Monday, July 3, 2023

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம். இருபத்துநான்காவது ஸர்கம்.

 

               ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம்.

                                       

                                       இருபத்துநான்காவது ஸர்கம்.

 

     அதன் பின்னர், முழுவதும் கொடூரமான முக அமைப்பைக் கொண்டிருந்த அரக்கியர், சீதையை நெருங்கி, அவளைப் பார்த்து சற்றும் மகிழ்ச்சியளிக்காத வார்த்தைகளைக் கூறத் தொடங்கினர்.

     “ஏ சீதையே! அனைத்து உயிர்களுக்கும் இன்பம் தரவல்ல, மிகச் சிறப்பான படுக்கைவிரிப்புகள் கொண்ட படுக்கைகள் நிறைந்த அந்தப்புரத்தில் வசிப்பதற்கு நீ ஏன் விருப்பம் கொள்ளாதிருக்கின்றாய்?”

     “நீ மானுடப்பெண்ணாக இருப்பதால், ஒரு மனிதனான இராமனின் மனைவியாக இருப்பதை உயர்வாக நினைத்துக் கொண்டிருக்கின்றாய். ஆனால் அது நடக்கப் போவதில்லையாதலால்,, நீ உன் மனதை இராமனிடமிருந்து விலக்கிக் கொள்!”

     “மூன்று உலகங்களிலுமுள்ள செல்வங்களையெல்லாம் ஆண்டு அனுபவிக்கும் அரக்கர் வேந்தனை உன் நாயகனாக வரித்து, மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்வாயாக!”

     “மாசு மருவற்ற பேரழகு கொண்ட பெண்ணே! தனது நாட்டிலிருந்து விரட்டப்பட்டவனும், தோல்விகளால் துவண்டிருப்பவனுமான மனிதப் பிறவியான இராமனை ஏன் நினைத்துக் கொண்டிருக்கின்றாய்?”

     தாமரையிதழ்களையொத்த விழிகளைக் கொண்டவளான சீதை, அந்த அரக்கியரின் வார்த்தைகளைக் கேட்டு, கண்களில் நீர் வழிய அவர்களைப் பார்த்து இவ்விதம் பேசலானாள்.

     “நீங்கள் அனைவரும் ஒன்று கூடி கூறிய, உலக நியதிக்கு ஒவ்வாத, பாவத்தை விளைவிக்கக் கூடிய இந்த வார்த்தைகளை என் மனம் சிறிதும் ஏற்கப் போவதில்லை!”

     “ஒரு மானிடப் பெண் ஒரு அரக்கனை மணக்க இயலாது. நீங்கள் உங்கள் விருப்பப்படி என்னைக் கொன்று உணவாக்கிக்கொண்டாலும், நீங்கள் சொன்ன வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள மாட்டேன்!”

     “ஸ்ரீராமன் நாடு கடத்தப்பட்டு கவலையில் இருந்தாலும், அவரே எனது கணவரும் வழிகாட்டியுமாவார். எவ்விதம் சுவர்ச்சலா (சூரியனின் மனைவி) சூரியனை விடாது பற்றியிருக்கின்றாரோ, அது போல, நானும் ஸ்ரீராமனை விடாது பற்றியிருப்பேன்!”

     “எவ்விதம் பெரும் பேறு பெற்றவளான சசிதேவி இந்திரனுக்குப் பணிவிடை செய்கிறாளோ, தேவி அருந்ததி, மாமுனிவர் வசிட்டருக்குச் சேவை செய்கிறாளோ, ரோகிணி சந்திரனுக்கும், லோபமுத்ரா அகஸ்த்தியருக்கும், சுகன்யா ச்யவனருக்கும், சாவித்திரி சத்யவானுக்கும், ஸ்ரீமதி, கபிலருக்கும், மதயந்தி செளதாசருக்கும், கேசினி, ராஜா சகரனுக்கும், பீமனின் மகள் தமயந்தி, நிஷாத நாட்டரசன் நளனுக்கும் சேவைகள் செய்து வருகின்றார்களோ, அது போலவே நானும் இஷ்வாகு குலத்திற் சிறந்தவரான ஸ்ரீராமருக்குச் சேவை செய்வேன்.

     சீதையின் வார்த்தைகளைக் கேட்ட அரக்கியர் சினத்தின் எல்லைக்கே சென்றனர்.  இராவணனின் ஆணைப்படி, கடுஞ்சொற்களால் அவளை மிரட்டத் தொடங்கினர்.

     அசோக மரத்தில் ஓசையெழுப்பாது மறைந்திருந்த ஸ்ரீஅனுமன், சீதையை அரக்கியர் கடுஞ்சொற்களால் மிரட்டியதைக்  கவனித்தார்.

     அந்தக் கொடிய அரக்கப்பெண்கள், அச்சத்தில் மிரண்டிருக்கும் சீதையைச் சுற்றிலும் சூழ்ந்து கொண்டு, தொங்கிக்கொண்டிருந்த தங்களது நாக்குகளால் தங்கள் உதடுகளைக் கடித்த வண்ணம் இருந்தனர்.

     அவர்கள் மேலும் பெரும் கோபம் கொண்டவர்களாய், கோடாரிகளைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு, “இவள் அரக்கர்குல அரசனுக்கு மனைவியாக ஏற்றவள் இல்லை” என்று சொல்லியபடி எழுந்து வந்தார்கள்.

     அந்தக் கொடூரமான அரக்கியர் தொடர்ந்து மிரட்டியபடி இருந்ததால், மிகச் சிறந்த உடல் வனப்பைக் கொண்டிருந்த சீதை, தன் கண்களில் வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே, அந்த அசோக மரத்தை நெருங்கினாள்.

     துயரமே வடிவாக, அகன்ற விழிகளைக் கொண்ட சீதை, அந்த அசோக மரத்தின் அடியைச் சென்றடைந்து நின்று கொண்டதும், எல்லா அரக்கியரும் அவளைச் சூழ்ந்து கொண்டனர்.

     அழுக்கான ஆடைகளை அணிந்திருந்த சீதை, மிகவும் வலுவிழந்து, துயரமே வடிவாக, களையிழந்த முகத்துடன் இருந்தாள்.  அவளை நாலாபுறங்களிலும் சூழ்ந்திருந்த அரக்கியர், மீண்டும் அவளை அச்சுறுத்தத் தொடங்கினர்.

     அப்பொழுது, பார்ப்பதற்கே அதிபயங்கரமான உருவம் கொண்ட வினதா என்னும் பெயருடைய அரக்கி, உடலெங்கும் சினம் வழிய, சீதையை நெருங்கினாள்.  ஒழுங்கற்ற உடலமைப்பைக் கொண்டிருந்த அவளின் வயிற்றுப்பகுதி, வற்றிப் போய் உடலோடு ஒட்டியிருந்தது.  அவள் சீதையைப் பார்த்துச் சொல்ல ஆரம்பித்தாள்.

     “ஹே சீதே! நீ உன்னுடைய கணவனான இராமனிடத்தில் வேண்டிய மட்டும் அன்பு செலுத்தி விட்டாய்.  அது போதும்.  அளவிற் கதிகமாய்  செய்யும் எந்தச் செயலும் துன்பத்தைத் தான் தரும்!”

     “மிதிலையின் குமாரியே! நீ உனது மானிடப் பிறப்பிற் கேற்ற அறவழியில் மிகவும் சீரிய முறையில் சென்றிருப்பது எனக்கு மிகவும் திருப்தி அளிக்கும் வண்ணம் உள்ளது.  இப்பொழுது உனது நன்மைக்காக நான் சொல்வதைக் கேட்டு, விரைந்து அதன் படியே நடப்பாயாக!”

     “அனைத்து அரக்கர்கள் குலத்திற்கும் அரணாய் இருக்கும் பேரரசர் இராவணனை நீ கணவனாக ஏற்றுக்கொள்.  அவர் இந்திரனைப் போல பெரும் வீரர். மற்றும் அழகு மிக்கவர்!”

     “யாருடைய உதவியும் கிட்டாது அலையும் மானிடனான இராமனை விட்டுவிட்டு, நல்ல வார்த்தைகள் பேசக்கூடிய, கருணை உள்ளம் கொண்ட, மற்றவருக்காக எதையும் விட்டுக் கொடுக்கும் குணம் கொண்ட இராவணன் வசம் அடைக்கலம் கொள்வாய்!”

     “விதேக குமாரி! இன்று முதல் நீ, மிகச் சிறந்த  வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொண்டு, மிகச் சிறந்த அணிகலன்களை அணிந்து கொண்டு, அனைத்து உலகங்களும் அரசியாக ஆவாயாக!”

     “அழகிய பெண்ணே! அக்னி தேவனின் அன்பிற்குரிய மனைவியான ஸ்வாஹா போலவும், இந்திரனின் உயிருக்கு உயிரான மனைவியான சசியைப் போலவும், நீ இராவணனின் அன்புக் காதலியாகிவிடு.  விதேஹ குமாரி! மிகவும் வலுவிழந்தவனும், தன் வாழ்நாளின் இறுதிக் கட்டத்தில் இருப்பவனுமான இராமனிடம் உனக்கு என்ன இன்பம் கிடைக்கும்?”

     “நீ இதுவரை நான் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு அதன் படி நடக்காவிட்டால், நாங்கள் அனைவரும் சேர்ந்து, இப்பொழுதே உன்னை உணவாக்கிக் கொள்வோம்!” என்று சொன்னாள்.

     அப்பொழுது, விகடா என்னும் மற்றொரு அரக்கி சீதையிடம் வந்தாள்.  அவளது பெருத்த மார்பகங்கள் தொங்கியபடி ஆடிக்கொண்டிருந்தன.  கோபத்தில் தன் முட்டியை மடக்கியவாறு,  சீதையைப் பார்த்து உறுமினாள். 

     “பொல்லாத பெண்ணே! எங்களுடைய நல்ல குணத்தாலும், இரக்க சுபாவத்தாலும், நீ இதுவரை சொன்ன ஏற்றுக்கொள்ள முடியாத வார்த்தைகளைப் பொறுத்துக்கொண்டோம்.”

     “உன்னுடைய நன்மைக்காக நாங்கள், காலத்தை அனுசரித்து, உனக்கு யோசனைகள் சொன்னதை நீ கேட்கவில்லை. கடலின் மறுகரைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளாய்! இங்கு வேறு யாரும் வருவது மிகவும் கடினம்.  மேலும் இராவணனது பயங்கரமான அந்தப்புரத்தில் கொண்டு வைக்கப்பட்டுள்ளாய்.  மிதிலை குமாரியே! இராவணனது வீட்டில் கைதியாக உள்ள நீ, எங்களால் காவல் காக்கப் படுகிறாய் என்பதை நினைவில் கொள்!”

     “ஹே மைதிலி! அந்த இந்திரனிடம் கூட உன்னைக் காப்பாற்றும் திறமை கிடையாது.  ஆகவே, உனது நன்மைக்காக நான் சொல்லும் வார்த்தைகளை ஏற்றுக்கொள்வாயாக!”

     “நீ உன் கண்களில் கண்ணீர் வடித்தது போதும்.  அர்த்தமற்ற உன் துயரத்தை விட்டு விட்டு, உன் மேல் எப்பொழுதும் நிழலாகப் படிந்திருக்கும் உன் மனச்சோர்வை விட்டு விட்டு, உன் மனத்தினுள் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் உண்டாக்கிக் கொள்!”

     “சீதையே! அரக்கர் குல அரசனான இராவணனோடு இன்பத்துடன் களித்து விளையாடு!  அச்சம் கொள்ளும் பெண்ணே! பெண்களின் இளமையானது நிலையானது அல்ல என்பதைப் பெண்களாகிய நாம் அனைவரும் அறிவோம் அல்லவா?”

     “உன்னுடைய இளமை உன்னிடம் உள்ளவரை, இன்பத்தை அனுபவித்துக் கொள்.  மனதைக் கொள்ளை கொள்ளும் மயக்கும் விழிகளைக் கொண்ட அழகியே! அரக்கர்களின் அரசனான இராவணனுடன், நீ இலங்கையின் அழகிய தோட்டங்களிலும், மலைச்சரிவுகளிலும் சுற்றி விளையாடு! அவ்விதம் செய்தாயானால், ஆயிரக்கணக்கான பெண்கள், உனக்கு அடிமையாகி, உன்னுடைய ஆணைக்காக் காத்திருப்பார்கள்!”

     “பேரரசன் இராவணன் அரக்கர் குலத்தையெல்லாம் காப்பவன்.  நீ அவனை உன் கணவனாக ஏற்றுக் கொள்.  மைதிலி! நான் சொன்ன வார்த்தைகளை நீ சரியாக ஏற்றுக் கொள்ளாவிட்டால், உன் இதயத்தைப் பிளந்து நான் உண்டு விடுவேன் என்பதை நினைவில் கொள்வாயாக!” என்று சொன்னாள்.

     பிறகு சண்டோதரி என்னும் அரக்கி, கண்களில் சினம் கொப்பளிக்க, தன்னுடைய பெரிய சூலாயுதத்தைச் சுழற்றியபடி, சீதையைப் பார்த்துப் பேசினாள்.

     “மகாராஜா இராவணன் எப்பொழுது இவளைக் கவர்ந்து கொண்டு வந்தாரோ, அப்பொழுதிலிருந்தே இவள் பயத்துடன் நடுங்கிக் கொண்டிருக்கிறாள்.  இவளுடைய இரு மார்புகளும் பயத்தில் குலுங்கிக் கொண்டுள்ளன.  மானின் கண்களைப் போன்ற அழகிய கண்களைக் கொண்ட இந்த மானுடப் பெண்ணைப் பார்த்த நாள் முதல், எனக்கு இவள் மேல் பெரும் ஆசை வந்து விட்டது.  இவளுடைய ஈரல், அகன்ற மார்புகள், இதயம், மற்றும் எலும்புகள், தலை எல்லாவற்றையும் சாப்பிடவேண்டும் என்பதே என் எண்ணமாக உள்ளது!” என்று சொன்னாள்.

     அப்பொழுது, ப்ரகசா என்னும் அரக்கி, “நாம் இந்த இதயமற்ற சீதையின் கழுத்தை நெறித்து விடுவோம்.  ஏன் அமைதியாகக் காத்திருக்க வேண்டும்?”  பிறகு மஹாராஜாவிற்கு இந்த மனிதப் பெண் இறந்து விட்டதாகத் தகவல் அளித்து விடுவோம்.  இந்த செய்தியைக் கேட்ட அரசன், இந்தப் பெண்ணைச் சாப்பிட்டு விடுமாறு நம்மிடம் சொல்லி விடுவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை!” என்று சொன்னாள்.

     அப்பொழுது அஜாமுகி என்னும் அரக்கி, “வீணாகப் பேசிக் கொண்டிருப்பதில் எனக்கு விருப்பம் இல்லை.  வாருங்கள், இவளைக் கொன்று, இவள் உடலைச் சம பங்குகளாகப் பிரித்து விடுவோம்.  பிறகு, நாம் அவற்றை நமக்குள் பங்கிட்டுக் கொள்வோம்.  கூட அருந்தி மகிழ, வித விதமான மது பானங்களையும், அணிந்து மகிழ பூக்கள், மாலைகள் ஆகியவற்றையும் வரவழையுங்கள்!” என்று சொன்னாள்.

     உடனே சூர்ப்பணகை என்ற அரக்கி, “அஜாமுகி சொன்ன கருத்து எனக்கும் மிகவும் பிடிக்கிறது.  எல்லாத் துயரங்களையும் போக்க வல்ல, சுரா பானத்தைக் கொண்டு வரச் சொல்லுங்கள்.  அதனுடன் சேர்த்து, இந்த மனித மாமிசத்தை உண்டு கொண்டே, நிகும்பலா தேவியின் முன் நடனம் ஆடுவோம்!” என்று சொன்னாள்.

     இவ்விதமாக அந்தக் கோரமான அரக்கியரால் பலவிதமாக அச்சுறுத்தப்பட்ட தேவ மங்கை போன்ற அழகிய சீதை, தன் தைரியத்தை இழந்து, விசித்து விசித்து அழத் தொடங்கினாள்.

                                     இருபத்து நான்காவது ஸர்கம் நிறைவு.

No comments:

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...