டேன்.”

     “எரிந்து சாம்பலான இலங்கையில் அனைத்து அரக்கியரும் மதுபானம் அருந்திய மயக்கத்தில் உரக்கச் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.”

     “கும்பகர்ணன் முதலான அரக்கர் குல வீரர்கள், சிவப்பு நிற ஆடைகள் அணிந்து கொண்டு, சாணத்தினால் நிரம்பியிருந்த குளமொன்றினுள் நுழைந்தார்கள்.”

     “ஆகவே, அரக்கியரே! நீங்கள் அனைவரும் இங்கிருந்து சென்று விடுங்கள்.  இராகவனான இராமன் எவ்விதம் சீதையைத் திரும்பப் பெறப் போகின்றார் என்பதை நீங்கள் பாருங்கள். சினம் மிகுந்த இராமன் மற்ற எல்லா அரக்கரோடும் உங்கள் அனைவரையும் கொன்று விடுவார்.”

     “தன்னுடன் இணைபிரியாது கானகம் வந்தவளும், கணவனான தனது சொல் மீறாதவளும், மிகவும் மரியாதைக்குரியவளும், அன்பானவளுமான தன் மனைவியான சீதையை, நீங்கள் இவ்விதம் மிரட்டுவதையும், அச்சுறுத்துவதையும், இராமன் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டார்.”

     “ஆகவே, சீதையிடம் கடுமையான வார்த்தைகளைப் பேசுவதை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்.  மனதிற்கினிய வார்த்தைகளை அவரிடம் பேசுங்கள்.  நாம் அனைவரும், விதேக குமாரியான சீதையின் கருணைக்காகவும், அவரது மன்னிப்பிற்காகவும் வேண்டி நிற்போம் என்பதே என் விருப்பம்.”

     “எந்தவொரு துன்பத்திலிருக்கும் பெண்ணைப் பற்றியும் இவ்விதமாகக் கனவு கண்டால், அந்தப் பெண், அவளது பலவிதமான இன்னல்களிலிருந்து விடுபட்டு, தனக்கு மிகவும் விருப்பமான பொருளை அடைவாள்.”

     “அரக்கியரே! நீங்கள் இதுவரை சீதையை அச்சுறுத்தித் துன்புறுத்தியிருந்தாலும், ஏன் தயங்குகிறீர்கள்?  அவளது பாதம் பணிந்து மன்னிப்புக் கேளுங்கள்.  ஏனென்றால், இராமன் மூலம் அரக்கர்களுக்கு பயங்கரமான பெரிய ஆபத்துக் காத்திருக்கின்றது.” 

     “அரக்கியரே! ஜனகனின் மகளும், மிதிலை குமாரியுமான சீதை, உங்களது வணக்கங்களாலேயே மகிழ்ச்சியடைந்து விடுவாள்.  சீதையால் மட்டுமே உங்களை, அந்த பயங்கரமான பேராபத்திலிருந்து காப்பாற்ற முடியும்.”

     “அகன்ற விழிகளைக் கொண்டவளான சீதையின் உடலில், சீதை துன்பப்பட்டதற்கான எந்தவொரு பாதிப்பையும் நான் பார்க்கவில்லை.”

     “துயரங்களுக்கு அப்பாற்பட்டவளும், தேவர்களைப் போன்று விமானங்களில் பறக்கும் வசதிகளை அனுபவிக்கப் பிறந்தவளுமான சீதையின் ஒளி மட்டுமே, அவளது துயரத்தின் காரணமாக சற்றே குறைந்துள்ளது என்று சந்தேகிக்கின்றேன்.”

     “வைதேகியின் உள்ளக் கிடக்கைகள் நிறைவேறும் நேரம் வந்துவிட்டது என்று எனக்குத் தோன்றுகிறது.  அரக்கர்களின் அரசனான இராவணனின் அழிவிற்கும், இராமனின் வெற்றிக்கும் அதிக நேரம் ஆகப் போவதில்லை.”

     “இவளது அகன்ற, தாமரையிதழையொத்த இடது கண் துடிப்பதைப் பார்த்தால், இவள் விரைவில் மிக நல்ல செய்தியைக் கேட்க இருக்கிறாள் என்று தெரிகின்றது.”

     “சிறந்த பண்புடைய வைதேகியின் இடது கையும் மயிர்க்கூச்சமுற்று துடிப்பதும் தெரிகின்றது.”

     “பெண் யானையின் துதிக்கை போன்று அழகுடன் விளங்கும் இவளது இடது துடை துடிப்பதும் இராமன் வெகு விரைவில் இங்கு வரப்போவதை உணர்த்துகிறது.”

     “எதிரே உள்ள அடர்ந்த பசுமையான மரக் கிளைகளில் இருக்கும் தங்கள் கூடுகளிலிருந்து சுற்றிச் சுற்றிப் பறந்து, மிகவும் இன்பம் தரும் ஓசைகளைப் பரப்பும் பறவைகளைப் பார்க்கும் போது, அவை முகமன் கூறுவது போலவும், நல்ல விஷயங்கள் நடக்கப் போவதை மீண்டும், மீண்டும் உரைப்பது போலவும் தோன்றுகிறது.  தனக்குப் பிரியமானவரின் வரவை எடுத்துரைப்பது போலவும் உள்ளது.”

     “இவ்விதம் தன் கணவனின் வெற்றிச் செய்தியைக் கேட்டு மகிழ்ச்சியுற்ற சீதை, “நீங்கள் சொல்வது உண்மையானால், நான் உங்கள் அனைவரையும் காப்பாற்றுவேன்” என்று அவர்களிடம் சொன்னாள்.

                   

                                             இருபத்தேழாவது ஸர்கம் நிறைவு.

No comments:

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...